எம். எல். – அத்தியாயம் 16

ன்று கட்சி ஆஃபீஸை நாராயணன் தான் பூட்டினான். ஆஃபீஸ் செக்ரட்டரி கனகசபை, சுப்பிரமணியபுரத்தில் யாரோ தோழரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நாலு மணிக்கே சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். கட்சி அலுவலகத்தை விட்டுப் புறப்படும் போது நாராயணனிடம், “நீ பொறப்பட நேரமாகுமா?” என்று கேட்டார்.
“பிரஸ்லே இருந்து புரூஃபை வாங்கிட்டுப் போக ஆள் வரணும்.”
“சரி… அப்போ நீயே ஆபீஸைப் பூட்டி, சாவிய பக்கத்து வீட்டுல குடுத்திரு.”
“சரி…”
அது வழக்கமான நடைமுறை தான். ஆஃபீஸ் சாவி எப்போதும் கந்தசாமி சேர்வை வீட்டில்தான் இருக்கும். அவர் வீட்டு வராந்தாவின் வடக்குச் சுவரில் ஆணியில் தொங்கும். ஆஃபீஸுக்கு யார்  முந்தி வருகிறார்களோ அவர்கள் கந்தசாமிச் சேர்வை வீட்டில் போய் சாவியை எடுத்து வந்து திறப்பார்கள். சேர்வை கீழ ஆவணி மூலவீதியில் பாத்திரக்கடை வைத்திருந்தார். அவருக்கு ஒரு பெண்ணும், இரண்டு மகனும். பெண் தான் மூத்தவள். கல்யாணமாகிவிட்டது. திருப்பாச்சேத்தியில் கட்டிக் கொடுத்திருக்கிறது. சின்னமகனும், அவர் மனைவியும் தான் அந்த வீட்டிலிருந்தார்கள். சின்னவனுக்குக் கல்யாணமாகவில்லை. பெரியவன் கல்யாணமாகி தல்லாக்குளத்தில் இருந்தான். மதுரை முனிசிபாலிட்டியில் பில் கலெக்டராக வேலை பார்த்தான். சேர்வை வீட்டு முன் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். காலையில் தெருவாசல் தெளிக்க முத்தம்மாள் தான் கதவைத் திறப்பாள். ராத்திரி கடையை அடைத்துவிட்டு கந்தசாமிச் சேர்வை பத்தரை மணிக்கு வந்த பிறகுதான் கதவைத் தாழ்ப்பாள் போடுவார். அதுவரை கதவு திறந்துதேதான் கிடக்கும். யார் வேண்டுமானாலும் வாராந்தா ஆணியில் தொங்குகிற சாவியை எடுத்துவந்து ஆஃபீஸைத்  திறக்கலாம்.
கனகசபை தன் மேஜை டிராயரில் ஏதோ லட்சக் கணக்கில் பணம் இருக்கிற மாதிரி, புறப்படும்போது டிராயரை இழுத்து அறைந்து சாற்றிப் பூட்டினார். பூட்டிப் பத்திரப் படுத்துவதற்கு அதில் சில ரப்பர் ஸ்டாம்புகளையும், ஏதோ சில பழைய காகிதங்களையும் தவிர வேறு எதுவுமில்லை. அந்தக் கட்டிடத்திலேயே பெரிதாகப் பத்திரப்படுத்துவதற்கு இரண்டு பழைய ஸ்டீல் பீரோக்கள், மூன்று மர மேஜைகள், சில நாற்காலிகளைத் தவிர ஏதுமில்லை. கந்தசாமிச் சேர்வை வீட்டின் முன்வாசல் கதவு மாதிரி அந்தப் பழைய கட்டிடத்தைத் திறந்தே போட்டாலும் தவறில்லை. ஆனாலும் வாசல், கதவு என்றெல்லாம் சம்பிரதாயமாக இருக்கிறதே என்றுதான் அந்தக் கட்டிடம் பூட்டப்பட்டது.
“தோழர்… ஒரு இருபது ரூபாய் இருக்குமா? அடுத்தமாசம் சம்பளம் வாங்கியதும் தாரேன்…” என்று கனகசபை கிளம்பும்போது நாராயணன் கேட்டான்.
“இருவது ரூபாயா?… கையில சல்லிக்காசு கூட இல்லை… இன்னைக்கு திலகர் திடல் கூட்டத்துக்கு லைட்டு, ஸ்பீக்கர்காரனுக்கு குடுக்கத்துக்கே பணமில்லாம கடன் சொல்லித்தான் கூட்டத்தை நடத்தணும்…” என்று சொல்லிக்கொண்டே, தன் கசங்கிய ஜிப்பாவின் இரண்டு சைடு பாக்கெட்டுகளையும் வெளியே எடுத்துக் காண்பித்தார் கனகசபை. அவருக்கே கஷ்டமாகத்தான் இருந்தது. அவனை சமாதானப் படுத்துவதற்காக, “நாளைக்கிப் பாப்போம்…” என்றார். “நீ சாவிய சேர்வை வீட்டுல போட்டுட்டுப் போயிரு…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். தெருவில் சுவரோடு சுவராய் சாய்த்து வைத்திருந்த தன் பழைய ஹெர்குலீஸ் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
நாராயணன் கூட புறப்பட்டு விடலாம். அந்த புரூப்பை நாளைக்குக் கூட கொடுத்து விடலாம். குழந்தை எப்படியிருக்கிறதோ? பேசாமல் சுந்தரியையும், குழந்தையையும் ஒத்தக்கடையில் கொண்டு போய் அவளுடைய அப்பா வீட்டில் விட்டால்தான் என்ன. அவளும் எதற்கு தன்னோடு சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தான். பின்பக்கம் போய் அடி பம்பில் தண்ணீர் அடித்து முகத்தைக் கழுவினான். வேஷ்டி முந்தியால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஆஃபீஸ் சாவியை எடுத்துக் கொண்டான். பின் கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டான். ஒவ்வொரு அறையாகத் தாண்டி முன் கதவையும் பூட்டினான். சாவியை எடுத்துக் கொண்டு சேர்வை வீட்டுக்குப் போனான். சாவியை வழக்கமாகத் தொங்கவிடும் ஆணியில் போட்டுவிட்டு, வீட்டினுள்ளே பார்த்து, “அம்மா சாவியத் தொங்கவிட்டுருக்கேன்…” என்று சொன்னான்.
“அப்படியா… சரி… சரி… கெடக்கட்டும்…” என்று சேர்வையின் மனைவி முத்தம்மாள் சொன்னாள்.
“நான் வாரேம்மா…”
“சரி… சரி… போயிட்டு வாங்க…” என்று முத்தம்மாளுடைய குரல் கேட்டது. தெருவில் இறங்கி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தான். மேலமாசி வீதிக்குப் போகிற சந்தில் திரும்பியபோது, தங்கம் தியேட்டரில் மேட்னி ஷோ முடிந்து ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவன் சுந்தரியுடன் சினிமாவுக்குப்  போய் ரொம்ப நாட்களாகிவிட்டது. சினிமாவுக்குப் போவதற்காவது நாலைந்து ரூபாய் செலவாகும். மீனாட்சியம்மன் கோவிலுக்காவது அழைத்துப் போகலாம். கோவிலுக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டது.
மேலமாசி வீதியில் ஸ்வீட்லேண்டை ஒட்டியிருந்த பழைய, பூட்டிக்கிடந்த வீட்டின் திண்ணையில் வழக்கம் போல் அந்த ஜோஸியர் உட்கார்ந்தது ஜோஸ்யம் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கு எதிரே இரண்டு பேர் உட்கார்ந்து ஜோஸ்யம் கேட்டுக்கொண்டிருந்தனர். திலகர் திடல் கூட்டத்துக்குப் போவதா, வேண்டாமா என்று யோசித்தான். அவனுக்கு அங்கே ஒன்றும் வேலையில்லை. வேண்டுமானால் கோபால் பிள்ளைக்காகவும், பரமேஸ்வரனுக்காகவும் போகலாம். ஆனால், அது அவ்வளவு முக்கியமில்லை என்றே பட்டது.

***
ன்று மதியானத்துக்கு மேல் கிட்டுவுக்கு வேலையே செய்யத் தோன்றவில்லை. மத்தியான நேரத்தில் கடைக்கு அவ்வளவாக வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதால் கடையிலுள்ள ஊழியர்களை ஜவுளி உருப்படிகளை கவுண்டரில் எடுத்துப் போட்டு தூசிதட்டித் திரும்ப அடுக்கி வைக்கும் படிச் சொல்வார. இந்த மத்தியான நேரத்து வேலையில் செண்பகக் குற்றாலமும் ஈடுபடுவான். சுப்பிரமணிய பிள்ளை கல்லாவில் உட்கார்ந்து பேரேடுகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
எப்போதும் குற்றாலம் தான் முதலில் வீட்டுக்குப் போய் சாப்பிடுவான். அவன் சாப்பிட்டுவந்த பிறகு தான், அவனைக் கடையில் வைத்துவிட்டு, சுப்பிரமணிய பிள்ளை சாப்பிடக் கிளம்புவார். கடையில் வேலை பார்க்கிற தட்சிணாவுக்கு மதிச்சயத்தில் வீடு. அதனால் அவன் மத்தியானச் சாப்பாட்டை வீட்டிலிருந்து காலையிலேயே எடுத்து வந்துவிடுவான். ரங்கநாதனுக்கு வெங்கலக்கடைத் தெருப்பக்கம்தான் வீடு. அதனால், குற்றாலம் சாப்பிடக் கிளம்பும்போதே அவனும் சாப்பிடப் புறப்பட்டு விடுவான். குற்றாலம் வந்த பிறகு கிட்டு சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவான். யார் சாப்பிடப் போனாலும் ஒரு மணி நேரத்துக்குள் வந்துவிடவேண்டும்.
எப்போதும் போல கிட்டு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு கிளம்பும் போது இரண்டு மணி இருக்கும். அவன் புறப்படும் போதே சுப்பிரமணிய பிள்ளை, “நீ சாப்ட்டுட்டு வந்து மைசூர் ஸில்க்கை எல்லாம் எடுத்துப்போட்டு அடுக்கி வை… சீக்கிரமா வா.” என்று சொல்லியிருந்தார். ஏழுகடல் தெருவிலிருந்து கிழக்குக் கோபுர வாசல் வழியாக கோவில் வெளிப்பிரகாரத்துக்கு வருவான். கோவில் மதில் சுவரையொட்டி நிழல் இருக்கும். மேலக் கோபுர வாசல் வழியாக வெளியே வந்து இசையகம், மெத்தைக்கடைகள், உலகநாதன் லாட்டரிச்சீட்டுக் கடையை ஒட்டியுள்ள கோபாலக் கொத்தன் சந்தில் நுழைவான். மேலக் கோபுர வாசல் தெருவில் அவ்வளவாக வெயில் தெரியாது.
கோபாலக் கொத்தன் தெரு ஆரம்பத்தில் நாலைந்து வட இந்தியச் சாப்பாட்டுக் கடைகள் இருந்தன. பாம்பே சேட் கடை வாசலில்தான் செவத்தானையும், மகாராஜனையும் பார்த்தான். இரண்டுபேரையும் ஒன்றாகப் பார்த்ததுமே இன்றைக்கு எங்கேயோ ஆட்டம் இருக்கிறது என்று கிட்டுவுக்குத் தோன்றியது. கிட்டு பக்கத்தில் வந்ததும் செவத்தான் அவன் கையைப் பிடித்துக் கொண்டான்.
“மாப்ளே… ஒன்னையதாண்டா நெனைச்சோம்… சாயந்தரம், புட்டுத்தோப்புக்கு வாறீயா மாப்ளே… ஆட்டம் இருக்கு…” என்றான் செவத்தான் .
“லீவு சொல்லிட்டு வாடா…” என்றான் மகாராஜன். இரண்டு பேர் உடம்பிலிருந்தும் வியர்வையும், சாராயமும் கலந்த ஒருவிதமான நாற்றமடித்தது. இன்னும் போதையிலிருக்கிறார்களா, இல்லை போதை தெளிந்துவிட்டதா என்று தெரியவில்லை.
“எங்கிட்டே ஆடறதுக்கெல்லாம் பணமில்லேடா….” என்றான் கிட்டு.
“மொதலாளி ஒன் அத்தான் தானடா? சம்பளத்துல புடிச்சுக்கிடச் சொல்லி ஒரு அம்பது ரூவா கூடவா பொறட்ட முடியாது?…”
“அவரு ஆயிரங்கேள்வி கேட்டு உயிரைவாங்குவார்டா…” என்று கிட்டு சொன்னாலும், எப்படியாவது அத்தானிடம் பணம் வாங்கிவிடலாம் என்று தோன்றியது.
சாயந்திரம் எப்படியும் புட்டுத்தோப்புக்கு வந்து விடுகிறேன் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனான். பாக்கியம் அவள் வழக்கமாக மாவு அரைத்துக் கொடுக்கிற வீடுகளுக்குப் போவதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். இன்னும் புருஷன் சாப்பிட வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தபோது கிட்டு வந்துவிட்டான்.
வந்ததும் வராததுமாக, “சீக்கிரம் சோத்தப் போடு,” என்று அவளை அவசரப்படுத்தினான். “இப்பதான உள்ள நொழஞ்சிருக்கிய?… அதுக்குள்ள பறந்தா எப்படி?… தட்டக் கழுவி சோத்தை எடுக்காண்டமா?…” என்று சொல்லிக்கொண்டே தண்டே மரத்திலிருந்த தட்டை எடுத்தாள். அங்கணத்தில் தட்டைக் கழுவிவிட்டு சாப்பாடு எடுத்து வைத்தாள். மோர்ச் சோறு சாப்பிடும் போது, “ஒங்கிட்ட ரூவா இருக்கா?…” என்று கேட்டான்.
“ரூவாயா?… எதுக்கு?…”
“கடையில தட்சிணா கடனா பணம் கேட்டான்.”
“எங்கிட்ட ஏது துட்டு? இந்தப் புள்ளக்கிப் பள்ளிக்கூடத்துல என்னம்மோ பொஸ்தகம் வாங்கணுமாம். அதுக்கே யாரவது தோசைக்கி அரைக்கிற வீட்டுல கேட்டுப் பாக்கலாமான்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்…”
“சீட்டுக்காரிக்கிக் குடுக்கச் சேத்து வச்சிருப்பியே?…”
“சீட்டுக்காரியுமில்ல, மோட்டுக்காரியுமில்ல… எங்கிட்ட ஏது சீட்டுத்துட்டு?…”
பாக்கியத்திடம் பணம் பெயராது என்று தோன்றியது. சாப்பிட்டுக் கை கழுவிவிட்டுப் புறப்பட்டான். பாக்கியத்துக்கு அவனுடைய பேச்சு சரியாகப் படவில்லை. எதற்கு துட்டுக்கு அடிபோடுகிறான்? சீட்டாடப் போகிறானோ என்று சந்தேகப் பட்டாள். அவன் கடைக்குப் புறப்பட்டுப் போனபிறகு, நாளைக்கு அண்ணனைப் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைத்தாள்.
கடைக்கு வந்த பிறகு சுப்பிரமணிய பிள்ளை சொன்னபடி, ஸில்க் சேலைகளை எடுத்துப் போட்டு தூசித்தட்ட ஆரம்பித்தான். தட்சிணாவும் வடசேரி வேட்டி ஐட்டங்களை எடுத்துத்தட்டி அடுக்கிக் கொண்டிருந்தான். ரங்கநாதன் இன்னும் சாப்பிட்டுவிட்டு வரவில்லை. குத்தாலத்துக்கு, மாமா அக்கறையாக வேலை செய்வது ஆச்சரியமாக இருந்தது. தட்சிணாவிடம் பணம் இருந்தாலும் கொடுக்க மாட்டான். அவன் கஞ்சாம்பட்டி. குத்தாலத்திடம் கேட்டுப்  பார்க்கத்தோன்றியது. கிட்டுவுக்கு வேலையே ஓடவில்லை. யாந்திரிகமாக ஏதோ சேலைகளைத் தூசிதட்டிக் கொண்டிருந்தான். ஞாபகமெல்லாம் புட்டுத்தோப்புக்கு போவதில் இருந்தது.
“மாப்ளே!…” என்று குத்தாலத்திடம் போனான்.
“என்ன மாமா?”
“ஒரு அம்பது ரூவா வேண்டியிருக்கு மாப்ளே… தங்கத்துக்குப் பொஸ்தகம் வாங்கணும்.” என்றான். குத்தாலம் கிட்டுவையே பார்த்தான். “மாமா… அப்பா சாப்பிடப் போயிருக்காளே…அவுஹ வரட்டுமே…” என்றான் குத்தான்.
“இல்ல மாப்ளே… நீ குடு… நான் அத்தான் வந்ததும் சொல்லிக்கிடுதேன்… அவளுக்குச் சாயந்தரம் பள்ளிக்கூடம் விடுறதுக்குள்ள போயிக் குடுக்கணும். அத்தை கிட்டயும் பணமில்ல…” என்றான் கிட்டு.
குத்தாலம் கொஞ்சம் யோசித்தான். மாமவைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது. அப்பா வந்தால் சொல்லிக் கொள்ளலாம், சம்பளத்தில் கழித்து விட்டால் போயிற்று என்று தோன்றியது. கல்லாப் பெட்டியைத் திறந்து ஐம்பது ரூபாயை எடுத்து, கிட்டுவிடம் கொடுத்தான். “மாமா… சீக்கிரம் போயிக் குடுத்திட்டு வாங்க…” என்றான். கிட்டுவுக்கே அவன் இவ்வளவு சீக்கிரமாகப் பணத்தைக் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
“மாப்ளே… சீக்கிரமா பணத்தைக் குடுத்துவிட்டு வந்திருதேன்…” என்று சொல்லிவிட்டு கடையை விட்டு இறங்கினான். ஒரு நூறு ரூபாய் ஜெயித்தால் கூடப் போதும். நாளைக்கே இந்த ஐம்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விடலாம். கடைக்கு வராததற்காக அத்தான் கோபிப்பார். நாளை பணத்தையும் கொடுத்துவிட்டு ஏதாவது சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் என்று தோன்றியது. செல்லத்தம்மன் கோவில்பக்கம் போய்  பஸ் ஏறினான்.
மணி மூன்றரை இருக்குமா? சீக்கிரம் போய் விட்டால் நல்லது. செவத்தானையும், மகாராஜனையும் தவிர வேறு யாரெல்லாம் வருவார்கள். செல்லூர் மந்திரம், சண்முகம், அய்யாக்குட்டி. இந்த பஸ் ஏன் இவ்வளவு மெதுவாகப் போகிறது? புட்டுத்தோப்புப் பக்கம் அவ்வளவாக ஆள் நடமாட்டமே இல்லை. அந்த ரோட்டில் ஒரு சைக்கிள் ரிக்ஷா போய்க் கொண்டிருந்தது. அதில் இரண்டு பெண்கள் இருந்தனர். வயதானவர் பெடலை எம்பி எம்பி மிதித்து ஓட்டினார். எப்போதும் விளையாடுகிற வடதுபுறம் ஜமா சேர்ந்திருந்தது. தோப்புக்குள் நல்ல நிழல். கிட்டுவும் அவர்களோடு சேர்ந்துகொண்டான்.
***
(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.