வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்

Was he to bray this in profoundest brass
Arointing his dreams with fugal requiems?
Was he to company vastest things defunct
With a blubber of tom-toms harrowing the sky?

                             from The Comedian as Letter C by Wallace Stevens

I

ரொமாண்டிக்குகளில் துவங்குவதே பொருத்தமாக இருக்கும். ‘ரொமாண்டிக் சப்லைம்’ (எழுச்சிவாத உன்னதம்) என்பதன் உதயத்தை சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் வழிபாட்டு முறைமைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த இங்கிலீஷ் எதிர்ப்பியக்க மரபிலும் மில்டனிலும் காணலாம். சச்சரவு, உள்நாட்டு கலவரம், சமய மோதல்கள், உலகு குறித்து தத்துவம் மற்றும் அறிவியல் புரிதல்களில் மாபெரும் கொந்தளிப்புகள், அவற்றையொட்டிய, ஆனால் அவற்றுடன் முரண்படும் எதிர்வினைகள், இறுதியில் ஒழுங்கமைவு என்ற வரிசையில் புதிய கருத்துகள் நிறுவப்படுதல் என்று அதன் முன்பிருந்த வரலாற்று காலகட்டத்தைச் சுருக்கிச் சொல்லலாம்.  இக்காலகட்டத்துக்குப்பின், யுக சந்திக்கான சமயம் சார்ந்த ஏக்கமும் புரட்சிக்கான உணர்வெழுச்சியும் (பிரெஞ்சு மற்றும் அமெரிக்க புரட்சிகள்) இணைந்து ஒலிப்பது துவக்க ரொமாண்டிக் காலத்தின் தனி இயல்பாய் அமைந்தது. போப், ஸ்விஃப்ட், ஜான்சன் முதலான நவசெவ்வியல்வாதிகள்பித்து குறித்த அகஸ்டிய அச்சம்கொண்டிருந்தமைக்கு நேர்மாறாய், பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியகால இலக்கியவாதிகள், “உன்னதம்”, “நுண்ணுணர்வு”, ஆகிய பதங்களைப் பயன்படுத்தினர். (இங்கு சில உபகுறிப்புகள் உதவலாம்: ரொமானிய, கிரேக்க காவியகர்த்தாக்களின் பாணியைஒழுங்கு, தர்க்கம், கட்டுக்கோப்பு, துல்லியம், கச்சிதம், ஒழுக்கம், ‘பிழையின்மைபோன்ற லட்சியங்களைவிதந்தோதியவர்களே நவசெவ்வியல்வாதிகள்; கற்பனையாற்றல் கிளர்ச்சியைத் தூண்டும் என்று சொல்லுமளவு மாறுபட்ட கருத்துகள், புதிய முன்னெடுப்புகள் மற்றும் தீவிர நிலைப்பாடுகளுக்கு எதிரான சட்டம்ஒழுங்கு நாட்டம், ‘பித்து நிலைகள்குறித்த ஐயம், இவைஅகஸ்டிய அச்சம்என்று சொல்லப்படுகின்றன: ஜூலியஸ் ஸீசர் காலக் கொந்தளிப்புகளுக்கு முடிவு கட்டி அமைதியை நிறுவிய அகஸ்டஸ் ஸீசரை நினைவுறுத்தும் வகையில்அகஸ்டிய’; சர்வாதிகாரம் என்ற அளவில் இருந்தாலும் அதிகாரம் அதன் மகத்தான நிறுவன ஆற்றல்களுக்காக விழையப்பட்ட வரலாற்று காலகட்டம்).

காவிய காலம் என்று பார்த்தால் சப்லைம் என்ற கருத்து (இனி உன்னதம்), கிருத்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் அது குறித்து ஒரு நீண்ட உரை எழுதிய லாஞ்சைனஸ் என்ற பெயர் சூட்டப்பட்ட இலக்கிய விமரிசகனிடம் இட்டுச் செல்கிறது. திகைப்பையும் துதியையும் தூண்டும் வகையில் சிந்தனையும் மொழியும் நுட்பமாய்க் கூர் தீட்டப்பட்ட ஓர் உயர்ந்த நிலை என்று விவரிக்கத்தக்க, உயர்குடியினருக்குரிய கருத்தாக்கமாய் லாஞ்சைனஸ்உன்னதம்என்பதை கருதினார். வெகு காலத்துக்குப்பின், இங்கிலாந்தில் நவசெவ்வியல்வாதிகள் வாயிலாய் எதிரொலித்த இவரது சிந்தனையை மறுதலிக்கும் விதமாய்,1756 ஆம் ஆண்டு, ‘உன்னதம் மற்றும் அழகு ஆகிய கருத்துக்களின் தோற்றம் குறித்த ஒரு தத்துவ ஆய்வு’, என்ற கட்டுரையை (‘A Philosophical Enquiry into the Origin of our ideas of the Sublime and the Beautiful’) எழுதிய எட்மண்ட் பர்க், உன்னதம் என்பது மனதுக்கினிய ஓர் அழகிய வஸ்து என்ற காவியகால நினைப்பைப் புரட்டிப் போட்டார். “இருண்மையானது, நிலையற்றது, குழப்பமானதுஎன்பதால் பயங்கரமானது என்ற அர்த்தத்தில், உன்னதம் அழகுக்கு எதிரானது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். காண்ட், ஷோபன்ஹாவர், மற்றும் பலர் இப்பதம் குறித்து தத்துவ ஆய்வுகள் பலவற்றை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர், அவற்றைப் பேச நாம் நிதானிக்கத் தேவையில்லைஃபிராய்டின் கற்பனையில் பொருள் முறிவுற்ற இப்பதம் அதன் படபடக்கும் சுட்டுதல்களுடன்உன்னதமயமாக்கம்’ (Sublimation) என்ற உளப்பகுப்பாய்வியல் சிந்தனையாய் மாறியிருக்கிறது பாருங்கள் என்பதை மட்டும் போகிற போக்கில் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

இதில் நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், பெரும்பாலும் உழவுச் சமூகமாகவும் அரசாட்சி அமைப்பாகவும் இருந்த ஒன்று தொழில்மயமாக்கப்பட்ட சமூகமாகவும் ஜனநாயக அமைப்பாகவும் மாறும் காலகட்டத்தில் வாழ்ந்த ரொமாண்டிக்குகளுக்கு உன்னதம் என்பது, ஹரோல்ட் ப்ளூமின் சொற்களில், “அருளின் படிநிலைகளுக்கு அப்பாலும் அவற்றுக்கு வெளியேயும் தனக்கு மீட்சி தேடிக் கொள்ளும் சுதந்திர ஆன்மாவின்குறியீடாய் இருந்தது. முரண்களின் மொத்த உருவமான பரம்பொருள், “பயங்கரமாகவும் அழகாகவும்ஒரே சமயத்தில் உள்ள சமய உன்னதத்தை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். பாரதி, தேசீய விடுதலையில் சமய உணர்வுகளை நிறைத்து,

“பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன் – தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை…”

என்று பயங்கர அழகு கொண்ட உன்னதத்தை விவரிக்கிறான்.

உன்னதமான கிங் ஜேம்ஸ் பைபிள், “எனவே ஆண்டவனின் பயங்கரத்தை அறிந்தே, நாம் மானுடர்கள் மனம் மாற்றுகிறோம்,” என்கிறது. தன்டின்டர்ன் ஆபிகவிதையில், ‘கனமாகவும் களைக்கச் செய்வதாகவும் உள்ள, புரிந்து கொள்வதற்கில்லாத இவ்வுலகின் சுமையைஇலகுவாக்கும்ஆசீர்வதிக்கப்பட்ட மனநிலைஎன்று உன்னதத்தை அழைக்கும் வர்ட்ஸ்வர்த், உன்னதத்தின்பேரச்சத்தையும் பேரின்பத்தையும்எழுதவும் செய்தார். இங்கு நம்மாழ்வார் கவிதைகளுக்கு வந்தால், “வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமேஎன்ற உன்னத ஏக்கத்தையும்

போழ்து மெலிந்தபுன் செக்கரில், வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால், அப்பன்
ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே

என்ற தொன்ம கவித்துவ கற்பனையையும் காண்கிறோம்.

பாரதியும்கூட கண்களுக்கும் செவிகளுக்கும் கிட்டக்கூடிய எங்கும் நிறைந்த இறையனுபவத்தைப் பட்டியலிடுவதோடு நில்லாமல், ‘பெரிதினும் பெரிதுகேட்கும் வகையில் உன்னதப் பாய்ச்சல் நிகழ்த்துகிறான்:

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

சமய உணர்வு மற்றும் சுதந்திர வேட்கை வெளிப்படும் மனநிலையில், அவற்றுக்கு அர்த்தம் இருக்கும் சூழலில், இது போன்ற உன்னத ஏக்கங்கள் இயல்பாகவும் பொருத்தமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவ்விதமான பரவசங்கள் இல்லாத நிலையில், நம் காலம் போன்ற வறிய காலத்தில், புலப்பாட்டு எல்லைக்குக் கிட்டாத புலப்படாத் தூண்டுதல்களை நிகழ்த்தும்சப்லிமினல்விளம்பரங்கள் மனதை மாற்ற யத்தனிக்கும் யுகத்தில், ஒருவன் உன்னத நாட்டத்தை ஆற்றிக் கொள்வதோ, அதை எதிர்கொள்வதோ எவ்வாறு? ‘நவீன காலத்துக்கான உன்னத நாட்டம்என்று நான் அழைக்கவிருக்கும் உணர்வு நிலையின் ஒரு சன்னலை மகத்தான அமெரிக்க கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ் கவிதைகளில் நாம் காண இயல்கிறது.

அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பில் இடம் பெறும்  தி அமெரிக்கன் சப்லைம்என்ற கவிதையில் இந்தப் பிரச்சினையின் மையம் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டு விடுகிறது:

How does one stand
To behold the sublime,
To confront the mockers,
The mickey mockers
And plated pairs?

When General Jackson
Posed for his statue
He knew how one feels.
Shall a man go barefoot
Blinking and blank?
But how does one feel?
One grows used to the weather,
The landscape and that;
And the sublime comes down
To the spirit itself,
The spirit and the space,
The empty space.
In vacant space.
What wine does one drink?
What bread does one eat?

தனக்கும் தன் காலத்துக்கும் பொருத்தமான உன்னதத்தைக் கைப்பற்ற தொடர்ந்து துழாவிக் கொண்டிருக்கும் பாவத்தை நகைமுரண் தன்மையுடன் உள்ளறுக்கும் ஸ்டீவென்ஸ்சிய யதார்த்த பாவம் இக்கவிதையில் தென்படுகிறது. முந்தைய நூற்றாண்டுக்குரிய நாயகன், ஜெனரல் ஜாக்சன், எப்படிப்பட்ட போஸ் கொடுக்கக்கூடும், மக்களாட்சிக் காலத்தில் கேலிக்குரியதாய்த் தோன்றக்கூடிய நாயக பாவம் மறுக்கப்பட்டு விடுமென்றால்? நாயக சாகசங்களுக்கான காலம் கடந்து விட்டது, ஒருவனைச் சுற்றியுள்ள வெளியில் உள்ளார்ந்த மகோன்னதம் எதுவும் இருப்பதற்கு இடமில்லை. ஆனால் வெறுமை நிறைந்த இந்த மொட்டை யதார்த்தத்திலும்கூட, ஏதுமற்ற பாழ்நிலையின் உன்னதமே எனினும், மகத்தான உன்னதத்தின் உணர்த்தல்கள் இருக்கின்றன போலிருக்கிறது. எனினும், இந்தப் பாழ்வெளியின் உன்னதத்தினுள் கவிஞனால் வெகு நேரம் தாமதிக்க இயலுவதில்லை, தன் நகைமுரண் பாவனைகளை மேற்கொள்ளஎந்த ஒயினை ஒருவன் பருக வேண்டும்? எந்த ரொட்டியை ஒருவன் உண்ண வேண்டும்?”  என்ற கேலிக் கேள்விகளை எழுப்பிக் கொண்டு எளிய நகைச்சுவை உணர்வுகளைத் தழுவிக் கொள்கிறான்.  உன்னதத்தைக் காட்டிலும் நகைச்சுவையைக் கொண்டு அடையப்படக்கூடிய நகைமுரண் பாவமே நம்பத்தகுந்ததாக, நம் காலத்துக்கு இயல்பாய் பொருந்துவதாகத் தோன்றுகிறது. (ஆனால் ஸ்டீவென்ஸ்சுக்கு அவ்வாறல்ல. விமரிசகர் ஹெலன் வெண்ட்லர் சொற்களில், “மகத்தான விஷயங்களை மகத்தாகசொல்ல அவருக்கு வாய்ப்பளித்த உன்னதத்தின் அவசியத்தை அவர் எப்போதும் வலியுறுத்தவே செய்தார்.)  தெய்வீக உடலும் ரத்தமுமாக மாறும் ரொட்டியும் ஒயினும் கம்யூனியனின் பழங்காலச் சமய உன்னத எச்சங்களாய், வெறும் குறியீடுகளாய் மட்டும்தான் மிஞ்சியிருக்கின்றன. பொருண்மை மாற்றத்தின் அதிசயம் இனியும் சாத்தியமில்லை, இந்நிலையில் நமக்கிருப்பது ரொட்டி மற்றும் ஒயின் வகைகள் குறித்த மயிர் பிளக்கும் கேலியின் கடுமைதான்.

ஆனால் இந்தக் கவிதையின் சுவையான துளி, உன்னதம் என்பது எப்படி ஆவிக்குஇறங்கி வருகிறதுஎன்பதுதான்– ‘உன்னதம் இறங்கி வருகிறது/ ஆன்மாவுக்கேஎன்று எழுதுகிறார் ஸ்டீவென்ஸ். கேலி மட்டுமே ஸ்டீவென்ஸ்சுக்கு போதுமானதாய் இல்லை, அதற்குப் பின்னும் உன்னதத்தைத் தொட ஒரு முயற்சி செய்கிறார்.

உன்னதத்தை எதிர்கொள்ளும் ஒருவனுக்கு போஸ் மட்டுமே (‘ஒருவன் எப்படி நிற்க வேண்டும்’) மிக முக்கியம் என்பது போல் ஸ்டீவென்ஸ்சின் கவிதையில் மனத்திட்ப/ சுயேச்சை உணர்வைக் குறிக்கும் முக்கியமான சொல்லானபிஹோல்ட்  (கண்ணுறு) என்பதேகூட சுய எள்ளலில் கரைந்து போகிறதுஉன்னதம் என்பது இயல்பான ஒரு தருணத்தை, நிலச்சூழமைவை, செயலை, முகபாவத்தை அதீதமான ஒன்றாய் உருமாற்றும் உள்ளுணர்வு, “இறையனுபவத்தின் சமய சார்பற்ற வடிவத்தை அளிப்பது”, என்றால், அதன் ஒரு சிறு பொறி மட்டுமே இங்குள்ளது, வெறுமையை ஒரு கணப்பொழுதேனும் உருமாற்றக்கூடிய அனுபவத்தின் தப்பவியலாத எளிய சாயை மட்டுமே இது.

‘The Snow Man’ என்ற கவிதையில்

One must have a mind of winter
To regard the frost and the boughs
Of the pine-trees crusted with snow;

And have been cold a long time
To behold the junipers shagged with ice,
The spruces rough in the distant glitter
Of the January sun; and not to think
Of any misery in the sound of the wind,
In the sound of a few leaves,
Which is the sound of the land
Full of the same wind
That is blowing in the same bare place
For the listener, who listens in the snow,
And, nothing himself, beholds
Nothing that is not there and the nothing that is.

ஸ்டீவென்ஸ் கவிதையின் முக்கியமான உறுப்பாய்க் கொண்டகருத்துருவத்தின் முதல் எண்ணம்இங்குமனமிருக்க வேண்டும்என்ற வரியிலும்கருதுஎன்ற வினைச்சொல்லிலும் உருவம் கொள்கிறது.  முதல் ஸ்டான்சா -வில், பனிச் சிகரமிட்ட பைன் மரக் கிளைகளையும் உறைபனியையும் கருத ஒருவனுக்குக் குளிர்காலத்தின் மனமிருக்க வேண்டும் என்கிறார். அடுத்து, ஜனவரி மாதச் சூரியனின் தொலைதூர மினுக்கலில் முரட்டு ஸ்ப்ரூஸ் மரங்களை, பனிச் சடையிட்ட ஜூனிபர்களைக் கண்ணுற ஒருவன் வெகு நேரம் சில்லிட்டிருக்க வேண்டும் என்கிறார். மூன்றாவதாய், சொற்ப இலைகளின் ஓசையில், காற்றின் ஓசையில், எந்த துயரையும் நினையாதொழியஎன்று தொடர்கிறார். கருதுதல் என்பதை அறிவு சார்ந்த, சிந்தனையில் தோய்ந்த ஒன்றாகவும் , கண்ணுறுதல் என்பதை உடனடி புலப்பாடாகவும் கொள்ளலாம். மனம் கருத்தில் கொள்கிறது, சில்லிட்ட உடல் கண்ணுறுகிறது: இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடு பகுதியளவுமனமிருக்க வேண்டும்என்பதால் அழுத்தம் பெறுகிறது: மனமிருக்க வேண்டும் என்பது கருத்துரு முன்வைப்பு, ஆனால், வெகு நேரம் சில்லிட்டிருக்க வேண்டும் என்பது பௌதீக யதார்த்தத்தை முன்னிட்டு. கவித்துவ பிரக்ஞை மாற்றத்துக்குத் தன்னை திறந்து வைத்திருக்க வேண்டும், உணர்வுகளைக் கொண்டு நிறைப்பதற்கு அப்பால் செல்ல வேண்டும். காட்சியும் கருத்தும், அவற்றின் ஊடகமாயுள்ள மனத்திட்பம் அல்லது சுயேச்சை உணர்வும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் உன்னத தேடலின் மிக முக்கியமான மூன்று நிலைகளை நாம் ஸ்டீவென்ஸ்சில் காண்கிறோம்.

குளிர்கால நியூ இங்கிலாந்தில் இங்குமங்கும் பறந்து கொண்டிருக்கும் இலைக் கொத்துகள் இந்தக் கவிதையின் மையக் காட்சிச் சித்திரம். அது ஷெல்லியின்மேலைக் காற்றுத் துதிகவிதையின் துவக்கத்துக்கு நம்மைக் கொண்டு செல்கிறது

O wild West Wind, thou breath of Autumn’s being,
Thou, from whose unseen presence the leaves dead
Are driven, like ghosts from an enchanter fleeing,

Yellow, and black, and pale, and hectic red,
Pestilence-stricken multitudes:

சூனியக்காரனை விட்டோடும் பேய்கள் போல், ஓடுகின்றன/ மஞ்சள், கருப்பு, வெளுப்பு, பிரயத்தனச் சிவப்பில்/ தொற்றுநோய் தாக்கிய பெருந்திரள்” –இலைகளையும் காற்றையும் பரிதாப உணர்வால் நிறைக்கும் ஷெல்லி, உன்னத ஆரோகணத்தின் முடிவில் இறைஞ்சுகிறார்: “காய்ந்த சருகுகள் போல் என் மாண்ட எண்ணங்களை/ அண்டம் கடந்து ஓட்டு, புதுப் பிறப்பை துரிதப்படுத்த!”:

Be thou me, impetuous one!

Drive my dead thoughts over the universe
Like wither’d leaves to quicken a new birth!
And, by the incantation of this verse,
Scatter, as from an unextinguish’d hearth
Ashes and sparks, my words among mankind!
Be through my lips to unawaken’d earth
The trumpet of a prophecy! O Wind,
If Winter comes, can Spring be far behind?

ஸ்டீவென்ஸ்சின் இலைகளுக்குக் காற்றையும்காலியிடம்அளிக்கும் பூச்சையும் தவிர வேறெந்தஆளுமையும்இல்லை. மேலும், பரிதாப உணர்வுகள் கொண்டு நிறைப்பதை, ‘கண்ணுறும்பிரக்ஞையும் தவிர்க்கவே விரும்புகிறது (‘காற்றின் ஓசையில் எந்த துயரையும் நினையாதொழியவும்

சொற்ப இலைகளின் ஓசையில்,
காற்றின் ஓசையில்,
எந்தத் துயரையும்
நினையாதொழியவும்,
அது மண்ணின் ஓசை
அதே கட்டாந்தரையில் வீசும்
காற்று அதையும் நிறைக்கிறது
எனில் செவிப்பவன், பனியில் செவித்திருப்பவன்,
தன்னளவில் ஒன்றுமில்லாதவன்,
கண்ணுற
அங்கில்லாதது ஒன்றுமில்லை
உள்ளது இல்லாதது.

கிட்டத்தட்ட ஒன்றுமேயில்லாத பனிமனிதனின் புனையப்பட்ட இருப்பு, ஸ்டீவென்ஸ்சின் ரொமாண்டிக் முன்னோடிகள் கொண்டிருந்த பிரமைகளையும் (‘அங்கில்லாதது ஒன்றுமில்லை’) காட்சி மயக்கங்களையும் தவிர்த்து (‘உள்ளது இல்லாதது’), வெற்றிடத்தைச் செவித்தபடி வெறுமே அமர்ந்திருக்கிறதுநோக்கம் எதுவும் இல்லாதிருப்பதற்கு வெற்றிடமே நோக்கமாய்க் கொள்வது மேல் என்பதாய்.

ரொமாண்டிக் கவிஞர்கள் போல் நம் பரிதாப உணர்வுகளைக் கொண்டு இயற்கையை நிறைக்காதபோது, நம் உணர்வுகளை புறவுலகின்மீது பூசாதபோது, வாசகர்களாகிய நாம் பனி மனிதன் போலாகி, மானுடச் சிந்தனையின் எல்லைகளுக்குள் குறைத்து அறிந்து கொள்வதற்கில்லாத தூய மெய்ம்மையை நோக்குகிறோம். மொட்டை யதார்த்தத்தை அறிவதில் நம் பங்களிப்பு எதுவுமில்லை எனில், நாம் வெறுமையைத் தவிர வேறெதுவும் அறிவதற்கில்லை. இங்கு எமர்சனின் ஒளி ஊடுருவு விழியையும் கருத்தில் கொள்ளலாம்: ஒளியைப் பிரதிபலிப்பதற்கு மாறாய் அதைத் தன்னுள் முழுமையாய் அனுமதிக்கும் விழி இயற்கையுடன் ஒன்றிவிடுகிறது. (பிற்காலக் கவிதைகளைக் கொண்டே நாம் இந்த வாசிப்பை நிகழ்த்துகிறோம், தன்னளவில் தனியாய் வாசித்து அடையப்படக்கூடிய தரிசனங்கள் அல்ல இவை).

அருவ நிலையில் கலை குறியீடாகிறது, அது பதிலியல்ல; கலை நிலையற்றதென்பதால் மாற்றத்தைத் தன்னுள் கொள்கிறது; இவ்விரண்டுக்கும் அப்பால் கலை, இன்பம் நல்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் ஸ்டீவென்ஸ். அறிவுக்கு நிறைவளிக்கும் அருவமும், கற்பனைக்கு நிறைவளிக்கும் மாற்றமும், இதயத்துக்கு நிறைவளிக்கும் இன்பமும் ஸ்டீவென்ஸ் வலியுறுத்திய தனிப்பெரும் புனைவின் மூவியல்புகள். ஆனால் இந்தக் கவிதையில் பனிமனிதனின் இருப்பு புலப்படுவதே இல்லை என்பதால் கருத்துருவத்தின் முதல் அசைவும் (முதல் எண்ணம்) மாற்றத்தின் தேவையும் இருந்தபோதும், உணர்வின் (அல்லது மீண்டும் கற்பனை செய்யப்பட்ட மனத்திட்பத்தின்) விளைவாய் எழுந்ததனிப்பெரும் புனைவுகளில்’ (ஸ்டீவென்ஸின் பிந்தைய கவிதைகளில் வரும் ‘Supreme Fictions’) ஒன்றாவதில்லை இக்கவிதை . எந்த இன்மையை கவனம் செலுத்தி செவித்துக் கொண்டிருக்கிறானோ, அந்த இன்மையில் அவனும் கரைந்து மறைவான் என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை. நவசெவ்வியல்வாதிகளின் காவியத் தளைகளிலிருந்து கற்பனையை மீட்ட ரொமாண்டிக்குகளின் உன்னதம் தன் காலத்தில் சாத்தியமில்லை என்று மறுதலித்தபோதும் அதற்கான விழைவை ஸ்டீவென்ஸ்சின் துவக்க கவிதைகளிலிருந்தே காண முடிகிறது, நகைச்சுவையும் நகைமுரணும் கைக்கொண்டபோதும் அவர் உன்னதத்தின் வெறுமையை, அது விட்டுச் சென்ற சாயலை, தொடர்ந்து துழாவுகிறார்.

II

ஸ்டீவென்ஸ்சை வாசிக்கையில் பின்னணியில் ஒலிக்கும் மாபெரும் ரொமாண்டிக் கவிஞர்களின் குரல்களால் நம் கவனம் தொடர்ந்து சிதறுவதையும் கவரப்படுவதையும் உணர்கிறோம். அவர்களின்  தாக்கம் இருந்தது, “பாதிப்பு பற்றிய கவலையால்அவர்களை விமரிசித்துக் கடந்து செல்ல ஸ்டீவென்ஸ் பெரும் பிரயத்தனங்கள் எடுத்துக் கொண்டார். கீட்ஸின் தேர்ந்த கவிதையானஓட் டு ஸ்ப்ரிங்” (வேனிற் துதி)-ஐ எடுத்துக் கொண்டால், அதன் அற்புதமான முதல் பத்திகதிரவனுடன் சதிசெய்துபழங்களையெல்லாம் மையம் வரை கனிந்தென நிறைஎன வேனிற் பருவத்தைக் கோருகிறது

   To bend with apples the moss’d cottage-trees,
And fill all fruit with ripeness to the core;
To swell the gourd, and plump the hazel shellss

கீட்ஸின்கவிதையை ‘Le Monocle de Mon Uncle’ என்ற ஸ்டீவென்ஸின் வேறொரு கவிதையுடன் ஒப்பிடலாம். கீட்ஸ்கனிந்தென நிறைஎன்று பாடினால், ஸ்டீவன்ஸ் பூத்துக் குலுங்கிய உச்சத்துக்குப் பின் எஞ்சியிருக்கும் எச்சங்களாய் கனிகளைக் காண்கிறார் (‘நம் மலர்கள் உதிர்ந்து விட்டன. அவற்றின் கனிகள் நாம்‘). நாற்பதுகளில் இருக்கும் ஒருவன் தன் காம வாழ்வை வருத்தத்துடன் திரும்பிப் பார்த்து, “கோடுகளும் சுருக்கங்களுமாய் சீமைப்பூசணி மருக்களாய்த் தொங்குகிறோம்,/ உறைபனி பூசும் இலையுதிர் காலத்தின் வருகைக்குஎன்று  ஆக்ரோஷமான எதிர்வினையாற்றுகிறார்

Our bloom is gone. We are the fruit thereof.
Two golden gourds distended on our vines,
Into the autumn weather, splashed with frost,
Distorted by hale fatness, turned grotesque.
We hang like warty squashes, streaked and rayed,
The laughing sky will see the two of us
Washed into rinds by rotting winter rains.

கீட்ஸின்இலையுதிர்காலத் துதிகவிதையில்மரணம்இடம் பெறாதது குறித்த புதிருணர்வால், ஸ்டீவென்ஸ்சண்டே மார்னிங்’ (ஞாயிறு காலை) என்ற கவிதையில், “சுவர்க்கத்தில் மரணத்தின் மாற்றம் இருக்காதா?” என்று கேட்கிறார்

Is there no change of death in paradise?
Does ripe fruit never fall? Or do the boughs
Hang always heavy in that perfect sky,
Unchanging….

‘Le Monocle’ கவிதையோ, எளிதில் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க ஹாம்லட்டின் மண்டையோட்டுச் சுட்டுதலைக் கொண்டு சுவர்க்கத்தில் மரணத்தின் மாற்றம் இருக்காதா என்ற கேள்விக்கு வியாக்கியானமளிக்கிறது. “சாறோடும் பழுதற்ற இந்த உயிர்க்கனி/ தன் பாரத்தால் புவியில் விழுவது போல் தெரிகிறது”, என்று எழுதுகிறார் அவர். ஏவாளின் கள்ளமற்ற நிலையில் ,புளிக்கும் அதன் சாறுகள் சுவைக்கப்படாத சுவர்க்கீய தோட்டத்துக் காற்றில் மணக்கின்றன. ஆனால் ஆப்பிள் என்ன, மண்டையோடென்ன, ஒரு சிறிது வாசிக்க எல்லாம் புத்தகம்தான் என்று எழுதும் ஸ்டீவென்ஸ், ஈடன் தோட்டக் கனிகள், சாத்தானின் ஆப்பிள், மானுட அறிவு எல்லாவற்றையும் ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார்: அனைத்தும்மண்டையோடுகள் போல், அழுகி மண்ணுக்குத் திரும்பும்பொருளால் ஆனவை.

This luscious and impeccable fruit of life
Falls, it appears, of its own weight to earth.
When you were Eve, its acrid juice was sweet,
Untasted, in its heavenly, orchard air.
An apple serves as well as any skull
To be the book in which to read a round,
And is as excellent, in that it is composed
Of what, like skulls, comes rotting back to ground.

‘Le Monocle’ கவிதையில் பெருமளவு தீவிர யதார்த்த பாவத்தை மேற்கொண்டு, காமத்தைப் பின்னோக்கிக் காணும் பாவம் முறையான உன்னதம் அல்ல என்று தகர்க்கிறார் ஸ்டீவென்ஸ். வேறொரு கவிதையில் தன் மனதைஇதயத்தில் சும்மா இரு, காட்டுச் சிறுக்கியே”, என்று அவர் வலியுறுத்துவது இந்தக் கவிதையிலும் இடம் பெறலாம். தன் காதலியின் முடியாக இருந்தாலும் சரி, ஈடனிய ஆப்பிளாக இருந்தாலும் சரி, வெள்ளி நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அடுத்தடுத்து கவிஞர் செய்யும் ஒவ்வொரு ஆதர்சப்படுத்துதலும் அடுத்து வருவதைக் கொண்டு இரக்கமின்றி தொடர்ந்து பொய்ப்பிக்கப்படுகின்றன (“the sea of spuming thought that foists up” என்பதன் நீர்மை அசைகள் அடுத்து வரும் “A deep up-pouring from some saltier well within” என்பதைக் கொண்டு சிதறடிக்கப்படுகின்றன). ‘Shall I uncrumple this much crumpled thing?’ என்பது ப்ருஃப்ராக்கிலிருந்து (‘Love Song of J. Alfred Prufrock’) எடுக்கப்பட்ட வரியாகக்கூட இருக்கலாம். ஆம், நம் நடு வயது நாயகன்தீர்க்கதரிசியல்ல”, சகிக்க முடியாத சுருதிகளை அடிவயிற்றிலிருந்து உரக்க கோஷித்த தவளையால் பாடப்பட்ட காம உன்னதத்துக்குரிய நேற்றையவேதனைக் கணம்எந்தமாபெரும் விஷயத்துக்கும் அல்ல”.

                       Anguishing hour!
Last night, we sat beside a pool of pink,
Clippered with lilies scudding the bright chromes,
Keen to the point of starlight, while a frog
Boomed from his very belly odious chords.

தன் மொழித்திறன்களையே இவ்வளவு மூர்க்கமான விமர்சனத்திற்கு உட்படுத்திய கவிஞர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட, பரவசப்படுத்தும் சுய விமரிசனம் வாசகனுக்காகிலும் அதனளவிலேயே ஒரு சிறிய வெற்றிதான். ஆனால் இதற்கப்பால் சென்று இதைவிடப் பெரிய துதியாக ஆக்குவதற்குதேவைப்படும் கெத்துதனக்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்ளும் கவிஞனுக்கோ…?

Most venerable heart, the lustiest conceit
Is not too lusty for your broadening.
I quiz all sounds, all thoughts, all everything
For the music and manner of the paladins
To make oblation fit. Where shall I find
Bravura adequate to this great hymn?

சாறோடும் பழுதற்ற இந்த உயிர்க்கனிகாமமன்றி வேறென்ன? அழுகல், மரணம் முதலான சீரழிவுக்கு அப்பாற்பட்ட ஈடனிய உன்னதமாய் காமத்தைக் காண்பதற்கில்லை. பொருண்ம உருமாற்றச் சாத்தியமில்லாத அதை மகத்தான ஆதர்சமாய் அடையாளப்படுத்தவும் இடமில்லை. எல்லாம் அழிவுக்குட்பட்டவை. எனினும் ஒரு கவிஞன் செய்யக்கூடியது, அழகிய ஓசை நயம் கொண்ட கவிதையின் உன்னத தேடல் வரிகளைக் கொண்டு சமாதானப்படுத்திக் கொள்வதுதான்.:

                                    I pursued,
And still pursue, the origin and course
Of love, but until now I never knew
That fluttering things have so distinct a shade.

ஒரு வகை ஈட்டலாய், ஒரு வகை முன்னேற்றமாய், ஒரு வகை நடுக்கண்ட நியாயமாய், தனது பிற்காலக் கவிதைகளில் காணப்படும் ஆசுவாசமான சுதந்திரத்தை அனுமதிக்கும் வகையில் கற்பித மகோன்னத உயரங்களையும் போலி நம்பிக்கை வறட்சியின் வீழ்ச்சிகளையும் நிராகரிக்கின்றன இந்த வரிகள். இங்கு மகத்தான குறுந்தொகைக் கவிதையொன்று நினைவுக்கு வருகிறதுஅதுவும் காமத்தைப் பின்னோக்கிக் காணும் பாவத்தை மேற்கொள்கிறது, நடுக்கண்ட நியாயத்தில் வந்து நிற்கிறது (ஆனால் முற்றிலும் வேறொரு இடத்தில்):

முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம்

நாம்அநியாயமானமுடிவுகளுக்குவந்துவிடக்கூடாது: சங்கக் கவிஞர்கள் அவர்கள் காலத்தின் ஒப்புயர்வற்ற யதார்த்தவாதிகள் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும். என்ன ஒன்று, இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றதில் சில இடைக்கால விருந்துகள் திகட்டிப் போய் விட்டன, சாதாரண, எளிய, சுட்ட அப்பளத்துக்கும் வற்றல் குழம்புக்கும் நாக்கு ஏங்குகிறது.

 

III

பெரும்பாடுபட்டு வென்றெடுத்த கடந்த காலத்து உன்னதங்கள் சுலபமாய் கைவிடப்படக் கூடியவையல்ல என்பதையும் ஸ்டீவென்ஸ் புரிந்து கொண்டிருந்தார்அதனால்தான் ‘Credences of Summers’  என்ற கவிதையிலும்கூட அவர்உண்மையற்ற பாடல்கள்பாடிய ரொமாண்டிக்குகளைச் சாடுவது போல் தோன்றினாலும், ‘ஆகச்சிறந்தது நன்மையாகும், உள்ளதாகும்/ நம் பேறாகும், மரங்களில் அடைகட்டிய தேனாகும்என்றும் அடையாளப்படுத்துகிறார். இங்கும் ஷெல்லிய காலைப் பேரிகைகள் ஒலிக்கின்றன, காட்சியிலும் நினைவிலும்ஆன்மாவின் உத்திகள்இருந்த இடத்தில், “சாத்தியமதுவே/ சாத்தியமற்றதன் பதிலியாகிறதுஎன்று கவிஞனை சமாதானப்படுத்துகிறது. எது சாத்தியம் என்று கேட்டால், கீட்ஸின் தரிசு நிலங்கள்,  மனத்திட்பத்தின் இட்டு நிரப்பும் மீள்கற்பனையைக் கொண்டு மீண்டும் நிறைக்கப்பட முடியும். Le monocle என்னதான் அலட்டிக்கொண்டாலும் கீட்ஸ் எழுதியதே இன்றும் சிறந்த கவிதை, ‘களஞ்சியத் தரையில் கவனமின்றி அமர்ந்திருக்கும்வேனிலின் அடங்கிய மகோன்னதம், விண்ணில் தேய்ந்து மறையும் கீச்சுக்களாய் இசைந்து ஒலிக்கிறதுஆனால் ஸ்டீவென்ஸ்சின் புறாக்களோ இப்போதும்இருளுள் இறங்கிபடபடக்கின்றன, இப்போதும்பேதமறிந்தஅவரது மனத்தால் சிறிது நம்பகத்தன்மை அளிக்கப்பட்ட தோட்டத்தில், ‘ரசக்கேடான களைகள்வளர்கின்றன. போதுமான அளவு கீட்ஸிய கவிதையாக இல்லாததால்தான் ‘Credences’ தான் விரும்பிய வகையில் உரத்து ஒலிக்கும் களியாக மாறுவதில்லை என்பதே இங்கு நகைமுரண்.

ஸ்டீவன்ஸ்ஸின்  பிறழ்வாசிப்பில் கீட்ஸ் உட்பட ரொமாண்டிக்குகள் புற மெய்ம்மையை மானுடத்தின் எதிரிடையாய்க் கண்டார்கள். அதை மானுட வரைகளுக்குள் குறைத்து, பணியச் செய்தனர். புற மெய்ம்மை மனிதனை ஆள வேண்டும், அல்லது, மனிதன் இயற்கையை வெல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். மனமும் உலகும் எப்போதும் எதிர்நிலையில் முரண்பட்டு நிற்பவை என்பதால் ஒரு சமநிலை உருவாக இரண்டில் ஒன்றை நிராகரித்தாக வேண்டும். எனவேதான், ‘காட்டின் மையத்தில் அவர்கள் உழவு வயல்களின் கோடையைப் பாடத் துவங்குகிறார்கள்,” என்கிறார் ஸ்டீவென்ஸ். தானாய் வளர்ந்து நிற்கும் காட்டை மறுதலித்து, மனிதனால் பண்படுத்தப்பட்ட வயற்காட்டின் கோடைச் சித்திரத்தை ஆதர்சப்படுத்தும் ரொமாண்டிக் கவிஞர்களைக் குறித்து, ‘Credences’ கவிதையில்  பாடகர் தம்மைத் தவிர்த்தாக வேண்டும்/ அல்லது பாடுபொருள் தவிர்த்தாக வேண்டும்என்று விமர்சனம் செய்கிறார்

Far in the woods they sang their unreal songs,
Secure. It was difficult to sing in the face
Of the object. The singers had to avert themselves
Or else avert the object. Deep in the woods
They sang of summer in the common fields

Credences என்ற தலைப்பு கவனிக்கத்தக்கது. இயேசுவின் ரத்தமும் உடலுமாய் பரிசுத்தப்படுவதற்கு முன் ஒயினும் ரொட்டியும் வைத்திருக்கப்படும் மேஜை credence table என்று அழைக்கப்படுகிறது. நாம் இன்று பெரும்பாலும் சான்றாவணங்கள் என்ற பொருளில் பயன்படுத்தும் credentials என்ற சொல், ‘நம்புஎன்ற பொருள் கொண்ட credere என்ற லத்தீன் சொல்லை வேராய்க் கொண்டது. இங்கு மரணம் மறுதலிக்கப்படுகிறது, நம்பிக்கையின் மாயத்தால் பொருண்மை பண்பு மாற்றத்துக்கு உட்பட்டு ஒரு புத்துயிர்ப்பு நிகழ்கிறது, பௌதீக யதார்த்தம் ஆன்மீக மெய்ம்மை அடைகிறது. ஸ்டீவென்ஸ்சின் உலகமோ இப்படிப்பட்ட உன்னத நம்பிக்கைகள் இல்லாத உலகம்.

ஸ்டீவென்ஸ்சை வாசிக்கும்போது எப்போதும் அவருக்கு ரோமாண்டிக்குகளை குறித்த ஒரு தொடர்ந்த வாதை இருப்பதை உணர முடிகிறது. அவர்கள் கைப்பற்றிய உன்னதத்தை அடைய அவர் எப்போதும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார், ஆனால் அதே நேரம் போலி உன்னதம் குறித்த சந்தேகத்தால் அவர் தன் பார்வையைப் புகுத்தி, கேலி செய்யவும் முற்படுகிறார். ‘க்ரெடன்ஸஸ் ஆஃப் சம்மர்கவிதை தலைப்பில் உள்ளது போல் மகத்தான கோடை மட்டுமே போதுமானது என்ற நம்பிக்கையை உறுதி செய்கிறதுகற்பனையின் குறுக்கீடு தேவையில்லை (ஏதும் இல்லாமல் கவித்துவ கற்பனையின் அலங்காரத்தைக் கோருவதுஇல்லாதது உள்ளதுஎன்று சொல்லக்கூடிய பனிக்காலம் எனில், கோடையின் முழுமையடைந்த கனித்தன்மை அதன் செறிவின் பூரணத்துவம் காரணமாய் தன்னளவில் போதுமானது). இதனால்தான் கோபுரக் கிழவன் (‘Credences’), ஸ்டீவென்ஸ் அகத்தின் மற்றுமொரு புனைவுவாசிப்பதை நிறுத்திவிட்டு கோடையின் செம்மைக்கு எந்த எதிர்வினையுமில்லாமல் தன்னை திறந்து கொண்டு அமைதியடைகிறான்.

ஆனால் கவிதை தொடர்கையில் இந்தநம்பிக்கையும்பூரணமான கணத்தில் தன்னை இழக்க இயலாத கவிஞனின் சந்தேகிக்கும் கற்பனையில் தொடர்ந்து கலைக்கப்படுகிறது. எனவேதான், “ஓராண்டுக்குச் செறிவளிக்க ஒரு நாள் போதுமா, அல்லது பிற நாட்களின் நினைவு இந்த நாளுக்குச் செறிவளிக்கிறதா,” போன்ற வரிகள். ‘ஆம், ஒரு நாள் போதும்,’ என்ற லட்சிய வாக்கியத்தை மனத்திட்பத்தைக் கொண்டு மெய்ப்படுத்த விரும்பினாலும், க்ரெடன்ஸ் கவிதை தன் பிரகடனப்படுத்தப்பட்ட நம்பிக்கை குறித்தே அசௌகரிய உணர்வு கொண்டிருக்கிறது. ஏழாவது கான்ட்டோ வரும்போது கவிதை கோடைக்காலத்தை  விட்டு விலகி ரொமாண்டிக்குகள் குறித்த உரைக்கும், கவித்துவ கற்பனைக்கும் அது கைப்பற்றத் தவிக்கும் மெய்ம்மைக்கும் இடையிலுள்ள முரண்பாட்டைப் பேசி கவித்துவச் செயல்பாட்டை எடுத்துரைப்பும் செய்து விடுகிறது. ‘முரட்டுத்தனமாகவிசாரிக்கப்படும்போது கவிதையின் பாடுபொருள் அடிபணிகிறது, அல்லது ஆளுமையடைகிறது. அடிபணிவதால் குன்றிப் போய், மானுடமிழந்து, மீள்கற்பனை செய்யும் மனத்திட்பம் ஒரு வகை ஜெயபேரிகை ஒலிக்க இடம் தருகிறதுகைப்பற்றுதலின் பொருளே இந்த முழக்கமெனும்கடும் பரிசு’. ஆனால் “Three times / The thrice concentred self, having possessed/ the object …” என்று ஸ்டீவென்ஸ் பாடும்போது, மும்முறை எதிர்கொள்ளப்பட்டாலும் அடையாளம் காணப்படாத கர்த்தரைப் போல்  மூன்று முறை கைப்பற்றப்படும் கவிதையின் பாடுபொருளின் மெய்ம்மையும் கவிதையில் அடையாளப்படுத்தப்படாமல் நழுவிவிடுகிறது  என்ற  நகைமுரணையும் நம்மால் தவிர்க்க முடிவதில்லை. (“பொருட்களின் சொற்கள் சிக்கலாக்குகின்றன, குழப்புகின்றன. தன்னைப் பற்றிய கவிதைகளை கடந்து தொடர்கின்றன ப்ளம் பழங்கள்”, என்று அவர்காமெடியன் அஸ் தி லெட்டர் சிஎன்ற கவிதையில் புலம்புகிறார். ரொமாண்டிக்குகளைப் பகடி செய்த அக்கவிதை, ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் சமுத்திரம் கடந்து அமெரிக்கா வரும் ரொமாண்டிக் கற்பனையின் விதியைச் சித்தரிக்க முயற்சி செய்கிறது. அதன் முடிவோ, அவ்வளவு உற்சாகமளிப்பதாய் இல்லை: மனிதனைநத்தைகளின் சாக்ரடீஸ்என்று அணிமை செய்கிறது, கவிஞனும்தான் மெய்ப்பிப்பது ஒன்றுமில்லை என்பதை மெய்ப்பிப்பவன்ஆகிறான்.

பூரண கணத்தை அதன் உன்னத உண்மையுடன் கைப்பற்றுவது எப்போதும் ஸ்டீவென்ஸ்சுக்கு பிரச்சினையாகவே இருக்கிறது. இளமையின் உற்சாகத்தில் அது அவருக்குக் கிட்டுகிறது. ஆனால் உள்ளபடியே மெய்ம்மையை வெளிப்படுத்த முற்படும் ஸ்டீவென்ஸ் அது கற்பனையின் ஊடகத்தில் புகுந்து வெளிப்படுவதையும் கைப்பற்ற விரும்புகிறார். இவ்விரு உந்துதல்களையும் அவரால் வெகு நேரம் சமநிலையில் வைத்திருக்க முடிவதில்லை. கவிதையின் முடிவில் பூரண கணம் களை நிறைந்ததாகிறது. மெய்ம்மை மட்டுமல்ல, அதன் புலப்பாட்டை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தும் விமரிசன கற்பனையும் நம்பிக்கைக்குரியவை. விமரிசனமின்றி நோக்குவது ஸ்டீவென்ஸ்சுக்கு அரிதாகவே சாத்தியப்படுகிறது. எனவேதான் க்ரீடென்சஸ் கவிதையின் கிழவனையும் பனி மனிதனையும் ஸ்டீவென்ஸ் தன் அகத்தின் புனைவுத் தோற்றங்களாய்ப் பயன்படுத்திக் கொள்கிறார். கோடையை வெறுமே உள்வாங்கிக் கொள்ளும் கிழவன் ஆற்றுப்படுகிறான் (எனவேதான் அவன்வாசிப்பதில்லை‘)-

It is the old man standing on the tower,
Who reads no book. His ruddy ancientness
Absorbs the ruddy summer and is appeased,
By an understanding that fulfils his age,
By a feeling capable of nothing more.

வாசிப்பதை நிறுத்திவிட்ட, ‘மேலும் எதையும்உணர முடியாத உள்ளம் கொண்டகோபுரக் கிழவன்’, கோடையின் ஆளுமையையும் பின்னிரவின் பொன்வண்டுக்களையும் தியானிக்கும் கடைசி கான்ட்டோவில்மானுடமற்ற ஆக்குவோன்ஆகிறான்.

The personae of summer play the characters
Of an inhuman author, who meditates
With the gold bugs, in blue meadows, late at night.
He does not hear his characters talk.

எனவே,

“To say more than human things with human voice,
That cannot be; to say human things with more
Than human voice, that, also, cannot be;
To speak humanly from the height or from the depth
Of human things, that is acutest speech.”
(Chocorua to its neighbour)

என்றுமானுட விஷயங்களுக்கு அப்பால் மானுடக் குரலில் சொல்வது/ இயலாதது;  மானுடக் குரலுக்கு அப்பால்/ மானுட விஷயங்களைச் சொல்வது, அதுவும், இயலாததுஎன கொள்கைப் பிரகடனம் செய்யக்கூடியவன்தான் மானுடத்தின் எல்லைகளுக்கு அப்பால் வந்து நிற்கிறான்.

ஆனாலும்கூட இதை மனத்திட்பத்தால் அடையப்பட்ட கணப்போதின் வெற்றியாகவும் பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறது

In which the characters speak because they want
To speak, the fat, the roseate characters,
Free, for a moment, from malice and sudden cry,
Completed in a completed scene, speaking
Their parts as in a youthful happiness.
– (Credences)

கோடையின் கதைமாந்தர் மானுடமற்ற ஆக்குவோனின் பாத்திரங்களாய் வேடம் தரிக்கின்றனர். ஆக்குவோன் பின்னிரவின் கருநீல புல்வெளிகளில் பொன்வண்டுகளோடு தியானிக்கிறான். தன் பாத்திரங்கள் உரையாடிக் கொள்வது அவனுக்குக் கேட்பதில்லை. பல வண்ணம் தரித்த, பல்வகைப்பட்ட ஆடைகளில், நிகழ் கணப்பொழுதையும் கோடையின் மனநிலையையும் வெளிப்படுத்தும்  பாத்திரங்கள்’ ‘பேச விரும்புவதால்மட்டுமே  இப்போது பேசுகின்றன . காழ்ப்பிலிருந்து கணப்பொழுது விடுபட்டு, இவை இளம் மகிழ்ச்சியில் பேசுவது போல் தம் பங்குக்கு பேசுகின்றன, ‘நிறைவடைந்த காட்சியில் நிறைவு பெற்றவையாய்தெரிகின்றன. இது பூரண நிறைவு என்று சொல்ல முடியாதுதான் (ஒழிவில்லாத மனம் எப்போதும் இன்னொன்றை வேண்டிக் கொண்டேயிருக்கும்), ஆனால் முன்னொரு கவிதையில் இதே கவிஞர் கசப்பில் களிப்படையச் சொல்லியிருக்கிறார்– ‘குறைபட்ட சொற்களிலும் பிடிவாத ஒலிகளிலும்உள்ள  பூரணமின்மையேநம் சுவர்க்கம்என்று.  புற மெய்ம்மை உயிர்ப்படைந்த  பூரண கணத்தை ஸ்டீவென்ஸ் மானுட எல்லைகளுக்குள் குறுக்குவதுமில்லை, உன்னத தேடலில் தன் விமரிசனப் பார்வையைக் கைவிடுவதுமில்லை. சாத்தியம் எதுவோ, அதுவே சாத்தியமற்றதன் பதிலியாகிறது.

IV

‘Transport to Summer’(1947),  ‘Auroras of Autumn’ (1950) மற்றும் ‘The Rock’ (1954) ஆகிய கவிதைகள் கொண்ட மகத்தான தொகுப்புகளுக்குப்பின் ஸ்டீவென்ஸ் எழுதிய பிற்கால கவிதை ‘Discover of Thought’. தன் கவித்துவ வாழ்வு நெடுக உன்னதத்தோடு போராடி பிரமாதமானபுனைவுகள்படைத்த ஸ்டீவென்ஸ் இறுதியில் எங்கு வந்து சேர்ந்தார் என்பதற்கான நல்ல உணர்த்தலை இது அளிக்கிறது. கவிதையின் தலைப்பு சிலேடை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது: ஒரு புது வகைச் சிந்தனை கண்டடையப்படுகிறதா, அல்லது, புது வகைச் சிந்தனையைக் கொண்டு வேறொன்று கண்டடையப் படுகிறதா? எது எப்படியானாலும், நுட்பமான வாசிப்பு தேவைப்படுகிறது என்று அறிவித்து நம்மை நிமிர்ந்து அமரச் செய்கிறது.

இங்கு நாம் கிரீடென்ஸஸ் ஆஃப் சம்மரின் வானிலையிலிருந்து வெகு  தொலைவில் துவங்குகிறோம் என்பது தெரிகிறதுநாம் இருப்பதோஸ்னோ மானின் தட்பவெப்பத்தில், ‘இருண்ட குளிர்காலத்தின்ஆழங்களில், ‘கவிதையின் எதிர்ப்புலங்களில்’.

At the antipodes of poetry, dark winter,
When the trees glitter with that which despoils them,
Daylight evaporates, like a sound one hears in sickness.

முதல் வரியின் சூட்சுமம் நம்மை  தாமதிக்கிறது: கவிதையின் எதிர்ப்புலம் என்பதால் இருண்ட குளிர்காலம் கவிதைக்கு எதிரானது என்று நாம் கொள்வதா, அல்லது, கவிதைக்கே இரு எதிர்ப்புலங்கள் இருக்கின்றன என்றும் அவற்றில் ஒன்று இருண்ட குளிர்காலம் என்றும் கொள்வதா? இதன்பின் தார்கோவ்ஸ்கி ஷாட் ஒன்றின் கவித்துவ வடிவத்தைக் காண்கிறோம், “எது அவற்றை அழிக்கிறதோஅதைக் கொண்டுமின்னும்மரங்களுடன் மற்றுமொரு முரண் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நோய்மையில் செவிக்கப்படும் ஓசையாய் பகலொளி வற்றிப்போகும் தேயொலியின் புலனிணக்கத்தில் முடிகிறது. இங்கு, ‘வற்றுதல்என்றஇயங்கமைப்புச் சொல்பிற இயங்கமைப்புச் சொற்களாய் இனி வரும் ஸ்டான்ஸாக்களில் கிளைக்கிறது– ‘கரைதல்’, ‘வடிதல்’, ‘உருவாதல்’, என்று பலவாய். கவிதையின் துவக்க வரிகளில் அரங்கம் அமைக்கப்பட்டு விடுகிறது என்று சொல்லலாம்: இருண்மை நிறைந்த இந்தச் சூழலில் முரண்களைத் தழுவும் இயங்கமைப்புகளின் வரிசையில் நிகழப் போகும் புதிய ஏதோவொன்றை நாம் கண்டறியப் போகிறோம் போலிருக்கிறது.

நாம் இப்போது குழந்தைமையின் உலகுக்கும் அதன் குளிர்கால எதிர்கொள்ளல்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறோம். கவிஞர் தனது எண்பதுகளில் இருக்கிறார் என்பதால் மற்றுமொரு இயற்கை வட்டம் இங்கு சுட்டப்படுகிறது எனலாம்முதுமை இரண்டாம் குழந்தைப் பருவத்துக்கு இட்டுச் செல்கிறது, அங்கு சேகரிக்கப்பட்ட அனுபவங்களின்பொன்னாலான தாடி’ ‘பனியின் நீல குழந்தைமையில்கரைகின்றன (ஸ்டீவென்ஸ் தன் குழந்தைப் பருவத்தின் பென்சில்வேனிய பனி முகடிட்ட நீல மலைகளைச் சொல்கிறார் போலிருக்கிறது). ஸ்டீவென்ஸ்சின் வாழ்வின் எதிர்ப்புலங்களில் நம் மனம் பொருதுகையில் கவிதையும் காட்சி வடிவத்தில் எதிர்ப்புலங்களை விவரிக்கத் துவங்குகிறது– “கோடையின் சில்வண்டு” “ஆலியில் உருவாக்கிக் கொள்கிறது”. எப்போதும் நாம் ஸ்டீவென்ஸ்சில் காண்பது போலவே இங்கும் ரொமாண்டிக்குகளின் நிழல் சாய்கிறது: நூறாண்டுகளுக்கு முன் உறைபனியையும் குளிர்காலத்தையும் சில்வண்டுக்களையும் இணைத்த வர்ட்ஸ்வர்த்தின்வானவில்கவிதைக்கும் (‘குழந்தை ஆணின் தகப்பன்’), ஸ்டீவென்ஸ்சின் துவக்க வரிகள்  வரும் உறைபனியையும், குளிர்காலத்தையும், சில்வண்டையும் தனக்கே உரிய இசையில் இணைக்கும் கீட்ஸின்வெட்டுக்கிளியும் சில்வண்டும்என்ற கவிதையையும் நினைக்கச் செய்கிறது:

On a lone winter evening,
when the frost has wrought a silence, from the stove there shrills
The Cricket’s song, in warmth increasing ever’

ஸ்டீவென்ஸ்சை வர்ட்ஸ்வர்த்துடன் இணைக்கும் கவிதையின் ஒளிமுறிக்கும் திண்பனியில் கவித்துவ மரபின் வானவில் தாவியெழுகையில் குழந்தை ஸ்டீவென்ஸ் தன் ஆழ்மனதின் நீர்களுள்வடிந்துஇறங்கி, குழந்தைத்தனமான கவித்துவ வியப்புணர்வு இன்றி, வளர்ந்தவர்களின் சிந்தனைகளையும் கடமைகளையும் தாங்கிய கனத்த இதயம் கொண்டவர்களாய் இருந்த தன் கடந்த கால தந்தையனையரைச் சாடுகிறார்.

One is a child again. The gold beards of waterfalls
Are dissolved as in an infancy of blue snow.
It is an arbor against the wind, a pit in the mist,
A trinkling in the parentage of the north,
The cricket of summer forming itself out of ice.
And always at this antipodes, of leaden loaves
Held in the hands of blue men that are lead within…

குழந்தைப்பருவ கற்பனைகளுக்கு அளிக்கப்படுவதோ இயேசுவின் பிறப்புக் காட்சி: “கோடையின் சில்வண்டு தன்னை ஆலியில் உருவாக்கிக் கொள்கிறது”. அரவமற்ற அமைதியில் நமக்காகக் காத்திருப்பது உயிரெனும் அதிசயமும் அதற்கு முன் வரும் மூலச் சொல்லும். இவ்வுயிர்த்தலின் அற்புதமான தகிப்பில்  இப்போதுஇருண்டிருந்தகுளிர்காலம்  இப்போதுவிரிந்து வந்து  நிமிர்ந்து நின்றுவெறும்இலையுதிர்காலத்தின் திசைதவறுதலாக  அல்லாது  தனக்கும் நமக்கும் புத்துயிர்ப்பு உரைக்கும சாத்தியங்களைப் பெறுகிறது :

The first word would be of the susceptible being arrived,
The immaculate disclosure of the secret no more obscured.
The sprawling of winter might suddenly stand erect,
Pronouncing its new life and ours, not autumn’s prodigal returned…

கவிதை என்பது ஏதோ ஒரு வகையில் அணிமைகளுக்கான தேடல் என்றால், இங்கு அறிவிக்கப்படுவது அத்தேடலின் முடிவில் தனக்கு எதிராய் உள்ள சூழலில் தோன்றும் சிறிய, அபூர்வமான ஓர் உயிர்த்துளியின் அதிசயம் (இதற்கு காரணமான எபிக்யூரிய க்ளைனாமென்னைமாற்றத்தின் அழுத்தம்”, வாழ்க்கையின் ஆதி விசையானதிருப்பம்நினைவுறுத்துகிறது). ஊடாடும் புனைவுகள் இல்லாமல் (‘பிறப்பதற்கான எத்தனம்/ பிறப்பதைப் பிழைப்பது’), அணிமைகள் இல்லாமல்வாழ்வுச் சம்பவம்அறியப்படுகிறது (‘போன்றதன்இடத்தில்உள்ளதைநினைத்துப் பார்ப்பதற்கொப்ப).

But an antipodal, far-fetched creature, worthy of birth,
The true tone of the metal of winter in what it says:
The accent of deviation in the living thing
That is its life preserved, the effort to be born
Surviving being born, the event of life.

இயற்கைச் சுழற்சிகள் விவரணையளவில் மட்டுமேகூட இசைத்தன்மை காரணமாய் உயர்ந்த ஓர் உன்னத உணர்வாய் உருமாற்றம் பெறும் மாபெரும் ரொமாண்டிக் மரபுக்குரிய சிறந்த இயங்கமைப்பு கவிதைடிஸ்கவரி ஆஃப் தாட்’. இந்தக் கவிதையை பனிக்காலமாகியஉள்ளது இல்லாததுஎன்பதன் அத்தாட்சியாய்க் காண்பது ஒரு வகை வாசிப்பாக அமையும். பல வண்ணங்கள் கொண்ட கோடையின் அத்தாட்சியை அடைவது எளிதாக இருப்பது போல் குளிர்காலத்தின் வெறுமையைக் கடந்து சென்று, “குளிர்கால மனம்”, “பனி மனிதன்போன்ற இடையூட்டுப் புனைவுகள் இல்லாமல் உன்னதத்தை அடைவது எளிதாக இருக்காது. ஆனால் கவனமாய் வாசிக்கும் வாசகருக்கு இது வேறொரு பருவத்தின் கவிதை என்ற கண்டடைதல் மேலும் கூடுதல் ஆச்சரியமாய்க் கிடைக்கும். தன் கவித்துவ கற்பனையைக் கொண்டு விதியின் இயற்கைச் சுழற்சியை இக்கவிதை தலைகீழாக்கி, “இருண்ட குளிர்காலத்தில்இருந்து, “நியூ இங்கிலாந்தின் வீடுகளில் சூரியனின் முதல் ஒளி விழுவது,” என்று சென்று இறுதியில், ‘இலையுதிர்காலத்தின் திசைமாற்றம்என்று முடிகிறது. அல்லாததைக் கொண்டு அடையாளப்படுத்தும் பருவத்தை அது பெயர் சொல்லி குறிப்பிடுவதேயில்லை– “இலையுதிர்காலத்தின் திசைமாற்றம்” (அல்லாதனவற்றைக் கொண்டு ஆட்டுவிப்பவனைக் குறிப்பிடும் ரிக் வேத துதிகளை நினைவுறுத்தும் வகையில்). ஆனால் புதுப்பிறப்பின் பருவமாகிய வசந்த காலம் கவிதையில் குறிபிடப்படுவதே இல்லை. “எண்ணம் இனியும் எண்ணமாய்தொடர முடியாத எதிர்ப்புலங்களைக் கடந்து சென்றுவிட்டதால்  வசந்தத்தின் பிறப்பைக்கண்ணுறுவதையும் கடந்து சென்று அதைஅரங்கேற்றி  நிகழ்த்திக் காட்டுவது அதற்கு அவசியமாகிறது. ஏனெனில், உண்மையாகவே கிறித்துவின் பிறப்புச் சித்திரமாய் இக்கவிதை ஆகிவிட்டிருக்கிறது, வாசகர்களாகிய நாம் இதன் இசையால் ஒவ்வொரு வாசிப்பிலும் அதன் சமயமற்ற அதிசயத்தின் சாட்சிகளாக இருக்கும் ஞானியராக உருமாற்றம் அடைகிறோம்.

இக் கவிதையில் ஸ்டீவென்ஸ் இருப்பின் மர்மத்தை புகார்களின்றி ஏற்றுக் கொள்கிறார். இருப்பின் நடப்பை உணர்வதே அவருக்கு ஓரளவு ஆற்றுப்படுத்தலாய்அமைகிறது, உன்னதத்துக்கான தேவையை ஓரளவு நிறைவு செய்கிறது. கோடையின் நம்பிக்கையை அடைவது எளிது, ஆனால்பனிக்காலம் போன்ற மனம்’, கோபுரக் கிழவன் போன்ற கருத்துருவ புனைவுகளை மேற்கொள்ளாமல் (ஒரு வகையில் குழந்தையும் புனைவே, ஆனால் பிறப்புக்கு முந்தைய அகத்தை மீட்டெடுப்பதாய் மட்டுமே உள்ளதால் கூடுதல் மெய்ம்மை கொண்டது), கடினமாய் இருந்தாலும் குளிர்காலத்தின் நம்பிக்கையை நாம் அடைந்தாக வேண்டும். கவிதையின் தென்புலத்தில்தான் இப்போதும் இருக்கிறோம், இங்கு நாம் செய்வதற்கு ஏதுமில்லை. நம் புலன்களுக்குப் புலப்படுவதை உணர்ந்து, அதில் களித்திருப்பதும், அதைப் பதிவு செய்வதும் மட்டுமே போதுமானது.

V

வாலஸ் ஸ்டீவென்ஸ்சின் டாப் ஹிட்ஸ் குறித்த உரையாடல் என்று இதை எவ்வகையிலும் சொல்ல முடியாது. இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க கவிஞர்களின்மீது விட்மனின் மகத்தான ஜனநாயக உன்னதம் ஒரு பெரும் நிழலாய்ப் படர்ந்தது; அவர்கள் தமக்குரிய உன்னதங்களை அடைவது, அதைவிட முக்கியமாக, அதில் நீண்ட காலம் தோய்ந்திருப்பது, மிகச் சிரமமான முயற்சியாக இருந்தது. மண்ணின் மேதைமை, வரலாற்றுத் தருணம், அமெரிக்க எழுச்சி ஆகியவற்றின் அபூர்வமான ஒரு சங்கமத்தில் தோன்றிய ஆளுமை விட்மன். இங்கு ஸ்டீவென்ஸ் நவசெவ்வியல்வாதிகள் மற்றும் ரொமாண்டிக்குகளின் பின்னணியில் மட்டுமே பேசப்படுகிறார். விட்மனையும் பேச எடுத்துக் கொள்வதே பொருத்தமாக இருக்கும். ஆனால்  நாம் முடிவுக்கு அருகில் வந்து விட்டோம், எனவே அவரது துவக்க கவிதைகளுள் ஒன்றினது துவக்கத்துக்கு அருகில் முடிப்போம்இந்தக் கவிதை அவரதுகலெக்டட் போயெம்ஸ்தொகுப்பில் நான்காவதாய் உள்ளது (‘The Paltry Nude starts on a Spring voyage’).

இங்கு அமெரிக்கன் சப்லைம் என்பது ஒரு பிற்கால வீனஸ் ரூபத்தில், வசந்த பருவத்தின் பயணம் துவங்கும் கட்டத்தில் இருக்கும் அற்ப நிர்வாண தேவதையாக காட்சியளிக்கிறது. இந்தக் கவிதைக்கு பொருத்தமாகவே அவள், “ஓட்டினுள் அல்ல,”  கண்டெடுக்கப்பட்ட முதல் களையில்துவங்குகிறாள். உப்பு கரிக்கும் துறைமுகங்களில் களைத்து அதிருப்தி கொண்டவளாய் அவள் மின்னும் கடலலைகளில் நீந்துகிறாள், அவளுக்கு காற்று வேகம் தருகிறது, அவள் மேகங்களைத் தொட உயர்கிறாள்…. ஆனால் ஸ்டீவென்ஸ்க்கு இது எல்லாம்பின்னொரு காலத்தில்‘ ‘கடற்பச்சை படாடோபத்தில்வெறும் வீனஸாய் அல்ல, “வீனஸாய் இருக்கக்கூடியவள் போல்வரப்போகும்இன்னும் பொன்னாகிய நிர்வாணப் பெண்ணின் உன்னதத்தோடு ஒப்பு நோக்கசல்லி விளையாட்டாய்இருக்கிறது. என் மனக்கண்ணில் நான் அவளை வரலாற்றுக்கு முற்பட்ட புலரிப் பொழுதுகள் ஒன்றில் வந்திறங்குபவளாய்க் காண்கிறேன்ஆம், அவள்கதிரோனின் இருப்பு கொச்சைப் படுத்துவதற்கு முன்னதாக புலரியொளியை நுண்மையாக ரசிக்கும்  நுண்புலத்தோராகியராபின்களையும் புறாக்களையும் போல் அதிகாலையில் எழுபவர்களில் ஒருவள். ஆக, விதிக்கு எதிரான தன் கடைசி பகடையை ஒரு காலத்தில் உருட்டிய விதியின் கைப்பாவை இப்போது அதனுடன் சமாதானம் செய்து கொண்டிருக்கிறாள் (‘விதியின் கைவேலைக்காரி‘), புதிதாய்க் கண்டடைந்த ஞானத்துடன் அவள்தூய அருவியைக் கடந்து/ திரும்பப் பெறவியலா தன் வழிகளில் தொடர்ந்து  உக்கிர அமைதியாய்இயங்குகிறாள்

நாம் பாரதியிடமே துவங்கலாம், ரொமாண்டிக்குகளை வாலஸ் ஸ்டீவென்ஸ் செய்தது போல் நாம் பாரதியையும் படைப்பூக்கத்துடன் பிழைவாசிப்பு செய்யலாம்.  விட்மனைப் போலவே பாரதியும் தனித்துவம் கொண்டவன், சந்திக்குரியவன்- கடந்த காலத்தின் கவித்துவ உன்னதங்கள் குறித்து அவன் முழுமையயாய் அறிந்திருந்தான், அவை ஜனநாயக எழுச்சியுடன் வெடிக்கக் காத்திருக்கும் தேசத்துக்குப் போதாது என்பதையும் அறிந்திருந்தான். எளிமையாகவும் நேரடியாகவும் ஒலிக்கும் மொழிக்கும் ஜனநாயகப் பெருந்திரளை அடையக்கூடிய புதிய கவிதைக்கும் அழைப்பு விடுத்த காலம் அவன் காலம். ‘கவிதை தேவி அருள் வேண்டல்’ என்ற கவிதையையும்கூட கவித்துவ உன்னதத்தின் சூழமைவில் பொருத்தி பிழைவாசிப்பு செய்ய முடியும்:
வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகந் தொடுமுள்
வீழ்த்திடைத் தொண்டையில் வேதனை செய்தென
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை.
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்துபின் வந்து காண்பொழுது, ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்.
கவிதா தேவியின் வானகத்து அமுதம் கொள்ளும்போது கவிஞனின் தொண்டையில் வேதனை செய்த வஞ்சகம் தொடு முள் எது? ஜனநாயக யுகத்தில் வானகத்து அமுதம் உட்கொள்ளுதலே பொருத்தமில்லை என்பதா? பண்டைய கவி மொழியைக் களைதல் தெய்வ மருந்து கொண்ட பொற்குடம் உடைந்து மறைந்து, உன்னதத்தின் துளியமுதும் அருந்தும் சாத்தியமில்லாமல் போனதா? பாரதியை நோக்கி, அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்களைக் கண்டு, முள்ளென உறுத்தும் இந்த விஷயத்துக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது அல்லது அது இன்றும் எவ்வாறு தொடர்கிறது என்பதைக் கண்டறிந்து எடுத்துரைப்பதுவும்தான் இன்றைய விமரிசகனின் பணி.

 உன்னதத்தின் உரிய பாவத்தை அடைய ஸ்டீவென்ஸ் மேற்கொண்ட போராட்டம் இன்றுள்ள கவிஞர்களும் எதிர்கொள்ளக்கூடியது. மெய்ம்மையைத் துறந்து அடையப்படுவதல்ல உன்னதம், அதற்கான தேடலில் மட்டுமே கிட்டுவது. இந்தப் போராட்டத்தின் முழுச் சாகசத்தை விவரிக்க அவரது நீண்ட கவிதைகளை அர்த்தமுள்ள வகையில் விவரிக்க வேண்டும். அதைவிட பயனுள்ள முயற்சி, அந்தப் போராட்டத்தின் ஒரு சில கூறுகளை நவீன தமிழ்க் கவிதைச் சூழலில் பொருத்திப் பார்த்து, அவற்றை இக்காலத்துக்கு உரித்தாக்குவதாய் இருக்கும். ‘சிஎழுத்தாய் வரும் விமரிசகனுக்காக காத்திருக்கிறது அது.

—————————

Sources / Further Reading:
Collected Poetry and Prose, Wallace Stevens, Library of Americal, 1997
Part of Nature, Part of Us, Helen Vendler, Harvard University Press, 1980
The Poems of our Climate, Harold Bloom, Cornell University Press, 1977
The Visionary Company, Harold Bloom, Cornell University Press, 1971

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.