தீதின் உணவுச் சங்கிலி: ஒடிய மொழிப் புத்தக அறிமுகம்

பக்கிர் மோகன் சேனாபதியின் “ஆறு ஏக்கராக்களும் மூன்றில் ஒரு பங்கும்”
(Chha Mana Atha Guntha)

 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டை களமாய் கொண்டிருந்தாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், பக்கிர் மோகன் சேனாபதியின் ‘ஆறு ஏக்கராக்களும் மூன்றில் ஒரு பங்கும்’ நம் காலத்துக்கான நீதிக்கதை. இந்த நாவல் ஏன் சமகால முக்கியத்துவம் கொண்டதாய் உள்ளது என்பதற்கான காரணங்களாய் அதன் இரு கூறுகளைச் சொல்லலாம்: நாவலின் கூறுமொழி, கருப்பொருள்.

ராமச்சந்திர மங்காராஜ் என்ற ஜமீன்தாரைப் பற்றியது இந்த நாவல்: அவரது பேராசை, கிராமத்தில் அவருக்கு உள்ள செல்வாக்கு, பிறர் சொத்துக்களை அபகரிக்க அவர் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள், இறுதியில் அவரது மறைவு. கதையின் துவக்கத்தில் மங்காராஜும் சம்பாவும் சதியாலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். கதைப்படி சம்பா வேலைக்காரிதான் என்றாலும், வீட்டில் அவளுக்கு அதைவிட முக்கியமான இடம் இருக்கிறது. அவர்கள் இருவரும் பாகியா என்ற நெசவாளியின் சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார்கள். மங்காராஜ் பாகியாவின் நிலத்தின் மீதும் அவனது பசு மாட்டின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறான்.  ஒரு கோவில் கட்டினால் அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று பாகியாவின் மனைவி சாரியாவை நம்பச் செய்கிறாள் சம்பா. அதற்கான செலவுக்கு மங்காராஜ் கடன் கொடுப்பார் என்று சொல்கிறாள் அவள். சம்பாவின் சதிவலையில் சிக்கிக் கொள்கிறது நெசவாள குடும்பம், இறுதியில் தன்னிடம் இருப்பது எல்லாவற்றையும் மங்காராஜிடம் இழக்கிறது. இதன் பின் மங்காராஜின் வீழ்ச்சியும் துவங்குகிறது.

நாவலின் ஆழம் அதன் கூறுமொழியால் வருவது. கதைசொல்லி எல்லாம் தெரிந்தவர். நடப்பது அத்தனையையும் ஒவ்வொரு காட்சியாக தன் கருத்துக்களோடு விவரிக்கிறார். ஆனால் என்ன நடக்கிறதோ, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பட்டுக்கொள்ளாமல் கதை சொல்கிறார். இது நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பது ஒன்று என்றால், இந்த நடுநிலைமை நம்மை உறுத்தவும் செய்கிறது. கதைசொல்லியின் நகைமுரண் பார்வையும் கச்சிதமான நகைச்சுவை கூடிய அவரது கருத்துக்களும் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அபத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வழக்கமாய் நம் தொல்கதைகளின் கதைசொல்லி கையாளும் உத்திக்கு மாறாய் இது இருக்கிறது. நாயகர்களின் நற்குணங்கள் போற்றப்படுவதற்கு மாறாய், மானுட இயல்பு பற்றிய குறும்புத்தனமான குறிப்புகள், அதிகாரத்துக்கு அளிக்கப்படும் அபத்த மரியாதை வித்தியாசமாய் இருக்கிறது. இதனால்தான் நவீன வாசகன் முதல் பக்கத்திலிருந்தே கதையினுள் சென்று தன்னைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. இது போலல்லாமல், அக்காலகட்டத்தின் பிற செவ்வியல் ஆக்கங்கள் பலவும் வாசகனிடம் கூடுதல் பொறுமையைக் கோருகின்றன.

இந்த  நாவல் பொதுவாய் ஒரு யதார்த்தவாத நாவலாய் வாசிக்கப்படுகிறது. ஆனால் அது போல்  எந்த ஒரு அடையாளத்தையும் இதற்கு அளிப்பது அநீதி இழைப்பதாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இது ஏன் யதார்த்தவாத நாவல் என்று சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும், ஆனால் அதே சமயம் இதை ஒரு நீதிக் கதையாகவும் வாசிக்கலாம், கற்பனாவாத கதையாகவும் வாசிக்கலாம், ஏன், கற்பனாவதத்துக்கு எதிரான கதையாகவும் வாசிக்கலாம். இந்த நாவலின் மையக்கரு கர்மா, தீயவர்கள் தங்கள் கர்ம பலனை அனுபவிக்கிறார்கள். நீதி குறித்த மிதமிஞ்சிய கற்பனையான ஒரு எண்ணத்தை இந்த நாவல் பரப்புவதாகவும் தோன்றுகிறது- பூமியில் நடப்பது எல்லாவற்றையும் நமக்கு மேலே உள்ள ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவன் எல்லாருக்கும் அவரவருக்கு உரிய வினைப்பயனை அளிக்கத் தவறுவதில்லை. இந்த கவித்துவ நீதியுணர்வு நம் எல்லார் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. மேம்போக்கான பார்வையில், நாவல் இதை வலியுறுத்துவது போலிருக்கிறது, ஆனால் ஆழமான வாசிப்பில் பக்கிர் மோகன் அதற்கு முரணான வேறொன்றைச் சொல்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த நாவலில் தீமை அழிவது, “சம்பவாமி யுகே யுகே” என்று சொன்ன கிருஷ்ண பரமாத்மா தன் வாக்கைக் காப்பாற்றுவதால் அல்ல. ஒரு தீயவனை இன்னொரு தீயவன் அழிக்கிறான். இது, ‘சம்பவாமி யுகே யுகே’ நம்பிக்கையைத் தலைகீழாய் திருப்புகிறது. என்ட்ரோபி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பதற்கு மாறாய் தீது வேறொரு தீதால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஜமீந்தார் எந்த மக்களிடமிருந்து நிலத்தை அபகரித்தாரோ, அவர்களே அப்படியொன்றும் உத்தம சீலர்கள் அல்ல. மங்காராஜின் வக்கீல் அவரது நிலத்தை அபகரித்துக் கொள்கிறார். பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருப்பவர்களை ஏமாற்றிச் சொத்து சேர்க்கும் அவரும் மங்காராஜைப் போன்றவர்தான். இந்த தீதின் உணவுச் சங்கிலிதான் நாவலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்கிறது. அடிப்படையில் பக்கிர் மோகன் சேனாபதியின் உலக நோக்கு ஜைமினிக்கு உடன்பாடாக இருக்கும், “உலகம் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது,” என்று சொன்னவர் அவர்.

நாவலின் மைய கரு, ஆறு ஏக்கர் மற்றும் மூன்றில் ஒரு பங்கு நில இழப்புதான். மங்காராஜ் மற்றும் சம்பாவின் சதிக்கு வெகுளிகளான பாகியாவும் சாரியாவும் பலியாகிறார்கள். இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத பாகியாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது, சாரியா சாப்பிடாமல் இருந்து செத்துப் போகிறாள். சாரியாவின் சாவு மங்காராஜின் அழிவுக்கும் இறுதியில் மரணத்துக்கும் காரணமாகிறது. பொதுப்பார்வையில் நீதி வெற்றி பெற்றது போல் தோன்றுகிறது என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கே நீதி கிடைக்கிறது? உண்மையில், நீதி என்பதுதான் என்ன? தீமை தண்டிக்கப்படும்போது நீதி வழங்கப்படுகிறதா, அல்லது, நன்மையை நிலைநாட்டுவதுதான் நீதியா? பெரும்பாலான சமயம், தீமை தண்டிக்கப்படும்போது நீதி வழங்கப்படுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்- இந்தக் கதையில் வருவது போல் நல்லவர்கள் சித்த சுவாதீனம், உடைமை, உயிர் என்று எல்லாவற்றையும் ஏற்கனவே இழந்தபின் என்ன செய்வது? இந்த உலகம் குரூரமானது. இங்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதைக் கொண்டு நாம் ஆறுதல் அடைய வேண்டியதுதான். மங்காராஜின் மனைவி சாரியா போன்ற நல்லவர்கள் மரணத்துக்குப் பின் சமூக மனசாட்சியாகும்போதுதான் அவர்கள் தர்மத்தை நிலை நாட்டுகிறார்கள் போலிருக்கிறது.

எது சட்டப்படி சரியானது, எது அறம், எது நீதி, எது தர்மம், என்ற எக்காலத்திலும் விடை காண முடியாத கேள்விகள் மங்காராஜ் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்போது எதிர்கொள்ளப்படுகின்றன. பாகியாவும் சாரியாவும் நிலத்தை அடமானம் வைத்து வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் அவர்களிடமிருந்து நிலத்தை பறித்துக் கொண்டது சட்டப்படி சரிதான் என்று தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி. தனக்கு உரிமை இல்லாத பசுவைப் பறிமுதல் செய்த குற்றத்துக்காக மங்காராஜுக்கு ஒரு சிறிய தண்டனை வழங்கப்படுகிறது. எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில் சட்டம் இயற்ற முடியாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அறவுணர்வு இருக்கும், அது அவர்களுக்கு வழிகாட்டும் என்றுதான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதனால்தான் மானுட நீதிக்கு அப்பால் வேறொரு நீதி இருக்கிறது என்று பலரும் நினைக்கிறோம். சட்டப்படி குற்றம் செய்தால் நம் நீதியமைப்பு தண்டனை வழங்க முடியும், ஆனால் சட்டப்படி சரியான வகையில் அநீதி இழைப்பவர்களை அது ஒன்றும் செய்ய முடியாது.

எந்த ஒரு பாத்திரத்தின் மனநிலையும் பக்கிர் மோகனின் நாவலில் விவரிக்கப்படுவதில்லை. சம்பவங்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் மட்டுமே பாத்திரங்களின் கட்டாயங்கள் பற்றிய புரிதலை நமக்கு அளிக்கட்டும் என்று விட்டு விடுகிறார் அவர். போகவும், மங்காராஜ், சாரியா, சம்பா, ஷேக் தில்தர் மியான், ஜோபார் ஜேனா மற்றும் பல மறக்க முடியாத பாத்திரங்களை இந்த நாவலில் படைத்திருக்கிறார். நீதியமைப்பு இயங்கும் விதம், அரசு அதிகாரிகளின் செல்வாக்கு, காவல் துறை மீது சாமானிய மக்களுக்கு இருக்கும் அச்சம், பொய் வழக்கில் போலி சாட்சியங்களைக் கொண்டு நடக்கும் தில்லுமுல்லு, என்று நம் நாடு இன்றுள்ள நிலையை நினைவூட்டும் நிகழ்வுகள் நாவல் முழுதும் இருக்கின்றன. இந்த நாவலைப் படிக்கும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த நிலை அப்படியொன்று நம் நாட்டில் இன்று மாறி விடவில்லை, அதுவும் கிராமப்புற பகுதிகள் அப்படியேதான் இருக்கின்றன, என்று தோன்றுகிறது.

ஒடிய மொழி முன்னோடி என்று பக்கிர் மோகன் சேனாபதி போற்றப்படுகிறார். அது உண்மை என்பதக்கு இந்த நாவல் ஒரு நல்ல சான்று. உண்மையில், பிற மொழிகளில் எழுதிய ஸ்ரீலால் சுக்லா, பூர்ணச்சந்திர தேஜஸ்வி போன்றவர்களுக்கும் பக்கிர் மோகன் சேனாபதி ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். இந்திய இலக்கியத்தை நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் இது.

~oOo~

குறிப்பு: ஒடியப் புத்தகத்தின் இங்கிலிஷ் மொழி பெயர்ப்பு பற்றிய தகவல்-
Six Acres and a Third  
பக்கங்கள்: 232 /₹299
வெளியான ஆண்டு:    2006 February
பங்களிப்பாளர்கள்
எழுதியவர்:      Fakir Mohan Senapati
மொழிபெயர்ப்பு:    Satya P. Mohanty, Jatindra K. Nayak, Rabi Shankar Mishra, Paul St-Pierre

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.