[stextbox id=”info” caption=”துகள்களின் அடிப்படை குணங்கள்”]
ஒரு பொருளின் அடிப்படைத்தன்மையை அறிவது எப்படி? உப்பு எப்படி உப்பாகிறது, அதே அணு மற்றும் பிற துகள்கள் கொண்ட அமைப்பு எப்படி சர்க்கரையாகிறது? அறிவியலாளர்கள் பல காலமாக பொருட்களின் அடிப்படை கட்டுமானத்தை ஆராய்ந்து வருகிறார்கள். ரெண்டு ஹைட்ரஜன் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தால் நீராகிறது. ஆனால் அடிப்படையில் ஹைட்ரஜனுக்கும் ஆக்ஸிஜனுக்கும் இடையே அணுவின் கட்டமைப்பு எப்படி வேறுபடுகிறது. குவாண்டம் இயற்பியலின் படி ஒவ்வொரு துகளும் சிறு மேகப்பொதி அலை எனும்போது அதன் அடிப்படை குணமான துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, வெள்ளை, சிவப்பு போன்றவை எங்கு ஒளிந்துள்ளது? துகள்களின் சுழல் மாற்றத்தின்படி குணங்கள் வேறுபடுகின்றது என்பதால் புகழ்பெற்ற மெண்டெலெவ்வின் அட்டவணையை துகள்பொதியின் அலைவரிசைபடி மாற்றி அடுக்கியிருக்கிறார்கள். கடந்த 2015 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் அப்படிப்பட்ட ஒரு அடிப்படை துகளாகும். ஒரு துகளையும் அதன் குணத்தையும் இரு வேறு நிகழ்தகவுகளாக மாற்ற முடியுமா? இருவேறு பாதை பிரியும் இடத்தில் நிற்கும் ஒருவன் ஒரு வழியையும் அவனது குணங்ங்கள் மற்றொரு வழியையும் தேர்ந்தெடுக்க முடியுமா? துகள்கள் அப்படி செய்ய முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி ஹிக்ஸ் துகளின் அடிப்படை குணத்தை மாற்றியமைத்து அதிகடத்தியை (super conductor) உருவாக்க முடியுமா என்பதை கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
https://www.quantamagazine.org/elusive-higgs-mode-created-in-exotic-materials-20180228/
[/stextbox]
[stextbox id=”info” caption=”தத்துவமஸி”]
இந்த இதழில் மேலைத் தத்துவம் பற்றிய ஒரு கட்டுரை இருக்கிறது, அக் கட்டுரை பல பத்தாண்டுகளில் மேலைத் தத்துவம் தவிர சிந்தனை உலகில் இருந்த பொதுப் பாணிகளைப் பற்றிப் பேசுகிறது. அதனுடன் செல்லவென்று எழுதப்படும் இக்குறிப்பு, ஒரு இங்கிலிஷ் கட்டுரைக்கான சுட்டியைக் கொடுக்கிறது.
சுட்டியில் உள்ள கட்டுரை கீர்த்தி பெற்ற இரு ஃப்ரெஞ்சுத் தத்துவாளர்களைக் கவனிக்கிறது. இருவரில் ஒருவர் பயிற்சியால் தத்துவாளர் இல்லை, உளச் சிகிச்சையாளர். ஆனால் பல ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்களைப் போல செமியாடிக்ஸ், அரசியலியல், சூழலியல் போன்ற வேறு பல துறைகளில் ஈடுபட்டு அவற்றின் பரிமாற்றங்கள் வழியே சிந்தனையில் புதுப்பாதைகளைத் திறக்க வழி செய்திருக்கிறார்.
ஃபீலிக்ஸ் குவெட்டாரி என்னும் இந்த உளச் சிகிச்சையாளர், இளைஞராக இருக்கையிலேயே, மரபு சிகிச்சை முறைகளில் நம்பிக்கை இழந்து, மாற்று வழிகளைத் தேடத் துவங்குகிறார். அவருடைய கருத்துகளுக்கு அவருக்கு ஆசானாக இருந்த ழ்சாக் லகாகான் கூட எதிர்ப்பு தெரிவிக்கவும், இவருடைய கருத்துகளை ஒதுக்கும் முயற்சி வலுவாக இருக்கிறது.
எதிர்ப்பை அலட்சியம் செய்து தன்னொத்த சிந்தனை உள்ள உளச்சிகிச்சையாளர்களோடு சேர்ந்து கூட்டு முயற்சியில் நடக்கும் ஒரு மருத்துவ மனையில் பணியாற்றியபடி தம் கருத்துகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது நெடுங்காலத் தேடலில் ஒரு முக்கியமான இலக்கு, அதிகார அடுக்குகள் இல்லாத செயல் திறன் கொண்ட ஒரு அமைப்பு. அது கானல் நீரைத் துரத்தும் செயல் என்பதை இவர் கடைசி மட்டும் அறிந்திருக்கவில்லை என்பது இவருடைய வாழ்வின் சோகம்.
தன் இளமைக்கால வருடங்களில் ஃப்ரெஞ்சு பொதுவுடைமைக் கட்சியில் பங்கெடுத்திருந்த குவெட்டாரி, உள்ளிருந்து கலகம் செய்யும் தன் செயல்முறையை அங்கு கடைப்பிடித்து அது மரபு பொதுவுடைமைக் கொள்கைகளிலும், ஸ்டாலினியத்திலும் சிக்கிய அக்கட்சியின் செயல்பாட்டோடு ஒத்து வராமல் அக்கட்சியை விட்டு வெளியேறுகிறார்.
தொடர்ந்து பல துறைகளில் படித்துத் தேடிய குவெட்டாரிக்கு, ஒரு ஃப்ரெஞ்சு தத்துவாளரின் புத்தகங்கள் கிட்டி, தன் சிந்தனை முறைக்கு இவர் உதவுவார் என்று கருதி அவரைச் சந்திக்கிறார். அவர் சந்தித்தவர் உடல்நலம் குறைவாக இருந்ததால் வீட்டோடு இருந்து செயல்பட்ட ஜீல் டெலூஸ் என்ற தத்துவாளர். அந்தச் சந்திப்பு மிகவும் பலன் கொடுக்கும் ஒரு சந்திப்பாக மாறி, இருவரும் சுமார் இருபதாண்டுகள் சேர்ந்து யோசித்து, எழுதிப் பல புத்தகங்களை வெளியிட்டு, பல துறைகளில் வலுவான தாக்கங்களைக் கொணர்கிறார்கள்.
உளச்சிகிச்சையாளரான ஃபிலிக்ஸ் குவட்டாரியும், ஃப்ரெஞ்சுத் தத்துவாளர் ஜீல் டெலூஸ் சேர்ந்து எழுதிய சில புத்தகங்கள் இன்றும் மேலைத் தத்துவத்தில் மதிப்புள்ள ஸ்தானத்தைப் பெற்றவை.
ஆனால் மேற்கில் பல துறைகளிடையே கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு, பல துறைகளும் கலந்த செயல்பாடு துவங்கிச் சுமார் நூறாண்டுகளாவது ஆகி விட்டன. ஒருவருக்கு ஒரு துறையில் சிறப்புப் பயிற்சி இல்லை என்பது அவருடைய துறை அளிப்புகளைக் குறைத்துச் சொல்ல மட்டும் பயன்படும் ஒரு தாக்குதல் உத்தியாக மெலிந்து விட்டது. ஆனால் நடைமுறையில் சமூக ஆய்வுத் துறைகளில் அனேகமாகப் பழைய எல்லைக் கோடுகள் கரைந்த நிலைதான் உள்ளது. வேலை தேட முயன்றால், பல்கலை வளாகங்களில் துறையில் பயிற்சி என்பதை முதல் நிபந்தனையாக வைப்பார்களோ என்னவோ. ஆனால் சிந்தனை மேடைகளில் இந்த நிபந்தனை அத்தனை பொருளற்று இருக்கிறது.
குவெட்டாரி பல துறைகளில் படித்துத் தம் அளிப்புகளை கொடுத்தாலும், அடிப்படையில் அவருடைய கவனம் அரசியலிலும், சமூக மாற்றத்திலும்தான் இருந்திருக்கிறது. அவர் ஃப்ரெஞ்சுப் பொதுவுடைமைக் கட்சியில் இளமையிலிருந்து பணியாற்றியவர், துவக்கத்திலிருந்தே ஒரு கலகக்காரராகத்தான் இருந்திருக்கிறார். பொதுவுடைமைக் கட்சிகள் அப்போது பெருமளவும் ஸ்டாலினியக் கட்சிகளாக இருந்தன, இவரோ ட்ராட்ஸ்கியின் சிந்தனையைப் பின்பற்றியவர். பின்னாளில் டிட்டோ, அதன் பிறகு சில காலம் சீனப் பொதுவுடைமைச் சிந்தனை என்று பல சிற்றோடைகளிலும் இவர் பயணம் செய்திருக்கிறார். தத்துவத் துறையில் சார்த்தர், ஃபினாமினாலஜி, லகான், உளச் சிகிச்சை, மொழியியல், செமியாடிக்ஸ் என்று பல வகைகளில் கிளை பிரிந்து இவருடைய கடைசிச் சில வருடங்களில் சூழலியலில் கவனம் செலுத்தி இருக்கிறார். இளமைக் காலம் பெருமளவும் இளைஞர்களை ஏதாவது ஒரு கலகம்/ போராட்டம்/ மாற்றுச் சிந்தனை ஆகியனவற்றில் ஈடுபடுத்துவது எப்படி என்ற முயற்சியிலேயே கழிந்திருக்கிறது.
குவெட்டாரியைப் பற்றியே இத்தனை எழுதிய பின் டெலூஸைப் பற்றி ஏதாவது எழுதாமல் எப்படி? குவெட்டாரியின் முப்பதுகளின் நடுவில் அவர் சந்தித்த தத்துவாளர், ஜீல் டெலூஸ். சக மார்க்சியத் தத்துவாளர்.
தேடி வந்த குவெட்டாரியிடம் டெலூஸ் தன் மார்க்சியச் சிந்தனைக்கு ஒத்த கருத்துகளையும், வேறு பல ஓடைகளிலிருந்து வந்த கருத்துகளையும் கண்ட டெலூஸ் இவரோடு ஒத்துழைத்துப் புத்தகங்கள் எழுத முன்வருகிறார். இருவரும் எழுதிய புத்தகங்களில் முக்கியமானவை ஆண்டி-எடிஃபஸ் (1972), அ தௌஸண்ட் ப்ளாட்டோ(வ்)ஸ், (உ)வாட் ஈஸ் ஃபிலாஸஃபி ஆகியன. கடைசியாக ‘காபிடலிஸம்: அ வெரி ஸ்பெஷல் டெலினியம்’ என்ற நூலையும் பிரசுரித்திருக்கின்றனர். காஃப்கா பற்றியும் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்கள்.
இருவரும் தனியாகவும் புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். குவெட்டாரியைச் சந்திக்கும் முன்னர், டெலூஸ் ஏற்கனவே டேவிட் ஹ்யூம், பரூச் ஸ்பினோஸா, இம்மானுவெல் காண்ட், ஃப்ரீட்ரிஹ் நீட்ஷே ஆகியோரைப் பற்றிப் புத்தகங்கள் எழுதி இருந்தார். தன் படைப்புகளாகவும் இரு புத்தகங்களை எழுதி இருந்தார். முக்கியமாக, தன்னிலை, மேலும் தன் அடையாளம் ஆகியனவற்றிலேயே சிந்தனை வேரூன்றி இருப்பதை மறுத்தவர் டெலூஸ். பிறரோடு தமக்கு உள்ள வேறுபாடுகளிலேயே மனிதர் எதையும் புரிந்து கொள்கிறார்கள், புரிதல் உறவுகளின் பலவகைகளிலேயே கிட்டுகிறது என்ற அடிப்படைக் கருத்து அவருடையது. தனித் தனியானவையும், தனியானவர்களுமாக நமக்குத் தெரிவது வெறும் தோற்றப் பிழை என்பது அவருடைய மைய அளிப்பு.
மேலைச் சிந்தனையில் சிறிது பரிச்சயம் உள்ள எவருக்கும் இந்த உளைச்சல்களின் வேர்கள் கிரேக்க நாகரீகத்தின் வரலாற்றிலிருந்தே துவங்குவன. கிரேக்க சமுதாயங்களே தொடர்ந்து ஆண்டார்/ அடிமை, சம உரிமை கொண்ட குடிமக்கள், குடிஅரசு எதிர் அடுக்கு அமைப்புகள் என்ற மோதல்களைத் தொடர்ந்து சந்தித்திருக்கின்றன. கிருஸ்தவம் தோன்றியபோது ஏதோ அதிகார அமைப்புகளுக்கு எதிரான கலகக் குரல் என்பதான ஒரு பாவனை அதில் இருந்தது. பிறகு பார்த்தால் ரோம சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான மதமாக, நிறுவனமாகவே ஆகி, ரோமப் பேரரசர்கள் தம்மை கிருஸ்தவ சாம்ராஜ்யத்தின் ஆள்வோராகக் கூட அறிவித்துக் கொண்டனர். சர்ச்சுகள் அனேகமாக எங்குமே அதிகார அடுக்கமைப்புகளாகவே இருக்கின்றன.
இதை எல்லாம் கவனிக்கும் எவருக்கும் டெலூஸின் கரண விளையாட்டுகள் சிறிது அபத்தமாகத் தெரிய வாய்ப்புண்டு. தனியர் எவருமே இல்லை என்றால், கூட்டு அமைப்பைத் தன்னிடமிருந்து வேறுபட்டதாகக் காணும் ஜீவன் யார்? அது தோற்றப் பிழை என்றால் பிறகு அந்த ஜீவன் செய்யும் எதிலும் ஊறி இருக்கும் தனி அடையாளம் என்பதை எப்படி அகற்றுவது? அப்படிப் பல்லாயிரம் ஆண்டுகளாக அகற்ற முடியாத போது எது பிழை? கூட்டு அமைப்பு ஒன்றுதான் நிஜம் என்று வாதிடுவது பிழையா, இல்லை தனி அடையாளம் என்று ஒருப்பதை மறுப்பது பிழையா?
எளிய தர்க்கம்தான் ஆனால் இது மார்க்சியர்களுக்கு என்றும் விளங்காத தர்க்கம். இவருக்கும் விளங்கவில்லை என்பது இந்தக் கட்டுரையில் உள்ள டெலூஸின் வருணனைகளிலிருந்து தெரிகிறது. ஆனால் கட்டுரையாளர் டெலூஸின் சிந்தனையைச் சுருக்கிக் கொடுப்பதால், நாம் டெலூஸ் இதை விடப் புத்திசாலியாக இருந்திருப்பார் என்று சற்று தயக்கம் கொள்ளலாம். இக்கட்டுரையில் காணும் டெலூஸ் என்பவரை கிரேக்க ஸோஃபிஸ்டுகளிடமோ, சொக்ராடீஸிடமோ விட்டால் எத்தனை சீக்கிரம் இவரை அவர்கள் அக்கக்காகக் கழற்றி இருப்பார்கள் என்று ஒரு கணம் தோன்றியது.
இவர்களின் அளிப்புகளைச் சுருக்கமாக ஒரு கட்டுரையில் காண இந்தச் சுட்டியில் உள்ள கட்டுரை உதவும். இக்கட்டுரையில் உள்ள ஒரு மையக் கருத்து, இருவரும் தனி நபர் அடையாளங்களுக்கெதிரான அரசியலையே முன்வைத்திருக்கிறார்கள் என்பது. இன்றைய பொதுவுடைமைக் கட்சிகளோ அடையாள அரசியலின் சிலந்தி வலையில் சிக்கிப் பட்டினியால் மெலிந்து போன பூச்சிகளாக உலக அரசியலில் காணப்படுகின்றன.
https://aeon.co/essays/a-creative-multiplicity-the-philosophy-of-deleuze-and-guattari
இருவரின் வாழ்க்கை பற்றியும் இவர்களின் அரசியல் பங்கெடுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசும் ஒரு புத்தகம் இங்கே.
Gilles Deleuze and Félix Guattari: Intersecting Lives –By Francois Dosse (2007)
[/stextbox]
[stextbox id=”info” caption=”எந்திரமும் மனிதனும்”]
அடுத்த சுட்டி நியுயார்க் டைம்ஸில் வந்த ஒரு செய்திக் குறிப்பைக் கொடுக்கிறது. அதன் சாரம்- உலகின் பெரும் தகவல் நிறுவனங்களில் ஒன்றான கூகிள், தன் பல்லாயிரக்கணக்கான பொறியியலாளர்/ ஆய்வாளர்கள்/ ஊழியர்களின் உதவியுடன் பல வகை ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. நம்மில் நிறைய பேருக்குத் தானியங்கிக் கார்களை கூகிள் பல வருடங்களாக இயக்கி அவற்றின் சாதக பாதகங்களைப் பற்றி ஆராய்கிறது என்பது தெரிந்திருக்கலாம்.
தானியங்கிக் கார்களோ, இதர தொழிற்சாலை எந்திரங்களோ பலதும் மனிதர்களோடு என்ன அளவு தொடர்பு கொண்டவை அல்லது இல்லாதவை என்பதைப் பொறுத்து அவற்றின் இயக்க நியதி மனித உளநிலைகளைக் கணிக்கக் கூடியவையாகவோ அல்லது அது தேவை இல்லாது பொருட்களின் தன்மைகளையும் அவை உருமாற்றப்பட வேண்டிய நியதிகளையும் மட்டும் தெரிந்தவையாகவோ இருக்கும். முன்னதான வகை எந்திரங்கள் மனிதர் எப்படி முடிவுகளை எடுக்கிறார்கள் என்று ஊகிக்கக் கூடிய திறன் கொண்டவையாகவும், பின்னதான வகை எந்திரங்கள் வேறு வகைத்தான முடிவெடுக்கும் திறம் கொண்டவையாகவும் அமைவது அறிவார்ந்ததாக இருக்கும்.
ஆனால் இவற்றில் செயற்கை அறிவு பொருந்திய எந்திரங்கள் இப்போது பரவலாகத் துவங்கி இருக்கின்றன. இவற்றில் சில ஏற்கனவே பல பொது இடங்களில் பொருத்தப்பட்டு பணியாற்றுகின்றன. உதாரணமாக, இவற்றில் சில முகங்களை அடையாளம் காணும் திறம் கொண்டவை, சில நாம் பேசும் வார்த்தைகளை அறிந்து முடிவெடுக்கும் திறன் கொண்டவை. இந்தத் திறன்கள் பல வகைத்தானவை, பல தரத்தானவை. செயற்கை அறிவு கொண்ட எந்திரங்கள் எப்படி முடிவெடுக்கின்றன என்பதை அவற்றைத் திட்டமிட்டு உருவாக்கும் பொறியாளர்களே கூட இன்னும் நன்கு புரிந்து கொள்ளவில்லை என்பது அத்துறை வல்லுநர்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இது பொது மக்களிடையே அத்தனை தெரியாத ஒன்று.
கூகிள் ஆய்வாளர்கள் இப்போது தானே அறிந்து புரிந்து கொள்ளும் திறன் கொண்ட செயற்கை அறிவுள்ள எந்திரங்கள் என்ன விதத்தில் முடிவுகளை எட்டுகின்றன என்பதை நன்கு அறியும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். இந்தத் துறையின் துவக்க காலத்தில் இந்த எந்திரங்களின் அமைப்பு மனித நரம்புகளின் வலைப்பின்னலைப் பிரதி எடுக்கும் என்று நம்பி அப்படிக் கட்டமைக்க முயன்றார்கள். இவை பெரும்பாலும் காட்சி ரூப தகவல் அறிதலை கணித உருக்களாக மாற்றி அதன் பின் அவற்றின் இயக்கத்தில் முடிவுகள் எடுப்பனவாக அமைத்திருக்கின்றனர். கூகிளின் இன்றைய ஆய்வுகளில் மனித நரம்பு மண்டலத்தில் நியூரான்கள் சக்தி பெற்று இயங்கி உறவாடி முடிவுகளை அடைவது போல இந்த எந்திரங்களிலும் ஒவ்வொரு நியூரானும் எப்படி இதர நியூரானுடன் உறவாடி முடிவுக்கு எட்டும் பாதையில் பயணிக்கிறது என்று அறிவதில் முனைந்திருக்கிறது. இந்த ஆய்வுகளில் நியூரான் எனப்படுவது கணித சங்கேதங்களின் இயக்கத்தைக் குறிக்கிறது.
இந்த ஆய்வுகள் இப்போது மழலைப் பிராயத்தின் அளவில்தான் உள்ளன என்று தெரிகிறது. வினோதமான வகையில் இப்படி எந்திரங்கள் எப்படி முடிவெடுக்கின்றன என்பதைப் பற்றி நம் அறிவு மேன்மேலும் சிக்கலான எந்திரங்களைப் பற்றி ஆராய்ந்து அதில் நம் புரிதல் முன்னேறும்பொது, ஒருக்கால் நாம் மனிதர் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்வதில் முன்னேறி விடுவோமோ என்று இந்த ஆய்வாளர்கள் யோசிக்கிறார்கள் என்பதுதான் இந்தச் செய்தியின் உள் பொதிந்த அதிசயம்.
https://goo.gl/fy99Zz
[/stextbox]
[stextbox id=”info” caption=”லூசியா யாரது?”]
பண்டிதத்துக்குப் புதை குழியில் ஆராய்ச்சி செய்வது பிடிக்கும். உலகெங்கும் மானுடவியலாளர் என்ற போர்வையில் உலவும் பல இனப் பிரச்சாரகர்கள் எங்கோ கிடைக்கும் ஒரு எலும்புக் கூட்டை வைத்துக் கொண்டு என்று விவிலியப் புராணக் கதைக்கு ஆதாரத்தைக் கண்டு விட்டதாகப் பெருமிதம் கொள்ள முயலும் காட்சிகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம். ஆஃப்ரிக்காவில் ஒரு எலும்புக்கூடு கிட்டினால் முதல் மனிதப் பெண் இவள்தான், இவளிடமிருந்துதான் உலக மக்கள் திரளே பிறந்தது என்று கதை கட்ட இவர்களுக்குச் சற்றும் கூச்சமே இருப்பதில்லை. அதற்குப் பிறகு அந்த எலும்புக் கூட்டை விடப் பழமையானவை உலகில் கிட்டியாயிற்று. இன்னமும் லூசி என்னும் மனிதக் குரங்கிலிருந்து மனுஷியான ஒரு பெண்ணின் கதை பள்ளிகளில் போதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த எலும்புக்கூடு ஆஃப்ரிக்காவில் இருந்தாலும், அந்தப் பெண்ணின் பெயரென்னவோ யூரோப்பியப் பெயர்தான். அத்தனை தூரம் பண்பாட்டுச் சாய்வு. அதன் அறிவியல் பெயரில் கூட ஆஸ்த்ரேலியாவின் பெயர் ஒட்டிக் கொள்கிறது. எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட இடமோ எதியோப்பியா. அதை வைத்துக் கொண்டு செய்தித்தாள்களில் நடக்கும் சர்ச்சைகளோ இன்னமும் விவிலிய நூலின் கருத்துகளையே மையம் கொண்டு நடக்கின்றன. அந்தச் செய்தித்தாள் ஒரு பிரிட்டிஷ் தாள் என்பதால் இப்படி இருக்கலாம். ஆனாலும் பங்கெடுப்பவர்களுக்குத் தாம் உலகப் பிரஜைகள், உலகப் பிரஜைகளில் முதல் வரிசைக்காரர்கள் என்ற எண்ணம் மட்டும் போவதில்லை. (http://www.independent.co.uk/news/science/who-is-lucy-the-australopithecus-afarensis-google-doodle-discovery-a6745696.html )
2009 இல் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு எதியோப்பிய எலும்புக் கூடு ‘ஆர்டி’ என்று பெயர் பெற்றது, அது லூசியை விடப் பல நூறாயிரம் ஆண்டுகள் முந்தையது என்று தெரிய வந்திருக்கிறது. இந்த ஆர்டி மனிதர் சிம்பன்ஸி குரங்குகள் வழியே மனிதரான கதையை நிராகரிக்க உதவி இருக்கிறது. ஆனால் இந்தக் குரங்கு தமிழக முற்போக்குகளுக்கு மிகப் பிடித்தமான பல தார, பல கணவ வாழ்வு முறைகளை விடுத்து, ஒரு தார/ ஒரு கணவ முறையைக் கடைப்பிடித்திருக்கும் என்ற ‘கதை’ முன்வைக்கப்படுகிறது. இதுவும் விவிலிய நூலின் பாதிப்பா என்று நாம் யோசிக்கலாம். இப்படி அறிவியல் முயற்சிகளில் கூட எங்கு திரும்பினாலும் புராணக் கதைகளையே நாம் சந்திக்க வேண்டி வருகிறது. ஆனால் நம் தேசிய அறிவாளர்களோ, விவிலியப் புராணக் கதைகளை மட்டும்தான் கேள்வி இன்றி ஏற்பார்கள், நம் நிலப்பரப்பின் புராணங்கள் எல்லாம் வெறும் கட்டுக் கதை என்று ஒரு வினாடியில் ஒற்றை விரலால் ஒதுக்க இவர்களுக்கு நாணமே இருப்பதில்லை. இந்திய மண்ணில் புதைகுழி ஆய்வுகளை நடத்தினால் அதில் கூட மேற்கின் இனவெறிக் கொள்கையைத் தாம் கடன் வாங்கிப் பட்டம் பெற்றாயிற்றே, அதை நிலை நாட்ட ஆரிய/திராவிட பகுப்புக்கு ஆதாரம் தேடுவதே முதற்கண் கடமையாக இயங்கும் ‘நிபுணர்கள்’ நிறையவே உண்டு.
அத்தனை தூரம் மேற்குக்கு அறிவை அடகு வைத்த நிலை.
இந்த அடகு வைத்த நிலையை பங்களூரில் ஒரு ஆய்வு மையத்தின் இயக்குநர் தெளிவாக விளக்கி, மாற்று என்ன என்று பேசும் காணொளி இங்கே உள்ளது.
அகழ்வாராய்ச்சியில் நமக்குக் கிடைத்த ஆர்டி என்ற எலும்புக்கூட்டைப் பற்றிய தகவல்களும், அது எப்படி லூஸியின் கதையைப் பின்னுக்குத் தள்ளி விட்டது என்பதைப் பற்றிய தகவல்களும் இங்கே ஒரு சுட்டியில் காணலாம்.
https://news.nationalgeographic.com/news/2009/10/091001-oldest-human-skeleton-ardi-missing-link-chimps-ardipithecus-ramidus.html
[/stextbox]