குளக்கரை

[stextbox id=”info” caption=”சர்வாதிகாரத்தின் உயரம்”]

லூசியைப் போல இன்னமும் எலும்புக் கூடாகாமல் பாதுகாக்கப்படும் இன்னொரு உடல் ரஷ்யாவில் உண்டு. அதை வைத்துக் கொண்டு ரஷ்யர் நடத்தும் அரசியல் சூதாட்டங்கள் பல என்றாலும், யூரோப்பியத்துக்குத் தெண்டனிட்டுப் பழகிய பல ஆயிரம் பேர் உலகெங்கும் பற்பல நாடுகளிலும் உண்டு. அவர்கள் இந்த உடலின் முன்னாள் உயிராகவிருந்த ஒரு கொடுங்கோலரின் நாமஜெபம் செய்து கொண்டு இன்னமும் அரசியல் நடத்துகிறார்கள்.

இந்த உடலில் சுமார் 65 ஆண்டுகள் முன்பு வரை உயிரோடு உலவிய மனிதரின் பெயர்  ஜோஸஃப் ஸ்டாலின். இந்தியப் பல்கலைகளில் இந்த மனிதருடைய பக்தர்கள் நிறையப் பேர் ஆய்வாளர்கள் என்ற பெயரில் உலவி அப்பாவி மாணவர்களைத் தம்ஜெபங்களால்மூளை சலவை செய்வதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். நூலகங்களில் அடுக்கடுக்காக இந்த ஜெப நூல்கள் இந்திய நாகரீகத்தை அலசி விட்டதாக அறிவிப்போடு நிரம்பி வழிகின்றனவா, மாணவர்களுக்கு இந்தப் புத்தகச் சுவரை எப்படித் தாண்ட முடியப் போகிறது? அவர்களும் அதே சுவரொட்டிகளை ஒட்டித் தாமும் நிபுணர்களாகும் முயற்சியிலேயே இறங்குகிறார்கள்.

ஆனால் ஸ்டாலினின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த நாட்டிலோ நிலைமை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் மாறி மாறி வந்து இப்போது ஸ்டாலினின் புகழ் மாலைகள் மறுபடி காற்று வெளியை நிரப்புவதாகத் தெரிகிறது.  இடையில் அந்தப் பெயரை உச்சரித்தவர்களின் அதிகாரம் உடனே காலியாகி விடும் நிலை சில பத்தாண்டுகள் இருந்தது. அதற்கு முன் ஸ்டாலின் என்ற பெயரை உச்சரிக்கக் கூட மக்கள் பயந்து அவருடைய அல்லக்கைகள் முன்பு மண்டியிட்ட காலமும் இருந்தது. ரஷ்யர்களுக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு ஊஞ்சலாடுவது என்று நாம் ஊகிக்கலாம். அல்லது பனிச்சறுக்கலாக இருக்குமோ? இந்தியர்களின் அபிமானப் பொழுதுபோக்கு நடுக்கிணற்றில் அந்தரத்தில் தொங்குவது என்று நமக்கு ஏற்கனவே தெரியும். அதை விடப் பனிச்சறுக்கலே மேல் என்பதுதான் மேற்சொன்ன நிபுணர்களின் அறுதியான முடிவு.

(பல மிலியன் மக்களைக் கொன்று குவித்தவர்களின் அதிகாரமே பொதுவாகக் கொடி கட்டிப் பறந்ததாக அறியப்படும். அப்படி அறிவதற்குப் பெயர்வரலாறு’. பல லட்சம் பேரைக் கொல்லாத ஆட்சியாளர்களை வரலாறு அதிகம் கவனிப்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை. கொன்று விட்டு, பெரும் அதிகாரத்தைப் பிடித்த பின்னர், திடீரென்று சாக பட்சிணியாகத் தான் மாறிவிட்டதாகவும், அப்படி மனம் மாறி விட்டதால்புனிதராகிவிட்டதாக அடையாளம் காட்டப்படும் சிலரை மட்டும் கருதும். அவர்களுடைய ஆட்சிக் குறிகளே நாட்டுடைய ஆட்சியின் முத்திரையாகக் கூட மாறும். மனித புத்தியின் வினோதங்களை யாரே அறிய முடியும்? கூகிளின் செயற்கை அறிவு ஆய்வாளர்கள் இந்தக் கூக்ளியை எல்லாம் எப்படி ஆடப் போகிறார்களோ? அதுவரை நாம் தானியங்கி கார்கள், ட்ரக்குகள், ரயில்கள், மருத்துவ மனைகள், ஏன் ராணுவங்களிலிருந்து தப்பிக்கலாம் என்று தோன்றுகிறது.)

ஸ்டாலின் என்ற பெருங்கொலைகார் பற்றி ரஷ்யர்கள் இன்னமும் முடிவெடுக்க முடியாமல் பனியில் சறுக்கிய வண்ணம்தான் இருக்கிறார்கள் என்று இந்தச் சுட்டியில் உள்ள கட்டுரை சொல்கிறது. இதுவோ ஒரு திரைப்படவிமர்சனம்’. ஒரு பக்கம் கூட இராது. இதில் இத்தனை அடங்கி இருக்கிறதா என்றால், சொல்லாமல் மறைக்கப்படுவனவற்றை நாம் தான் அகழ்ந்தெடுக்க வேண்டும். நாமும் புதைகுழி ஆய்வில் இறங்கவில்லை என்றால் அப்புறம் யார் மதிப்பார்கள்? 🙂

விமர்சனம் சமீபத்தில் ரஷ்யாவில் ஸ்டாலினிய ஜெபத்துக்கு வலு கூடி வருவதைப் பதிவு செய்கிறது. அதற்கு ஒரு காரணம் இப்போதைய ஆளுநர் புடின். அவருக்கு ஸ்டாலினைப் போல மீசை இல்லை, கிட்டத்தட்ட அதே உயரம் என்றும் தோன்றுகிறது. புடின் 5 அடி 6 அங்குலம் உயரம் என்றால், ஸ்டாலின் சுமார் 5 அடி 5 அங்குலம் இருந்தார். ஒரு அங்குலம் கூட்டிக் குறைத்தால் அது பற்றி என்ன? புடினுக்குத் தான் ஸ்டாலின் அளவு அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்று யோசனை போலத் தெரிகிறது. ஸ்டாலின் கூட இருந்தவர்களை எப்போது கொல்ல ஆணை பிறப்பிப்பார் என்ற பயத்தில் வாழ வைத்திருந்தார். புடின் அவர்களுடைய கொள்ளைச் சொத்துகளை எப்போது பறிப்பார் என்ற பயத்தில் வாழ வைத்திருக்கிறார். முன்பு மனச் சாட்சியே இல்லாத கொலைகாரர்களின் சிறு கூட்டம் ரஷ்ய ஆட்சியில் இருந்தது. இப்போது மனச் சாட்சியே இல்லாத கொள்ளையரின் கும்பல் தேசியம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு ஆட்சி நடத்துகிறது.

குறிப்பின் கடைசியில் உள்ள சுட்டி சமிபத்தில் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஒரு திரைப்படம் பற்றியது. அந்தத் திரைப்படத்தை இயக்கியவர் ஒரு ஸ்காட்லாந்தியர். ஆர்மாண்டோ இயனூச்சி, இங்கிலிஷ் உச்சரிப்பு. (பெயரைப் பார்த்தால் இவர் இத்தாலிய வம்சாவளியினர் என்று தோன்றும். இதாலிய மொழி உச்சரிப்பு அர்மாண்டோ என்னூச்சி)

படத்தின் பெயர்த டெத் ஆஃப் ஸ்டாலின்.’  இது திடீரென்று மரணத்தைச் சந்தித்த ஸ்டாலினின் உடல் விரிப்பில் கிடக்கையில் ரஷ்ய ஆட்சியாளர் குழுவினர் இதை எப்படிக் கையாளவது என்று பெரும் குழப்பத்தில் இருக்கும் நிலையிலிருந்து துவங்கிக் கதையை நடத்துகிறதாம்.  2016 இல் வெளியான ஜாஷுவா ரூபென்ஸ்டைன் என்பார் எழுதியத லாஸ்ட் டேஸ் ஆஃப் ஸ்டாலின்என்ற புத்தகம் ஸ்டாலின் தனக்குப் பின் யார் என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லாமல் மரித்த நிலையில் ரஷ்யா எப்படிப் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது என்ற வரலாற்றை விவரமாக எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

புடின் ஏன் இந்தப் படத்தைத் தடை செய்தார்? எதேச்சாதிகாரத்தைக் கைக்கொண்டவர்கள் மனநிலை பற்றி நாம் ஊகிப்பது அத்தனை பலன் தராது. ஆனால் ஒரு கருத்துபடம் தற்செயலாக ஸ்டாலினி உயரக் குறைவு பற்றியும், அவர் படங்களில் காணப்படுவது போலன்றி சிறிய உருவினர் என்பதையும் காட்டி விடுகிறது. புடினும் இதே போலப் பல ரஷ்யர்களாலும், இதர உலக அரசியல் வாதிகளாலும் உயரம் குறைந்தவர் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். எதேச்சாதிகாரிகளுக்குத் தம் ஆகிருதி பிரும்மாண்டமானது என்று காட்ட ஒரு வலுக்கட்டாயம் உண்டு. புடின் இந்தப்படம் மறைமுகமாகத் தன் உயரத்தைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொண்டிருக்கலாம் என்பது ஓர் ஊகம். காரணம் இத்தனை மெலிவானதாக இருக்க வாய்ப்புக் குறைவு என்பது எம் கருத்து.

ஸ்டாலின் தன்னைப் பற்றிய பல விவரங்கள் மக்களுக்குத் தெரியாமல் இருக்கக் கவனம் எடுத்துக் கொண்டவர் என்று ரஷ்ய வரலாறு பற்றிய ஒரு தளம் சொல்கிறது. உதாரணமாக அவருடைய இயற்பெயர் (Iosif Vissarionovich Dzhugashvili – ஐயோசிஃப் விஸ்ஸரியானோவிச் ட்ஷுகாஸ்விலி) ஸ்டாலின் என்ற பெயரை அவராக உருவாக்கி மேற்கொண்டார். இரும்பு மனிதன் என்று பொருளாம். உருக்கிரும்பு போலிருக்கிறது. அவருடைய பிராபல்யம் குருஷ்சாவின் ஒரே தட்டலில் நொறுங்கிப் போயிற்று. ஸ்டாலினின் இதர மறைப்புகள் பற்றிய சில தகவல்களுக்கு இங்கே செல்லலாம். (https://historyofrussia.org/joseph-stalin-height/)

அர்மாண்டோ இயனூச்சியின் திரைப்படம் பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

https://www.newyorker.com/news/our-columnists/the-death-of-stalin-captures-the-terrifying-absurdity-of-a-tyrant

[/stextbox]

[stextbox id=”info” caption=”பிட் காயினும் இன்றைய உலகமும்”]

மக்களைத் திரளாக ஆளும் பல விஷயங்களும் அல்லது சக்திகளும், சிறு குழுக்கள் உச்சியில் அமர்ந்து கொண்டு, நேரடி அதிகாரத்தின் மூலம் ஆளாமல், கவர்ச்சியான தூண்டில் புழுக்களைக் கொண்டு திரளை வழி நடத்தும் முறையையே கையாள்கின்றன என்று சொல்லலாம்.

இந்த அதிகார அமைப்புக்கு அவசியமானது, அன்றாட வாழ்வை நடத்தவே மக்கள் திரளுக்கு ஏற்படும் அவதியும், அந்த அவதியிலிருந்து தம்மை, தாம் சார்ந்த சிறு குழுக்களை மீட்டு மேலான வாழ்வைப் பெற அவர்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என்றறிந்து அவற்றைப் பயன்படுத்துவதில் சிறிதும் தயக்கமின்றி இருப்பதும். அதிகாரம் என்பதே மக்கள் தெரிந்தும் தெரியாமலும் தம் மீது ஆட்சி நடத்தும் உரிமையை இந்தக் குழுக்களிடம் ஒப்படைப்பதுதான்.

இந்த அமைப்பின் உரு என்று எடுத்தால், அனேக இடங்களில் காணக் கிடைப்பது ஒரு பிரமிட் அமைப்பு.

கீழுள்ளவர்கள் தாமும் உச்சிக்குப் போய் விடலாம் என்ற பேதமையோடே உலவுவதும், செங்குத்தான படிகளே எதிரே இருந்தாலும் அவை தம் சக்திக்கு உட்பட்டவை என்ற பிரமையில் அம்மக்கள் வாழும்படி செய்வதும் இந்த பிரமிட் அமைப்பின் அடிப்படைக் குணங்கள்.

இதைப் புத்தியுள்ள எவரும் உடனே கண்டு விடுவார்களே, சிந்திக்கத் தெரியாதவர்கள்தான் இப்படி ஒரு அமைப்பில் சிக்குவார்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் ஏன் ஒரு பிரும்மாண்டமான பிரமிட் அமைப்பில் சிக்கி வாழ்கிறார்கள் என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டுப் பயனில்லை. மேட்ரிக்ஸின் உள்ளே வாழ்வோருக்கு அது பிரமையெனும் புழுக்கூடு, தாம் அந்தப் புழுதான் என்பது தெரியாது இருப்பதாகக் காட்டிய அந்தத் திரைக்கதை மீபொருண்மை நோக்கு கொண்டது என்று தோன்றினாலும், வாழ்வின் பெரும்பகுதி மீபொருண்மைச் சிந்தனையில்தான் சிக்கியுள்ளது. பருப்பொருள் ஆய்வு என்பது அப்படி ஒன்றும் விடுவிப்புக்கு இட்டுச் செல்வதில்லை.

ஆனால் சிந்திப்பது என்பது அப்படி ஒன்றும் எளிய செயலோ, திறமையோ, நடத்தையோ இல்லை. அதற்குச் சில சிறப்புக் குணங்களும், சீரிய முயற்சியும் தேவை. நம்மில் பெரும்பாலானோர் சிந்திக்க வழியில்லாமலோ, அதற்கான முயற்சியில்லாமலோ, அதை விரும்பாமலோதான் வாழ்வை நடத்துகிறோம். அல்லது சிந்திப்பதைப் பரந்து பட்ட தளத்தில் வாழ்வின் மீது செலுத்திப் பார்ப்பது கடினமாகவும், பெரும் முயற்சியைக் கேட்பதாகவும் இருப்பதால் சுலப வழிகளைப் பயன்படுத்தி நடந்து கொண்டு விட்டு, சிந்திப்பதாக நம்மை நாமே எத்துகிறோம். மனிதக் குரங்குக்கு எத்தனையோ வித வன விலங்குகளின் நடத்தைகளும் அத்துபடி என்பதால் நம் நடத்தை என்பதை அப்படிச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தவிர மேலே கொடுக்கப்பட்ட பிரமிடிய அமைப்பு என்பது ஒரு கருத்துரு. நிஜ வாழ்வின் சிக்கலான உருத் தெளிவின்மையோடு காணப்படும் ஏராளமான அமைப்புகள் இதன் பலவகை மறு உருவாக்கங்கள்தான். பிரமிடிய அமைப்பு என்பது ஒரு வகைச் சாராம்சம். சாராம்சம் என்பது நமக்கு ஒரு கருத்துத் தெளிவைக் கொடுக்க உதவுமே அன்றி அதேதான் நிஜ வாழ்க்கை என்று களத்தில் இறங்கினால் நமக்குப் பெரும் சேதம்தான் கிட்டும்.

எனினும் அவ்வப்போது சில புத்திசாலிகள் நிர்வாண பிரமிடிய அமைப்பையே ஒரு நிறுவனமாக, ஒரு செயல் திறனுள்ள அமைப்பாக வெளிக்காட்டி, அதை நம்பித் தம் வாழ்வை அதன் மேம்படுதலுக்கு அடகு வைக்கும்படி ஊக்குவித்து அதில் வெற்றியும் காண்கிறார்கள்.  உதாரணமாக, கடைகள் இல்லாது விநியோகஸ்தர்கள் தம் சக்திக்கேற்ப பொருட்களைக் கொள்முதல் செய்து அவற்றை எப்படியோ விற்று, வரும் வருவாயில் ஒரு பங்கைத் தமக்கு வைத்துக் கொண்டு மீதிப் பங்கை பிரமிடின் பல தளங்களில் உள்ளவர்களுக்கு அனுப்பும் முறைதான் பெரும் வெற்றி பெற்றிருக்கிற ஒரு முன்மாதிரி.

ஆமாம், அரசியலிலும் சாம்ராஜ்யம், சக்கரவர்த்தி, குறுநில மன்னர்கள், அவர்களுக்குக் கீழே நில உடைமைக்காரர்கள், அதற்கும் கீழே கூலிக்காரர்கள் என்ற பண்டை அடுக்கு முறை இதுவேதான்.

இது இன்றைய நவீன கார்பொரேஷன்கள், பல வகை அரசுகள், பலவகை நிதி நிறுவனங்கள் எல்லாவற்றிலும் நேரடியாகவோ, மறை உருவாகவோ செயல்படும் ஒரு அமைப்பு.  பிரமிட் ஸ்கீம் என்றே கூட இவை இனம் காணப்படுகின்றன. சந்தாதாரர்களைப் பிடித்துக் கொணர்ந்தால் ஒருவருக்கு நிறுவனத்துக்குக் கிட்டும் சந்தா தொகையில் ஒரு பகுதியைச் சன்மானம் / ஊதியமாகக் கொடுப்பது என்ற சிறு தூண்டில் புழுவை வைத்துக் கொண்டு பெரும் நிறுவனங்களாக இந்த வகை அமைப்புகள் வளர்ந்திருக்கின்றன. பல வகை உலக நிறுவனத்து ஒப்பந்தக்கார உள்ளூர் கடைகள் இந்த அமைப்பின் ஒரு வடிவம்தான். ப்ளாஸ்டிக் கண்டெய்னர்களில் துவங்கி, சமையல் பாத்திரங்கள், பல வகை சாதனங்கள், ஷாம்பூ, சோப்புகள், உணவுப் பண்டங்கள் என்று அடிக்கடி நுகரப்படும் பொருட்களும், எல்லாக் குடும்பங்களுக்கும் தேவையான பொருட்களுமாகக் கலந்து கட்டி இந்த அமைப்பின் தலைமையகம் உற்பத்தி செய்து கடைசித் தளக் கிளை வரை விநியோகிக்கும். மக்டோனால்ட்ஸும், கே எஃப் ஸியும் இது போன்ற அமைப்புகளே.

இவற்றில் பல மதச் சாய்வுகள் கொண்ட நிறுவனங்கள். அந்நிறுவனங்கள் துவக்கத்தில் பண வருவாய் எனும் தூண்டில் புழுவால் பல வகை மனிதரை உள்ளிழுத்தாலும், நாளா வட்டத்தில் அவர்களைத் தம் மதக்குழுவுக்குள் கொண்டு வந்துவிடப் பல வகை அழுத்தங்களோடு சில வசதிகளையும் கொடுப்பதாகக் காட்டுவார்கள்.

மிகச் சமீபத்து பிரமிட் ஸ்கீம்களில் ஒன்று பிட்காயின் எனப்படும் ஒரு தூல உருவில்லாத நாணய வகை. இதை யாரும்அச்சிடலாம்அல்லதுவார்க்கலாம்’. ‘சுரங்கத்திலிருந்து தோண்டுவதானபிம்பத்தைப் பயன்படுத்திமைனிங் அ காயின்என்று சொல்கிறார்கள். நாணயத்தை யார் சுரங்கத்திலிருந்து தோண்ட முடியும்? குழப்படியான உருவகம். அதைத்தான் கீழே உள்ள செய்திக்கான சுட்டி கொண்டிருக்கிறது. பிட்காயின் மைனிங் என்று எழுதப்பட்ட தலையங்கம், பிட்காயின் மிண்டிங் என்று இருந்தாலாவது கொஞ்சம் அர்த்தம் கிட்டும்.

உலகில் மிக்க குளிரான சீதோஷ்ணம் நிலவும் நாடுகளில் ஒன்று ஐஸ்லாந்து. அங்கு பல பெரும் தகவல் பண்ணைகள் இருக்கின்றன. கூகிள், அமேஸான் போன்ற பல க்ளௌட் கம்ப்யூடிங் மூலம் உலகுக்கு தம் சேவைகளை அளிக்கும் தகவல் பொறியியல் நிறுவனங்களுக்கு இந்நாடு முக்கியமானது. அத்தனை குளிரால், பல்லாயிரக்கணக்கான பெரும் கணினி சேவை அளிப்பு எந்திரங்களை ஓரிடத்தில் வைத்திருந்தாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் உஷ்ணம் எளிதில் சமனப்பட்டு விடும். தவிர இந்நாட்டில் எந்த உஷ்ணத்தையும் சேகரித்து அதை ஆற்றுப்படுத்தி அதிலிருந்து மின் சக்தி போன்ற சக்திகளைப் பெறும் தொழில் நுட்பமும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த ஐஸ்லாந்தில் மேற்படி பிட்காயின் எனப்படும் வலை உலக கரன்ஸியைஅச்சிடும்கணினிகளில் 600 கணினிகள் சமீபத்தில் திருட்டுப் போனதாக அஸோஸியேடட் ப்ரஸ் என்னும் உலகச் செய்தி சேகரிப்பு நிறுவனம் சொல்கிறதாம். திருடர்களில் பெரும்பாலாரைப் பிடித்து விட்டாலும், திருடப்பட்ட கணினிகள் அம்போதான். அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பது மிகக் கடினம் என்கிறது செய்தி.

இறுதிச் செய்தியில் மலேசியாவில் ஒன்பது நபர்கள் பிடிபட்டதாகவும், 58 எந்திரங்கள் திரும்பக் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் இன்னொரு செய்தி சொல்கிறது. உலகெங்கும் இப்படி பிட்காயின் என்னும் மாற்றுக் கரன்ஸியைத் தயாரிக்க உதவும் கணினிகளைத் திருட ஒரு கூட்டணி உருவாகி இருப்பதாகத் தெரிகிறது.  பின்னே, கள்ள நோட்டு தயாரிக்க எத்தனை முதலீடு செய்து பல நாடுகளின் கரன்ஸி நோட்டுகளை உலகக் குற்றக் கும்பல்கள் அச்சடித்து சுழற்சியில் விடுகின்றன. இந்தக் கரன்ஸி நோட்டுகளையே காலாவதி செய்ய இன்னொரு கும்பல் முயன்றால் விடுவார்களா? அந்தக் கணினிகளைத் திருடுவதுதான் எத்தனை சுலபமான வழி பிட்காயின் பிரமிட் ஸ்கீமை உடைக்க?

உலகளவில் பெரும் வங்கிகளாக உருவெடுத்தன எல்லாமே இப்போது பெரும் திருடர்களுக்கும், கருப்புப் பணத்தைச் சலவை செய்வோருக்கும், பல நாடுகளிலிருந்து பெரும் நிதியைக் கொள்ளை அடித்து விட்டுத் தப்பிக்கும் அரசியல் வாதிகளுக்கும் உதவும் ஸ்தாபனங்களாக ஆகி விட்டிருக்கின்றன. இவையும் பிட்காயினின் எழுச்சியைத் தம் வியாபாரத்துக்கு ஒரு சவாலாகக் கருதும் அமைப்புகள்தான். இவையுமே பிட்காயின் வளராமல் தடுக்க நினைக்கும் அமைப்புகளாகத்தான் இருக்கும்.

இத்தனை எதிர்ப்பையும் தாண்டி பிட்காயின் என்பது உலகில் வளர்ந்து வருகிறது என்பது பிரமிட் அமைப்பின் வசீகரத்தையே நமக்குக் காட்டுகிறது.  பிரமிட் என்றாலே தீவிரமான சுரண்டல் அதைச் சுற்றி இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

https://slate.com/technology/2018/03/600-bitcoin-mining-computers-stolen-police-arrests.html?via=homepage_section_features

[/stextbox]
[stextbox id=”info” caption=”தானியங்கி இயந்திரம்”]

முன்பொரு நூற்றாண்டில் நூல் நூற்கும் எந்திரங்களும், நெசவு எந்திரங்களும் தம் வாழ்வாதாரத்தை அழிக்கின்றன என்று கருதிய தொழிலாளர்கள் அந்த எந்திரங்களை உடைத்து நொறுக்க முனைந்த கதை நம்மில் சிலருக்காவது தெரிந்திருக்கலாம். இது நடந்தது இங்கிலாந்தில், அந்த இயக்கத்தின் பெயர் லட்டைட். இயக்கம். இது குறித்துப் பல புனைகதைகள் புழங்குகின்றன. 18- 19 ஆம் நூற்றாண்டில் நடந்த இந்த எதிர்ப்பு இயக்கம் குறித்த விவரங்கள் நன்கு பதிவாகி இருப்பது போலத் தெரிகின்றன. இந்தச் சம்பவங்கள் பற்றியே நிறையப் புனை கதைகள் புழங்கும்போது நம் இந்திய வரலாற்றில் மூவாயிரம் வருடங்கள் முன்பு நடந்ததாகச் சொல்லப்படுகிற சம்பவங்கள் பற்றி அரசியல் சூதாடிகள் தினமும் மேடையேறி தாம் இட்டுக் கட்டியதை எல்லாம் நிஜம் என்று முழங்குவதை என்னவொரு அபத்தம் என்று நாம் அறிய இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?

லட்டைட்கள் உண்மையில் தொழில் நுட்பம் முன்னேறுவதை எதிர்க்கவில்லை. மாறாக தொழிற்சாலைகளும், எந்திர உற்பத்தியாளர்களும், மரபு வழிகளில் நெசவுத் தொழில் செய்தவர்களின் வாழ்வை அழிப்பது பற்றித் துளியும் கவலைப்படவோ, மாற்று வழிகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க எந்த நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் யோசிக்கவோ இல்லை என்பதையே எதிர்த்தனர் என்பது இன்றைய வரலாற்றாளர்களின் முடிவு. ஆனாலும் லட்டைட் என்ற சொல்லுக்கு அகராதியில்முன்னேற்றம்கொணரும் தொழில் நுட்பத்தை ஏற்க மறுக்கும், எதிர்க்கும், அழிக்க முயலும், தடை போட முயலும் மனிதர் என்றுதான் பொருள் கிட்டுகிறது. ஒரு சொல் எப்படி ஒரு இயக்கத்தின் பெயரையே கெடுக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

அதே வரலாற்றாளர்கள் வாழ்நிலைகள் மோசமாகிக் கொண்டே போகையில் தொழில் மயமாதலின் வேகம் கூடிக் கொண்டே போனதால் பற்பல மரபுத் தொழில் வல்லுநர்களும் திடீரென்று வறுமையில் ஆழ்த்தப்படும் நிலை உருவானதே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அந்தக் கால கட்டத்தில் தொழிலாளர்களுக்கென தொழிற்சங்கங்கள் இல்லை, நாடு தழுவிய தொழிலாளர் இயக்கங்களும் இல்லை, தொழிலாளர்களுக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பனவற்றை நிறுவி உள்ளனர். இதன் வண்டலாக நமக்குக் கிட்டுவது, தொழிலாளர்களுக்கு வேறெந்த வழியும் தெரியாத நிலையில், கிட்டத்து இலக்காகத் தெரிந்த எந்திரங்களைத் தாக்கி அழித்திருக்கின்றனர்.

இறுதிக் கணக்கில் எந்திரங்களின் சொந்தக்காரர்களான முதலீட்டாளர்களும், முதலியமும் கடும் வன்முறையை அவிழ்த்து விட்டு வென்றனர் என்று வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள்.

இந்த லட்டைட்களின் கதை நம்மை விட்டு அகலவேயில்லை. ஒவ்வொரு பெரும் தொழில் நுட்ப நகர்வுக்கும் எதிராக, பாதிக்கப்பட்ட மக்கள் குழுக்கள் கொடி பிடிப்பதும், யாரும் செவி மடுக்காத பட்சத்தில் வன்முறையில் இறங்குவதும் தொடர்ந்து நடந்து வந்த வண்ணம் இருப்பது, மனித சமூக அமைப்பில் எத்தனை தூரம் கற்க மறுப்பது என்ற குணம் ஊறி இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இது ஒன்றே சொல்லும், வரலாற்றிலிருந்து மனிதர் எதையும் கற்பது இல்லை, மாறாக அதை வக்கிரமாகப் பயன்படுத்தவே முயல்கிறார் என்பது நிரந்தர உண்மை என்று.

மனிதப் பகுத்தறிவு என்பதைக் கொண்டாடிப் பற்பலர் எழுதித் தள்ளுகிறார்கள். அவர்கள் யாருக்கும் பகுத்தறிவு என்பது ஏதோ ஒரு மந்திரக் கோல் என்ற புரிதலைத் தாண்டிய புரிதல் இருக்குமா என்பது ஐயமே. பகுத்தறிவை விட மனிதரிடம் சாதுரிய நோக்கு என்பது ஒன்றே ஆட்சி புரிகிறது. இதற்கும் பகுத்து அறிதலுக்கும் அதிகத் தொடர்பு இல்லை. பின்னது அறிவுத் திரட்டுக்கான முயற்சி. முன்னது வெற்றியைத் துரத்தும் அதிகாரப் பறிப்பு முயற்சி.

இருப்பினும் துன்பப்பட்டோருக்கு வழி என்ன என்பது எப்போதும் நம் முன் நிற்கும் கேள்வி. இதையும் லட்டைட்டுகளின் பாதையை மனிதர் தேர்ந்தெடுப்பதையும் ஒரு சேர நம் முன் நிறுத்தும் இன்றைக்கான சம்பவங்களின் தொகுப்பை ஒரு செய்தி அறிக்கை சொல்கிறது. கீழே உள்ள சுட்டியில் சமீபத்தில் நடந்த சில சாலை விபத்துகள் பற்றிய அலசல் கிட்டுகிறது. அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோ மாநகரத்தின் சுற்றுச் சூழலில் எங்கும் பெரும் கணினி/ தகவல் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பலவும் ஒரே ஊரில் தம் நிறுவனக் கட்டிட வளாகங்களில் 30- 40 ஆயிரம் ஊழியர்களைக் கூடக் கொள்ளுமளவு பெரும் நிறுவனங்கள்.

இந்த ஊழியர்கள் அனேகமாகதொழிலாளர்என்ற வகையில் சேர மாட்டார்கள். படித்து தொழில் நுட்பப் பயிற்சி பெற்று வேலை செய்வதால் இவர்கள் மத்திய தரத்து மனிதர்கள் என்றான வாழ்வைக் கொண்டவர்கள். பிற மாநிலங்கள், நாடுகளை ஒப்பிடும்போது, இவர்களுக்கு ஊதியம் நிறைய இருப்பது போல நமக்குத் தெரியும். என்றாலும் ஒரு சிறு பகுதியில் ஏராளமானவர்களுக்கு ஊதியம் அதிகமாகக் கிட்டினால் அந்த நிலப்பகுதியில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் விலை அதிகமாகும் என்பது பொருளாதாரத்தில் பால பாடம். குறிப்பாக இருப்பிடங்களுக்கான விலையோ, வாடகையோ ஆகாய உயரத்திற்குப் போய் விடுகின்றன. இவர்கள் தாம் வேலை செய்யும் ஊர்களிலிருந்து தூரங்களில் உள்ள ஊர்களில் வசிக்க நேர்கிறது. அமெரிக்காவில் பொது போக்குவரத்து அமைப்புகள் மிகக் குறைவு என்பது நமக்கு இந்நேரம் தெரிந்திருக்கும். இவர்கள் ஒவ்வொருவரும் கார்களை ஓட்டி வேலைக்கு வந்தால் கலிஃபோர்னியாவின் நெடுஞ்சாலைகள் ஏற்கனவே கடும் போக்குவரத்துச் சிக்கலில் இருக்கிற நிலைமை மாறி யாரு சாலைகளில் பயணம் மேற்கொள்ள முடியாத ஸ்தம்பிதம் வந்து விடும்.

இதைத் தவிர்க்க இந்தப் பெரு நிறுவனங்கள் இப்போது தம் ஊழியர்களுக்கு என்று பஸ்களை ஓட்டுகின்றன. இந்தப் பஸ்கள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் என்பதால் பொது ஜனங்கள் இவற்றில் பயணம் செய்ய முடியாது. ஆனால் இவை சாலைகளை நிரப்புகின்றன. பொது ஜனங்கள் இந்த பஸ்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவை ஏதும் இப்போதைக்கு வெல்லவில்லை. ஏனெனில் இந்தப் பெரு நிறுவனங்கள் கொணரும் ஏராளமான வருமானம் கலிஃபோர்னியா மாநிலத்துக்கு அத்தியாவசியமான வளம்.

இதே நிறுவனங்கள் இன்னொரு திக்கில் பயணித்து, கார்களும், ட்ரக்குகளும் தவிர பஸ்களும் ஓட்டுநர் இல்லாது தாமே இயங்கக் கூடியனவாக நிர்மாணிப்பதை ஒரு திட்டமாக மேற்கொண்டு அத்தகைய வண்டிகளை இப்போது இயக்க ஆரம்பித்திருக்கின்றனர். இவற்றில் சிலவற்றை வாடகைக் கார்களாக இயக்குகின்றனர்.

இதில் என்ன பிரச்சினை என்பீர்களாயின், இந்தக் கார்களைப் பொதுமக்கள் தாக்குவதாக வந்த அறிக்கையை நாம் கவனிக்க வேண்டும். இவை அதி ஜாக்கிரதையான வகையில் ஓட்டப்படுவது பலருக்கு எரிச்சலை ஊட்டுகிறது. தவிர பலருக்கு இவற்றில் ஓட்டுநர் இல்லை என்பது ஏதோ அச்சுறுத்தலாகத் தெரிகிறது.

இந்த வருடம் இதுவரை சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் ஆறு ஓட்டுநர் இல்லாத கார்களுக்கு நேர்ந்த விபத்துகளில் இரண்டு காரணமின்றி நடந்த தாக்குதல்கள் என்று செய்தி சொல்கிறது.

வேறொரு வகைச் சம்பவங்களில் அதே நகர மாந்தர் தானியங்கி எந்திரங்களை, குறிப்பாக காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ள ரோபாட்களைத் தாக்கிச் சேதப்படுத்தி இருப்பதும் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலாகாத் தலைவர் மனிதரின் வேலைகளைச் செய்யும் தானியங்கி ரோபாட்களுக்கு வரி விதிக்க முயன்றதும் தெரிய வந்திருக்கிறது. பொருட்களைச் சுமந்து டெலிவரி செய்யும் தானியங்கி எந்திரங்களுக்கு எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதித்து சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகர அமைப்பு ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இப்படிப் பட்ட சம்பவங்கள் துவக்க நிலையில் உள்ளன. தானியங்கிக் கார்களும், எந்திரங்களும் அன்றாட வாழ்வில் அதிகரிக்கும்போது தாக்குதல்களும் அதிகரிக்கும் என்று நாம் ஊகிக்கலாம்.

லட்டைட்டியம் நம் நடுவே சிறிதும் அழிவின்றி வாழ்கிறது.

https://www.theguardian.com/technology/2018/mar/06/california-self-driving-cars-attacked

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.