நவீனத்துவம், பின் நவீனத்துவம் ஆகியவற்றை தன் எழுத்துக்களின் பின்னணியாகக் கொண்ட விளாதிமிர் நபோகோவின் இந்தச் சிறுகதை மிகப்பெரிய அளவில் விவாதங்களுக்கும் , மேல் விளக்கங்களுக்கும் ஆளானது என்பது குறிப்பிடத்தக்கது.
1
குணப்படுத்தவே முடியாத அளவிற்கு மனநிலை குன்றிப் போன இளைஞனுக்கு என்ன பிறந்த நாள் பரிசு தருவது என்ற பிரச்னையை இப்போது நான்காவது தடவையாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவனுக்கு எந்த ஆசைகளுமில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள் –அவனால் மட்டுமே உணரக் கூடிய வகையில் தீங்கானவை, அல்லது அவனுடைய நுண்ணுலகில் எவ்வித வசதியையும் தராதவை என்ற நிலையில் அவை அவனுக்குத் தீமையின் கூடாரமாகத் தெரிந்தன, அவனை பயமுறுத்துகிற அல்லது அவனுக்குத் தீமை தருகிற தன்மை கொண்டவை என்ற வரிசையில் பல பொருட்களை ஒதுக்கிய பிறகு (உதாரணமாக ஏதாவது உபகரணம் ) தீமை ஏற்படாத வகையிலான பத்து வகைப் பழ ஜெல்லிகளை பத்து சிறிய ஜார்களில் தர அவன் பெற்றோர் முடிவு செய்தனர்.
திருமணமாகி பல வருடங்கள் கழிந்த பிறகுதான் அவன் பிறந்தான்; பல ஆண்டுகள் கடந்து விட்டதால் வயதாகி அவர்கள் இப்போது தளர்ந்தும் விட்டனர். அவளுடைய பழுப்பு நரைக் கூந்தல் ஒழுங்கின்றி கட்டப்பட்டிருந்தது. மிகச் சாதாரணமான கருப்பு ஆடை அணிந்திருந்தாள். மற்ற தன் வயதுப் பெண்களைப் போலின்றி (பக்கத்து வீட்டு திருமதி. சோலின் முகம் எப்போதும் பவுடரோடும், தொப்பியில் அழகிய பூங்கொத்துகளோடும் இருக்கும்) அவள் முகத்தோற்றம் எப்போதும் வெளிறிப் போனதாக இருக்கும். ஒரு காலத்தில் தொழிலில் கொடி கட்டிப்பறந்த கணவர் இப்போது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலே தங்கி அமெரிக்கவாசியாகிவிட்ட , தன் சகோதரன் ஐசக்கை சார்ந்திருக்கிறார். அவர்கள் அவனுக்கு “பிரின்ஸ்” என்று செல்லப் பெயர் வைத்திருக்கின்றனர்.
அந்த வெள்ளிக்கிழமை மாலை -அவர்களின் மகனுடைய பிறந்த நாள் தினத்தில் எல்லாமும் தவறாகவே நிகழ்ந்தன. சுரங்கப்பாதை ரயில் இரண்டு ஸ்டேஷன்களுக்கிடையே கோளாறாகி நின்றுவிட்டது. முக்கால் மணி நேரம் தங்கள் இதயத் துடிப்பையும், செய்தித்தாள்களின் சலசலப்பையும் தவிர யாரும் எதையும் கேட்க முடியவில்லை. அடுத்து அவர்கள் போக வேண்டிய பஸ் வெகுநேரம் வராமல் தாமதமானதோடு , வரும்போது பள்ளிக் குழந்தைகளை அள்ளிக் கொண்டு வந்தது. சானட்டோரியப் பாதையை நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கியபோது பெரிதாக மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அவர்கள் மீண்டும் காத்திருந்தனர்; அவர்கள் மகன் வழக்கம் போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ( முகப்பருவின் தழும்புகளோடு கூடிய சவரம் செய்யப்படாத முகம் வீங்கி, குழம்பி ) கொண்டிருந்தான். அங்கிருந்து அவனைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் அதிக கவனமில்லாதவள். அவர்களின் வெகுநேரக் காத்திருத்தலுக்குப் பிறகு அவள் அங்கு வந்து அவன் திரும்பவும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகச் சொன்னாள். அவன் இப்போது சரியாகி விட்டதாகவும், ஆனால் அவர்களின் வருகை அவனைப் பாதிக்கலாம் என் றும் சொன்னாள். போதுமான பணியாட்கள் இல்லாததால் மிகச் சுலபமாக அங்கு குழப்பங்களும், பொருட்கள் காணாமல் போவதும் நிகழ்வதுண்டு. அதனால் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசை அலுவலகத்தில் விட்டுப் போக வேண்டாமென்றும், அடுத்த முறை வரும்போது கொண்டு வரலாம் என்றும் முடிவு செய்தனர்.
அந்தக் கட்டிடத்திற்கு வெளியே அவள் தன் கணவனின் வருகைக்காக காத்தி ருந்தாள். அவர் குடையை விரித்தபிறகு அவர் தோளோடு தன்னைச் சேர்த்துக் கொண்டாள். மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் தொண்டையைச் செருமி தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வதை அவர் இப்போதும் செய்தார். அந்தத் தெருவின் மறுபக்கத்திலிருந்த பஸ்-ஸ்டாப்பை அடைந்ததும் அவர் குடையை மடக்கினார். சிறிது தொலைவில் சாய்வாக இருந்த ஒரு மரத்தின் கீழே சிறகு முளைக்காத ஒரு சிறுபறவை தண்ணீர்க் குட்டையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அந்தச் சுரங்கப்பாதை ஸ்டேசனுக்குச் செல்லும்போது அவளும், கணவனும் ஒரு வார்த்தை கூடப் பரிமாறிக் கொள்ளவில்லை; ஒவ்வொரு முறை கணவருடைய கைகளைப் பார்க்கும் போதும் அவை குடையின் கைப்பிடியை ஒரு விதத் துடிப்போடு தழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். (புடைத்திருந்த நரம் புகள், தளர்ந்த கைகள் ) அவளுக்குள் அழுகை பொங்கியது. தன் மனதைத் திசைதிருப்பும் வகையில் அவள் சுற்றுமுற்றும் பார்த்த போது அவளுக்குள் ஒரு மென்மையான அதிர்ச்சி எழுந்தது. பரிவு, ஆச்சர்யம் கலந்த உணர்வில் பக்கததிலிருந்த பயணிகளுள் ஒருவரைப் பார்த்தாள்-கருமையான முடியும், அழுக்கான நகங்களும் உடைய ஒரு சிறுமி அந்த முதியவளின் தோளில் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தாள். அந்த பெண்மணி யார் சாயலில் இருக்கிறாள்? அவள் ரெபெக்கா போரிஸ்வனா சாயலில் இருந்தாள். அவளுடைய மகள் சில வருடங்களுக்கு முன்பு மின்ஸ்க்கில் ஒரு சோலோவை சிக்சை மணந்தவள். (Soloveichiks– ஒரு வகை ரஷ்ய இனத்தவர்)
போனதடவை அவன் அப்படிச் செய்ய முயன்றபோது அது புனைவுலகிலான ஒரு வித சக்திமுறை என்று டாக்டர் சொன்னார்; கூட இருந்த பொறாமை பிடித்த ஒரு நோயாளி அவன் பறப்பதற்குக் கற்றுக் கொண்டிருப்பதாக நினைத்து அவனைச் சரியான நேரத்தில் தடுத்துவிட்டார். அவன் செய்ய விரும்பியது தன்னை அழித்துக் கொண்டு இந்த உலகத்திலிருந்து தப்பிக்க முயன்றதுதான்.
அவனுடைய அந்த மருட்சியான நோய் பற்றிய கட்டுரை ஒன்று ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் விரிவாக விளக்கப்பட்டிருந்ததைக் காட்டி, அதைப் படிக்கும்படி டாக்டர் அவர்களிடம் சொன்னார். ஆனால் அதற்கு முன்பே அவளும், கணவரும் அது குறித்து பதற்றம் அடைந்திருந்தனர். அந்த நோயை “Referential mania” என்று ஹெர்மென் பிரிங் குறிப்பிட்டிருந்தார். மிகமிக அபூர்வமான இந்த நோய்க்கு ஆளாகும் நோயாளி தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாமும், தன் ஆளுமைக்கும், இருப்புக்கும் எதிரான மறைமுகக் குறிப்பு என்று கற்பனை செய்து கொள்கிறான். மனிதர்களை அவன் தனக்கு அவன் எதிரானவர்களாக நினைப்பதில்லை – காரணம் அவன் மற்றவர்களை விடத் தன்னைப் புத்திசாலியாக நினைத்துக் கொள்வதுதான். எங்கு போனாலும் அவனை இயற்கைதான் நிழலாகத் தொடர்கிறது. நட்சத்திரங்களைக் கொண்ட வானத்தில் மேகங்கள் மெதுவாகத் தமக்குள் கூடி அவனைப் பற்றிய விவரங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவனது ஆழ்மனச் சிந்தனைகள் ஒவ்வொன்றும் இரவு நேரத்தில் கருமையான மரங்களால் விவாதிக்கப்படுகின்றன. கூழாங் கற்கள் அல்லது கரைகள் அல்லது சூரிய உறிஞ்சிகள் ஆகியவை மோசமான வழிகளில் தங்களுக்குள் செய்திகள் சொல்வதை அவன் நிறுத்தியாக வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு மறை குறியீடு; அவன்தான் எல்லாவற்றிற்கும் கரு. அவைகளில் சில- கண்ணாடி மேற்பரப்பு, குளங்கள் போல பற்றற்ற பார்வையாளர்கள்: மற்றவைகள் கடை ஜன்னல்களில் இருக்கிற கோட்டுகள் போல பாரபட்சமான சாட்சிகள், மனதால் கொலையாளிகள்; மற்றவர்கள், மீண்டும் -ஓடும் நீர், புயல் ஆகியவை வெறியில் பித்துப்பிடித்து அவனைப் பற்றிய சிதைந்த அபிப்பிராயத்தோடு, அவனது செயல்களுக்கு விகாரமான அர்த்தம் கொள்பவை. வாழ்க்கைக் கூறின் ஒவ்வொரு நிமிட அலையூசலாட்டமான போக்கை அவன் மிக கவனத்தோடு குறி விலக்கம் செய்தாக வேண்டும். அவன் சுவாசிக்கும் காற்றும் அட்டவணையாகத் தாக்கல் செய்யப் படுகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் உடனடி நிகழ்வு எல்லையோடு அவன் விருப்பம் அடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஐயோ அப்படியில்லை! பெரு வெள்ளமாக அதன் ஒலியும், அளவும் தடையின்றிப் பெருகிக்கொண்டிருக்கிறது. அவனுடைய இரத்தத் துகள்கள் நிழலாகப், பல கோடியாக உருப்பெறுகின்றன, இடம் மாறி பல சமவெளிகளைக் கடந்து இன்னும் ஆழமாக, செறிவோடு கருங்கல்லின் கனமாக அவன் இருப்பு துன்புறுத்துகிறது
2
சுரங்கப்பாதையின் அசுத்தக் காற்றிலிருந்து அவர்கள் மீண்டு வெளியேறி வந்தபோது தெரு விளக்குகள் எரியும் நேரம் வந்திருந்தது. இரவுச் சாப்பாட்டிற்கு அவள் மீன்வாங்கிச் சமைக்க விரும்பினாள். அதனால் ஜெல்லி டப்பாக்களை அவரிடம் கொடுத்து, வீட்டுக்குப் போகும்படி சொன்னாள். சிறிது தூரம் நடந்த பிறகு வீட்டுச் சாவியை பகலில் அவளிடம் கொடுத்தது அவருக்கு ஞாபகம் வந்த்து.
வீட்டுப் படியேறி அமைதியாக உட்கார்ந்தார். பத்துநிமிடங்கள் கழித்து அவள் வந்தாள். படிக்கட்டுக்களில் சிரமத்தோடு ஏறி வந்தாள். தான் செய்த ஏதோ சிறு தவறை நினைத்து தலையாட்டிக் கொண்டே வந்தாள். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டுக்குள் அவர்கள் போனார்கள். அவர் நேரடியாகக் கண்ணாடியைப் பார்க்கப் போனார். வாயைப் பெரிதாகத் திறந்து சிரமப்படுத்திக் கொண்டிருந்த பல் செட்டை இரு விரல்களின் நுனியால் பிடித்து வெளியே எடுத்தார். எச்சில் நூலாக ஒட்டி வந்தது. பிறகு செய்தித்தாளை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். அவள் பெஞ்சில் படுத்திருந்தாள். அவர் படித்தபடியே மென் தின்பண்டங்களைத் தின்றார். அதைத் தின்பதற்கு பல் வேண்டியதில்லை. அவருடைய மனநிலை தெரிந்ததால் அவள் மௌனமாக இருந்தாள்.
அவர் படுக்கச் சென்றுவிட்டபிறகும் அவள் நைந்த சீட்டுக்கட்டோடும், பழைய ஆல்பத்தோடும் ஹாலில் உட்கார்ந்திருந்தாள். குறுகிய அந்த சாலையின் எதிர்ப்பகுதியில் சாம்பல் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் தெரிந்தன. அதில் ஒன்றில் கறுப்பு டிரவுசர் அணிந்திருந்த ஒருவன் வெற்று மார்புடன் படுத்திருப்பது தெரிந்தது. பார்வையை அங்கிருந்து விலக்கி கையிலிருந்த ஆல்பத்தைப் பார்த்தாள். குழந்தையாக இருந்த போது அவன் மற்ற குழந்தைகளை விட அதிசயமானவனாகத் தெரிந்தான். லெய்ப்சில் அவர்கள் இருந்த போது வீட்டில் வேலைசெய்த ஜெர்மானியப் பெண்ணின் புகைப்படம் ஆல்பத்திலிருந்து விழுந்தது. அவள் பக்கங்களைப் புரட்டினாள்; மின்ஸ்க் –அந்தப் புரட்சி, லெய்ப்சில். பெர்லின், மீண்டும் லெய்ப்சில்- வீடு சாய்வாக , சரியான நிலையில் எடுக்கப்படாததாக இருந்தது. நான்கு வயதுச் சிறுவனாக அவன் பூங்காவில் மடிப்புகளைக் கொண்ட முன்நெற்றியோடு , முன்னாலிருந்த அணிலைப் பார்க் காமல் வேறு யாரோ அங்கிருந்தது போலப் பார்த்தபடி. ரோசா ஆன்ட்டி- கவலையற்ற , பெரிய கண்கள் ஜெர்மானியர்கள் அவளைக் கொல்லும் வரை. கெட்ட செய்திகள், ரயில் விபத்துகள், திவால், புற்றுநோய் என்று எப்போதும் சோகத்தைத் தருகிற மனிதர்கள் தன்னைச் சுற்றி இருக்க வாழ்ந்தவள். அவன் ஆறு வயதில் –அப்போது அவன் அழகான பறவைகளை வரைந்தான். அவை மனிதனுக்குரிய கைகளோடும், கால்களோடுமிருந்தன. அப்போது அவன் பெரிய மனிதனைப் போல உறக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஒன்று விட்ட சகோதரன், இப்போது பிரபலமான செஸ் விளையாட் டுக்காரன்.
புரிந்து கொள்ள முடியாதவனாக அவன் -எட்டுவயதில் நடைபாதையிலிருக்கும் சுவரொட்டியைக் கண்டு பயந்து, புத்தகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட படத்தைக் கண்டு பயந்து – மலைப்பகுதியில் கற்கள் பரவிக் கிடக்கிற இடத்தில் இலைகளற்ற மரத்தின் ஒரு கிளையில் ஒரு பழைய வண்டியின் சக்கரம் தொங்கிக் கொண்டிருக்கும் படம் அது. அவனுக்குப் பத்து வயது -அவர்கள் ஐரோப்பாவை விட்டுப்போன வருடம். அவமானம், பரிதாபம் , அந்தப் பயணத்தின் கீழ்மைகள், அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு அவன் சேர்ந்த பின் தங்கிய விசேஷக் குழந்தைகளுக்கான பள்ளி என்று அவளுக்கு எல்லாம் நினைவிலிருந்தன. அதன் பிறகு அவனுக்கு நிமோனியா காய்ச்சல், அதைத் தொடர்ந்து உடல்நிலை தேறுவதற்கு ஆன நீண்டசமயம், அவனுடைய சிறு சிறு பயங்கள், தங்களுக்குக் கிடைத்த புத்திசாலித்தனமான அதிசயக் குழந்தையின் செயல்கள் என்று பெற்றோர் நம்பியது, அவனுடைய மாயத்துடனான தர்க்க ரீதியான ஊடாட்டம் என்று எல்லாமும், மொத்தமாக இயல்பான மனநிலைகளுக்கு அவனை வரவிடாமல் செய்துவிட்டன.
இது, இவை போன்றவைகளால் ஒன்றின் பின் ஒன்றாக சந்தோஷத்தையும் இழக்க நேரிட்டது, இன்னும் சொல்லப் போனால் அவளைப் பொறுத்தவரை சந்தோஷம் என்பதேயில்லை -முன்னேற்றத்திற்கான வெறும் சாத்தியக் கூறுகள் மட்டுமே. ஏதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி அவளும், அவளுடைய கணவரும் முடிவேயில்லாத வலி அலைகளைச் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று; கண்ணுக்குத் தெரியாத அரக்கர்கள் கற்பனை செய்ய முடியாத வழிகளில் அவளுடைய மகனைத் துன்புறுத்தினார்கள்; கணக்கிட முடியாத அளவிற்கு மென்மை நிறைந்த இந்த உலகம்; அந்த மென்மையின் விதி வீணாக்கப் பட்டோ அல்லது சிதைக்கப்பட்டோ அல்லது பித்துப் பிடித்ததாகவோ மாற்றமடைந்தது; புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் அழுக்கான தெருமுனைகளில் பாடிக் கொண்டிருந்தனர். உழவனின் கண்களிலிருந்து தப்பிக்க முடியாத அழகான களைகள் வேறு வழியின்றி, அவனுடைய மனிதக் குரங்கு போன்ற கூன் நிழலைப் பார்த்தபடி சிதைந்த மலர்களை, இரவு வரும் வேளையில் இழக்கின்றன.
3
நள்ளிரவாகி விட்ட அந்த நேரத்தில் ஹாலிலிருந்து அவளுக்கு கணவனின் முனகல் கேட்டது. இரவு உடைக்கு மேல் பழைய கோட் அணிந்து மிகத் தடுமாற்றமான நடையோடு நிற்பதைப் பார்த்தாள்.
“என்னால் தூங்கமுடியவில்லை!” என்று வருத்தமாகச் சொன்னார்.
“மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். ஏன் தூங்க முடியவில்லை?” என்று கேட் டாள்.
“ஏன் தூங்க முடியவில்லை என்றால் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லியபடி அங்கிருந்த பலகையில் படுத்தார்.
“வயிறு வலிக்கிறதா? டாக்டர் சொலாவை கூப்பிடட்டுமா?”
“டாக்டர்கள் வேண்டாம். டாக்டர்கள் வேண்டாம்,”அவர் முனகினார். மோசமானவர்கள். நாம் அவனை அங்கிருந்து வேகமாக வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாம்தான் பொறுப்பாளிகளாகி விடுவோம். . பொறுப்பாளிகளாகி விடுவோம். உட்கார்ந்தபடியே ஒரு சுற்றுச் சுற்றி , தரையில் கால்களை அடித் துக் கொண்டு கைகளால் முன் நெற்றியில் அடித்துக் கொண்டார்.
“சரி, நாளைக் காலை அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவோம் ” சமாதானமாகச் சொன்னாள்.
“எனக்கு டீ வேண்டும்”என்று சொல்லிவிட்டு அவர் குளியலறைக்குள் போனார்.
கஷ்டப்பட்டு குனிந்து தரையில் சரிந்து கிடந்த கிங், ஸ்பேட், ஏஸ் என்று சில விளையாட்டுக் கார்டுகளையும் , ஒரிரு புகைப்படங்களையும் எடுத்தாள். “நான் எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டேன். இந்தப் படுக்கை அறையை அவனுக்குக் கொடுத்து விடுவோம். நம் இருவரில் ஒருவர் பாதிஇரவு அவனோடு இருக்கலாம். மற்றவர் இந்தப் பலகையில் படுத்திருக்கலாம். வாரத்திற்கு இரணடு முறை மருத்துவரை வரச் சொல்லலாம். பிரின்ஸ் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அது மிகவும் குறைவாகச் செலவாகும் என்பதால் அவன் சொல்வதற்கு அதிகம் எதுவமில்லை,” என்று கணவர் உற்சாகமான மனநிலையில் பெரிய குரலில் சொல்லிக் கொண்டு வந்தார்.
அப்போது டெலிபோன் ஒலித்தது. அசாதாரணமான நேரத்தில் அந்த ஒலி. அறையின் நடுவில் நின்று கொண்டிருந்த அவர் இடதுகால் செருப்பு கழன்று விட அதைப் பார்த்துத் தடுமாறியபடி பல்லின்றி, சிறுபிள்ளைத்தனமாக மனைவியைப் பார்த்தார். அவரை விட அவளுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியும் என்பதால் அவள்தான் போனில் பேசுவது வழக்கம்.
“நான் சார்லியோடு பேச முடியுமா?” ஒரு பெண்ணின் சோர்வான குரல் மெல்லியதாகக் கேட்டது.
“உங்களுக்கு என்ன நம்பர் வேண்டும்?. . இல்லை, இது தவறான நம்பர். ”
”நான் பயந்து விட்டேன்,” அவள் ரீசிவரைக் மெதுவாகக் கீழே வைத்தாள். அவள் கை நெஞ்சை நோக்கிப்போனது.
கணவர் வேகமாகச் சிரித்து விட்டு தன் உற்சாகமான பேச்சைத் தொடர்ந்தார். காலையானதும் அவர்கள் அவனைக் கூட்டி வந்துவிடுவார்கள். அவனுடைய பாதுகாப்பிற்காக அவர்கள் எல்லாக் கத்திகளையும் டிராயருக்குள் வைத்து விடுவார்கள். எவ்வளவு மோசமான நிலையாக இருந்தாலும் அவன் மற்றவர்களுக்கு ஆபத்து தருபவனாக இருக்கமாட்டான்.
இரண்டாவது முறையாக டெலிபோன் ஒலித்தது.
சார்லியைக் கேட்டு அதே சோர்வான பதற்றமான குரல்.
“உங்களிடம் தவறான நம்பர் இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். பூஜ்யத்தை அழுத்துவதற்கு பதிலாக நீங்கள் ‘o’வை அழுத்துகிறீர்கள்,” மீண்டும் போனைக் கீழே வைத்தாள்.
எதிர்பார்க்காத நள்ளிரவு நேர பண்டிகைக் கோல டீயைக் குடிக்க உடகார்ந்தனர். கணவர் சத்தமாக உறிஞ்சிக் குடித்தார்; அவர் முகம் செம்மையாகியிருந்தது; அடியிலுள்ள சர்க்கரையை முழுவதுமாக கரைப்பது போல அடிக்கடி தன் கப்பை உயர்த்தினார். அவருடைய வழுக்கைத் தலையில் நரம்பு கவனத் தைக் கவரும் வகையில் புடைத்திருந்தது, அவருடைய கன்னத்தில் வெள்ளி முள் படர்ந்திருந்தது. பிறந்தநாள் பரிசு மேஜை மேலிருந்தது. அவள் இன்னொரு கப் டீயை ஊற்றினாள். அவர் தன் கண்ணாடியை அணிந்து கொண்டு சிவப்பும், மஞ்சளுமாய் பளபளக்கிற சிறிய ஜார்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ஈரமான உதடுகள் அந்த லேபிள்களை பார்த்து- வாதுமை, திராட்சை, மாதுளை, பிளம்ஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது. அவர் சாப்பிடுவதற்காக ஓர் ஆப்பிளை எடுத்த போது மீண்டும் டெலிபோன் ஒலித்தது.
***