குளக்கரை

[stextbox id=”info” caption=”வைரஸ் இல்லாத பெருவாழ்வா?”]

தினந்தோறும் தொலைக் காட்சிப் பெட்டிகள் நமக்குச் சுத்தம் எத்தனை முக்கியம் என்று அறிவுறுத்துகின்றன. பற்களிடையே பாக்டீரியா, தோலில் மாசுகளும், பாக்டீரியாக்களும், சிறுவர் சிறுமியர் கைகளில் கால்களில் காயங்களோடு பாக்டீரியா, தொற்று நோய்க் கிருமிகள் என்று அச்சுறுத்தி, பயத்தை உடனே விலக்கும் சர்வ நிவாரணியாக ஏதோ களிம்பு, ஒரு சோப்புக்கட்டி, ஒரு ‘லோஷன்’ பாட்டில் என்று நம்மை பர்ஸிலிருந்து பல நோட்டுகளை இழக்கத் தயாராக்கும் விளம்பரங்கள் இவை. இவை ஏதும் இல்லாது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் இந்தியர்கள் உயிர் பிழைத்திருந்ததோடு மட்டுமல்லாமல், பல நூறு மிலியன் மக்களாக இந்த உப கண்டத்தில் வாழ்ந்திருக்கவே செய்தார்கள், இன்னமும் இந்தப் பொருட்களோடு தொடர்பு இல்லாமல் எத்தனையோ லட்சம் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமில்லை, ஆஃப்ரிக்காவில், லத்தீன் அமெரிக்காவில், பல ஆசிய நாடுகளில், ஏன் ஆஸ்திரேலியாவில்/ நியூ ஸீலாந்தில்/ ஆர்க்டிக் பகுதிகளில் என்று எங்கெல்லாமோ இத்தனை அச்சுறுத்தலும், இத்தனை களிம்பு/லோஷன்களும் தொடாத வாழ்வை லட்சோப லட்சம் மக்கள் வாழவே செய்கிறார்கள்.

கிருமிகள் இத்தனை பயங்கரமானவை என்றால், இத்தனை லட்சம் மக்கள் ஏன் உடனே வீழ்ந்து மடிவதில்லை என்பது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கும். மடியாவிட்டால் என்ன, எத்தனையோ நோய்களோடு வாழ்ந்து குறை ஆயுளோடு இருந்து போகிறார்கள், அதைத் தவிர்க்கலாமே என்று விளம்பர ஆதரவாளர்கள் சொல்லக் கூடும். மேற்படி நிவாரணிகளால்தான் ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்க என்னென்ன சான்றுகள் தேவைப்படும் என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. கிருமிகளே இல்லாத, பாக்டீரியாக்களே இல்லாத, வைரஸ்களே இல்லாத கடும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட வசிப்பிடங்கள், நகரங்கள், வேலை செய்யுமிடங்களை நம்மால் உருவாக்க முடியுமா? அது மேலானதாக இருக்குமா? 25 ஆம் நூற்றாண்டிலாவது அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு சாத்தியமாகுமா? அறிவியல் புனைவாளர்களுக்கு இப்படிப்பட்ட கற்பனைகள் வெல்லமாக இனிக்கலாம். ஆனால்…

அறிவியலாளர்களுக்கு யாரும் நிம்மதியாக இருப்பதே பிடிக்காது என்பது நாம் எளிதே அடையக் கூடிய ஒரு முடிவு. அது நிச்சயம் சரியாகவும் இருக்கும். சும்மா இருப்பதே சுகம் என்று சொன்னவர் நிச்சயம் அறிவியலாளர் இல்லை. அறிவியலிலிருந்து ஓய்வு பெற்று விட்டவராக இருக்கலாம். அல்லது அதன் வாசனையே பிடிக்காமல் ஒதுங்கிய மனிதராகவும் இருக்கலாம். அறிவியலாளர்கள் நேற்று சொல்லி இருப்பது- சும்மா உட்கார்ந்திருந்தால் நினைவு சக்தியைக் கொண்டிருக்கும் மூளையின் பகுதி தன் வலுவை, காத்திரத்தை இழந்து மெலிவாகி விடுமாம். நினைவுகளே இல்லாத மனிதர் சுகமாக இருக்கிறாரா என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. எங்கே நிம்மதி என்று பாட்டுப் பாடி இருட்டில் ஓலமிடும் தமிழ் கதாநாயகர்களுக்கு நினைவுகளை அழித்த மூளை பிரமாத வரப்பிரசாதமாகத் தெரியுமோ என்னவோ. நம் போன்ற சாதாரணர்களுக்கு நினைவு சக்தியில் சிறிது கீறல் விழுந்தாலும் அது உடனே பீதியைக் கிளப்பும் நிகழ்வாகத்தான் இருக்கும். [ஏனெனில் அதே தொலைக்காட்சிப் பெட்டிகள் நினைவு சக்தியை இழந்தால் என்னவாகும், அதை இழக்காமல் இருக்க என்ன மாத்திரைகள், என்ன சிகிச்சைகள் எடுக்கலாம், அவற்றைக் கொடுக்கும் புரவலர்கள் யார் என்றும் நமக்கு அறிவுறுத்துவதைத் தம் அத்தியாவசியக் கடமையாகக் கொண்டுள்ளன அல்லவா?]

இவர்கள் எல்லாம் கொணரும் பீதி, அச்சுறுத்தல், வியாபாரம் இதெல்லாம் ரொம்பவே அரிச்சுவடி விஷயம் என்று தீர்மானித்து விட்ட சில அறிவியலாளர்கள், ஒரு பரிசோதனை செய்திருக்கிறார்கள். ஸ்பெயினின் சில மலைப்பகுதிகளில் 4 பக்கெட்களை வெளியில் வைத்தார்களாம். அந்த நாலே நாலு பக்கெட்களை வைத்துக் கொண்டு சோதனையை நடத்தி நம் எல்லாருக்கும் வயிற்றைக் கலக்கும் முடிவை அடைந்து விட்டார்கள். அதல்லவா உண்மையான அறிவியல்?

அந்தச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை:

ஒரு நாளில், ஒவ்வொரு சதுர மீட்டர் வெளியிலும், சுமார் 800 மிலியன் வைரஸ்கள் ஆகாயத்திலிருந்து விழுகின்றனவாம்.  (800 மிலியன்= 80 கோடி. வைரஸ்= மிக நுண்ணிய அளவுள்ள கிருமிகள்.) வைரஸ்கள் உடலில் தாக்கினால் அவற்றை அழிப்பது கடினம். பாக்டீரியாக்கள் கொஞ்சம் பெரிய அளவுள்ள கிருமிகள், அவற்றில் அனேகத்தை நம்மால் மருந்துகள் மூலம் அழிக்க முடிகிறது. அந்தத் திறனையும் மிஞ்சும் பாக்டீரியாக்கள் இப்போது உருவாகி வருகின்றன என்று வேறு அச்சுறுத்துவதைத் தம் கடமையாகக் கொண்டுள்ளவர்கள் அறிவியலாளர்கள்.

இந்த வைரஸ்கள் ஆகாய வெளியில் எப்படிப் போயின? எங்கிருந்து அவை அங்கே போயின? எப்படி உலகம் முழுதும் அவை பயணம் செய்கின்றன?

பூமியின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானிக்கும் காற்று வெளிக்குச் சற்று மேலே, விமானங்கள் பொதுவாகப் பறக்கும் உயரங்களுக்குச் சற்றுக் கீழே இந்த வைரஸ்கள் பிரயாணம் செய்து உலகெங்கும் போகின்றன. இவை பொதுவாக பூமியிலிருந்துதான் எழுகின்றன என்றாலும், சில வைரஸ்களாவது அண்டவெளிப் பயணம் மூலம் பூமியில் வந்து சேர்கின்றன என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முனைவர். ஸட்டிலும் அவரது ஆய்வுக் குழுவும் கண்டுபிடித்த இந்த வைரஸ்களின் மழையைத் தவிர, அதே இட வெளியில், ஒரு சதுர மீட்டர் இடத்தில், அவர்கள் கண்டது வேறேதும் உண்டா? உண்டுண்டுண்டு. பல கோடி பாக்டீரியாக்களும் அந்த இடத்தில் இருப்பதாகக் கண்டிருக்கிறார்கள்.

இந்த வைரஸ்கள்தாம் நம் உடலில் ஜீரண சக்தியைக் கூடத் தீர்மானிக்கின்றன. எல்லாத் தாவரங்களும் உயிர் பிழைக்க, பிராணிகளும் உயிர் பிழைக்கத் தேவையான பல இயக்கங்களுக்கும் இவை உதவுகின்றன. இவை இல்லாத இடமே இல்லை பூமியில். ஒரு வேளை இவற்றுக்குத்தான் நாம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் கடவுள் என்று பெயரிட்டு விழுந்து வணங்குகிறோமோ என்னவோ? கட = கடந்து, உள்= உள்ளிருப்பவர் என்றால் அது வைரஸுக்குப் பொருந்தும் இல்லையா?

குரங்கிலிருந்து மனிதராக நாம் வளரக் கூட இந்த வைரஸ்களில் ஒன்று காரணம் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  ஏஆர்ஸி (ARC) என்று அழைக்கப்படும் சங்கேதச் சொற்றொடரால் அறியப்படும் இந்த மரபணு நம்முள் இன்றும் இருக்கிறது. இது பண்டை யுகங்களில் எப்போதோ நான்கு கால் மிருகங்களுக்குள் நுழைந்து அவற்றின் இயல்புகளை மாற்றி மனிதராகப் பரிணமிக்க உதவியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதோடு பூமியின் பிராணவாயுவில் பாதியையாவது இந்த வைரஸ்கள்தாம் தயாரித்துக் கொடுக்கின்றனவாம். அப்புறம் வைரஸ்களின் பிரதான உணவு? வேறென்ன, பாக்டீரியாக்கள்தானாம். அட, நம் எதிரிக்கு எதிரி நம் நண்பன் என்று இந்த வைரஸ்களை ஆரத் தழுவிக் கொள்ளலாமா மனிதர்கள்? அட, கொதிக்கும் எண்ணெயிலிருந்து எரியும் நெருப்பில் குதிப்பீர்களா என்ன?

வைரஸ்கள் இல்லாத உலகம் எப்படி இருக்குமாம்? கட்டுரையைப் படித்தால் அல்லவா அது தெரியும்?  இனி படிப்பீர்களில்லையா?

இன்னும் பல படுசுவாரசியமான தகவல்களைக் கொடுக்கும் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து உங்கள் குடும்பத்தினருடன் அதைப் பகிர்வது மிகப் பயனுள்ள பொழுதாக ஒரு மாலையை ஆக்கும்.

https://www.nytimes.com/2018/04/13/science/virosphere-evolution.html?hpw&rref=science&action=click&pgtype=Homepage&module=well-region&region=bottom-well&WT.nav=bottom-well

[/stextbox]
 
[stextbox id=”info” caption=”உருகும் பாறைகள்”]

ஆகாயம் நுண் கிருமிகளால் நிறைந்தது என்று பார்த்து இன்னும் கலக்கம் வரவில்லை என்றால் அடுத்த செய்தியைப் பார்த்தால் கலக்கம் வராமல் இராது. நம் காலத்தில் தட்ப வெப்ப நிலையில் நிறைய மாறுதல் ஏற்பட்டிருக்கிறதை நாம் பார்த்திருப்போம். அவை மாறுதல் என்று நமக்குத் தெரிவிப்பவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையினர்தான். ஆனால் நம் காலத்தில் இளைஞர்களுக்கு இந்தத் தறி கெட்ட சீதோஷ்ண நிலை ‘வழக்கமான’ ஒன்று என்ற நினைப்பு இருக்கக் கூடும். இவர்கள் ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்று பழைய பாடல் எங்காவது ஒலிபரப்பப்பட்டுக் கேட்டால், அது ஏச்சா, மெச்சலா என்று புரியாமல் குழம்பக் கூடும்.

இப்படிக் காலம் தவறிய காலப் பகுப்புகளுக்கு உச்ச காரணமாகச் சொல்லப்படுவது உலகம் உஷ்ணமாகி வருதல் என்பது. அதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுவது காற்றில் கரியத்தின் வாயுக்கள் கூடி வருதல்.

இத்தனை ஆண்டுகளாக அறிவியலாளர்கள் சொல்லி வந்தது ஆர்க்டிக் பகுதிகளின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன, இப்படியே போனால் ஆர்க்டிக் பகுதியில் வெறும் நீருள்ள கடல்தான் எஞ்சும். இதன் விளைவுகள் பெரும் விபரீதமாக இருக்கும் என்ற எச்சரிக்கை அது. ஒரு விளைவு மறுபடி ஒரு பனியுகம் வரலாம். அல்லது கடல் மட்டம் உயர்ந்து உலகின் பற்பல நாடுகளில் உள்ள கடலோர நகரங்கள் மூழ்குதல் நேரலாம்.

இடை விளைவாக, கடலில் உஷ்ணம் கூடுவதால் உலகின் பெரும்பாலான மீன் வகைகள் மரித்துப் போகக் கூடும். உலக மக்களில் பெரும் திரளினர் இந்த கடல் பிராணிகளை நம்பியே வாழ்க்கை நடத்துகிறார்கள். மனிதத் திரளின் உணவில் இந்தக் கடல் பிராணிகள் வகிக்கும் பங்கு கணிசமானது. இவை மரித்தால் மனித உணவில் பெரும் குறைபாடு நேரும் என்ற அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டு விட்டது.

இங்கு கொடுக்கப்படும் செய்தியின் சாரம் கடலில் நீர்ப் பெருக்கு பெருகியதும், அதன் உஷ்ணம் கூடியதும் சார்ந்தது. ஐஸ்லாந்து என்று பெயரிலேயே பனியைக் கொண்ட நாட்டின் பிரும்மாண்டமான பனிப்பாளங்கள் (உறைபனி) உருகும் வேகம் இதுவரை கணக்கிட்டதைப் போலப் பல மடங்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். இதன் சில விளைவுகள்: வட பாதி உலகக் கடல்களில் குளிர் நீர் ஏராளமாகப் பெருகி விட்டிருக்கிறது. இந்தக் குளிர் நீர் கனமானதால், ஆழ் கடலில் நிற்கும், இதன் ஓட்டம் மிக மெதுவாக இருக்கும். உலகத் தட்ப வெப்ப நிலை இந்த வெப்பம் கூடிய பகுதிக் கடல் நீர் வேகமாக குளிர்ப் பகுதிகளை நோக்கி ஓடுவதாலும், குளிர்ப்பகுதி நீரோட்டம் உஷ்ணப் பகுதிகளை நோக்கி நகர்வதாலும் ஓரளவு சமநிலைப்படுகிறது. கால மாறுதல்கள் என்று நாம் சொல்வன ஒவ்வொரு வருடமும் நேர்வது இந்த மாக்கடல் நீரில் ஏற்படும் கலப்பும், அதொட்டிய நீர் வெப்பத்தில் ஆவியாகி மழையாக, புயலாக, பனிப்பொழிவாக நிலத்தில் கொட்டுவதும் கொணரும் மாறுபாடுகள்.

இந்தச் செய்தியில் சொல்லப்படுவது: குளிர் நீர் அதிகமாகிய வடகடல்களில் நீரோட்டம் குறைந்து, உஷ்ணம் அதிகமாகிய தென் கடல்களிலிருந்து நீர் வடப்புறம் ஓடுவது மிக மிக மெதுவாகி விட்டது. வளைகுடா நீரோட்டம் (கல்ஃப் ஸ்ட்ரீம்) எனும் பெருங்கடல் நீரோட்டத்தால் வட அமெரிக்கா, கனடா, வட யூரோப் போன்ற பல நாடுகளின் கடுங்குளிர் குறைக்கப்பட்டு அங்கு வாழ்க்கை ஓரளவு சாத்தியமாகி இருக்கிறது. குளிர் நீர் தென்பாதிக்கு ஓடுவதால் அங்கு மழைக்காலமும் வசந்தமும் நேர்கின்றன.

இப்போது மெதுவாகி அனேகமாக நிற்கும் நிலைக்கு வந்து விட்ட வளைகுடா நீரோட்டம் வடபாதி உலகில் குளிர் பல மாதங்கள் நீடிக்கும் நிலைக்குக் கொணர்ந்து விடும். இதன் இதர விளைவுகள் என்னவென்று செய்தியைப் படித்தால் புரியும்.

https://www.theguardian.com/environment/2018/apr/13/avoid-at-all-costs-gulf-streams-record-weakening-prompts-warnings-global-warming

[/stextbox]
[stextbox id=”info” caption=”வீடற்ற அமெரிக்கர்கள்”]

சமூகவியலாளர்கள் கூட அவ்வப்போது பயனுள்ள சில விஷயங்களைப் பேசுகிறார்கள் என்பது மாத்யூ டெஸ்மாண்டின் சமீபத்திய ஆய்வைப் படித்தால் தெரிகிறது. இதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தன் நீண்ட செய்திக் கட்டுரை ஒன்றில் புலப்படுத்துகிறது.

முனை. டெஸ்மாண்ட் இரண்டு வருடம் முன்பு எழுதிய ஒரு புத்தகம், ‘எவிக்டட்’ என்ற தலைப்பு கொண்டது. அது ஏழைக் குடும்பங்கள் தங்கள் வீடுகளைக் கடனில் இழந்த பின் மேன்மேலும் ஏழ்மையில் சிக்கி அல்லலுறுகிறார்கள் என்பதை நிறையத் தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களின் அலசல் மூலம் நிறுவி இருந்தார். அந்தப் புத்தகத்தைப் பல பிரமுகர்கள் பாராட்டித் தாம் அந்தப் புத்தகத்தைப் படித்ததாகவும் சொல்லி இருந்தனர். அதற்கு 2017 இல் புலிட்ஸர் பரிசு கூடக்கிட்டியது.

ஆனால் அவருடைய அப்போதைய ஆய்வு அமெரிக்கா பூராவும் இந்த ஏழ்மையில் வீடிழப்பது என்பது எத்தனை பரவி உள்ளது என்பதைக் காட்டவில்லை. உலகின் தலை நிலை நாடுகளில் ஒன்றெனப் பெயர் வாங்கிய அமெரிக்காவில் எத்தனை தகவல் வறுமை நிலவுகிறது என்பதை நாம் அறிய இது இன்னொரு சான்றாக இருக்கும். அமெரிக்காவில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவோர் குறித்து எந்தத் தகவலும் சேகரிக்கப்பட்டுக் கிட்டுவதில்லை.

டெஸ்மாண்ட் ஒரு முதல் கட்ட நடவடிக்கையாக அமெரிக்க நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்களைச் சேகரித்துத் திரட்டி இப்படி நீதிமன்ற ஆணைகளால் வீடிழக்கும் மக்களின் தகவல்களைக் கொடுக்கும் ஒரு தகவல் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்த வருடம் நமக்கு அது சில முதல்கட்ட முடிவுகளைக் கொடுத்து உதவுகிறது.

2016 இல் அமெரிக்காவில் சுமார் ஒன்பது லட்சம் குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் தகவல் அமைப்பு பூரணமானதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருந்தும் இதன் தகவல்கள் நமக்கு அதிர்வைக் கொடுக்கும். 50 வாடகை வீட்டுக் குடி இருப்போரில் ஒரு குடும்பம் இப்படி வெளியேற்றப்படுகிறது, சராசரியாக. சில மாநிலங்களில், சில நகரங்களில் இத்தகைய வெளியேற்றம் கடுமையாகவும், மிக அதிகமாகவும் உள்ளமை அந்தப் பகுதியில் வேலையில்லாமை, வறுமை ஆகியன மிக அதிகம் என்பதையும், ஓரளவு நீதி மன்றங்கள் அத்து மீறி நடக்கின்றன என்பதையும் சுட்டலாம் என்று தெரிகிறது.

2000 ஆவது வருடத்திலிருந்து நீதிமன்ற ஆவணங்களைச் சேகரித்து உருவான இந்தத் தகவல் அமைப்பில் கிட்டுகிற தகவல்கள் நாட்டில் எங்கெல்லாம் வறுமை கூடி வருகிறது என்பதை வேறெந்தப் புள்ளி விவரத்தையும் விடக் கச்சிதமாகச் சுட்டுவதாக டெஸ்மாண்ட் கருதுகிறார்.

புள்ளி விவரங்கள் இன்னும் பெருமளவில் நிஜ நிலைமையைச் சுட்டவில்லை, பல மாநிலங்களில் இந்தத் தகவல்கள் இன்னும் கிட்டவில்லை, பல மாநிலங்களில் இவை குறையுள்ள தகவல்கள் என்பதால் வீடில்லாமை என்பது அமெரிக்காவில் எத்தனை ஆழமாகப் போயிருக்கிறது என்பதை நாம் அறிவது கடினமாக உள்ளது. இப்போது நாம் பெற்றுள்ள தகவல்கள் வீடின்மையைக் குறைத்துத்தான் மதிப்பிடுகின்றன என்று கட்டுரை சொல்கிறது.

மேலும் விரிவாகப் படிக்க இங்கே செல்லவும்:

https://www.nytimes.com/interactive/2018/04/07/upshot/millions-of-eviction-records-a-sweeping-new-look-at-housing-in-america.html?hpw&rref=upshot&action=click&pgtype=Homepage&module=well-region&region=bottom-well&WT.nav=bottom-well

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.