தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 9

அத்யாயம் 26

சார் நாங்கள்லாம் டான்ஸுக்கு  வாசிக்கறத்துக்குத் தான் இஷ்டப் படுவோம். அதில காசும் கொஞ்சம் கூட. சம்பாவனையை முதல்லியே கொடுத்துடுவா. பிராக்டிஸ் கரெக்டா நடக்கும். சொன்னா சொன்ன டைம் தான். அதே மாதிரி கச்சேரின்னா ஆறுலேருந்து எட்டுன்னா சரியா அந்தடைம்தான். அநாவசியப் பேச்சே கெடையாதுஎன்பார் அந்த வயலின் வித்வான்.
அவர் பிள்ளையையும் தற்போது முன்னுக்குக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது கூறினார்: “எல்லாரும் சான்ஸ் குடுக்கறதார்ந்தா பணம் கேக்கறான்கள் சார். இவ்வளவு வருஷமா வயலின் வாசிச்சுண்டிருக்கேன். எனக்கே இந்த நிலைமை.பெரிய சபான்னா கிட்டயே போக முடியாது. சின்ன சபாக்காரன்கள்  பண்ற அழும்பு  தாங்க முடியலை சார்என்றார். கச்சேரிகளில் கூட்டம் கம்மி. எல்லோரும் காஸட்டுகள் ஒலிப் பேழைகள் என்று ஆரம்பித்துப் பின்னர் ஐபாடில் கேட்க ஆரம்பித்து சாவகாசமாக இப்போது யுட்யூபில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வரும்படியும் குறைந்து விட்டது. இன்றைக்கும் கச்சேரிகளுக்கு பழைய நினைப்புகளில் செல்பவர்கள் ஐம்பது அறுபது வயதைக் கடந்தவர்களே. அவர்களும் உச்சாணிக்கிளையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு இருபது முப்பது பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்குச் செல்வார்களே ஒழிய புது ஆட்களைப் புறக்கணிப்பார்கள்.
வேறோர் சமயத்தில்வெளிநாட்டில் கச்சேரிகளுக்கு நிறைய சான்ஸ் வருகிறதே? நீங்கள் அதற்கெல்லாம் முயற்சி செய்ய வேண்டியது தானே?” என்றேன்.
சார்! அந்த அநியாயத்தை ஏன் கேக்கறேள்? இந்த வெளிநாட்டு சான்ஸெல்லாம் கச்சேரிகள்ல இல்லை. அதெல்லாம் பெரிய வித்வான்களுக்குத்  தான்.  நம்ம போனா நாள் பூராக் கத்துக் கொடுத்துண்டு உட்கார்ந்திருக்கணும். பரவாயில்லை பணமாவது வருமேன்னு பாத்தா அதுவும் கிடையாது. இதை ஏற்பாடு செய்யறவா இங்க இருக்கா. அவா பேசற ஃபீஸ் அங்க ஒரு மணி நேரத்துக்கு அறுபது டாலர். எங்க கையில கொடுக்கறது எவ்வளவு தெரியுமா? ஒரு மணி நேரத்துக்கு அறுநூறு ரூபா. கேட்டா நம்மூர் மதிப்பில உங்களுக்கு அவ்வளவு தானே ஊரில கிடைக்கும் என்று ஆர்க்யூ பண்றா சார்என்றார் அவர் வெறுப்புடன்.
இதே விஷயத்தை வேறோர் வயலின் வித்வானிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். வயலினைப் பொறுத்த மட்டில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தந்தை நல்ல பிரபல வித்வான். இவர்கள் வாழ்க்கையைக் குறைந்த பொருளாதாரத் தேவைகளுக்கான அடித்தளத்தைச் செம்மையாக அமைத்துக் கொண்டிருப்பவர்கள். தந்தை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். பிள்ளை பள்ளியில் வயலின் கற்றுக் கொடுத்து வருகிறார். கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ளவர்கள். கர்நாடக சங்கீதத்தின் மேல் அளவற்ற நன்றியுணர்ச்சி இவர்களுக்கு உண்டு. “தியாகராஜ ஸ்வாமிகள் தான் சார் சோறு போடறார்என்பார் அடிக்கடி. அவர் சொன்னார்வெளிநாட்டில் நடக்கற விஷயங்கள் ஒண்ணும் வெளியில சொல்ற மாதிரி இல்லை. இங்கேயிருந்து போறவங்க அங்கே இருக்கிறஸ்பான்ஸர்யார் வீட்டிலேயாவது தான் தங்குவாங்க. ‘ஸ்பான்ஸர்எல்லாம் வேலைக்குப் போறவங்க . காலம்பற போனா ராத்திரி தான் திரும்புவாங்க. வீட்டிலே இவங்க நாள்பூரா அடிக்கிற கூத்து……… அதுனால ஆதித்யாவுக்கு ஏதாவது அந்த மாதிரி சான்ஸ் வந்தாக் கூட தனியா அனுப்பறதெல்லாம் உசிதமில்லை  பாத்துக்கங்கஎன்றார். இது அவர் கேள்விப் பட்டிருக்கும் விஷயம் என்பதால் இதில் உண்மை எவ்
வளவு
சதவீதம் கற்பனை எவ்வளவு சதவீதம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும் நிறைய வருடங்கள் இந்தியாவில் கட்டுப் பெட்டித் தனமாக வாழ்ந்து விட்டு வெளிநாடு செல்பவர்களுக்கு அவிழ்த்து விட்டாற் போல் ஆகி விடுகிறது என்பதை உய்த்துணர முடிகிறது என்பதையும் சொல்லத் தான் வேண்டும். இது நிற்க.
அறக்கட்டளையால் நடத்தப் பட்டு வரும் கச்சேரிகளைப் பற்றிச் சென்ற அத்யாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கச்சேரிகள் வாரா வாரம் நடக்கும். இதற்கென்று தனியான அறங்காவலர்கள் உண்டு. அதில் சில வித்வான்களும்  அடங்குவர். அவர்கள் கச்சேரிகளில் பெரிதாகத் தலையிட்டுக் கொள்ள மாட்டார்கள். கச்சேரிகளை நிர்வகிக்கிற ஒன்றிரண்டு வித்வான்கள் உண்டு. அவர்கள் ஒரு நாள் இரண்டு நாள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளுக்கு மனு செய்திருக்கிறவர்களைக் கூப்பிட்டு நேர்காணல் ஒன்றை நடத்துவார்கள். பாடச் சொல்லிக் கேட்டு விட்டுத் தேர்தெடுப்பார்கள். இதே போல் வயலின் மிருதங்கம் வாசிப்பவர்களுக்கும் தேர்வு நடக்கும். தேர்வானவர்களைத் தகுந்த விதத்தில் பாட்டு வயலின் மிருதங்கம் என்று பொருத்திக் கச்சேரி நாளை அறிவித்து விடுவார்கள். குழந்தைகள் அன்று போய் கச்சேரியை வழங்க வேண்டியது தான். வருட முடிவில் சிறப்பாகப் பாடிய குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளை வழங்குவார்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இதற்கு நிகழ்ச்சிகளை நிர்வகிப்பதற்கென்று ஒரு மேலாளர் உண்டு. இவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர். மிருதங்கம் வாசிப்பவர். அரசுத் துறை எதிலோ எழுத்தாளராக வேலை பார்த்து வந்தார். சங்கீதத்தில் ஆர்வம் காரணமாக இதில் இறங்கினார் என்று நினைக்கிறேன். முதன் முறையாக யார் மூலமாகவோ அவர் அறிமுகம் கிடைத்து அவர் நடத்தும் அன்னமாச்சார்யா ஆராதனையில் ஆதித்யா ஒன்றிரண்டு பாடல்கள் பாட வாய்ப்பு வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஒவ்வொரு பாடல் முடிந்தவுடனும் அதற்கான நீண்ட விரிவுரையை வழங்கினார். அவருடைய சங்கீதத் தோய்வு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் என்னிடம் அறக்கட்டளைக்கு கச்சேரிக்காக மனு செய்யுமாறு கூறினார்.
அதன்படி நான் மனு செய்தவுடன் நேர்காணலுக்கு அழைத்தார்கள். நேர்காணல் செய்தவர் ரொம்பவும் பிரபலமாகாதிருந்த வித்வாம்ஸினி. பெரிய பிரபலம் ஆகாதிருந்தவர்கள் பொதுவாக சங்கீதம் கற்றுக் கொடுப்பது என்று ஆரம்பித்து நல்ல வரும்படி உள்ளதால் மும்முரமாக இறங்கி விடுவார்கள். பிரபலம் அடையாமல் இருப்பதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அந்த மாமியின் பையனும் பெண்ணும் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தார்கள். மருந்தீஸ்வரர் கோயில் கச்சேரியில் மாமியின் பையன் தான் ஆதித்யாவுக்கு வயலின் வாசித்தான்.
ஆதித்யா அவர் முன் பாடிய பாடல் இப்போது நினைவுக்கு வரவில்லை. அவ்ர் இடையில் நிறுத்தச் சொல்லி விட்டு ஏதோ இடத்தில் ஸ்வரம் பாடச் சொன்னார் என்று நினைக்கிறேன். அவன் அதைப் பொருட்படுத்தாமல் தன் வழியில் பாடித் தனக்கு வேண்டிய இடத்தில் ஸ்வரம் பாடி முடித்தான். அந்த அம்மையார் மையிட்ட விழிகளால் என்னை உறுத்துப் பார்த்து என்னிடம்இஸ் ஹி ஆல் ரைட்?” என்றார். நான் என்னத்தைச் சொல்ல? தர்ம சங்கடமாய்ப் புன்னகைத்தேன். தேர்வாவதில் பிரச்னை இல்லாமல் சுமூகமாகவே முடிந்தது.
அந்த சபாவில் ஆதித்யா தொடர்ந்தாற் போல் நான்கைந்து வருடங்கள் பாடினான். ஆரம்பத்தில் ஏதோ ஐந்நூறு ரூபாயோ என்னவோ வசூலித்தார்கள் என்று நினைக்கிறேன். கச்சேரி செய்ய அருமையான இடம். அவர்கள் சென்னையின் பிரதான சாலை ஒன்றில் அமைந்திருந்த பெண்கள் கல்லூரி ஒன்றின் திறந்தவெளி அரங்கை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அல்லது கல்லூரி நிர்வாகத்தினர் இலவசமாக அநுமதித்திருந்தார்களோ என்னவோ. கூட்டம் என்றால் கச்சேரி செய்கிறவர்களின் உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் தான். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கணவன் மனைவி பெண் இவர்களே ரசிகர்கள். எப்போதாவது உறவினர்களோ நண்பர்களோ தலை காட்டுவதுண்டு. நிகழ்ச்சியின் நீதிபதிகள் பின்னால் தனியாக அமர்ந்திருப்பார்கள். நிகழ்ச்சி இரண்டு பிரிவாக இருக்கும். முதல் பிரிவில் ஒரு மணி நேரமும் இரண்டாம் பிரிவில் ஒன்றரை மணி நேரமும் குழந்தைகள் கச்சேரி செய்வார்கள். எனவே போனஸாக முதல் நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் இரண்டாவதற்கும் இரண்டாம் நிகழ்ச்சி ரசிகர்கள் முதல் நிகழ்ச்சிக்கும் அமர்ந்திருப்பது உண்டு.
ஆதித்யா ஆரம்ப நாட்களில் முதல் நிகழ்ச்சியில் தான் பாடிக் கொண்டிருந்தான். அதற்குக் குழந்தைகள் தான் பக்க வாத்யம் வாசிப்பார்கள் என்பதால் ஒன்றிரண்டு சமயங்களில் அவர்கள் ஒத்திகைக்காக எங்கள் வீட்டிற்கு வருவதுண்டு. ஒரு முறை ஒரு தெலுங்குப் பெண்மணி தன்னிடம் ஒன்பது வருடங்கள் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்த ஒரு பையனைக் கூட்டிக் கொண்டு வந்தார். அந்தப் பையன் கொஞ்சம் மிரண்டு போய்த் தான் வந்தான். வாசிக்கும் போது குருவின் முகத்தையே பார்த்துக் கொண்டு சந்தேகமாக வாசித்துக் கொண்டிருந்தான். ஆதித்யா பாடிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு பாடலில் அப்பெண்மணி ஏதோ தாளத்தை வைத்துக் கொண்டு குறுக்கிட முயன்றார். ஆதித்யா அனுமதிக்கவில்லை. சத்தம் போட்டு அவரை அடக்கி விட்டான். தனி ஆவர்த்தனத்துக்கு ஆதித்யா கண்ட சாபு தாளத்தில் அமைந்த பாடலுக்கு இடம் விட நிச்சயித்திருந்தான். அந்த அம்மையார் தன் சிஷ்யன் அதில் தனி வாசிக்க முடியுமா என்கிற நிச்சயம் இல்லாததால் ஆதி தாளத்திலேயேஆதி தாளம் வரும் பாட்டிலேயேஅமைத்துக் கொள்ள வற்புறுத்தினார். அதற்கு வேறு ஆதித்யாவிடம் தனிப் பஞ்சாயத்து. தர்ம சங்கடம் தான். என்ன செய்வது?
இன்னொரு கச்சேரியில்மகுவா நின்னே கோரிஎன்கிற வர்ணத்தை எடுத்தான். நாராயண கௌளையில் அமைந்த வர்ணம். நாராயண கௌளை ராகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கொஞ்சம் பிறழ்ந்தால் கேதார கௌளைக்குச் சென்று விடும். இந்தக் கச்சேரியில் வயலின் வாசித்த பெண் ஆதித்யாவை பரிசோதனை செய்து தேர்வு செய்த இசைவாணியின் மகள். ‘இஸ் ஹி ஆல் ரைட்?’ என்று கேட்டவருடைய மகள். நாராயண கௌளை வர்ணத்தின் போது சும்மா வில்லை வைத்து வயலினில் ஸ்ருதி மட்டும் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இந்தக் கச்சேரி பற்றி பெரிய இசை வாணரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நாராயண கௌளையைப் பற்றிக் கூறினோம். அவர் ஆச்சர்யப்பட்டுப் போனார். ‘பெரிய வித்வானகள் கூட ட்ரை பண்ண மாட்டா. வெரி குட் ஆதித்யாஎன்றார். பின்னொரு முக்கியமான கச்சேரியில் இதே ராகத்தில் ஆதித்யா விருத்தம் ஒன்றைப் பாடி விட்டு வயலின் காரர் முறைக்காகக் காத்திருந்தான். அவர் அதைத் தவிர்த்து மேலே பாடச் சொல்லி விட்டார். பெரிய இசை வாணர் சொன்னது சரி தான்.
ஆதித்யா நன்றாகப் பாடினாலும் கச்சேரி சோபிக்காமல் போவதற்குக் காரணம் பக்க வாத்யம் வாசிக்கின்ற குழந்தைகள் சொதப்பி விடுவது தான் என்பதை உணர்ந்து கொண்ட அமைப்பாளர் எங்களை அடுத்த கச்சேரிக்குக் கூப்பிடும் போது பக்க வாத்தியங்களை எங்களையே ஏற்பாடு செய்து கொள்ளச் சொல்லி விட்டார். இந்த சபாவிலும் எங்கள் தலையில் தான் செலவு விழுந்தது என்றாலும் ஒரு ஆறுதல். கச்சேரி சோபிக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
இந்த சபாவின் ஆண்டு விழாவிற்கான பரிசுகளை யார் யாரோ குழந்தைகள் தட்டிக் கொண்டு போனார்கள். எங்களுக்குக் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தது. காரணம் என்னவென்றால் ஆதித்யா எப்போதும் பரிசோதனை செய்து கொண்டேயிருப்பதால் கச்சேரிகள்வாச்சான் பிழைச்சான்தான். நிறைய கச்சேரிகள் எடுக்கும். ஒன்றிரண்டு பரிமளிக்காமல் போய் விடும். சங்கீதத்தில் இருக்கும் வித்வான்கள் சற்று உன்னிப்பாக கவனித்தால் தான் அவன் இசையின் உன்னதத்தை உணர முடியும். இன்னொன்று அவன் யாரிடமும் இவற்றைக் கற்றுக் கொள்ளாமல் தானாகப் பாடுகிறான் என்பது. அதை இன்று வரை நான் இத்தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தது போல் உலகம் நம்பவில்லை. இனி மேலும் நம்பப் போவதில்லை.
ஒரு ஆறுதல் அறுபத்து மூவர் உற்சவத்தில் வழங்கும் நீர்மோர் போல் இச் சபா வருடா வருடம் இருபது குழந்தைகளுக்கு சிறிய பரிசுகளை வழங்குவது உண்டு. அதில் ஒரு முறை ஆதித்யாவிற்கும் மற்ற குழந்தைகளுடன் பரிசினை வழங்கினார்கள். இந்தப் பரிசை வழங்கியவர் நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த எங்களை வீட்டு வாசலில் இருந்து மணி நேரம்  நிற்க வைத்திருந்த பிரபல வித்வான் தான். அவர் அந்த விழாவில் தன் சுருதி சேராத குரலில்பாரோ கிருஷ்ணய்யாஎன்று பாடி முடித்துக் குழந்தைகளுக்குப் பரிசை வழங்கினார். ஆதித்யா அவரிடம் பரிசை வாங்கும் போது அவரின் கரம் பிடித்துக் குலுக்கினான். அவரும்ஆஹாங்என்று சிரித்துக் கொண்டே அவனுடன் கை குலுக்கினார்.

ஷண்முகப் பிரியாவைக் குறிப்பிட்டிருந்தேன். அன்று இந்த சபாவில் ஆதித்யா ஷண்முகப் பிரியாவில்ஆண்டவனே…’ என்கிற பாபநாசம் சிவனுடைய கீர்த்தனையைப் பாடினான். அவன் அன்று பாடிய நிரவலிலும் கற்பனா ஸ்வரத்திலும் பொறி பறந்தது. பதிவில் உள்ள தரக் குறைவைப் பொறுத்துக் கொண்டு வாசகர்கள் அதைக் கேட்டு ரசிக்கக் கோருகிறேன். அதற்கான கண்ணி இதோ:

http://www.mediafire.com/file/mbp4tob6p7zeib2/Andavane_unnai_nambinen_Aditya_Mohan_12.4.2009.wpl
அதே கச்சேரியில் மோகன ராகத்தில் பவனுத என்கிற கீர்த்தனையில் மின்னல் வேக ஸ்வரம் போட்டிருந்தான். அதற்கான கண்ணி இதோ:
http://www.mediafire.com/file/1b1bxvqh1hyk8v8/Bhavanutha%20Mohanam%20Aditya%20Mohan%2012.3.2009.wpl

அத்தியாயம் 27

2010 கொஞ்சம் சோதனையான வருடமாக அமைந்தது. ஆதித்யா தொடர்ந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டும் பாடிக் கொண்டிருந்ததில் தூக்கம் வராமல் தவித்தான். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக இருபத்து நான்கு மணி நேரமும் விழித்திருந்தான். அப்போது பாடல் வரிகளையும் சமஸ்கிருத சொற்றொடர்களையும் தொடர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான். எங்களுக்குக் கவலையாக இருந்தது. என்ன வற்புறுத்தியும் செய்தும் அவனைத் தூங்க வைக்க முடியவில்லை.
யாரோ சொன்னார்கள் என்று ஒரு மனநல நிபுணரிடம் நேரம் வாங்கிக் கொண்டோம். இவர் ஒரு பிரபல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்து வருகிறார். அங்கு போய் பதிவு செய்து கொண்டு அவரைப் பார்த்தோம். அவர் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் நகரின் வேறொரு பகுதியில் அவரின் க்ளினிக் உள்ளது என்றும் அங்கே முதலில் சைக்காலஜிஸ்டைப் பார்த்துப் பரிசோதனைகள் செய்து அதன் பின்பே அவர் பார்ப்பார் என்றும் கூறினார். பின் அவர் சொல்படியே முதலில் அந்த சைக்காலஜிஸ்டிடம் நேரம் வாங்கிக் கொண்டு ஆதித்யாவுடன் போனோம். அவர் ஒரு சிறிய பெண். காது கேட்காத வாய் பேசவியலாத குறைப்பாட்டுடன் பிறந்தவர் என்று தெரிந்தது. அவரால் பேச முடிந்ததே தவிர வார்த்தைகள் ஸ்பஷ்டமாக இல்லை. காதுகளில் கேட்கும் கருவி அணிந்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்கும் எவருக்குமே அவர் காது கேட்காத வாய் பேச முடியாதவர் என்றும் அதற்கான விஷேடப் பள்ளியில் நீண்ட நாள் பயிற்சி எடுத்த பின்னரே இந்த அளவிற்கு வந்திருக்கிறார் என்றும் எளிதாகக் கூறி விட முடியும். இந்தப் பெண் அந்த மருத்துவருடைய மகள். உலகில் எப்படியெல்லாம் ஒவ்வொருவர் குழந்தை குட்டிகளைக் காப்பாற்றுகிறார்கள்? எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள்? அந்தப் பெண் இதற்கான பயிற்சி பெற்றிருந்தாலும் தன் அரைகுறைப் பேச்சில் புரிந்து கொண்டு எப்படி ஒரு நோயாளி குறித்த அறிக்கையைத் தயார் செய்ய முடியும்? என்ன நம்பகத் தன்மை அவரின் அறிக்கையில் இருக்கும்?
இந்த மருத்துவர் அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு அறிக்கையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். சரியாக எட்டு மணிக்குச் சென்று காத்திருந்தோம். ஒருவரும் இல்லை. கொஞ்சம் சாவகாசமாக உதவியாளர் வந்து பெயர்களைக் குறித்துக் கொண்டார். மருத்துவர் பத்து மணி வாக்கில் வந்தார். இது அங்கு வழக்கம் போலிருக்கிறது. எட்டு மணிக்குப் பெயரைப் பதிவு செய்தவர்கள் கிளம்பி விட்டார்கள். எல்லோரும் மீண்டும் பத்து மணிக்குத் தான் திரும்பி வந்தார்கள். கூட்டம் அம்மிவிட்டது. பொறுமையாகக் காத்திருந்து மருத்துவர் வந்து எங்களின் முறை வந்த பின் ஆதித்யாவுடன் சென்று சந்தித்தோம். அவர் பொறுமையாக நாங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு விட்டு ஆதித்யாவிடமும் சில கேள்விகள் கேட்டார். பரிசோதனைகள் செய்து விட்டு “இது எல்லாருக்கும் வர்றது தான். பெரிசாக் கவலைப் படறத்துக்கு ஒண்ணும் இல்லை. நான் ஒரு மருந்து ‘பிரிஸ்க்ரைப்’ பண்றேன். கொடுங்கோ. சாந்தமாயிடுவான். நன்னாத் தூங்குவான்” என்றார்.
எங்களுக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. “சைட் இஃபக்ட்ஸ் இருக்குங்கறாளே டாக்டர்?” என்றேன்.
“நான் கொடுக்கறது பாயிண்ட் ஃபைவ் எம்ஜி தான். பேபி டோஸ். சங்கீதக்காராளே எங்கிட்ட நிறைய பேர் வர்றா. எடுத்துக்கறா. சொன்னா நம்ப மாட்டேள்” என்றார்.
அவர் கொடுத்த மருந்துகளில் ஒரு வாரத்தில் ஆதித்யா இயல்புக்கு வந்து விட்டான். இதை எதற்கு இங்கு குறிப்பிடுறேன் என்றால் மருத்துவர் மருந்து என்று பெரிய அளவில் நாங்கள் செல்லவில்லை என்று விளக்குவதற்காகவே. ஆரம்ப நாட்களில் எங்களின் உறவினர் வற்புறுத்தலால் ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்த சம்பவத்தை முன் அத்யாயம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் பெரிய இசைவாணரின் வகுப்புகள் சுத்தமாக நின்று போயிருந்தன. அவருக்கு ஆதித்யாவிற்கு வகுப்புகள் எடுப்பதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. இரண்டு சகோதரிகளுக்கு மட்டும் ஊக்கமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டபோது ஆதித்யா அப்போதைக்கு பெரிய சகோதரியிடம் வகுப்புகளுக்குச் செல்லப் பணித்திருந்தார். எப்படி! ஆதித்யாவிற்குப் பின்னர் வகுப்புகளில் சேர்ந்தவர்கள். ஆதித்யாவை விட வித்வத் குறைந்தவர்கள். ஆதித்யா ஸ்வரம் போட்டால் எதிர் ஸ்வரம் போடத் தெரியாது அவன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் ஆதித்யாவிற்கு வகுப்புகள்! என் மனைவி அதையும் கர்ம சிரத்தையாக செய்து கொண்டிருந்தாள். இது எவ்வளவு நாள் ஓடும்?
இதே போல் பெரிய இசைவாணரின் இன்னொரு மாணவனிடம் வகுப்புகளுக்குச் செல்லப் பணித்தார் பெரிய இசைவாணர். அவர் வீட்டிற்கும் ஆதித்யா கொஞ்ச நாள் போய்க் கொண்டிருந்தான். இந்த சிஷ்யர்கள் பெரிய இசைவாணரை விட மேட்டிமைத் தனத்துடன் நடந்து கொள்வார்கள். சகோதரிகளிடம் ஸ்வரப் படுத்திய சாகித்யங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளச் சொல்லி பெரிய இசைவாணர் எங்களிடம் சொல்லியிருந்தார். அவர்களிடம் கேட்டதற்கு ஏதோ பத்து கீர்த்தனங்களின் நகல்களை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தார்கள். என் மனைவிக்கு இருந்த வெறுப்பில் முதன் முறையாக தழைந்து போகாமல் இது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு சகோதரர்களின் அன்னையைத் தொடர்பு கொண்டார். “ சார் சொன்னது எழுபத்தஞ்சு கீர்த்தனைகளுக்கு மேலே. எல்லாத்தையும் உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லியிருக்கார். நீங்க பத்து தான் கொடுத்திருக்கேள். நான்  சார் கிட்ட இவ்வளவு தான் கொடுத்திருக்கேள்னு சொல்லிவிடவா?” என்றிருக்கிறாள். என்ன மாயம்! மீதமனைத்தும் விசையை அழுத்தினாற் போல் வந்து சேர்ந்தன.
இது இப்படியென்றால் அந்த இன்னொரு மாணவன் என் மனைவிக்கு ஒரு நாள் போன் செய்து ஏன் வகுப்புகளுக்கு வரவில்லை என்று கத்தியிருக்கிறான். என் மனைவி கொஞ்ச நாள் முயன்று பார்த்து விட்டு பின்னர் இது பிரயோஜனப் படாது என்று விட்டிருந்தாள். குறிப்பாக இதே மாணவனுக்கு மறுநாள் கச்சேரியென்றால் முதல் நாள் கட்டாயம் ஆதித்யா வகுப்பு இருந்தாக வேண்டும். ஸ்வரம் கணக்குகளில் பயிற்சி வேண்டும் போலிருக்கிறது. யார் குரு யார் சிஷ்யன்? பின்னொரு சமயம் இதே மாணவன் கச்சேரிக்கு என் பெண் பின்னால் அமர்ந்து கொண்டு தம்புரா போட வேண்டும் என்று வற்புறுத்தினான். என் மனைவிக்கு “இது ஏதடா புது வம்பு? என்று தோன்றியது. ‘அவளுக்கு அதெல்லாம் சரிப்படாது ; கூச்ச சுபாவி’ என்று மறுத்து விட்டாள்.
இதே சமயத்தில் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க பிரபல வித்வான் ஒருவரைச் சந்தித்தோம். நல்ல அருமையாகப் பாடுகிறவர். பாடாந்தரமும் உழைப்பும் மேன்மையானவை. அவர் மரபை எதிர்க்கும் கருத்துகளுக்காக ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருப்பவர். அவர் கச்சேரியை ஒன்றிரண்டு சமயங்களில் நானும் என் மனைவியும் கேட்டிருக்கிறோம். ‘நின்ன நெர நம்மினானுரா’ என்கிற பந்துவராளிக் கீர்த்தனையை ஒரு கச்சேரியில் விஸ்தாரமாக ஆலாபனை, நிரவல் கற்பனாஸ்வரம் என்று பாடினார். எனக்கும் என் மனைவிக்கும் கண்ணீரே வந்து விட்டது. ஏற்கெனவே நடனப் பள்ளியின் இயக்குநர் எங்களுக்கு அவரின் பெயரைச் சிபாரிசு செய்தார். அப்போது நாங்கள் ஏதோ தயக்கத்தில் அவரிடம் செல்லவில்லை.
மைலாப்பூரின் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் சாதாரண அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தார். அவர் மனைவியும் சங்கீத வித் வாம்ஸினி. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மும்முரத்தில் ‘நைட்டி’யுடன் இருந்தார். நாங்கள் போனபோது நானே அலுவலகம் செல்கிற அவசரத்தில் இருந்தேன். அதனாலோ என்னவோ இந்த முயற்சியின் பலிதத்தின் மேல் நம்பிக்கையின்மையும் ஆயாசமும் சோர்வும் எனக்கு இருந்தன. அவர் மிகவும் இனிமையாகத் தான் பேசிக் கொண்டிருந்தார். அவர் மனைவி ஆதித்யாவைச் சற்று உற்று நோக்கி விட்டு “இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு ஆலாபனை பண்ண வராதும்பாளே  ?” என்றார். ஆதித்யா அப்போதெல்லாம் குறைவில்லாமல் ஆலாபனையும் செய்து கொண்டிருந்தான்.
ஆதித்யா அவர்களின் முகத்தையே பார்க்காது ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். வித்வான் கரகரப்ரியா ராகத்தில் ‘ராமநீ  சமானமெவரு’ என்கிற கீர்த்தனையை ஆரம்பித்துப் ‘ பலுக்கு பலுக்கு’ என்கிற இடத்தில் ஸ்வரம் பாடி நிறுத்தினார். ஆதித்யா எதிர் ஸ்வரம் பாடினான். இருவரும் மாற்றி மாற்றி ஸ்வரம் பாடினார்கள். ஆதித்யா பின்னலான ஸ்வரக் கட்டுகளுடன் பாடி விட்டு முத்தாய்ப்பாக முடித்து வைத்தான். வித்வானின் மனைவி “கணக்குப் போடறான்யார்!” என்று மூக்கின் மேல் விரலை வைத்தார். சரிதான். இன்னொரு வேடிக்கை. எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.  வழக்கமாக எதிர்பார்ப்புடன் உட்கார்ந்து ஏதாவது நடக்காதா என்று எதிர் நோக்குகிற நான் அன்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அலுப்பில் சடாரென்று எழுந்திருந்தேன். ‘எனக்கு ஆஃபீஸீக்கு நேரமாச்சு. கிளம்பறோம்’ என்று கூறி விட்டு அவர்கள் பதிலை எதிர்பார்க்காமலேயே மனைவி பையனை இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். என்னை அவரிடம் கூட்டிச் சென்ற நண்பர் நான் அது போல் அவசர கதியில் கிளம்பியதற்காகப் பின்னால் என்னிடம் கோபித்துக் கொண்டார். இந்தக் கதை இத்துடன் முடிந்தது.
இதே வித்வானை நான் பின்னாளில் புதுடெல்லி வந்த பிறகு ஒரு முறை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் பேருந்துகளில் பாடுவது அடித்தள மக்கள் வசிக்கும் இடங்களில் பாடுவது என்று ஆரம்பித்திருந்தார். கச்சேரிகளில் எதற்கு வர்ணம் முதலில் பாடுவது வயலின் காரர் முதலில் ஆலாபனை செய்த பிறகு பாடகர் ஆலாபனை செய்யலாமே என்றெல்லாம் புரட்சிகரமாக  ஆரம்பித்திருந்தார். எல்லோரும் திக்பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் கண்டனங்கள்; பல இடங்களில் பாராட்டு மழை. அப்போது நான் புதுடெல்லி வந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருந்தன. ஆதித்யாவிற்கு ஆலாபனைப் பகுதியில் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டுமோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆதித்யாவிற்கே தெரியும் என்றாலும் அவனுக்கு யாராவது ஒரு தூண்டுகோல் தேவை என்று தோன்றிக் கொண்டிருந்தது. என்னால் அவனுக்கு ஆலோசனைகள் வழங்க முடியும். அவனுக்குப் பெரிய சவாலை அளிக்க முடியாது. அது ஒரு குருவால் மட்டுமே சாத்தியம் என்பதால் இந்த சமூக செயற்பாட்டாளரை-விளிம்பு நிலை மனிதர்களுக்கான வித்வானைத்- தொடர்பு கொண்டேன்.
அவர் ஆரம்பத்தில் என்னைத் தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை அல்லது எங்களை நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. நான் “ஆலாபனைல கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்படறது சார்” என்றேன். அவர் உடனே, “அதையெப்படி நீங்க சொல்ல முடியும்? அவனுக்கு எது தேவை எது தேவையில்லைங்கறதை குரு தானே தீர்மானிக்கணும்?” என்றார் கோபமாக. பெற்றோருக்கு ஒரு பாத்யத்தையும் கிடையாது போலிருக்கிறது. நான் பேச்சிழந்து நின்றேன்.
“எனக்கு சுத்தமா டைம் இல்லை. அதுனால என்னால முடியாது” என்று கூறி இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
கொஞ்ச நாள் கழித்து எங்களுக்கு வித்வானை அறிமுகப் படுத்திய நண்பருடன் தற்செயலாகத் தொடர்பு கொண்டபோது என் மனைவி அவரிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறான். அந்த நண்பரும் வித்வானைத் தொடர்பு கொண்டு “என்ன இப்படி பேசிட்டேளாமே?” என்று விசாரித்திருக்கிறார். அதற்கு அவர் “அந்த மாதிரி ஏன் பேசினேன்னு தெரியலை. அதுக்குப்பறம் எனக்கு ஆதித்யாவைப் பத்திக் கனவு வந்தது” என்றிருக்கிறார். அவர் என்ன சொல்ல வந்தார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவரின் தற்போதைய கொந்தளிப்பான மனநிலைக்கும் இந்த சம்பாஷணை க்கும் தொடர்பு இருப்பதாய் நான் கருதியதால் மறுபடி அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.
2011 இல் நான் தற்போதைய பணியை ஏற்றுக்கொண்ட பிறகு புது டெல்லிக்குக் குடி பெயர்ந்தோம். அது…
***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.