மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்

This entry is part 5 of 6 in the series உலக தத்துவம்

கடவுள் எனும் இருப்பை(being) ஏற்றும் மறுத்தும் பல வாதங்கள் பல நூறு ஆண்டுகளாய் நடந்து வருகிறது. கடவுளின் வரையறையும் காலத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. எல்லாம்வல்ல மானுட வடிவிலான கடவுள் என்ற கருத்து உண்டு. கடவுள் என்பவன் ஒரு காரணியே, இருக்கும் பொருட்களைக் கொண்டு இவ்வனைத்தையும் படைத்த ஒரு கைவினைஞனே என்ற கருத்தும் உண்டு.  அருவமான கடவுள் என்ற நோக்கும் உண்டு. அனைத்தும் கடவுள் என்ற பார்வையும் உண்டு.

கிரேக்க தத்துவக் காலத்தில் இருந்து மேற்கில் தொடர்ந்து வரும் கடவுள் இருப்புக்கான விவாதங்களில் கடந்த ஆயிரமாண்டுகளில் நடந்த கடவுள் இருப்பு மறுப்புக்கான வாதங்கள் முக்கியமானவை. இந்தக் காலகட்டத்தின் தொடக்கத்தில் தான் இழந்து போன கிரேக்க தத்துவ ஞானம் மேற்கிற்குத் திரும்பக் கிடைக்கிறது. கிரேக்கத்தின் முக்கியத் தத்துவவாதிகளான பிளாட்டோவின் அரிஸ்டாட்டிலின் தத்துவச் சுவடுகள் கிறித்துவ இறையியலில் முன்னரே இருந்து வந்த போதிலும் இவ்விரண்டு தத்துவவாதிகளின் பெருமளவிலான தத்துவத் தொகுப்புகள் மீட்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு மேலை அறிவு சூழலுக்குள் வரத்தொடங்குவது அப்போது தான். மீண்டு வந்த பண்டைய தத்துவங்கள் ஏற்கனவே அங்கிருக்கும் கிறித்துவ இறையியலிருந்து சற்று மாறுபட்டும், புதிய பார்வைகளைக் கொண்டதாகவும், சில சமயங்களில் முரண்பாடுடனும் இருக்கிறது. கிறித்துவ இறையியல் இப்புதிய கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள மிகுந்த அறிவு பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. ஆகவே இந்தக் காலத்தின் இறையியல் என்பது விசுவாசம், இறைநூல் ஆகியவைகளை மீறி தர்க்கப்பூர்வமான வாதங்களிலும் கவனம் செலுத்தியது. நவீன தத்துவமும் அறிவியலும் வளரத்தொடங்கிய நவீன காலத்தில் மத நம்பிக்கைகளும் முன்னோர் அறிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. அனைத்து வகையான நம்பிக்கைகளும் கருத்துக்களும் ஆராய்ந்து பார்க்கப்பட்டன. கடவுள் என்ற இருப்புக்கு புதிய பல வாதங்கள் நவீன பார்வையில் முன் வைக்கப்பட்டன.

வாதங்களுக்குள் நுழைவதற்கு முன் மேற்கில் உலவி வந்த கடவுள் என்ற கருத்தை சற்று வரையறை செய்து கொள்ள வேண்டும். கடவுள் என்பதற்கு அந்தக் கலாச்சாரச் சூழலில் உலவி வந்த வரையறையானது கடவுள் என்பவன் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன், உச்சமான முற்றொழுங்குள்ளவன் (supremely perfect), அனைத்தும் அறிந்தவன், எல்லாம்வல்லவன், எங்கும் உள்ளவன், பிறதை சார்ந்திராதவன், மூலகாரணி, பிரபஞ்சத்தைப் படைத்து காப்பவன், மனிதர்களை நேசிப்பவன், மனித வடிவு கொண்டவன், அறத்தின் அடிப்படை. இவை எல்லாம் வழக்கமாகக் கடவுளின் மீது சூட்டப்படும் புகழாரம் தானே என்று தோன்றினாலும் கடவுளின் இருப்பு குறித்த வாதத்திற்கும் கடவுளின் பண்புகள் குறித்த விளக்கங்களுக்கும் மேலே கூறியவற்றில் ஒரு குறிப்பிட்ட பண்பை எடுக்கும் போது மற்றவை முரணாக நிற்க நேரிடும். அதனால் ஒவ்வொரு தனிப்பட்ட தத்துவவாதியின் கடவுள் குறித்த வாதத்திலும் மேலே கூறியவற்றில் இருந்து சில பண்பு மாறுபாடுகளைப் பார்க்கமுடியும். இருந்தாலும் அக்காலத்தில் மேற்கில் கடவுள் என்பதற்கான பொதுக் கூறுகள் இவை என்று கொள்ளலாம்.

கடவுளுக்கு இந்த வரையறை இருக்கும் கலாச்சாரப் பின்புலத்தில் கடவுள் இருப்புக்கான வாதம் கடவுளை இருக்கிறார் என்று நிறுவினால் மட்டும் போதாது. கடவுள் என்பவர் அவசியமாக இருக்கிறார்(necessarily exist) என்றும் நிறுவவேண்டும். அவசியமாக இருத்தல் என்றால் கடவுள் வேறு எதன் காரணத்தாலும் இருக்காமல் தானாகவே இருக்க வேண்டும். இருக்காமல் போவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கவேண்டும். இரு வகை இருப்புகளில் ஒன்று அவசிய இருப்பு. இன்னொன்று சந்தர்ப(contingent) இருப்பு. சந்தர்ப இருப்பானது இருக்காமல் போயிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒவ்வொரு மனிதரும் ஒரு சந்தர்ப இருப்பு. அதனால் ஒரு மனிதர் இல்லாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியும். அப்படி எண்ணுவதில் தர்க்கப்பிழையொன்றுமில்லை. ஆனால் அவசிய இருப்பு என்பது எந்த வாய்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது. 2 + 2 = என்பதற்குத் திட்டவட்டமாக, வேறு எந்த வாய்ப்புமில்லாமல், ஒற்றைப் பதில் 4 என்பதைப் போல், கடவுளின் இருப்பு வாய்ப்பின் பேரில் அமையாமல் அவசியமாக இருப்பதே அவசிய இருத்தல்.

கடவுள் இருப்புக்கான வெவ்வேறு வகையில் வெளிப்பட்டாலும் அடிப்படையில் இவ்வாதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இருப்பியல்வாதம்(ontological argument), பிரபஞ்சவியல்வாதம்(cosmological argument), இலக்கியல்வாதம்(teleological argument. இருப்பியல்வாதம் கடவுளின் வரையறையைக் கொண்டு கடவுள் இருப்புக்கு வாதங்களை முன் வைக்கும் முறை. இரண்டாவது இயற்கையின் பொது அம்சங்களைக் கொண்டு கடவுளை அதன் அவசிய காரணமாக முன் வைக்கும் முறை. இதன் பெயர் பிரபஞ்சவியல்வாதம். மூன்றாவது இயற்கையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் கொண்டு கடவுளின் இருப்புக்கான வாதத்தை முன் வைப்பது இலக்கியல்வாதம்.

இருப்பியல் சார்ந்து கடவுள் இருப்புக்கான வாதத்தைத் தொடங்கி வைத்தவர் புனித அன்ஸெல்ம்(St Anselm). கடவுளுக்கான இருப்பியல் வாதம் என்பது கடவுளின் இருப்பை நிறுவ புறத்திலிருந்து எந்தக் காரணத்தையும் எடுத்துக்கொள்ளாமல் பகுத்தறிவின் மூலம் நிறுவ முயல்வது. புனித அன்ஸெல்மின் வாதம் கடவுள் என்பதன் வரையறையைக் கொண்டே கடவுள் இருப்பை நிறுவ முயல்கிறது. அவருடைய வரையறையின்படி எதனொன்றை விட உயர்ந்ததாக வேறெதையும் எண்ண முடியாதோ அதுவே கடவுள். இந்த வரையறையை ஒத்துக்கொள்ளும் பொருட்டு அவருடைய வாதம் தொடர்கிறது. கடவுள் இல்லை என்று மறுப்பவர்களும் கடவுள் என்றால் என்ன என்று வரையறுத்த பின்பே மறுக்க முடியும்.

அவ்வகையில் கடவுளுக்கான இந்த வரையறையை ஏற்றுக்கொண்டால் கடவுள் என்பது கருத்தளவில் நம் மனதில் இருக்கிறது. இந்தக் கடவுள் நம் மனதில் மட்டுமே இருக்கிறது வெளியில் இல்லை என்று சொன்னால் மனதிலும் வெளியிலும் இருக்கக்கூடிய வேறொன்றை நாம் எண்ண முடியும். மனதில் மட்டும் இருப்பதை விட மனதிலும் வெளியிலும் இருக்கும் ஒன்று உயர்ந்தது. அதனால் கடவுளை விட உயர்ந்த ஒன்றை நம்மால் எண்ண இயல்கிறது. அது கடவுளுக்கென்று நாம் ஏற்றுக்கொண்ட வரையறைக்கு முரணானது. அதனால் கடவுளின் வரையறையின்படி அவர் மனதிலும் வெளியிலும் இருக்கவேண்டிய ஒரு இருப்பு. ஆகவே கடவுளின் இருப்பு உறுதியாகிறது.

இதற்கு அவர் காலத்தில் வாழ்ந்த கணிலோ எனும் துறவி எதிர்வினையாற்றினார். இவ்வாதத்தை கடவுளுக்கு மட்டுமின்றி வேறெந்த இல்லாத விஷயத்திற்கும் பிரயோகித்து அது இருக்கிறது என்று வாதிட முடியும். இதே வாதத்தைக் கொண்டு இல்லாத ஒரு தீவை இருக்கிறது என்று நிறுவலாம். அது உச்சமான முற்றொழுங்கு கொண்ட தீவு, இங்கிருக்கும் அனைத்தையும் விட மேலானது. ஆனால் அது இல்லை என்றால் இங்கிருக்கும் எந்தத் தீவும் அதை விட மேன்மையுடையதாகிறது. அதனால் அப்படி ஒரு தீவு இருந்தே ஆக வேண்டும் என்று நிறுவலாம் என்றார். அன்ஸெல்ம் இதைக் கணிலோவின் புரிதல் பிழை என்று கூறி கணிலோவிற்குச் சில எதிர்வாதங்களையும் முன் வைத்தார்.

கடவுளை குறித்த பிரபஞ்சவியல் வாதங்கள் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே தொடங்குகிறது. அரிஸ்டாட்டில் உலகில் உள்ள எல்லா நகர்வுகளுக்கும் மூலகாரணமாக ஒரு நகர்த்தி இருந்திருக்கவேண்டும் என்றார். அதை அவர் நகர்த்தப்படாத நகர்த்தி – unmoved mover என்கிறார். அவ்வாதம் பல நூறாண்டுகளுக்குப் பிறகு அவிசீனா(Avicenna) என்ற இஸ்லாமிய தத்துவவாதியால் வளர்த்தெடுக்கப்பட்டுப் பின் புனித தாமஸ் அக்வினாஸ்(St Thomas Aquinas) அதை மேலும் விரிவாய் கிறித்துவ இறையியலுக்குப் பயன்படுத்துகிறார். அக்வினாஸ் ஐந்து வழிகள் என்ற பெயரில் கடவுளுக்கான நிரூபணமாக ஐந்து வாதங்களை முன்வைக்கிறார். அவற்றில் முதல் நான்கு வாதங்கள் பிரபஞ்சவியலை சார்ந்தது.

முதலில் நகர்வின் அடிப்படையிலான வாதம். உலகில் பொருட்கள் நகர்வதை நாம் காண்கிறோம். ஒரு பொருளில் நகர்வென்பது நிகழ வேறொரு பொருளின் நகர்வு காரணமாக அமைகிறது. அப்பொருளின் நகர்விற்கு இன்னொரு பொருளின் நகர்வு காரணமாக அமையும். ஆனால் இப்படியே ஒவ்வொரு பொருளின் நகர்வுக்கும் காரணங்கள் மேல் காரணங்கள் என்று முடிவிலி வரை அடுக்கிச்செல்வது அபத்தமாகும். அதனால் இந்நகர்வுகளுக்கெல்லாம் மூலநகர்த்தி ஒன்று இருந்திருக்கவேண்டும். அம்மூலநகர்த்தித் தானாகவே நகர்ந்திருக்கவேண்டும். அம்மூலநகர்த்தியை நாம் கடவுள் என்கிறோம்.

இரண்டாவது காரணங்களின் அடிப்படையிலான வாதம். இவ்வுலகில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தின் விளைவாக தோன்றியிருக்கிறது. எக்காரணமும் தனக்குத் தானே காரணமாவதில்லை. அதனால் ஒவ்வொரு காரணமும் வேறொரு காரணத்தின் விளைவு. இக்காரணங்களை முடிவிலி வரை அடுக்க இயலாது. அதனால் மூலகாரணம் என்று ஒன்று இருந்தாக வேண்டும். அதை நாம் கடவுள் என்கிறோம்.

இந்த இரண்டு வாதங்களிலும் முடிவிலி ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் முடிவிலி என்று சொல்லும் போது முதல் நகர்வு அல்லது முதல் காரணம் என்பது இல்லாமலாகிறது. முதல் இல்லாமல் இச்செயல்கள் நடைபெற வாய்ப்பில்லை. அதனால் முடிவிலி நிராகரிக்கப்படுகிறது.

மூன்றாவது தற்காலிக பொருட்களின் அடிப்படையிலான வாதம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு தருணத்தில் இல்லாதிருந்து பின் உருவாகி மீண்டும் இல்லாமலாகும் தற்காலிகமானவை. இத்தற்காலிக பொருட்கள் மட்டும் தான் உள்ளதெனில் எல்லையற்ற கடந்த காலத்தில் தற்காலிக பொருட்கள் எவையுமே இல்லாத காலம் ஒன்று இருந்திருக்கும். அப்படியென்றால் இன்றும் எவையும் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அதனால் அழியாத நிரந்தரமான ஒன்று இருக்கிறது. அதையே நாம் கடவுள் என்கிறோம்.

நான்காவது வாதம் ஒழுங்கின் அடிப்படையிலானது. இவ்வுலகில் ஒவ்வொன்றும் வெவ்வேறு தரத்திலான ஒழுங்கை கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றின் ஒழுங்கின் தரத்தினை மதிப்பிடவும் முழுமை ஒழுங்கு கொண்ட ஒன்று இருக்கவேண்டும். அதை நாம் கடவுள் என்கிறோம்.

இலக்கியல்(teleology) சார்ந்த கடவுள் இருப்பு வாதம் என்பது இன்றும் வலுவாகப் பயன்படுத்தப்படும் வாதம். இன்று Intelligent design என்ற அழைக்கப்படும் வாதம் இலக்கியல் சார்ந்த வாதமே. இலக்கியல் என்பது ஒரு பொருளின் இலக்கு என்ன அது எதன் பொருட்டு இயங்குகிறது என்பதைக் குறித்து ஆராய்வது. அரிஸ்டாட்டில் ஒரு பொருளுக்கு நான்கு வகையான காரணங்களை முன்வைக்கிறார். அதில் ஒன்று இறுதி காரணம். ஒரு பொருளின் அவசியம் அதன் உபயோகமே அதன் இறுதி காரணம். ஒரு வாகனத்தின் இறுதி காரணம் அது மனிதனை சுமந்து செல்வது. இந்த இறுதி காரணத்தை ஆராய்வதே இலக்கியல் எனலாம்.

இந்த இலக்கியலை கொண்டு கடவுளை நிறுவ முயற்சிப்பது என்பது கூடுதலாக ஒரு அனுமானத்தையும் அதனுடன் சேர்த்துக்கொள்கிறது. ஒரு இலக்கு சார்ந்து அல்லது குறிப்பிட்ட உபயோகத்திற்காகப் படைக்கப்படும் பொருளானது அறிவுள்ள ஒன்றின் மூலமாகவே படைக்கப்படுகிறது. வாகனம் என்பது மனிதன் என்ற அறிவுள்ளவனால் படைக்கப்படுகிறது. அந்த வாகனமானது சில இயக்கங்களைக் கொண்டுள்ளது. அது வடிவமைக்கப்பட்டதிற்கு ஏற்றார் போல் ஒரே போல இயங்குகிறது. அப்படி இயங்குவதன் மூலம் அதன் இலக்கை சென்றடைகிறது.

புனித தாமஸ் அக்வினாஸ் தனது ஐந்து வழிகள் என்னும் கடவுள் இருப்புக்கான வாதங்களில் ஐந்தாவது வாதமாக இதை முன்வைக்கிறார். உலகில் பல இயற்கை நிகழ்வுகள் வடிவமைத்து வைத்தது போல இயங்குகிறது. கோள்கள் சுற்றுவது, புவியீர்ப்பு விசை போன்றவை. திரும்பத் திரும்ப அதே இயக்கத்தை அவை செயல்படுத்துகின்றன. சீராக இயங்கும் இப்பொருட்கள் யாவும் தற்செயலாக இயங்கிவிட முடியாது. இதன் பின் ஒரு வடிவமைப்புப் பொதிந்திருக்கிறது. இவ்வடிவமைப்பு அறிவற்ற இப்பொருட்களால் செய்திட இயலாது. அதனால் இம்மாபெரும் வடிவமைப்பின் பின் ஒரு அறிவுடைய இருப்பு இருக்கவேண்டும். அதை நாம் கடவுள் என்கிறோம்.

டெக்கார்ட் கடவுள் இருப்புக்கு இரு வகையான வாதத்தை முன் வைத்தார். ஒன்று இருப்பியல் ரீதியான வாதம். இந்த வாதத்தைப் புரிந்து கொள்ள அவரது தத்துவ வழிமுறையைச் சற்றுப் புரிந்துக்கொள்ளவேண்டும். அவர் பகுத்தறிவை பிரதானப்படுத்தியவர். புலன் வழியே கிடைக்கும் அறிவு திரிபடைந்தது, அவை நமக்கு உண்மையை உணர்த்துவதில்லை என்றார். அதனால் தன் அகத்தினில் உடல் புலன்களின் உதவியில்லாமல் கிடைக்கும் நேரடியான அறிதல்களையே அவர் தன் தத்துவக் கட்டுமாணத்திற்கு எடுத்துக்கொண்டார். இவர் அகத்தினில் நேரடியாக எழும் அறிதல்களை தெளிவான அறிதல் என்றார். அதன்படி அவர் கடவுள் என்ற உச்சமான முற்றொழுங்கு கொண்ட இருப்பு எனும் கருத்து தன் அகத்தில் தெளிவாகத் தெரிகிறது என்றார். இருத்தல் எனும் பண்பு இக்கடவுள் என்ற கருத்துக்கு அத்தியாவசியமாகிறது. அதையும் தன் அகத்தினால் தெள்ள தெளிவாகக் காணமுடிகிறது என்றார். ஏனெனில் இருத்தல் இல்லாமல் போகும் போது அக்கருத்தின் உச்சமான முற்றொழுங்கு தன்மை குறைபடுகிறது. ஒரு முக்கோணத்தின் தனித் தனி உட்கோணங்களின் கூட்டுத் தொகை எவ்வாறு இரு செங்கோணங்கள் என்று நம்மால் தெளிவாக அறிய முடிகிறதோ அதைப் போன்றே கடவுள் என்ற கருத்துக்கும் இருப்பெனும் பண்பு அத்தியாவசியமானதென்று அறிய முடிகிறது. இருப்பென்பது முற்றொழுங்குகளில் ஒன்று அதை எடுத்துவிட்டால் கடவுள் என்ற உச்சமான முற்றொழுங்கு கொண்ட இருப்பெனும் கருத்தே முரணாகிறது. அதனால் கடவுள் என்ற இருப்பு இருப்பது அவசியம் என்றார்.

இதற்கு அவர் காலத்தில் வாழ்ந்த மற்றொரு தத்துவவாதியான பியரி கஸென்டி எதிர்வினையாற்றினார். எந்த ஒரு பொருளுக்கும் இருப்பென்பது முற்றொழுங்கை கொடுப்பதில்லை. ஒரு பொருள் இல்லை என்றால் அது முற்றொழுங்கு அற்றது என்று அர்த்தமல்ல அப்பொருளே இல்லை என்று தான் அர்த்தம் என்றார். அதற்கு டெக்கார்ட்டிடம் இருந்து வலுவான எதிர்வாதங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் அவர் வேறொரு வாதத்தையும் முன் வைத்தார். என் மனதில் கடவுள் என்ற எல்லையற்ற உச்ச முற்றொழுங்கு கொண்ட இருப்பு எனும் கருத்திருக்கிறது. நான் என்ன முயன்றாலும் எல்லைக்குட்பட்ட, எளியவனான என்னால் எல்லாம்வல்லமை, எல்லையின்மை போன்ற பண்புகளைக் கொண்ட இக்கருத்தை உருவாக்கியிருக்க முடியாது. அதனால் இதைக் கடவுளே தான் என்னுள்ளே விதைத்திருக்க வேண்டும். கடவுள் என என்னுள் இருக்கும் இக்கருத்துபடைத்தவன் படைத்ததின் மேலிடும் முத்திரைஎன்றார்.

ஸ்பினோஸாவின் கடவுள் மதரீதியான, மரபு ரீதியான கடவுளுளிருந்து சற்று வித்தியாசமானது. அவரது கடவுள் பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஒரு சாரப்பொருள்(substance). ஸ்பினோஸா சாரப்பொருள் என்ற கருத்தை டெக்கார்டினிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதன் வரையறையையும் டெக்கார்ட் வரையறுத்ததை போலவே வைத்துக்கொண்டார். சாரப்பொருள் என்பதுஎது தானாகவே இருந்து தன்னாலேயே தோன்றியதோ அதுவே’.

ஸ்பினோஸாவின் நிறுவல்முறையானது யூக்லிடின் வடிவவியல் நிறுவுமுறையை அப்படியே பின்பற்றுகிறது. ஒரு கணித தேற்றத்தை நிறுவுவது போல் அவர் தத்துவக் கருத்துக்களை நிறுவ முயற்சித்திருக்கிறார்.

ஸ்பினோஸாவின் வாதத்திற்கு நான்கு அடிப்படை வரையறைகள் முக்கியமானது. அதைக் கொண்டே அவர் கடவுள் இருப்புக்கான வாதத்தை முன்வைக்கிறார். ஒன்று,சாரப்பொருளானது அதனைத் தவிரப் பிறதை சார்ந்திராத ஒன்று. அதே போல் கருத்தளவிலும் அது பிற எந்தக் கருத்தையும் சார்ந்திராதது. இரண்டு, சாரப்பொருளின் குணமென்பது அதன் சாராம்சத்தை (essence) வெளிப்படுத்துவதாகும். மூன்று, கோலம்(mode) எனப்படுவது ஒரு சாரப்பொருளின் ஏற்படும் மாறுபாடு. கோலமானது சாரப்பொருளை சார்ந்தது. அதுவன்றி கோலம் அமையமுடியாது. நான்கு, கடவுள் எனப்படுவது முற்றிலும் எல்லையற்றது. அதாவது எல்லையற்ற குணங்களைக் கொண்ட ஒரு சாரப்பொருள். ஒவ்வொரு குணமும் எல்லையற்ற சாராம்சங்களை வெளிப்படுத்துவதாகும். இந்த நான்கு வரையறைகளைக் கொண்டு பிற வாதங்களை முன் வைத்தார்.

இயற்கையில் ஒரே இயல்பை அல்லது குணத்தை வெளிப்படுத்தும் இரு வேறு சாரப்பொருள்கள் இருக்கமுடியாது. எந்த இரு சாரப்பொருளும் ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபடத் தனது குணங்களை வெவ்வேறாகக் கொண்டிருக்கவேண்டும். சாரப்பொருட்கள் குணத்தின் அடிப்படையில் வித்தியாசப்படுகிறதெனில் எவ்வாறு இரு சாரப்பொருட்கள் ஒரே குணாம்சத்தைக் கொண்டிருக்க முடியும்? (அவரின் இந்த தர்க்க நீட்சி விவாதத்திற்க்குறியதாகக் கருதப்படுகிறது) அதனால் இயற்கையில் உள்ள சாரப்பொருட்கள் தங்களுக்குள் பொதுவான குணங்களைக் கொண்டிருக்க முடியாது.

கடவுள் என்ற எல்லையில்லா குணங்களை, ஒவ்வொரு குணமும் எல்லையில்லா சாராம்சத்தை, வெளிப்படுத்தும் சாரப்பொருள் அவசியமாக இருக்கிறது. இங்கு அவர் இருப்பியல் ரீதியான வாதத்தையே கடவுள் இருப்புக்கு பயன்படுத்துகிறார். கடவுள் என்ற சாரப்பொருள் இருத்தல் எனும் இயல்பையும் கொண்டுள்ளது. ஏனெனில் சாரப்பொருட்கள் குணங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. வெவ்வேறு குணங்கள் கொண்ட சாரப்பொருட்கள் ஒன்றை மற்றொன்று உருவாக்க முடியாது. அதனால் சாரப்பொருள் ஒவ்வொன்றும் தன்னைத் தானே தோற்றுவித்துக்கொள்ளவேண்டும். அதனால் சாரப்பொருள் என்பது இருந்தாகவேண்டும்.

கடவுளின் எல்லையில்லா குணங்களுக்குள் அனைத்து குணங்களும் அடங்கும். அதனால் கடவுளிடம் இல்லாத குணம் வேறொரு சாரப்பொருளிடம் இருக்கப்போவதில்லை. மேலே கண்டது போல் குணங்களைப் பொதுவாகக் கொண்ட இரு வேறு சாரப்பொருட்கள் இருக்கவாய்ப்பில்லை. அதனால் கடவுளே ஒரே சாரப்பொருள்.

ஸ்பினோஸா முன் வைப்பது சர்வமிறைவாதம்(pantheism). இவ்வாதத்தின்படி இங்குள்ள அனைத்தும் கடவுளே. இங்கு நாம் தனித்தனியாகக் காணும் யாவையும் கடவுள் எனும் பெருவிரிப்பின் வெவ்வேறு கோல(mode) கசங்கள்களே. கடவுளின் எல்லையற்ற குணங்களில் நாம் அறிவது இரண்டையே. ஒன்று வெளி, இன்னொன்று எண்ணம். இதைத் தவிரக் கடவுளின் பிற குணங்களை நம்மால் அறிய இயலாது.

ஸ்பினோஸாவின் கடவுளானது யூத, கிறித்துவக் கடவுளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வேறுபடும் சில புள்ளிகள் இவை. கடவுள் என்பவர் பிறரை சாராமல் இவ்வனைத்தையும் படைத்த போதிலும் கடவுளால் இவ்வனைத்தையும் படைக்காமல் இருந்திருக்க முடியாது. இது கடவுளின் விருப்பத்தின் பேரால் நிகழ்ந்த படைப்பல்ல. ஒரு வேளை கடவுள் இவ்வனைத்தும் உருவாகாது போகட்டும் என்று நினைத்திருந்தாலும் அது நடந்திருக்காது. தவிர்க்கமுடியாத நிகழ்வாகவே இவையனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது. இப்படைப்பில் மனிதர்களின் சுதந்திர விருப்பமென்பது(free will) கிடையாது. அனைத்தும் நடந்தியங்க வேண்டிய முறையில் நடக்கும். இக்கடவுள் மனிதவடிவிலான கடவுள் அல்ல. இக்கடவுள் பலக்குணங்களைக் கொண்டு அனைத்துமாக விளங்கும் ஒரு இருப்பு.

காண்ட் கடவுள் இருப்புக்கான எல்லா வகையான வாதங்களிலும் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டினார். முதலில் அவர் இருப்பியல் வாதத்தின் குறைகளை முன் வைத்தார். இருப்பியல் வாதம் இறைவனின் குணங்களில் இருந்து இருப்பைப் பிரிக்க முடியாது என்கிறது. இறைவன் என்ற கருத்தினுள்ளே இருப்பு எனும் குணம் இருக்கிறது. இறைவன் என்ற கருத்துக்கு இருப்பு என்பது இன்றியமையாதது. கடவுள் என்ற கருத்தை கூறி அதை இல்லை என்றும் கூறுவது முரண். இறைவன் என்ற கருத்து சாத்தியமென்றால் அக்கருத்தின் இருப்புச் சாத்தியம் மட்டுமில்லை அவசியமும் என்பது இருப்பியல் வாதத்தின் நிலைப்பாடு.

கடவுள் இல்லைஎன்று கூறுவது முரண் என்று இருப்பியல்வாதிகள் சொல்வதை காண்ட் நிராகரிக்கிறார். கடவுள் என்ற கருத்துக்குள் அதன் இருப்பு ஒரு இன்றியமையாத பண்பு என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் கடவுள் என்பதை இல்லை என்று சொல்லும் சாத்தியமும் இருக்கிறது என்றார். ஒரு முக்கோணத்திடமிருந்து அதன் மூன்று கோணங்கள் என்ற பண்பு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அப்படிச் சொல்வதின் மூலம் அப்பண்பை மட்டும் நாம் இல்லை என்று சொல்லவில்லை முக்கோணம் என்ற கருத்தயே நிராகரிக்கிறோம். அதே போல் கடவுள் இல்லை என்று சொல்லும்போது அவரின் இருப்பு என்ற பண்பை மட்டும் நிராகரிக்கவில்லை. கடவுள் என்ற கருத்தையே நிராகரிக்கிறோம்.

வேறொரு வகையிலும் எதிர்வாதத்தை முன்வைத்தார் காண்ட். இருப்பு என்பது ஒரு கருத்தின் பண்பாக(predicate) கூற முடியாது என்கிறார். ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு இருப்பென்பது ஒரு பண்பாகக்கூடும் எனில் அக்கருத்தை வரையறுத்த பின்பு, அதாவது அதன் பண்புகளை முற்றிலும் சொல்லி முடித்த பின் அந்தக் கருத்து இருக்கிறது என்று கண்டு சொன்னால் அது அந்தக் கருத்துக்கு ஒரு பண்பை கூட்டுவது போலாகிறது. அப்போது நாம் சிந்தனையில் வரையறுத்த கருத்திலிருந்து நாம் இருக்கிறது என்று கண்டுகொண்ட கருத்துக்கு ஒரு பண்பு கூடுதலாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு மலையை, அதன் எல்லாப் பண்புகளையும் சொல்லி வரையறுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அது உயரமானது, கடிணமானது, பாறைகளால் ஆனது என்று அனைத்து பண்புகளையும் சொல்லிமுடித்தபின்னே, ஒரு மலையைக் காண்கிறீர்கள். அம்மலை நீங்கள் கருதிய மலையெனும் பண்புகளைனைத்தும் கொண்டிருக்கிறது. மலை இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறீர்கள். ‘மலை இருக்கிறதுஎன்று சொல்லும் போதுஇருக்கிறதுஎன்ற சொல் மலையின் பண்புகளில் ஒன்றாகச் சேர்வதில்லை. அப்படிச் சேருமெனில் நீங்கள் கருதிய மலையிலிருந்து கண்டடைந்த மலைக்கு ஒரு பண்பு அதிகம் உண்டுஇருப்பு எனும் பண்பு. ஆகவே கருதியதும் கண்டதும் ஒன்றெனக் கூறமுடியாது. ஆனால் இருப்பு என்பது ஒரு பண்பல்ல என்று கொண்டால் நீங்கள் கருதியதும் கண்டதும் ஒன்றே. ஆகவே கருத்து வரையறையில் இருப்பெனும் பண்பை அவசியமாகக் கொண்டு கடவுளின் இருப்பை நிறுவும் பிழையை எடுத்துக்காட்டினார்.

அடுத்து பிரபஞ்சவியல்வாதத்தையும் அவர் விமர்சித்தார். இந்த வாதம் இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு கடவுளின் இருப்பை நிறுவ முற்பட்டாலும் இதுவும் கடவுள் என்பதை அவசியமான உச்ச முற்றொழுங்கு பொருந்திய இருப்பாகவே கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது இருப்பியல் வாதத்தினை மறைமுகமாகச் சார்ந்திருக்கிறது. அதனால் இதுவும் சாத்தியமில்லை என்றாகிறது.

இலக்கியல் வாதத்தை தான் காண்ட் ஓரளவு மதிக்கிறார். இவ்வுலகின் இயங்குமுறையைப் பார்த்து இந்த இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்நோக்கம் கடவுளால் விதைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்நோக்கதிற்கேற்ப இவ்வனைத்தும் கட்டமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற வாதம். இவ்வாதம் கடவுள் இருக்கிறார் என்று சொன்னாலும் கடவுளின் பண்புகளைக் குறித்து ஏதும் சொல்வதில்லை. பொருட்களைக் கொண்டு ஒரு இயந்திரத்தை படைக்கும் கைவினைஞனை போலக் கடவுளும் இவ்வனைத்தையும் செய்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் கடவுள் உச்சமான முற்றொழுங்கு கொண்ட கடவுளாக இருக்க அவசியமில்லை.

காண்ட் கடவுளுக்கான தர்க்கப்பூர்வமான வாதங்களுக்குச் சாத்தியமில்லை என்றார். ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளச் சாத்தியமுண்டு என்றார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் விரிவானது அவரது தத்துவ அமைப்பை முழுவதும் உள்வாங்கிக் கொண்டால் தான் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். இருந்தாலும் சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். மனிதர்களின் பகுத்தறிவானது அவன் ஒழுக்க வழியில் நடப்பதற்காகப் படைக்கப்பட்டது. அதே பகுத்தறிவானது மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியானது இச்சையினால் கிடைக்கும் மகிழ்ச்சியன்று. அப்படிப்பட்ட மகிழ்ச்சிக்கு பகுத்தறிவென்று ஒன்று அவசியமில்லை. இங்குக் குறிப்பிடப்படும் மகிழ்ச்சியானது ஒழுக்கவழியில் நடப்பதன் மூலமாகக் கிடைக்கும் மகிழ்ச்சி. ஆனால் இவ்வுலகில் ஒழுக்கவழியில் நடப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் ஒழுக்கவழியில் நடந்ததற்கு மகிழ்ச்சியானது பரிசாக இவ்வுலக வாழ்வு முடிந்த பின் அளிக்கப்படுகிறது. இங்கு ஆன்மாவின் அழிவின்மையையும் அவர் நிறுவுகிறார். ஒழுக்க வழியும் மகிழ்ச்சியும் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது. இவ்வுலகில் அதன் தொடர்பு வெளிப்படவில்லை என்றாலும் மீபொருண்மை வெளியில் அதன் தொடர்பு இருத்தல் வேண்டும். இந்தத் தொடர்பை மனிதனோ அல்லது இயற்கையோ உருவாக்கவில்லை. இதை இயற்கைக்கும் அப்பாற்பட்ட மீபொருண்மை காரணி ஒன்று உருவாக்கியிருக்க வேண்டும். அக்காரணியை நாம் கடவுள் என்று கொள்ளலாம். இவ்வுலகில் வாழ்வை முடித்துக்கொண்டு ஆன்மாவானது சென்று சேர்வது அந்த மீபொருண்மை வெளிக்கு. அங்குக் கடவுள் ஒழுக்கவழியில் நடந்த ஆன்மாக்களுக்கு மகிழ்ச்சியைப் பரிசாக அளிப்பதன் மூலம் ஒழுக்க நடத்தைக்கும் மகிழ்ச்சிக்குமான தொடர்பை ஏற்படுத்தித்தருகிறார். இந்தக் காரணத்திற்காகக் கடவுள் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம். ஒழுக்க வழியில் நடப்பதை தர்க்கபூர்வமாக நியாயப்படுத்த அது அவசியமாகிறது.

இங்குக் காண்டின் கருத்துக்கள் கிறித்துவக் கருத்துக்களுக்கு நெருக்கமாக வருவதைக் காணமுடிகிறது. காண்டின் கடவுள் இருப்பு குறித்த வாதங்கள் ஒரு கருதுகோளே தவிர நிரூபணம் அல்ல.

கடவுள் இருப்பு மறுப்புக்கான விவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடந்து வருபவை. இங்குக் கொடுத்தது சில உதாரணங்கள் மட்டுமே. லெய்பினிஸ், ஹெகல், வில்லியம் பேலி போன்ற பல தத்துவ மேதைகள் இது குறித்து வாதங்களை முன் வைத்துள்ளார்கள். இன்றும் மேலே கொடுக்கப்பட்ட சில வாதங்கள் நவீன தர்க்கத்துக்கு ஏற்றார் போல் மாற்றியமைக்கப்பட்டுத் தத்துவச் சூழலில் உலவி வருகிறது. இந்தப் பலநூற்றாண்டு கால விவாதங்களைப் பார்க்கையில் எதற்காக இம்மனிதர்கள் இந்த இருப்பை நிறுவ இப்படி முயல்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது. ஆனால் அதே நேரத்தில் நம் புலனுக்கும் அகத்துக்கும் புலப்படும் அனைத்தின், சுயம் உட்பட, காரணங்களை விளக்கிக்கொள்ள வேறு என்ன வழியிருக்கிறது என்ற பதில் கேள்வியும் எழுகிறது.

Series Navigation<< பொய்யுலகை அளிக்கும் தீயசக்திவரலாறு குறித்து ஹேகல் >>

One Reply to “மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்”

 1. கடவுளை முன்சார்பு முடிவாக (pre-judged conclusion) கருதினால் தர்க்க வழியில் நம் எண்ணத்தை உண்மை என நிறுவலாம். இக்கட்டுரை மேற்கோள் காட்டும் 3 வித தத்துவ விளக்கங்கள் அந்த வகையில் முன்சார்பு கொண்டவையாகவே உள்ளன. கடவுள் என்ற எண்ணமே எதற்கு வர வேண்டும். குழந்தை முதல் நாம் பயிற்றுவிக்கப்பட்டதால் வருகிறது.
  கடவுள் என்ற எண்ணம் உருவாக எது அடிப்படை என பார்த்தால்:
  (1) கடவுள் என்பதற்கான வேர்ச்சொல் விளக்கம் (தமிழ் உட்பட உலகின் எல்லா பிரபல மொழிகளிலும்) தேடினால் இயற்கை தான் கடவுள் என்ற முடிவு கிடைக்கிறது.
  (2) உலகில் இன்றுள்ள அனைத்து மதங்களின் தொடக்கம் எதுவும் கடவுள், அவரின் இருப்பு, அவரின் செயல்பாடு, அவரின் தத்துவம் என்று அமையவில்லை. மனிதனின் தேவை, அவனின் புரிதல், அவனது உலகாயதப் பார்வை, சமூக வாழ்க்கைக்குத் தேவையான ஒழுங்குகளின் தேவை, அவைகளின் வரையறை இவையே முக்கியமாக காணப்படுகிறது.
  (3) 2000 ஆண்டுகளை ஒட்டிய காலகட்டத்தில் இருந்த ஒரு சில அரசுகள் மக்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆட்சியின் கீழ் கொண்டு வர கண்டுபிடித்த எளிய வழிமுறை மதம்.
  இதுபற்றி நானும் ஒரு கட்டுரையை பதிவாக எழுதியுள்ளேன். விருப்பமுள்ளோர் காணலாம்: https://thamizhselva.blogspot.it/2014/11/blog-post.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.