பன்மொழி உலகுக்கான சால்ஸ்பர்க் அறிக்கை

ஒருங்கிணைக்கப்பட்ட இன்றைய உலகில், பல மொழிகள் பேசும் ஆற்றலும் மொழியால் உருவாக்கப்பட்ட பிளவுகளுக்கு அப்பால் தொடர்பு கொள்ளும் ஆற்றலும் மிக முக்கியமான திறன்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் சிறிதளவு பரிச்சயம் இருப்பதும்கூட நன்மை விளைவிக்கிறது. கூடுதலான மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது உலகளாவிய கல்வியின் புது வகை. சிறியவர் பெரியவர் என்று அனைவருக்கும் மொழிக் கல்வி விரிவுபடுத்தப்பட வேண்டும்.

ஆனால், தம் அடையாளம் மற்றும் சமுதாயத்துக்கு உரித்தான மொழிகளைப் காப்பாற்றி, களித்து, வளர்க்கும் உள்ளார்ந்த உரிமை உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகிறது. பன்மொழிகள் கொண்ட சமூகங்கள் மற்றும் தனி நபர்களுக்கு ஆதரவு அளிக்கும் மொழிக் கொள்கைககளின் வழியே இந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும்.

சால்ஸ்பர்க் புவியளாவிய கருத்தரங்கின் “திறன் உந்துவிசை: புவியளாவிய உலகில் மொழியும் ஒருமைப்பாடும்” “ஸ்ப்ரிங்போர்ட் ஃபார் டேலண்ட்: லாங்குவேஜ் அண்ட் இன்டக்ரேஷன் இன் அ குளோபலைஸ்ட் வர்ல்ட்” (Springboard for Talent: Language Learning and Integration in a Globalized World) என்ற அரங்கில் (டிசம்பர் 12-17, 2017) பங்கேற்றவர்களாகிய நாங்கள், பன்மொழித்திறம் மற்றும் மொழியுரிமைகளுக்கு மதிப்பு அளித்து அவற்றைப் பாதுகாக்கும் கொள்கைகளுக்கான கோரிக்கை விடுக்கிறோம்:

நாம் வாழும் உலகில்:

 • ஐநா சபையில் உறுப்பினராய் உள்ள 193 தேசங்களும் பன்மொழித்தன்மை கொண்டவை, அவற்றின் பெரும்பாலான மக்களும் பன்மொழித்திறன் கொண்டவர்கள்.
 • உலகெங்கும் 7097 மொழிகள் பேசப்படுகின்றன.
 • இவற்றில் 2464 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன (1)
 • 23 மொழிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன, இவற்றை உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பேசுகின்றனர்.
 • தாம் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு 40% மக்களுக்கு கிட்டுவதில்லை (2).
 • 6170 லட்சம் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் குறைந்தபட்ச வாசிப்பளவு தேர்ச்சி அடைவதில்லை (3).
 • 2440 லட்சம் பேர் சர்வதேச புலம் பெயர்ந்தவர்கள். இவர்களில் 200 லட்சம் பேர் அகதிகள், 2000ஆம் ஆண்டுக்குப்பின் அகதிகள் எண்ணிக்கை 41% கூடியிருக்கிறது. புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் தொகை எண்ணிக்கையளவில் இவ்வுலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தேசங்களின் பட்டியலில் ஐந்தாவது இடம் வகிக்கும் (5).

நம் உலகம் உண்மையாகவே பன்மொழித்தன்மை கொண்டது. எனினும், பல கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகள், குடியுரிமை நடைமுறைகள், மற்றும் அரசு நிர்வாக அமைப்புகள் பல லட்ச மக்களின் மொழிகள் மற்றும் மொழித் திறன் காரணமாய் அவர்களைக் குறைபட்டவர்கள் ஆக்குகின்றன. “ஏழ்மை ஒழிப்பு, புவிப் பாதுகாப்பு, அனைவரும் வளம் பெற உறுதி பூணுதல்,” என்ற நோக்கத்தில் 193 தேசங்கள் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை (6) அடைய வேண்டுமென்றால் நாம் இந்தச் சவாலை எதிர்கொண்டாக வேண்டும். வலுவான, நியாயமான மொழிக் கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வற்ற கல்வி அமைப்பின் அடிப்படையில்தான் அனைவருக்குமான முன்னேற்றம் நிகழ முடியும்.

அடிப்படை கொள்கைகள்

 • பன்மொழித்தன்மை என்பது மொழிகளை வெளிப்படையாக கற்பித்தல் மற்றும் பன்மொழிச் சமூகங்களில் உருவாகும் முறைப்படுத்தப்படாத தொடர்பாடல் வகைமுறைகள் ஆகிய இரண்டையும் குறிக்கும்.
 • வெகுமொழித்தன்மை என்பது தனி நபர்கள் பல மொழிகளை அறிந்திருப்பதைக் குறிக்கும்
 • வரலாற்று, பூகோள, சமூக-பொருளாதாரச் சூழ்நிலைகள் பன்மொழித்தன்மையின் பல்வகைப்பட்ட வடிவங்கள் மற்றும் பயன்பாடுகள் தோன்றக் காரணமாகின்றன.
 • பன்மொழிக் கல்வி மற்றும் சமூக பன்மொழித்தன்மை ஆகியவற்றுக்கு அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் அளிக்கும் ஆதரவு அறிவுப் பரிமாற்றம் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான புரிதலை ஊக்குவித்து, சர்வதேச நல்லுறவை வலுவாக்குகிறது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைக் கொண்ட மொழிக் கொள்கைகள் சமூக நல்லிணக்கத்தை வலுவாக்குகின்றன, கல்விப் பயனை மேம்படுத்துகின்றன, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கூடுதல் மொழி கற்பிக்கும் அணுகுமுறைகள், குழந்தைகள் தம் தாய்மொழியில் வலுவான கல்வித் திறன்கள் உருவாக்கிக் கொள்ள உதவுகின்றன; சமுதாயங்கள் தம் அடையாளம், அறிவு மற்றும் நம்பிக்கைகளுக்கு உரிய மொழிகளைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன;  தனிப்பட்ட, பொழுதுபோக்கு, கலாசார மற்றும் பொருளாதார நன்மைகள் அளிக்கக்கூடிய புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

மொழிப் பன்முகத்தன்மை என்ற முக்கியமான, தனித்துவம் கொண்ட வளம் பாதுகாக்கப்படவும் உலகில் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றம் விரும்பத்தக்க வகையில் நிகழவும் பன்மொழிக் கொள்கைகள் காரணமாகின்றன.

மொழிப் பன்முகத்தன்மையே உலகளாவிய இயல்புநிலை என்று ஊக்குவித்து அதைக் கொண்டாடக்கூடிய பன்மொழி மனப்பான்மையை தனி நபர்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். பன்மொழி மனப்பான்மையே மொழி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களையும், பன்மொழித்தன்மையை மேம்படுத்தும் மொழிக் கொள்கைகளை உருவாக்கும்.

பரிந்துரைகள்

கொள்கை உருவாக்கம்

வெற்றிகரமான மொழிக் கொள்கை உருவாக துறைசார் வல்லுனர்களின் பங்களிப்பும் சமுதாய உறுப்பினர்களின் உற்சாகமான பங்கேற்பும் அவசியப்படுகிறது. மொழிகள் குறித்து அறிவுப்பூர்வமான, தெளிவான முடிவெடுத்தல் என்பதன் பொருள்:

 • நிதர்சனமான, அடையப்படக்கூடிய இலக்குகள் குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுத்தல்.
 • உரித்தான அனைவரையும் கொள்கை வடிவமைப்பில் இணைத்துக் கொள்ளல், அதன் அனைத்து கட்டங்களிலும் ஆசிரியர்களுக்கு முதலிடம் அளித்தல்.
 • கல்விக்கு முற்பட்ட நிலை முதல் கல்விக்குப் பின்னுள்ள நிலை வரை, முறைசாரா, வாழ்நாள் நெடுக நீளும் கல்வி குறித்து கொள்கைகளை வரிசைப்படுத்தல்.
 • சிறுபான்மைச் சமூகக் குழுவினரின் தாய் மொழிகளைப் பாதுகாத்தல், கற்பித்தல், பயன்படுத்துதல் உட்பட அனைத்து மொழிச் சொத்துகள் மற்றும் தேவைகள் மீதும் கவனம் செலுத்துதல்.
 • தாய் மொழி மற்றும் பிற மொழி கற்றல் குறித்து கல்வி மற்றும் அறிதிறன் ஆய்வுகளின் முடிவுகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
 • தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
 • கொள்கையை முழுமையான அளவு நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆதார வளங்களை அடைதல்.
 • கொள்கையின் குறிக்கோள்கள் மற்றும் நடைமுறைப்படுத்துதலைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்

கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிக் கொள்கை அதன் முழு அளவில் கல்வி மட்டுமல்லாது சமூக, பொருளாதார, கலாசார பரிமாணங்கள் கொண்டது. பன்மொழித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளவும் அதன் நன்மைகளை ஈட்டவும் சமூகங்கள் மொழிகளை வாழ்நாள் முழுக்க கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். மொழிப் பன்முகத்தன்மை குறித்து சாதகமான அணுகுறை மேற்கொள்வதுடன் அனைவரும் மொழிக்கல்வி பெற வேண்டியதை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் கல்வி, திறன்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அமைக்கப்பட வேண்டும். குழந்தைகளும் வளர்ந்தவர்களும் வாழ்நாள் நெடுக தம் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், செறிவூட்டிக் கொள்ளவும், விரிவாக்கிக் கொள்ளவும் ஒருங்கிணைக்கப்பட்ட வாய்ப்புகளை தொடர்ந்து பெற வழி வகை செய்யப்பட வேண்டும்.

பாரம்பரிய மற்றும் மாற்றுக் கல்வி முறைகளை உள்ளடக்கிய, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய புதிய ஒரு கல்விப் பார்வை தேவைப்படுகிறது. மொழிக் கல்வியின் செயற்களன்கள் பள்ளிகளுக்கும் உயர்கல்வி அமைப்புகளுக்கும் அப்பால் வெகுதூரம் பரந்திருக்கின்றன. தெருக்கள், இல்லங்கள், சமூக வலைப்பின்னல்கள், டிஜிடல் சூழல்கள், அகதி ஆதரவு மையங்கள் என்று அனைத்தும் மொழிக் கற்றலையும் போற்றலையும் ஊக்குவிக்க நடைவடிக்கைகள் மேற்கொள்ள இயலும்.

மொழிபெயர்த்தல் மற்றும் விளக்குதல்

பன்மொழிச் சமூகங்களில் பொதுச் சேவைகள் வடிவமைக்கப்படுவதிலும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படுவதிலும் தகவல் பரிமாற்றத்திலும் இச்சேவைகள் மையப் பங்காற்றுகின்றன. தொழில்முறை மொழி ஊடக அமைப்பு இலவசமாகக் கிட்டுவதைச் சார்ந்தே சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், மற்றும் சட்ட அமைப்புச் சூழல்களில் சம உரிமை கொண்ட பங்கேற்பு அமைகிறது.

செயல்திட்ட அழைப்பு

ஆய்வாளர்கள், ஆசிரியர்கள்; சமுதாய களப்பணியாளர்கள், குடிமைச் சமூகம், அரசு சாரா அமைப்புகள்; கலாசார மற்றும் ஊடகக் குரல்கள்; அரசு மற்றும் பொதுத்துறை அதிகாரிகள்;  வணிக மற்றும் வர்த்தக அமைப்புகள்; உதவி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள்; அறக்கட்டளைகள் மற்றும் தர்ம ஸ்தாபனங்கள் ஆகியவை மாறுதலை ஏற்படுத்தக்கூடிய சமூக உறுப்பினர்கள். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்:

 • பன்மொழித்தன்மை மற்றும் வெகுமொழித்தன்மைக்கு இணக்கமான பார்வை கொண்ட ஒற்றுமையான, உயிர்ப்புள்ள சமூகங்களுக்கு ஆதரவாய் இருக்கக்கூடிய மொழிக் கொள்கைகள், நடைமுறைகள், மற்றும் தொழில்நுட்பங்களை வடிவமைத்தல்.
 • அதிகாரப்பூர்வ ஆவணப்படுத்துதல் மற்றும் பொது தகவல் அமைப்பில் மொழி உரிமைகள், பன்மைத்தன்மைகள், மற்றும் குடியுரிமைகளை ஆதரித்தல்.
 • மொழி மற்றும் மொழிக் கல்வி சார்ந்த பாகுபாடு, பாரபட்சம், சார்பு நிலை மற்றும் சமநிலையின்மையை அனைத்து நிலைகளிலும் எதிர்கொள்ளல்.
 • நடப்பு மற்றும் எதிர்கால உலகுக்கு மிகுந்த மதிப்பு வாய்ந்த உயர்தர மொழியீய முதலீடு கொண்டவர்கள் என்று சிறுபான்மையினர், புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை அங்கீகரித்தல்.

தமக்கே உரிய வகையில் இந்த ஒவ்வொரு உறுப்புக் குழுக்களும் சமூக முன்னேற்றம், சமூக நீதி மற்றும் பங்கேற்புக் குடிமைக்குச் சாதகமான வகையில் பன்மொழித்தன்மையை அணைத்து ஆதரிக்க இயலும். எதிர்காலச் சந்ததியினருக்காக பன்மொழித்தன்மை எனும் கலாசார, அறிவுப் பெரும்பேற்றைக் காப்பாற்றும் வகையில் நாமனைவரும் இணைந்து செயல்பட இயலும்.

சான்றாவணங்கள்

மொழிகளின் அட்லாஸ், யுனெஸ்கோ: http://www.unesco.org/languages-atlas

தாம் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு 40% மக்களுக்கு கிட்டுவதில்லை,” யுனெஸ்கோ: https://en.unesco.org/news/40-don-t-access-education-language-they-understand

6170 லட்சம் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் கணிதம் மற்றும் மொழி வாசிப்பு தேர்ச்சி அடைவதில்லை,” UNESCO: https://en.unesco.org/news/617-million-children-and-adolescents-not-getting-minimum-reading-and-math

வர்ல்ட் மைக்ரேஷன் ரிபோர்ட், 2015, இன்டர்நேஷனல் ஆர்கனைசேஷன் ஃபார் மைக்ரேஷன்: https://www.iom.int/world-migration-report-2015

ஐந்தாம் பெரிய தேசம், மக்கள்தொகை தொடர்பு: http://www.populationconnection.org/article/fifth-largest-country

நிலையான வளர்ச்சி இலக்குகள், யுனைட்டட் நேஷன்ஸ்: http://www.un.org/sustainabledevelopment/sustainable-development-goals

நன்றி : http://education.salzburgglobal.org/index.php?id=8547

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.