சாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி

2006-லிருந்து 20011 வரை மும்பையின் பன்வெல் அருகே, “பென்” என்ற சிறு நகரத்தில், ஒரு கொய்மலர்ப் பன்ணையில் வேலை செய்தேன். 2006-ல் அங்கு வேலைக்குச் சேர்ந்தபோது ஹிந்தி சுத்தமாகத் தெரியாது; ஒருசில வார்த்தைகள் மட்டும் புரியும். கொய்மலர் வளர்ப்பில் 11 ஆண்டுகள் அனுபவம் இருந்ததால், நேர்முகத்தின்போது அந்நிறுவனத்தின் இயக்குநர், தொழில்நுட்பமாக கேள்விகள் ஏதும் கேட்கப் போவதில்லை என்றும், ஆனால் பொதுவான கேள்விகள் ஹிந்தியில்தான் கேட்கப் போவதாகவும், பதிலும் ஹிந்தியில் எதிர்பார்ப்பதாகவும் சிரித்துக்கொண்டே சொன்னார். எனக்கு பதற்றமானது. ஒன்றிரண்டு ஹிந்தி வார்த்தகள் நடுநடுவே நுழைத்து, ஆங்கிலத்தில் கலந்துகட்டி ஒருவாறு நேர்முகத்தை முடித்தேன். விடைபெறும்போது இயக்குநர், பணியிட மொழி ஹிந்தியாகத்தானிருக்கும் என்றும், சீக்கிரம் ஹிந்தி கற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
ஐந்தே மாதத்தில் ஹிந்தியில் பேசும் சரளம் வந்தது. காரணம் அந்தப் பணியிடம்; பண்ணை கோபோலிக்கும், பென்னுக்கும் நடுவில் இருந்தது. பென்னில் வீடு எடுத்திருந்தோம். ஓசூரிலிருந்து பணி மாற்றலாகி கிளம்பும்போது மெல்லிய தயக்கமிருந்தது – புதிய சூழல், புதிய மொழி, புதிய கலாச்சாரம்…தாக்குப் பிடித்துவிடுவோமா என்று. ஆனால் ஒரு வருடத்திற்குள் எல்லாம் பழகி வாழ்வு சகஜமானது. பணியில் சந்தித்த முதல் சின்ன பிரச்சனை, பணியாளர்களின் குடும்பப் பெயர்கள்; ஓசூர் பண்ணையில் 11 வருடங்கள் வேலைசெய்தபோது, அங்கு எல்லா பணியாளர்களின் பெயர்களும் எனக்கு அத்துபடி. இங்கு பணியாளர்களின் பெயர்கள் அவர்கள் குடும்பப் பெயருடன் சேர்ந்து நீள நீளமாக இருந்தன. ஒரே பெயர் கொண்ட மூன்று/நான்கு பேரை அவர்கள் குடும்பப் பெயரை வைத்து ஞாபகம் கொள்ளவேண்டியிருந்தது. தினசரி வருகைப் பதிவிலும், மாதச் சம்பள கணக்கிடுதலின் போதும் மிகுந்த கவனமாயிருக்க வேண்டி வந்தது. ரானே, குல்கர்னி, சோமன், கதம், சிண்டே, பவார், நளவாடே, கொல்டே, ஜாதவ், இங்லே, கெய்க்வாட், ஜோஷி, தேஸ்பாண்டே, தேஸ்முக், பாடில், சவான்…முதல்மாத சம்பள விநியோகத்தின்போது தலைசுற்றியது.
பின்வருடங்களில் அவற்றின் சமூக அடுக்குகள் மெதுவாய்ப் புரிய ஆரம்பித்தன. பண்ணையைச் சுற்றிய கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க ஆரம்பித்தேன். பண்ணைக்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமிருந்தது. பெங்காலிலிருந்தும், ஒரிஸ்ஸாவிலிருந்தும் பணியாளர்களை வரவழைத்து பண்ணையினுள்ளேயே அவர்களுக்கு வீடுகள் கட்டி, தங்கவைக்கப் பட்டிருந்தார்கள். பணியாளர்கள், பண்ணைக்குப் பக்கத்தில் அமைந்த பத்து பதினோரு கிராமங்களிலிருந்து வேலைக்கு வந்துகொண்டிருந்தார்கள். வாசிவளி, வர்சை, வாக்ரூல், வட்கல், சாவர்சை, சபோலி, கரும்பிலி, பானேட், மாங்ரூல், காமர்லி, காகோதே, அஷ்டே கிராமங்களும், அவற்றின் தெருக்களும், மனிதர்களும், டீக்கடைகளும், கோவில்களும் மிகப் பரிச்சயமாயின. மாலை நேர வடா பாவ் வண்டிக்காரர்கள் நண்பர்களானார்கள். பண்டிகைகளின்போது, கிராமங்களுக்குச் செல்வதும், பணியாளர்களின் வீட்டு விஷேசங்களுக்குச் செல்வதும் வழக்கமானது. விநாயகர் சதுர்த்திக்கு எல்லா வீடுகளிலும் விநாயகர் வைப்பார்கள். சின்ன ஊர்களில் கூட, தஹி ஹண்டியும், ஹோலி கோலாகலங்களும், தசரா, குடி பட்வா கொண்டாட்டங்களும் நடைபெறும்.
மராத்தி மொழி மனதில் பதிய ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்களின் மராத்தி நாடகங்களும், பென்னின் கார்னிவல் சினிமாவாக புதுப்பிக்கப்பட்ட மோரேஷ்வர் தியேட்டரில் பார்த்த மராத்தி படங்களும் மராத்தியை புரிந்துகொள்ள உதவின. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி பேச்சுத் தமிழில் இருக்கும் வேறுபாடு போலவே, மராத்தியின் பல்வேறு பேச்சுவழக்குகளின் வித்தியாசம் புரிய ஆரம்பித்தது. உட்கிராமங்களின் பழைய பேச்சு வழக்கிலிருந்து, நகரங்களின் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசப்பட்டது. அரசியல் கடைக்கோடி கிராமம் வரை கோலோச்சியது. ஒரே குடும்பத்திற்குள் கலவரத்தை உண்டாக்குமளவுக்கு அரசியல் வேரூன்றியிருந்தது. அரசியல் கட்சிகளால் ஊரே இரண்டுபட்டு முறைத்துக்கொள்வதும் உண்டு. எங்கள் பண்ணையிலும், உள்ளூர் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளால் தூண்டிவிடப்பட்டு ஒருமுறை, வெளிமாநிலங்களிலிருந்து வேலையாட்கள் கொண்டுவருவதற்கு எதிராக வேலை நிறுத்தமும், வன்முறையும் நடந்தது.
*
 
“சாய்ராட்”-டின் திரைமொழி ஏன் கண்களுக்கு மிகப்பெரும் விருந்தாய், மனதுக்கு மிகவும் நெருக்கமானதாய் அமைந்தது என்பதற்குத்தான் இந்தப் பின்னணியைச் சொன்னேன். சாய்ராட், நாகராஜ் மஞ்சுளே-வின் படம். மஞ்சுளே-வின் “ஃபன்றி”-யை ஏற்கனவே பார்த்து அவரின் ரசிகராயியிருந்தேன். “சாய்ராட்” நாலு கோடியில் எடுக்கப்பட்டு, 110 கோடிகள் வசூலித்த கமர்சியல் படம் என்றாலும், அது சொல்லும் செய்தி, அதைச் சொல்லிய விதம் கண்டிப்பாக மற்ற வணிகப் படங்களிலிருந்து மேலே வைக்கவேண்டிய படம்.
ஆணவக் கொலை பற்றி 2015-ல் வெளிவந்த ஹிந்திப் படமான “NH 10″ மிக முக்கியமான படம்தான். வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும், என்.ஹெச்.10-ன் திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆணவக் கொலையின் குரூர முகத்தை அழுத்தமாய் பதிவு செய்திருந்தது. ஆனால் “சாய்ராட்” எல்லாவற்றிலும் அதற்கு மேலான படம். கலை அல்லது இலக்கிய இழை கச்சிதமாக எல்லாக் கோணங்களிலும் பொருந்தி வந்ததாக நான் நினைக்கும் படம்.
மஹாராஷ்ட்ராவின் ஒரு கிராமம். பர்ஷியா என்ற ப்ரசாந்த் காலே-வும், அர்ச்சி என்ற அர்ச்சனா பாடிலும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அர்ச்சி ஊரின் பெரிய நிலச்சுவான்தாரின் மகள். பர்ஷியா கடையடுக்கு சாதியில் பிறந்தவன். அர்ச்சி தைரியமும், துணிவும் கொண்ட பெண்; புல்லட்டும், டிராக்டரும் ஓட்டத் தெரிந்தவள்.
மஞ்சுளே-வின் அர்ச்சி பாத்திரப்படைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இம்மாதிரி அர்ச்சிகளை நான் கிராமங்களில் சந்தித்திருக்கிறேன். ரின்கு-வும் நன்றாக நடித்திருந்தார். மிகவும் உச்சமாக நான் ரசித்தது அக்கிராமத்தின் மொழி. சுந்தரமான, வசீகரிக்கும் மராத்தி. அதிலும் அர்ச்சியின் வார்த்தை உச்சரிப்புகள், பர்ஷியாவின் நண்பர்களைச் சீண்டும்போது, அவரின் உரையாடல்கள் அச்சு அசலாய் ஒரு மஹாராஷ்ட்ர கிராமத்தின் ஒரு உயர்குடி விடலைப் பெண்ணை கண்முன் கொண்டுவந்தன. கிணற்றில் குளிக்கும் பர்ஷியும் நண்பர்களும், பர்ஷியின் வீடு, அர்ச்சியின் வீடு, அர்ச்சிக்குச் சொந்தமான விளைநிலங்கள், கிராமத்தின் தெருக்கள்…கலையும், விஷூவல்களும் மிக இயல்பாய், ஒரு சினிமாவைப் பார்க்கின்றோம் என்றே தோன்றாமல் ஒன்றச் செய்துவிடுகிறது.
அர்ச்சியும், பர்ஷியாவும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குகிறார்கள். அர்ச்சியின் தம்பி பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது, அர்ச்சியின் வீட்டிற்கு விஷயம் தெரிந்துவிடுகிறது.
மஹாராஷ்டிரப் பெண்கள், இயல்பாகப் பழகுவார்கள். கூச்சமும், தயக்கமும் குறைந்தவர்கள். நடனம் ஆடுவதற்கு சங்கோஜப்படாதவர்கள். எங்கள் பண்ணையில் நடக்கும் வருடாந்திர விழாவின்போது, கலைநிகழ்ச்சிகளுக்காக, ஒருவாரம் முன்னிலிருந்து நடனப் பயிற்சிகள் நடக்கும். தயக்கமில்லாமல், நடன நிகழ்ச்சிகளுக்குப் பெயர் தந்து பயிற்சிகளில் கலந்துகொள்வார்கள்.
அந்த பிறந்தநாள் கொண்டாட்டப் பாடலான “ஜிங்காட்” மஹாராஷ்ட்ராவின் பட்டிதொட்டியெங்கும் மிகப் பிரபலமடைந்த பாடல். இசை இரட்டையர்கள் அஜய்-அதுல். மற்றொரு வெற்றிப்படமான “நட்ரங்”-கிலும், இவர்களின் இசை மிகப் பிரபலமானது. அதில் இடம்பெற்ற “வாஜிலி கி பாரா” என்ற லாவணிப்பாடலும் மிகப்பெரும் வெற்றியடைந்த பாடல்.
அர்ச்சியின் அப்பாவும், தம்பியும் பர்ஷியாவை வன்மம் கொண்டு அழிக்க முயல்கிறார்கள். அர்ச்சியும், பர்ஷியாவும் தப்பித்து ஹைதராபாத் வந்துவிடுகிறார்கள். ஹைதராபாத்தின் சேரியில் வாழும் சுமன் அக்கா அவர்களுக்கு உதவுகிறார். சுமன் அக்கா அவர்களுக்கு சேரியில் வீடுபார்த்துக் கொடுக்கிறார். பர்ஷியா சுமன் அக்காவின் தோசைக் கடையில் சமைக்கும் வேலைக்குச் சேர்கிறான். அர்ச்சிக்கு பாட்லிங் தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது. அங்கு நட்பாகும் பூஜாவிடம் தன் வீட்டைப் பற்றிச் சொல்கிறாள். தான் எவ்வாறு சந்தோஷமாக, செல்வாக்காக வீட்டில் இருந்ததையும் சொல்கிறாள். பூஜா அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். பூஜாவிடம் தெலுகு கற்றுக்கொள்கிறாள்.
அந்தச் சேரி வாழ்க்கையும், அவர்களின் பணியிடங்களும் மிக நேர்த்தியாய், இயல்பாய் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. உறுத்தாத, யதார்த்தமான பின்னணி இசையுடன். குறிப்பாக, அர்ச்சியின் உடைகளில் ஏற்படும் மாற்றம் – மகாராஷ்ட்ராவின் உடைகளிலிருந்து, ஹைதராபாத்தின் உடைகளுக்கு, சேலைக்கு மாறுவது; தலையில் வைக்கும் கனகாம்பரப் பூ.
பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்; பூஜாவும், சுமன் அக்காவும் சாட்சிக் கையெழுத்துப் போடுகிறார்கள். அர்ச்சிக்கு வீட்டு நினைப்பாகவே இருக்கிறது. சில வருடங்கள் கடக்கின்றன. குழந்தை பிறக்கிறது. கொஞ்சம் வசதியான வாடகை வீட்டிற்கு மாறுகிறார்கள். குழந்தை நடக்க ஆரம்பிக்கிறான். இப்போதாவது நாம் எங்கிருக்கிறோம் என்று வீட்டுக்குச் சொல்லலாம், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று வீட்டிற்குப் போன் செய்து அர்ச்சி அம்மாவிடம் பேசுகிறாள். குழந்தை பிறந்த விஷயம் சொல்லி பேரன்கிட்ட பேசுறியா? என்று கேட்டு, மகனின் மழலையைக் கேட்கவைக்கிறாள்.
“சாய்ராட்”-டின் இறுதிக்காட்சி மனதைக் கலங்கடிக்கும் காட்சி. அந்த இறுதிக்காட்சியின் பாதிப்பிலிருந்து என்னால் அவ்வளவு சுலபமாக வெளியில் வரமுடியாமல்தானிருந்தது.
மறுநாளே அர்ச்சியின் தம்பியும், சில உறவினர்களும் ஊரிலிருந்து அவர்களைப் பார்க்க வருகிறார்கள். அவர்களை ஹாலில் உட்காரவைத்துவிட்டு, அர்ச்சி அவர்களுக்கு டீ போடுகிறாள். அர்ச்சிக்கு மனது முழுதும் சந்தோஷமாயிருக்கிறது. பர்ஷியாவை சமையலறைக்குக் கூப்பிட்டு, அவர்களுக்கு டீயை அவனையே கொடுக்கச் சொல்கிறாள். எல்லோரையும் சாப்பிட்டு போகும்படி சொல்லிவிட்டு அவர்களுக்கு உணவு தயாரிக்கிறாள். டீ கொடுத்துவிட்டு சமையலறைக்கு வரும் பர்ஷியாவை சந்தோஷத்தில் கட்டிக்கொள்கிறாள். குழந்தையைக் கொண்டுபோயிருந்த எதிர்வரிசை வீட்டு அக்கா, குழந்தையைக் கொண்டுவந்து வாசலில் விட்டுவிட்டுச் செல்கிறாள். குழந்தை தத்தித்தத்தி நடந்து வீட்டுக்குள் வருகிறது. கேமரா குழந்தையின் பின்னால் நகர்கிறது. பின்னணி இசை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அமைதியாகிறது. குழந்தை, கழுத்தில் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அம்மா அப்பாவைப் பார்க்கிறது. அழுதுகொண்டே மறுபடியும் வாசலுக்கு வருகிறது. குழந்தையின் அழுகைக் குரல்கூட பின்னணியில் கிடையாது. படியில் இறங்கி அழுகையுடன் தெருவில் நடக்கிறது.
*
என்னை உலுக்கிய இறுதிக்காட்சிகளில் ஒன்று சாய்ராட்-டின் இறுதிக்காட்சி. ஆணவக் கொலைகளின் குரூரத்தை, மனத்தின் ஆழத்தில் உறையும் சாதியெனும் அம்மிருகத்தை அப்பட்டமாய், அழுத்தமாய் இதயத்தில் அடித்து இறக்கிய காட்சி.
நன்கு படித்த, நல்ல வேலைகளில் இருக்கும் புத்தகங்கள் வாசிக்கும் என் நண்பர்களில் சிலரில் கூட விவாதங்களின் போது வெளிப்படும் அம்மிருகத்தின் சாயல் கண்டு வியப்பும், எதிர் மனநிலையும் அடைவதுண்டு. ஆழ்மனதில் நுழைந்து தங்கிவிட்ட ஆணாதிக்க மனோபாவம் போல், இம்மிருகத்தையும், வெளியில் தலைகாட்டும் போதெல்லாம், ஆராய்ந்து பிடுங்கி எறியத்தான் வேண்டும். இவ்வாழ்வைத் தவிர, சக மனிதர்களின் மீதான அன்பைத் தவிர, எது உயர்வானதாய், முக்கியமானதாய் இருக்கப் போகிறது?.  இந்தியாவில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரிப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 2014-ல் 28-ஆக இருந்தது, கடந்த வருடத்தில் 251-ஆகியிருக்கிறது. மனித நாகரீக வளர்ச்சியில், நாம் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோமோ?. ஆணவக்கொலையில் மகளுக்கு விஷம் கொடுத்து, அவள் துடித்துச் சாவதை பார்த்துக்கொண்டிருந்த பெற்றோர்களைப் பற்றிய செய்தி ஒன்று சமீபத்தில் கண்ணில் பட்டது. கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம். அந்நாளை இருட்டாக்கியது. இந்த நூற்றாண்டிலும், சமூக ஊடகங்கள் ஆதிக்கம் பெற்றுவிட்ட இந்நாட்களில், அம்மிருகத்தின் தயக்கமற்ற வெளிப்பாடுகள் மிகப் பயம் தருகின்றன.
படிப்பவர்கள் மத்தியில் நடக்கும் விவாதங்களும் (வாட்ஸப்பிலோ, முகநூலிலோ), ஒன்றிரண்டு விதிவிலக்குகள் தவிர, எல்லாமே வேஷங்கள் கொண்டதாக, உள்ளிருக்கும் மிருகத்தை மூடி மறைப்பதற்காகவே, தரவுகளைத் துணைக்கொண்டு, முன்னரே செய்துவிட்ட முன்முடிவுகளோடு, அம்முன்முடிவுகளை வலுவாக்குவதற்காகவே நடைபெறுகின்றனவோ என்ற ஐயம் எனக்குண்டு; வெளிப்படையான, திறந்த மனதோடல்லாமல்.
*
சொல்ல நினைப்பதை, வாசகர்களுக்குக் கடத்த நினைப்பதை சரியாய் எழுத்தில் கொண்டுவருவது ஒரு கலை. அது காட்சி ஊடகத்தில் எனும்போது இன்னும் கஷ்டமான விஷயமாகத்தான் எனக்குப் படுகிறது. இசையும், பின்னணியும், பாத்திரங்களும், கலையும், உரையாடல்களும் மிகக் கச்சிதமாய் நினைக்கும் வடிவத்திற்கு ஏற்ப பொறுத்துவது அல்லது பொருந்திப்போவது எத்தனை அற்புதமான விஷயம்; அந்த அற்புதம் நிகழ்வதற்கு எத்தனை உழைப்பு கொடுக்கவேண்டும்!
“சாய்ராட்” – காட்சிகளில் அமைந்த இலக்கியம்தான்; சந்தேகமில்லை. மஞ்சுளே-விற்கு அன்பு.
(இணைப்புப் படத்தில்: அர்ச்சியும், பர்ஷியாவும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.