ஆடும் மனிதனும்

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு நாள் இரவு,  ஆடுமேய்ப்பவன் ஒருவன் தன் ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் முன்னால் பிரகாசமாக இருந்த நிலவைப் பார்த்துக்கொண்டிருந்தான். காற்று விட்டு விட்டு வீசிக்கொண்டிருந்தது. அதுவே அவனுக்குச் சுகமாக இருந்தது. ஒரே சீராக காற்று அடித்துக்கொண்டே இருந்தால் அதன் அருமை தெரியாமலே போய்விடுகிறது. அதை அனுபவிக்கவும் முடிவதில்லை.
அவனுக்குச் சிந்திக்க எதுவுமே இல்லை. பெரும் கொலைபாதகர்கள் அப்போது எவரும் பிறக்கவில்லை. துயரங்களைப் பாடும் கவியும் எவனுமில்லை. உறக்கம் வரும்வரை இப்படிப் பார்ப்பதே அவனுக்கு வேலை. அன்றும் அப்படிதான் அவன் நிலவை ரசித்துக்கொண்டு இருந்தான். அன்று முழுநிலவு நாள். பிரகாசமான நிலவு அவனிடம் ஏதோ சொல்ல நினைப்பதாக நினைத்துக்கொண்டான். பட்டியில் இப்போது எந்த ஆடும் குரலெழுப்பவில்லை. வெறும் சில்வண்டுகளின் ஓசைமட்டுமே கேட்டது. பாதி இரவைக் கடந்துவிட்டது ஆனாலும் தனக்கு இன்னும் உறக்கம் வராததைக் கண்டு அவன் ஆச்சரியப்பட்டான். எப்போதும் அவன் இவ்வளவு நேரம் விழித்திருப்பவனல்ல.
சரியாக அதே நேரம் ஒரு ஆட்டுக்குட்டு மட்டும் எழுந்து நின்றது. மற்ற ஆடுகளையெல்லாம் சுற்றி ஒருமுறை பார்த்தது. எதுவும் இதைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மெல்லப் பட்டியின் திறப்பை நோக்கி நடந்தது. அப்படி ஒரு ஆடு நடப்பது பூமிக்கு தெரியாதவாறு நடந்தது. மிதப்பது போலத் தெரிந்தாலும் நடந்து தான் வந்தது. திறப்பின் அருகே வந்ததும் மெதுவாகத் திறப்பை ஒரு மனிதன் லாவகமாக திறப்பதுபோல் திறந்தது. இதுவரை அது எந்த ஓசையும் எழுப்பவில்லை. திறந்தது மாதிரியே லாவகமாக அதை மூடிவிட்டு எந்த ஓசையும் எழுப்பாமல் சென்று அந்த ஆடு மேய்ப்பவன் அருகில் சென்று அமர்ந்துகொண்டது. இப்படி ஒன்று தன் அருகில் அமர்ந்திருக்கும் எந்த உணர்வுமில்லாமல் அவன் நிலவை ரசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதுமே ஒரு ஏக்கம் உண்டு. இரவில் தன்னுடன் பேச யாருமில்லையே என. பகலில் அக்கம் பக்கம் இருக்கும் மேய்ப்பவர்கள் வருவார்கள் போவார்கள். ஏதாவது பேசலாம். அப்போதும் அவர்களுக்குப் பேச என்ன இருக்கும்.

இப்படியே அவன் நிலவை ரசித்துக்கொண்டிருக்கும் போது சட்டென அந்த ஆடு அவனைப் பார்க்காமல் நிலவைப் பார்த்தவாறு,
“நிலா இன்னிக்கி ரொம்ப அழகா இருக்குல்ல,” என்றது.
குரலைக் கேட்டதும் இவனுக்கு தூக்கிவாறிப் போட்டது. திரும்பி ஆடு இருந்த திசையைப் பார்த்தான். ஆடு அமைதியாக நிலாவையே பார்த்துக்கொண்டிருந்தது. குரல் கேட்டது ஒருவேளை பிரமையோ என்று தோன்றியது. பிறகு ஆடு எப்படி இங்கு வந்தது என்று யோசித்தான். சட்டென எழுந்து போய்ப் பார்த்தான். வேலி அடைக்கப்பட்டே இருந்தது. குழப்பம் அதிகமாக மறுபடியும் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து அமர்ந்தான். ஆடு அதே இடத்தில் அதே நிலையில் எந்த அசைவும் இன்றி அமர்ந்திருந்தது. அவன் ஆட்டின் மேலிருந்து தன் கண்களை அகற்றவேயில்லை. அதையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆடு மறுபடியும் பேசியது,
“நீ இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப, உனக்கு என் கூட பேசற எண்ணம் இருக்கல்லையா?” என்றது.
அவனுக்கு எழுந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் இந்த நேரத்தில் இந்த இருட்டில் எங்கு செல்வது. அவன் அமைதியாக இருக்க முடிவு செய்தான். மெல்ல ஆட்டிடம்
“நீ எப்படிப் பேசற” என்றான்.
ஆடு மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தது. பிறகு அவனிடம்,
“நீ இவ்வளவு முட்டாள்தனமா கேள்வி கேட்பேன்னு நான் எதிர்பார்க்கல,” என்றது.
அவன் அமைதியாகவே இருந்தான். பிறகு ஆடே தொடர்ந்தது,
“சரி நானே விசயத்துக்கு வரன். நான் உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு தரலாம்னு இருக்கன். நீங்க உங்க பாதையில இருந்து விலகிட்டீங்க. மத்த எல்ல உயிரினமும் இயற்கைக்கும், மத்த உயிர்களுக்கும் மதிப்பளிக்குது.”
சற்று இடைவெளி விட்டு,
“ஒத்துக்கறன், சில உயிரினங்கள் மத்ததை சாப்பிடுதுங்க தான், ஆனா அது உங்க அளவுக்கு இல்ல. நீங்க தேவைக்கு ரொம்ப அதிகமா கொலை செய்யறீங்க. நீங்க செய்றதுக்கு பலனை அனுபவிக்கலனா எப்படி. அதுக்கு முன்னாடி உங்களுக்குத் தர கடைசி வாய்ப்பு இது. இத நீங்க பயன்படுத்திக்கிட்டா சரி. இல்லனா அதன் விளைவுகள் மோசமானதா இருக்கும்,” என்று தன் நீண்ட உரையை முடித்துவிட்டு மறுபடியும் நிலவை ரசிக்கத் துவங்கியது.
காற்று மீண்டும் சில்லென வீசிக்கொண்டு இருந்தது. ஆனால் அதை அனுபவிக்கும் மனம் இப்போது அவனிடமில்லை. எதோ கெட்ட கனவில் தான் இருக்கிறோம் என்று அவன் நினைத்தான். எப்படியாவது விழிப்பு வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
ஆடு மறுபடியும் அவனைப் பார்த்து,
“என்ன சவாலை ஏத்துக்கிறியா” என்றது.
அவன் தயங்கியவாறே
“என்ன சவால்” என்றான்.
“பெருசா ஒண்ணுமில்லை, என்னை இயற்கையாக சாகவிடணும் அவ்வளவு தான்,” என்றது ஆடு.
“புரியல” என்றான் அவன்.
“தெளிவாக செல்றேன் கேளு, நான் யாராலையும் சாகக்கூடாது. எனக்கு இயற்கையாகத் தான் சாவு வரணும். இயற்கையான நானா சாவறது மட்டும் தான். விபத்துல கூட நான் சாகக்கூடாது.”
அவன் எதுவும் புரியாமல் ஆட்டையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தான். எப்படியும் இந்தக் கனவு விரைவில் முடிந்துவிடும் என்று நம்பினான். ஆனால் நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அவனும் ஆடும் நீண்ட நேரமாக அதே இடத்தில் அமர்ந்திருந்தனர். எப்போது விடிந்தது என்றே அவனுக்குத் தெரியவில்லை. விடிந்தும் ஆடு அதே இடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து தான் இது கனவல்ல என்று அவன் உணர்ந்தான். மெல்ல எழுந்து ஆட்டின் அருகில் சென்றான். ஆடு எதுவும் பேசவில்லை. அதன் பிறகு அந்த ஆடு எப்போதுமே பேசவில்லை. அவன் அந்த நிகழ்வை ஒரு தீர்க்கதரிசனமாக நினைத்தான். கடவுள் தனக்கு அளித்த கடமையாக எடுத்துக்கொண்டான். அந்த ஆட்டுக்கு மட்டும் மந்தையில் கவனிப்பு அதிகமாகியது. அதை எப்போதும் அவன் தன் அருகிலேயே வைத்திருந்தான். வெயில் கூட அதன் மீது படவிடவில்லை.
நாட்கள் இப்படியே ஓடியது. ஆடு பெரிதாக வளர்ந்தது. மேய்ப்பவனுக்குத் திருமணம் நடந்தது. அவன் மனைவி எப்போது அவன் அவளுடனே இருக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் திருமணமான சில நாட்கள் மட்டுமே அவன் அவளுடன் இரவுகளைக் கழித்தான். பிறகு பழையபடி அந்த ஆடே கதி என்று மந்தைக்கு வந்துவிட்டான். அவன் மனைவி அவனுடன் சண்டை பிடித்தாள். அவனுக்கும் வாழ்க்கையே நரகமாக மாறியது. பொறுத்துப் பார்த்த அவன் மனைவி இனி இவனுடன் வாழமுடியாது என்று இவனை விட்டுச் சென்றுவிட்டாள். போகும்போது, அந்த ஆட்டைப் பார்த்து சாபமிட்டுச் சென்றாள்.
அந்த மந்தையிலேயே அந்த ஆடுதான் பெரிய ஆடாக இருந்தது. அவனிடம் வருபவர்கள் அனைவருமே அந்த ஆட்டையே வேண்டும் என்று கேட்டனர். அவன் எவ்வளவு பணம் கொடுத்தும் அதை விற்க மறுத்துவிட்டான். இதனால் ஊரில் சில வியாபாரிகள் அவன் மேல் கோபமாக இருந்தனர். அவனிடமிருந்து அந்த ஆட்டை அபகரிக்கப் பல முயற்சிகள் நடந்தது. ஆனால் அந்த ஆட்டைத் திருட யாராலும் முடியவில்லை. ஆடு தன் வயோதிகத்தை அடைந்தது. இன்னும் சில நாட்கள்தான் அந்த ஆடு உயிருடன் இருக்கும் என்று மேய்ப்பவனுக்குத் தெரிந்தது. ஆடு மீண்டும் ஒரு முறை அவனிடம் பேசும் என்று அவன் எதிர்பார்த்தான். அது நடக்கவேயில்லை.
ஒருநாள் அவன் காலை அதிக நேரம் உறங்கிவிட்டான். காலை எழுந்திருக்கும் போதே எதோ விநோதமாகப்பட்டது. அவன் எப்போது எழுந்ததும் முதல் வேளையாக ஆட்டைச் சென்று பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தான். அன்றும் ஆட்டைத் தேடி சென்றான். ஆடு மந்தையின் நடுவில் இறந்துகிடந்தது. அதைப் பார்த்தவுடன் வேகமாகச் சென்று ஆட்டைச் சோதித்தான். ஆட்டின் உடல் முழுவதும் விஷம் ஏறியிருந்தது. அதன் கால்களில் பாம்பு கடித்த அடையாளம் இருந்தது. அவனுக்கு அழுகையாக வந்தது. தனக்குத் தரப்பட்ட கடமையைத் தான் நிறைவேற்றாமல் சென்றுவிட்டதாக நினைத்தான். அதே நேரம் வானம் முழுவதும் இருள் சூழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு மின்னல் திடீரென வந்து அவனைத் தாக்கியது.
மாரியப்பன் அலறியடித்துக் கொண்டு எழுந்தான். உடல் முழுவதும் வேர்த்து ஈரமாக இருந்தது. எழுந்து அமர்ந்தான். இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தான். தனக்கு இதுவரை இப்படி எல்லாம் கனவுகளே வந்ததில்லை, என்ன ஆச்சு என யோசித்தான். காட்சிகள் அனைத்தும் அவனுக்கு நினைவிருந்தது. சுற்றி ஒருமுறை பார்த்தான். வாசல் அருகில் இருந்த கழியில் அந்த ஆடு கட்டப்பட்டிருந்தது. அதை உற்றுப்பார்த்தான். அதுவும் அவனையே பார்த்துக் கொண்டி இருந்தது. அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. இது அதே ஆடுதான். மேய்ப்பவனாக இருந்ததும் தான்தான் என்று நினைவுக்கு வந்தது. தூரத்தில் அவன் மாமா அவனை பார்த்து சிரித்தவாறு வந்தார். வந்தவர்,
“என்ன மாப்பிள, பகல்லயே என்ன தூக்கம்” என்றார்.
அவன் பதிலேதும் சொல்லவில்லை. அவர் குரல் கேட்டு உள்ளே இருந்த மாரியப்பனின் அம்மா வந்து சிரித்தவாறே
“என்னண்ணே! கோவிலுக்கு எல்லாரும் வந்துட்டாங்களா” என்றார்.
“ம்… வர ஆரம்பிச்சிட்டாங்க… சீக்கிரம் புறப்படுங்க. டேய் மாப்பிள சீக்கரம் குளிச்சிபுட்டு வந்து சேருடா, நான் நேந்துவுட்ட ஆட்ட தூக்கினு முன்னாடி போறன்” என்றார்.
மாரியப்பன் மறுபடியும் திரும்பி ஆட்டைப் பார்த்தான். ஆடு அவனைப் பார்த்துக்கொண்டிருப்பது போல் இருந்தது. இப்போது ஏதேனும் பேசும் என்று எதிர்பார்த்தான். அவன் மாமா அம்மாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பிறகு ஆட்டிடம் சென்று கட்டியிருந்த அதன் முடிச்சை அவிழ்த்து அதனைத் தூக்கிக்கொண்டு நடந்தார். ஆடு அவர் கையிடுக்கில் தன் தலையை நுழைத்து அவனைப் பார்த்து மேஹஹஹஹ…… என்றது.