தமிழ் பதித்த நல்வயிரம்

டோக்கியோவில் முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் பெப்ரவரி 3-ம் நாள் கலந்து கொண்டு, மறுநாள் சற்றே அகல இருந்த இரு சிறு நகரங்களில் இரண்டு கலந்துரையாடல்களிலும் பங்கேற்று, ஜப்பான் தேசீய அருங்காட்சியகம், கடல் முகம், புத்தர் கோயில்கள், உலகின் உயரமான கட்டிடமான டோக்கியோ டவர் மரம், புஜி சிகரம், கடற்கரை, கடலுக்குள் எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த சுரங்கச் சாலைகள் என்று ஏழெட்டு நாட்கள் சுற்றி விட்டு, திரும்புகாலில் ஒரு நாள் கொழும்பு நகரில் தங்கி, பெப்ரவரி 9-ம் நாள் இரவு கோவை வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் காலையே திருநெல்வேலி புறப்பட வேண்டியதிருந்தது. 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லாஸ் வேகாஸ் நாகரில் சந்தித்த நண்பர் நரேன் காரில். ஈராண்டுகளாக அவர் கோவை வாசி. ஏற்பாடு செய்து எம்முடன் பயணம் செய்தவர் நண்பர் செல்வேந்திரன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். பெப்ரவரி 11 – நாள் மாலை, திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் எம்மிருவருக்கும் சொற்பெருக்கு நிகழ்த்த வேண்டியது இருந்தது.
சைவமும் அசைவமுமாகப் பலதும் பேசிக்கொண்டே பயணித்தோம். சைவம் பேசும்போது, செல்வேந்திரன் கேட்டார், “அண்ணாச்சி, வைரம் எனும் சொல் தமிழ்ச் சொல்லா, திசைச்சொல்லா, வட சொல்லா?” என்று. மேலும் கேட்டார், “பழந்தமிழ் இலக்கியங்கள் வைரம் எனும் சொல்லைப் பயன்படுத்தி உள்ளனவா?” என்றும். நாம் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமோ, பெருஞ்சொல் அகராதியோ அல்ல என்பதனால், “பார்த்துச் சொல்கிறேன்,” என்றேன். நான் கொஞ்சம் கம்பன் என்றும், சங்க இலக்கியம் என்றும் சிலம்பித் திரிவதால் சகலவிதமான நிகண்டுகளையும் கரைத்துக் குடித்திருக்கலாம் என்ற தப்பெண்ணம் பலருக்கும் இருக்கலாம் என்றாலும், ‘புகழ் எனில் உயிரும் கொடுக்குவர், பழியெனில் உலகுடன் பெறினும் கொள்ளலர்!’ என்ற நிலமை இருக்கும்போது, கிடைக்கிற புகழை எதற்கு மறுக்க வேண்டும்! அதற்கும் நமக்கு முன்னுதாரணங்கள் உண்டு. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு கருத்தரங்குக்குப் போய் வந்தோர், இந்தியாவுக்குத் திரும்பி வந்து டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளும்போது, தொண்டர்களின் உற்சாக “டாக்டர்… வாழ்க! டாக்டர்…. வாழ்க!’ கூக்குரலில் புளகம் கொள்கிறபோது, நாமொரு அற்ப மானுடப் பதர்தானே!
பெப்ரவரி 12-ம் நாள் கோவை திரும்பியதும், முதல் வேலையாக, என் கைவசம் இருக்கும் நிகண்டுகள், பேரகராதி, பெருஞ்சொல் அகராதி எனத் தேட ஆரம்பித்தேன். ‘மொதல்ல அண்ணாச்சி கையில் இருக்கிற அகராதிகளைப் புடுங்கித் தூரப் போடணும். அப்பதான் ஒழுங்கு மரியாதையா நாவல், சிறுகதையென்று எழுத ஆரம்பிப்பாரு’ என்று மூக்கனூர்ப்பட்டிப் பள்ளி ஆசிரியர் தங்கமணி முனகுவதும் கேட்கிறது.
தேடியதன் பலன் இந்தக் கட்டுரை.

‘செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே’

என்பதைப் போல, யாம் பெற்ற செல்வம் பெறுக இவ்வையம்.
சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, ‘வைரம்’ எனும் சொல்லுக்கு திண்மை, மரக்காழ், நவமணிகளுள் ஒன்று, சினம், பகைமை, வீரம், ஒருவகை இசைக்கருவி என ஏழு பொருள்களைத் தரும். ஆனால், ‘வயிரம்’ எனும் சொல்லுக்கு, மேற்சொன்ன ஏழு பொருள்களையும் உள்ளடக்கிப் பன்னிரு பொருள்கள் தருகிறது.
அஃதென்ன வைரம் வேறு சொல், வயிரம் இன்னொரு சொல் அல்லவா என்று கேட்கலாம். ஆனால் இரண்டு சொற்களும் பொருள் பெரும்பாலும் ஒன்றுதான். ஆதியில் எனக்குத் தோன்றியது ஔவை என்பதை அவ்வை என்று எழுதுவதைப் போல, மையம் என்பதை மய்யம் என்று எழுதுவதைப் போல வைரம் என்பதை வயிரம் என்று எழுதியிருப்பார்களோ என. இவை எல்லாம் ஈ.வெ.ராவின் எழுத்துச் சீர்திருத்தம் என்பாருளர். ஆனால் அவருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கம் வந்தாயிற்று. விதிவிலக்காக அனுமதிக்கப்பட்டும் ஆயிற்று. அதாவது ஔவை என்பதை அவ்வை என்றும், மையம் என்பதை மய்யம் என்றும் எழுதுவது பிழை அல்ல. இலக்கணம் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களிடம் கேட்டால், அதற்கு இலக்கண விதிகள் சொல்வார்கள். வழுவமைதி என்பதைப் போல. நான் பீடம் தெரியாமல் ஆட இயலாது. அதாவது அவ்வை அல்லது மய்யம் என்று எழுதுவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது, சலுகை போல. அதாவது இதுதான் மருந்து, அது கிடைக்காவிட்டால் இதையும் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சொல்வதைப் போல.
அவ்வை என்றால் மூதாட்டி எனப் பொருள் படுவதைப் போல் தவ்வை எனில் அக்கா என்று பொருள். மூதேவி எனும் பொருளில் பழந்தமிழ் இலக்கியங்கள் பயன்படுத்தி உள்ளன. மையம் அல்லது மய்யம் எனும் சொல்லை centre அல்லது center எனும் ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறோம். பேராசிரியர் அருளியின் அயற்சொல் அகராதி மையம் எனும் சொல் சமற்கிருதம் என்றும் நடு அல்லது நடுவண் என்பதே அதன் பொருள் என்றும் அறுதியிட்டுச் சொல்கிறது. மய்யம் எனினும் அஃதே. மையத்து எனில் அது அரபிச் சொல் என்றும், பொருள் பிணம் என்றும் அவரே சொல்கிறார். அதனை நான் கீரனூர் ஜாகிர் ராஜாவிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.
வைரம் அல்லது வயிரம் வேற்று மொழிச் சொல்லாக இருக்கலாம் என்று கருதி, மறுபடியும் அயற்சொல் அகராதிக்குள் போனேன். இரண்டு சொற்களும், அவ்வகராதியில் பதிவிடப்பட்டிருக்கவில்லை. எனவே அவை இரண்டும் தமிழ்ச் சொற்கள் என்று கொள்ளலாம்.
மையம் இலக்கண அனுமதியுடன் மய்யம் ஆனது போல, ஔவை அதே அனுமதியுடன் அவ்வை ஆனதைப் போல, வைரம் எனும் சொல் ஆகியிருக்கலாமோ என்று தோன்றியது. எனில் வய்யிரம் என்று அல்லவா வந்திருக்க வேண்டும். எங்ஙனம் வயிரம் ஆயிற்று என்றும் தெரியவில்லை.
பேராசிரியர் அருளி, வைடூரியம் வடமொழி என்கிறார். அஃதே போல, வைரகரம், வைரகரன், வைராகி, வைரி, வைரியம் முதலாய சொற்களையும் வடமொழி என்பார். ஆனால் வல்லூறைக் குறிக்கும் வைரி என்ற சொல்லை- எம்மூரில் வைரி என்பார்கள்- உருது என்கிறார்.
வைரம் அல்லது வயிரம் எனும் சொல்லை திருக்குறள் கையாளவில்லை. வைரம் எனும் சொல்லை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆளவில்லை. ஆனால் வயிரம் எனும் சொல்லை, பாட்டும் தொகையும் கணக்கற்ற இடங்களில் கையாள்கின்றன.
பரிபாடலில், கடவுள் வாழ்த்துப் பாடலில், திருமாலைப் பாடும்போது, 18-வது வரியில் வயிரம் எனும் சொல் ஆளப்படுகிறது. ஆனால் 14 முதல் 25 வரையிலுள்ள வரிகள் சிதைந்து காணப்படுவதால் அவ்வரிகளுக்கு எவராலும் பொருள் கூற முடியவில்லை. நம்மால் என்ன செய்ய இயலும்?
ஆனால் புற நானூற்றில் மார்க்கண்டேயனார் பாடல்.
‘வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்து’ என்கிறது.
வயிர வளையத்தில் மணி பதித்த ஆரத்தில் என்பது பொருள்.
அக நானூற்றில் பரணர் பாடல்,

‘வயிரத் தன்ன வை ஏத்து மருப்பின்,
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி’

என்று தொடங்குகிறது. வை- கூர்மை, மருப்பு – கொம்பு, வெதிர்- மூங்கில், பரூ உ- பருத்த. வயிரத்தை ஒத்த கூர்மையான கொம்புகளை உடையது பன்றி. அதன் பருத்த மயிர்கள் மூங்கிலின் வேரைப் போன்று கனமானவை. எப்படி உவமை பேசியிருக்கிறார்கள் என்று அறிய ஆச்சரியமாக இருக்கிறது. வயிரம் என்றால் கூர்மை என்றும் பொருள். திண்மை என்றும் பொருள். கூர்மையைப் போன்ற கூர்மையான கொம்பு என்றோ, திண்மையைப் போன்ற கூர்மையான கொம்பு என்றோ சொல்ல வாய்ப்பில்லை. மரக்காழ் போன்ற கூர்மையான மருப்பு எனப் பொருள் கொள்ளலாம்.
அக நானூற்றில் மாமூலனார் பாடல்,

‘பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலம் தினத் துறந்த நிதிய’

என்று நீள்கிறது. இங்கு வயிரம் என்ற சொல் நவமணிகளில் ஒன்று என்ற பொருளில் கையாளப் படுகிறது.
பொன்னால் செய்த பாவைகளையும், வயிரம் முதலிய மணிகள் உள்ளிட்ட பொருள்கள் அத்தனையும் (சேரலாதன், மாந்தை என்னும் தனது தலைநகரின் கண், தனது நல்ல அரண்மனை முற்றத்தில்) எங்கும் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவற்றை நிலம் தின்னும் படிக் கைவிட்டுப் போனான். அந்த நிதியம் ஆம்பல் எனும் பேரெண்ணை ஒத்திருந்தது. ஆம்பல் எனும் சொல், ஒரு பெரிய எண்ணைக் குறிப்பது. சங்கம், பதுமம் என்பது போல. அல்லது மிலியன், பிலியன், ட்ரில்லியன் (million, billion, Trillion) என்பது போல.  அல்லது எந்த மெகா சைஸ் ஊழலின் தொகையையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். துல்லியமாகத் தெரிந்து கொள்ள, ஏதாவது தமிழ்ப் பேராசிரியரை அணுகுங்கள். நிச்சயமாகத் தாமரை என்பார். அவர்களுக்குத் தாமரை, ஆம்பல், அல்லி இவற்றின் வேறுபாடு கூடத் தெரியாது, ஒன்றரை லட்சம் பணம் மாதச் சம்பளம் வாங்கினாலும்!
இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய குமட்டூர் கண்ணனார் பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தில்,

 ‘திருமணி பொருத நிகழ்விடு பசும்பொன்
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து’

என்று பாடுகிறார். அழகிய மணிகளோடு போட்டி போட்டுக் கொண்டு ஒளி வீசும் பசும்பொன்னில் பதித்த வயிரங்களோடு மாறுபட்டு (விளங்க, பகைவரின் ஏழு மணி முடிகளால் செய்த மாலையை அணிந்தவன். திருமகள் தங்கிய மார்பை உடையவன்) என்று பொருள்.
வயிரிய எனும் சொல்லைப் பதிற்றுப் பத்தும், பரிபாடலும், வயிரியம் எனும் சொல்லை மலைபடு கடாமும், வயிரியர் எனும் சொல்லைப் புறநானூறும் பரிபாடலும் நற்றிணையும், வயிரியர்க்கு என்ற சொல்லைப் புறநானூறும் கையாள்கின்றன.
திருவாசகம், ‘முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி’ என்கிறது, வேறு யாரை, சிவனை! நவமாமணிகளின் முழுமையான ஒளி போன்றவன் சிவன் என்பது பொருள். ‘துளங்கு ஒளி வயிரத்து ஒப்பனே’ என்கிறது. பிரகாசமாக ஒளி விடும் வயிரத்தை ஒத்தவனே என்று பொருள். வைரம் எனும் சொல்லை விரோதம் எனும் பொருளிலும் வயிரம் எனும் சொல்லை உறுதி, பகை எனும் பொருள்களிலும் திவ்யப் பிரபந்தம் ஆளும்.
Are you happy now Selventhiran?
செய்யும் வேலையைத் திருந்தச் செய்துவிடலாம் என்பதால், வயிரம் ஒத்த பிற சொற்களையும், என் வசதிக்கு உட்பட்டுத் தொகுத்தேன். அவற்றுள் சில காண்டி:
வயிரம்     1. தணியா முனிவும், கூர்மையும், மணியும் வச்சிரப் பெயரும், காழும் வயிரம் என்கிறது நிகண்டு.
2. வச்சிராயுதம், நவமணிகளுள் ஒன்று. மர வயிரம், திண்மை, வலிமை, கூர்மை, கிம்புரி (யானை                                     மற்றும் எருதுவின் கொம்பு நுனியில் குமிண்போல் மணி செய்து அமைக்கும் அணி. தண்டாயுதம்,                                   திருவோணம் எனும் நட்சத்திரம், காதணியின் தட்டையான தகடு, கோபம்- சினம்- செற்றம்,                                         மயிர்ப்படாம் (wollen cloth) என்கிறது லெக்சிகன்.
3. வைரம் எனும் சொல்லின் பொருள்கள் என, கடினம், மரக்காழ், வயிரம், சினம், பகைமை, வீரம்,                                   வாச்சியப் பொது எனும் இசைக்கருவி என்கிறது, சென்னைப் பல்கலைக் கழக Tamil Lexicon.
வயிரப் படையோன்- வச்சிராயுதம் எனும் ஆயுதம் தரித்த இந்திரன்
வயிர உருக்கு-  வயிரத்தையே உருக்கக் கூடிய பொருள்
வயிர்த்தல்     வயிரங் கொள்ளுதல்
வயிர்              கூர்மை, செற்றம் கொள்ளுதல், மூங்கில், ஊதுகொம்பு
வயிரக்கல்     வயிரம், வயிரமணி
வயிரக் குணங்கள்- எட்டு வகைப்  பலகை, ஆறு வகைக் கோணம், தாரை, சுத்தி, திராசம் என்று வயிரத்தில்                                               காணப்பெறும் ஐவகை நற்குணங்கள்
வயிரக் குப்பாயம்- உறுதியான கவசம்
வயிரக் குற்றம்- சரை மலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கடி, விந்து, காக பாதம், இருத்து, கோடி இல்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல் என வயிரத்தில் காணப்படும் 12 குற்றங்கள். வயிரமே தெரியாத எனக்கு அதன் ஐவகை நற்குணங்கள் பற்றியும், பன்னிரு குற்றங்கள் பற்றியும் பெருங்கரிசனம் பாருங்கள்!
வயிரகரணி-   பெரு நெருஞ்சி. பெரு நெருஞ்சி அறிய நெருஞ்சி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ‘சில்லென்று                              பூத்த சிறு நெருஞ்சி’ என்ற எனது கட்டுரை வாசியுங்கள், ‘சொல்லாழி’ என்ற என் கட்டுரைத்                                        தொகுப்பில்.
வயிரங்கி-      துப்பாக்கியின் திரி வாயைத் துளைக்கும் ஒரு கருவி
வயிரச் சங்கிலி- சரப்பணி எனும் கழுத்தணி.
வயிரச் சன்னம்-வயிரப் பொடி. சன்னம் எனும் சொல், தடை செய்யப்பட்ட cluster bomb-ல் இருந்து தெறிக்கும் குண்டுத் துகள்கள், இலங்கை தமிழ் இன அழிப்பில் பயன்படுத்தியது என்று ஈழப் படைப்பாளிகள் குறிப்பிடுகிறார்கள்.
வயிரஞ் சாதித்தல்- பகை சாதித்தல்
வயிரத் தளம்-தட்டையான வயிரம்
வயிரத் தனம்- வன்குணம், காழ்ப்பு
வயிரப் பசை – வச்சிரப் பசை
வயிரப் படை- வச்சிராயுதம்
வயிரப் பொலி-முற்றிய தானிய மணி
வயிர மணி-  வயிரம், பொன்னாலாகிய மணி வகை
வயிர முடி-   வயிரம் இழைத்த கிரீடம். வயிரம் முதலாய இரத்தினங்கள் வைத்து இழைத்துச் செய்யப்பட்ட கிரீடம்.
வயிரமுத்து- ஆணி முத்து. கவிப் பேரரசர் பெயர் வைரமுத்து உங்களுக்கு ஈண்டு நினைவூட்டப் படலாம்.
வயிர மேக விருத்தி- ஓர் இலக்கண நூல்
வயிரவ சாந்தி- துர்மரணம், அகால மரணம் நேர்ந்தவருக்கு, பிராயச்சித்தமாக, வயிரவக் கடவுளுக்குச் செய்யும்                                     சாந்திச் சடங்கு
வயிரவ பூசை-தீர்த்த யாத்திரை சென்று திரும்பி வந்தவுடன் வயிரவக் கடவுளுக்குச் செய்யும் பூசை
வயிரவம்-      ஓர் அகப் புறச் சமயம். அச்சம்
வயிரவ ராதி- வலம்புரிச் சங்கு, நந்தியா வட்டம்
வயிர வல்லி- பிரண்டை
வயிர வளை-சிறு பயிறு, பாசிப் பயிறு
வயிரவன்-      சிவ மூர்த்தங்களுள் ஒன்று. கீரை வகை.
வயிரவன் மடை-வயிரவர்க்குச் செய்யும் பலி.
வயிரவன் வாகனம்- நாய், குக்கல்
வயிர வாள்-   வச்சிரப் படை
வயிர வாளி- வயிர உறுதியுள்ள அம்பு. மகளிர் காதணி
வயிரவி-         பைரவி. பைரவி எனும் இராகம்.
வயிர விழா-   அறுபதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
வயிர ஊசி-     கண்ணாடி அறுக்கும் கூரிய வைரம். முத்துத் துளைக்கும் ஊசி
வயிர வேர்-    சாய வேர்
வயிராவி-       வயிராகி. பண்டார சாதியின் உட்பிரிவு
வயிரி-             சத்துரு, வன் நெஞ்சன், வல்லூறு
வயிரியம்-      மயிர்ச் சீலை. Wollen cloth
வயிரிய மாக்கள்-வயிரியர். பாடகர். ‘வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ…’ – பதிற்றுப் பத்து
வயிரியர்-        கூத்தர். ‘விழவினோடும் வயிரியர் மடிய’ – மதுரைக் காஞ்சி
வயிரோசனன்-மாவலி
வயிரோசனி- சிவதை
மேற்கொண்டு, ‘வைரம்’ என்ற சொல்லின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சொற்கூட்டம் சில காணலாம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, மானிப்பாய் ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை தொகுத்த ‘அபிதான கோசம்’ வைரம் என்ற சொல்லுக்கு வயிரம் என்றே பொருள் தரும். மேலும் வைரமானது மதங்கமலை, இமயமலை, வேணா நதி முதலிய இடங்களில் படுவன என்றும் அணிபவர்க்கு அது புத்திரப் பேறு தரும் என்றும், வைரம் அணிந்திருந்தால் இடி, விடம் பற்றி அஞ்சத் தேவையில்லை என்றும் கூறுகிறது. எஞ்ஞான்றும் அணியவே வாய்ப்பில்லாத பேறற்ற சாமானியர் நாம் என் செய?
வைரவன்-     1) அம்மன் கோயில்களின் காவல் தெய்வம் 2) பைரவன் 3) A manifestation of Siva. சிவ                                              மூர்த்தங்களில் ஒன்று. 4) பைரவ் – வாராணசியில் ‘கால் பைரவ்’ எனப்படும் காலபைரவனுக்குக்                                  கோயில் உண்டு. நான் போனதுண்டு.
வைராகி-        1) வடநாட்டில் இருந்து, பிச்சை வாங்கி, தேச சஞ்சாரம் செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவன். பைராகி.                           2) துறவி 3) மன உறுதி உள்ளவன்
வைரவம்-     பைரவம், அச்சம், வைரவ மதம்
வைராகம்     விராகம், பற்றின்மை
வைரகிகன் – வைராகி, துறவி
வைராகன்-     பற்றில்லாதவன், அருகன், விராகன்
வைரகரம்-     பகைமை
வைரகரன்-     பகைவன்
வைரவனூர்தி- நாய், வைரவனின் வாகனம்
வைரக்கடுக்கன் -வயிரமணி இட்டு அமைத்த காதணி
வைரக்கல்-     வயிர மணி
வைரகரம்-    பகைமை
வைரகரன்-     எதிரி
வைர சுத்தி-    பழி வாங்கிப் பகை தீர்த்தல்
வைரம் பாய்தல்- திண்மையாதல்
வைரன்-          பகைவன்
வைராக்கிய சதகம் -சாந்தலிங்க அடிகளார் இயற்றிய சதக நூல்
வைராக்கியம் சொல்லுதல்- தான் துறவு பூணத் துணிந்ததை ஆசிரியர் முன் அறிவித்தல்
வைராக்கியம் 1)உலகப் பற்றின்மை 2) விடாப்பிடி 3) மத ஆவேசம் 4) பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், மயான வைராக்கியம் 5) வெறுப்பு 6) பகை
வைராங்கியம்- வைராக்கியம்
வைராடம்-    இந்திர கோபம் எனும் பூச்சி
வைரி-           மன உறுதி உள்ளவன், பகைவன், வல்லூறு (உருது)
வைரிதை-    வீரம், பகைமை
வைரியம் – வீரியம், வலிமை,  வெறுப்பு, பகைமை
வைரியர்-      வயிரியர்
வைருப்பியம் – அவலட்சணம்
வைரோசனன்- மகாபலி, வாலி, கதிரோன்
வைரோசனி- புத்தர்களில் ஒருவன்
பாப்பா பாட்டில், பாரதி,

‘உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா!’

என்கிறார். வயிரமுடைய நெஞ்சு எனில் நெஞ்சுரம் என்று பொருள். உறுதியான நெஞ்சம். ‘கண்ணம்மா – என் காதலி’ பாடலில், சிருங்கார மற்றும் அற்புத ரசம் சொட்ட, ‘சுட்டும் விழிச் சுடர்தான் – கண்ணம்மா! சூரிய சந்திரரோ?’ என்று பாடும் பாடலில், தொடர்ந்து,

‘வட்டக் கரிய விழி – கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் – தெரியும்
நட்சத்திரங்களடீ!’

என்றும் பேசும். பொருள் சொல்லத் தேவையில்லை இங்கு.
கம்பனைப் பேசாமல் கட்டுரையை முடிப்பதெங்ஙனம்?
வயிரம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பெரும்பான்மையான பொருள்களிலும் கம்பனில் பாடல்கள் உண்டு. ஊழியை ஆண்டது போல, ஆழியை ஆண்டது போல. யுத்த காண்டத்தில், நாகபாசப் படலத்தில், ‘வயிர நெடுமால் வரை கொண்டு’ என்று கம்பன் பேசும்போது, வலிமையான, பெரிய வச்சிர மாலையைக் கொண்டு என்று பொருள். ’தாடகை வதைப் படலத்தில், தாடகையின் உறுதியான நெஞ்சின் திண்மையைப் பேச, ‘வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சு’ என்பான்.
கும்ப கருணன் வதைப் படலத்தில், முதல் நாள் போரில் தோற்று, இலங்கை மீண்ட இராவணனின் மனப்புழுக்கத்தை உணர்ச்சியுடன் பேசுவான் கம்பன். அவற்றுள் ஒரு பாடல்:

‘வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்; –
நெடு வயிரத் தோளான் –
தான் நகு பகைவர் எல்லாம் நகுவர்
என்று அதற்கு நாணான்;
வேல் நகு நெடுங்கண், செவ்வாய்
மெல்லியல், மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே
நாணத்தால் சாம்புகின்றான்’

என்பது பாடல். இராமனிடம் தோற்றுத் திரும்பிய தன்னைப் பார்த்து, வானம் சிரிக்கும், மண் எல்லாம் சிரிக்கும், தான் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும் பகைவர் எல்லாரும் சிரிப்பார்கள் என்று அதற்கு நாணமாட்டான், வயிரம் போன்ற உறுதியுள்ள நீண்ட திரண்ட தோள்களை உடைய இராவணன். ஆனால் கூரிய வேலைப் பார்த்து நகுகின்ற நெடிய கண்களை உடைய கோவைச் செவ்வாயும், மெல்லியல்பும் உடைய, மிதிலையில் பிறந்த சானகி சிரிப்பாள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்.
அவலமான ஒரு காட்சியில், கம்பனின் உவமை பாருங்கள். முதலில் நெடுவயிரத் தோளான். பிறகு வேல் நகு நெடுங்கண். இலக்கிய ரசம் அர்த்தமாகாத பேரறிஞர்கள் கம்பனில் ரசம் பிழிந்தார்கள். வயிர முத்தைப் பறவை கொட்டை என நினைத்துக் கொத்தி உடைத்ததைப் போன்று.
வயிரத்தின் பொருள்களுக்குக் கம்பன் யாத்த பாடல்களை மேற்கோள் காட்டிச் சென்றால், இது தனி நூலாகி விடும்!
எனவே, நம்மால் ஒரு அனுமானத்துக்கு வர இயலுகிறது. வயிரம் என்ற சொல் தமிழின் மிக மூத்த தமிழ்ச் சொல்லாழியில் ஒன்று. பிற்பாடு அது வைரம் என்றும் சொல்லவும் எழுதவும் பட்டிருக்கலாம். பெரும்பாலும் நவ மணிகளில் ஒன்று என்றே இன்று வயிரமும், வைரமும் பயன்படுத்தப் பட்டாலும், மிக ஆழமும் விரிவும் கொண்ட சொல்லாகவே நமக்கது காணக் கிடைக்கிறது.
***
05 மார்ச் 2018

One Reply to “தமிழ் பதித்த நல்வயிரம்”

 1. அன்புள்ள நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,
  தமிழ்ச் சுரங்கத்தைத் தோண்டி வயிரம் எடுத்திருக்கிறீர்கள். “வயிரம் என்ற சொல் தமிழின் மிக மூத்த தமிழ்ச் சொல்லாழியில் ஒன்று.” என்று அனுமானம் சொல்லி இருக்கிறீர்கள். என்னுடைய அனுமானம் சற்று வேறாக இருக்கிறது. வட மொழியில் “வஜ்ரம்” எனப்படுவது தமிழில் “வயிரம்” ஆகி இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
  வட மொழியில் ‘ஜ” தமிழில் ‘ய’ அல்லது ‘ச’ ஆவது வழக்கம்.
  அஜன் – அயன் ( பிரம்மா)
  கஜம் – கயம் ( யானை)
  பங்கஜம், அம்புஜம் – பங்கயம், அம்புயம் ( தாமரை)
  ஆனால் அர்ஜுனன் – அர்ச்சுனன் ,விஜயன் – விசயன்
  ராஜன் என்பது ராசன் ஆகி அரசன் ஆகி, அல்லது ராயன் ஆகி அரையன் ஆகலாம்.
  இவை எல்லாம் எந்த இலக்கண விதி என்று அறியேன் !
  “ஜ” – ‘ய’ மாறுவது வட நாட்டிலேயே உண்டு.
  ஜமுனா – யமுனா, ஜஸ்வந்த் – யஸ்வந்த், ஜோகி – யோகி, ஜாத்ரா- யாத்ரா, இப்படி பல.
  இது இந்திய மொழிகளில் மட்டும் அல்ல ! ஜோசப்- யூசுப், ஜேசு – யேசு, என்று பல உண்டு. ஜெர்மன் மொழியில் இன்றும் ‘ஜ’ என்று ஆங்கிலம் போலவே எழுதினாலும், உச்சரிப்பு ‘ய’ தான். உதாரணமாக ஜுன், ஜூலை என்ற மாதங்களை யூனி, யூலி என்றுதான் சொல்லுவது !
  வடமொழியில் “வஜ்ரம்” என்பதற்கு இந்திரனுடைய ஆயுதம், உறுதி,வயிரம்,பசை என இன்னும் பல பொருள் உண்டு.
  கம்பன் வாக்கில் “வயிரத் தோளான்” என்று எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள். இது வட மொழியில் “வஜ்ர பாகு” என்று சரளமாகப் பயிலும் வழக்கு.
  ஆக வஜ்ரம் என்பது வயிரம் ஆகி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
  நன்றி,
  தருணாதித்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.