மழையில் மறைந்து பெய்யும் மழை

மழையை
மூழ்கடிக்கும்
மழை.
ஒளியில்லாத ஒளியில் கழியும்
நாட்கள்.
வெறிச்சோடியிருக்கும்  தெருவில்
நீர் நெரிசல்.
ஈரத்தில் ஒடுங்கும்
இறக்கைகளுக்குள்  பறவைகள்.
தருணம் பார்த்து
தெரு
துரத்தியிருக்கும் தெரு நாய்களை.
வீட்டின் பிடிவாதமான சன்னல்களைச் சாத்தியடிக்கும் மழை.
வீடு
மூழ்கும்
வெள்ளத்தில் மூழ்கிய இருளில்.
நின்றெரியும் தீபத்தின் வீழும் நிழலில்
நீளும் என் தனிமை.
நான் மட்டும் செவி கொடுப்பேன் ஓயாத மழையின் பேச்சுக்கு.
நிற்காதா அடம் பிடிக்கும் மழை?
முறையிடுமா பறவைகள்?
முறையிடுமா தெரு நாய்கள்?
முறையிடானா
வெய்யோனும்?
முறையிட்டு நான் மட்டும்
என்ன செய்ய?-
இரவு பகலென்றில்லாமல் மழையில் மறைந்து மழை பெய்யும் மழையிடம்.

One Reply to “மழையில் மறைந்து பெய்யும் மழை”

Comments are closed.