பதிப்பாசிரியர் குறிப்பு

சொல்வனம் தளம் கடந்த சில வாரங்களாக சரிவரச் செயல்படவில்லை என்பதை நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். அதே போல், இதழ் சீரான இடைவெளியில் பதிப்பிக்கப்படுவதில்லை என்ற குறையையும் தெரிவித்திருந்தனர். இவற்றைச் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தளத்தில் உள்ள பக்கங்கள் திறப்பதில்லை என்ற மிக முக்கியமான தொழில் நுட்ப பிரச்சினைக்கு பெருமளவு தீர்வு கண்டு விட்டோம். இதழை வலைக்கு வழங்கும் நிறுவனத்தின் சில நிர்வாக மாறுதல்களால் பதிப்பு வேலைகள் செய்யவும் படிக்கவும் இடையூறு செய்யும் விதமாக அளிக்கும் எந்திரங்கள் இயங்கின. இந்த மாதம் பூராவும் சோதித்து குறைகளை களைந்திருக்கிறோம். இப்போதும் முழுதும் சீராகி விட்டதா என்று சோதித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒப்பீட்டளவில் தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பது போல் மனித முயற்சியில் உள்ள குறைகளை எதிர்கொள்வது எளிதல்ல. இது வரை சொல்வனம் 188 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இத்தனை கால உழைப்பு மற்றும் அது தொடர்பான எதிர்பார்ப்புகளும் ஏற்ற இறக்கங்களும் அவற்றுக்கே உரிய விளைவுகளை விட்டுச் சென்றுள்ளன. அனுபவம் ஒரு வெளிச்சமாக இல்லாதபோது சுமையாகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடர்பான விதிக்கு யாரும் விலக்கல்ல. சொல்வனம் பதிப்பாசிரிய குழுவினரும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்து வருகின்றனர் என்பதே அதன் நீடித்த செயல்பாட்டின் ரகசியம். தற்போது தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்ட இடைவெளியில் சொல்வனம் பதிப்பாசிரியர் குழுவினர் தம்மை மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாய் இனி வரும் இதழ்கள் சீரான இடைவெளியில் வெளிவருவதை மட்டுமல்ல, புதுமையின் பொலிவையும் நீங்கள் காண இயலும்.
அவ்வகையில் இந்த இதழ் அறிவியல் புதினச் சிறப்பிதழாக வருகிறது. இது திட்டமிடப்படாதது, பதிப்பாசிரியர் குழுவினரின் உற்சாகத்தால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது.
அகத்தியர் துவங்கி புதுமைப்பித்தன், விக்ரமாதித்யன், வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா, சுகா (தரப்படுத்தல் அல்ல, முழுமையான பட்டியலும் அல்ல: இவை சிறப்பிதழுக்கு உரியவை) என்று தமிழ் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வருகிறது. மரபை இழக்காமல் பல்திசைத் தாக்கங்களை பெற்றுக்கொண்டு மொழியையும் பண்பாட்டையும் புதுப்பிப்பது சொல்வனத்தின் நோக்கம். எனவே, சொல்வனம் இருநூறாவது இதழ் பொதிகைச் சிறப்பிதழாக வெளிவருவது பொருத்தம் என்று நினைக்கிறோம். அதற்கான பணிகள் துவங்கியிருக்கின்றன.
இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் சொல்வனம் படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

One Reply to “பதிப்பாசிரியர் குறிப்பு”

  1. ஏறத்தாழ 5 ஆண்டுகளாக சொல்வனம் இணைய இதழ் வாசித்து வருகிறேன் . மற்ற இதழ்களை விட
    தரமானதாகவும் விரிவானதாகவும் உள்ளது .
    உங்கள் சேவைக்கு நன்றி . உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் .

Comments are closed.