ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் நரசிம்மன். வானம் கவிந்திருந்தது. மழை எப்போது வேண்டுமானாலும் வரக் கூடுமென்பது போலிருந்தது. உண்மையில் அவர் மட்டும் தான் இன்னமும் அந்த நிறுத்தத்தை ஆசர்கானா என்று சொல்லிக் கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது.
இப்போதெல்லாம் அந்த நிறுத்தத்தை எல்லாரும் ஆலந்தூர் மெட் ரோ என்றே அழைக்கத் துவங்கி விட்டார்கள். அது போல் அவர் முன்பு யாரேனும் அழைத்தால் அவருக்குக் கோபம் வரும். “ஊரின் எல்லா அடையாளங்களையும் தடம் தெரியாமல் அழித்து மொத்த ஊரையும் வேறாக்கப் பார்க்கிறார்கள் என்று மனசுக்குள் கறுவிக் கொள்வார்.
மழைப் புழுக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பேருந்தை இன்னமும் காணவில்லை. கால்சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்துப் பின் கழுத்தின் கசகசப்பை ஒற்றியெடுத்துக் கொண்டே மேலே நிமிர்ந்து பார்த்தார். மெட்ரோ வைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மிகப் பெரிய மலைப் பாம்பொன்று ஊரைச் சுருட்டி விழுங்கக் காத்திருப்பது போல் தோன்றும்.
அதனாலேயே மெட் ரோ வந்த புதிதில் ஊரில் எல்லாரும் சுற்றுலா கணக்காய் அதில் போய் வந்து கொண்டிருக்க, நரசிம்மன் மட்டும் அவர் மனைவி எவ்வளவோ கேட்டும் மறுத்து விட்டார்.
பேருந்து வந்து விட்டது.
சற்றே காலியாக இருக்கவும் ஏறிக் கொண்டார்.
“கொஞ்சம் முன்னாடி போயேன். அவ்ள எடமிருக்குல்ல?”
அந்த இளைஞன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நகர்ந்து போனான். இதையே மென்மையாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால் ஏனோ அது மட்டும் நரசிம்மனுக்கு வருவதேயில்லை. மட்டுமல்லாமல் சட்டென்று உரையாடலைத் துவக்கும் போதே ஒருமையில் தான் ஆரம்பித்துப் பழக்கமாகி விட்டிருக்கிறது.இப்போதெல்லாம் முன் போல் கோபப் படக் கூட முடிவதில்லை. உடல் அயர்ந்து விடுகிறது.
தினமும் பேருந்தில் ஏறும் போதெல்லாம் அவருக்குத் தொலைக்காட்சிகளில் வரும் குளிர்பான விளம்பரங்களில் சூரியன் சிறுவர்களின் மண்டையில் குழல் போட்டுத் தெம்பை உறிஞ்சும் காட்சி ஞாபகம் வரும்.
இந்த தினப்படி வாழ்க்கை அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் என்னவென்று தெரியாத ஏதோ ஒன்றை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அது எப்போது வேண்டுமானாலும் தீர்ந்து போகக் கூடும் என்பதும் அவர் பின் மனசில் ஓடிக் கொண்டே இருந்தது.
யோசனையில் ஆழ்ந்திருந்தவரை பேருந்தின் குலுக்கல் நிகழுக்குக் கொண்டு வந்தது.இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டிருந்தது. இன்றைக்கு அங்கே போ இங்கே போ என்று அலைக்கழிப்புகள் இருக்கக் கூடாதென்று வேண்டிக் கொண்டே இறங்கி நடந்தார்.
கடைக்குள் நுழையும் போதே, செல்வேந்திரன் அழைத்து விட்டான். அவர் வேண்டுதல் பலிக்கப் போவதில்லை என்று தெரிந்து விட்டது. வட்டிக் கடை என்று பெயர். இந்தச் சின்னக் கடையை முகமாய் வைத்துக் கொண்டு பின்னால் ஏதோ பெரிய தொழில் செய்கிறான் என்று செல்வேந்திரன் மீது நரசிம்மனுக்கு ரொம்ப நாளாகவே சந்தேகமுண்டு. அவ்வப்போது ஏதேனும் கவர்களைக் கொடுத்து அதை யாரிடமாவது கொண்டு தந்து விட்டு வரச் சொல்லி முகவரி தந்து அனுப்புவான்.
பேருந்தில் தான் அனுப்புவான். அடுத்த வேளை சோற்றுக்கான எதிர்பார்ப்பு அவரது எல்லா எதிர்ப்புணர்வையும் மங்கச் செய்திருந்ததில் செல்வேந்திரன் சொல்வதை மறு பேச்சுப் பேசாமல் செய்யக் கற்றுக் கொண்டிருந்தார்.
“ வாங்க. வந்தீங்களா. அண்ணே. இந்தக் கவரை கொண்டு போய் வடபழனி சிம்ரன் ஆப்பக் கடைல கஜமணின்னு ஒருத்தர் வெயிட் பண்ணுவாப்ல. அவராண்ட குடுத்துட்டு வந்துருங்க. வெள்ள சட்ட வெள்ள வேட்டில இருப்பாப்ல. உங்க அடையாளம் அவருக்குத் தெரியும். சொல்லிருக்கேன்” என்றான்.
மௌனமாய்த் தலையசைத்து விட்டுக் கவரை வாங்கிக் கொண்டு கிளம்பியவரை நிறுத்தியது “ அண்ணே” என்று மீண்டும் செல்வேந்திரன் அழைத்த அதிகாரக் குரல். அண்ணே என்கிற அவன் விளிப்புக்கும் அவன் குரலில் உள்ள தொனிக்கும் சற்றும் பொருந்திப் போவதில்லை. இதற்குப் பேசாமல் அவன் நரசிம்மா என்றே அழைக்கலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் பார்த்தார். “ வழக்கம் போல எதுனா சினிமா போஸ்டரயோ கட்டவுட்டையோ பராக்கு பாத்துக்கினு வேலைய கோட்டை விட்டுறாதீங்க. சீக்கிரம் முடிச்சிட்டு வந்து சேருங்க. கடைல நெறைய வேலை கிடக்கு. நான் வேற வெளிய போவணும்” என்றான்.
சுருக்கென்றது. இது வரை இரண்டு முறை இவர் அது மாதிரி கட்டவுட்டைப் பார்த்துக் கொண்டு நிற்பதை செல்வேந்திரன் பார்த்திருக்கிறான்.அதனால் பேசுகிறான். ஆனாலும் உறுத்துகிறது.
மௌனமாகவே தலையை ஆட்டி விட்டுக் கிளம்பினார். அவன் சொன்னதில் ஏதும் தப்பில்லை. ஆனாலும் உறுத்தியது..
அந்த இரண்டு முறைகளும் அதுவே தான் நிகழ்ந்தது. முதல் முறை அவர் நடந்து கொண்டிருந்த போது கையில் ஒரு கேனுடன் இவரை இடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஒரு சின்னப் பையன் ஓடினான். கோபத்தோடு அவனைத் திட்ட வாயெடுத்தவர் அப்போது தான் கவனித்தார். சற்றுத் தள்ளியிருந்த திரையரங்கை நோக்கித் தான் ஓடினான் அவன்.
அதற்குள் அவரும் அந்த இடத்தை அடைந்து விட்டிருந்தார். இவரை இடித்துக் கொண்டு சென்றவன் அந்தக் கட்டவுட்டின் கீழிருந்தவனிடம் அந்தக் கேனைக் கொடுக்க அது மேல் நோக்கி ஒவ்வொருத்தன் கையாய் மாறி உச்சியில் அமர்ந்திருந்தவன் கைக்குச் சென்றது. கட்டவுட்டுக்குப் பாலாபிஷேகம் திரும்ப நடந்து கொண்டிருந்தது. நெற்றிக்குக் கை வைத்து அபார உயரத்திலிருந்த அந்தக் கட்டவுட்டைப் பார்த்துக் கொண்டே நின்றார். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.
தலை லேசாகக் கிறுகிறுக்கவே தலையை இறக்கினார். சாலை முழுதும் போக்குவரத்து நெரிசல் அடைத்திருந்தது. அப்போது தான் தன்னை யாரோ அழைப்பதை உணர்ந்தார். தீனமாய்க் குரல் கேட்டது.கூட்டத்தில் சட்டென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஓரிரு முறைகள் சுற்றிலும் பார்த்த பின் தான் நெரிசலிலிருந்து ஒதுங்கி தன் பழைய பைக்குடன் சாலையோரமாய் செல்வேந்திரன் நின்றிருந்தான்.
சட்டென்று அவனை நோக்கி விரைந்தார்.” இங்க என்னா பண்றீங்க?” என்றபடியே அவரை ஏற இறங்கப் பார்த்தான். பின் கட்டவுட்டைப் பார்த்தான். “ இல்ல அது…. வந்து….” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினார். அவன் கண்களில் அப்பட்டமாய் நம்பிக்கையின்மை தெரிந்தது. “சரி சரி சீக்கிரம் போய் கவரக் குடுத்துட்டு வர வழியப் பாருங்க” என்றபடி வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.
இரண்டாம் முறையும் சம்பவங்களில் மாற்றம் பெரிதாயில்லை. தியேட்டர் மட்டும் மாறியிருந்தது. அதற்குப் பிறகும் செல்வேந்திரன் தன்னை வேலையில் வைத்திருப்பதற்காகவே நன்றி காட்டிக் கொண்டிருந்தார். தலையை உலுக்கி நிகழுக்கு வந்தவர் கையில் கவரிருக்கிறதா என்று பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார். பேருந்திலிருந்து இறங்கவும் அவருடைய திரேதாயுகத்து செல்போன் அடிக்கவும் சரியாயிருந்தது.
அதற்குக் கூட ஏனோ முணுக்கென்று எரிச்சல் வந்தது. எடுத்துப் பார்த்தார். டிஸ்ப்ளே உடைந்து விட்டிருந்ததால் யாரென்று தெரியவில்லை. “ எழவெடுத்த போனு. எவன் கூப்புடறான்னே தெரிய மாட்டங்குது” என்றபடி எடுத்து காதுக்குக் கொடுத்தார். கரகரப்பாக எதிர்ப்புறம் குரல் கேட்டது. விட்டு விட்டுத் தெளிவில்லாமல். “சா… சார்…. மணவாளன் சார் த்..தானே?”
அந்தப் பெயரைக் கேட்டதும் சுரீரென்றது. எத்தனையோ கஷ்டங்களைத் தேடித் தேடிச் சேர்த்துக் கொண்டு, மறக்க முடியாத அந்தக் கறுப்பு நாளின் தடங்களாய் மனசில் தேங்கிக் கிடந்த நினைப்புகளின் மேல் அமிழ்த்திக் கண் காணாமல் அடி மனசில் ஒளித்து வைத்திருந்த அத்தனை சோகங்களும் கோபங்களும் நொடிப் பொழுதில் வெளிவர அந்த விளிப்பு ஒன்றே போதுமானதாயிருந்தது.
“தூத்தேறி… யார்றா அது மணவாளன்? நம்பர ஒழுங்கா தெரிஞ்சினு போன் பண்ண மாட்டீங்களாடா? போன வைடா பரதேசி” என்று கத்தி விட்டு போனை அணைத்தார். அருகில் நடந்து போய்க் கொண்டிருந்த ஓரிருவர் திரும்பிப் பார்த்தனர். அவருக்கு உடல் வியர்த்து விட்டிருந்தது. இன்னமும் நடுக்கம் குறையவில்லை. மெல்ல அடியெடுத்து வைக்கத் துவங்கினார்.
——————
மனைவி அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்தபடி அருகில் நின்றிருந்தாள். தன் கலக்கத்தைப் பார்த்து அவள் கலங்குவதைப் பார்க்கப் பாவமாகத் தானிருந்தது அவருக்கு. சாந்தமாய் நிமிர்ந்து பார்த்தவர், எனக்கொண்ணுமில்ல. போயி காப்பி கொண்டு வா போ” என்று அனுப்பி விட்டார். கொஞ்சம் போல் சமாதானமாகி உள்ளே போனாள்.
அந்த நாள் மீண்டும் நினைவுக்கு வந்ததன் கனம் தாளாமல் கண்களை மூடிக் கொண்டார்.
———————-
“என்னங்க என்னாச்சு உங்களுக்கு இப்படி பைத்தியக்காரத்தனமா பண்ணிட்டிருக்கீங்க?”
“பைத்தியக்காரன் தான்டி . பத்து வருஷமா பண்ணா இந்தாளோட தான் படம் பண்ணனும்னு காத்திருந்து இவனுக்காக ஒவ்வொரு நாளும் கதைய யோசிச்சு யோசிச்சு வந்த சான்சையெல்லாம் விட்டு கிடந்தேனே? நான் பைத்தியகாரன் தான்”.
“அதுக்காக புக்கு சீ டி, கேசட்டுன்னு எல்லாத்தையுமா போட்டு எரிப்பாங்க. வேணாங்க சொல்றத கேளுங்க…அய்யோ அந்த சீடி ப்ளேயர ஏங்க உடைக்கறீங்க?’
“ த்தா துரோகம் பண்ணிட்டான்டி. என் கதைய இது வரைக்கும் எத்தனையோ தடவை அவனுக்கு சொல்லிருக்கேன். எனக்கு சான்சு கொடுக்கறேன்னு சொல்லி நம்ப வெச்சு ஏமாத்தி என் கதையையே வேற எவனையோ டைரக்டரா வெச்சு படம் ஆரம்பிச்சுட்டான். கழுத்தறுத்துட்டான். நான் உயிரா நெனச்சதுக்கு, அசிஸ்டென்ட் டைரக்டரா நாய்படாத பாடு பத்து வருஷமா பட்டதக்கு இந்த சினிமா எனக்கு நல்லா மரியாதை பண்ணிருச்சு. இனிமே இந்த வீட்ல சினிமாங்கற பேச்சே கிடையாது”
கடைசியாக அந்த பவுண்ட் ஸ்க்ரிப்ட் எரியத் துவங்கியிருந்த சிறூ கணப்பில் கடாசப்பட்டதும் நெருப்பு கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.
———————-
“காபி” என்று மனைவியின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீளவும் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்கவும் சரியாயிருந்தது. மெதுவாக எழுந்து போய்க் கதவைத் திறந்தார். “ இங்க…. நரசிம்மன் சார்…” என்றான் வந்த இளைஞன். மெல்லப் புருவம் சுருக்கியவர், “என்ன விஷயம்?” என்றார்.
“சர்மா சார் அனுப்பிச்சாரு” என்றான். சர்மா பெயரைக் கேட்டதும் நெற்றிச் சுருக்கம் மறைந்தது. அந்தச் சம்பவத்துக்குப் பின் அவநம்பிக்கை என்பது ரத்தத்தில் ஊறிப் போகுமளவு வந்து விட்டாலும் , உலகத்தில் யாரையேனும் கொஞ்சமேனும் நம்பி தன் தனி உலகுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கிறாரென்றால் அது சர்மா தான். சர்மா இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பே நண்பர். இப்போதும். அவர் சினிமாவில் தான் இருந்தார். காஸ்டியூம் சப்ளையர்.
இருவருக்கும் சினிமா பற்றிய கருத்தாக்கங்கள் புரிதல்கள் முற்றிலும் வேறாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு நட்பு. பார்க்கப் போனால் சினிமா மீதான நரசிம்மனின் பார்வை தான் அடியோடு மாறிப் போயிருந்ததே தவிர சர்மாவுக்கு இப்போதும் சினிமா தான் சோறு போடும் தெய்வம்.
“உள்ள வா” என்றார்.
வந்து அமர்ந்தவனிடம் “சர்மா இந்த மாதிரி யாரையும் அனுப்புறேன்னு சொல்லலையே? என்றார்.
“சொல்லிருப்பாருன்னு நெனச்சேன்” என்றான்.
“சரி சொல்லு என்ன விசயம்?”
“என் பேரு திலீப் .. காலையில நான் தான் உங்களுக்கு மணவாளனானு கேட்டு போன் பண்ணியிருந்தேன்” என்றான். சுருக்கென்றது. கோபம் சுரக்கத் துவங்கியது .
அவன் தயங்கித் தொடர்ந்தான். “நா … ஒரு …. படம் .. பண்ணிருக்கேன்”
படம் என்ற வார்த்தையைக் கேட்டதும் அவருக்கு முகம் இறுகியது . “ வெளிய போடா” என்று சொல்ல நினைத்தவர் சர்மாவை நினைத்து அமைதியானார். சர்மா காரணமில்லாமல் இப்படி யாரையும் அனுப்பியதில்லை.
“சரி நான் என்ன செய்யணும் அதுக்கு” என்று அடிக்குரலில் கேட்டார்.
அவரிடமிருந்து எதிர்பார்த்த எதிர்வினை வராததில் பையன் கொஞ்சம் தெம்பானான். சொல்லப் போனால் அவர் மனைவிக்கே இன்னும் ஆச்சரியம் தான்.
சற்றே தைரியமாய்ப் பேசினான். “ சார்.. நான் பதிமூணு வருசமா அசிஸ்டெண்ட் டைரக்டரா போராடி இப்ப தான் சார் சான்ஸ் கிடைச்சு ஒரு படம் பண்ணிருக்கேன். என்னோட முதல் ரெண்டு வருசமும் நீங்க அசோசியேட்டா வேலை பாத்த டைரக்டர் கிட்ட தான் சார் நான் லாஸ்ட் அசிஸ்டென்டா இருந்தேன். உங்களுக்கு தெரிஞ்சிருக்காது” என்று சொல்லி நிறுத்தி விட்டு அவரைப் பார்த்தான்.
எந்த உணர்ச்சியும் காட்டாமலிருந்தார். தொடர்ந்தான். “ அப்ப நீங்க உங்களுக்கு க்ளோசான அசிஸ்டெண்டுங்க கிட்ட பேசும் போதெல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னு உங்க பேச்சையெல்லாம் கேட்டிருக்கேன் சார். அவ்ளோ கத்துகிட்டு இருக்கேன். அதே மாதிரி நீங்க வேலை செய்யற விதமும். அதெல்லாம் லெஸன்ஸ் சார்” என்றான்.
வீட்டின் பரணில் உபயோகமற்றுக் கிடக்கும் வெண்கல விளக்குக்கு திடீரென்று மவுசு வந்து அதை ஆன்டிக் பொருள் என்று சொல்லிக் கொண்டாடத் துவங்கினாற் போலிருந்தது அவருக்கு. என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னையும், தன் சினிமாக் கனவையும் ஒருத்தன் ரசித்திருக்கிறானே என்பது அவருக்கு மிகுந்த ஆச்சரியமளிப்பதாயிருந்தது.
“ அப்புறம் ஏண்டா இவ்ளோ நாள் என்னைப் பாக்க வரலன்னு உங்களுகுத் தோணும். என்ன சார் பண்றது. சர்வைவல். என் பொழப்பப் பாக்க நான் ஓடிட்டே இருந்துட்டேன். ஆனா பல போராட்டங்களுக்கப்புறம் சான்ஸ் கிடைச்சு படம் எடுக்கும் போது தான் சார் எனக்கே புரிஞ்சது. எனக்குள்ள உங்க பாதிப்பு நிறையவே இருக்குன்னு” என்றான்.
“சரி இப்ப நான் என்ன செய்யணும்” என்றார். குரல் லேசாக இளகியிருந்தது.
“ஒண்ணுமில்ல சார். என் படம் வர வியாழக்கிழமை ப்ரிவ்யூ ஷோ. பிரசாத்ல. நீங்க வந்து என் படத்த பாத்தாலே அது எனக்குப் பெரிய ஆசீர்வாதம் சார்” என்றான்.
பிரளயம் நடக்கப் போகிறதே என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த அவர் மனைவிக்கு “ சரிப்பா நான் வரேன்” என்று அவர் சொன்னதை சத்தியமாக நம்ப முடியவில்லை. அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று விட்டுக் கிளம்பினான்.
————–
தயங்கித் தயங்கித் தியேட்டரினுள் நுழைந்தார். கால்களில் லேசான நடுக்கம். இன்னதென்று சொல்ல முடியாத உணர்வு. சிறூநீர் அவசரமாய்க் கழிக்க வேண்டும் போல் தோன்றியதை அடக்கிக் கொண்டார். பெரும்பாலானவர்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. நிம்மதியாகவும் அதே சமயம் ஏனோ ஏமாற்றமாகவும் இருந்தது. கண்கள் அலைபாய்ந்தபடியிருந்தன.
எங்கிருந்தோ இவரைக் கண்டுகொண்ட திலீப் ஓடி வந்தான் “சார் வாங்க சார்… கொஞ்சம் பிசியா இருந்துட்டேன். நீங்க வந்ததன் கவனிக்கல வாங்க சார்”என்றவனைப் பார்த்து மெலிதாய்த் தலையசைத்தார். அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் முன் வரிசைகளுக்குப் போகாமல் பத்துப் பன்னிரண்டு வரிசைகள் தள்ளீ இருளில் ஓரமாய் அமர்ந்து கொண்டார்.
யாராவது தன்னை அடையாளம் கண்டு கொண்டு வந்து விசாரிக்க மாட்டார்களா என்றும் யாரும் தன்னைக் கண்டு கொண்டு விடக் கூடாதென்றும் ஒரே சமயத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. தோள் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு மிடறு விழுங்கிக் கொண்டார்.
அந்த வெண்திரை அவரைப் பார்த்து “ வாடா.. வந்தியா..எங்கே போனே இவ்வளவு நாள்” என்று கேட்பது போலிருந்தது.
படம் துவங்க மேலும் அரை மணியானது.
விளக்குகள் அணைக்கப்பட்டு படம் துவங்கியவுடன் ஓரளவுக்கு சகஜ நிலைக்கு வந்தவர், படத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றத் துவங்கினார். காட்சிகள் ஓட ஓட , ப்ரேம்கள் நகர நகர, அவரது கண்கள் மின்னின. அவன் சும்மா சொல்லியிருக்கவில்லை. அவர் எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ப்ரேம்கள். லைட்டிங்குகள். அவர் ஆசைப்பட்ட ஆங்கிள்கள். அவர் படமெடுத்திருந்தால் இப்படித் தான் எடுத்திருப்பார். அவருடைய மேக்கிங் இப்படித் தான் இருந்திருக்கும்.
படம் முடிந்து விளக்குகள் போடப்பட்டும் கூட அப்படியே அமர்ந்திருந்தார்.முன் வரிசை ஜாம்பவாங்க்களையும் துறைப் பிரபலங்களையும் வழியனுப்பி வைத்து விட்டு மறக்காமல் இவரைத் தேடி வந்தான் திலீப். அவன் அருகில் வருவதைப் பார்த்து எழுந்து நின்றார். அருகில் வந்தவன் “ சார்” என்றான். அவன் மேலும் ஏதும் பேசுமுன் அவனை இழுத்து அணைத்துத் தழுவிக் கொண்டார்.
இரண்டு முழு நிமிடங்கள் கடந்த பின் அவனை விடுவித்தவர் ‘ ரொம்ப நல்லா பண்ணிருக்கீங்க தம்பி. ரொம்ப அருமையா இருக்கு. நல்லா வருவீங்க. வாழ்த்துக்கள்” என்று சொல்லி விட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் அவன் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு வேகமாய் நடக்கத் துவங்கினார்.
வெளியில் வந்ததும் வெளிச்சம் கண்களைக் குத்தியது. மெல்ல நடக்கத் துவங்கினார். வடபழனியை அடைந்ததும் தடதடவென்ற சத்தம் கேட்டு மேலே நிமிர்ந்து பார்த்தார். மெட் ரோ ஓடிக் கொண்டிருந்தது. அவள் ரொம்ப நாளாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இன்றைக்கு அவளை மெட் ரோவில் கூட்டிப் போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். பின் தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டு பேருந்துக்காகக் காத்திருக்கத் துவங்கினார்.
மேலே அடுத்த மெட் ரோ ரயில் கடக்கத் துவங்கியிருந்தது.