சங்கரன் நேற்று அதையேதான் யோசித்துக் கொண்டிருந்தான். வருகிறவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் வந்திருக்கிறார். அவருக்கு டீ போட அரை மணி, உள்ளூர் கோயில்கள் இருக்கும் இடத்தை ஆராய்ச்சி செய்ய அரை மணி என்று நேரம் வீணாச்சே என்று. ஆனால் வேறென்ன, எப்படி பேசுவது என்றும் யோசித்தபடி டீ போட்டான். புத்தியென்ன சொன்னதையா கேட்கிறது? அது வீட்டு நாயா, தெருநாயில்லையா? கழுத்தில் காலரைப் போட்டு இழுக்கப் பார்த்தால் பிய்த்துக் கொண்டு ஓடுகிறது.
கிருபாகரனை முன்னறையில் உட்காரச் சொல்லும்போது அறையிலிருந்த கட்டிலில் குவிக்கப்பட்டிருந்த அம்மாவின் போர்வை, தலையணை ஆகியன இவனுக்குச் சங்கடம் கொடுத்தன. ஆனால் இருப்பது மூன்றறைகள். எங்கே கொண்டு வைப்பது அதையெல்லாம்? சமையலறையில் பாத்திரங்களை இடம் மாற்றிக் கொண்டிருந்த அம்மாவிடம், சங்கடமான முகத்தை வைத்துக் கொண்டு, ‘நீ கொஞ்ச நேரம் மத்த ரூம்ல போய் இருக்கியா? இவர் கொஞ்ச நேரத்தில போயிடுவார்.’ என்றான். அம்மா முகம் சுளித்தபடி, ‘வந்தவருக்கு ஒரு டீ காஃபியாவது கொடுக்காண்டாமா? நீ பாட்ல பேசிக்கிட்டே இருந்தீன்னா, அதை யார் செய்வா? என்னால நிக்கவே முடியல்லெ. காலெல்லாம் கெஞ்சறது. முடியாம நான் எத்தனை செய்வேன். நீ புத்தகத்தை வச்சுகிட்டு உக்காந்தபடியே உத்தரவு போடறே.’ என்று அபாண்டங்களை அள்ளி வீசத் தொடங்கினாள். அவன் காதைப் பொத்திக் கொள்ளாத குறையாக, அம்மாவை அந்த அறையைப் பார்க்கப் போகச் சொல்லி சைகை செய்தான். ‘நா டீ போட்றேன். நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்.’ என்றான். ‘ஆமா, செஞ்சு கிழிச்சே.’ என்றபடி கிழவி தள்ளாடி மறு அறைக்குப் போனாள். அங்கே இரண்டு மணி நேரமெல்லாம் இருக்க மாட்டாள். இருப்பு கொள்ளாது. ஆனால் அரை மணி முக்கால் மணி இருந்தாள் என்றால் கூடப் போதும். பேச வேண்டியதைப் பேசி விடலாம்.
கிருபாகரனை அம்மா பார்த்திருக்கிறாள், ஆனால் இப்போதெல்லாம் அவளுக்கு யார் யார் என்ன மனிதர் என்பது குழம்புகிறது. பகவானே, அல்ஸைமர் வேற வராமல் இருக்கணும் என்று நினைத்துக் கொண்டான். கிருபாகரன் முன்னறையில் கிடந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். தூரத்திலிருந்து பார்க்க ஒரு நேர்க்கோடு உயிரோடு உலவுகிற மாதிரி இருக்கும். இவர் ஏதேனும் சாப்பிட்டால் அது உள்ளே இறங்க ஏதும் பாதை உண்டா என்று கேட்கத் தோன்றும், அத்தனை ஒல்லி. அவன் கிருபாகரனிடம் சொன்னான், ‘அந்தப் புத்தகத்துல ஒரு கட்டுரை இருக்கு பாருங்க. சிறுகதைகளால என்ன பிரயோசனம்னு ஒரு கேள்வியைக் கேட்டுட்டு அதுக்கு அந்தக் கட்டுரையிலெ ஒரு பதிலையும் சொல்லி இருக்கார் பாருங்க,’ என்றான். ‘நீங்க அதைப் பாருங்க, நா கொஞ்சம் டீ போட்டு எடுத்துகிட்டு வர்ரேன்.’ என்று சொல்லி, பதிலை எதிர்பார்க்காமல் சமையலறைக்குப் போனான்.
மனம் தன் அலைச்சலைத் துவங்கி இருந்தது- வயதாகிப் போன அம்மாவுக்கு முன்போல முன் தயாரிப்புகளோடு சமையலறையைப் பராமரிக்க முடிவதில்லை. தனக்கும் முன்போல முன் தயாரிப்புகள் செய்யத் தோன்றுவதில்லை, என்று ஒரு புறம் யோசனை ஓடியது. தேநீருக்கு இஞ்சியைத் தோல் சீவினான். வெந்நீர் கொதிக்கத் துவங்கியபோது, அவசரமாக ஒரு கைப்பிடி அளவுள்ள கருங்கல்லால் இஞ்சியை ஒரே நசுக்காக நசுக்கி எடுத்து நீரில் போட்டான்.
கருங்கல் பல பத்தாண்டுகளாகச் சமையலறையில் இருக்கிறது. கைபட்டுப் பட்டு சிறிது சொரசொரப்புகூட இல்லாது மொழுக்கென்று ஆகி இருந்தது. ஆனால் எண்பதுகளின் இறுதிகளில் இருக்கிற அம்மாவின் மனது மட்டும் முன்னெப்போதையும் விட அதிக நெருடல்களோடு, கவலைகளோடு, எந்நேரம் பிறருக்குக் காயம் ஏற்படுத்துமோ என்ற அச்சத்தைக் கொடுக்கும் விதம் சொரசொரப்பு கூடிக்கொண்டே வருவது ஏன் என்று யோசித்தான். கவனம் சற்று அடுப்பின் மீது திரும்பியது. கொஞ்சம் ஏலக்காய்ப் பொடியை நீரில் போட்டான். நீர் கொதித்தது. மூன்றுக்கு நான்காக ஸ்பூன்களால் டீத்தூளைப் போட்டு அடுப்பை அணைத்து, வெந்நீரை மூடினான்.
இதைத்தான் டம் டீ என்பார்களா என்று கேள்வி எழுந்தது. எப்போதோ வட இந்தியாவில் பயணம் போகிறபோது அடிக்கடி கேட்ட சொல். இதைக் கூகிளில் தேடினால் கிடைக்காமலா போகப் போகிறது என்றும் தோன்றியது. ஓ, பால் இருக்கா? முன்னறைக்குப் போய் ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்தால் பால் இல்லை. ஃப்ரீஸரில் இருக்கா? உறைந்த பாறையாக ஒரு பை. அதைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு பக்கம் தன்னிரக்கம் அலையாக எழுந்து நெஞ்சை மூடியது. அம்மா மீது கொஞ்சம் கோபம் வந்தது, ஆனால் பரிதாபமாகவும் இருந்தது. அந்த வயதுக்குத் தன்னால் நடக்கக் கூட முடியுமா? இவள் தினம் சமைக்கிறாள். ரொம்பப் புலம்புகிறாள், தாங்க முடியவில்லை. ஆனால் வேலை வேலை என்று விளக்கிலிருந்து தப்பித்த பூதம் போல சுற்றி இருப்பவர்களை எரிச்சல் ஊட்டுமளவு வேலை செய்கிறாள். வேலை கொடு என்று கூடக் கேட்பதில்லை, தேடி எடுத்துச் செய்கிறாள். எப்போ கீழே விழுவாளோ என்ற பதட்டம் தன்னை ஆழமாகப் பீடித்திருக்கிறது என்று சங்கரனுக்குத் தெரிந்து பல வருடங்களாயின. ஊரில் படுக்கையறை, மாடியில். அம்மா, கீழ்த் தளத்தில் தன் அறையில் உறங்குகிறாள். பாதி நாட்கள் நடு இரவில், இரண்டு மணிக்கு, மூன்று மணிக்கு ஏதோ திடும் என்று சப்தம் கேட்டது போலத் தோன்றி படபடக்கும் இதயத்துடிப்பை அடக்கிக் கொண்டு, கீழிறங்கிப் போவான். விளக்கைப் போட்டால் வீட்டில் மற்றவர்கள் விழிப்பார்கள். அப்புறம் காலையில் வேலைக்குப் போகிறவர்கள் எல்லார் முகத்திலும் கடுப்பு தெரியும், ராத்தூக்கத்தைக் கெடுக்கிறான் என்ற எரிச்சலை அவர்களால் மட்டுப்படுத்த முடியாது.
ஆனால் தொண்ணூற்றை நெருங்கிக் கொண்டிருக்கும் கிழவி தனியாகத் தூங்குகிறாள். நடுநடுவே எழுந்து பாத்ரூமுக்குப் போகாமல் இருக்க மாட்டாள். எங்கே எப்போ விழுவாளோ என்ற பயம் எப்போதோ பிடித்தாட்டத் துவங்கியாயிற்று. சென்னைக்கு வந்தால் மூன்றறை வீட்டில் அம்மாவின் ஒவ்வொரு அசைவும் இரவில் இவனுக்குத் தெரியும். தன் உடம்பு ஒரு பகுதி தூங்குகிறது, இன்னொரு பகுதி காவல் நாய் போல எந்நேரமும் சத்தம், ஒளி எது மாறினாலும் எழுந்து குரைக்கிறது என்று நினைத்தான்.
ஆ, பால். பத்து நிமிடம் ஆச்சு, இன்னும் டீயைப் போடுவதில் முன்னேற்றத்தைக் காணோம். ஏதோ விழித்துக் கொண்டே பகல் கனவு… ஃப்ரிட்ஜுக்குப் போக நகர்ந்தான். ஏதோ தோன்றி பின்னே பார்த்தால், பக்கெட் தண்ணீரில் ஒரு பால் பை மிதந்தது. யார்… நானேதானா… எப்படி நினைவே இல்லை…. இப்படி சமீபத்து நடப்புகள் பலதும் தன் கவனத்தில் பற்றுவதே இல்லை… மறதி இப்படியா வந்து ஆட்டும்?
இருந்தாலும், ஃப்ரிட்ஜில் பால் கொஞ்சமாவது வைக்க வேண்டும் என்பது மட்டும் வேலைப் பூதமான அம்மாவுக்கு ஏன் நினைவிருப்பதில்லை. தயிரும்தான். வர வரப் பாதி நாட்கள் அதுவும் இருப்பதில்லை.
தனக்குத்தான் புத்தி எங்கே போகிறது. பிரச்சினை இருக்கிறதென்றால் அதை அதிரடி நடவடிக்கையாய் இயங்கி முன்னதாகத் தீர்த்தால் என்ன? காலை பத்து மணிக்கே சமையலை முடித்து விட்டால் அம்மாவுக்கு வேலை இருக்காது. அப்போதே பால் காய்ச்சி ஃப்ரிட்ஜிலும் வைத்து விடலாம். நான் தான் என்ன வெட்டி முறிக்கிறேன்? எப்பப் பாத்தாலும் என்ன புத்தகம் படிக்கறது? வேலையில்லாதவன் பூனையைச் சவரம் செய்தது மாதிரி. புத்தகம் படிக்கவும்தான் இப்போது கசக்கிறது என்று சொல்கிறாயே? மனது தன்னைத் தானே குற்றக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. நாய் ஓட்டமும் ஓடியது.
பால் காய்ச்சப் பாத்திரம் எடுத்து வந்தான். பாக்கெட்டை வெட்டி, பாலை அதில் ஊற்றி, காஸ் அடுப்பை ஏற்றினான். காய வைத்தான். வந்தவர் அந்த விருந்தறையில் என்ன செய்கிறார் என்று ஒரு எட்டு பார்த்தான். அவர் முன்போல அந்த முதுகு இல்லாத ஸ்டூலில் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன படிக்கிறாரோ, நான் சுட்டியதையா, இல்லை வேறெதையோவா?
அடுப்படிக்குப் போனான். இன்னும் இரண்டு மூன்று நிமிடத்தில் பால் காய்ச்சியாகி விடும். ஒரு டீ வடிகட்டியை எடுத்தான், டீத் தண்ணீர்ப் பாத்திரத்தைக் கிடுக்கியால் பிடித்து வடிகட்டி வழியே டம்ளர்களில் மூவருக்கு ஊற்றினான். பாலைப் பார்த்தபடி இருந்தான். அது வேறு திடீரென்று பொங்கி விடும். பொங்கத் துவங்கினாற் போல இருந்தது. பதட்டமாக டீ பாத்திரத்தைக் கீழே வைத்து விட்டுத் திரும்பும்போது பால் கோபமாக நுரைத்து எழுந்து பாத்திரத்து விளிம்புக்கு வந்து விட்டது. அடுப்பை அணைத்தான். வழியவில்லை.
டீ தயார். சர்க்கரை போட்டான். ஆற்றினான். அம்மாவுக்கு முதலில். வந்திருப்பவருக்கு அப்புறம். கடைசியில் தனக்கு. ஒரு பெரிய சுமை இறங்கினாற்போல இருந்தது. எடுத்துப் போய், வெளி அறையில் அமர்ந்தான்.
அவர் டீயை அருந்தி முடித்திருந்தார். ‘சார், அஞ்சரை ஆயிடுத்து. நான் கிளம்பறேன்.’ என்றார். என்னது இப்படி, என்றான். ஆனால் அவர் சொன்னதும் நியாயம். ஏழு மணி அளவில் காஞ்சிபுரத்தில் இருக்கணுமென்றால் இப்போது கிளம்பியே ஆக வேண்டும். தன் டீயை அவசரமாகக் குடித்து விட்டு, சட்டையைப் போட்டுக் கொண்டு, அவரோடு பஸ் ஸ்டாண்ட் வரை போய்க் கொண்டு விடக் கிளம்பினான்.
நேற்றும் சரி, இன்றும் சரி மனசு சரியில்லை. எதையும் இருந்து யோசிக்க முடியாத பதட்டம் உடம்பில் நிலவுகிறது. அவ்வப்போது கொஞ்சம் வாந்தி எடுத்தால் சரியாகும் என்று கூடத் தோன்றுகிறது. (உருவகம் இல்லை. தூலமான வயிற்றுப் பிரச்சினைதான்.) அதே நேரம் அப்படிச் செய்ய முயன்றால் வெறும் முயற்சிதான் எஞ்சும், ஒன்றும் வராது என்றும் தோன்றுகிறது, தோன்றியது.
வேறு எங்கோ சில சிக்கல்கள், முடிச்சு கொஞ்சம் இறுகிப் போய் விடுவிக்கவும் முடியாமல், வெட்டவும் முடியாமல் இருப்பதால் ஒரு பதட்டம். இன்னொன்று, மொத்த வாழ்க்கை மீதுமே கசப்பு எழுந்திருக்கிறது. அதை எப்படி தவிர்ப்பது என்று தெரியவில்லை.
ஒரு வாரமாகவே உறங்க முடியவில்லை. கோழித் தூக்கம்தான் வருகிறது, இரவில். போர்த்தினால் வியர்க்கிறது. எடுத்தால் குளிர்கிறது. உட்கார்ந்தால் சோர்வாக இருக்கிறது. படுத்தால் உடல் வலிக்கிறது.
வெளியில் எங்காவது நடந்து விட்டு வரலாம் என்று யோசித்தால் வெளியெங்கும் குப்பை, தூசு, கடும் ஒலிகள், ஒவ்வாமையைக் கொணரும் அரசியல் சுவரொட்டிகள், கடற்கரையைக் கூட விட்டு வைக்கவில்லை மக்கள். நண்பர்கள் வீடுகளுக்குப் போகலாம் என்று யோசித்தால் பலருக்கு உடல் நிலை சரியில்லை. சிலருக்கு வாழ்க்கைப் பிரச்சினைகள். ஒப்பீட்டில் தனக்குத்தான் பிரச்சினைகள் குறைவு என்று கூடத் தோன்றுகிறது.
வந்தவர் பஸ் ஸ்டாண்டில் இரண்டு மூன்று பஸ்களை போக விட்டு உட்கார்ந்திருந்தார். அவருக்கும் இப்படி வந்த உடனே திரும்பிப் போவது பற்றி சலிப்பாக இருந்திருக்க வேண்டும். ஏதாவது அர்த்த புஷ்டியோடு பேசணும் என்று நினைத்து ஒன்றிரண்டு தலைப்புகளைத் துவங்கினான். எதுவும் பிடி கிடைத்துப் பற்றவில்லை. கடைசியில் ஒரு பஸ்ஸைக் காட்டி, இதை விடாதீங்க, நேர கிண்டி கிட்ட சின்னமலை ஸ்டாப்ல கொண்டு போய் விடும், அங்கே இறங்கி வேற பஸ் பிடிச்சு கிண்டிக்குப் போயிடலாம், என்றான்.
அவர் போனபிறகு சங்கரனுக்கு ஒன்றும் ஓடவில்லை. பஸ் ஸ்டாப் அருகே கடையில் காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பியவன், நெடுநேரம் இலக்கின்றி ஏதேதோ செய்து விட்டு, பத்து பேர்கூட பார்ப்பதற்கான சாத்தியமில்லாத வலைப் பக்கத்தில் சில பதிவுகளை அப்டேட் செய்தான். (எல்லாம் மேலை எழுத்தாளர்கள். ஒன்று சமீபத்து வடக்கிந்திய வறட்சியால் கொண்டைக் கடலைக்கு உலகச் சந்தையில் விலை எப்படி உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டது என்பது ஒரு பதிவு.) பதிவில் இருந்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் காப்காவின் கோடரிதான் என்றாலும்கூட இந்த ஒவ்வாமை மனதுக்குள்ளிருந்தும், உடலிலிருந்தும் எழுந்து அலையலையாக அடித்துப் போயிற்று.
அதே கலக்கம் சில நாட்களாகவே நீடிக்கிறது. அடிவயிற்றிலிருந்து ஏதோ அச்சம் எழுகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்ன செய்வது என்பதும் தெரியவில்லை. மனித வாழ்க்கை எப்படி இத்தனை தூரம் ஏதுமே இல்லாத வெத்தாக மாற முடியும்? அதுவும் பார்த்துக் கொண்டே இருக்கையில் எப்படி இது தனக்கே நடந்தது?
பல்லைத் தேய்த்தபடி, தொண்ணூறு வயதை நெருங்கப் போகிற அம்மா குனிந்து வாயில் படிக்கட்டில் அரிசி மாவால் சுழிச் சுழியாக இழை இழுத்துக் கோலம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன உந்துகிறது இந்த வேலைப் பூதத்தை? அது தன்னிடம் ஏன் இல்லை? உயிர் மரபணுச் சங்கிலி தன்னிடம் எப்படிச் செயலற்றுப் போச்சு?
அம்மா வேலைப் பூதமென்றால் தான் நாளங்காடியின் காவலுக்கு அமர்ந்த சதுக்கப் பூதம், கேள்விப் பூதம் என்று நினைத்தான். எதிரே இருந்த மொத்த நாளின் நீளம் பயமுறுத்தியது.