எம். எல். – அத்தியாயம் 17

சாரு மஜும்தார் கொடுத்திருந்த துண்டுப்பிரசுரங்களை துரைப்பாண்டியோடு அவரும்தான் படித்தார். பாலகிருஷ்ணனுக்கு அரசியலில் எல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாது. நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் செய்தித்தாள்களைப் படிப்பதோடு சரி. அரசியலைப் புரிந்து கொள்வார். ஆனால் விவாதம் செய்ய மாட்டார். அவர் வீடு இருக்கும் மேலமாசி வீதியிலேயே கோபால் பிள்ளையும் இருந்துவந்ததால், அவருடைய வயது, அரசியல் அனுபவம் இவற்றின் காரணமாக கோபால் பிள்ளையை அவ்வப்போது சந்திப்பார்.

‘சாரு மஜும்தார்’ என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தார். அன்று கோபால் பிள்ளையுடைய வீட்டில் அவரைச் சந்தித்த ஆச்சரியத்திலிருந்து மீளாமலேயே தான் அவரைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சாரு மஜும்தார் என்ற அரசியல் பிரமுகரை வீட்டுக்கு அழைத்து வந்தோம் என்ற சிறு பெருமை அன்று அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அவர் கொடுத்த அந்த எட்டு துண்டுப் பிரசுரங்களைப் படித்தபோது, இந்தியாவை அரை நிலப்பிரபுத்துவ, அரைக்காலனிய நாடு என்றெல்லாம் வரையறை செய்வது என்னவோ போலிருந்தது. அதெல்லாம் பாலகிருஷ்ணனுக்கு புதுசாக இருந்தது.

ஆனால் துரைப்பாண்டிக்கு சாரு மஜும்தாரையும், அவருடைய அந்தத் துண்டுப் பிரசுரங்களையும் பிடித்துவிட்டது. அவற்றைப் படித்தபோது அவனுடைய மனம் அதில் தோய்ந்தது. அவனுடைய நரம்பு மண்டலத்தை அவருடைய கருத்துக்கள் ஊடுருவி ஆக்கிரமித்தன. காணாததைக் கண்டுவிட்ட மாதிரி அவனுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. பாலகிருஷ்ணன் சொன்ன மாதிரி அந்த பிரசுரங்களை அவனே டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்டியூட்டுக்கு எடுத்துச் சென்று, ஸைக்க்ளோஸ்டைல் பிரதிகள் எடுத்துக் கொண்டான். ஸ்டடி சர்க்கிளுக்கு ஆட்களைத் திரட்டினான். பாலகிருஷ்ணன் ஏதோவொரு வேகத்தில் சாரு மஜும்தாரிடம் ஒப்புக்கொண்டதற்காகக் ‘கடனே’ என்று, தன் வீட்டில் கூட்டத்தை நடத்திக் கொள்ள ஒப்புக்கொண்டார்.

அன்று சோமு ஸ்டடி சர்க்கிளுக்குப் புறப்படும் போது மீனா அவனிடம் “எங்க கெளம்பிட்டீங்க?” என்று கேட்டாள். அவள் நாலரை மணிக்கே முகம் கழுவி, தலைப்பின்னி, அப்பா, தங்கச்சி, சோமுவுடன் வெளியே போகும் மனநிலையில் இருந்தாள். “நாங்க சில நண்பர்களெல்லாம் மீட் பண்றதா இருக்கோம். பாலகிருஷ்ணன் சார் வீட்டிலே மீட் பண்றோம். அதுக்குதான் கெளம்புதேன்.” என்றான்.

“ஊரிலே இருந்து அப்பாவும் கற்பகமும் வந்து ரெண்டு நாளாச்சு. நாளைக்கு அப்பா ஊருக்குப் போயிருவா… எல்லாருமாச் சேந்து மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வரலாங்க… ஒங்க ஃப்ரண்ட்ஸ்களை இன்னொரு நாள் போய்ப் பாருங்க.”

“நீங்கள்ளாம் கோயிலுக்குப் போயிட்டு வாங்க… நான் கண்டிப்பா வாரேன்னு சொல்லிட்டேன்…”

மீனாவுக்கு அழுகையே வந்து விட்டது. கண்கள் கலங்கின. சோமு மீது எரிச்சலும், கோபமும் வந்தன. தரையில் உட்கார்ந்து விட்டாள். கையில் எடுத்துச் செல்ல ஏதோ புத்தகத்தைத் தேடினான் சோமு. அவன் புத்தகத்தைத் தேடுவதைப் பார்த்ததும் மீனாவின் கோபம் எல்லை மீறியது. “எப்பம் பாத்தாலும் பொஸ்தகம்… பொஸ்தகம் … பொஸ்தகத்தைக் கட்டி மாரடிக்கிற ஆளு எதுக்கு கல்யாணம் பண்ணனும்?… பொஸ்தகத்துக்குத் தாலி கட்டிக்குடித்தனம் நடத்த வேண்டியதுதான?…”

“எதுக்குச் சத்தம் போடுத? கோயிலு எங்க போயிரப் போவுது?… இன்னொரு நாளு போய்க்கிடலாம்…”
“ஒங்களுக்கெல்லாம் எதுக்குப் பொஞ்சாதி?…”
சோமு அவள் சத்தம் போட்டதைப் பற்றிக் கவலையே படவில்லை. அவன் உலகம் அவனுக்கு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டிருந்த லெனின் புத்தகத்தை எடுத்துக் கொண்டான். மீனாவின் குரல் கேட்டு கூத்தியார் குண்டுப் பிள்ளை அறை வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தார். மகளைப் பார்த்து “என்னம்மா?…” என்று கேட்டார். அவரிடம் எதையும் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்து, “ஒண்ணுமில்லப்பா…” என்றான்.
“இவ  கோயிலுக்குப் போகணும்கா. எனக்குக் கொஞ்சம் வெளியில போக வேண்டியிருக்கு,” என்றான் சோமு. நேற்று இரவு தூங்கப் போகும் போது மைத்துனர் சுப்பிரமணிய பிள்ளை, படுக்கையில் படுத்துக் கொண்டே சோமுவைப் பற்றிக் கவலைப்பட்டது கூத்தியார் குண்டுப் பிள்ளைக்கு ஞாபகம் வந்தது.
“மாப்பிள்ளே… அவ ஆசப்படுதாள்லா… அவளக் கூட்டிக்கிட்டுத்தான் போயிட்டு வாங்களேன். நீங்களும் தான் எப்பவும் ரூமுக்குள்ளயே தான அடஞ்சு கெடக்கீயோ?… செத்த வெளியில போயிட்டு வந்தாதான் என்ன?”
“நாங்க சில ப்ரண்ட்ஸுங்க மீட் பண்ணப் போறோம். அவங்க கிட்டே வாரேன்னு சொல்லிட்டேன் மாமா…”
“மாப்பிள்ளே… நாஞ்சொல்லுதேனேன்னு நெனைக்காதிய. அப்பா கூட ஒங்களப் பத்தி நேத்து ரொம்ப வருத்தப்பட்டாஹ… நீங்க குடியும் குடித்தனமுமா ஆகியாச்சு. நீங்க மீனாவுக்கும், குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகள்ன்னு இருக்கு இல்லியா? அதை விட்டுரலாமா? நீங்க என்ன சின்னப்பிள்ளையா?” என்றார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தான். கூத்தியார் குண்டுப் பிள்ளை விடவில்லை.
“பெரிய மருமகனைப் பாருங்க… அவுஹளும் ஒங்க கூடப் பொறந்த பொறவிதான?… அவுஹ எம்புட்டுப் பொறுப்பா இருக்காஹ… நீங்களும் பொறுப்பா இருந்தாத்தான எங்களுக்குச் சந்தோஷம்?…”
“மாமா எனக்கு வியாபாரத்திலே எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.”
“வேற என்ன செய்யப் போறீயோ?… அதச் சொல்லுங்க…”
அரசியலில்தான் விருப்பமிருக்கிறது என்று சொன்னால் மாமாவால் அதை ஜீரணிக்கவே முடியாது என்பது அவனுக்கு தெரியும். அதானால் பொத்தாம் பொதுவாக, “அதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்…” என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தான்.
“அப்பா… இவங்க கிட்டே எல்லாம் பேசிப் பிரயோஜனம் இல்லப்பா… எனக்கு விதிச்சது அவ்வளவுதான்…” என்றாள் மீனா. கூத்தியார் குண்டுப் பிள்ளை மகளையும், மருமகனையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே இருந்தார். “சாரி மாமா… நான் போயிட்டு வந்திருதேன்… வந்த பெறகு பேசுவோம்…” என்று அவரிடம் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போனான் சோமு.அவன் வெளியே எங்கோ செல்வதைப் பார்த்த சீதா, அடுப்படியிலிருந்தவாறே, “டேய் காப்பி கூடக் குடிக்காமே எங்கேடா போறே?…” என்று கேட்டாள். “போயிட்டு வந்து குடிச்சுக்கிடுதேன் அம்மா…” என்று சொல்லிவிட்டு வெளிவாசல் கதவைத் திறந்து கொண்டு போய்விட்டான்.
பாலகிருஷ்ணனுடைய  வீட்டில் அவரும், துரைப்பாண்டியும், வேறு மூன்று இளைஞர்களும் இருந்தனர். சோமுவும் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும், “சபாபதி வரலையா சோமு?…” என்று துரைப்பாண்டி கேட்டான். பாலகிருஷ்ணன் அவனிடம் பெஞ்சைக் காட்டி உட்காரச் சொன்னார். “சபாபதி கிட்டே போன்லெ பேசினேன். முடிஞ்சா வாரேன்னு சொன்னார்…” என்றான் சோமு. சபாபதிக்காகச் சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று நினைத்து, வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். பாலகிருஷ்ணனுடைய அம்மாவும், வெங்கம்மாவும் வீட்டினுள் இருந்தனர்.
பாலகிருஷ்ணனுடைய  வீட்டுக்கு அடுத்தாற்போலத்தான் கண்ணகி அச்சகம் இருந்தது. பெரும் புலவர் ஆ. செகவீரபாண்டியனார் அதை நடத்தி வந்தார். அதற்கு அடுத்த வீடு பூட்டிக் கிடந்தது. அந்த வீட்டின் வாசலில் யாரோ வழிப்போக்கனைப் போல் பீட்டர் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு சூப்பிரண்டெண்ட் ஆபீஸ் மூலமாக அன்று சாயந்திரம் பாலகிருஷ்ணன் வீட்டில் கூட்டம் நடக்கப் போகிற விஷயம் தெரிந்திருந்தது. ஐந்து மணிக்கே அங்கே வந்துவிட்டான்.
சபாபதிக்காகக் காத்திருந்து பார்த்து விட்டு, அவர் வரவில்லை என்றதும் துரைப்பாண்டி பாலகிருஷ்ணனிடம், “சார்… நீங்களே ஆரம்பியுங்க…” என்றார். பாலகிருஷ்ணன், “நீயே பேசு…” என்றார். சாரு மஜும்தாருடைய அந்த எட்டு ஆவணங்கள் என்ற துண்டுப் பிரசுரங்களின் நகல்களை எல்லோரிடமும் ஏற்கனவே கொடுத்திருந்தான். சமூகம், வர்க்கப் பிரிவுகள், அரசு, சமுதாய அமைப்பு இவற்றைப் பற்றியெல்லாம் பேசினான். நிலப் பிரபுக்கள்தான் நமது முதல் எதிரி என்றான். சீனாவைப் போல் ஆயுதப் புரட்சியின் மூலம்தான் சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று சாரு மஜும்தார் கூறியிருப்பதையும் எடுத்துச் சொன்னான். யாரும் இடைமறித்து எதுவும் கேட்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினான். ஒவ்வொரு வாரமும் கூடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
“அடுத்த கூட்டத்தை நீங்கள் வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள்…” என்று சொன்னார் பாலகிருஷ்ணன். துரைப்பாண்டி அழைத்துவந்திருந்த ஒரு இளைஞன் “என் வீட்டு மாடியில் வைத்துக்கொள்ளலாம்,” என்றான். அவனுடைய வீடு தினமணி டாக்கீஸ் பக்கம் இருந்தது. அந்த முகவரியை, எல்லோரையும் போல, சோமுவும் குறித்துக்கொண்டான். அடுத்தக் கூட்டத்திற்கு இன்னும் சிலரை அழைத்து வருவதாக ஒருவன் சொன்னான்.
துரைப்பாண்டிக்கு பாலகிருஷ்ணன் சார் விட்டேற்றியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் திண்டுக்கல் ரோட்டுக்குப் போய் டீ குடித்தனர். அவர்களுடன் டீ குடிக்க பாலகிருஷ்ணன் செல்லவில்லை. டீக்கடையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து ஒன்றிரண்டு பேரின் பெயர்களை அங்கே வந்து நின்ற பீட்டருக்குத் தெரிந்தது. அவர்கள் கலைந்து போனபிறகு பீட்டர் திலகர் திடலுக்குப் போனான். அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம். அதில் கோபால் பிள்ளையும் பேசினார். டெல்லி மத்திய கமிட்டியிலிருந்து வந்திருந்த பண்டாவும் பேசினார். அவருடைய ஆங்கிலப் பேச்சை செவ்வானம் ஆசிரியர் பரமேஸ்வரன் மொழி பெயர்த்தார்.
கோபால் பிள்ளையை அவருடைய இளைய மகன் பிச்சையாதான் ரிக்க்ஷாவில் வைத்து திலகர் திடலுக்கு அழைத்து வந்தான். மாநிலத்தில் ஆளும்கட்சியான தி.மு.க.வுடன் அவருடைய கட்சிக்குக் கூட்டணி இருந்தது. அதனால் மாநில அரசை அவர் அவ்வளவாக விமர்சிக்கவில்லை. மேடைக்கு முன்னால் இருபது முப்பது பேர் இருந்தாலே அதிகம் தான். அவ்வளவுதான் கூட்டம். எல்லா ஊர்களையும் போல மதுரையும் தன்போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது.
பாலகிருஷ்ணன் வீட்டு ஸ்டடி சரக்கிளில் கலந்து கொண்டது சோமுவுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் தந்தது. துரைபாண்டி தந்திருந்த அந்த ஸைக்ளோ ஸ்டைல் பிரதிகளுடன் வீட்டுக்கு வரும்போது மணி ஏழரைக்கு மேலாகியிருந்தது. அவனுடைய மனம் நிறைந்திருந்தது. மீனாவைக் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். அவளைத் தேடினான். ராஜி பட்டாசலில் விளக்கு மாடத்தின் முன்னால் உட்கார்ந்து தேவாரம் படித்துக் கொண்டிருந்ததாள். அவளிடம், “மதினி, மீனாவ எங்க?” என்று கேட்டான். “அவளும் சித்தப்பாவும் அப்பமே கோயிலுக்குப் போயிட்டாங்களே…” என்றாள். “அம்மா இல்லியா?” அத்தை காய்கறி வாங்கப் போயிருக்காங்க” என்றாள். பிறகு அவனிடம் “உங்களுக்கு ஏதாவது வேணுமா?…” என்று கேட்டாள். “இல்ல மதினி… ஒண்ணும் வேண்டாம்…” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான். சட்டையைக் கழற்றி ஸ்டாண்டில் போட்டான். ஃபேனைப் போட்டுவிட்டு கட்டிலில் உட்கார்ந்தான். மீனாவை வெளியே கூட்டிக்கொண்டு போகாதது அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அவளை நிராதரவாக விட்டுவிட்டது போலிருந்தது. குற்ற உணர்வு அவனைப் பீடித்தது.
அவளுடன் கோயிலுக்குப் போயிருக்கலாமோ? கோயிலுக்குப் போயிருந்தால், ஸ்டடி சர்க்கிள் கூட்டத்துக்குப் போகமுடியாது. அரசு, வர்க்கம், ஆயுதப்புரட்சி இதைப்பற்றியெல்லாம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க முடியாது. என்னதான் தத்துவ நூல்களைப் படித்திருந்தாலும், அந்த எய்ட் டாக்குமெண்ட்ஸைப் பற்றித் துரைபாண்டி விவரித்தது ஒரு தெளிவை ஏற்படுத்தியிருந்தது. கோயிலுக்குப் போயிருந்தால் இது நடந்திருக்குமா? என்றாலும், மீனா பாவம். அவள்தானே நம்மைக் கவனித்துக் கொள்கிறாள்? நம்மை விட வேறு யார் அவளுக்கு நெருக்கம், அந்நியோன்யம்? அவளைப் பரிதவிக்க விட்டுவிட்டோமே. தன் மீதே அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
கோபால் பிள்ளை கூட்டம் முடியும் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதே இல்லை. அவர் பேசி முடித்ததுமே கிளம்பியிருக்கலாம். அவர் ரொம்ப நாளைக்குப் பிறகு பேசிய கூட்டம். அதனால் அவருக்குக் கூட்டம் முடியும் வரை இருந்துவிட்டுப் போகத் தோன்றியது. அவருக்காக பிச்சையாவும் மேடைக்குப் பின்னால் காத்திருந்தான். கோபால் பிள்ளை அதே மேடையில் பல முறை பேசியிருக்கிறார். கட்சி பிரியாத காலத்தில் திலகர் திடலில் கூட்டம் போட்டால் ஏராளமான கூட்டம் வரும். அவருக்குப் பழைய ஞாபகமெல்லாம் வந்தது. இப்போது மதுரை பஞ்சாலைத் தொழிற்சங்கத் தலைவராக இருக்கும் மாரியப்பன் பேசிக்கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று வீசியது.
ஒன்பதரை மணிக்குப் பரமேஸ்வரி தியேட்டரில் ஷோ முடிந்து போகிறவர்கள் சிலர், வேடிக்கை பார்க்கிற மாதிரி வந்து நின்று விட்டுப் போனார்கள். பக்கத்தில்தான் ஹார்வி மில். அந்த மில் தொழிலாளர்கள் கூட அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. இத்தனைக்கும் ஹார்வி மில்லில் கம்யூனிஸ்ட் கட்சியுடைய சங்கம்தான் பெரிய சங்கம். வரவர ஜனங்களுக்கு அரசியலில் அக்கறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்தார் கோபால் பிள்ளை. வெறுமனே அரசியலை மட்டும் விஷயத்தோடு பேசுவதைக் கேட்க ஜனங்கள் தயாராக இல்லை. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு கச்சேரி வைக்க வேண்டும். கட்சிப் பிரச்சாரத்தையே சினிமா பாடல் மெட்டுக்களில் பாடினால்தான் கூட்டம் சேருகிறது. கூட்டத்தில் பேசுகிறவர்களும் நகைச்சுவையாகப் பேச வேண்டும் என்றது ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் பேசிய அரசியல் மேடை இப்போது இல்லை. கேளிக்கையோடு கலந்து அரசியல் பேச வேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தி.மு.க.விலும், காங்கிரஸிலும் இதற்கெல்லாம் பாடகர்களும், பேச்சாளர்களும் இருக்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் கட்சியில் கூட இருக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்சியில்தான் இல்லை. ஜனங்களுடைய விருப்பத்துக்கு மாறாக என்ன செய்ய முடியும்? மேடைப் பிரசாரம் எப்படியோ இப்படி மாறிவிட்டது. அவரும் பிச்சையாவும். வீடு வந்து சேரும்போது பத்து மணியாகிவிட்டது. ரிக்க்ஷாவில் வரும்போது பிச்சையா, “அப்பா!… இனிமே பொதுக் கூட்டமெல்லாம் உங்களுக்குச் சரிப்பட்டு வராதுப்பா…” என்றான். அவருக்கும் அது சரி என்றுதான் பட்டது.
மூத்த மகன் ராமசாமி வீட்டு வாசலில்தான் உட்கார்ந்திருந்தார். ரிக்க்ஷா வந்து நின்றதும் அருகே போய் நின்றார். பிச்சையா ரிக்க்ஷாகாரருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, கோபால் பிள்ளையை கீழே இறக்குவதற்காக அவர் கையை பிடித்தான். இன்னொரு கையை ராமசாமி பிடித்துக் கொண்டான். “நீ இன்னும் படுக்கலியா?…” என்று ராமசாமியிடம் கேட்டார். ” நீங்க வரட்டுமேன்னுதான் உக்காந்திருந்தேன்…” என்றார் ராமசாமி.
“வயசு காலத்துல எதுக்குப்பா இப்படிக் கஷ்டப்படுதீங்க?…” என்றார் ராமசாமி.
“பிச்சையாவும் இதத்தான் சொல்லுதான். கூட்டத்துக்கு ஒத்துக்கிட்டாச்சு. அதான் போனேன். இதுதான் கடைசி. இனிமே முடியாதுன்னு சொல்லிர வேண்டியது தான்…” என்றார் கோபால் பிள்ளை. ராமசாமியும், பிச்சையாவும் அவரை மெதுவாக மாடிப் படியேற்றிக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

 ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.