கம்பலை-பிற்சேர்க்கை

[185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/?p=51599 ]
‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை. திரு. தருணாதித்தன் குறிப்புகள்.

  1. கர்நாடக மாநிலத்தில், பண்பலை வானொலி, தனது அதிர்வு எண் அல்லது Frequency- யை அறிவிக்க, ‘கம்பனங்கா 100.1’ என்கிறது.
  2. கம்பன- Kampana எனும் சொல்லுக்கு வடமொழியில் நடுக்கம், அசைவு என்று பொருள்
  3. கர்நாடக இசையில் சுரங்களை அசைக்கும் அழகியலில், ‘கம்பித கமகம்’ – Kampitha Gamakam- என்பது மிக முக்கியமானது.
  4. கம்பம் எனும் சொல்லில் இருந்துதான் ‘சிரக் கம்பம், கரக்கம்பம்’ எனும் சொற்கள் பிறப்பெடுத்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன குறிப்புகளைத் தொடர்ந்து, அவை கம்பலை எனும் சொல்லுக்குத் தொடர்புடையன என்று தோன்றியதால், மேலும் தேடலாம் என்று எண்ணினேன்.
பேராசிரியர் ப. அருளியின், “இவை தமிழல்ல” என்னும் அயற்சொல் அகராதி, கம்பம் எனும் சொல்லைப் பட்டியலிடுகிறது. கம்பம், சமஸ்கிருதம் என்றும், அச்சொல்லின் பொருள் 1. அசைவு  2. நடுக்கம்  என்றும் குறிக்கிறது. ஒப்பு நோக்கும் சொல்லாக, பூகம்பம் எனும் சொல்லையும் தருகிறது. பொருள் அறிவோம், நில நடுக்கம் என்று.
எனது நினைவுக்கு வந்த வெறொரு சொல், ‘கம்பக் கட்டு.’  திருவிழா நாட்களில், ஊர்வலம் முடிந்து சாமி வாகனம் கோயிலைச் சேர்ந்த பிறகும் தேர்த்திருவிழாவின் போது, தேர் நிலைக்கு நின்ற உடனேயும் நடைபெறும் வாண வேடிக்கைக்கு நாஞ்சில் நாட்டில் கம்பக் கட்டு என்பார்கள். மலையாளத்திலும் அவ்வண்ணமே புழங்குகிறது. இங்கு கம்பம் எனும் சொல் நடுக்கம் தரும் பேரோசை என்று பொருள்படும். கம்பலைக்கும் அது ஒரு பொருள்.
உடன் தானே லெக்சிகன் தேடிப் பார்த்தேன். கம்பனம் எனும் சொல்லுக்கு அசைவு, நடுக்கம் என்றே பொருள் தரப்பட்டுள்ளது. கம்பம் எனும் சொல்லுக்கும் அவையே பொருள்.
சீவக சிந்தாமணியில் கனகமாலை இலம்பகம், பாடல் எண் 1737, ‘கம்பம் செய் பரிவு நீங்கி’ என்ற வரி உள்ளது. பொருள், நடுக்கம் தருகின்ற பரிவு நீங்கி என்பது.
மேலும் கம்பம் எனும் சொல்லுக்கு அசைவு என்றும் பொருள். மணிமேகலையில், 17 ஆவது காதையான, ‘உலக அறவி புக்க காதை’யில்
‘சம்பத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழிபெரும் செல்வம்’
எனும் வரிகள் உள்ளன. இரண்டாவது வரியின் பொருள், அசைவற்ற மிகப் பெரிய செல்வம் என்பது.
எனவே, கம்பம், கம்பனம் எனும் சொற்கள் கம்பலை எனும் சொல்லுடன் சேர்த்துப் பார்க்கத் தகுந்தவை என்று தோன்றுகிறது.
*
06 மார்ச் 2018