சூழலியல், காட்டுயிர்கள் குறித்து முழுமையான வண்ணத்தில் ஆங்கிலத்தில் பல இதழ்களை நாம் பார்த்திருப்போம். அவற்றில் நம்மை முதலில் கவர்வது வண்ணத்தில் பதியப்பட்டிருக்கும் படங்கள்தான். முழு பக்க அளவில் நான் பார்த்த Nature இதழ்கள் இன்றும் என் மனதில் மறையாத நினைவாக இருக்கின்றன. வழவழப்பான தாளில் காட்டுயிர்களைப் பற்றிய மிக உயிர்ப்பான சித்திரங்கள் பலதும் அவ்விதழ்களில் உண்டு. பெரிய ஆப்பிரிக்க யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், வேட்டைக்குத் தயாராக வியூகம் வகுக்கும் ஓநாய்கள், படையாக நின்று வெறிகொண்ட விழிகளோடு நிற்கும் செந்நாய்கள் என நாம் அறியாத உலகைக் காட்டும் புகைப்படங்கள் கொண்ட இதழ்கள் இன்றும் வருகின்றன. அதற்குப் பிறகு டேவிட் அட்டென்பர்ரோ, ரிச்சர்ட் மார்லோ போன்ற இயற்கையியலாளர்களின் காணொளிகளால் கவரப்பட்டேன். Planet Earth, Blue Planet என நம் வாழ்நாளில் பார்க்கக்கிடைக்காதக் காட்சிகளை தனது வாழ்நாள் முழுக்க பதிந்து வந்துள்ளார் டேவிட் அட்டென்பர்ரோ. அவரது வர்ணனைகள் வேறொரு உலகைத் திறந்து காட்டின. இயற்கை என்றாலே அறியாத வெளி, காட்டு உயிர்கள் வேட்டையாடும் இடம் எனும் எளிமையான புரிதலைத் தாண்டி இயற்கை எனும் கானுயிர் அமைப்பை பார்வையாளர்களுக்குக் காட்டின. இயற்கைக்கும் உயிர்களுக்குமான உறவு முறை, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கத் தேவையான பல்லுயிர்ப்பெருக்கம் (biodiversity), இனப்பெருக்க முறைகள், பச்சையத்துடனான விளங்குகளின் தொடர்பு என ஒரு முழுமையான அறிதலுக்கு இந்தக் காணொளிகள் வழிவகுத்தன. இன்றும் உலகின் பலவேறு மூலைகளில் அமைந்திருக்கும் மண்வளத்துக்கு ஏற்றார்போல வாழ்ந்து வரும் பல அரிய விலங்கினங்கள், மண்ணுயிரிகள் போன்றவற்றை இதுபோன்ற தொகுப்புகளே நமக்கு அறியத்தருகின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் “காடு” எனும் சிற்றிதழ் தடாகம் வெளியீடாகத் தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. வருடத்துக்கு ஆறு இதழ்கள் என இருமாதமொரு முறை வெளியாகும் இந்த இதழ் உயிரினங்களைப் பற்றிய முழுமையான தகவல்களோடு மட்டுமல்லாது, இந்திய எல்லைக்குள் சென்று இதழாளர்களும் தனிநபர் ஆர்வலர்களும் சேகரித்த அரியப் புகைப்படங்களோடும் வருகிறது. காடுகளை அழித்து வேளாண்நிலங்களாகவும், மனித நாகரிகக் குடியிருப்புகளாகவும் மாறிவரும் இந்திய நிலப்பகுதியிலிருந்து காணாமல் போகும் தாவரங்கள், உயிரினங்கள், மாறிப்போன விலங்கு குணாதிசயங்கள் பற்றிய ஆழமான கட்டுரைகள் ஒவ்வொரு இதழிலும் வெளியாகின்றன. நம்மைச் சூழ்ந்திருக்கும் சுற்றுச்சூழல் வளச் சுரண்டல்கள் பற்றி தனிக்கவனம் கொண்ட பகுதிகளும் இதில் உண்டு.
ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு சென்ற போதெல்லாம் அங்கிருந்த தேயிலை பசுமைகளைப் பரவசத்தோடு கண்டிருக்கிறேன். சில்லென்ற நிலப்பகுதி, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை என அதில் மனம் இழக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் தேயிலைத் தோட்டங்கள் உருவாவதற்காக அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான மரங்கள், தனிவகை செடி கொடிகள், இடம் மாறிப்போனதோடு மட்டுமல்லாது புவியிலிருந்து காணாமல் போன பலவகையான நுண்ணுயிர்கள் பற்றி நவ-டிசம்பர் -2016 மாத இதழில் பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை மாற்று உண்மைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்பும். பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி “உலகை மாற்றிய தாவரங்கள்” என எழுதி வரும் தொடரின் ஒரு பகுதியாக தேயிலைத் தோட்டம் பற்றிய இந்த கட்டுரை நம் புலன்களின் அறிவைக் கேள்விக்குள்ளாக்குகிறது. கண்ணைக்கவரும் பசுமை எல்லாச் சமயங்களிலும் இயற்கையோடு இயைந்து போகும் அமைப்பாக ஆகிவிடாது. தேயிலை பசுமைக்குப்பின்னால் இருக்கும் வரலாற்றுத் தகவல்கள், நிலத்தின் சுழற்சி வளத்துக்கு ஈடுகொடுக்காத விளைச்சல்கள், பூச்சி மருந்துகள் மூலம் அகற்றப்படும் இயற்கையான பூச்சி வகைகள், ஓபியம் போன்ற போலியான நெகிழ்ச்சியை அளிக்கும் தேயிலைகளில் மேலும் படியும் நச்சுகள் என பேராசிரியரின் கட்டுரை விசாலமான பார்வையை முன் வைக்கிறது.
ஏ.சண்முகானந்தம் ஆசிரியராக அமைந்திருக்கும் இந்த சிற்றிதழில் சூழலியல் பற்றி தொடர்ந்து தமிழில் கவனத்தை ஏற்படுத்தும் சு.தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, முனைவர் வே.தட்சிணாமூர்த்தி, முனைவர் ஆ.குமரகுரு, சு.பாரதிதாசன் போன்றோர் ஆலோசகர்களாக உள்ளனர். இதழின் ஒவ்வொரு வார்த்தையையும் சூழியலின் முக்கியத்துவம் உணர்ந்த ஆர்வலர்கள் மட்டுமே எழுதுவது ஆத்மார்த்தமான வெளியீட்டுக்கு உறுதியாக அமைகிறது.
ஈ.ஆர்.சி. தாவிதர், பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தியடோர் பாஸ்கர், ஏ.சண்முகானந்தம் போன்றவர்களோடு சூழியலில் தனிப்பட்டு இயங்கி வரும் புதுவை சூழியலியல் துறை மாணவனரான ப.அருண்குமார், அருளகம் எனும் அமைப்பின் மூலம் பிணம் தின்னிக் கழுகுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சு.பாரதிதாசன், த.முருகவேள், அ.பகத்சிங் போன்ற பல இளைஞர்களும் பங்கேற்றுவருகிறார்கள்.
விலங்குகள், பறவைகள், நுண்ணுயிர்கள் போன்றவை தவிர மனித நிராகரிப்பினாலும், அதீத நுகர்வுக்கலாச்சாரத்தினாலும் அழிந்து வரும் பலவகையான இந்திய நில அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை இந்த சிற்றிதழ் உருவாக்கி வருகிறது. மழை சேகரிப்பு, மண் அரிப்பு தடுத்தல் போன்று மேலோட்டமானப் பிரச்சாரமாக அல்லாது, நம் இலக்கியம், மரபு, பழங்குடி வாழ்வு போன்ற உயிர்ப்பான பழக்க வழக்கங்கள் மூலம் சூழியலில் ஒரு சிந்தனைத் தொடர்ச்சியை உருவாக்கி வருகிறார்கள். என்னைப் பொருத்தவரை மொழி மூலம் உருவாகப்படும் ஒரு சிந்தனை மரபை மீட்டெடுக்கும்போதே, அதன் தேவையை நாம் உணர்ந்துவிட்டோம் என அர்த்தமாகிறது. அரசு மற்றும் தனியார் அமைப்புகளை மட்டும் நம்பியிராது, தனிப்பட்ட மனித நடவடிக்கைகள் மூலம் சூழியலியல் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் ஈடுபடலாம் என்பதை பல இளைஞர்கள் எழுதும் அறிமுகக் கட்டுரை மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரான கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய “தமிழரும் தாவரமும்” நூல் அறிமுகத்தை வெளியிட்டு தாவரங்களின் தன்மை, வளர்நிலை, பூக்கள், இலை போன்றவற்றின் பயன்பாடு எப்படி மனித வளர்ச்சி சுழற்சியில் உதவுகிறது என்பதை விரிவாக எழுதியிருக்கின்றனர். இயற்கை என்பது ஒரு மாபெரும் சுழற்சி. பல சிறு சிறு சுழற்சிகள், மாற்றங்களும் சேர்ந்து உருவாக்கும் சுழற்சி. இதில் ஒரு கொடுக்கல் வாங்கல் சூத்திரம் அடங்கியுள்ளது. மண் சக்தியையும், மழை ஆசியையும் கொண்டு விளையும் நிலங்களிலிருந்து உறிஞ்சப்படும் சக்தி மீண்டும் மண்ணுக்கு உரமாகி செல்லும் பாதையை விளக்கும் பல கட்டுரைகள் உள்ளன. சுழற்சியை விளக்கும் போது நமது பாரம்பரிய தாவர பாதுகாப்பு வழிமுறைகளும், விலங்கினங்களின் வாழ்வுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமும், மரபில் நம் முன்னோர் காட்டிய இயற்கை வாழ்வும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இதழின் அடுத்த முக்கியமானப் பகுதி சூழலியல் கலைச்சொற்கள். ஒவ்வொரு இதழின் மையக்கருத்தைக் கொண்டு இந்த சூழியலியல் கலைச்சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களும், பறவை மற்றும் பூச்சி இனங்களை அடையாளம் காண்பதற்கென அழகிய வண்ணப்படங்களும் சேர்ந்து இந்த சிற்றிதழை ஒரு சேகரிப்போர் கையேடாகிறது.
இயற்கை பாதுகாப்பு, விலங்கின உயிர்நீட்டிப்பு எனும் இருமுகங்களைக் கொண்ட கட்டுரைகளை நாம் இதில் பார்க்கலாம் என்றாலும் இன்று சமூகத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கைப் பற்றி கட்டுரைகள் இல்லாதது ஒரு குறையே. நாம் பேணி வரும் சமூக அமைப்பு இயற்கையோடு தொடர்பை அறுத்து பல நூற்றாண்டுகளாகிறது. இயற்கையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனும் அறைகூவலில் நியாயம் இருந்தாலும் இன்று நம்மிடையே இருக்கும் அறிவியல் பெருக்கத்தைக் கொண்டு அதை செய்வதெப்படி என்பதும் ஒரு முக்கியமான கேள்விதான். தனியார் நிறுவனங்களும், அரசு சார் துறைகளும் இதில் தேவையானளவு நிதி உதவி அளித்து விலங்கினப் பாதுகாப்பு மற்றும் சூழலியல் பராமரிப்புக்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். சூழியலுக்கு பாதிப்பு வராத தொழில் வளர்ச்சி ஒரு புறமும், அறிவியல் தொழில்நுட்பங்கள் வழியே இயற்கை பாதுகாப்புக்கு ஒரு வழியையும் உருவாக்க வேண்டும். நீண்ட நாட்களளவில் பாதிப்பு வராத இயற்கையை ஒத்த வழிமுறைகளையும் கொள்கைகளையும் அரசு திட்டங்களாகக் கொள்ளவேண்டும். இதற்கு இயற்கை ஆர்வலர்களும், அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகர்களும் ஒன்றிணைவது அவசியமாகும்.
இயற்கையை அதன் போக்கில் விடுவதும், விலங்கினங்களுக்கு கேடு விளைவிக்காமல் இருப்பது நம் கைவசம் இருக்கும் பல திட்டங்களில் ஒன்று மட்டுமே. தொழிற்சாலைக் கழிவுகளின் நச்சுத்தன்மையைப் பல மடங்கு குறைப்பதற்கும், விலங்கின வேட்டையைத் தடுக்க டிரோன் எந்திரங்களைப் பயன்படுத்தவும், மண் வளத்தை ஆராய்ந்து நச்சுத்தன்மையை அறியவும், இயற்கை சீற்றத்தை முன்னறிவிப்பின் மூலம் அறிந்துகொள்ளவும், தொழில்நுட்பத்தை மேலை நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் கூட நம் மீனவர்கள் காணாமல் போன சோக நிகழ்வின் போது தகுந்த முன்னறிவிப்புகளும், உடனடி செய்தி பரவலுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் இல்லாமையே பெரும் இழப்புக்கு முதன்மையான காரணங்களாகச் சொல்லப்பட்டன.
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பிரம்மாண்ட கண்டங்களில் வாழும் விலங்குகளை வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக அரசு டிரோன்களை உபயோகப்படுத்துகிறது. ஜப்பானிய கடல்பகுதிகளில் திமிங்கில வேட்டையைத் தடுக்க தூர இயக்கி எந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் தொழில்நுட்பத்தின் பங்கை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. இந்தியாவில் தொழிட்பம் மூலம் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளங்கள் பற்றி காடு போன்ற இதழ்கள் பதிவு செய்யலாம். தனி நபர் தாண்டி நாம் அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சூழலியல் பாதிப்பு பற்றிய குறிப்புகளை வலியுறுத்த வேண்டும். அது தொழிற்சாலையின் கழிவு அளவு, எந்திரங்களின் சக்தி பயன்பாடு மற்றும் விரயம், சுற்றுச்சூழலை பாதிக்குமளவு உருவாகும் சத்தம், மண் வளத்தை உறிஞ்சக்கூடிய கருவிகள் மற்றும் செயல்பாடுகள் என பல பரிமாணங்களில் அமைந்திருக்கலாம்.
கடந்த இரு வருடங்களின் தொகுப்பைத் தொடர்ந்து படிக்கும்போது இதழுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. பலரும் தங்கள் களப்பணிகளின் அனுபவங்களை கட்டுரைகளாகத் தந்திருக்கிறார்கள். பாறைகளில் வாழும் எலிகள், ஆயிரம் மைல்கள் நீந்தி வந்து சென்னை கடற்கரையில் முட்டைபோடும் ஆமைகள், யானையின் கடைசி சில மணிநேரங்கள், சிறுத்தையைத் தேடி காட்டினுள் சென்ற பயணம் என ஒவ்வொரு களப்பணி சார்ந்த கட்டுரையும் நாமே முன்னின்று செல்வது போன்ற உணர்வைத் தருகின்றது. குறிப்பாக, ஆமைகளைப் பற்றிய கட்டுரையில், மீனவர் எனச் சொல்லிக்கொண்டு ஆமையைத் தாக்கிய குடிகாரரிடமிருந்து அதை மீட்பதற்காக களப்பணியினரின் முயற்சி மனதை கசிய வைத்தது. ஒவ்வொரு மனிதனும் சுற்றுச்சூழலையும், விலங்கு பாதுகாப்பையும் தனது வாழ்வின் ஒரு முக்கிய முன்னெடுப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
இரு வருடங்களின் முழு தொகுப்பை கடந்த ஆகஸ்ட் மாத சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க முடிந்தது. தடாகம் அமைப்பின் கடையில் காடு சஞ்சிகை தவிர அவர்களது பிற வெளியீடுகளையும் மிகவும் குறைந்த விலையில் வைத்திருந்தனர். அங்கிருந்தவரிடம் பேசும்போது காடு தொகுப்பு இதழ்கள் (12 இதழ்கள் ) ஓரளவு விற்பதாகச் சொன்னார்.
தமிழ் சூழலில் தொடர்ந்து இது போன்ற முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஒரு சிந்தனை அல்லது புது துறையின் வருகை என்பது மொழியும் மக்களும் உயிர்ப்போடு இயங்குவதைக் காட்டுகிறது. இந்த சூழல் தொடர வேண்டும். மேலும் பலப் பல இதழ்களை காடு குழுவினர் வெளியிட வேண்டும். அர்ப்பணிப்புடன் இயங்கும் தடாகம்/காடு வெளியீட்டாளர்களுக்கு வாழ்த்துகள்.
பதிப்பாசிரியர்: பா. அமுதரசன்
ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம்
தனி இதழ் : ரூ 60 ஆண்டுக்கு: ரூ 300
இணையம்/மின்னஞ்சல்:
thadagam.com/kaadu
kaadu@thadagam.com
வெளியீடு:
தடாகம் / பனுவல் புத்தக விற்பனை நிலையம்,
112, திருவள்ளுவர் சாலை.
திருவான்மியூர்,
சென்னை – 600041.
044-43100442
8939967179