மறைந்து கொண்டிருக்கும் நீ

அலெக்ஸாண்ட்ரா க்ளீமான் / குவெர்னிகா பத்திரிகை/ 15 செப்டம்பர் 2014
 

 
இன்று காலை கீழ்த்தளத்துக்கு நான் இறங்கிப் போனபோது, குக்கியைக் காணவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். காணாமல் போகிறவற்றுக்கான இலாகாவை ஃபோனில் கூப்பிட்டு அத்தனை தகவல்களையும் கொடுக்க வேண்டும் என்பது அதிகார பூர்வமான எமர்ஜென்ஸிக்கான வழிமுறை என்பது எனக்கும் தெரியும். முன்பதிவான குரல் என்னைத் தூண்டியதும், என் சமூகப் பராமரிப்பு எண்ணை நான் ஃபோனில் இடுவேன், என் முகவரியின் பின் கோடைப் பதிவேன். ‘2’ என்ற எண்ணை அழுத்தி விட்டு, வீட்டில் இருந்த பிராணி ஒன்று திடீரென்று காணாமல் போனதை அறிவிப்பேன், ‘3’ என்பதை அழுத்தி ‘வீட்டு வளர்ப்பு மிருகம்’ என்பதைச் சுட்டுவேன், பிறகு ஃபோனில் இன்னொரு ஒலி கேட்டதும், டெலிஃபோனின் ஒலி வாங்கும் முனையில், ‘பூனை’ என்று தெளிவாகவும், நன்கு கேட்கும்படியும் சொல்வேன். அப்போது ஒரு பெண்ணின் குரல், எனக்கு ஒரு பூனை என்ற ஒரு மிருகத்தின் லட்சணங்களோடு ஒத்துப் போகும் விதமான சுருக்கமான விவரணையைக் கொடுக்கும், இந்த விவரணை என் புறம் தொலைந்த ஐடத்துடன் ஒத்துப் போனால், நான் பௌண்ட் இலச்சினையை அழுத்தி ஒரு 15 வினாடி விவரிப்பைப் பதிவு செய்வேன். ஒரு மூன்று ஒலி இசை என்னிடம் என் புகார் பதிவு செய்யப்பட்டது என்பதை உறுதி செய்யும், பிறகு அந்த அழகான முன்பதிவு செய்த குரல், என் புகாரின் கோப்பு எண்ணைச் சொல்லும், பிறகு என் புகாரை மேலும் விவரங்கள் கொடுத்து மேம்படுத்துவதையோ அல்லது ரத்து செய்வதையோ எப்படிச் செய்யலாம் என்று விளக்கும்.
இதற்கெல்லாம் பதிலாக, நான் ஃபோனை எடுத்து உன் எண்ணை அதில் அழுத்தினேன். உன்னால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை எப்போதும் நான் உன்னிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன், ஏதோ கெட்ட செய்திகளைக் கூட்டிக் கொண்டே போனால் அவை நீர்த்துப் போய்விடும் என்பது போல.
“குக்கி போயிடுத்து,” நான் சொன்னேன், உன் மறுவினைக்குக் காத்திருந்தபடி.
மறுமுனையில் ஒரு தயக்கம் புலப்பட்டது.
”நீ அதை ஃபோன் செய்து சொல்லிட்டியா?” நீ கேட்டாய். உன் குரல் சகஜ பாவத்தைக் கொண்டிருந்தது, ஏதோ அது வேறு யாருடைய வளர்ப்பு மிருகம் என்பது போல, வெகுதூரத்து நிலப்பரப்பில் வாழ்கிற, நாம் சந்தித்தே இராத மனிதர்களின் பிராணி என்பது போலவிருந்தது.
”நான் பண்ணல்லை,” நான் சொன்னேன். “நான் ஒரு மாதிரி மன அழுத்தத்தில் இருக்கேன்.” என்று சேர்த்தேன். நான் அடிக்கடி அப்படி அழுத்தத்திற்குள் விழுந்திருந்தேன், ஆனால் இப்போதெல்லாம் நம் எல்லாருக்குமே அப்படி ஆவதற்குக் காரணங்கள் இருந்தன.
“நான் வருந்துகிறேன்,” நீ பதில் சொன்னாய்.
“குக்கிக்கு ஒயர்களை எல்லாம் கடிக்கப் பிடிக்கும்,” நான் சொன்னேன்.
“எனக்குத் தெரியும்,” நீ சொன்னாய். நீ இங்கிருந்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லவில்லை. நானும் அதைச் சொல்லவில்லை.
அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை. நான் ஃபோனைக் கீழே வைத்தேன். சில சமயம் நான் உடனே உன் எண்ணை மறுபடி கூப்பிடுவேன், நீ மறுபடி ஃபோனை எடுப்பதைக் கேட்கவும், உன் கைகள் ஒரு ப்ளாஸ்டிக் பொருளின் மீது அந்தக் கணம் உன் கைகள் படிந்திருப்பதையும், அந்தப் பொருள் கம்பிகள் வழியே நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் என்னிடம் நுட்பமாக வழி கண்டு பிடித்து வந்து சேரும் என்பதையும் தெரிந்து கொள்ளவும்தான்.
***
அந்தப் பேரழிவு அமைதியாக வந்தது. அதற்கென ஒரு வழி இருந்தது, ஒரு வசீகரம் கூட. நளினமாக இருந்தது என்று கூடச் சொல்லலாம். அது நீண்ட காலம் எடுத்துக் கொண்டிருந்தது.
மக்கள் ஆயுதங்கள் ஏந்தி எதிர் கொள்ளக் கூடிய பேரழிவுக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர், நிலவறைகளில் பதுங்கி இருக்கத் தயாரிப்போடு இருந்தனர். வடிகட்டிய நீர், தகர டப்பிகளில் அடைத்த சோளம், உலர்ந்த பால் பொடி, பாட்டரிகள் என்று எதை எல்லாமோ பதுக்கினர். பேரழிவு வந்து போன பின்பான உலகில் எப்படி சமாளிப்பது என்பது பற்றிப் புத்தகங்களைப் பிரசுரித்தனர், அந்த உலகு இன்றைய நம் உலகைப் போலவே இருக்கும் என்பதாகத்தான் அவர்களின் கற்பனை இருந்தது, ஒரு சில விஷயங்கள் மட்டுமே காணாமல் போயிருக்கும் என்று நம்புவதாகத் தெரிந்தது. உதாரணமாக, தப்பிப் பிழைத்தவர்கள் வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இறக்கப்பட்டிருப்பார்கள், அதில் எல்லாத் தாவரங்களும், காய்கறிகளும் அழிக்கப்பட்டிருக்கும் என்பதாகக் கற்பனை செய்தனர். முதலில் எல்லா மிருகங்களும் கொடூரமானவையாக மாறும், பின் பட்டினியால் சாகும். அந்த மிருகங்களில் எத்தனையைக் காத்து வைக்க முடியுமோ அத்தனையைச் சேகரிக்க வேண்டும் என்பது மிக முக்கியம், அவற்றை உப்புப் போட்டு பதப்படுத்தி, ஒளித்து வைக்க வேண்டும். ஏற்கனவே கிருமிகள் இல்லாது சுத்திகரிக்கப்பட்ட மண்ணை நீங்கள் சேமித்து வைத்திருக்க வேண்டும், அதைப் பயன்படுத்தி ஒரு பாதுகாப்பான இடத்தில் அவசரத் தேவைக்கு விதைகளைச் சேமித்து வைக்க வேண்டும். பிறகு நீங்கள் ஒரு குழுவைச் சேகரிக்க வேண்டும். தங்கமான மனது கொண்ட ஒரு கட்டுமஸ்தனான இளம் வீரன், ஒரு அறிவியலாளர், ஒரு பொறியியலாளர், ஒரு குழந்தை, நீங்கள் அன்பு செலுத்த முடிகிற அளவு காலத்துக்கு உயிரோடு இருக்க முடியும் என்றால் அப்படி அன்பு செலுத்தக் கூடியவர் என்று நீங்கள் கருதுகிற ஒரு நபர்.
யாருமே இந்த ஊழி நாள் இத்தனை மரியாதை காட்டுவதாகவும், வினோதமானதாகவும் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. பொருட்கள் திடீரென்று காணாமல் போயின, ஏதோ தாம் இருக்க வேண்டியவை என்பதையே அவை மறந்து போய் விட்டது போல. இப்போது ஒருவர் சாவிகளை வைத்த இடம் தவறிப் போய் விட்டது என்றால், அவர் அவற்றைத் தேடிப் போவதில்லை. அனேகமாக வீட்டுச் சொந்தக்காரரிடம் போய் இன்னொரு சாவியைக் கேட்டு வாங்கி, அவற்றை மறுசாவி போட்டுக் கொடுப்பவரிடம் போய் ஒன்றுக்கு இரண்டாகப் பிரதி போட்டு எடுத்து வருவார், ஒரு வேளை முந்தைய சாவி காணாமல் போனது ஒரு தடவை மட்டும் நடக்கும் நிகழ்ச்சியாக இல்லாமல், தொடர் நிகழ்ச்சியாக இருந்தால் என்ன செய்ய, அதற்காக. அல்லது இதை வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு முன்னோடி நிகழ்வாக எடுத்துக் கொண்டு, வெளியேறத் தீர்மானிப்பதும் நடக்கலாம், சும்மா எந்த இலக்கும் இல்லாமல், வெளி உலகுக்குள் நடந்து போய், தன் காணாமல் போகிற புள்ளியைத் தேடிக் காணச் செல்லலாம், அப்போது அது சிகாகோவுக்குப் போய், உங்கள் சகோதரனிடம் இன்னும் அவருடைய வீட்டுக்கான சாவிகள் இருப்பதாலும், ஒரு கூடுதல் செட் சாவிகளை உங்களுக்குக் கொடுக்க அவர் தயாராக இருப்பதாலும், அவரோடு போய் இருக்கத் தீர்மானிக்கலாம்.
இந்த ஊழிப் பேரழிவு பொருட்களை ஒவ்வொன்றாகத் தடாலென்று காணாமல் அடிப்பது ஒரு வகையில் கவர்ச்சியாக அழகாகத் தெரிந்தது. அது அத்தனை சுத்தமாக, சுலபமாக இருந்தது, ஏதோ கணினித் திரையில் இண்டர்நெட் உலாவியில் ஒரு கட்டத்துக்குள் டிக்கடிப்பதைப் போல இருந்தது. அதற்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் இருந்தது: ஒரு குண்டான நபர், ஆளில்லாமல் கைவிடப்பட்ட கடைகள் இருக்கும் தெரு ஒன்றில் நடந்து போகையில், குனிந்து பார்த்தால் அவருடைய கால் சராய் காணாமல் போயிருக்கும், அவருடைய ஹாலோவீன் உள்ளாடைகள் தெருவிலிருப்போருக்குத் தெரிய வரும். அந்த மாதிரி நகைச்சுவை.
இந்த மாதிரி நிகழ்வுகளின் விடியோக்கள் இண்டர்நெட்டில் போடப்பட்டுக் கொண்டிருந்தன, ஒரு நாள் இண்டர்நெட்டே காணாமல் போகும் வரை.
***
படகுத்துறையில் உள்ள ரங்கராட்டினம் காணாமல் போகுமுன் அதைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அது எப்போது போகும் என்று எனக்குத் தெரியவில்லை. அது காணாமல் போகுமுன் கடைசியாக அதைப் பார்க்க வந்த நபர் நானாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன், ஆனால் அதைச் செய்ய நிறைய வேலை ஆகும், நிறைய காத்திருப்பதும், கண்காணிப்பதும் செய்ய வேண்டி இருக்கும். எல்லாத்தின் கடைசி நாட்களில் கூடச் செய்வதற்கு வேலைகள் இருந்தன. நான் இரண்டு ஆப்பிள்களை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு, வாயில் வழியே வெளியேறினேன், கதவைப் பூட்டுவது எளியதுதான் என்றாலும், பூட்டவில்லை. முதல் தளம் வரை எலிவேட்டரில் இறங்கிப் போனேன், பிறகு கிழக்கு ஜாக்ஸன் சாலையில் நடந்து நீர்ப்புறத்துக்கு அருகில் போனேன், பிறகு நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் இருந்த வேலியை ஒரு கையுறை அணிந்த கையால் பிடித்தபடி மேலே ஏறி நடந்தேன். பதின்ம வயதினர் நிரம்பிய ஒரு செடான் கார் அருகில் ஓடிப் போயிற்று, ஒருவன் ஏதோ என்னை ஏளனம் செய்வது போல ஒரு புரியாத சொல்லை இரைந்து கத்தினான். அது குளிர்காலம், ஆனால் அத்தனை குளிரவில்லை. மற்ற எல்லாவற்றிலும் குறைவானவையே இருந்தது போல, சீதோஷ்ண நிலையிலும் குறைவாகவே இருந்தது. இன்று நேற்றைப் போல இருந்தது: உறங்கும் காற்றும், தேய்வான மெலிய நீல வானமும், மேகமில்லாத ஆனால் மசமசப்பான வெள்ளையில் பனிமூட்டமுமாக இருந்தது. அது ஒருவேளை காற்று வெளியே குறைந்து வருவதால் இருக்கலாம்.
படகுத்துறையில் கடல்நாரைகள் மரப்பாதையில் குழுமிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன், அவை தம் அழுக்கான வெள்ளை உடல்களை ஒன்றோடொன்று அம்மிக் கொண்டிருந்தன. அவை எதை வேண்டுமானாலும்–ரொட்டி மேல் துண்டுகள், பழங்களின் தடித்த தோல்கள், காகிதக் கைக்குட்டைகள்- தின்னக் கூடியவையாகத் தோன்றின. நாம் குப்பையால் அதை நிரப்பக் கூடிய வேகத்தை விட அதிக வேகத்தில் தன்னை மறையச் செய்யத் தன் நினைப்பிலிருந்து தன்னையே அழித்துக் கொண்டிருக்கும் ஓர் உலகில், கரைந்து மறைந்து கொண்டிருக்கும் ஓர் உலகில் அவை எப்படியோ உயிர் பிழைத்திருக்கும்படி ஆக்கப்பட்டிருந்தன. ஒரு நாரை ஒரு ப்ளாஸ்டிக் சிங்கப் பொம்மையை விழுங்கப் பார்த்தது, தன் அலகுகளை மொண்ணையான பொறுமையோடு அந்தப் பொம்மை மீது அழுத்திக் கடித்தது. ரங்கராட்டினம் அவற்றுக்குப் பின்னே, படகுத்துறையின் இறுதியில் பெரிதாக நின்று கொண்டிருந்தது, நான் அதை முதல் தடவை பார்த்த அளவு பெரிதாக இப்போது அது பார்வைக்குத் தெரியவில்லை. அந்த ராட்டினத்தின் சக்கரத்தில் தாறுமாறாகப் பல இடங்களில் ஆரக் கம்பிகள் காணவில்லை, சில சிவப்பு நிற அமரும் கார் போன்ற பெட்டிகள் காணப்படவில்லை. திரும்பத் திரும்ப முகத்தில் குத்தப்பட்ட ஒரு நபரின் வாயைப் போன்று அது காட்சி அளித்தது.
நான் நடந்து போய் அதை அடைந்தேன், திறந்த வெளியில் அது இருந்த போதும் யாரும் என்னைப் பார்க்கவில்லை. அதன் அடித்தளத்தை நான் அடைந்த போது, அதன் கட்டுப்பாட்டுக் கருவிகள் எல்லாம் பூட்டப்பட்டு இருந்தன. கார்ட்டூன் படங்களில் வருவது போல, அச்சுப் பிச்சுத்தனமாகத் தெரிந்த ஒரு பெரிய லீவர் இருந்தது, அது பல வேகங்களில் ராட்டினத்தைச் சுழற்ற அமைப்போடு இருந்தது, நான் சங்கிலிக்குக் கீழே குனிந்து உள்ளே போய், தரை அளவில் இருந்த ஒரு காருக்குள் ஏறி அமர்ந்தேன். அது துவக்க நிலையில் இருந்த கார். அதை இப்படியும் அப்படியும் ஆட்டி ஊசலாடும்படிச் செய்ய முயன்றேன், ஆனால் அதில் சிறிதும் மகிழ்ச்சி கிட்டவில்லை. பிறகு தண்ணீரைப் பார்த்து அமர்ந்திருந்தேன், பாதுகாப்புக்கு இருந்த கம்பி வலையைக் கீழே தள்ளினேன். ஏரி அது எப்போதும் செய்கிறதைச் செய்து, அலையால் கரையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. தண்ணீர் காணாமல் போகிறபோது, நாம் எந்த இடைவெளியையும் காண்பதில்லை, ஓட்டை ஏதும் புலப்படுவதில்லை. நான் என் ப்ளாஸ்டிக் பைக்குள் கை விட்டபோது அதில் ஒரு ஆப்பிள்தான் இருந்தது.
இந்த ஊழிநாள் அழிவு எல்லா விதமான பொருட்களையும் காணாமலடிக்கிறது, நினைவுகளைக் கூட மொத்தமாக விழுங்கி விடுகிறது. நீ என்னை மறக்கும்போது உன்னருகில் இருக்க நான் விரும்பவில்லை. உன் தலையிலிருந்து எல்லாம் உதிரும்போது அதைப் பார்த்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை, நான்தான் முதலில் உன்னை மறந்து விடவேண்டுமென விரும்பினேன். சில சமயம் அது நடக்கட்டுமென விரும்புவதை நடக்கப் போவதாக ஊகித்திருந்தேன். அப்போது நீதான் மறக்கப்படுவது குறித்து அச்சம் கொண்டவன் என்பது போலும், அதனால் நீதான் வீட்டை விட்டு வெளியேறி, அந்த நகரத்தை விட்டு உனக்குச் சிறிதும் பரிச்சியம் இல்லாததும், அதனால் பழக்கமானது எதுவும் தொலைய வாய்ப்பில்லாததுமான வேறோர் நகரத்துக்கு குடியேறி விட்டாய் என்பது போலவும், நான் உன்னை அழைத்து, உன்னிடம் கோபப்பட முயற்சித்தேன். யார் எதை யாருக்கு என்ன செய்தார் என்பதை நீ மறந்திருப்பாய் என்று நான் நினைத்தேன், ஆனால் நீ இன்னும் மறக்கவில்லை.
***
முதல் பொருட்கள் காணாமல் போகத் துவங்கியபோது அதெல்லாம், ஒரு மோசமான திரைப்படத்தில் தொடர்ந்து நடக்கும் தவறுகளைப் போல, வேடிக்கையாக இருந்தது. நீயும் நானும் சில பூக்கள் கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போனபோது, பொருத்தமான ஒலிகளை எழுப்பினோம், ‘பூஃப்’ அல்லது ‘பொய்ங்க்’ என்று கத்தினோம். அப்படித்தான் நாம் ஒருவரை ஒருவர் சிரிக்க வைக்க முயன்றோம். அந்த நாட்களில் உலகம் வேகமாகக் காலியாகிக் கொண்டிருந்தாலும், இன்னும் நிரம்பித்தான் இருந்தது. அதன் பிறகு ஏராளமான பொருட்கள் காணாமல் போக ஆரம்பித்ததால், அந்த ஒலிகளை எழுப்புவது சாத்தியமாக இல்லை: அதெல்லாம் சோகமானதாக இருந்ததை நாம் கண்டோம், இந்த உலகில் இருந்தது எதுவும் காணாமல் போய், இனிமேல் திரும்பாதென்பதன் சோகம் புரிந்தது. நீ இதெல்லாம் ஜோக் என்று காட்ட முயற்சித்தாய், இனிமேல் செய்வதற்குக் குறைவான வேலைகள்தான் இருக்கும், நாம் குப்பையாக்கினால் அதன் பிறகு சுத்தம் செய்யத் தேவையில்லை, அதெல்லாம் காணாமல் போய் விடும் என்றாய், ஆனால் நீ இன்னும் பாத்திரங்களைக் கழுவுவதைச் செய்து கொண்டுதான் இருந்தாய், மர இருக்கைகளின் பின்னும் கீழேயும் தூசியைப் பெருக்கிக் கொண்டுதான் இருந்தாய், தினம் ஒரு புதுச் சட்டையைப் போட்டுக் கொண்டாய், படுக்கையைச் சீர் செய்தாய். கண்ணாடிக் குடுவைகள் காணாமல் போன பிறகு, பானங்களை அருந்த காகிதத்தால் கோப்பைகளைச் செய்தாய், காகிதங்களும் காணாமல் போன போது, கடுதாசிக் கைக்குட்டையால் கோப்பை செய்ய முயன்றாய், அது மோசமாக இருந்தது. என்ன நடந்தாலும் மேலே ஆக வேண்டியதைச் செய்ய முயல்பவன் நீ, நான் எதிர் வகை.
இது முதல் மறைவுகள் துவங்கிய பின் இரண்டு வாரங்களில் தெளிவாகி இருந்தது, செய்தி ஒளிபரப்பு நிறுவனங்கள் அதை “மாயப் பேரழிவு” என்று அழைத்தன. மறைவுகளில் இழக்கப்பட்டவற்றைத் திரும்பப் பெற முடியாது என்று அவர்கள் அறிவித்த அன்று, நான் நண்பகலுணவுக்கு முன்னர் அலுவலகத்திலிருந்து வெளியேறினேன். நான் எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை, நாங்கள் ஓய்வு பெறுவதற்கான திட்டங்களிலிருந்து பணத்தை எடுக்க விரும்புகிறோமா, எங்கள் தேகநலக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமா என்று கேட்டு வந்த மின்னஞ்சல்களுக்குப் பதில் போடவில்லை. சுரங்கரயில் மூடப்பட்டு விட்டிருந்தது, அதனால் ப்ரூக்லின் பாலத்தைக் கடந்து, ஃப்ளாட்புஷ் நீட்சிப் பகுதிக்கு நடந்தேன், மிர்டில் அவென்யுவிலிருந்த அடுக்ககத்துக்கு முழுவழியிலும் நடந்தே போனேன். அன்று என்னவோ உலகம் இன்னும் மிகவும் நெருக்கடியாக இருப்பதாகத்தான் தெரிந்தது. மேலே ஆகாயம் சிறிதும் நீர்க்காத சுத்த நீலமாக இருந்தது, வளிமண்டலத்துக்கு அப்பால், எத்தனை வெற்றிடம் இருந்தது என்பதை முற்றிலும் மறைத்து விட்டிருந்தது. பாலத்தில் கார்கள் வரிசையாக நின்றன, பம்பரிலிருந்து பம்பர் வரை தொட்டுக் கொண்டிருப்பது போலத் தெரிந்தன. அவ்வப்போது காரோட்டிகள் ஏதும் நெருக்கடியை உண்டு பண்ணும் நோக்கமின்றி, குழலை ஒலித்தனர், புலம் பெயர்ந்து போகும் வாத்துகளைப் போல.
நான் வீடு திரும்பியபோது பின்மாலையாகி இருந்தது, நீ ஆறரை மணிக்குத்தான் திரும்புவாய். நான் செய்தித்தாளைப் படிக்க முயற்சித்தேன், ஆனால் மறைவுகளைப் பற்றி என்னால் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவு செய்திகளை ஏற்கனவே படித்து விட்டிருந்தேன், மற்ற பகுதிகள் மெலிவாகி விட்டிருந்தன, சிலவற்றில் வெற்றிடங்கள் காணப்பட்டன, அவற்றை நிரப்ப யாரும் முயற்சி செய்திருக்கவில்லையாதலால், காகிதத்தின் நிறம் சாம்பல் நிறத்தில் மென்மையாகத் தெரிந்தது. பிறகு ஏழரை ஆயிற்று, எட்டாயிற்று, நீ இன்னும் வரவில்லை. நான் குக்கிக்கு அதன் உலர்ந்த உணவைக் கொடுத்து விட்டு, நீரை நிரப்பினேன். அழத் துவங்கினேன், நிறுத்தினேன், மறுபடி கண் மை பூசும் பென்ஸிலால் கண்ணிமை மீது கோடிழுத்து முன்போலத் தோற்றத்தை ஆக்கிக் கொண்டேன். நீ வீடு திரும்பும்போது ஒன்பது மணி ஆகி விட்டது, நீ சாதாரணமான வாசத்தோடுதான் இருந்தாய்: வியர்வை வாடை இல்லை, சிகரெட் வாடை இல்லை, சாராய வாடையும் இல்லை. நீ எங்கே போயிருந்தாய்? நீ நேரம் கழித்து வேலை செய்து கொண்டிருந்தாய். நீ எதையும் கேட்டிருக்கவில்லையா? அவர்கள் சொன்னார்களே, “திரும்பப் பெற முடியாது,” “உடனே நடக்கப் போகிறது,” “காலத்தின் அந்திம நாட்கள்.” அவர்கள்தான் அந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார்கள்.
நீ என்னைக் கட்டிக் கொண்டிருக்கையில் நான் உன் சட்டையில் ஈரச் சுவடுகளை ஏற்படுத்தினேன். நான் உன் மார்பிலிருந்து பிரிந்த போது, நீ இரு கலங்கிய கண்களால் என்னைப் பார்த்தாய்.
“நீ ஏன் இப்படிச் செய்தாய்?” நான் கேட்டேன். “நீ ஏன் இத்தனை நேரம் வராமலிருந்தாய்?”
“நான் வேலை செய்து கொண்டிருந்தேன்,” நீ சொன்னாய். “நிறைய பேர் போய் விட்டார்கள், உனக்கு அது தெரியும். டோபி, மரியான், மேலும் பயிற்சிக்கு வந்திருந்த அனைவரும். நாங்கள் இப்போது போதிய ஆட்கள் இல்லாமல் தவிக்கிறோம். நான் இரண்டு புது கட்டட நிர்மாண வேலைகளில் இருக்கிறேன்.” என் கைகளின் கீழ் உன் முதுகு சூடாகவும், நிஜமாகவும் இருந்தது.
“இனி கட்டுவதற்கு எதுவும் இல்லை,” நான் சொன்னேன். “இந்த உலகம் முடியப் போகிறது.”
“அது எனக்குத் தெரியும்,” நீ பதில் சொன்னாய். “ஆனால் அதைப் பற்றி நாம் செய்ய ஏதும் இல்லையே.”
“அதைத்தான் நானும் சொல்கிறேன்,” என்றேன் நான்.
நீ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நாம் இருவரும் ஒரே விஷயத்தைத்தான் சொன்னோம், ஆனால் நாமிருவரும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொணர்வது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. அன்று இரவில் பிற்பாடு, உன்னை உன் வேலையை விட்டு விடும்படியும், மீதமிருக்கும் நாட்களை என்னோடு வீட்டில் தங்கி இருக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். நாம் தப்பிப் பிழைக்க ஏற்ற முயற்சிகளைச் செய்யலாம், தோட்டம் உள்ள ஒரு அடுக்ககத்தை வாடகைக்கு எடுக்கலாம், அதன் ஜன்னல்கள் உறுதியான தடுப்புகள் கொண்டதாக இருக்க வேண்டும். நாம் நாள் பூரா நடந்து திரிந்து வரப்போகும் நாட்களில் காணாமல் போகவிருக்கும் பொருட்களை, விஷயங்களை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் நீ மறுத்தாய். ஒரு ஆர்கிடெக்டாக இருப்பது உனக்குப் பிடித்திருந்தது. மொத்தமாகக் கழிக்கப்படப் போகிற உலகத்துக்கு ஒரே ஒரு பொருளை உன்னால் சேர்க்க முடிந்தது என்றாலும் அது உன்னைச் சந்தோஷமடையச் செய்யும் என்றாய்.
***
நெடுஞ்சாலைக்கடுத்து இருந்த நடைப் பாதை ஒரு பாலத்தின் கீழாகச் சென்றது. கீழே இருந்த குளுமையான இருட்டில், ஒரு காலியான மனையைப் பார்த்தபடி ஒரு பெஞ்ச் இருந்தது. அந்தக் காலி மனையில் நிறைய உடைந்த கண்ணாடி, நொறுங்கிய பாட்டில்களாகக் கிடந்தது, மக்கள் சும்மாவேனும் அங்கு அவற்றை எறிந்திருந்தனர். சூரியஒளி அந்தக் கண்ணாடிச் சில்லுகள் மீது வீசியபோது, தரை தலைகீழான அலங்கார விளக்கு ஒன்று ஏற்றப்பட்டதைப் போலக் காட்சி தந்தது, பச்சையும் வெள்ளையுமாக ஒளிர்ந்த ஒரு துண்டு நிலமாகத் தெரிந்தது. இப்போது நான் அங்கு கடந்து நடக்கும்போது முன்னை விடக் குறைவாகவே அங்கு அவை இருந்தன. பெஞ்சும் இல்லை. நான் அந்தக் கண்ணாடிச் சில்லுகளைப் பார்த்தபடி நின்றேன், என் கடைசி ஆப்பிளைத் தின்றிருந்தேன்.
சில நேரங்களில், உன்னோடு முடிவில்லாத காலத்திற்கு, கிட்டத்தட்ட என் வாழ்நாள் பூராவும், சேர்ந்து இருப்பேன் என்று நினைத்ததுண்டு. ஆனால், ஓர் எல்லைக்குட்பட்ட காலம்தான் இருக்கிறதென்று தெரிந்தபோது, அதன் அளவை நாம் காணவும் முடிந்த போது, நான் அத்தனை நிச்சயமாக அப்படி உணரவில்லை. காலத்தின் ஓர் அலகை, ஒரு சதுரங்க ஆட்டத்துக்கோ அல்லது ஒரு திரைப்படத்துக்கோ ஆகும் நேரத்தை விடக் கூடுதலான நேரம், ஆனால் நாம் கற்பனை செய்ததை விட மிகவே குறைவான நேரமே இருந்த ஒன்றை எப்படிக் கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அது, காலை உணவுக்குக் காலம் கடந்த நிலையில் விழித்து, படுக்கையிலேயே படுத்துக் கிடந்ததால் நண்பகல் உணவு நேரமும் கடந்து விட்ட நிலையில் இருக்கும் சில நாட்களைப் போல இருந்தது. அந்த மாதிரி தினங்கள் என்னைப் பதற்றம் கொள்ளச் செய்தன. அந்த நாட்களில் நாம் நம் நேரத்தைப் பயன்படுத்துவது குறித்துச் சண்டை போட்டோம். ஏதோ நாம் நம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பது போல, காலம் செலவழிந்து போய் விடும் என்பது போல நீ உன் வாழ்வை அழுத்தம் நிறைந்ததாக வாழ விரும்பவில்லை. நான் நோயாளி இல்லை என்றாய் நீ. நாம் இறந்து கொண்டிருக்கவில்லை, நமக்குப் புற்று நோய் ஏதும் இல்லை, என்றாய். நாம் இப்போது வாழ்கிற மாதிரி வாழ எனக்கு விருப்பமில்லை, என்றாய். இரண்டு விதமான மனிதர்கள் உண்டு, ஒரு வகை முதலில் விட்டுக் கொடுத்து விடுவார்கள்.
நாம் சண்டை போட்டபோது, நீதான் முதலில் அதிலிருந்து மீண்டு வருவாய். சமையலறையில் சுவரில் இருந்த நீள் சதுரத் துவாரத்தின் ஊடாக அங்கிருந்து, நீ செய்தித்தாளைப் படிப்பதை, உன் தலையைக் குனிந்து கொண்டு, ஒளிப்படங்களில் இருக்கும் சிறு விவரங்களை நீ படிக்க முயல்வதை, நான் பார்த்துக் கொண்டிருப்பேன். (சண்டைக்கு முன்னதாக) நீ படித்துக் கொண்டிருந்த கட்டுரையில் மறுபடியும் நீ இறங்குவதில் எத்தனை லாகவம் இருக்கிறதென்று நான் பார்த்தேன். அப்போதே எனக்குத் தெரிந்திருந்தது: நான் காணாமல் போனபின் உன்னிடம் என்ன காலியிடத்தை நான் உருவாக்கினாலும், அது தண்ணீரில் ஏற்படுத்தப்பட்ட துளையினுள் நீர் பெருகி இறங்குவது போல, ஆறிப்போகும் காயமாகத்தான் இருக்கும்.
படகுத்துறையிலிருந்து இத்தனை தூரத்தில் கடல் நாரைகள் துண்டு உணவுகளுக்குச் சண்டையிடுவது எனக்கு இன்னும் கேட்டது, அவற்றின் கடுமையான குரல்கள் ஓங்கி ஒலித்தன. கடலை நோக்கி விசையோடு வீசப்பட்ட கல் ஒன்றைப் போல மெலிதாகி விட்ட காற்றின் ஊடே கிழித்துக் கொண்டு இந்நாட்களில் ஒலிகள் வெகு தூரம் பயணிக்கின்றன. கடித்து மிச்சமான ஆப்பிளின் மையப்பகுதி என் வலது கை உறையை ஈரமாக்கியது, இன்னொரு கையால் என் மூக்கின் எலும்பை நான் அழுத்திக் கொண்டேன். இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்: ஒரு வகையினர், யாராவது ஒருவர் தாம் அழுவதைக் கேட்பதற்குச் சாத்தியப்பாடு மிகக் குறைவாக இருந்தாலும், அப்படி ஒருவர் இருப்பார் என்றால்தான் அழுவார்கள். நான் ஆப்பிளின் தின்ன முடியாத மையப் பகுதியைத் தரையில் வைத்தேன், அதைப் பார்த்தேன். சூ மாயமாகு, என்றேன். ஏதாவது நடக்கக் காத்திருந்தேன். பிறகு நான் போனேன், பாதை மேலேறி உயரமான கட்டடங்களை நோக்கி நடந்தேன்.
வீட்டுக்குப் போனதும் குக்கியின் சாப்பாடுக் கிண்ணம், நீர்க் கிண்ணம், மணி ஒன்று கட்டிய கத்தரிப்பூ நிறப் பந்து, அழுத்தினால் கீச்சிடும் ஒரு வாத்துப் பொம்மை- அது குக்கியைப் போல இரு மடங்கு பெரியதாக இருக்கும், மற்றும் எல்லா விளையாட்டுப் பொருட்களையும் சேகரித்தேன். அவற்றை எல்லாம் முதலறையின் பார்வை மேடை ஒன்றில் வரிசையாக வைத்தேன், அவை ஒவ்வொன்றாக மறைவதை நான் பார்க்கலாம் என்பது எண்ணம்.
***
மறைவது ஒவ்வொரு நாளும் கூடுதலான வேகம் பிடித்து வருகிறதா? இல்லை. அது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியோ நகர்கிறதா? உலகை அது அகர வரிசைப்படியாகவோ, பாகம் பிரித்து அடுக்கடுக்காகவோ, அல்லது கால வரிசைப்படியோ மறையச் செய்கிறதோ? அதெல்லாம் இல்லை. எத்தனைக்கு நாங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோமோ, அத்தனைக்கு மறைவதில் ஓர் ஒழுங்கும் இல்லாதது போலவே தெரிகிறது. ஒரு வாரம் எல்லாம் அததன் இடத்தில் குலைவில்லாது இருப்பது போலத் தோன்றும், ஆனால் திடீரென்று பத்திரிகைகள் என்ற வஸ்துக்களே இல்லாதது போல் ஆகி விடும், நம் வீட்டிலோ, அல்லது வேறெவரின் வீட்டிலோ அவை காணப்படாது, யாரும் புதிதாக ஒன்றை உருவாக்கவும் முயற்சிப்பதில்லை. அது பெரிய பொருட்களிலிருந்து சிறு பொருட்களை நோக்கிப் பயணிக்கிறதா? அதில் ஏதாவது திட்டம் இருந்ததா? நமக்குச் சரியான மனநிலை இருக்கையில், அல்லது கவலைப்படுவதற்குத் தெம்பு இல்லாது களைத்துப் போயிருந்தோமானால், அது எழில் நிரம்பிய ஒரு நடப்பாகக் கூடத் தெரிந்தது- எதிர் வீட்டில் யாரோ ஒருவர், இரவு வந்திருப்பதால், வீடு பூரா நடந்து போய் விளக்குகளை அறை அறையாக அணைப்பதைப் பார்ப்பது போல இருக்கும்.
என் சகோதரனின் காலியான முன்னறையில் தரையில் அமர்ந்து சாக்லெட் துண்டுகள் பதித்த நான்கு க்ரனோலா பார்களை வரிசையாகத் தின்றேன். உன்னை ஏற்கனவே ஒரு தடவை நான் கூப்பிட்டிருந்தேன், ஆனால் உன்னை மறுபடி கூப்பிடுவதற்கான ஒரு காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். நிபுணர்கள் சொல்கிறார்கள், இப்போது காணாமல் போகும் பொருட்கள் தூல உருவில்லாதவை, உருவகமானவை: கருத்தாக்கங்கள், நினைவுகள், மற்றும் யோசிக்கும் முறைகள் ஆகியன எல்லாம் அழிப்பை எதிர் நோக்கியுள்ளன, என்கிறார்கள், ஆனால் அவர்களால் எந்தச் சான்றையும் கொடுக்க முடியவில்லை. நான் உன்னைக் கூப்பிட்டு, உனக்கு குக்கி மறைந்தது இன்னும் நினைவிருக்கிறதா என்று சோதிக்க எண்ணினேன்.
தொலைபேசியில் எண்களை வரிசையாக அழுத்தினேன். அது ஒரு தடவை மணி அடித்தது, பின் நான் உன் குரலைக் கேட்டேன்.
“ஹெலோ?” நீ சொன்னாய்.
“நான் தான்,” நான் சொன்னேன்.
“நீதானா,” என்று திரும்பச் சொன்னாய்.
“உனக்கு இன்னும் குக்கி காணாமல் போனது நினைவிருக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்.” நான் சொன்னேன்.
“நான் இன்னும் குக்கியைப் பற்றி மறக்கவில்லை,” நீ சொன்னாய்.
இரு புறமும் மௌனம் நிலவியது, ஸ்டாடிக் ஓசையின் மசமசப்பு நம்மிடையே இருந்த இணைப்பில் நிலவியது.
“என்ன நினைவு வைத்திருக்கிறாய்?” நான் கேட்டேன்.
“அது உன்னைக் கடித்தது என்பதால் நீ அதைத் தேர்ந்து எடுத்தாய் என்பதை நினைவு வைத்திருக்கிறேன்,” நீ சொன்னாய், “மேலும் அந்த ஒரு மிருகத்தை வென்றெடுக்க வேண்டுமென நீ விரும்பினாய். துவக்கத்தில் உனக்குப் பூனையை எப்படி எடுப்பது என்பது தெரியாததால் எப்படி வேண்டுமானாலும் அதைத் தூக்கி எடுத்துக் கொண்டிருந்தாய். நடுப்பாகத்தில் பிடித்துத் தூக்கிக் கொண்டிருந்தாய். அதனால் நிறைய கடிக்கப்பட்டாய்,” என்றாய்.
“நான் உன் எண்ணை நினைவுபடுத்தி வைத்திருக்கிறேன்.” நான் சொன்னேன்
“அது நல்ல விஷயம்,” நீ சொன்னாய்.
அப்போது நான் உன்னைப் போக விட வேண்டுமெனச் சொன்னேன், நீ நல்லிரவு என்று சொன்னாய், நாம் இருவரும் தொலைபேசியைத் தொடர்பை நிறுத்தினோம்.
அரிஸோனாவில் வசிக்கும், “அமைப்பு சாராத இயற்பியலாளர்” ஒருவர் இந்த மறைவுகளெல்லாம் இருத்தல் பற்றிய மாயைகள், காட்சிப்பிழை போன்றவை என்று ஒரு கருத்தைச் சொல்லிப் பிரபலமாகி இருந்தார். நாம் இன்னும் என்னவெல்லாம் எடுத்துப் போகப்பட்டன என்று நினைவு வைத்திருக்கிறோம் என்பதும், அவற்றின் தோற்றங்களை இன்னமும் நம் மனதில் கற்பனை செய்ய முடிகிறது என்பதும் அவை இன்னும் இருக்கின்றன என்பதற்கு நிரூபணம் என்கிறார். ஒரு காட்சியில் சில நேரம் ஒரு வாத்தையும், சில நேரம் முயலையும் மட்டும் பார்ப்போம், ஆனால் இரண்டையும் ஒரே நேரம் பார்க்க முடியாது, அதைப் போல என்றார் அவர். ஆனால் முயல் இருக்கிறது என்ற நம் அனுபவத்தோடு சேர்த்து வாத்து என்பது திரும்பப் பெற முடியாதபடி தொலைந்து விட்டது என்று நாம் நம்புகிறோம். இதெல்லாம் நாம் எங்கே பொருந்தி இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது, என்கிறார் அவர், காலப் பிரமாணத்தில் எந்த முகட்டில் இருந்து பார்க்கிறோம் என்பதை: வீட்டிலிருந்து அகன்று ஓட்டிச் செல்லும்போது நாம் வீட்டைக் காட்சியிலிருந்து இழக்கிறோம், ஆனால் மலை உச்சியிலிருந்து பார்க்கிற போது வீட்டைத் தேடினால் பார்க்க முடியும். உங்கள் வீடு தொலைந்து போய் விட்டது என்று நினைப்பது பித்துக்குளித்தனமாக இருக்கும், என்கிறார் அவர். காணாமல் போன பொருட்கள் இது போலத்தான், உடன் உறைவன ஆனால் காலத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார். இதுதான் அவருடைய இடவெளி- காலத் தடை பற்றிய கருத்தாக்கம். இதை நம்புபவர்கள், காலவெளியில் “ஓர் உயரிடம்” இருப்பதாக நம்புகிறார்கள். நார்மண்டியில் ஒரு குறிப்பிட்ட கடற்கரைக்கு அவர்கள் தலயாத்திரை மேற்கொள்கிறார்கள், அங்கு மலை முகடுகள் சாக்கட்டி போன்று, புறாக்களின் நிறம் போன்று வெண்மையாக உள்ளன, அங்கே சமீபத்தில் மறைந்த பொருட்கள் சில நேரம் தோற்றம் தருவதாக ஒரு வதந்தி உலவியது, அவை மென்மையான விளிம்புகளுடனும், தேய்மானத்துடன் முப்பது நாற்பது வருடங்கள் பழையதாகவும் தோற்றமளித்தனவாம். 1759 ஆம் ஆண்டு, ஒரு பனிரெண்டு வயதுப் பெண் மிக மூத்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி வந்ததைத் தவிர்க்க, நீரில் மூழ்கி அங்கு இறந்திருந்தாளாம்.
நான் தரையில் அமர்ந்து கொண்டேன், க்ரனோலா பார்களின் மேலுறைகளை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டேன். அந்தப் ப்ளாஸ்டிக் பையை இன்னொரு ப்ளாஸ்டிக் பைக்குள் போட்டேன். ப்ளாஸ்டிக் பைகளும் மறைந்து கொண்டிருந்தன, ஆனால் என் சகோதரனிடம் ஏகப்பட்ட பைகள் ஏற்கனவே இருந்தன. அப்போது நான் ஃபோனை எடுத்தேன், உன்னை மறுபடி அழைக்க உத்தேசித்தேன். உன் எண்ணை என் நினைவிலிருந்து பதித்தேன்.
உனக்குப் பதிலாக, ஒரு தவறு நேர்ந்தது என்ற அறிவிப்பும், என் அழைப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்ற ஒரு பதிவான குரலும் கேட்டன. நான் மறைந்த பொருட்களுக்கான இலாகாவைக் கூப்பிட்டேன். அங்கு எழுந்த கேள்விக்கு, நான் ‘1’ என்பதை நபருக்கும், மறுபடி “1” என்பதை “ஆண்” என்பதற்கும் அழுத்தினேன். பிறகு “3” என்பதை நண்பன் என்பதற்கு அழுத்தி இருக்க வேண்டும், ஆனால் “2” என்பதை “காதலன் அல்லது நெருக்கமான நபர்” என்பதற்கு அழுத்தினேன். நீ இதைப் பொருட்படுத்த மாட்டாய் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு சுந்தரமான பெண் குரல் உன்னை, “ஆண் காதலன், இருபத்தி ஒன்றிலிருந்து முப்பது வயதுக்குள்ளானவர்” என்று வருணித்து இது சரியா என்று கேட்டது. நான் பௌண்ட் விசையை அழுத்தினேன், பிறகு உன்னை வருணித்தேன்.
***
இலையுதிர்காலத்தில் ஒரு பிரகாசமான காலை நேரத்தில் நான் விழித்தபோது உன் முகத்தில் விழித்தேன், நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய். சில காலைகளில் நாம் ஒரே நேரம் விழித்துக் கொள்வோம், அப்போது நம்மில் ஒருவர் மற்றவரை மறந்து விட்டதால், மற்றவர் யாரென்று தெரியவில்லை என்பதாக நடிப்போம். ஒருவர் மறதி நோய்க்கு ஆட்பட்டவர். அந்த நபர் கேட்பார்: நீ யார்? நான் எங்கிருக்கிறேன்? அப்போது மற்றவர் ஒரு புதுக் கதையை இட்டுக் கட்ட வேண்டும். ஒரு நல்ல கதை நீளமாக இருக்கும், சிறப்பான கதைகள் எனக்கு மொத்தமாகவே ஒரு இரண்டாம் வாழ்க்கை கிட்டியது போல, ஏதோ சிறப்புச் சன்மானம் கிட்டியது போல ஆக்கி விடும். மஞ்சளாகியிருக்கும் இலைகள் ஜன்னலுக்கு வெளியே இருந்து மஞ்சள் ஒளியை படுக்கையின் விரிப்புகளில் வீசியபடி இருக்கையில் நீ என்னிடம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வாய். நான் பத்திரமாக இருக்கிறேன், உன்னோடு இருக்கிறேன் (என்பாய்). நாம் முதுநிலைப் படிப்புக் காலத்திலிருந்தே சேர்ந்து வசிக்கிறோம், வருடத்திலேயே மிக உஷ்ணமானதொரு நாளில், பூங்காவின் நடுவில் உள்ள கொண்டோலா படகுகளுக்கருகே நாம் சந்தித்தோம். நாம் குளத்தை நோக்கிய பெஞ்சுகளில் அமர்ந்திருந்தோம், ஒரே வகை சாண்ட்விச்சைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்- வான்கோழி இறைச்சியும், ஸ்விஸ் பாலாடைக்கட்டியும் ஒரு கீரை ரொட்டிச் சுருளில் சுற்றப்பட்ட சாண்ட்விச்.
“ஆனால் அதுதானே நிஜமாக நடந்தது,” என்றேன் நான்.
“எனக்குத் தெரியுமே,” என்றாய் நீ, குற்றம் செய்தது போன்ற முகபாவத்தை போலியாகக் காட்டியபடி.
இலையுதிர் கால பின் மாலையில், இலைகள் எங்கே விழுமோ அங்கெல்லாம் வீழ்ந்துபட்டன: அவற்றின் நிறமோ, எடையோ, வெளியில் வீசிய காற்றின் விசையோ பொருட்டாகத் தெரியவில்லை.
நீ மேலும் கூட்டிச் சொன்னாய்: “என்னால் வேறெதையும் யோசிக்க முடியவில்லை.”
சில சமயம் ஒரு குறிப்பிட்ட மணி நேரமானது ஒரு கணத்தின் மீது கவிந்திருப்பது போல, எத்தனை நேரத்தை நாம் கழிந்து போக விட்டு விட்டோம் என்பதை நமக்கு உணர்த்திய வண்ணம், அந்த மொத்த மணி அவகாசத்தையும் சுமக்க முடியாத பளுவாக ஆக்கிக் கீழே தள்ளி விடுவது போல, மறைவுகள் துவங்கியபோது அவை எல்லா இடங்களிலும் இருந்தன, நுட்பமான விதத்தில் அவை நம் நாட்களின் மீது கவிந்தன. உலர்ந்த குளிர்காலத்து காலை நேரங்களில் நம் வாயில் தெரியும் உலர்ந்த ரத்தத்தின் சுவை போல, அது நாம் விழித்தெழும்போது நம் வாயில் ஒரு சுவையாக இருந்தது. நான் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தேன் என்பதை நானே உணர்வதற்குச் சில கணங்கள் முன்பே வெளியேறிவிடுவதை அது எனக்குச் சுலபமாக்கி விட்டிருந்தது. வீட்டுச் சாவிகள் இல்லாமல் நம் கட்டடத்துக்கு வெளியே நின்று கொண்டு, அலைபேசியில் (செல் ஃபோனில்) நான் உன்னைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன், இத்தனைக்கும் நீ வேலைக்குப் போயிருக்கிறாய் என்பது எனக்குத் தெரிந்துதானிருந்தது. உன் குரலில் முன்பதிவுச் செய்தி கிட்டும்போதெல்லாம், நீ காணாமல் போய் விட்டாய் என்று நான் கற்பனை செய்து கொண்டேன், கடைசியாக ஒரு தடவை அப்படி நீ காணாமல் போய் விட்டாய் என்று நினைத்தபோது எனக்கு அது பற்றி எதுவும் உணர்ச்சி எழவில்லை. நான் இல்லாமல் உலகில் எல்லாம் தொடர்வதை அப்போது நான் பார்த்தேன், எனக்கு அதில் ஏதும் சங்கடம் எழவில்லை. தெரு முனையில் இருந்த தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை நோக்கிச் சென்றேன், என் செலவுக் கணக்கில் இருந்த எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டேன். செலவுக் கணக்குகள் எங்கோ கண்காணாத இடத்தில், அப்போது இன்னும் இருந்தன. வங்கிகள் எல்லாம் காணாமல் போய்விட்டன என்ற போதும், ஒரு வேளை அவை இன்னும் இருக்கின்றனவோ என்னவோ. நான் பணத்தையும், நம் காரையும் எடுத்துக் கொண்டு, நெடுஞ்சாலைக்குச் சென்றேன், நாட்டு நெடுஞ்சாலை 80 இல் சிகாகோ நகரை நோக்கி மேற்காகச் சென்றேன். இப்படி உலகின் இறுதி நாட்கள் வராமல் இருந்தால் நாம் இன்னும் சேர்ந்து வாழ்ந்திருப்போமா? உன்னை விட்டுப் போவதில் மிகக் கடினமானது என்ன என்று நான் பயணித்த போது கண்டு பிடித்துக் கொண்டிருந்தேன்: ஒரு நாளில் பதினாறு மணி நேரம் என் வாழ்வை நான் வாழ்வதை நானே பார்த்துக் கொண்டு அங்கே இருக்க வேண்டும், என்னருகே எல்லா நேரமும் நான் இருந்து கொண்டு, என்னையே கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும், என் உடம்பில் நான் இருந்து கொண்டு, அந்த இரவில் நீ வீடு திரும்பியதும், என்னருகே தொலைபேசி மணி மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்பதெல்லாம் தான் அவை.
அந்த அறிவிப்புக்குப் பிறகு, மக்கள் இரண்டில் ஒன்றைச் செய்தார்கள். ஒன்று அவர்கள் முன்னை விட அதிகம் கரிசனம் கொண்டார்கள், அல்லது அக்கறை கொள்வதைக் குறைக்க முயன்றார்கள். உயிர் பிழைத்திருக்க முடிவு செய்தார்கள், பொருட்களைச் சேகரித்து, மறைத்து, பங்கிட்டு அளவுடன் பயன்படுத்த முயன்றார்கள்,  அல்லது தம் வாழ்வில் எஞ்சியிருக்கிற நேரத்தை எத்தனை பொருட்களைப் பயன்படுத்த முடியுமோ அத்தனையைப் பயன்படுத்தி விட முயன்றார்கள். காய்கறிகளைத் தமது சிறு பின்புறத் தோட்டத்தில் பயிரிட முயன்றார்கள், அல்லது தோட்டங்களைப் புதர் மண்ட விட்டார்கள், பகலிலேயே குடித்து விட்டுப் புதர்கள் நடுவே தோட்டத்து நாற்காலிகளில், தூங்கிக் கிடந்தார்கள். ஒரு கட்டம் வரை நாங்கள் எதைத் தேர்ந்தெடுத்தோமோ அதை முனைப்போடு செய்தோம். ஆனால் சில வாரங்களுக்கு மேல் அத்தனை முனைப்போடு செயல்பட முடியவில்லை, சுமாரான நடுவாந்திர முயற்சியை மேற்கொண்டோம், விஷயங்களைப் பற்றி அவ்வப்போதும், தாறுமாறாகவும் அக்கறை காட்டினோம். மண்ணைக் குத்திக் கிளறி விட்டு, இன்னும் கொஞ்சம் கூடுதலாகவோ, அல்லது குறைவாகவோ முயன்றிருக்க வேண்டும் என்று நினைத்தபடி தூங்கிப் போனோம். இறுதியில், எஞ்சியது ஒரே ஒரு வகை நபர்தான்.
***
பிரதான படுக்கை அறையில் விரிப்புகளை சரியாக மடித்துச் செருகினேன். என் சகோதரன் திரும்பி வரப்போவதில்லை, ஆனாலும் நான் ஒரு நல்ல விருந்தாளியாக என் படுக்கையை ஒவ்வொரு நாளும் சீர் செய்தேன். ஹோடெல்களில் படுக்கையைத் தயார் செய்வது போலச் செய்தேன், விரிப்புகளை இறுக்கி மெத்தையின் மீது சுருக்கமின்றிப் பரப்பி அசைய முடியாதபடி எல்லாவற்றையும் சரியாகச் செருகினேன். அதில் தூங்குவதென்றால் அதைப் பிய்த்து எடுத்தால்தான் முடியும் என்பது மாதிரி. மேல் விரிப்புகளின் அடியிலிருந்து தலையணைகளை உருவினேன், விரிப்புகளைப் படுக்கையின் கால் புறம் வரை இழுத்துத் தள்ளினேன், கதகதப்புக்கான விரிப்பைத் தரையில் போட்டேன், பிறகு மேலே ஏறிப் படுத்தேன்.
இன்னும் வேலை செய்கிற தொலைபேசிகளில் ஒன்று என்னிடம் இருக்கிறது, என்று உரக்கச் சொன்னேன்.
விளக்குகள் எரிகிறபடியே தூங்குவதை ஆரம்பித்தேன்: எல்லாவற்றையும் பார்க்க மேன்மேலும் கால அவகாசம் வேண்டுமென விரும்பினேன், நான் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தால் இன்னும் நிறைய விஷயங்களை நான் காணக் கூடும். ஜன்னலுக்கு வெளியே பனிப் பொழிவு நடந்தது, சினிமாவில் பனி விழுவது போலவே தெரிந்தது, கனவு போன்ற உப்பிய இலேசான துகள்கள் காற்றில் மிதந்து தெருவிளக்கின் ஒளியில் சுழன்று வீழ்ந்தன. காணாமல் போனவர்களுக்கான தகவல் சேகரிப்புத் தொடர்பு மையத்தில் பேசும் அந்தப் பெண்ணின் குரலுக்குரியவளை காதலித்திருக்கலாம் என்று விரும்பினேன், அப்போது அவளைக் கூப்பிட்டு அவள் குரலை நான் விரும்பும் எந்த நேரமும் கேட்கலாம், அப்படி அவளை விரும்புதல் என்ற உணர்வை நான் மறுபடி உணரப் போவதில்லை என்பது போல உணர்ந்திருக்கலாம். அவளைக் காதலித்தவர் யாரானாலும் அவர்கள் அதிருஷ்டசாலிதான், அவர்கள் இன்னும் இருந்தார்கள் என்றால். பனிப் பொழிவு மெதுவானதைப் பார்த்தேன், பிறகு மிகக் குறைவாக வீழ்ந்ததை. பிறகு ஒரு நேரத்தில் இரண்டு மூன்று துகள்கள்தான் வீழ்ந்தன, தலைகீழாக நகர்ந்த மாதிரியும் இருந்தது, மேலும் கீழும் அலைந்து பிறகு மறுபடியும் மேற்புறம் உயர்ந்து, எங்கே போவது என்பது அவற்றுக்குத் தெரியாமல் போனது போலத் தெரிந்தன.
விளக்கு சில நிமிடங்களுக்கு எரிந்தது. என் பிம்பத்தை ஜன்னல் கண்ணாடியில் பார்த்தேன். பிறகு விளக்கின் பல்ப் தலைக்கு மேலே அணைந்தது. இருட்டில் மேலே உள்ள கம்பி வெறுமனே ஆடுவதை நான் கேட்க முடிந்தது, ஆனால் நான் எதையும் பார்க்கவில்லை. மௌனம் கூடி வருவதிலிருந்து மற்ற பொருட்களும் மறைகின்றன என்று நான் தெரிந்து கொண்டிருந்தேன். உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் அதிர்கிறது என்றும், ஒவ்வொரு பொருளும் சிறு அளவு ஒலியை விடுகின்றன என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் சூன்யம், சூன்யம் அதிர்வதே இல்லை. என் உடலிலிருந்து வீசும் உஷ்ணம் போக இடமில்லாமல் ஸ்தம்பிப்பதை நான் உணர்ந்தேன். இருள் பொட்டுகளாக, அங்கே நிஜத்தில் அவை இல்லை என்றாலும், என் கண்கள் முன்னே மிதந்து போவதைப் பார்த்தேன். என்னைச் சுற்றி யாருமே இல்லை என்றால் நான் காணாமல் போய்க் கொண்டிருப்பதை நான் எப்படி அறிய முடியும்? நான் வெறுமனே தூங்கிப் போகவில்லை என்பதை எது எனக்கு உணர்த்தும்? அந்த இருட்டில் ஏதாவது காணாமல் போவதை இப்போது நான் பார்க்க முடியவில்லை, ஆனால் அதெல்லாம் எங்கோ தூரத்திற்கு, வெகு தூரத்திற்குப் போய்க் கொண்டிருப்பதை நான் அறிந்திருந்தேன். வர வர, நான் அதைக் கூட அறிய முடியவில்லை.
நெப்ராஸ்கா (மாநிலத்தில்) லிங்கன் நகரில், காணாமல் போனவர்களோடு தன்னால் தொடர்பு கொள்ள முடிவதாக ஒரு பெண் அறிவித்திருந்தார். நீங்கள் அவரைத் தொலைபேசியில் கூப்பிட்டு, அவரிடம் நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்று சொல்லலாம், முழுப் பெயர், என்ன வயது, எவ்வளவு உயரம், என்ன எடை என்று சொல்லலாம். அவர் தன் வீட்டுக்குப் பின்னே இருந்த ஒரு பழைய கிணறுக்குப் பின்னே போவார், அவருடைய பாட்டனார் அந்தக் கிணற்றைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பு தோண்டி இருந்தார், அந்தக் கிணற்றுக்குள் இந்தத் தகவல்களை உரக்கக் கூவுவார். அங்கு திரும்பி வரும் எதிரொலியில் நாம் மறுபுறத்திலிருந்து ரகசியக் குரல்கள் பதிலளிப்பதைக் கேட்க முடிகிறது என்று அவர்கள் சொன்னார்கள், கூவப்பட்ட சொற்களை நம் அன்புக்குரியவர்கள் பிடித்து, அவற்றை உருமாற்றி, சிதைத்துத் தாம் என்ன சொல்ல விரும்புகிறார்களோ அவற்றைச் சொல்லும்படி மாற்றுகிறார்களாம். அவருக்கு நாம் நிஜத் தங்கத்தில் ஏதாவது கட்ட வேண்டும், நகைகளோ, அல்லது தங்கக் கட்டியோ: அது மின்ன வேண்டும். அவர் தான் அந்தக் குரல்களைக் கேட்பது போல, (நம் அன்புக்குரியவர்கள்) எத்தனை சந்தோஷமாக இருந்தார்கள், நாம் இல்லாதற்கு எவ்வளவு வருத்தப்பட்டார்கள் என்பதை நாமும் கேட்க வேண்டும் என்று விரும்பினார். இங்கு நம் புறத்தில் தொலைந்து போன அனைத்தும் மறுபுறத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தன, அவர்கள் எப்படி அந்தப் புறம் சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இங்கு இன்னும் நம்மிடம் தேங்கி இருக்கும் பொருட்கள் அவர்களுக்கு வருவதற்காகக் காத்திருக்கிறார்கள், மேலும் உலகம் மறுபடி முன்போல முழுமை பெற்றதாக ஆகக் காத்திருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
 
[அலெக்ஸாண்ட்ரா க்ளீமான், கோலராடோ மாநிலத்தின் பௌல்டர் என்னும் பெருநகரில் வளர்க்கப்பட்டார். இப்போது (நியுயார்க் மாநகரருகே உள்ள) ஸ்லேடன் தீவின் முனையில் வசிக்கிறார். அவருடைய புனைவுகள் த பாரிஸ் ரெவ்யு, ஜோட்ரோப்: ஆல் ஸ்டோரி, கஞ்சக்‌ஷன்ஸ், கல்ஃப் கோஸ்ட் ஆகிய இடங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன, மேலும் பல இடங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. யூ டூ கேன் ஹாவ் அ பாடி லைக் மைன், என்பது அவரது முதல் நாவல். 2015 ஆம் ஆண்டு, ஹார்பர் கொலின்ஸ் நிறுவனம் அதைப் பிரசுரித்தது.
இந்தக் கதை குவர்னிகா பத்திரிகையில் பிரசுரமானது. அப்பத்திரிகைக்கும், அலெக்ஸாண்ட்ரா க்ளீமானுக்கும் எங்கள் நன்றி.]
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.