டோக்கியோவின் இளையநிலா…

இருபதாண்டுகளுக்கு முந்தைய சென்னையின் புழுக்கம் மிகுந்த நள்ளிரவு ஒன்றில் ஒரு ரூபாய் டெலிபோன் பூத்துகளின் வழியே கணக்கற்ற விடைபெறுதல்கள் சொல்லி நெடுந்தூர விமான பயணக் களைப்புடன் “நாரிடா”வில் இறங்கிய போது மற்றுமொரு முறை என் “ஹேண்ட் லக்கேஜ்”  அடியில் தடவிப் பார்த்துக் கொண்டேன். பணமோ நகை நட்டோ அல்ல. எப்போதும் என்னுடன் பயணிக்கும் மனதுக்கு நெருக்கமான புத்தகங்களும் சில கேசட்டுகளும் நலமாக பயணம் செய்தனவா என்ற விசாரிப்பே அது…
அலுவல் சார்ந்த பயணமெனினும் எனக்கு ஜப்பானில் இரண்டு “பெரும் குறிக்கோள்கள்” இருந்தன.கோலார் சென்று தங்கம் பெற்று வருவது போல் ஜப்பானிலிருந்து ஒரு canon கேமராவும் sony வாக் மேனும் வாங்கி வரவேண்டும் என்பவையே அது. இசை சார்ந்த டேப் ரிக்கார்டர், ஸ்பீக்கர், கேசட் வகையறாக்கள் வாங்கும் பொழுது அதை தேர்வு செய்ய உறுதுணையாக என்னிடம் ஒரு கேசட் உண்டு. அதில் “stereo” தேர்வுக்கு ஒரு ஓடை நதியாகிக் கொண்டிருக்கையில் தலை குனியும் தாமரையும், “bass” பரீட்சைக்கு ஜெயச்சந்திரனின் “தேவன் தந்த வீணை”யும், “base” பரீட்சைக்கு எங்கெங்கோ செல்லும் பட்டாகத்தி பைரவனும், எத்தனை அலற விட்டாலும் தெளிவுள்ள ஸ்பீக்கருக்கு “ஒரு ராகம் தராத வீணை”யுமாய் குறிப்பிட்ட பாடல்களை சேகரித்து வைத்திருந்தேன் நான். “TDK”வே நன்றென ஊர் அன்றிருந்தாலும், அதன் கருப்பு சிவப்பு கோடுகள் மட்டுமே கொண்ட வெள்ளை அட்டை உணர்வற்றிருப்பது போல எண்ணியதால் “SONY” மீது எனக்கு நாட்டம் அதிகம். கருமேகங்கள் சூழ்ந்த மின்னல் வெட்டுகள் போல் தோன்றும் கோனி கேசட் அட்டைகள் இசை மழைக்கான முகாந்திரம் கொண்டது என்பது என் மன‌ ஓட்டம். vஇரண்டு தலைமுறை தமிழ் இனத்தை பல வருடங்கள் இன்பத்தில் தோய்த்தெடுத்த இளையநிலா, காரணங்களுக்கான தேவைகளின்றி நான் வைத்திருந்த பல்வேறு கேசட்டுகளில் பொழிந்தபடி இருக்கும். அச்சிறு வயதில் டேப் அறுந்து விட்டால் பிறகு அப்பாடலை கேட்கவே இயலாதோ என்ற பயமும் எனக்கிருந்தது பல “காப்பிகள்” வைத்திருந்ததன் காரணமாக இருக்கலாம்!
பத்துக்குப் பத்து அளவெனினும் பரமவசதிகளுடன் இருந்தது டோக்கியோவின் மையப்பகுதியில் எனக்களிக்கப்பட்டிருந்த விடுதி அறை. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிதென்பதன் உதாரணமாய், அங்கிருந்த அனைத்து உபகரணங்களுமே வடிவில் சிறியதாகவும் செயலில் அபாரமானதாகவும் இருந்தன…இருப்பினும், யானையின்றி அங்குசத்துடன் திரியும் பாகன் போல், தலையணைக்கு அருகில் வெறும் கேசட்டுகளுடன் நகர்ந்தன ஜப்பானிய இரவுகள்.
ஒரு வேலைப்பளு குறைந்த ஞாயிறு மாலை “அகியாபாரா” என்னும் பகுதிக்கு அலுவலக இந்தியர்கள் அனைவரும் பயணப்பட்டோம். உலகின் முண்ணனி மின்னணு பொருட்களின் சந்தையென புகழ் பெற்றது அகியாபாரா. சென்னை உஸ்மான் சாலைகளின் இருமருங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமே விற்கும் கடைகள் இருந்தால் எப்படியிருக்குமோ…மதுரை நேதாஜி ரோடின் இருமருங்கிலும் அத்தகைய கடைகள் மட்டுமே இருந்தால் எப்படியிருக்குமோ…(அத்துடன் சுத்தமும் சுகாதாரமும் சேர்த்து!) அப்படி இருந்தன அகியாபாரா தெருக்கள். அகியாபாரா ரயில் நிலையத்தையும் இந்தக் கடைகளும் இணைக்கும் வகையில் ஒரு திறந்த வெளி பூங்கா…அங்கு சிலர் வாத்தியங்கள் வாசித்தபடி வாழ்க்கையின் அன்றைய பொழுதை கலையுடன் கலக்கவிட்டிருந்தனர்… நியான் விளக்குகளில் ஒளிரும் டிஜிட்டல் பேனர்கள் தெருவெங்கும் ஜொலிக்க, பல தளங்கள் கொண்ட அங்காடி ஒன்றில் நுழைந்தோம். தரை தளத்தில் ஜப்பானின் பாரம்பரிய இசை கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. மேற்கத்திய தாக்கத்தில் முழுவதும் மூழ்கிய முதல் தலைமுறையை ஜப்பான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தது. இருப்பினும் தரை தளம் முழுவதுமே “உள்ளூர்” சமாச்சாரங்கள் மட்டுமே பார்வைக்கு கிடைத்தன. முதல் தளத்தில் பிற இசை கருவிகளும், இரண்டாம் தளத்தில் கேமிராக்கள், டேப் ரிக்கார்டர்கள் இத்யாதி பொருட்களும் இருந்தன. “வாக் மேன்” என்பது அங்கு கிடைக்கும் யானைகளின் மேல் அமரும் கொசுவுக்கு சமம் என்பதை உணர்ந்தேன் நான். இருப்பினும் கொசுக்களுக்கும் ஒர் பிரிவு இருந்தது.
அரைமணி நேர அலசலுக்குப் பின் தேர்ந்தெடுத்த வாக் மேன் என் தேர்வுக்கு தயாரானது. நம்மூர் என்றால் சட்டென்று “பரீட்சை” கேஸட்டை கொடுத்து, போட்டுக் காட்டுங்கள் என்று சொல்லலாம்…இங்கு எப்படி என்று தெரியாததால் தயங்கியபடி கேஸட்டை நீட்டினேன். ஜப்பானியர்கள், பாடல்களின் தொகையறா போல் தாங்கள் பேசும் ஒவ்வொரு வாக்கியத்தின் முன்பும்  இடையிலும் “ம்ம்ம்ம்…” “அ..அ…” போன்ற ஓரெழுத்துக்களை ஒருவித நீட்டல் லயத்துடன் பேசும் பழக்கம் கொண்டவர்கள். என்னிடம் பேசிய பெண் சிப்பந்தியும் அவ்வாறே எனக்கு சற்றும் புரியா வண்ணம் ஏதோ சொல்லி விட்டு நகர்ந்தார். அவர் கூறியதில் “சான்” என்ற ஒரே சொல் எனக்கு சற்று நம்பிக்கையளித்தது. நான் அறிந்திருந்த ஒரே ஜப்பானியச் சொல்லும் அஃதே. “ஸான்” என்பது நம்மூர் “சார் / மிஸ்டர்”ஐ ஒத்தது. எனவே, ஏதும் மரியாதை குறைவு ஏற்படவில்லை என்ற தெம்பு வந்தது. சில நிமிடங்களில் திரும்பி வந்த அப்பெண், ஏற்ற இறக்கங்களுடன் எதையோ சொல்லி வணங்கி அந்த கேசட்டை வாங்கி வாக் மேனை ஆம்பிளிஃபையருடன் இணைத்து இயக்கினார். நமக்கு அயற்சி ஊட்டும் அளவு எதற்கெடுத்தாலும் வளைந்து வணங்கும் வழக்கம் அவர்களுக்கு…
சில நிமிடங்கள் சில பாடல்களை ஓட விட்டு திருப்தி அடைந்து “ஃபார்வோர்டு” பட்டன் பரிசோதித்து இளையநிலாவில் இறங்கினேன் நான். வடித்து முடிக்கப்பட்ட சிலையின் கண் திறப்பு கனம் போல ஒரு ஒளிர்வு அப்பெண்ணின் முகத்தில் படர்ந்ததை கவனிக்க முடிந்தது. “பில்லிங்” வரை உடன் வந்த அவர், மிகத் தயங்கி என் கேசட்டை காட்டி ஏதோ சொன்னார். அங்கிருந்த மேனேஜர் மிகுந்த பிரயத்தனப்பட்டு “ஒன் அவர் கேஸட் ஷீ ஆஸ்கிங் பிளீஸ்” என்றார். என் தலையைத் தர யோசிக்கும் நேரத்தை விட அக்காஸட்டை எவருக்கும் கொடுக்க அதிக நேரம் யோசிக்கும் பருவத்தில் நான் அப்போதிருந்தேன். “அகியாபாரா யூ சீ கம் டேக் கேஸட் ப்ளீஸ்” என்றார் அப்பெண். என்னுடன் வந்த நண்பர்கள், “டேய் நம்மூரெல்லாம் விட்டுட்டு இங்கே வந்து “விழுந்து”றாதடா…என்று கேலியில் இறங்கினர். அப்பெண்ணும் மானேஜரும் தலைகீழாய் நின்று கொத்து பரோட்டாவிலிருந்து ஒவ்வொரு பீஸையும் தனித்தனியே உருவுவது போல் உருவாக்கிய ஆங்கில வாக்கியங்களின் வழியே நாங்கள் புரிந்து கொண்டதாவது:
இளையநிலாவில் வரும் கிடார் அப்பெண்ணை மயங்கடித்துள்ளது. அதிலும் முடியும் தறுவாயில் தனித்தொலிக்கும் கிடார் இசையை எவ்வாறு உருவாக்க இயன்றது என்ற வியப்பில் இருக்கிறார் அவர். சுமார் இரண்டு மணி நேரம் அகியாபாரா முழுக்க அலைந்த பின் மீண்டும் அக்கடைக்கு சென்ற எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள் வரிசையாய் காத்திருந்தன.
கடைக்குள் சென்றவுடன், ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புடனும், அது ஒரு பெருமலர் மேல் அமரும் நளினத்துடனும் என்னருகில் வந்த அவர், ஒரு தாளினை நீட்டினார். அது ஒரு “நோட்ஸ்” பேப்பர். இடைப்பட்ட நேரத்தில், சில முறை மட்டுமே அப்பாடலை பிரதியெடுத்துக் கேட்டு, அதில் வரும் லீட் கிடாரின் நோட்டுக்களையும் எழுத முடிந்திருக்கிறது அவரால். அவர் எங்களை பாரம்பரிய கருவிகள் பிரிவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு விதவிதமான ஜப்பானிய நரம்பு வாத்தியங்கள் நிறைந்திருந்தன. அதில் ஒன்று, ஆறு வீணைகளை வரிசைக்கு இரண்டாக மூன்று வரிசையில் வைத்தால் வரும் நீள அகலத்தில் பெரியதாய் இருந்தது. “கோடோ” என்னும் ஜப்பானிய தேசிய வாத்தியம்.
கோடோவின் மூலம் சீனாவில் இருந்து 6ஆம் நூற்றாண்டில் ஜப்பானுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு நம் பன்னிரு நரம்பு யாழ் நினைவுக்கு வந்தது. கோடோ பதிமூன்று நரம்புகளில் துவங்கி இருபதுக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்டவையாகக் கூட உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். நம்மிடம்  19 நரம்புகள் கொண்ட மகர யாழும் 21 நரம்புகள் கொண்ட பேரியாழும் இருந்திருக்கின்றன என்று பழந்தமிழ் நூல்கள் பகர்கின்றன. கோட்டோவின் நரம்புகள் மேம்பாலம் போன்ற‌ வளைவு வடிவம் கொண்டுள்ளன. நம் யாழ்களும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனவே தான், சிலப்பதிகார காலத்தில் “செங்கோட்டு யாழ்” என்ற சொல் தோன்றியிருக்கக் கூடும். செங்கோட்டு யாழில் நரம்புகள் நேராக கட்டப்பட்டிருந்ததாக அறிகிறோம். அதன்பின் நரம்புகள் நேர்கோட்டிலேயே வருமாறு கால மாற்றம் பெற்று விட்டன போலும்.
நான் “பெரும்பாண்” பெண்ணை பார்த்ததில்லை. பார்ப்பதற்கு சங்க காலத்திற்கல்லவா செல்ல வேண்டும். ஆனால், அந்த அகியாபாரா அங்காடியில் வெறும் கடை ஊழியர் என்று நாங்கள் மதிப்பிட்டிருந்த அந்த ஜப்பானியப் பெண், பெரும்பாண் உருமாற்றம் பெற்று கோடோவை வாசிக்கத் துவங்கினார்…ஒரிடத்தில் அமர்ந்து வாசிக்ககூடியதல்ல கோடோ. அதன் அகலம் காரணமாக, சில நரம்புகளை தொட நிற்க வேண்டும், சில நரம்புகளை தொட பாதி வளைய வேண்டும். அந்த நகர்வுகள் கூட அது தரும் இசையுடன் இயைந்திருப்பது போலவே பார்ப்பதற்கு தோன்றும்…இளையநிலாவின் கிடாரையே இரு தளங்களாக பிரித்து அவர் வாசிக்கத் துவங்கியவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான். முன் தளம் கிடார் போன்றே ஒலிக்க, பின் தளம் வீணை போல் ஒலித்தது. அதன் உச்சக் கட்டமாக, பாடல் முடிவில் வரும் கிடாரில் வரும் மூவ்மெண்ட்டுகளின் பின் ஒலிக்கும் ஸ்டுரோக்குகளை அவர் இயல்பாக பின் தளத்தில் நிறுத்தி வீணை ஒலியுடன் அதை வாசித்தபோது உண்மையிலேயெ அங்கு இளைய நிலா சிலிர்ப்பை பொழிந்தது. அதற்குள் கடையின் பல பகுதிகளில் இருந்து வந்து குழுமியவர்கள் கரகோஷம் செய்தனர்.
அங்கிருந்த எவருக்குமே “இளையராஜா” என்ற பெயரை உச்சரிக்க இயலவில்லை. “ளை”யையும் “ஜா”வையும் ஜப்பானிய நாக்குகள் தீண்டியதே இல்லை. அங்கிருந்த ஒருவர், எங்களில் ஒருவர் தான் இளையராஜா என்று எண்ணிக் கொண்டார். படாத பாடுபட்டு விளக்கிய பின், அப்பெண், “இருந்தாலும், நீங்களும், இப்பாடல் கொடுத்தவரின் மண்ணிலிருந்து தான் வருகிறீர்கள்…” என்று எங்களையும்(?) பாராட்டியபோது அவர்களின் பண்பை நினைத்து நெகிழ்ந்து போனோம்…
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த சற்றே ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் அப்பெண்ணிடம், “உங்களுக்கு இது எப்படி சில மணி நேரங்களில் சாத்தியம் ஆனது” என்று அவரிடம் கேட்டேன். இடுங்கிய கண்களுக்கிடையே தெரியும் புன்னகையுடன் அவர் சொன்னதில் நான் புரிந்து கொண்டது, உலகத்து மூலைகளையெல்லாம் உணர்வால் இணைக்கும் இயல்பு இசைக்கே உரியது என்பதே.
கலை இலக்கிய ஆர்வம் கொண்ட ஜப்பானியர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர் மாட்சுவோ. இவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹைக்கு கவிஞர். சாமுராயான இவர், “உள்ளிருக்கும் குறுகிய பாதை”களை தேடி, பிக்குவாக தன்னை மாற்றிக் கொண்டு நாடோடியாக பயணம் செய்து அப்பயணங்களின் வாயிலாக உட்பெற்ற உணர்வுகளை ஹைக்கூவாக மாற்றியவர். இவரின்

” அசைவற்ற தனிமை
ஒற்றை பறவையின் ஒலி
மெல்ல இறங்குகிறது கல்லுக்குள்…”
” வருடம் தோறும்
குரங்கின் முகமூடி
வெளிப்படுகிறது குரங்கு”

போன்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
நம் அக்கியபாரா கலைமகள், மாட்சுவோவின் தீவிர வாசிப்பாளினி. மாட்சுவோவின் பல கவிதைகள் சென்ற நூற்றாண்டில் கோடோவில் இசைக்கோர்வையாய் முயலப்பட்டிருக்கின்றன. தனது கோடோ பயிற்சியின் வழியே மாட்சுவோவின் கவிதைகளை அடைந்திருக்கிறார் அப்பெண். அதிலிருந்து இசையின் அனுபவ உணர்வை, கவிதை வரிகளுக்கு பொருத்திப் பார்ப்பது அவரின் பழக்கமாய் இருந்திருக்கிறது. வடுகப்பட்டியில் முகிலினங்கள் அலைவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் டோக்கியோவிலும் அவை அலைந்து மாட்சுவோவின் பார்வையில் பட்டிருக்கின்றன. அதுவே அவரின் “நான் அலைந்தேன்…காற்றில் முகில் போல…” என்னும் புகழ் பெற்ற கவிதையாய் மாறியது. அந்த “காற்றில் முகில் போல”வை பற்றியபடி இவர் இளையநிலாவின் கிடாரில் பயணித்திருக்கிறார். உலகத்தின் மானுட மனம் அனைத்தையுமே இளைய நிலா ஏதோ ஒரு வகையில் “மேகத்தில்” மிதக்க வைக்கும் போலும்!
கலைமகள் எப்போதும் தமிழகத்தில் தாமரை மீதமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவள் அகியாபாராவில் அமர்ந்து கோடோவும் வாசிப்பாள் என்பதை புரிய வைத்தது போல் புன்னகைத்து வந்தனம் கூறி அகன்றாள் அந்த ஓமோய்கானே*.  அவர் ஒரு தேர்ந்த கோடோ கலைஞர் என்பதையும், ஆர்வம் காரணமாக அந்தக் கடையில் பகுதி நேரம் பணியாற்றுகிறார் என்பதையும் நாங்கள் அறிந்த போது நம்புவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது.
பெரிய இசை ரசிகர்கள் என்ற நினைப்பில் அந்த கடைக்குள் மாலையில் நுழைந்த நாங்கள், அரிச்சுவடி கூட அறியா சிறுவர்கள் என்ற புரிதலுடன் “களஞ்சியம் எரிந்ததால் வந்த வெளிச்சத்தில் மேலும் ஒளிரும் நிலவில்”** வசிப்பிடம் திரும்பினோம்.
அடுத்த ஞாயிறு காலை. அதுவரை புத்தக அட்டைகளில் மட்டுமே பார்த்திருந்த புல்லட் ரயிலில் அமர்ந்திருந்தேன் நான். நிற்கிறதா ஓடுகிறதா என்ற வித்தியாசம் காட்டாமல், சூடுபடும் வெண்ணையின் உருகுதலின் அசைவு போல சத்தமின்றி நகரத் துவங்கியது ரயில். என் புதிய வாக்மேனில் இளையநிலாவை மிளிர விட்டு டோக்கியோ தாண்டிய வயல்வெளிகளை பார்வையில் வாங்கத் துவங்கியிருந்தேன். வாக்மேனில் கிடாருக்குப் பதில் கோடோ ஒலிப்பது போல இருந்தது…
குறிப்பு:
* ஜாப்பானின் அறிவுக் கடவுள்
** மாட்சுவோவின் மற்றுமொரு கவிதை வரி

One Reply to “டோக்கியோவின் இளையநிலா…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.