மகரந்தம்

[stextbox id=”info” caption=”பிராணிகளின் குணங்கள்”]

இந்தியர்கள் வெகுகாலமாக பிராணிகளுக்குப் புத்தியும் உண்டு, தனித் தன்மைகளும் உண்டு என்று நம்பும் மக்கள்.  பிராணிகளைக் கடவுளின் அம்சமாகப் பார்த்து வணங்குவது கூட இருக்கிறது. அதே நேரம் பிராணிகளின் பால் வன்முறையும், பல வித கொடுமைகளும் செய்யவும் இந்தியர்கள் தயங்குவதில்லை. இரட்டைத் தலை புத்தி நமக்கு எப்படியுமே சகஜம்தான் என்பதால் இந்த இரு எதிர்புதிர் நடத்தை நம்மை அதிகம் பாதிப்பதும் இல்லை. ஆனால் பிராணிகளின் சிந்தனை/ நடத்தை/ அன்றாட வாழ்க்கை ஆகியனவற்றைப் பற்றி நம்மிடம் எழுத்து சார்ந்த வருணனைகள், அலசல்கள் அதிகம் இல்லை. நம் அறிவு, பிராணிகளை வளர்ப்பார், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பார், அவற்றின் நடுவே வாழ்க்கை நடத்துவார் ஆகிய மக்கள் கூட்டத்தினரிடம் நடை முறை அனுபவச் சேமிப்பாகத் தங்கி இருக்கிறது, அதைப் பரந்த மக்கள் குழுவினரிடம் கொண்டு சேர்க்க நாம் அதிகம் முயற்சிகள் எடுக்கவில்லை.

மேற்கு பிராணிகளைப் பார்க்கும் விதம் நிறைய வேறுபட்டது. குறிப்பாக அவர்கள் மனிதர்களுக்குக் கீழானவையே பிராணிகள் என்பதில் தெளிவாக நிலைப்பாடு கொண்டவர்கள். அந்த மன நிலை சமீப காலங்களில் மிக மெதுவாக, படிப்படியாக மாறி வருகிறது.

பசுமாடுகளுக்கும் குணங்கள், விருப்பு வெறுப்புகள், ஆளுமைகள், குடும்பச் சார்புகள் போன்றன உண்டு என்று ஆரம்பித்து, கிருஸ்தவம் எப்படி பிராணிகளின்பால் மனிதருக்கு இருக்கக் கூடிய இயல்பான உணர்வுகளைச் சிதைத்தது என்று விளக்கி, பற்பல திசைகளில் கீழே உள்ள நீண்ட கட்டுரை செல்கிறது.

இந்தச் சுட்டியில் உள்ள கட்டுரை ஐந்து புத்தகங்களை மறுபார்வை பார்க்கும் கட்டுரை. அப்புத்தகங்களின் இலக்கு, பிராணிகளுக்கு அறிவு, ஆளுமை, தனித்தன்மை, சூழலோடு இயைந்து வாழும் குணம் ஆகியன உண்டு என்று நிறுவுதல். இந்த இலகுகளில் அவை வெற்றி பெற்றனவா, என்ன அளவு என்பதைக் கட்டுரை பேசுகிறது. இவற்றில் ஹில்ட்யார்ட் என்பாரின் கட்டுரை குறிப்பிடத் தக்கது. அவர் கேட்கும் ஒரு கேள்வி: உலக உயிரினங்களின் வாழ்வுகள் சூழலில் பொதிந்தவை, வாழ்வு பகிரப்படுவதும், இணைந்து இயங்குவதும் இத்தனை சாத்தியமாக இருக்கையில் பிற பிராணிகளின் உணர்தல் நமக்கு வந்து சேர்வது ஏன் கடினமாக இருக்கிறது? நமக்கு அவற்றின் அறிதல் ஏன் புரிய மாட்டேனென்கிறது என்று கேட்கிறார்.

அவர் முடிவு கட்டும்போது கேள்விகளுக்கு ஏதோ சில விடைகளைப் பெறுகிறார். பிராணிகளிடையே உள்ள பிரிவினைகள் அத்தனை கறாரானவை அல்ல. தனி உயிர் என்பது ஒரு கற்பனை. பிராணிகளின் உடல்களில் உள்ள உயிரணுக்கள் நம் உடல்களில் பயணம் செய்வது எளிதே நடக்கிறது. நமக்கும் காளான்களுக்கும், பிராணிகளுக்கும் இடையே உயிரணு அளவில் ஏராளமான பொதுப் பண்புகள் உண்டு. நாம் பிராணிகளை நம் போன்றனவா என்று அலசுவதை விடுத்து ஆம் என்று ஏற்போம் என்று உந்துகிறார்.

பிராணிகளிடம் அன்பு செலுத்துவோர் சக மனிதர்களிடம் அன்பாக இருப்பார்கள் என்பது உண்மை இல்லை என்று வாதிடுகிரறார் எலினா பாஸரெல்லோ என்கிற எழுத்தாளர். பல உதாரணங்களில் ஒன்று பளிச்சென்று நம் மனதில் பதிகிறது. மோட்ஸார்ட் ஒரு ஸ்டார்லிங் பறவையை வாங்கி வளர்க்கிறார். மூன்று வருடங்கள் கழித்து அது இறக்கும்போது அதற்கு ஒரு விரிவான புதைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார் மோட்ஸார்ட். ஆனால் மோட்ஸார்ட்டின் அப்பா அந்தப் பறவையின் இறப்புக்கு மூன்று வாரங்கள் முன்பு இறந்த போது அப்பாவுக்கு எந்த மரியாதையும் செய்யவில்லை என்பதைப் பதிவு செய்கிறார்.

https://www.the-tls.co.uk/articles/public/cows-character-animal-behaviour/

[/stextbox]
 
[stextbox id=”info” caption=”சாதாரணர்களும் கோட்டையில்!”]

பல ஆயிரம் ஆண்டுகளாக மனித சமூகங்கள் பூரண சமத்துவ சமுதாயம் ஒன்றைக் கட்ட முடியும் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றன. எந்த மனிதருக்கும் தம்மைப் போன்ற இன்னொரு மனிதரைக் காண்பது கடினம் என்பதும், தம்மளவே சக்தி, தகுதி, குணம், நடத்தை கொண்ட மனிதரைக் கூடக் காண்பது கடினம் என்பதும் நன்கு தெரியும். இப்படி எங்கும் எல்லா விதங்களிலும் வேறுபடும் தனிமனிதர் அனைவரையும் ஒரே போல நடத்துவது எத்தனை முடியாத காரியம் என்று மட்டும் யாரும் யோசிப்பதில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் தமக்கு மற்ற எவரையும் போன்ற இடமே சமூகத்தில் கிட்டுவது அவசியம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதோடு, வேறு எவருக்கும் தம்மை விடக் கூடுதலான எதுவும் கிட்டக் கூடாது என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

சமத்துவ சமுதாயம் பற்றிய கனவுகள் எல்லாம் இந்த ஒன்றோடொன்று பொருந்தாத அபத்தக் கருத்துக் கட்டால் உருவானவை என்று சொன்னால் கேட்பவரிடையே பெரும் ஆத்திரம் பொங்கி வரும். கனவு வியாபாரிகள் இந்த ஆத்திரத்தை ஊதிப் பெருக்கி அழிப்புக்குக் கூட்டத்தைத் தூண்டவும் செய்வார்கள்.

இப்படி பன்னெடுங்காலப் பழமையில் சமுதாயங்கள் இருந்தன என்றும் அந்தப் பொற்காலம் அழிக்கப்பட்டு விட்டது என்றும் கட்டுக் கதைகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதும் நடக்கிறது. அதன் அடிப்படையில் பல மதங்கள் உலகெங்கும் பரவி பெரும் பூதங்களாக இன்று வளர்ந்து நிற்கின்றன. பல நூறு கோடி மக்களை மொண்ணை நம்பிக்கைகள், என்றென்றைக்குமான புனிதப் புத்தகங்கள், கேள்வி கேட்கப்பட முடியாத சடங்குகள் என்று எதெதற்கோ அம்மக்களை அடிமைப்படுத்தியும் வைத்திருக்கின்றன இந்த உலகளாவிய மதங்கள். கருத்தியல்கள், மதங்களின் எதிரிகள், விடுதலையே தம் இலட்சியம் என்று கொடி பிடித்து ஆர்ப்பரித்தன எல்லாம் இன்று க்ஷீணித்துப் போய் அசட்டு நம்பிக்கைகளாக மெலிந்து நிற்கின்றன.

21 ஆம் நூற்றாண்டில் உலக சமுதாயம் பெரும் கருத்துக் குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தள்ளாடி நடை போடுகிறது. ஆனால் மறுபடி மறுபடி கனவு வியாபாரிகள் தம் உதவாக்கரைப் பொருட்களை விற்பதை நிறுத்தவில்லை. ஆய்வுகள், அறிவியல், தொழில் நுட்பம், தத்துவக் கிளர்ச்சி என்று பல பெயர்களில், புதுப்புது உடுப்புகளணிந்து அவர்கள் உலவுகிறார்கள். இங்கே கொடுக்கப்படும் ஒரு செய்தி அத்தகைய வியாபார முயற்சிகளில் ஒன்றா, இல்லை உண்மையான தகவலா என்பதைத் தீர ஆராய்ந்தால்தான் நம்மால் அறிய முடியும். ஆனால் இங்கு இதைக் கொடுக்க ஒரு காரணம், இந்தக் கனவு எப்படியெல்லாம் மறுபடி மறுபடி தளிர்க்கிறது என்பதைக் காட்டத்தான்.

மெக்ஸிகோ நாட்டில் (மெஹிகோ என்று உள்நாட்டவர் உச்சரிக்கிறார்கள்) டியோடிஓகான் என்ற ‘ஊர்’ அருகில் இடிபாடுகளாகக் காணப்பட்ட ஆஸ்டெக் நாகரீகத்துக்கு முந்தைய கட்டுமானங்களைப் பற்றிய செய்தி இது. இதன் தோற்றத்தை வைத்து முன்பு ஆய்வு செய்தவர்கள், பல நாடுகளில் காணப்படும் பெரும் கட்டடங்களைப் போல இதுவும் பலத்த பொருளாதார/ அதிகார வேறுபாடுகள் கொண்ட சமுதாயம் ஒன்றால், ஏன் அடக்குமுறை ஆட்சி நடத்திய ஒரு சமுதாயத்தால் என்று கூடச் சொல்வார்கள், கட்டப்பட்டிருக்கும் என்று ஊகித்திருந்தார்கள்

சமீபத்து ஆய்வுகள் இந்தப் பழைய ஊகங்களைக் கைவிடச் செய்யும் தகவல்களை வெளிக் கொணர்ந்திருப்பதாக இந்த அறிக்கை சொல்கிறது. டேவிட் கார்பலோ (பாஸ்டன் பல்கலை), லிண்டா மான்ஸானில்லா (நேஷனல் ஆடானமஸ் யுனிவர்ஸிடி ஆஃப் மெஹிகோ) ஆகிய ஆய்வாளர்கள் இங்கு கிடைக்கும் பல தடயங்களை வைத்து அலசியதில் இங்கு ஆளும் கூட்டம் என்றும், ஆளப்பட்ட கூட்டம் என்று இருந்ததாகத் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது ஜனநாயக அமைப்புக்கு அருகில் இருந்த ஒரு குடியரசாக இருந்திருக்கும் என்றும், சர்வாதிகாரிகள் ஆண்ட அமைப்பு போல இல்லை என்றும் அவர்கள் துணிபு.  ஆனால் அரிஸோனா ஸ்டேட் பல்கலையாளரான சபுரோ சுகியாமா இந்த கட்டடக் கூட்டம் மிக்க அதிகாரக் குவிப்பைத் தம் கையில் கொண்ட ஒரு ஆட்சியாளரால்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

கட்டுரையைப் படித்தால் அகழ்வாராய்ச்சியாளர்கள் என்னென்ன தடயங்களை வைத்து சான்றாதாரம் பெறுகிறார்கள், அவற்றை எப்படித் தொகுத்து முடிவுகளை அடைகிறார்கள் என்பது குறித்து நமக்குப் பல தகவல்கள் கிட்டும். தவிர மெஹிகோவில் ஓரிடத்திலாவது பண்டை நாகரீகத்தில் ஏதாவது சமத்துவத்தும் நிலவிய சமுதாயம் இருந்ததா என்பது குறித்தும் நம்மை யோசிக்க வைக்கிறது கட்டுரை. இது நிறுவப்பட்டு விட்டால், முதல் முறையாக கிரேக்க யூரோப்பிய மையத்தில் இருந்து உலக சமத்துவ சமுதாயத்தின் ஊற்றுக் கண் என்பது யூரோப்பில் அல்லாத சமுதாயத்துக்கு நகர்த்தப்படலாம்.

https://slate.com/technology/2018/04/teotihuacn-the-ancient-city-upending-archaeologists-assumptions-about-wealth-inequality.html

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.