எம். எல். – அத்தியாயம் 18

அத்தியாயம் 18

கூத்தியார் குண்டுப் பிள்ளை தன் இரண்டு மகள்களுடனும் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது ஏழரை மணி இருக்கும். கோவிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. அதனால் சுவாமியையும், அம்மனையும் ஆற அமர நின்று தரிசிக்க முடிந்தது. மீனா சென்ட்ரல் டாக்கீஸைத் தாண்டி, மெத்தைக் கடைகளின் பக்கம் வரும்போதே வீட்டை மறந்துவிட்டாள். சோமு அவர்களுடன் கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொன்னதெல்லாம் அவளுடைய மனதிலிருந்து காணாமல் போய்விட்டன. மேலக்கோபுர வாசலில் கூத்தியார் குண்டுப் பிள்ளை மீனாவுக்கு, கற்பகத்துக்கும் நிறைய பூ வாங்கிக் கொடுத்தார். கோவிலில் உடைக்க தேங்காய்பழமும் வாங்கினார். மேலக்கோபுர வாசலுக்குள் நுழைந்ததுமே காற்று பிய்த்துக் கொண்டு போயிற்று

எல்லா சன்னதிகளையும் சுற்றிவிட்டு தெற்கு ஆடிவீதி வழியாக வெளியே வந்தபோது லெட்சுமண பிள்ளை மீனாவிடம், “நான் ராத்திரியே ஊருக்குக் கெழம்புதேன் அம்மா…” என்றார்

அதுக்குள்ள என்னப்பா அவசரம்?…”

ஊர்ல சோலி இருக்குல்லா. கற்பகத்தைக் காலேஜிலே சேத்து விட்டாச்சுகாலேஜும் இன்னும் ரெண்டு நாள்ல தொறந்திரும். ஊருல அம்ம தனியாக் கெடந்து கஷ்டப் படுவாள்லா?… கற்பகம் காலேஜுக்குப் போன பெறவு நீயும், மாப்பிள்ளையும் ஊர்ல ஒரு பத்து நாளு வந்து இரியுங்களேன்…”

பாக்கலாம்ப்பா…”

ஏன் அக்காஊருக்குப் போயிட்டுத்தான் வாயேன்…” என்றாள் கற்பகம்

பாக்கலாம் டிசட்டுப் புட்டுன்னு ஒடனே எல்லாம் கெளம்பிர முடியாது…”

அவர்கள் சீதா பவனத்துக்குள் நுழைந்ததுமே மாடிப்படியில் உட்கார்ந்திருந்த சரோஜா ஓடி வந்து தேங்காய், பழப் பையை வாங்கினாள். “இனிப்புச் சேவு வாங்கிட்டு வரலையா?” என்று கேட்டாள். “ஐயையோமறந்து போச்சே! … நாளைக்கிக் காலையிலே வாங்கித்தாரேன்…” என்று சொன்னாள் மீனா. கோபித்துக் கொண்டவள் போல் திரும்பவும் மாடிப் படியில் போய் உட்கார்ந்து கொண்டாள் சரோஜா. கூத்தியார் குண்டுப் பிள்ளைக்கு அவளைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது.

ஏம்மா, வாற வழியில லாலா கடையில வாங்கிட்டு வந்திருக்கலாமேநீ சொல்ல வேண்டியதுதானே?…” என்று மீனாவிடம் கேட்டார்.

போங்கப்பாஅவ சும்மா ஏதாவது கேப்பாவாங்கிக் குடுத்தாஒழுங்காச் சாப்பிட மாட்டாப்பாஅத்தையும் சத்தம் போடுவாங்க…” என்றாள் மீனாட்சி. கூத்தியார் குண்டுப் பிள்ளைக்குச் சமாதானமாகவில்லை. வீடெங்கும் சாம்பிராணி மணத்தது. அப்போது தான் சீதாவும், பெரிய மருமகளும் விளக்கு பூஜை பண்ணி முடித்திருந்தார்கள். கூத்தியார் குண்டுப் பிள்ளை சீதாவிடமும், ராஜியிடமும் தான் ஊருக்குப் புறப்படுவதைப் பற்றிச் சொன்னார். “அதுக்குள்ள என்ன அவசரம் அண்ணாச்சி?…” என்றாள் சீதா. “அங்கயும் சோலி கெடக்குதுல்லாஎன்று சொல்லிச் சமாளித்தார். “சரிஅப்பம் சாப்புடுங்கராஜி, அடுப்புல கல்லப் போடும்மா…” என்றாள்

மாமாவுடைய பேச்சுச் சத்தம் கேட்டு வெளியே வந்தான் சோமு. மீனா அவனிடமும் திருநீறு, குங்குமத்தைக் கொடுத்தாள். “மாப்ளேமீனாவும் நீங்களும் கூத்தியார் குண்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சுல்லா. ஒரு நடை ஊருக்கு எல்லாரும் வாங்கஎன்றார் லெட்சுமண பிள்ளை.
சரிமாமா…”

“ஊர்ல வேலை எல்லாம் அப்படியே கெடக்கு. வந்தும் ரெண்டுநாள் ஆயிட்டுதுல்லாஊருக்குக் கெளம்புதேன். நீங்க சும்ம இருக்காதீயஏதாவது ஒன்னைச் செய்யுங்கஉங்களுக்குத் தெரியாதது இல்ல….” 

சரி, மாமாஎன்றான்

தோசை சாப்பிட்டுவிட்டு, கடைக்குப் போன் போட்டு மைத்துனரிடமும் விடைபெற்றுக் கொண்டார். மாமாவை வழியனுப்ப பஸ் ஸ்டாண்ட் வரை சோமு போனான். எட்டு பத்து திருமங்கலம் பஸ்ஸில் அவரை ஏற்றிவிட்டுத் திரும்பினான். வீட்டுக்குத் திரும்பியதும் மீனாவை சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று தோன்றியது. சாம்ஸன்  அண்ட் டிலைலா பார்க்க வேண்டும் என்று மீனா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், கூடவே சினிமா பார்ப்பதெல்லாம் சரியா என்றும் தோன்றியது. என்றாலும், மீனாவை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று நினைத்தான். சீதாவும், ராஜேஸ்வரியும் அவன் எதிர்பார்த்தது போலவே சினிமாவுக்கு நாங்கள் வரவில்லை என்று சொல்லி விட்டார்கள்

மீனாவுக்கு புருஷன் மீது இருந்த கோபமெல்லாம் போன இடம் தெரியவில்லை. எப்போதும் போல் சின்னச் சின்ன விஷயங்கள்தான் அவளைச் சந்தோசப்படுத்தின. ராஜி மாதிரி இல்லை அவள். ராஜிக்கு வீடு மட்டுமே போதும். ஆனால் மீனா காலேஜ் வரை கொஞ்சம் படித்து விட்டாள். படிக்கிற காலத்திலேயே ஸ்நேகிதிகளுடன் சினிமா, கோவில் என்றெல்லாம் சுற்றுவாள். வீடே கதி என்று கிடக்க அவளால் முடியாது. கொஞ்சம் வெளியேயும் சுற்ற வேண்டும். அதுவும் புருஷனுடன் போக வேண்டும். ஆனந்தவிகடன், கல்கி எல்லாம் படிக்க வேண்டும்

சோமுவும், மீனாவும் சினிமாவுக்குப் புறப்பட்டுப் போன பிறகு ராஜிதான் தெருவாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். அவள் புருஷனும், மாமாவும் கடை அடைத்து வீட்டுக்கு வர பதினொன்றரை மணியாகிவிடும். சரோஜாவுக்குச் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தாயிற்று. சீதாவுக்கு அடுக்களை வேலை ஓய்கிறபடியாக இல்லை. ராஜி பட்டாசல் பெஞ்சில் ஓய்வாக உட்கார்ந்தாள். அடி பம்பில் கக்கூஸுக்குப் போக யாரோ தண்ணீர் அடித்துக் கொண்டிருப்பது அழிக்கம்பிகளின் வழியே நிலவு வெளிச்சத்தில் தெரிந்தது. வீட்டுக்குப் பின்னாலுள்ள சென்ட்ரல் டாக்கிஸ்ல் ஏதோ பாட்டு படத்தில் ஓடிக்கொண்டிருந்தது. மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. படம் விடுவதற்கு இன்னும் அரைமணி நேரமாகும்

டெலிபோன் அடித்தது. ராஜிதான் எழுந்து போய் போனை எடுத்தாள். “ஹலோநாங்க ஆரப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்லே இருந்து பேசுறோம்…” என்ற குரலைக் கேட்டதுமே ராஜிக்கு வெடவெடவென்று வந்தது. சமாளித்துக் கொண்டுஎன்ன வேணும்?…” என்று கேட்டாள். “எம்மா, கிட்டுன்னு ஒங்களுக்குச் சொந்தக்காரன் யாரும் இருக்கானா?”

கிட்டா?…”

ஆமாம்மாஎழுகடல் தெரு ஜவுளிக் கடையிலே வேலை பாக்குறேன்னு சொல்றான்…” 

அப்போது தான் ராஜிக்கு கிட்டுச் சித்தப்பாவுடைய ஞாபகம் வந்தது.

ஆமாமா…”

எம்மா அவன் கேம்பளிங் கேஸிலே மாட்டியிருக்கான் அம்மாஅவன் உன் புருஷனா?…”

ஐயையோ …. புருஷன்லாம் இல்ல, எனக்குச் சித்தப்பா அது…” என்று சொல்லி விட்டு சீதாவைக் கூப்பிட்டாள் ராஜி. அவள் பதறுவதைப் பார்த்து, சேலையில் கையைத் துடைத்துக் கொண்டே வந்து சீதா, போனை வாங்கினாள்.

ஹலோநான் சீதா பேசுறேன்…”

நீ யாரும்மா?”

இப்போ மொதல்ல பேசுனது என் மருமகஎன்னவேணும்?… யார் வேணும்?…”

கிட்டுங்கிறவன் உனக்கு என்னம்மா வேணும்?…”

என் நாத்தனார் புருஷன்…”

அவன் சீட்டாட்டக் கேஸ்லே புடி பட்டிருக்கான் அம்மா…” 

ஐயையோ!… சீட்டா?…” என்று சீதாவும் பதறினாள்.

எம்மா வீட்ல ஆம்பிளை ஆளுக யாரும் இல்லியா?”

யாரும் இல்லைங்ககடைக்கிப் போட்டீங்களா?” 

அவன்தாம்மா இந்த நம்பரக் குடுத்தான்.” 

அய்யாநாங்க பொம்பளைங்கதான் வீட்டுல இருக்கோம். கடைக்கிப் போட்டுப் பேசுனீங்கன்னா நல்லது. 3487″ என்று கடை நம்பரைச் சொன்னதும் இணைப்பு துண்டிக்கப்பட்டது. “இந்த ஆளு என்ன இந்தத் திருகூத்தப் பண்ணிட்டு மாட்டியிருக்கான்…” என்று பரிதவித்தாள் சீதா. “அத்தைகடைக்கிப் போன் போட்டு விஷயத்தைச் சொல்லிருவோம் அத்தை…” என்றாள் ராஜி. பிறகு சீதாவே கடைக்குப் போன் செய்து சுப்பிரமணிய பிள்ளையிடம் விஷயத்தைச் சொன்னாள். “படுக்காளிப் பய…” என்று கிட்டுவைத் திட்டி விட்டுப் போனை வைத்தார். ரங்கநாதன் சர்ட்டிங் துணியை எடுத்து வாடிக்கையாளரிடம் காண்பித்துக் கொண்டிருந்தான். தட்சிணா வெறுமனே கவுண்டரில் உட்கார்ந்திருந்தான். அதற்குள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வந்தது. “ஐயாநீங்க பெரிய எடம்ங்கிறதால தான் இவ்வளவு மெனக்கிட்டுத் தகவலச் சொல்லுதோம்…” என்று சொன்னார் போலீஸ்காரர்

சுப்பிரமணிய பிள்ளைக்கு கோபமும, ஆத்திரமுமாக வந்தது. கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்ததால் தன் கோபத்தை அவரால் வெளியே காட்ட முடியவில்லை. குத்தாலம் ஏதோ விபரீதம் என்று நினைத்தான். “யாருப்பா போன்ல?” என்று கேட்டான்

நீ எதுக்கு அந்தப் படுக்காளிப் பயலுக்குப் பணத்தைக் குடுத்தே?… அவன் என்ன பண்ணியிருக்கான் பாத்தியா? போயி சீட்டாடியிருக்கான்டா…”

அப்போதுதான் செண்பகக் குத்தாலத்துக்கு விஷயம் புரிந்தது. கிட்டு மாமா, மகளுக்குப் புஸ்தகம் வாங்கணும் என்று இப்படி மோசம் செய்து விட்டாரே என்று நினைத்தான்

மாமா எங்க இருக்காங்க?…” 

வேற எங்கபோலீஸ் ஸ்டேஷன்லதான் இருக்கான்.”

இப்போ என்ன செய்யிறது அப்பா?”

சவத்துப் பயரெண்டு நாளைக்கி அங்க கெடந்து சாகட்டும்…” 

அத்தை பாவம் அப்பா…” 

இந்தத் தடவ நான் ஒண்ணும் பண்ணப் போறது இல்லதிரும்பத் திரும்ப இதே வேலயா இருக்க பயலுக்கு குடும்பம், பொஞ்சாதி, பிள்ளை எல்லாம் ஒரு கேடா?… சவத்துப் பய மேல கேஸைப் போட்டு, உள்ள போயிட்டு வரட்டும். அப்பந்தான் புத்தி வரும்…”

மாமா உள்ள போயிட்டா, அத்தை என்ன பண்ணுவா அப்பா?…” 

அவ கிட்ட நான் பேசிக்கிடுதேன். ஜெயிலுக்குப் போனாத்தான் குத்தாலம் அவனுக்குப் புத்தி வரும்போலீஸ்லே மாட்டுனதுமில்லாம, நம்ம போன் நம்பரையும் இல்லா குடுத்திருக்கான்…” கோபத்தில் சுப்பிரமணிய பிள்ளை உடம்பெல்லாம் படபடத்தது. அப்பாவிடம் இப்போது பேசிப் பிரயோஜனமில்லை என்று நினைத்தான். மணி ஒன்பதரை ஆகிவிட்டது. நாளைக் காலையில் அப்பாவைச் சமாதானப் படுத்தி மாமாவை ஜாமீனில் எடுக்க வழி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான் குத்தாலம். கடையை அடைத்து விட்டு வீடு திரும்பும்போது, சென்ட்ரல் டாக்கீஸுக்கு பக்கத்தில் வந்ததும், அப்பாவை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு கோபாலக் கொத்தன் தெருவில் நுழைந்து, பாக்கியத்து அத்தையிடம் பேசிவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்பினான்

ன்று பாலகிருஷ்ணனுக்கு மதியத்துக்கு மேல் வகுப்புகள் இல்லை. மத்தியானம் வீட்டுக்கு வந்தவர் சாப்பிட்டு விட்டு கண்ணகி அச்சகத்தில் உட்கார்ந்து பெருமழைப் புலவர் ஆ. செகவீர பாண்டியனாருடன் பேசிக் கொண்டிருந்தார். பரிதிமாற்கலைஞரைப் பற்றிப் புலவர் உற்சாகமாக அவருடன் பேசிக் கொண்டிருந்தார். மேலக் கோபுர வீதியில் உலகநாதன் லாட்டரிக் கடைக்கு அடுத்து உள்ள பரிதிமாற் கலைஞரின் வீட்டை அரசு வாங்கி, அதைப் பாதுகாக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அச்சாபீஸ் கடிகாரத்தைப் பார்த்தார் பாலகிருஷ்ணன். மணி மூணே முக்கால். பக்கத்து வீட்டுக்காரர் என்ற உரிமையில் வெறும் பனீயன் மட்டுமே அணிந்து வந்திருந்தார்.

என்ன காலம் காட்டியை நோக்குகிறீர்களே?..” என்று பாலகிருஷ்ணனிடம் கேட்டார் புலவர்.

இல்லஉங்களுக்கும் வேலை இருக்கும் இல்லியா?..”

ஓய்வாகத்தான் இருக்கிறேன்.” – செகவீர பாண்டியனார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அச்சாபீஸ் போர்மேன், காலி ப்ரூஃப் கற்றையைத் தூக்கிக்கொண்டு வந்து, அவர் மேஜை மீது வைத்தார். சரி, வீட்டுக்குப் புறப்படுவோம் என்று பாலகிருஷ்ணன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, பாலகிருஷ்ணனுடைய தம்பியின் மனைவி வெங்கம்மாள் வந்தாள். அச்சகத்தின் வாசலில் ஒரு காலும், வெளியே ஒரு காலுமாக நின்று கொண்டே அவரிடம், “அத்தான்ஒங்களைத் தேடி யாரோ ஒரு ஆள் வந்திருக்கு…” என்றாள்.

என்னைத் தேடியா? … யாரு?…” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார் பாலகிருஷ்ணன். பெருமழைப் புலவரிடம் விடை பெற்றுக் கொண்டு, வெங்கம்மாளின் பின்னாலேயே தன் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டின் அரையிருட்டில் ஒரு ஆள் பெஞ்சில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. “ஏன்லைட்டைப் போட வேண்டியதுதான?…” என்று வெங்கடம்மாளிடம் சொல்லிக் கொண்டே, கதவுக்குப் பின்னாலிருந்த லைட் சுவிட்சையும், ஃபேன் சுவிட்சையும் போட்டார். அந்த மனிதர் பாலகிருஷ்ணன் உள்ளே வந்ததுமே எழுந்து நின்று கொண்டார். தன் மீதிருந்து அச்சாபீஸ் மை வாசனை அடிப்பது போலிருந்தது பாலகிருஷ்ணனுக்கு.

அவரை உட்காரச் சொல்லி விட்டு பெஞ்சின் ஒரு மூலையில் அவருக்கு எதிரே பாலகிருஷ்ணனும் உட்கார்ந்தார். வந்திருக்கிறவரின் முன்னால் வெறும் பனியனுடன் உட்காரலாமா என்று நினைத்துக் கொண்டே, அவரை ஏறிட்டுப் பார்த்தார். அவர் வெள்ளைச் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தார். கையில் கனமான புஸ்தகத்தை வைத்திருந்தார். அந்த மனிதர் பாலகிருஷ்ணனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சிரிக்கலாமா, வேண்டாமா என்று அவர் தயங்குவது போலத் தோன்றியது. அவரே பேச்சைத் தொடங்கினார். “என் பேரு பிச்சாண்டிஉங்க வீட்டிலே மார்க்ஸிய வகுப்புகள் நடக்கிறதா கேள்விப்பட்டேன்.”

அதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தார். “உங்களுக்கு யார் சொன்னா?…”

என் நண்பர் ஒருத்தர் மூலமா தெரிய வந்தது.”

அன்னைக்கி ஒரு நாள்தான் நடந்தது. இப்போ தினமணி டாக்கீஸ் பக்கம் நடக்குது. நீங்க அதிலே சேரணுமா?..”

எனக்கு தத்துவம் எல்லாம் தெரியும். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ வரை படிச்சிருக்கேன்.”

மாவோ எல்லாம் படிச்சிருக்கீங்களா?… அவரோட பொஸ்தகமெல்லாம் கெடைக்காதே..”

கல்கத்தா, டெல்லியிலே எல்லாம் வாங்கலாம். ஒங்களுக்கு வேணுமா?..” என்று கேட்டார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று பாலகிருஷ்ணனுக்குத் தெரியவில்லை. இதெல்லாம் வேண்டாம் என்றுதான் அன்று, அடுத்த கூட்டத்தை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். இப்போது மறுபடியும் ஒருத்தர் கிளம்பி வந்து அதைக் கிண்டுகிறாரே என்று நினைத்தார்.

என்ன யோசிக்கிறீங்க தோழர்?” என்று பிச்சாண்டி கேட்டார். அவர் தன்னைத்தோழர்என்றது எதையோ மிதித்து விட்டது போலிருந்தது. அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தார் பாலகிருஷ்ணன். பிச்சாண்டி விடுவதாக இல்லை. “ரஷ்யா, சீனாவிலே எல்லாம் மார்க்ஸியம் செத்துப் போச்சு. உண்மையான கம்யூனிஸ சமுதாயம் அல்பேனியாவிலேதான் உருவாயிருக்கு தோழர்…”

அல்பேனியாவா?..” என்று, தன்னையும் அறியாமல் அவருடன் உரையாடத் தொடங்கினார் பாலகிருஷ்ணன்.

கேள்விப்பட்டிருக்கீங்களா?”

நாடுதானே?”

அங்கே அன்வர் ஹோக்ஸா தலைமையிலே உண்மையான கம்யூனிஸ ஆட்சி புராலேட்டேரியன்களுடைய ஆட்சி நடக்குது…”

நீங்க அல்பேனியாவுக்குப் போயிருக்கீங்களா?..”

இல்லை.. ஆனால் அன்வர் ஹோக்ஸாதான் உண்மையான மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். ரஷ்யாவிலேயும், சீனாவிலேயும் நடக்குறது பாட்டாளி வர்க்கத்தோட ஆட்சி இல்லை. பார்ட்டி பூர்ஷுவாக்கள் நடத்துற ஆட்சி. அல்பேனியாவிலே பாட்டாளிகளோட ஆட்சி நடக்குது..”

பேப்பர்லே எல்லாம் அப்படி ஒண்ணும் செய்தி வரலையே?..”

தோழர்இந்தப் பத்திரிகைகள் எல்லாம் முதலாளித்துவப் பத்திரிகைகள்.”

தினமணி நல்ல பத்திரிகை ஆச்சே?…”

அதுவும் முதலாளித்துவப் பத்திரிகைதான். நீங்க அல்பேனியாவைப் பத்தி தெரிஞ்சுக்கணும், உண்மையான, மார்க்ஸ் சொன்ன பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்ன்னா என்ன, அந்த அரசு அல்பேனியாவிலே எப்படி நடக்குதுங்கறதை நீங்க தெரிஞ்சுக்கணும்னா அன்வர் ஹோக்ஸாவோட இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பாருங்க தோழர்…” என்று, தன் கையில் வைத்திருந்த புஸ்தகத்தை பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார். பாலகிருஷ்ணன் அதைப் புரட்டினார். ஏதோ ஒரு நாள் அந்தச் சாரு மஜும்தாரைப் பார்த்ததற்கு யார் யாரெல்லாமோ தேடி வருகிறார்களே என்று தோன்றியது. அவரை எப்படிக் கழற்றி விடுவது என்று யோசித்தார். இந்த மாதிரி ஆட்களை எல்லாம் துரைப்பாண்டியிடம் அனுப்பி வைத்தால் என்ன?

ஹி..ஹி.. எனக்குப் படிக்க எங்கே நேரம் இருக்கு?” என்று சொல்லிக் கொண்டே, அந்தப் புத்தகத்தைப் பிச்சாண்டியிடமே திருப்பிக் கொடுத்தார். பேச்சைத் திசை திருப்பும் நோக்கத்தில், “ஏதாவது சாப்பிடுகிறீங்களா?..” என்று கேட்டார். “இல்லை தோழர்இப்போ ஸ்டடி சர்க்கிள் எங்கே நடக்குதுன்னு தகவல் சொல்ல முடியுமா?”

கரெக்ட் அட்ரஸ் எனக்குத் தெரியாது. துரைப்பாண்டின்னு ஒரு பையன் அதிலே இருக்கான். அவனைக் கான்டாக்ட் பண்ணுங்க. அவனோட வீட்டுப் போன் நம்பரைக் குறிச்சுகிடுங்க…” என்று சொல்லி, துரைப்பாண்டி வீட்டு போன் நம்பரைப் பாலகிருஷ்ணன் கொடுத்தார். அதை எழுதிக் கொண்டதும், “அப்போ நான் வர்றேன் தோழர்.. இன்னொரு முறை சந்திப்போம்.” என்று சொல்லி விட்டுப் பிச்சாண்டி எழுந்து போனார்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.