நுண்மையில் முடிவிலி – ஆலன் லைட்மான்

முடிவில்லா நுண்மை

நுண் துகளின் எல்லையை நாம் எட்டி விட்டோமா?

இது ஜூன் மாத இறுதி, நான் மெய்னில் (மாநிலத்தில்) உள்ள என் சிறு தீவில் திரிந்து கொண்டிருக்கிறேன். உலகின் பருப்பொருள் தன்மையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தீவின் சதைத் தன்மையை உணர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஒரு ஸ்ப்ரூஸ் மரத்தின் முள்ளடர்ந்த கிளைகளூடே என் கைகளை அளைய விடுகிறேன். இந்த முள்ளை நான் கண்ணை மூடிக் கொண்டு கூட அடையாளம் காட்ட முடியும். என் வெறுங்கால் கீழே உள்ள கடல்நுரை போன்ற மெத்தென்ற பாசியினுள் அமிழ்கிறது. பாறைகளில் இறல் மீன்களின் ஓடுகள் கிடக்கின்றன. சாதுரியம் கொண்ட நாரைகள் மேலிருந்து அவற்றைப் பாறைகளில் போட்டு ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் உணவை அபகரிக்க முயற்சி செய்ததன் விளைவு இவை. அந்த ஓடுகள் வழவழப்பாகவும், சூரிய வெப்பத்தில் கூட குளுமையாகவும், இருக்கின்றன. காஸ்கோ வளைகுடாவில் இருக்கும் இந்தச் சிறிய தீவு, ஒரு விரல் போல வடிவு கொண்டது, அரை மைல் நீளமும், பத்தில் ஒரு பங்கு மைல் அளவு அகலமும் கொண்டது. இதன் முதுகெலும்பு போல ஒரு முண்டும் முடிச்சுமான முகடு ஓடுகிறது, கடல் மட்டத்துக்கு மேல் நூறடி உயரத்தில். என் வீடு அந்த முகட்டின் வட கோடியில் இருக்கிறது. தெற்கே, இன்னும் ஐந்து குச்சு வீடுகள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து அடர்த்தியான மரத் தோப்புகளால் மறைக்கப்பட்டபடிஅம்மரங்கள் அனேகமாக ஊசியிலை (ஸ்ப்ரூஸ்) மரங்கள்தான். சில பைன், காட்டுச் சந்தனம் (ஸீடர்), நெட்டிலிங்க மரங்களும் (பாப்லர்) உண்டு, இவற்றின் இலைகள் காற்றில் கைதட்டல் போல ஒலியெழுப்புகின்றன.

(ஹென்ரி டேவிட்) தோரோ, கான்கார்டில் செய்ததைப் போல, நான் இந்தத் தீவில் எல்லா மூலை முடுக்குகளிலும் திரிந்திருக்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு காட்டுச் சந்தன மரமும், நெட்டிலிங்க மரமும் எனக்குத் தெரிந்தவை, ஒவ்வொரு நீல நெல்லிப் புதரும், புற்றுநெல்லி முள் செடிகளும் (ராஸ்ப்பெர்ரி), ஹைட்ராஞ்சியா செடிகளின் மரக்கட்டை போன்ற கிளை நுனிகளும், எல்லா மிருதுவான பாசிக்குவியல்களும் தெரிந்தவை. திரியும்போது இவற்றில் சிலவற்றை நான் தொட்டபடி நடக்கிறேன்.  புற்றுப் பழங்களின் புளிப்பான வாசனை கடல் காற்றின் உப்பு நெடியோடு கலந்து வீசுகிறது. இன்று முன் காலையில், தீவை மூடுபனி முற்றிலுமாக மூடி இருந்ததால், நான் அண்ட வெளியில்– – வெண்வெளியில்ஒரு விண்கலத்தில் மிதப்பது போல உணர்ந்தேன். ஆனால் கனவைப் போலவிருந்த அந்த மூடுபனி, பார்க்க முடியாத அளவு சிறிய நீர்த்திவலைகளால் ஆனது, இறுதியில் ஆவியாகி மறைந்தது. கனவு போலத் தோற்றமளித்தாலும், அது எல்லாமே பருப்பொருள்தான், நான் சிறுவயதில் முதல் தடவையாகப் பார்த்த ஜீவராசிகள் வெளிப்படுத்தும் ஒளியைப் போலத்தான். அதெல்லாம் அணுக்களும், மூலக் கூறுகளும்தான்.

உலகத்தின் பருப்பொருள் தன்மை ஒரு இயல் மெய்ம்மை, ஆனால் மெய்ம்மைகள் அனுபவத்தை விளக்குவதில்லை. மின்னுகிற கடல்நீர், மூடுபனி, சூரிய அஸ்தமனங்கள், நட்சத்திரங்கள். எல்லாமே பருப்பொருட்கள். இத்தனை பிரமாதமாக பருப்பொருள் இருக்கிறதென்பதால் நாம் அதை வெறுமனே பருப்பொருள்தான் என்று ஏற்கத் தயங்குகிறோம், காடிலாக் காரை ஓட்டிப் போகிற மனிதன் ஒருத்தன் தன் பையில் ஒரு டாலர்தான் இருக்கிறது என்று சொல்வதை நம்ப மறுப்பது போல. அங்கு நிச்சயமாக இன்னும் நிறைய இருக்க வேண்டும். எமிலி டிகின்ஸன் எழுதினார்,

இயற்கை

நாம் பார்ப்பதுதான்

குன்றுமாலைப் பொழுதுஅணில்சூரிய கிரகணம்வண்டுத் தேனீஇல்லைஇயற்கைதான் சுவர்க்கம்.’

கடைசி வரிகளில், இந்தக் கவிஞர் முடிவுள்ளதிலிருந்து முடிவிலிக்குத் தாவி விடுகிறார், முழு முற்றுடைய பிரதேசத்திற்கு நகர்கிறார். இயற்கை அவளுடைய பெரும் மாட்சியைக் கொண்டு நாம் சுவர்க்கத்தை நம்பவேண்டும் என்று, இயற்கையையே தாண்டிய தெய்வீகத்தை, பருண்மையைத் தாண்டிய அரூபத்தை தரிசிக்க வேண்டும் விரும்புகிறார் போலவிருக்கிறது. ஆனால் மறுபடி நோக்கினால், இயற்கை நமக்குப் பெரும் மூளைகளையும் கொடுத்திருக்கிறாள், அதன் உதவியால் நுண்நோக்கிகளையும், தொலைநோக்கிகளையும் கட்டுவதற்கும், இறுதியில் நம்மில் சிலருக்காவது, இதெல்லாம் அணுக்களும், மூலக்கூறுகளும் மட்டுமே என்று முடிவுகட்டுவதையும் சாத்தியமாக்கி இருக்கிறாள்.

என்னைப் பொறுத்த வரை மனித உடல் என்பது இந்தத் தூல உலகிலேயே மிக அற்புதமானதும், விளக்க முடியாததுமான நிகழ்வு. நியூரான்களிடையே நடக்கும் மின் மற்றும் வேதியல் பரிமாற்றங்கள், அவையோ அணுக்களும், மூலக்கூறுகளும்தான் என்கையில், சிந்தனையும், உணர்ச்சிகளும் ஆன கலவையிலிருந்து எப்படி இப்படி, எல்லையற்ற சக்தி கொண்ட உணர்வான நான் என்ற அதிசயமானதும், விளக்க முடியாததுமான பிரக்ஞையெனும் அனுபவத்தை ஒரு விளைவாகப் பெற முடிகிறது? இந்த மர்மத்தால் நான் அடிக்கடி வாயடைத்து நிற்கிறேன். புராதனக் கடல்களில் பயணம் செய்த ஒற்றை உயிரணு ஜீவிகளுக்குப் பிரக்ஞையோ, சிந்தனைகளோ இருக்கவில்லை என்று நான் முன்னனுமானம் செய்கிறேன். இந்த குணங்கள் அடர்த்தியான தன்மைகள் பெருகிய பிறகும், இயற்கையின் தேர்வாலுமே துவங்கின என்பது தெளிவு. டார்வின் தனது புகழ் பெற்ற புத்தகத்தின் கடைசி வரிகளில் எழுதினார், ‘மிக எளிய உருக்களில் துவங்கியதிலிருந்து முடிவில்லாத மிக்க எழில் பொருந்தியவையும், அபாரமானவையுமான உருக்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன, அவை அதே நேரம் பரிணாம வளர்ச்சியும் பெற்று வருகின்றன.” எழிலார்ந்ததும், பிரமிப்பூட்டுவதும் என்பது சரிதான்ஆனால் எல்லாமே பருப்பொருட்கள்தான் என்கிறார்கள் உயிரியலாளர்கள்.

இது ஒரு தெளிவான கோடை இரவு. நாங்கள் எங்களுடைய படகுத் துறையில் அமர்ந்து மேலே உள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலே, பேரண்டத்தின் மெல்லிய திரை போன்ற வெள்ளை நாடா வானில் குறுக்கே வீசி ஓடுகிறது. அதன் ஆழங்களுள் விழுவது போல நான் உணர்கிறேன். கீழே கீழே விழுகிறேன், நாற்புறமும் நட்சத்திரங்களால் சூழப்பட்டிருக்கிறேன், இறுதியில் பால்வீதியைத் தாண்டி விடுகிறேன். தூரத்தில் நான் பல பேரண்டத் திரள்கள், ஒளிரும் வளை சுருள்கள், சுழன்றோடும் சக்கரங்கள், நீள் வளைகோட்டு உருளைகள் ஒவ்வொன்றும் பல கோடி நட்சத்திரங்கள் கொண்டவற்றை எல்லாம் காண்கிறேன். நானோ பெரிய உருவாக வளர்ந்திருக்கிறேன். பேரண்டங்கள் வெறும் புள்ளிகளாகச் சுருங்கி விட்டன.  பேரண்டங்களின் கூட்டங்களைப் பார்க்கிறேன், மேலும் அதே போன்ற கூட்டங்களைப் பார்க்கிறேன், ஒவ்வொன்றும் சில நிமிடங்களே தெரிகின்றன, பிறகு ஒவ்வொன்றும் சில கணங்கள் தெரிந்து, பிறகு கரைந்து போகின்றன. அகிலத்தின் இருண்ட அறைகளூடே காலெட்டி நடக்கும் பிரும்மாண்ட மனிதனாக நான் இருக்கிறேன், மேன்மேலும் வளர்ந்து கொண்டே போகிறேன், ஆனால் அகிலமோ எப்போதும் பெரியதாகவே இருக்கிறது.  அண்டவெளி எல்லையற்று, முடிவில்லாமல் விரிந்து கொண்டே இருக்கிறது, நான் முடிவிலியின் முன் திக்பிரமித்து நிற்கிறேன்.

அப்போது அது எதிர்ப்புறம் திரும்புகிறது. நான் உருவில் சிறுக்கிறேன். ஒளிப் புள்ளிகளே கூட அண்டங்களாகின்றன. நான் சுருள்களாகவும், சக்கரங்களாகவும், வளைகோடுகளாகவும் ஒளித் துண்டங்களைப் பார்க்கிறேன், ஆனால் நான் இன்னும் சிறுத்துக் கொண்டே போகிறேன். ஒரு வழியாக, நான் என்னை என் சொந்த அண்டவெளியில் காண்கிறேன், பால்வீதியில் இருக்கிறேன். நான் தனி நட்சத்திரங்களைக் காண்கிறேன், புகை போன்ற விண்மீன் படலங்களைக் காண்கிறேன். நான் தொடர்ந்து சுருங்கி வருகிறேன். என் பேரண்டத்தின் ஒரு ஓரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை நோக்கிச் செல்கிறேன், பிறகு ஒரு குறிப்பிட்ட கிரகத்தை நோக்கிப் போகிறேன், பிறகு அதே கிரகத்தில் பழுப்பு வட்டங்களாகத் தெரியும் கடற்கரை ஒன்றை நோக்கிச் செல்கிறேன். இறுதியாக கடல்புறத்தில் உள்ள ஒரு படகுத் துறையில் மறுபடி அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் தொடர்ந்து உருச் சுருங்கி வருகிறேன். ஒரு இலையினுள் போகிறேன், அங்கே பச்சையாகவும் நீலமாகவும் உள்ள கிண்ணங்களைப் பார்க்கிறேன், நாளங்களும், மேடுபள்ளங்களும், திசுக்களாலான பலகணிகளும் காண்கிறேன். மூலக்கூறுகளின் கூட்டிணைப்புகள் அவை. பிறகு தனிப்பட்ட அணுக்களைக் காண்கிறேன், ஒவ்வொன்றும் மின் சக்தியாலான புகையால் மூடப்பட்டிருக்கின்றன. கடைசியாக, பல நூறாண்டுகளாகக் கிட்டப் போகிறது என்ற பறை சாற்றலுக்குள்ளானவை, அவற்றைக் காண்கிறேன்.

இங்கேதான் என் உள் நோக்கிய பயணம் முடியப் போகிறதா? தூல மெய்ம்மையின் ஆகச் சிறிய புள்ளிகளில் நான் வந்தடைந்து விட்டேனா? ஆனால் இன்னும் சிறிய பொருட்கள் இருக்கின்றனவே. நான் ஒரு குறிப்பிட்ட அணுவுக்குள் விழுகிறேன். அதிரும் சாரல் போன்றனவற்றையும், பிரும்மாண்டமான வெற்றிட வெளிகளையும் காண்கிறேன், அடர்ந்த துடிதுடிக்கும் பருப்பொருள் ஒன்றைக் கீழே ஓரிடத்தில் இந்தப் பொருளின் மையத்தில் காண்கிறேன், ப்ரோடான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவில் காண்கிறேன். இடைவிடாமல் நான் மேலும் உருவில் சிறுத்து வருகிறேன். ஒரு ப்ரோடானுக்குள் நுழைகிறேன். அது முடியாத செயலாக இருக்கிறது, அங்குள்ள கடுமையான கலவரத்தில் உள்ள சக்திகள் என் பார்வையை பெருமளவு தடுக்கின்றன. அணுவுக்குள் உள்ள உப அணுத் துகள்கள் எங்கிருந்தோ பிசாசுகளைப் போலத் திடீரெனத் தோன்றுகின்றன, பிறகு மறைகின்றன. நான் உருத் தெளிவில்லாத மூன்று பொருட்களைப் பார்க்கிறேன்: மூன்று க்வார்க்குகள் அவை. இருப்பின் இறுதி எல்லையை நான் எட்டி விட்டேனா? உலகின் மிகச் சிறிய பொருட்களைச் சென்றடைந்து விட்டேனா? இல்லை, இன்னும் சிறிய பொருட்கள் இருக்கின்றனவே. ஒரு க்வார்க்குக்குள் நான் குறுகிச் செல்கிறேன். சக்தி வீச்சால் நான் பார்க்க முடியாமல் இருக்கிறேன். தூர, வெகுதூரத்தில், இப்போது பற்பல பத்து மடங்குகள் சுருங்கி விட்ட நான், முழுதும் சக்தியன்றி வேறில்லாத இழைகளின் அதிர்வைப் பார்க்கிறேன். ஆனால் வியப்பூட்டும் வகையில் நான் இன்னும் தொடர்ந்து வீழ்கிறேன். இதற்கு முடிவே இல்லாதது போலிருக்கிறது. முடிவிலியால், குறுகலின் முடிவிலியால் நான் தலை சுற்றி நிற்கிறேன்.

பண்டை கிரேக்கர்கள்தான் ஒருவேளை முதல் முறையாக, பருப்பொருளில் மிகச் சிறு உருவாக, அளவாக அணு அல்லது ஆடொமாஸ் என்பதை சிந்தித்தார்கள் போலிருக்கிறது. ஆடோமாஸ் என்றால் வெட்டப்பட முடியாதது என்று பொருள். அணுக்கள் வெட்டப்பட முடியாத அளவு உருச் சிறுத்தவை என்பதை மட்டுமல்ல, அவை அழிக்கப்பட முடியாதவை என்றும் அவர்கள் கருதினார்கள். கடவுளரின் தாறுமாறான விருப்பங்களிலிருந்து நம்மைக் காத்தவை அணுக்களே என்று கிரேக்க சிந்தனையாளர்களான டெமாக்ரிடஸும், லுக்ரீஷியஸும் கருதினார்கள். ஏனெனில் அணுக்கள் உருவாக்கப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவை. கடவுளர் கூட அவற்றின் எதிர்க்க முடியாத சபலங்களை மதித்துத்தான் ஆக வேண்டும். நியூட்டனும் அணுக்களை மிகப் போற்றினார், ஆனால் கடவுளின் படைப்பாக, கடவுளுக்கு எதிரான அரணாக அல்ல. இயற்கையின் தர்க்கம் பற்றி, அவருக்கு முந்தைய எந்த மனிதரையும் விட நிச்சயத்துடன் அவர் எழுதினார்:  துவக்கத்தில் இறைவன் பருப்பொருளை திடமான, திண்மையான, கடினமான, துளைக்க முடியாததான, அசைக்கப் படக் கூடிய துண்டுகளாகத்தான் உருவாக்கினார் என்பது சாத்தியமுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.” இந்தத் துண்டங்கள், அவர் ஊகப்படி, “அத்தனை கடினமாக இருந்ததால் அவை ஒரு போதும் தேய்மானமடையக் கூடியவையோ, அல்லது சிறு துண்டுகளாக உடையக் கூடியவையோ அல்ல; இறைவனே தன் முதல் படைப்பில் உருவாக்கிய அத்தகைய ஒரு பொருளை வேறு எந்த சாதாரண சக்தியும் பிரிக்க/ உடைக்கக் கூடியவராக இருக்க முடியாது.” நிஜத்தில், அணுக்கள் தூல உலகின் அறுதியான ஒருமைக்குச் சான்றுகள். அவை பகுக்கப்பட முடியாதமையாலும், அவற்றின் முழுமையாலும், அழிக்கப்பட முடியாத தன்மையாலும் எந்தக் குறையுமற்றவை. அணுக்கள் உண்மையின் உருக்களே. அவை, நட்சத்திரங்களோடு, எல்லையற்ற முழுமையின் தூலமான பிரதிமைகள்

அணுக்கள் உலகையும் ஒன்று கூட்டியிருக்கின்றன. ஓர் இலையும், ஒரு மனித ஜீவனும் ஒரே பொருளால் ஆக்கப்பட்டிருக்கின்றன: அவற்றைப் பிரித்து நோக்கினால், அவை இரண்டும் ஒரே போன்ற பிராணவாயுவாலும், ஹைட்ரஜனாலும், கரிமத்தாலும் மற்ற தனிமங்களாலும் ஆனவை. அந்த அடிப்படையில் நாம் அமைப்புகளைக் கட்ட முடியும். அவற்றின் அடிப்படியில் நம்மால் உலகின் இதர விஷயங்களைக் கட்டமைக்கவும், ஒருங்கிணைக்கவும் முடியும். வெகு காலமாக, அணுக்கள் நம்மை எதார்த்தத்தின் மேன்மேலும் சிறிய அறைகளுக்குள் விழாமல் தடுத்துக் காத்தன என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம். அணுக்கள் அளவுக்கு வந்தவுடன் நம் சரிவு நிறுத்தப்படுகிறது. நாம் பிடித்து நிறுத்தப்பட்டு, பத்திரமாக இருக்கிறோம். இங்கிருந்து நாம் மறுபடி மேலே எழும் பயணத்தைத் துவங்கி, உலகின் இதர விஷயங்களைக் கட்டி விடலாம் – – இப்படித்தான் நம் சிந்தனை இருந்தது.

அடிப்படை மூலக்கூறுகளைப் பற்றிய சிந்தனை உலகில் பற்பல பண்பாடுகளிலும், பல காலகட்டங்களிலும் இருக்கவே செய்தது. இந்தியாவின் சிந்தனையாளர்கள் ஐந்து கூறுகளைக் கொண்ட அமைப்பை யோசித்தனர்: நெருப்பு, நீர், நிலம், காற்று மேலும் அண்ட வெளி. நெருப்பு எலும்போடும், பேச்சோடும் இணைக்கப்பட்டது. நீர் மூத்திரத்தோடும், ரத்தத்தோடும் இணைக்கப்பட்டது. பூமி சதையோடும், மனதோடும் சேர்த்துப் பார்க்கப்பட்டது. அரிஸ்டாடிலும் கூட அண்டத்தை ஐந்து மூலக்கூறுகளால் உருவானதாகப் பார்த்தார்: நிலம், காற்று, நீர், நெருப்பு மேலும் ஈதர் (விண்ணில் இருந்த கிரகங்களுக்காக). புராதனச் சீனர்களுக்கோ, அடிப்படை கூறுகளாக, மரம், நெருப்பு, உலோகம், நீர் மேலும் நிலம் இருந்தன.

இது தெளிவாகிறது, மனிதர்கள் மொத்தப் பேரண்டத்தையும், இத்தகைய மூலக் கூறுகளிலிருந்து உருவானதாகக் கருதும்படி உந்தப்படுகிறார்கள். ஏன்? இதோடு நெருக்கமாக உறவுள்ள இன்னொன்று: நாம் ஏன் அமைப்புகளையும், பாணிகளையும் (வடிவுருக்களையும்) படைக்கிறோம்? இந்தப் பாணிகள் நம் விருப்புகளோடு சம்பந்தப்படாது ஏற்கனவே புறவெளியில் இருக்கின்றனவா? அல்லது கடுங்குழப்பமான அண்டத்தின் மீது நாம் இந்தப் பாணிகளைச் சுமத்தி, அதன் மூலம் இருத்தல் பற்றிய ஏதோ அரிப்பைச் சொறிந்து கொள்கிறோமா? நம் புத்தி சுவாதீனத்துக்கு இப்படி ஒரு ஒழுங்கை நாம் நாடுகிறோமா? இன்னொரு யோசனை: மூலக் கூறுகளைக் கொண்டு, நாம் உலகைக் கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு பொருளாகக் கற்பனை செய்ய முடிகிறது, அப்படிக் கட்டமைக்கும் சர்வ வல்லுநர்அது கடவுளாகவோ அல்லது, ஒப்பீட்டில் அப்படி ஒரு முனைப்பில்லாத இயற்கையின் சாதாரண விதிகளோ, எதானாலும் சரி.  கட்டமைக்கப்படும் உலகு என்பது ஒழுங்கையும், வடிவத்தையும் சுட்டுகிறது. அதோடு அந்த ஒழுங்குக்குப் பின்னே ஒரு அறிவு (புத்தி) இருப்பதையும் இலேசாகக் கோடி காட்டுகிறது. ஆனால், அப்படி ஒரே நேரத்தில் தொலைநோக்கிக் கருவியின் இருபுறத்திலிருந்தும் நோக்கும் அறிவு நிஜத்தில் நம்முடையஅறிவாகவே இருக்குமோ?

அமெரிக்க இயற்பியலாளர் நிறுவனத்தின் வலைத்தளம் ஒன்றில், ஜோஸஃப் ஜான் தாம்ஸனின் உரையை நாம் கேட்க முடியும், அவர் 1897 இல் தான் கண்டு பிடித்த எலெக்ட்ரான்களைப் பற்றிப் பேசுகிறார். அணுவின் மீது நம் முதல் தாக்குதல் எலெக்ட்ரான்களைக் கண்டு பிடித்ததுதான். 1934 இல் பதிவான இந்த உரையை நிகழ்த்திய போது தாம்ஸனுக்கு வயது 78.  அதற்கு முன் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பல வருடங்களாக அவர் பரிசோதனை இயற்பியலில் (காவெண்டிஷ் ஏற்பாட்டில்) பேராசிரியராக இருந்திருக்கிறார். அந்த ஒலிப்பதிவிவு கரகரக்கும் மின்அதிர்வுகளோடு இருக்கிறது, ஆனால் வார்த்தைகள் தெளிவாகப் புரிகின்றன. “ஹைட்ரஜன் அணுவின் பருப்பொருளில் பொருட்படுத்தத் தேவையில்லாத அளவு சிறு பின்னமான பருப்பொருளையே கொண்ட ஒன்றை, அத்தனை சிறிய பொருளை, முதல் முறை பார்க்கும் போது அது நம் அனுபவத்தில் கிட்டக் கூடியதாகவா தெரிந்தது? அதை விட நம்ப முடியாதது வேறென்ன இருக்க முடியும?” எதார்த்தத்தில் கிட்ட முடியாதது என்றில்லாமல் வேறென்ன அது? ஆனால் கிட்டக் கூடியது, செயல்படுத்தக் கூடியது என்பன எல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை. நாம் கருத்துலகில் தலைகீழ் புரட்டலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒருங்கிணைக்கப்பட்ட, பகுக்க முடியாத ஒன்றுக்கான அரண்மனையின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு இது. அப்போது தாம்ஸனை எடுத்த ஓர் ஒளிப்படம் காட்டுகிறதில் நாம் காண்பது முற்றிலும் தீவிரமான ஒரு கனவானின் படம்வழுக்கையாகி வருகிற, கண்ணாடி அணிந்த, அடர்ந்த  வால்ரஸிய மீசையோடு, இறுகப் பிணைத்த கரங்களோடு, கஞ்சி போட்டு மொடமொடப்பான வெள்ளைக் கழுத்துப் பட்டி கொண்ட சட்டை போட்ட ஒரு மனிதர்காமிராவைச் சிறிதும் கண் கொட்டாது நோக்கும் ஒருவர், இரண்டாயிரம் ஆண்டுகளின் வரலாற்றை எந்த வருத்தமும் இல்லாது நேரே கண்ணுக்குள் பார்க்கும் ஒருவரின் படம் அது. “இப்போது இல்லை என்றால் சீக்கிரமே வர வேண்டிய ஒன்றுதான் இது,” என்று சொல்கிற ஒருவரின் படம் அது. “எனவே சுதாரித்துக் கொள், பொறுப்புள்ள மனிதரைப் போல இதை எடுத்துக்கொள்.”

மின் சக்தியூட்டப்பட்ட குறுந்துகள்கள், மின் மற்றும் காந்த சக்திகளால் திருப்பப்பட்ட போது, கடந்து சென்ற பாதையை அளந்த போது, தாம்ஸனால் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதற்கு முன், முதலில் தாம்ஸனும், பிறரும் நல்ல வெற்றிடப் பம்புகளை உருவாக்க வேண்டி இருந்தது. அவற்றைக் கொண்டு அவர்கள், கண்ணாடிக் குழாய்களிலிருந்து காற்றை முற்றிலும் அகற்ற விரும்பினார்கள். அந்தக் குழாய்கள் வழியே அந்தத் துகள்கள் செல்ல வேண்டி இருந்தது. காற்றின் மூலக் கூறுகள் ஆய்வுக்குட்பட்டிருந்த அந்தச் சிறு துகள்களின் சன்னமான பயணங்களின் போக்குகளில் இடையூறு செய்திருக்கும்.

எனக்கு வெற்றிடம் உருவாக்கும் பம்புகளின் மீது மிகுந்த மரியாதை உண்டு. சோதனை இயற்பியலில் ஒரு கல்லூரி மாணவனாக நான் இருந்த போது நானும் இந்த மாதிரி பம்புகளை ஒரு குறுகிய காலம் பயன்படுத்தி இருக்கிறேன். சரியாக வேலை செய்கிற ஒரு வெற்றிட பம்ப், துவக்கத்தில் ஒரு ரயில் எஞ்சினின்இஷ்ஜங்க்சத்தம் போன்ற காதை உறுத்தும் கரடுமுரடான ஓசையோடு துவங்கி, மேம்படுகையில் ஓசையின் ஸ்தாயி கூடி ஒரு ஊளை போல ஆகி, பிறகு நல்ல வெற்றிடம் எட்டியதும் சீரான ரீங்கரிப்பைக் கொண்டிருக்கும். (முழு வெற்றிடத்தை எட்ட முடியாத ஒரு பம்ப், ரயில் எஞ்சினின் ஜங்க் சக் ஒலி எழுப்பும் கட்டத்தையே தாண்டாது.)

வெற்றிடத்தின் வழியே பாயும் மின்னூட்டப்பட்ட துகளின் பாதையில் கொணரப்படும் திசை திருப்பல், மின்னூட்டத்திற்கும் அதன்  பொருள் திணிவுக்கும் (mass) ஊடே உள்ள விகிதத்தைக் காட்டுகிறது. முந்தைய சோதனைகளிலிருந்து தாம்ஸனும் கூட்டாளிகளும், ஏற்கனவே ஹைட்ரஜனுக்கான அந்த விகிதத்தை அறிந்திருந்தனர். ஹைட்ரஜன் எல்லா அணுக்களையும் விட இலேசான அணுவைக் கொண்டது. தாம்ஸன் அந்த முறையில் கண்டுபிடித்தது என்னவென்றால், இந்த வேறு துகள்கள், அதாவது மின்னணுக்களுக்கான (எலெக்ட்ரான்) – அவர் இவற்றை கார்ப்பஸில் என்று அழைத்திருந்தார், அவற்றை ஒரு உலோகத் துண்டைச் சூடுபடுத்துவதன் மூலம் அவர் உற்பத்தி செய்திருந்தார்இந்த விகிதமானது ஹைட்ரஜன் அணுவின் விகிதத்தை விட ஏறத்தாழ 1800 தடவைகள் பெரியதாக இருந்தது என்பதுதான். அதே அளவு மின்னூட்டம்தான் நிலவியது என்று நாம் எடுத்துக் கொண்டால், எலெக்ட்ரான்களின் (பொருள்) திணிவு 1800 மடங்கு சிறியதாக இருந்தது என்று ஊகிக்கப்பட்டது. அணுக்கள் இருப்பதில் மிகச் சிறிய துகள் பொருட்கள் இல்லை என்பது தெளிவாகி விட்டிருந்தது.

இங்கிலாந்தில் தாம்ஸன் எலெக்ட்ரான்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கையில், ஆந்த்வான் ஹென்ரி பெக்கெரெல்லும், மாரி க்யூரியும் அணுக்களின் சிதைவை ஃப்ரான்ஸில் கண்டு பிடித்துக் கொண்டிருந்தனர்அதை க்யூரி கதிர்வீச்சு (ரேடியோ ஆக்டிவிடி) என்று அழைத்திருந்தார். பெக்கெரெல் யுரேனியத்திலிருந்து வீசுவதாகச் சமீபத்தில் கண்டு பிடித்திருந்த இந்த மர்மமான கதிர்வீச்சு, இவை அதனால் எக்ஸ் ரே என அழைக்கப்பட்டிருந்தன, முன்னதாகக் கிரகிக்கப்பட்ட சூரிய ஒளியிலிருந்து வெளிவருவதாக நம்பினார். யுரேனியம் எக்ஸ்கதிர்களோ, அருகிலிருந்த ஒளிப்படத் தகடுகளால் பிடிக்கப்பட்டன. இந்த வீச்சின் மொத்த நிகழ்வையும் 26 ஃபிப்ரவரி 1896 அன்று பிடிக்க முனைந்த பெக்கெரெல், தன் ஒளிப்படத் தகடுகளை அதற்குத் தக்க விதத்தில் தயாரித்திருந்தார்.

ஆனால் அன்றோ பாரிஸில் வானம் மேக மூட்டத்தால் நிறைந்திருந்தது. பெக்கெரெலின் நோக்கில் யுரேனியத்திற்குப் போதுமான அளவு சக்தி சூரிய ஒளியிலிருந்து அன்று கிட்டி இருக்கவில்லை. இருந்தாலும், ஏதோ ஒரு உந்துதலில், அவர் தன் ஒளிப்பட (நெகடிவ்) தகடுகளை ரசாயன முறையில் கழுவி எடுக்க முனைந்தார். அவருக்கு வியப்பூட்டும் வகையில், அந்தத் தகடுகள் வலுவாக கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அது யுரேனியம் தன்னளவிலேயே அதே அளவு கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறது, சூரிய ஒளியால் அதற்கு வெளிச்சக்தி ஊட்டப்படத் தேவையில்லை என்பதை அது புலப்படுத்தியது. பிறகு பெக்கெரெல் நிகழ்த்திய சோதனைகளில், எக்ஸ் கதிர்கள் மின்னூட்டப்பட்ட அணுத்துகள்களால் வெளிப்படுத்தப்படுகின்றன என்பது அவருக்குத் தெரிந்தது. க்யூரி இதற்கிடையில் யுரேனியம் அணுக்கள் தம்மிடமிருந்து சிறு துகள்களைத் தாமாகவே வெளியே வீசுகின்றன என்று கண்டு பிடித்தார்ஒரு வருடம் கழித்து, அவர் அதே விதமான அணுத் துகள் வீச்சை இன்னொரு மூலப்பொருளிடமும் கண்டு பிடித்தார், அது ரேடியம். இன்னொரு தடவை, பகுக்கப்பட முடியாத அணு அப்படி ஒன்றும் பிரிக்கப்பட முடியாததில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் உள்ளே என்ன இருந்தது? யாருக்கும் தெரியவில்லை. அண்டத்தின் அடிப்படை வீழ்ந்து விட்டிருந்தது.

(தொடரும்)

பாகம் -2

1903 ஆம் ஆண்டில், வரலாற்றாளர் ஹென்ரி ஆடம்ஸ் இந்த மாறுதல்கள் கொணர்ந்த தொல்லைகளைப் பற்றி யோசித்திருக்கிறார். “மனிதரின் புத்தி,” அவர் எழுதுகிறார், “ஓர் இளம் முத்துச்சிப்பியைப் போல நடந்து கொண்டிருக்கிறது. தன் நிலைக்கேற்ற ஓர் உலகை ஊறி வரும்படி செய்து கொண்டு, அதைக் கொண்டு தன்னைச் சுற்றி கடினமான, சீரான, பளபளப்பான மேல் ஓட்டை உருவாக்கிக் கொண்டு, அதனுள் தான் எதெல்லாம் அப்பழுக்கற்ற முழுமை என்று நினைக்க முடிகிறதோ அதை எல்லாம் குடியேற்றி இருக்கிறது.” ஆனால் இருபதாம் நூற்றாண்டு விடிந்த போது, “அறிவியல் தன் தலையை உயர்த்தி, அதை மறுத்திருக்கிறது.”:

1898 இல் பெருமாட்டி க்யூரி தான்ரேடியம்என்று பெயரிட்டிருந்த ஒரு வெடிகுண்டை அவர்களின் மேஜைகள் மீது எறிந்த போது, பயந்து போன நாயைப் போலப் பதறித் தன் நாற்காலியை விட்டுக்க் குதித்து எழுந்திராத எந்த அறிவியலாளரும் நிஜமாகவே உறங்கிப் போயிருக்க வேண்டும். அங்கே இனி ஒளிந்து கொள்ள எந்தப் பதுங்கு குழியும் எஞ்சவில்லை. ஆழ்கடலின் பச்சை நிற நீரைப் போல மெய்ம்மை கடப்பியல் கூட வீசி எழுந்து அறிவியலை மூடியது. இனி யாரும் அறிய முடியாதது எல்லாம் அறியப்பட்டு விட்டது என்று சொல்லி அறியமுடியாதது என்பதைத் தடை போட்டு வெளியே நிறுத்த முடியாது.

புதியதான இந்த கார்பஸில்களைக் கையில் கொண்ட தாம்ஸன், இப்போதுப்ளம் புட்டுமுன்மாதிரியை அணுக்களின் அமைப்பைச் சித்திரிக்க ஒரு உருவாக முன்வைத்தார்: ஒரு சிறு உருண்டை, அதனுள் சீராக நிரப்பப்பட்ட புட்டு போல பாஸிடிவ் மின்னூட்டம், அதனுள் நெகடிவ் மின்னூட்டமூட்டப்பட்ட எலெக்ட்ரான்கள் தெளிக்கப்பட்டிருக்கின்றன. நெகடிவாக மின்னூட்டப்பட்ட எலெக்ட்ரான்களைச் சமன் செய்ய நமக்கு பாஸிடிவாக மின்னூட்டப்பட்ட அந்தப் புட்டு போன்ற அமைப்பு தேவையாகிறது, ஏனெனில் அனேக அணுக்களும் சாய்வு நிலை இல்லாத நியூட்ரல் மின்னூட்ட நிலை கொண்டவை என்பது ஏற்கனவே தெரிந்த நிலையாக இருந்தது.

பத்து வருடங்களுக்குள்ளாகவே, எர்னெஸ்ட் ரூதர்ஃபோர்ட், நியூஜீலாந்தின் தலை சிறந்த இயற்பியலாளர், அணு என்பது ஒரு புட்டு போல இல்லை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். அது ஒரு பீச் பழம் போல இருப்பதாக அவர் கருதினார். மையத்தில் கடினமான ஒரு விதை, அதனுள் எல்லா பருத் திணிவும், எல்லா பாஸிடிவ் மின்னூட்டமும் கொள்ளப்பட்டிருந்தன. அந்தக் கடினமான மையவிதைக்குள் அடக்கப்பட்டிருந்த துகள்களின் பெயர் இப்போது ப்ரோடான் எனவும், நியூட்ரான் எனவும் அறியப்பட்டது. ப்ரோடான்களுக்கு பாஸிடிவ் மின்னூட்டமும், நியூட்ரான்களுக்கு ஒரு மின்னூட்டமும் இல்லாத நிலை.

ரூதர்ஃபோர்டின் குழு அணுவின் உள்புறத் துகள்களை ஒரு மெல்லிய தகட்டிலிருந்த அணுக்கள் மீது விசிறி அடித்தபோது பீச் பழத்தின் உருவகம் ஒரு முன்மாதிரியாக எழுந்தது. சில துகள்கள் விரிவான கோணங்களில் பிரிந்து போயின, ஏதோ ஒரு கடினமான பொருளை அவை இடித்த மாதிரி தெரிந்தது. அணுவின் நடிவில் இருந்த கடினமான விதை அது. புட்டு போல அணுவின் உள்புறம் இருந்திருந்தால், அந்த திசை திருப்பல் மிகச் சிறியதாகவே இருந்திருக்க வேண்டும். “இந்த நிகழ்ச்சி என் வாழ்வில் நடந்ததிலேயே மிக அபூர்வமானதொரு நிகழ்வு,” என்று அதிர்ந்து ஒலித்தார் ரூதர்ஃபோர்ட். “பதினைந்து அங்குல துப்பாக்கி ரவையை ஒரு மெல்லிய டிஷ்யு காகிதத்தின் மீது சுடும்போது, அந்த ரவை திரும்பி வந்து உங்களைத் தாக்கினால் எப்படி நம்பமுடியாததாக அந்த நிகழ்வு இருந்திருக்கும், அதைப் போலத்தான் எனக்கு இருந்தது.”

அணுவின் மையத்தில் இருக்கும் விதைப் பகுதி, உட்கரு (நியூக்ளியஸ்), கடினமாக மட்டும் இல்லை, மிகச் சிறியதும் கூட: மொத்த அணுவைக் காட்டிலும் நூறாயிரம் மடங்கு சிறியது. ஒரு உதாரணத்துக்கு, அணு என்பது பாஸ்டன் நகரில் ரெட்ஸாக்ஸ் என்ற குழுவினரின் மைதானமான ஃபென்வே பூங்காவை ஒத்ததாக நினைத்தால், அணுவின் மையத்துக் கடினப்பகுதியான உட்கரு என்பது ஒரு கடுகு விதையை ஒத்திருக்கும். அதனுள் எலெக்ட்ரான்கள் வசீகரமாக அதன் உள்புறத்தில் வலம் வந்து கொண்டிருக்கும். நிஜத்தில் அணுவின் மொத்த கனபரிமாணத்தில், அனேகமாக எடையேதுமில்லாத எலெக்ட்ரான்களின் மூட்டமான படலத்தை விட்டால், கிட்டத்தட்ட்ட 99 சதவீதம் காலியான இடம்தான். நாமும், மற்றெல்லா விஷயங்களும், அணுக்களால்தான் ஆக்கப்பட்டிருக்கிறதால், நாமெல்லாம் அனேகமாக வெற்றிடமே நிறைந்தவர்கள். இந்த பிரும்மாண்டமான வெற்றிடம், பகுக்க முடியாததைப் பிரித்துப் பார்த்ததனால் வந்த கலவரமூட்டும் விளைவு.

எனவே நாம் எல்லையற்று உள்புறம் வீழ்ந்து கொண்டே இருக்கிறோமா? நம்மைச் சுற்றி நாற்புறமும், பெரியதும் சிறியதுமான எல்லையற்ற முடிவிலிகளேவா இருக்கின்றன? இது மிக சகிக்க முடியாத ஒரு உணர்ச்சி. இங்கு எம்.ஸி. எஷ்ஸரின்ஏறும் இறங்கும் படிகள்’ (அஸெண்டிங் அண்ட் டிஸ்ஸெண்டிங்’) என்ற தலைப்பு கொண்ட வரைவை நான் நினைவு கூர்கிறேன். அதில் தலையை மூடிய அங்கி அணிந்த மனிதர்கள் ஒரு மத்தியகாலத்துக் கோட்டையில் நாற்புறக் கூடத்தில் சுற்றி நடக்கிறார்கள். இந்தப் படத்தின் பிரச்சினையான அம்சம், தோற்றத்தில் ஒரு தந்திர அமைப்பால் கொணரப்படுகிறது. இதில் நடப்பவர்கள் தொடர்ந்து மேலேறி, கீழிறங்கிய வண்ணமிருக்கிறார்கள். மேலே போகும் படிக்கட்டுகளில் ஏறி, தொடர்ந்த படிக்கட்டுகளில் கீழிறங்கி சுற்றிச் சுற்றி நடக்கிறார்கள். சுற்று முடிந்தாலும், எங்கே துவங்கினார்களோ அங்கேயேதான் வந்து சேர்கிறார்கள். துவக்கமும் முடிவும் இல்லாத படிக்கட்டுகள் அவை. எங்கேயும் போய்ச் சேராத படிக்கட்டு அது.

எஷ்ஸர் இந்தப் படிக்கட்டு வரைவை 1960 இல் படைத்தார், அப்போது புது அணு நொறுக்கும் இந்திரங்களின் மூலமு, அண்ட வெளியில் உயர் கதிர்வீச்சிலும், இயற்பியலாளர்கள் நூற்றுக்கணக்கான உப அணுத் துகள்களை சமீபத்தில் கண்டு பிடித்திருந்தனர். அடிப்படை அணுத்துகள்கள் மேலும் சக்திகளைப் பற்றி ஆய்வு செய்யும் இயற்பியல் கடுங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. எலெக்ட்ரான்களையும், ப்ரோடான்களையும், நியூட்ரான்களையும் தவிர, இப்போது புதிய டெல்டா, லாம்ப்டா, ஸிக்மா, XI கள், ஒமேகா, பயான், கேயான், ரோ, மேலும் பல வகைத் துகள்கள் காணப்பட்டு விட்டன. கிரேக்க எழுத்துகள் தீர்ந்து போனபின்னர், பிரமித்த நிலையில் இருந்த இயற்பியலாளர்கள் லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்தத் துவங்கி இருந்தனர். புனிதமான அணு நொறுக்கப்படு முன்னராவது, அங்கே ஏதோ ஓர் ஒழுங்கு இருந்தது. அங்கே எலெக்ட்ரான்களும், ப்ரோடான்களும், நியூட்ரான்களும் மட்டும்தான் இருந்தன. இப்போதோ ஒரு ஊளையிடும் மிருகக் காட்சி சாலையே இருந்தது. அடிப்படைத் துகள்கள் என்று ஏதும் இல்லை போலத் தெரிந்தது. முடிவில்லாத சுழல் கீழே கீழே என்று போய்க் கொண்டே இருக்க, அடியில்லாத முடிவிலியில் எல்லாவற்றையும் தொகுக்கும் ஒரு கோட்பாடு என்று ஏதும் இல்லையெனத் தோன்றியது.

அறுபதுகளின் இறுதியில் க்வார்க்குகள் கண்டு பிடிக்கப்பட்டன. தற்காலிகமாக கீழ் நோக்கிய பெரும் சரிவு நின்றார்போலிருந்தது. நூற்றுக்கணக்கான புதுத் துகள்கள் எல்லாம் அரை டஜன் அடிப்படை க்வார்க்குகளின் பற்பல கூட்டிணைவுகள் என்று புரிந்து கொள்ள முடியும் எனத் தோன்றியது. இங்கே அணுத் துகள்களின் களேபரக் காட்சியை ஒழுங்குபடுத்த உதவும் ஒரு அமைப்புக் கோட்பாடு கிட்டுமெனத் தோன்றியது. க்வார்க்குகள் புதிய ப்ரோடான்களாக, நியூட்ரான்களாகத் தெரிந்தன. அவையோ இப்போது புதிய அணுக்களாகத் தெரிந்தன. க்வார்க்குகளைக் கண்டுபிடித்த குழுவில் ஒருவரான ஜெர்ரி ஃப்ரீட்மானை, இந்தத் துகள்கள் ஒரு வழியாக இந்த ஓட்டத்திற்கு ஒரு முடிவு வந்து விட்டது, இவைதான்பொருளின்சின்னஞ்சிறு அலகு என்று சொல்லலாமா என ஒரு முறை கேட்டேன். அனேகமாக அப்படித்தான், என்று அவர் சொன்னார். அவர் சில காரணங்களைக் கொடுத்தார். ஆனால் அவர் தயங்கினார், “ஏதும் எதிர்பாராததும் நடக்கக் கூடும்,” என்று ஒரு சிரிப்போடு சொன்னார், “அறிவியலில் எப்போதுமே வியப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.” அறிவியலில் ஆச்சரியங்கள் எப்போதுமே வரவேற்கப்படுகின்றன, ஆனால் சிலநேரம் அவை கலக்கம் தருவனவாக இருக்கும்.

பண்டை கிரேக்கத்தில் தத்துவாளர்கள், இயல்கடப்புத் தத்துவத்தில் அச்சமூட்டும் ஒரு புதிரை உருவாக்கி இருந்தனர், ஜீனோவின் புதிர் என்று அது அறியப்பட்டிருந்தது. ஒரு அறையின் குறுக்கே நடந்து 15 அடி தூரம் போக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்தப் பதினைந்தடியைக் கடக்கு முன்பு நீங்கள் பாதி தூரம் கடக்க வேண்டும். அது 7.5 அடி. அதற்கு முன்பு பாதி தூரம் என்றால் 3.75 அடி. அதற்கு முன்பு

இப்படியே தொடர்ந்து, அந்தத் தத்துவாளர்கள் தூரத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டே போனார்கள்: சிறிது சிறிதாகப் பகுத்து முடிவிலி வரை போய் விட்டார்கள். எது பகுக்கப்பட முடியாததோ அது பகுக்கப்படக் கூடியதோடு எதிர் நிறுத்தப்பட்டது. இந்த அறிவு சார் முயற்சிக்குப் பிறகு என்ன முடிவு கிட்டியது என்றால், நாம் அந்த தூரத்தைக் கடக்க வாய்ப்பே இல்லை என்பது அது. நிஜத்தில் நாம் ஒரு அங்குலம் கூட நகர முடியாது. நாம் ஒரு புத்தி பூர்வமான ஆனால் அவிழ்க்க முடியாத புதிரில் சிக்கிக் கொள்வோம். சிறியதின் முடிவில்லாத்தன்மையில் நாம் அகப்பட்டுக் கொள்வோம்.

அறிவியலாளர்களும், கணிதவியலாளர்களும் முடிவிலியைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் பெரிய பெரிய மேலும் பெரிய எண்களைப் பற்றியே யோசித்திருப்பார்கள். ஆனால் முடிவிலி என்பது, இப்போது நாம் அறிந்த மாதிரி, எதிர் திசையிலும் போக முடியும். டொல்ஸ்தாய் தன்என் மதம்என்கிற புத்தகத்தில் ஒரு அடிக்குறிப்பில் இதைப் பற்றிக் குறித்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் விளக்கம் என்பது நுண் நோக்கியில் காணப்படக் கூடிய சிறு பொருட்களில் தேடப்படுகின்றன. அவற்றுக்குள் இருப்பனவற்றுள், பின் மேன்மேலும் உள்ளிருப்பனவற்றுள் என்று முடிவில்லாமல்…. இந்த மர்மம் எப்போது தீரும் என்றால், சிறிதுகளின் முடிவிலி முற்றிலும் அலசப்பட்டு விசாரணை முடியும்போதுதான், அதாவது ஒரு போதும் தீர்க்கப்படாது.

ஃப்ரீட்மான், நாவலாசிரியர் என்பதை விட இயற்பியலாளர் எனலாம், இங்கு மேலான உதவியை அளிப்பார். அவர் க்வார்க்குகள்தான் இறுதி எல்லை என்று கருதுகிறார். ஆனால் க்வார்க்குகள் பற்றி நமக்குத் தெரியாதவை பல. நம்முடைய தற்போதைய கோட்பாடுக்குப் பெயர் நியம மாதிரி (‘ஸ்டாண்டர்ட் மாடல்’). எலெக்ட்ரான்களையும், க்வார்க்குகளையும் பற்றிய இந்தக் கோட்பாடு பூரணமாகாதது என்பது தெரிந்த விஷயம்தான். அதில் புவி/ கோள் ஈர்ப்பு விசை என்பது சேர்க்கப்படவில்லை. நமக்கு கோள் ஈர்ப்பு விசை பற்றி மதிக்கப்படக் கூடிய ஒரு கோட்பாடு கைவசம் இருக்கிறது. அதற்கு பொது சார்புடைமை என்று பெயரும் உண்டு. ஆனால் அந்தக் கோட்பாடு ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டோடு வெற்றிகரமாக இணைக்கப்படவில்லை. இந்தத் திருமணத்தைச் செய்ய, கோள் ஈர்ப்பு விசை பற்றிய கோட்பாட்டில், க்வாண்டம் இயற்பியல்அதாவது க்வாண்டம் கோள் ஈர்ப்பு விசைஎன்பதும் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். இதில் இதுவரை எல்லா முயற்சிகளும் தோற்று விட்டன. ஆனால் அத்தகைய கோட்பாடு, க்வார்க்குகளுக்குள் உள்ள உலகைப் பற்றி என்ன தெரிவிக்கும் என்பது பற்றி நமக்குச் சில கருத்துகள் உள்ளன.

குறுந்தன்மையின் அலகில் முடிவிலித் தன்மைதான் இங்கு திறவுகோல் போன்றது. சாதாரணமாக, க்வாண்டம் அளவு விளைவுகள் மிகச் சிறு அலகுகளில்தான், அணுவளவிலும், அதை விடச் சிறுத்த அளவுகளிலும்தான், பொருட்படுத்தத் தக்கவையாக இருக்கும். மாறாக கோள் ஈர்ப்பு விசையின் தாக்கங்களோ மிகப் பெரும் அளவுகளில்தான் கவனிக்கப்படக் கூடியவையாக இருக்கும். கோள்களின் அளவிலோ அல்லது அதை விடப் பெரிய அளவுகளிலோ. ஆனால் மிக மிகச் சிறு அளவுகளில், க்வாண்டம் தாக்கமும், கோள் ஈர்ப்பு விசையின் தாக்கமும் பொருட்படுத்தத் தக்கன என்பது இப்போது தெரிய வருகிறது. இந்த மிக மிகச் சிறு அளவு/ அலகு என்பது இப்போது ப்ளாங்க் நீளம் என அறியப்படுகிறது. க்வாண்டம் இயற்பியலில் முன்னோடியாக இருந்த மாக்ஸ் ப்ளாங்கின் பெயரிடப்பட்ட ஓர் அளவை இது. ப்ளாங்க் நீளம் என்பது 10 -33 சென்டிமீட்டர்கள், ஒரு க்வார்க்கை விடப் பத்தாயிரம் கோடிகள் (நூறு பிலியன்) மடங்கு சிறிய நீளம். க்வார்க் என்பதே ஓர் அணுவை விட பல நூறாயிரம் மடங்கு சிறியது. இதையே இன்னொரு விதமாகவும் கற்பனை செய்யலாம்: ஓர் அணு என்பது சூரியனை விட எத்தனை மடங்கு சிறியதோ, கிட்டத்தட்ட அதே விகிதமளவு ப்ளாங்க் நீளம் என்பது ஓர் அணுவை விடச் சிறியது. இத்தகைய சிறு அளவு மூலப் பொருட்களைப் பற்றி நமக்கு ஏதும் சொல்ல முடிகிறது என்பதே நம்மை அயர வைத்து விடுகிற விஷயம்.

க்வாண்டம் கோள் ஈர்ப்பு விசையினால் நுண் துகளின் முடிவிலித்தன்மைக்கு என்ன பாதிப்புகள் உண்டு? க்வாண்டம் இயற்பியலின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், சக்தியும் மற்ற இயல் தன்மைகளும் தொடர்ந்த வடிவுகளில் வருவதில்லை என்பதுதான்.  குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல அவை ஓடாமல், மழைத் துளிகளைப் போல விட்டு விட்டுத்தான் வருகின்றன. க்வாண்டம் மழைத்துளிகளோ மிக மிகச் சிறியவை, எனவே நம் உலகில் அந்த ஓட்டம் மிகச் சிறு பகுதிகளாக உடைந்து ஓடுவதை நாம் அறிவதில்லை. சில ப்ளாங்க் இயற்பியல் கோட்பாடுகள் முன் வைப்பது என்னவென்றால், ப்ளாங்க் நீளத்தின் அளவுகளில், வெளி (ஸ்பேஸ்) என்பதே தொடர்ந்திருப்பதான ஒன்றல்ல, ஆனால் பகுக்க முடியாத பிறைகளாக (cells) இருக்கிறதுஇவற்றை நாம் ப்ளாங்க் பிறைகள் என்று அழைக்கலாம். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு ப்ளாங்க் நீளம் இருக்கிற மிகச்சிறு கனசதுரத்தை உருவப்படுத்திக் கொள்ளுங்கள். ப்ளாங்க் அளவைப்படி, இடவெளி என்பதே கிடையாது. ப்ளாங்க் பிறைக்குள்ளோ இடவெளி என்பது கிடையவே கிடையாது. இடவெளி என்று நாம் எதை உணர்கிறோமோ அது இந்த வகைப் பிறைகளின் பல மூலைகளுக்கிடையே உள்ள ஒட்டுறவுதான்.

ப்ளாங்க் பிறைகள் என்பன, வேறு சொற்களில் சொல்வதானால், இடவெளியின் அணுக்கள் எனலாம். இட வெளியில் பொருளின் சிறு அலகாக அணுக்கள் இருப்பதை விட, இப்போது நாம் இடவெளியின் மிகச் சிறு அலகுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆச்சரியப்படும் விதமாக, சில சமீபத்திய பரிசோதனைகள் இயற்கையை இந்த மிகச் சிறு ப்ளாங்க் நீளத்தளவில் சோதிக்க முடிகிறதாகச் சொல்கிறார்கள். ப்ளாங்க் அளவில் இடவெளியின் மணல் மணலான தன்மை அதிவேகமான சக்தி உள்ள ஒளிக் கீற்றுகளை, அவை ஒரு ப்ளாங்க் பிறையின் மூலையிலிருந்து அடுத்த ப்ளாங்க் பிறையின் மூலைக்குத் தாவும் போது ஒரு வகை உராய்வைக் கொடுத்து, ஒழுங்கு முறையேதுமில்லாது மெதுவாக்க வேண்டும். (அத்தனை சக்தி இல்லாத ஒளிக் கீற்றுகள், ஒப்பீட்டில் மிக நீளமான அலைநீளங்களைக் கொண்ட ஒளிக் கீற்றுகள், ப்ளாங்க் பிறைகள் இருப்பதைப் பொருட்படுத்தாது, இடவெளி தொடர்ச்சியாக இருப்பது போலப் பாவித்து, சாதாரண ஒளியின் வேகத்தில் அதனூடே பயணிக்கும்.] நாசாவுடைய ஃபெர்மி காமா கதிர் தொலைநோக்கியைப் பயன்படுத்தும் ஆய்வாளர்கள், சமீபத்தில் ஒரு எதிர்மாறான விளைவையே கண்டதாக அறிவித்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட அண்டவெளி வெடிப்பிலிருந்து பிறந்த உயர் சக்தியுள்ள ஒளிக் கீற்றுகளை, அதே வெடிப்பிலிருந்து புறப்பட்ட குறைவான சக்தியுள்ள ஒளிக் கீற்றுகளோடு ஒப்பிடுகையில், உயர் சக்தி ஒளிக் கீற்றுகள் வேகமிழக்கவில்லை என்பது அந்த விளைவு. எனவே அறிவியலாளர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்றால், இடவெளி உண்மையில் மணல் மணலான தன்மை கொண்டதாக இருந்தால், பிறைகளின் அளவு ப்ளாங்க் நீளத்தை விட மிக மிகக் குறைவானதாக இருக்க வேண்டும்.

இடவெளி என்பது உண்மையில் மிக மிகச் சிறுத்த அலகு கொண்டு மணல் மணலாக இருக்கிறதோ இல்லையோ, இயற்பியலாளர்கள் இப்போது உறுதியாக இருப்பது என்ன என்றால், காலமும், இடவெளியும் ப்ளாங்க் அளவுகளில் கடும் குழப்பமாக இருக்கும் என்பதே அது. அந்த அளவுகளில் க்வாண்டம் இயற்பியல் சிறிதும் சீர் குலைந்தும், நிகழ் தகவுள்ளதாகவும் (probabilistic) இருப்பதால், காலமும் இடவெளியும் கலங்கிச் சுழன்று சீறுகின்றன, எந்த இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரம் கணந்தோறும் அதீதமாக மாறி மாறி அமைந்த வண்ணம் இருக்கிறது. உண்மையில் ப்ளாங்க் அளவுகளில் காலமே ஒழுங்கு முறையில்லாது திடீரென்று வேகமெடுத்தும், திடீரென்று மெதுவாகியும், ஒருவேளை பின்னோக்கிச் சென்றும், முன்னோக்கிச் சென்றும் இருக்கிறது. இந்த நிலையில், காலமும் இடவெளியும் நமக்கு அர்த்தமாகும்படி எந்த விதமாகவும் இல்லை. முழுச் சீராகவும், திடத்தன்மையும் கொண்டனவாக நாம் காணும் வீடுகளும், மரங்களும் அப்படி நாம் உணரும்படி இருக்கக் காரணம், அதீதமான குவியல்களும், கடும் குழப்பமுமாக உள்ள ப்ளாங்க் நீளத்தில் அவற்றிடையே ஏற்படும் சராசரித் தன்மையால்தான் கிட்டுகின்றது. எப்படி மணல் மணலாக உள்ள கடற்கரை, நாம் உயரே சென்று ஆயிரம் அடியிலிருந்து பார்த்தால் மறைந்து போகிறதோ அதே போன்ற விளைவுதான் இது.

ஆக, ஜீனொ (கிரேக்க தத்துவாளர்) செய்தது போல நாம் இடவெளியை மேலும் மேலும் சிறியதாகப் பகுத்துக் கொண்டே போனால், மெய்ம்மையின் மிகச் சிறிய அளவுள்ள பொருளைத் தேடினால், நாம் ப்ளாங்க்குடைய கனாப் போன்ற உலகில் வந்து அடைகிறோம்இங்கு இடவெளி என்பதற்கு அர்த்தமே கிடையாது. எது ஆகச் சிறிய பொருள் அளவு என்ற கேள்விக்கு அர்த்தத்தைக் காண்பதற்குப் பதில், நாம் எந்தச் சொற்களைப் பயன்படுத்தி அந்தக் கேள்வியைக் கேட்கிறோமோ அந்தச் சொற்களுக்கே அர்த்தமில்லாமல் ஆக்கி விட்டோம். ஒருவேளை அறுதியான எதார்த்தம் என்பதே, அப்படி ஒன்று இருக்குமென்றால், இப்படித்தான் இருக்குமோ. நாம் அதை நெருங்க நெருங்க நம் சொல் அடுக்கையே இழந்து விடுவோம். கடலுக்கருகில் இருக்கும் என் படகுத்துறையில், நள்ளிரவில் அமர்ந்து, நான் மேலும் மேலும் சிறிய அளவுள்ள எதார்த்தத்தினுள் வீழ்வதாகக் கற்பனை செய்தேனானால் நான் வீழ்ந்தபடியே இருப்பேன், முடிவே இல்லாத வீழ்ச்சியாக இருக்கும் அது. ஆனால் ப்ளாங்க் அளவை நான் எட்டுகிறபோது, நான் அறிந்திருக்கிற இடவெளி என்பதே இல்லாது போம். ஒரு புராதன கண்ணாடித் தயாரிப்பாளரால் இடவெளி என்பது அத்தனை மெல்லியதாக ஊதப்பட்டு இருக்கிறது, இப்போது அது ஏதுமே இல்லாது கரைந்து போய் விடுகிறது. ப்ளாங்கின் உலகம் ஒரு பைசாச, ஆவிகளின் உலகம். ஒருக்கால் அங்கேதான் நாம் நிச்சயத்தன்மைகளைத் தேட வேண்டுமோ என்னவோ, நம்மிடம் நாம் காணக் கூடியதை வருணிக்கத் தக்க வார்த்தைகளே அப்போது இல்லாது போகும் என்றாலும்.

***

இந்தக் கட்டுரையின் இங்கிலிஷ் மூலத்தை எழுதியவரான ஆலன் லைட்மான் ஒரு இயற்பியலாளர். நாவலாசிரியர். அமெரிக்காவின் புகழ் பெற்ற பொறியியல் பல்கலையான எம்..டியில் (மாஸச்சூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) போதிக்கிறார். அவருடைய சமீபத்துப் புத்தகமான, ‘ஸர்ச்சிங் ஃபார் ஸ்டார்ஸ் ஆன் ஏன் ஐலண்ட் இன் மெய்ன்என்பதில் இருந்து மேற்கண்ட கட்டுரை சுருக்கிப் பெறப்பட்டிருக்கிறது. இது இந்த மாதம், பாந்தியான் பிரசுர நிறுவனத்தால் வெளியிடப்பட இருக்கிற புத்தகம்.

இந்தக் கட்டுரை ஹார்ப்பர்ஸ் மாகஸீன் என்ற அமெரிக்க மாதப் பத்திரிகையின் மார்ச் 2018 இதழிலிருந்து பெறப்பட்டது.

தமிழாக்கம்: மைத்ரேயன் / ஏப்ரல் 2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.