இன்னொரு ஒன்று

ன்று என்கிற ஒரு எண் ஒரு மனுஷனை எப்படியெல்லாம் பாடுபடுத்த முடியும்னு உங்களுக்குத் தெரியுமா?

அதற்கு முதலில் அபுதாபியில் வீடு வாடகைக்கு எடுக்கப்படும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாடகைக்கு எடுக்கப்படும் பிளாட்டிற்கு ஒரு வருடத்திற்கு கான்ட்ராக்ட் போட வேண்டும். நான்கு அல்லது ஆறு மாதங்களுக்கான முன்தேதியிட்ட காசோலைகள் கொடுக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் சில நேரங்களில் நான்கு (மூன்று மாதக்) காசோலைகள் பெற்றுக் கொள்ளும் உரிமையாளர்கள் கிடைப்பார்கள்.

வீட்டு கான்ட்ராக்ட்டுடன் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் ‘தௌதீக்’ என்பது. வாடகை ஒப்பந்தங்களை அபுதாபி முனிசிபாலிட்டியில் பதிவு செய்து பெறப்படும் இந்த ‘தௌதீக்’ இருந்தால்தான், உறவினர்களுக்கு விசிட் விசா எடுக்க முடியும். கார் பார்க்கிங் கட்டண ஒப்பந்தம் போட முடியும். இதுபோல் இன்னும் பல “தௌதீக்” இருந்தால்தான் நடக்கும்.

பெரும்பாலும் வீட்டு வாடகை ஒப்பந்தத்தோடு சேர்த்தே “தௌதீக்”கும் வழங்கப்படும். இந்த வேலைகளுக்காக தனியாக அலுவலகம் இல்லாத சில இடங்களில் வீடு வாடகைக்கு எடுப்பவர் அதற்காக ஓட வேண்டும், என்னைப் போல.

அதிலும் என்னுடைய பிளாட் உரிமையாளர் இருப்பதோ ‘அல் அயின்’ என்னும் அமீரகப் பகுதியில். நான் இருக்கும் அபுதாபியில் இருந்து இருநூறு கிலோ மீட்டர் (இரண்டு மணிநேரக் கார்ப் பயண) தூரம். வருடத்திற்கொரு முறை அபுதாபி வரும் உரிமையாளர், காசோலைகளைப் பெற்றுக் கொண்டு கான்ட்ராக்ட் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு போவதோடு சரி. மீண்டும் அடுத்த வருட பணப்பட்டுவாடா சமயம் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். இடையில் எந்தவித குறுக்கீடும் இல்லாத நல்லதொரு உரிமையாளர்.

இந்த வருடக் காசோலைகளை பெற்றுக்கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்த ஒப்பந்த தாளை எடுத்துக்கொண்டு, ‘தௌதீக்’ எடுக்கப் போன இடத்தில்தான் அந்த ‘ஒன்று’ என்கிற எண்ணின் ஆட்டம் ஆரம்பித்தது.

நண்பர்கள் அறிவுரைப்படி காலை ஏழரை மணிக்கே ‘தௌதீக்’ வழங்கும் முனிசிபாலிட்டி அலுவலக வாசலில் காரைப் பார்க் செய்தவன், வேகவேகமாக நடந்து உள்ளே சென்றேன். வாயிலை ஒட்டி இருந்த மெஷின் எனக்காக வழங்கிய டோக்கன் எண் 140. காத்திருந்தவர்கள் பக்கம் கண்களை ஓட விட்டேன். இருக்கைகள் நிறைந்து பத்து பதினைந்து பேர் நின்று கொண்டு இருந்தனர். ஒளித்திரையில் இன்னமும் எண்கள் நடமாடத் தொடங்கவில்லை.

சற்று தள்ளி இருந்த மெஷினில் இரண்டு ஒரு திர்ஹாம் நாணயங்களை நுழைத்து காபி எடுத்துக் கொண்டு வாயிலை நோக்கி நடந்தேன். காபியைப் பருகிக்கொண்டு இருந்தவன் எண்ணத்தில் அன்றைக்கு காலை ப்ராஜக்ட் மீட்டிங் நினைவில் வந்தது. ஒன்பது மணிக்கு மீட்டிங். எட்டரை மணிக்குள் இங்கு வேலை முடிந்தால் நன்றாக இருக்கும். உள்ளிருந்து ஏதோ ஒரு எண்ணை அழைக்கும் சத்தம் கேட்க, காபி கப்பை, குப்பை கூடையில் போட்டுவிட்டு உள்ளே விரைந்தேன்.

திரையில் ‘120’ இடமிருந்து வலமாக ஒளிர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. சுவர்க்கடிகாரம் எட்டை நெருங்கி கொண்டிருந்தது. ஒரு ஆளுக்கு பத்து நிமிடங்கள் என்றால் கூட என் முறை வர குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். அலுவலகம் போய் மீட்டிங் முடித்து விட்டு தாராளமாய் திரும்பலாம்.

பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து மெயின் ரோடு வந்தபோது, அலைபேசி ஒலித்தது.

சுரேஷ். இம்மீடியட் பாஸ்.

ஸ்பீக்கரில் “யெஸ் பாஸ்” என்றேன். வண்டியோட்டும்போது அலைபேசி கையில் ஏந்தினால் ஆயிரம் திர்ஹாம் வரை அபராதம் பாயும்.

“எங்கிருக்கே…”

“ஆன் த வே, ஜஸ்ட் 5 மினிட்ஸ்”

“கம் பாஸ்ட்… மீட்டிங் நம்ம ஆபீஸ்ல இல்ல… கிளையண்ட் ஆபீஸ்ல…”

நேற்று சாயந்திரம் அலுவலகம்விட்டுக் கிளம்புகையில் இன்றைய மீட்டிங்கிற்கு தேவையான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து வைத்து விட்டே வந்திருந்தேன். எங்கள் அலுவலகத்திலேயேதான் மீட்டிங் நடப்பதாக திட்டம். இப்போது திடீரென்று மாற்றப்பட்டு கிளைன்ட் அலுவலகம் போக வேண்டும். அப்படி ஒன்றும் பெரிய தூரமில்லை. ஒரு பத்து நிமிடப் பயணம்தான். என் கவலை எல்லாம் எவ்வளவு சீக்கிரம் மீட்டிங் முடியும் என்பதுதான். எப்படியும் பதினோரு மணிக்காவது திரும்ப முடிந்தால் நல்லது. இந்த ‘தௌதீக்’ வேலை முடியும்.

மாமனார் மாமியாரை ஊரிலிருந்து ஒரு இரண்டு மாதம் அபுதாபி வரவழைக்க விசிட் விசா எடுக்க வேண்டும். அதற்கு இந்த ‘தௌதீக்’ அவசியம். அப்பா அம்மா என்றால் கொஞ்சம் தள்ளிப்போனாலும் பரவாயில்லை. மாமனார் மாமியார் விஷயம். அப்படியெல்லாம் விட்டு விட முடியாது. அதுவும் நாளை வியாழக்கிழமை. வெள்ளி சனி விடுமுறை. இன்றைக்கு ‘தௌதீக்’ எடுத்துவிட்டால் சாயந்திரமே டைப்பிங் சென்டரில் கொடுத்து விசா மனுவை தயார் செய்து விடலாம். நாளை போய் அர்ஜன்ட் பிரிவில் விண்ணப்பித்து விசாக்களை எடுத்து விடலாம்.

ருவழியாக மீட்டிங் முடிய 12 மணியானது. சுரேஷிடம் சொல்லிவிட்டு அடித்து பிடித்து போய்ச் சேர்ந்தபோது (காரை நிறுத்த இடம் தேடியதில் ஒரு பத்து நிமிடம் தாமதம்) 12.20. ஒளி திரையில் ‘138’ ஓடிக் கொண்டிருந்தது. காலியாய் இருந்த இருக்கையொன்றில் அமர்ந்து மூச்சை இழுத்து விட்டேன்.

பக்கத்து இருக்கையில் இருந்தவர் பக்கம் பார்வையை ஓட விட்டேன். நீண்ட நேரமாக காத்திருக்கிறார் போலிருக்கிறது. முகத்தில் அப்படியொரு சோர்வு. ‘139’ என்று ஒளி திரை அழைத்தபோது அவர் எழுந்து சென்ற வேகம் கொஞ்சம் அதிகம்தான்.

அடுத்தது நாம்தான் என்று இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தேன், எதிர் வரப்போகும் குழப்பங்களை அறியாமல்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் 140 வரவேற்றது.

கவுண்ட்டரை நெருங்கி ஒப்பந்தத்தாளை கொடுத்தேன். ஒப்பந்தத்தாளை வாங்கியபடியே “டோக்கன் எங்கே” என்றார் அந்தப் பக்கம் இருந்த கருப்பு உடை அணிந்த சற்று பருத்த தேகம் கொண்ட பெண்மணி.

சட்டைப்பாக்கெட்டில் தேடி இல்லையென்றானதும், பாண்ட் பாக்கெட்டுகளில் தேடிய பின், பர்சை எடுத்து அதனுள்ளிருந்த டோக்கனை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிய டோக்கனை இடப்புறம் காலருகே இருந்த குப்பைக் கூடையில் போட்டு விட்டு, ஒப்பந்தத்தாளை உற்றுப் பார்க்கத் தொடங்கினார் அந்தப் பெண்மணி. குப்பைக் கூடையில் போடுவதற்கு, அந்த டோக்கனைக் கேட்காமலே இருந்திருக்கலாம்.

என் மைண்ட் வாய்சைக் கேட்டவர் போல நிமிர்ந்தவர், தன் ஆள்காட்டி விரலால் தாளில் இருந்த தேதியை சுட்டியபடி “இதென்ன?” என்றார்.

கவுண்ட்டரில் நீட்டப்பட்ட பேப்பரைப் பார்த்தவன் ஒன்றும் புரியாமல் “புரியவில்லை” என்றேன்.

“இங்கே…” சற்று மிதமான கோபம் கலந்த குரலில் மறுபடி தேதியில் 2017-ல் இருந்த ஒன்று என்கிற எண்ணை மீண்டும் நன்றாக தொட்டுக் காட்டினார்.

“வருஷம் மேடம், 2017…” என்றேன்.

“அது தெரியுது… ஒன்று ஏன் இப்படி அடித்து திருத்தி எழுதப்பட்டிருக்கிறது?”

அப்போதுதான் உற்று 2017-ல் இருந்த ஒன்று என்கிற எண்ணைப் பார்த்தேன். ஒன்று நன்றாக அழுத்தி எழுதப்பட்டிருந்தது. நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒன்று பக்கத்தில் இன்னொரு ஒன்று இருப்பதுபோல் இருந்தது.

“ஒன்று கொஞ்சம் அழுத்தி எழுதப்பட்டிருக்கிறது மேடம்…”

“இட் இஸ் நாட் கிளியர்… இந்த இடத்துல ஓனரோட கையெழுத்து வாங்கிட்டு வாங்க”

“ஓனர் அல் அயின்ல இருக்கார் மேடம்…வேணும்னா போன வருஷ கான்ட்ராக்ட்டை பாருங்க…2016-2017 போட்டிருக்கு…இது இந்த வருசத்தது…நேத்துதான் ஓனர் கையெழுத்து போட்டு குடுத்துட்டு போனாரு. இதுக்காக இப்ப அல் அயின் போயிட்டு வர முடியுமா…”

“என்னால எதுவும் பண்ண முடியாது…நீங்க வேணும்னா சூப்பர்வைசரை பார்த்துப் பேசுங்க…” என்றபடி அடுத்த ஆளுக்கான எண்ணை அழுத்தினார் அந்தப் பெண்மணி.

சூப்பர்வைசர் முதல் மாடியிலிருந்த ஒரு அறையில் இருந்தார். கண்ணாடி கதவு வழியே பார்த்தபோது உள்ளே ஒருவர் அவரோடு கொஞ்சம் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பது அவர் கை அசைவுகளில் இருந்து தெரிந்தது. அவருக்கு என்ன பிரச்சனையோ?

விவாதம் முடிந்து அவர் வெளியே வந்தவுடன் உள்ளே நுழைந்தவன், நடந்தவைகளை எடுத்து சொல்லி, போன வருடம் இந்த வருடம் என்று இரண்டு ஒப்பந்தந்தங்களையும் அவரின் மேஜை மேல் வைத்தேன். இரண்டு ஒப்பந்தங்களையும் மாறி மாறிப் பார்த்தவர் அந்தப் பெண்மணி சொன்னது சரி என்றும் ஓனரின் கையெழுத்து கண்டிப்பாக தேவை என்றதும் சற்றே என் ரத்த அழுத்தம் கூடிப் போய், குரலை சற்றே உயர்த்தி, “கேன் ஐ சி யுவர் பாஸ்” என்றேன்.

“யூ கேன்” எந்தவிதப் பதட்டமும் இன்றி ஒப்பந்தங்களை என் கையில் கொடுத்தவர், மேலாளர் இருந்த அறையை கை காட்டினார். இரண்டு அறைகள் தள்ளி இருந்த மேலாளருக்கு மறுபடி நடந்த எல்லாவற்றையும் பொறுமையாக சொன்னவன், “கேன் யு ஹெல்ப் மீ ஆன் திஸ்” என்றேன்.

மேலாளர் மேலாளர் தான்.

இரண்டு நிமிடங்கள் இரண்டு தாள்களையும் பார்த்தவர் ஒரு சதுர வடிவ மஞ்சள் பேப்பரை இந்த வருட ஒப்பந்தத்தின் மேல் ஒட்டி அரபியில் ஏதோ எழுதி கையொப்பம் போல் ஒன்றை இட்டு என்னிடம் கொடுத்தார்.

கவுண்ட்டருக்கு விரைந்தவன் அந்தப் பெண்மணியிடம் பேப்பர்களை கொடுத்தேன்.

“கிவ் மீ எமிரேட்ஸ் ஐடிஸ்” குரலில் ஒரு அழுத்தம். (எமிரேட்ஸ் ஐடி அமீரகத்தின் ஆதார் கார்ட்)

என்னுடைய எமிரேட்ஸ் ஐடியை கொடுத்தேன்.

“மனைவி பிள்ளைகளோட ஐடி?”

“ஜெராக்ஸ் வச்சிருக்கேன் மேடம்”

“ஒரிஜினல்ஸ் வேணும்”

“அப்ளிகேஷன்ல ஜெராக்ஸ் போதும்னு இருக்கே…”

“நியூ ரூல்ஸ்.. அவங்க ஒரிஜினல்ஸ் ஸ்கேன் பண்ணாதான் எல்லார் பெயரும் இதில சேரும்.  இல்லைனா உங்க பேர் மட்டும்தான் தௌதீக்ல இருக்கும், குடும்பத்துக்கு விசா ரினீவல் பண்ண முடியாது… ஓகேயா?”

“வீட்டுக்குப் போய்தான் எடுத்துட்டு வரணும் மேடம்…”

“போய் எடுத்துட்டு வாங்க..”

“வரும்போது நேரா உங்ககிட்ட வந்தா போதும் இல்லையா..”

நோ…டோக்கன் எடுத்துட்டுதான் வரணும்..

“வாட் திஸ் இஸ்…காலைல எட்டு மணிக்கு வந்து டோக்கன் எடுத்து, இப்ப என் டர்ன் வரவே பன்னிரண்டு மணி ஆயிடுச்சு…

“சரி… இப்ப மணி பன்னிரண்டரை. ஒரு மணிக்குள்ள வந்திங்கன்னா நேர கவுண்ட்டருக்கு வாங்க..

“கொஞ்சம் லேட் ஆயிச்சுன்னா …?”

“கவுண்ட்டர்ல வேற ஆள் இருப்பாங்க.”

நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தவன் காரை கிளப்பிக் கொண்டே, மனைவியை அழைத்தேன்.

உடனே எடுத்த அலைபேசியில், அவளை எதுவும் பேச விடாமல், “உன்னோடதும் பசங்களுதும் எமிரேட்ஸ் ஐடி எங்க இருக்கு” என்றேன்.

“என்னோடது இங்க ஹாண்ட் பேக்ல இருக்கு. பசங்க ஐடி வீட்ல நீல கலர் சூட்கேஸ்ல…”

“ஓகே.. வீட்ல தேட எல்லாம் இப்ப நேரமில்லை. ஒன்னு பண்ணு…நான் இப்ப உங்க ஸ்கூலை நோக்கிதான் வந்திட்டிருக்கேன். அரை மணி நேரம் பெர்மிசன் சொல்லிட்டு வெளியே வந்து நில்லு.”   

“என்னாச்சுங்க…”

“வந்து சொல்றேன்”

பள்ளிக்கூட வாசலில் இருந்து மனைவியை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வண்டியை அழுத்தினேன். வீட்டை நெருங்கியதும் “நான் காரிலே இருக்கேன். ஓடிப் போய் ஐடி’ஸ் எடுத்துட்டு வா” என்று மனைவியைத் துரத்தினேன்.

ஐடிக்களோடு வேக வேகமாக வந்த மனைவியை ஏற்றிக்கொண்டு மறுபடி கவுண்ட்டரை அடைந்தபோது மணி 12.55 pm. அடுத்த பத்து நிமிடங்களில் அளிக்கப்பட்டது தௌதீக்.

அருகில் இருந்த ஆர்ய பவனில் லன்ச் முடித்து மனைவியை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் வந்தவன் மீதமிருந்த வேலைகளில் மூழ்கிப் போனேன்.

மறுநாள்.

அலுவலகப் பையில் எதையோ தேட, கையில் தட்டுப்பட்ட பேப்பரை வெளியே எடுத்தேன்.

வீட்டு கான்ட்ராக்டின் ஜெராக்ஸ் காப்பி. 2017-ல் இருந்த அந்த (தடித்த) ஒன்று என்கிற எண்ணை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அலைபேசி பாக்கெட்டில் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். குறுஞ்செய்தி.

“உங்கள் வாகனத்தில் அதிவேகமாக சென்றதன் பொருட்டு, நீங்கள் செலுத்த வேண்டிய அபராத தொகை 600 திர்ஹாம்கள்….”

600 திர்ஹாம்கள். இந்திய ரூபாயின் மதிப்பில் பத்தாயிரம் பிளஸ்.

அதிவேகம் சென்ற தேதி நேரம் என்ன என்று பார்த்தேன்.

நேற்று, மனைவியை ஏற்றிக்கொண்டு ‘தௌதீக்’ வாங்க வண்டியை விரட்டிய 12.45 pm.

o

One Reply to “இன்னொரு ஒன்று”

 1. உங்களது பதிவு (சிறுகதை) நன்றாகவுள்ளது, வாழ்த்துக்கள்.
  வணக்கம்,
  http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
  நன்றி..
  தமிழ்US

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.