பொருளாதாரத் துறையும் அற விழுமியங்களும்

பொருளாதார வல்லுனர்களிடையே நிகழும் சண்டைகளைக் களங்கப்படுத்தும் அவதூறுகள் மற்றும் பெருங்கூச்சல்களிடையே சில பொது உத்திகள் இருக்கின்றன. போர்ப் பிரகடனம் செய்தவர்கள் குறிப்பிட்ட ஒரு வலியுறுத்தலுக்கு ஆதரவான கோட்பாட்டைத் தாக்கக்கூடும், அல்லது அதன் விளைவின் எண்ணிக்கை மதிப்பைக் கணக்கிட உதவும் தரவு ஆய்வைத் தாக்கக்கூடும். அண்மைய உதாரணம் ஒன்று- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரிச் சீர்திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தை எடுத்துக் கொண்டால், இரு தரப்புகளில் எந்த தரப்பு நம்பத்தகுந்த வகையில் அதன் பொருளாதார தாக்கத்தைக் கணித்திருக்கிறது என்பது பொருளாதார நிபுணர்களின் சர்ச்சையாய் இருந்தது. தொடர்ந்து பல்லாண்டு காலம் ஊதியத் தொகை தேக்கமும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பும் நிலவிய நிலையில் பிற்போக்குத்தனமான வகையில் வரிச் சீர்த்திருத்தம் செய்வது அறமாகுமா என்ற விவாதம் பெரிய அளவில் நிகழவில்லை. பல பொருளாதார நிபுணர்களும் அப்படிச் செய்வது தம் துறைக்கு பொருத்தமான செயலல்ல என்று நினைத்திருக்கலாம். ஆனால், இன்று போல் எப்போதும் பொருளாதாரம் அறத் தத்துவம் குறித்து பேசுவதில் தயக்கம் கொண்டிருக்கவில்லை. வெல்த் ஆஃப் நேஷன்ஸ்போலவே ஆடம் ஸ்மித், ‘தியரி ஆஃப் மாரல் செண்டிமெண்ட்ஸ் என்ற புத்தகத்தையும் எழுதினார். பால் சாமுவேல்சன், கென்னத் ஆரோ போன்ற மாபெரும் இருபதாம் நூற்றாண்டு பொருளாதார நிபுணர்களும் விழுமியங்கள் குறித்த கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். அந்தப் புத்தகங்களில் இருந்து சில பக்கங்களை எடுத்துக் கொள்வது அவர்கள் வழி வந்தவர்களுக்கு நன்மை செய்யும்.

நவீன பொருளாதார நிபுணர்கள் தங்கள் பொருளாதார கொள்கை குறித்த ஆய்வுகளில் விழுமியங்கள் குறித்த மதிப்பீடுகளின் பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர். வருமானம், அதன் பகிர்வு போன்ற மாறுபடும் பொருளாதார அலகுகள் மீது எப்படிப்பட்ட தாக்கம் இருக்கக்கூடும், இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்த பொதுநலன் மீது எப்படிப்பட்ட பாதிப்பு செலுத்தும், என்பனவற்றைக் கொண்டு பொருளாதார கொள்கைகள் மதிப்பிடப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு பொருளாதார கொள்கை – ஐம்பது சதவிகிதம் என்பதற்கு மாறாய் நாற்பது சதவிகித வருமான வரி உச்ச வரம்பு- மற்றொன்றை விட அதிக அளவு பொதுநலனுக்கு உதவுகின்றது என்றால் அதுவே பொருளாதார வல்லுனர்களுக்கு போதுமானதாய் இருக்கின்றது.

இந்த அணுகல் மிகப்பெரும் பயன் கொண்டது. இது சிந்தனையை நெறிப்படுத்துகிறது, பயனுள்ள தகவல்களைத் தருவிக்கிறது, எந்த உண்மைகள் அறியப்பட்டிருக்கின்றன, எந்தக் கேள்விகள் விடை காணக் காத்திருக்கின்றன என்பது குறித்து துறையளவில் ஒருமித்த கருத்து உருவாவதை எளிதாக்குகின்றது. செலவினத்தின் பயன்மதிப்பு என்ன என்ற ஆய்வு குறையற்றது என்று சொல்ல முடியாது என்றாலும், விஷய ஞானம் உள்ள வல்லுனர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய அதுவே சிறந்த வழி.

ஆனால் அது ஒன்று மட்டும் பயன்படுத்தப்படுவது பிரச்சினையில் முடியலாம். அமெரிக்க பொருளாதார அமைப்பின் (ஏஈஏ) வருடாந்திர கூடுகை ஒன்றில் ஹார்வர்ட் பல்கலையின் மாத்யூ வைன்ஜியர்ல் வாசித்த ஆய்வறிக்கை ஒன்று, முழு அளவு துல்லியமான மாதிரிப் படிவங்களை உருவாக்க முடியாத அளவுக்கு இந்த உலகம் சிக்கலானது என்பதைக் குறிப்பிடுகிறது. பொருளாதார கொள்கையில் ஏற்படும் மாற்றங்களின் பின்விளைவுகள் பல முன்கூட்டியே அறிய முடியாதவை. எதிர்காலத்தை மிகத் துல்லியமாய் கணிக்க முடியாது என்ற நிலையில், சமூக விழுமியங்கள், அல்லது காலப்போக்கில் உருவான மரபார்ந்த நெறிமுறைகளை, பொருளாதார நிபுணர்கள் வழிகாட்டிகளாய்க் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார் அவர். சில தேர்வுகளின் எதிர்பாராத விளைவுகள் குறித்து சேகரமாகியுள்ள அறிவை இப்படிப்பட்ட அணுகுமுறை பிரதிபலிக்கக்கூடும். இதற்கு அவர் ஓர் உதாரணம் தருகிறார். சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிக அளவில் நிலவுவது பொறாமைக்கு வழி கோளலாம், இந்தப் பொறாமை உணர்வுகள் பணக்காரர்களாய் இல்லாதவர்களின் வாழ்வுத்தரத்தை பாதிக்கின்றன, என்ற ஆதாரத்தின் அடிப்படையில் அரசு மக்களிடையே நிதிப்பகிர்வை அதிகரிக்கலாம். ஆனால் மக்களிடையே பொறாமை நிலவுவதைக் கருத்தில் கொண்டு அரசு நிதிப்பகிர்வை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார முடிவுகள் எடுப்பதை பெருவாரி மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது மக்களிடையே உரையாடிக் கணிக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் முடிவாய் இருக்கிறது. பொருளாதார வல்லுனர்களின் முன்மாதிரிப் படிவங்கள் வருமான வரி கொள்கையைக் கொண்டு பொறாமையை நியாயப்படுத்துவதால் ஏறபடக்கூடிய சமூகச் சீரழிவை கைப்பற்ற முடியாது போகலாம்.

வேறு வகையில் சொல்வதானால், பொருளாதார நிபுணர்கள் அற அக்கறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறார் வைன்ஜியர்ல். இப்படிச் சொல்வது பொருளாதார துறையின் புனிதங்களை மறுப்பது போன்றது. நோபல் பரிசு பெற்றவரான ஆல்வின் ராத் சந்தைக் கட்டமைப்புத் துறையில் தான் ஆற்றிய உயிர் காக்கும் பணி பற்றி ஏஈஏ கூடுகையில் உரையாற்றினார். உடல் உறுப்பு ஒன்றை தானம் அளிப்பவரின் ரத்தம், அதைப் பெறுபவர் ரத்தத்துடன் பொருந்த வேண்டும். ஒரு நண்பருக்கோ அல்லது குடும்ப உறவினருக்கோ சிறுநீரக தானம் செய்ய விரும்புபவர் ரத்தம் பொருந்தாத காரணத்தால் அதைச் செய்ய இயலாமல் போகலாம். இந்தச் சிக்கலைக் கடக்க, ராத் பொருத்தமான சந்தைகளை உருவாக்குவது ஒரு தீர்வாக இருக்கும் என்று கண்டார். இதன்படி, தன் ரத்தத்துக்கு இணக்கமான அந்நிய நபர் ஒருவருக்கு தன் உறுப்பை தானம் அளிப்பவர், அவரது நேசத்துக்குரியவருக்கு வேறொரு அந்நிய நபரின் பொருத்தமான உறுப்பை தானம் பெற்றுத் தரலாம். இது போல் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் என்று பலரைக் கொண்ட உறுப்பு மாற்று குழுக்கள் இணைந்து இயங்கலாம். இதில் பயன் பெறுபவர்கள், இப்படிப்பட்ட சந்தை இல்லாத நிலையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியாமல், மாற்று உறுப்புக்குக் காத்திருக்கும் காலத்திலேயே இறந்திருக்கக்கூடும்.

ஆனால் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் உடல் உறுப்புகளுக்கான தேவை அவற்றின் வரத்தைக் காட்டிலும் மிக அதிகமாகவே இருக்கிறது. உடல் உறுப்புகளை விலைக்கு வாங்கவும் விற்கவும் சட்டம் அனுமதிக்குமானால், இன்னும் பலர் தானம் அளிக்கலாம், இது கடும் பற்றாக்குறையைப் போக்க உதவும். ஆனால் இந்த வர்த்தகத்துக்கு சட்ட அனுமதி அளிக்க இயலாத வகையில் அரசுகளை அறம் சார்ந்த சங்கட உணர்வுகள் கட்டுப்படுத்துகின்றன. பரவலான அசூயையாலும் அறச் சங்கடங்களாலும் கட்டுப்படுத்தப்படும் “ஒவ்வாச் சந்தை” என்று ராத் அழைப்பதற்கு இது ஒரு உதாரணம். வர்த்தகத்தால் ஈட்டப்படக்கூடிய லாபங்களிலிருந்து புதிய சிந்தனைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் களனைக் குறுக்கும் உணர்வு என்று ஒவ்வாமை குறித்து அவர் வருந்துகிறார். இது போன்ற அற விலக்குகளுக்கு விடை காண பொருளாதார நிபுணர்கள் கூடுதலான சிந்தனையை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் அவர். சந்தைகள் புதிய சூழமைவுகளில் பயனளிக்க இயலாத வகையில் ஒவ்வாமை உணர்வுகள் தடை செய்கின்றன என்பதே காரணம்.

இது போன்ற சமூக நெறிமுறைகள் குறித்த விவாதங்களில் ஒரு சில தரிசனங்களும் ஏற்படுகின்றன. உடல் உறுப்பு வர்த்தகம் பற்றிய ஓர் ஆய்வு அறிக்கையில், டொரோண்டோ பல்கலையைச் சேர்ந்த நிகோலா லெஸ்டோரா, ஒவ்வாச் செயல்களுக்கு எதிராய் அற ஆட்சேபங்கள் நிலவ முக்கியமான காரணங்கள் இருக்கலாம், அவற்றை நிராகரிக்கும் சமூகம் அதற்கான விலை கொடுக்க வேண்டியிருக்கலாம் என்கிறார். சன்மானம் அளித்தல் உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுகிறது என்பதைச் சுட்டுவதால் உறுப்புகளை விலைக்கு விற்பதற்கு ஆதரவான சட்டங்களுக்கு ஆதரவு கூடுகிறது என்பதை ஆய்வுகள் உணர்த்துகின்றன. ஆனால், வேறு சில உதாரணங்கள் எதிர்மறை விளைவைச் சுட்டுகின்றன. பால்வினைத் தொழிலை சட்டப்படி அனுமதிப்பது ஆரோக்கியமானது, பாதுகாப்பானது என்ற தகவல்களைப் பெண்களுக்கு அளிக்கும்போது அத்தகைய அனுமதிக்கான ஆதரவு குறைகிறது- செலவினத்தின் பயன்மதிப்பு என்ன என்ற ஆய்வு அணுகுமுறையை சமூக அமைப்பில் தங்கள் இடம் குறித்த விஷயங்களில் மேற்கொள்வதன் விளைவுகள் பெண்களுக்கு கவலையளிப்பதாய் இருக்கலாம்.

ஆனால், பொருளாதார நிபுணர்கள் அனைவரும் அறம் குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதில்லை. ழான் டைரோல், நோபல் பரிசு பெற்ற மற்றொரு பொருளாதார நிபுணர், தன் அண்மைய புத்தகம், “எகானமிக்ஸ் ஃபார் தி காமன் குட்” என்பதில், ஒரு அத்தியாயத்தை “சந்தையின் அற எல்லைகள்” என்ற விவாதத்துக்கு அளித்திருந்தார். தன் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டிய தேவை எந்த ஒரு சமூகத்துக்கும் உண்டு என்பதை என்பதை பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக்கொண்டு அனுமதிக்க வேண்டும், அதன் பின் அந்த இலக்குகளை மிகச் சிறந்த வகைகளில் அடைய திட்டமிட்டு உதவ வேண்டும் என்கிறார் அவர். ஆனால், ராத் ஆற்றிய உரை மீதான கட்டுரையொன்றில் இன்ஸ்டிட்யூட் ஃபார் நியூ எகானமிக் திங்க்கிங்கைச் சேர்ந்த பீட்ரிஸ் ஷெர்ரியர், இக்கேள்விகள் பொருளாதாரத் துறையின் ஆதார கேள்விகள்தான் என்றே வாதிடுகிறார்.  பொருளாதார துறையைக் காட்டிலும் பொருண்ம அறிவியல் தம் பங்களிப்புகளின் அறத் தாக்கங்களைச் சிறப்பாய் கையாள்கின்றன என்கிறார் அவர். பொருளாதார ரீதியில் முக்கியமான வகைகளில் அற விழுமியங்கள் குறித்த அக்கறைகள் மானுட நடத்தையை பாதிக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள ராத் சிரமப்படுகிறார். ஆனால், பொருளாதார நிபுணர்கள் பயனுள்ள சிந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் அறம் குறித்த விவாதங்களை நிராகரிக்க முடியாது, அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய இடத்தை அளித்தாக வேண்டும்.

பல பொருளாதார நிபுணர்களை இந்தப் போக்கு வருந்தச் செய்யலாம். சமூகப் பயன்பாடு குறித்த கணக்கீடுகள் கச்சிதமாக இருக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் அறம் குறித்து கேள்விகள் எழுப்பும் பழக்கத்தை இத்துறை மறந்து விட்டிருக்கிறது. ஒரு சமூகம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள், அதன் விழுமியங்கள் குறித்த கேள்விகளை தவிர்க்கக் கூடாது.

நன்றி : தி எகானமிஸ்ட் https://www.economist.com/news/finance-and-economics/21737256-lessons-repugnant-market-organs-economists-cannot-avoid-making-value

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.