‘கரெக்டா வந்துட்டான் பாரு. இந்தாளுதான் நான் சொன்னது‘. சனி அன்று வீட்டிற்கு வந்திருந்த சந்துருவிடம் சொன்னேன். பெரும் சத்தம் எழுப்பியபடி வரும் கருப்பு பைக்கை எதிர்வீட்டின் முன்னே நிறுத்தி மாடி போர்ஷன் படிக்கட்டுக்களில் ஏற ஆரம்பித்திருந்தார் அவர்.
‘வெள்ளையும் சொள்ளையுமா இருக்காரு‘, என்றான் சந்துரு. எப்போதும் வெள்ளை வேட்டியும், அடர்த்தியாக முடி வளர்ந்திருக்கும் முழங்கைக்கு மேல் மடித்து விடப்பட்டிற்கும் முழுக்கை சட்டையும் அணியும் அந்த ஆசாமிக்கு பின்னத்தலையைத் தவிர மற்ற இடங்களில் வழுக்கை. மாடி போர்ஷனின் வராண்டாவில் அமர்ந்தவரை வீட்டினுளிருந்து வெளியே வந்த பெண் வரவேற்று ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள்.
‘இவங்கதான்டா, இந்த லேடிதான். இப்ப வெளில வருது அவங்க பையன், சுதாகர். பாலிடெக்னிக் படிக்கறான், பொண்ணு பர்ஸ்ட் இயர் காலேஜ் படிக்குது‘
‘இவங்க ஹஸ்பெண்ட் இல்லாதப்பதான் வரானா இந்தாளு?‘ அந்தப் பெண் டம்ப்ளரில் கொடுத்ததை பருகிக்கொண்டே அந்தப் பையனிடம் பேசியவரை பார்த்தபடி சந்துரு கேட்டான்.
‘ஆமாம்டா, அவங்க ஹஸ்பெண்ட் ஏழு, ஏழரைக்கு கிளம்பிடுவாரு, கவர்ன்மெண்ட் வேலைல இருக்காரு போல. இந்தாளு அவர் போனப்பறம்தான் எப்பவும் வருவான். அவர் இருக்கும் போது இவன் வந்து ஒரு வாட்டி கூட பாத்ததில்ல‘
‘அந்த பையனும் அவர்ட்ட நார்மலாத்தானே பேசறான்?‘
‘பொண்ணும் அந்தாள்கிட்ட நல்லாத்தான் பேசும்.‘
‘பசங்க இருக்கும்போதே எப்படி?‘
‘இந்த ரெண்டு மாசத்துல்ல இந்தாள் வீட்டுக்குள்ள போய் பாத்த மாதிரியே இல்லடா. இவன் ட்ரெஸ் பண்றத பாத்தா பொலிடிஷியன், இல்ல ஏதோ பிசினெஸ், பண்றவன் மாதிரி இருக்கு‘
‘ஹஸ்பெண்ட்க்கு தெரியாமையா இருக்கும்?‘
‘அதான் சர்ப்ரைசிங்கா இருக்கு. அவரும் வீட்ல இருக்கும்போது நார்மலாத்தான் இருப்பாரு, சண்டைலாம் எதுவும் நடந்ததில்ல. சம்டைம்ஸ் வராண்டால ஒக்காந்து ட்ரிங்க்ஸ் அடிப்பாரு, அத பாத்திருக்கேன். என்ன நடக்குதுனே புரிய மாட்டேங்குது‘
‘எப்படியோ ஒனக்கு நல்ல விஷயம் மாட்டிக்கிச்சு‘, என்றபடி சந்துரு கிளம்பினான்.
பன்னிரண்டு வருடங்கள் குடியிருந்த பெரிமணிக்கார தெரு வீட்டிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்தான் கோகுலபுரத்திற்கு குடிபெயர்ந்திருந்தேன். முன்பிருந்த வீட்டின் பின்புறம் காலிமனை இருந்ததென்றால் இங்கு முன்னால் அதைவிடச் சிறிய காலி இடம். நாடார் கடை, டப்பா ஸ்கூல், ராமர் கோவில் குளம், பெரிமணிக்கார தெரு எல்லாம் பத்து நிமிட நடை தூரத்தில்இருந்தாலும், பள்ளிக்கு அவற்றைத் தாண்டிதான் தினமும் நான் சென்று வந்த கொண்டிருந்தாலும், அவை வேறொரு உலகைப் போல் இப்போது தோற்றமளித்தன. முற்றிலும் அந்நியமானவனாக என்னை உணரும் கோகுலபுரத்தின் தெருக்களை தாண்டி வேதாசல நகர் மெயின் ரோட்டைப் பிடித்து பெரிமணிக்கார தெருவில் இணையும்போது உண்டாகும் குதூகலம், வீடு திரும்புகையில் கோகுலபுரத்தில் நுழையுமபோது சஞ்சலமாக மாறும். எதிர்வீட்டு குடும்பமும், அங்கு வரும் ஆசாமியும் மட்டுமே என் மனச்சோர்வை கொஞ்சமேனும் போக்குபவர்களாக இருந்தனர். தொடர்ந்து அந்த வீட்டை கவனித்தபடி இருப்பதும், சந்துருவிடம் அது குறித்து பேசுவதும் வழக்கமாகிப் போனது.
அந்த ஆசாமி குறித்து தெருவில் எந்த மாதிரியான வம்புகள் உருவாகி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அந்த பதின்ம வயதிலும் எனக்கு அவரது வருகை குறித்த பாலியல் கிளர்ச்சியோ கற்பனையோ ஏற்படவில்லை. மற்றொரு ஆசாமி தன் வீட்டிற்கு வந்து போவது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் என்ன நினைக்கிறார் என யோசிப்பேன். ஆனால் அதிகமும் அந்தப் பிள்ளைகள் குறித்து, அவர்கள் அந்த தொடர் நிகழ்வை, அது குறித்து தெருவில் உலவிய புரளிகளை எதிர்கொண்ட விதம்- கண்டிப்பாக அவை அவர்கள் காதுகளையும் சென்றடைந்திருக்கும்-, அது அவர்கள் மனநிலையை, அன்றாட வாழ்க்கையை பாதித்திருக்கக்கூடிய விதத்தை பற்றிதான் என் எண்ணம் இருக்கும். அவர்கள் தங்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வரும்போது அந்த ஆசாமி வந்தால், அவனைப் பற்றி என்ன சொல்வார்கள்? அந்தப் பெண்மணி குறித்தோ, வீட்டிற்கு வருபவர் குறித்தோ பெரிதாக யோசித்ததில்லை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.
வழியில் சந்தித்தால் சிரித்துக் கொள்வது, ஓரிரு நிமிடங்கள் பேசுவது என்றளவில் எதிர் வீட்டு சுதாகருக்கும் எனக்கும் தொடர்பிருந்தது. அதை வைத்தும், பொதுவாக அவனையும், அவன் தங்கையையும் கவனித்ததை வைத்தும் அவர்கள் பெரும் துயரிலோ மன அழுத்தத்திலோ இல்லையென்றே தோன்றியது. அந்த வருடம் ப்ளஸ் டூ பள்ளி இறுதிப் பரிட்சையின்போது நான் மிகப் பெரிய அவமானத்தை அடைந்தேன். வெளியில் செல்லவே கூசிய சில மாதங்கள். என்னை வெளியில் பார்ப்பவர்கள் எனக்கு நேர்ந்ததைக் தெரிந்து கொள்ளக் காட்டிய முனைப்பு என்னை இன்னும் குறுகச் செய்யும், அவர்களை குற்றம் சொல்ல முடியாது, நடந்த சம்பவம் அப்படி. அந்த சமயத்தில் ஒரு நாள் எதிரில் வந்து கொண்டிருந்த சுதாகரை, பார்க்காதது போல் செல்ல நினைத்த என்னிடம் வலிய பேச்சுக் கொடுத்தான். நடந்ததைப் பற்றி துருவித் துருவிக் கேட்பதாக இல்லாமல், மிக இயல்பாக சில ஆறுதல் வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு சென்றான். சற்றே பரிச்சயமான ஒருவனின் துயரத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் செயல்.
அடுத்த சில மாதங்களில் மீண்டும் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்தோம், இப்போது அண்ணா நகருக்கு. பின் சுதாகருடன் தொடர்பற்று போனது. ஒரு முறை கல்லூரி செல்வதற்காக ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும்போது, ‘எப்படிப்பா இருக்க‘, என்ற குரல் கேட்கவும், திரும்பிய என் முன் அரசு பணி கணவர். என்னை அவர் கவனித்து வைத்திருக்கிறார் என அப்போதுதான் புரிந்தது. நேரடி பரிச்சயமில்லாதவர்களுடன் பேசும்போது இயல்பாக என் முகத்தில் தோன்றும் அசட்டு இளிப்புடன் அவருக்கு ஏதோ பதில் அளித்து வைத்தேன். அதுதான் அவருடனான முதலும் கடைசியுமான சந்திப்பு.
அதன் பின் நான் வேலையில் சேர்ந்து ஊரை விட்டு வெளியேறி பதினைந்து வருடங்களாகி விட்டது. இந்த கோடையில்தான் செங்கல்பட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு நாள் பயணம், தனியாக. இரண்டு வருடங்களாக எழுபது- எண்பது பக்கங்கள் வரக்கூடிய நெடுங்கதையை -குறுநாவல், நாவல் இவற்றின் எந்த அம்சமும் இல்லையென்பதால் நெடுங்கதை என்று ஒரு வசதிக்காக சொல்கிறேன் – திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்போது எழுதி முடிப்பேன் என்று சொல்ல முடியாது. அச்சாகும் என்று எந்த நிச்சயமும் இல்லை. இருந்தாலும், நூலில் இணைக்க என்று செங்கல்பட்டின் முக்கிய இடங்கள் மற்றும் நான் வசித்த தெருக்கள், குடியிருந்த வீடுகள் இவற்றின் புகைப்படம் எடுப்பதுதான் பயண நோக்கம். ஆம், சீபால்ட்டின் உத்திதான். நெடுங்கதையின் காலகட்டம் 1994-95 என்பதால், நூலில் சேர்க்கப்பட்டுள்ளது இன்றைய செங்கல்பட்டின் புகைப்படங்கள்தான் என்பதை மறைக்காமல் குறிப்பிட்டு விடுவேன். புகைப்படங்களின் கால இடைவெளியை சமன் செய்ய என்னுடைய பள்ளிக் காலத்து புகைப்படங்கள் சில உள்ளன.
ஊர் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தது என்று சொல்வது வழமையான ஒன்றாக இருந்தாலும், எல்லா ஊர்களுமே இத்தனை ஆண்டுகளில் மாறித்தான் இருக்கும் என உணர்ந்தாலும், அந்த மாற்றம் தரும் வியப்பை விலக்க முடியவில்லை. தெருக்களெல்லாம் சுருங்கி விட்டது போல் தோற்றமளித்தன, நான் என் நினைவுகளில் உருவாக்கியுள்ள செங்கல்பட்டுடன் ஒப்பிடுவதாலா அல்லது நான் அங்கு வசித்தபோதும் குறுகலாகத்தான் இருந்தனவா என்று சந்தேகமாக இருந்தது.
முதலில் பெரிமணிக்காரத் தெருவிலிருந்து ஆரம்பித்தேன். காலிமனை இன்னும் அப்படியேதான் இருந்தது, அதற்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்த சகோதரர்களின் வழக்கு முடிந்திருக்காது. வீட்டின் சொந்தக்காரர் நான் செங்கல்பட்டில் இருக்கும் காலத்திலேயே மறைந்து விட்டார் என கேள்விப்பட்டிருக்கிறேன், அவர் மனைவியைப் பார்த்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னை அவர் ஞாபகம் வைத்திருந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. அவருடைய இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. என்னைவிட நான்கு வயது இளைய அவருடைய மகனின் மனைவி, மூன்று வயதிருக்கக்கூடிய இரண்டாவது குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்து ராமர் கோவில் குளத்திற்கு சென்று சில புகைப்படங்கள், பின் அந்த ஏரியாவில் இருந்த உமாவின் வீட்டை தேடினேன், அடையாளம் தெரியவில்லை. என் கதைகளில் வரும் ‘உமா‘ அவளின் நிஜப் பெயர் கிடையாது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் உமாவிலிருந்து அவளுடைய பெயரை கண்டடைவது பெரிய கஷ்டமொன்றும் இல்லை. என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் அதற்கு நிகரான பெயரை மிக எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பள்ளி நண்பனொருவனை நீண்ட காலம் கழித்து சந்தித்தபோது ‘என்னடா எத்தன கொழந்தைங்க‘, என்று கேட்டவன் நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போதே ‘கல்யாணம் ஆயிடுச்சுல‘, என்று கேள்வியை வளர்த்தினான். ‘டேய்‘, என்று நான் ஆரம்பிக்க, ‘இல்லடா, ஒனக்கு தான் பொண்ணுங்கனா பிடிக்காதே‘, என்றான்.
‘பெண்கள் மேல் அக்கறை இல்லாதவன்‘, ‘தூயவன்‘, ‘நல்ல பிள்ளை‘,என என் மீது ஒரு பிம்பம், என் இயல்பான கூச்ச குணத்தாலும், குடும்பச் சூழலாலும் தானாகவே உருவானபின் அது எனக்கு ஒரு ஒளிவட்டம் தருவதாக எண்ணிக் கொண்டு அதை பள்ளிக்காலம் முழுதும் சுமந்தலைந்து, இப்போதும் அதை இறக்கி வைக்க இயலாமல் உள்ளேன். எனவே உமா யார் என்பதை யூகிக்கும்போது உருவாகும் அதிர்ச்சிக்கு இணையாக ‘இவனா இப்படி இருந்தான்‘ என்று மற்றொரு அதிர்ச்சிக்கும் ஆட்படுத்தப்படுவார்கள் என் பால்ய நண்பர்கள்.
சசி, சுசீலா, போல உமாவோ, மொகாண்டோ, செகந்திராபாத் போல செங்கல்பட்டோ இலக்கிய உலகில் அழியா இடத்தை என் எழுத்துக்களால் பெறும் என்று எனக்கு நம்பிக்கையில்லை (ஆனால் என்றேனும் இது நடக்கக்கூடும், நடக்க வேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் உள்ளது), என்றாலும் இலக்கிய வரைபடத்தில் சிறு புள்ளியாகவாவது இடம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு புகைப்படங்களுடன் கூடிய நூல் ஆரம்பமாக இருக்கக் கூடும்.
அடுத்து கோகுலபுரத்திற்குச் சென்று அங்கு குடியிருந்த வீட்டைப் பார்த்து, எதிர் வீட்டில் இன்னும் அவர்கள் வசிக்கிறார்களா என யோசித்தபடி திரும்பும்போது எதிரே சுதாகர் வந்தான். இப்போது நாற்பது வயதுக்கு மேல் இருக்கும் அவனுக்கு. இது கண்டிப்பாக, உச்ச நிகழ்வொன்றை நோக்கி கதையை நகர்த்த வலிந்து திணிக்கப்பட்ட நிகழ்வாக, யதார்த்தத்தை மீறிய ஒன்றாகவே, வாசகருக்கு தோன்றும். அவர்கள், பல வருடங்கள் கழித்து பால்யத்தைக் கழித்த ஊருக்குச் செல்பவன் அந்தக் காலத்தில் பரிச்சயமான ஒருவனை மீண்டும் சந்திப்பது, கணவன் வேலைக்குச் சென்ற பிறகு ஒரு ஆண் தினமும் ஒரு வீட்டிற்கு வருவதையும், அவனுடன் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மிக சகஜமாக பழகுவதையும்விட எந்த விதத்தில் யதார்த்தத்தை மீறுவதாக உள்ளது, என்று சிந்திக்க வேண்டும்.
பரஸ்பர குசல விசாரிப்புக்கள். தங்கை திருமணமாகி சென்னையில் வசிக்கிறாள். பெற்றோர் அவளைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அலைபேசி எண்களை பரிமாறி, உரையாடல் முடிவுக்கு வந்துவிட்டதை குறிக்கும், இனி எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற வழக்கமான உறுதிமொழிக்குப் பின் கிளம்பும்போதுதான் “உங்க பேமிலி ப்ரெண்ட் எப்படி இருக்கார், இப்பவும் வராரா?” என்று யோசிக்காமல் கேட்டு விட்டேன். இல்லை, அது பொய். உண்மையில் நான் அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த ஆசாமியைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். சுதாகரோ மிக இயல்பாக, “…வரார், வரார். எங்களுக்கு ரொம்ப க்ளோஸ்ல அவரு…” என்றான்.
அங்கிருந்து அண்ணா நகருக்குச் செல்லும்போது எதிர்பார்த்த ஏதோ ஒன்று நடக்காதது போன்ற வெறுமையான உணர்வை அடைந்திருந்தேன். சுதாகர் தன் குடும்பத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் என்னிடம் சொல்லி விடுவான் என்று நான் எண்ணியிருந்தேனா என்ன? இப்படி மற்றவர்களின் குடும்ப உறவுகள், அவற்றின் இயல்பு குறித்து கற்பனை செய்து அவர்கள் அந்தரங்கத்தைப் புரிந்து கொள்ள முயல்வது ஒரு கட்டத்திற்கு மேல் அநாகரீமானது இல்லையா? அதுவும் நான் அவனிடம் கேட்ட கேள்வி கீழ்மையானதுதானே, என்றெல்லாம் நான் யோசித்தது முற்றிலும் போலியானது. உண்மையில், அழுத்தமான கதைக்கருவை கண்டடைந்த மகிழ்ச்சியில் இருந்த குரூரத்தை மறைக்கவே இந்தக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தேன். கேட் டேலர் (Kate Taylor) என்ற எழுத்தாளர்தான் என்னைக் காப்பாற்றினார். ஒன்றரை வருடங்களுக்கு முன், மணவுறவை மீறிய பந்தங்களைப் பற்றிய தன் புதிய நாவலைக் குறித்த பேட்டியொன்றில், ‘It’s an occasion for fiction’ என்று அவ்வுறவுகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். என் வாழ்வையே பரிசோதனைக் களமாக ஆக்கி நான் பல கசப்பான விஷயங்களை புனைவாக மாற்றி வருவதால் மற்றவர்களை பற்றியும் எழுதலாம் என இந்தப் புனைவுக்கான நியாயத்தை உருவாக்கிக் கொண்டேன்.
தினமும் கணவன் வேலைக்குச் சென்ற பின் வரும், அவரை ஒரு முறைகூட சந்திக்காத ஆசாமி, அவனுடன் நன்றாக பழகும் குடும்பத்தினர், இவையனைத்தையும் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பதின்பருவச் சிறுவன். எளிய பாலியல் பகற்கனவுகளாக இல்லாமல், சுதாகர் குறித்த கதைசொல்லியின் (‘நான்’ பதின்பருவச் சிறுவன்) பார்வையில் கதையைக் கொண்டு செல்லலாம். அந்த ஆசாமி ‘நெருங்கிய குடும்ப நண்பர்‘ என்று இறுதியில் சுதாகர் சொல்வது கதையின் மைய முடிச்சு. அந்த ஆசாமி குறித்தும் தன் குடும்பம் குறித்தும் ஊரார் பேச்சுக்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஒரு கற்பனை உருவாகி ஒரு கட்டத்தில் அதுவே சுதாகருடைய நிஜமாக மாறி விட்டிருப்பதை பூடகமாக சொல்லி வாசகனை சிந்திக்க வைக்க வேண்டும். நாம் வாழும் வாழ்க்கைக்கு நிகரான வாழ்வை உருவாக்கிக் கொள்ளும் சுதாகரின் மனம் இதில் புலப்படுகிறது என்பதால் அதில் இலக்கியத் தரம் ஒரு சிட்டிகை அதிகமாகவே உள்ளது. சுதாகர் எப்போது இந்த கற்பனையை உருவாக்க ஆரம்பித்தான், எப்போது அந்தக் கற்பனை அவனுடைய நிஜமாக மாறியது, எல்லாமே புனைவின் தருணங்கள்தான் என்றெல்லாம் வாசகன் யோசிக்கக் கூடும்.
எனக்கும் புனைவின் தருணம் தயார். நெடுங்கதையை தற்காலிகமாக நிறுத்தி இந்தத் தருணத்தை வளர்த்தெடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தபோது, நான் கடைசியாக படித்த புனைவில் இருந்த, ‘The command of cliche comes of having had a literary training’ என்ற வரி மற்றொரு சிக்கலை உருவாக்கியது (ஒரு கதையில் அதிகபட்சம் ஒரு எழுத்தாளர் பெயர் உதிர்ப்பு மட்டுமே செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளதால், இதை சொன்னவர் பெயரை குறிப்பிடவில்லை. கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டம் அல்ல). சுதாகர் பொய் சொல்கிறான் என்று கதையை முடிக்கலாம், அதுபொருத்தமாக இருக்கும். ஆனால் அதைவிட, சுதாகர் அந்த ஆசாமி குறித்து சிறு வயதில் உருவாக்கிக் கொண்ட கற்பனையை உண்மையென இப்போது அவன் நம்புகிறான் என்று பூடகமாகச் சொல்வதையே இலக்கிய எழுத்தாக வாசகர்கள் ஏற்பார்கள் என்று யாரும் எளிதில் சொல்லிவிட முடியும். இலக்கியம் அறிந்தவர்கள் அதைத்தான் விரும்புவார்கள் என்று அதை தேர்வு செய்தால் நானும் க்ளிஷேவினுள் விழுந்தவனாகிறேன். என் புனைவெழுத்தின் தரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் என் வாசிப்பின்மீது எனக்குள்ள நம்பிக்கை காரணமாக எனக்கு இலக்கிய பயிற்சி உள்ளதென்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் இந்த க்ளிஷேவினுள் என்னைத் தள்ளுகிறதா? இலக்கிய சூட்சுமங்களை அப்படியே பின்பற்ற ஆரம்பித்தால் அதற்கும் ழானர் எழுத்திற்கு என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்? இந்த இடத்தில் எழுத்தில் கச்சிதத்தை எதிர்பார்ப்பது குறித்த சந்தேகம் எழுகிறது. ஆம், இலக்கிய ரீதியாகவோ, தர்க்க ரீதியாக பொருத்தமாக உள்ள முடிவைத் தேடுவதைவிட கதையில் என்னை தொலைத்து விட்டால், அதாவது கதைசொல்லியாக இல்லாமல் சுதாகரை பல ஆண்டுகள் சென்றபின் சந்தித்தவனாக அவன் சொன்னதை அணுகினால் என்ன முடிவுக்கு நான் (கதைசொல்லி அல்ல) வரக்கூடும்? அதற்கு பெரிய இலக்கிய அந்தஸ்து கிடைக்காமல் போனாலும் இயல்புத்தன்மையும், நேர்மையும் இருக்குமல்லவா?
இந்தக் கதை நானறிந்த, எனக்குத் தெரிந்த உண்மை என்று அடித்துச் சொல்ல விருப்பம்தான். ஆனால் துல்லியமாக இருப்பதாக எண்ணியிருந்த பால்ய, பதின்ம நினைவுகள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட ஆரம்பிக்கும் வயதில் இருக்கும் நான் ஒரு கேள்வியை கண்டிப்பாக கேட்டுக் கொண்டாக வேண்டும். நிஜத்தில் எனக்குத் தெரிந்தது என்ன? ஒரு ஆள் ஒரு வீட்டிற்கு கணவன் இல்லாதபோதுதான் எப்போதும் வருகிறார் என்பதால் அதை ஒரே கோணத்தில் ஏன் பார்க்க வேண்டும்? அவர் அப்பெண்ணின் அண்ணனாகக்கூட இருக்கலாம்.ஏதாவது குடும்பச் சண்டையினால் அந்தக் கணவனும் தன் மைத்துனரை சந்திக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். அல்லது அவரது வேலை நேரம் அத்தகைய சூழலை உருவாக்கியிருக்கலாம். இன்னும் எத்தனையோ காரணங்கள் கூற முடியும். மேலும், இப்போது என் நினைவில் இருப்பதைப் போல் அவர் அடிக்கடி வரவில்லையோ என்ற சந்தேகமும் வருகிறது. கணவரும், அவரும் வீட்டில் ஒரே நேரத்தில் எப்போதுமே இருந்ததில்லை என்று உறுதியாக என்னால் சொல்ல முடியுமா, என்றும் கேட்டுக் கொள்கிறேன். இப்போது மூன்றாவதாக ஒரு சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. எந்தவொரு உறவும், அதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அதன் இயல்பு குறித்த இடைவெளிகளை இட்டு நிரப்பும் கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு, கேட் குறிப்பிடும் “புனைவின் ஊற்றாக” இருக்கக்கூடும்.