பின்னிரவின் நிலா

நாற்காலியிலிருந்து எட்டி, புஸ்தகத்தை எடுத்த கோவிந்தராஜன்  அதனுள் வைக்கப்பட்டிருந்த இன்லண்ட் லெட்டரை உருவி மீண்டும் ஒருமுறைப் படித்தார். கிராமத்திலிருந்து, அவருடைய பால்ய சினேகிதனும், பூர்வீக வீட்டைப் பார்த்துக்கொண்டிருப்பவனுமான பெரியசாமி, குண்டு குண்டான கையெழுத்தில் எழுதியிருந்த கடிதம். வந்து நாளாகிவிட்டது. ஊரில் கொஞ்சம் மழைபெய்திருக்கிறது என்றும், எல்லோரும் சுகமென்றும் எழுதியதோடு, இவர் கிராமத்துப்பக்கம் வந்து மூன்று வருஷமாகப்போகிறது என்றும் நினைவுபடுத்தியிருந்தான். எதிர்த்தவீட்டுப் பாட்டிகூட விஜாரித்ததாகவும், அவசியம் ஒருமுறை கிராமத்துக்கு வந்துபோகும்படியும் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தான். கடிதம் வந்த நாள் முழுதும் கிராமத்து நினைவு அவரை அலைக்கழித்தது.  அன்று இரவு சாப்பிட்டபின் மனைவியிடம் மெல்லப் பேச்சை எடுத்தார் கோவிந்தராஜன். ‘பேத்தி பொறந்து இன்னும் ஒரு மாசம்கூட சரியா ஆகலை. அதுக்குள்ள என்ன கிராமத்துக்கு ஓட்டம்? டீ அக்ஷரா, சொல்லுடிஎன்றாள் அவருடைய மனைவி சரோஜா. அவருடைய பெண்ணும் அம்மாவை வழிமொழிந்தவளாய்இன்னும் ஒரு மாசம் போகட்டும்ப்பா. அப்பறமாப் போய்ட்டு வாங்கோஎன்றாள். சரி என்று சம்மதித்தார் கோவிந்தராஜன்

ஏதோ யோசித்தவாறு,  புத்தக ஷெல்ஃபின் மேல்தட்டிலிருந்து  வெள்ளைப் பேப்பர் ஒன்றை எடுத்து ஸ்டூலில் வைத்துக்கொண்டு அவசரமாக நாலு வரி எழுதினார் பெரியசாமிக்கு. கூடியவிரைவில் வரப்போவதாய் தெரிவித்துக் கடிதத்தை முடித்தார். எழுதிய லெட்டரைக் கவரொன்றில் போட்டு ஒட்டிக் கையிலெடுத்துக்கொண்டார். ‘சரோஜா.. நான் கடைத்தெருவரைக் கொஞ்சம் போயிட்டு வரேன். கதவத் தாழ்ப்பாள் போட்டுக்கோஎன்றவர், நினைவு வந்தவராய்அக்ஷராவுக்கு ஏதாவது வேணுமா.. கேளுஎன்றவாறு நின்றார். ’வரும்போது கொஞ்சம் முளைக்கீரையும், பழமும் வாங்கிண்டு வந்துடுங்கோ. சந்துல, தள்ளுவண்டில, டெல்லி பாலக் வச்சிண்டு நிப்பான். ரெண்டு கட்டு வேணும். அப்படியே தூக்கிண்டு வந்திடாம, பாத்து வாங்கிண்டு வாங்கோஎன்று மனைவி விடுத்த கோரிக்கைக்கு மண்டையாட்டி வெளியேறினார்.

ஹென்னூர் மெயின் ரோட்டோரமாக உடைந்துகிடந்த பாதசாரிகளின் நடைபாதையில் கால் தடுமாறி நடந்தார் அவர். செருப்புத் தைக்கிறவனும், பிளாஸ்டிக் சாமான் விற்பவனும் அங்கும் இங்குமாகக் கடைபோட்டிருக்க, பெட்டிக்கடை ஒன்று நடைபாதையில் துருத்திக்கொண்டு நின்றது. கொஞ்சதூரம் நடந்து வலதுபுறமாகத் திரும்பி வினாயகர் கோவில் முன் வந்து, வாசலில் இருந்தே ஒரு கும்பிடு போட்டார். பக்கத்து சந்தில் நுழைந்து இடதுபுறம் திரும்ப, வரிசையாக இருந்த கட்டிடங்கள் ஒன்றில் இண்டியாபோஸ்ட்டின் சிவப்பு மஞ்சள் லோகோவுடன் போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளே இருந்த தபால்பெட்டியில் கடிதத்தைப்போட்டுவிட்டு வெளியே வந்தார். மனசு லேசானதுபோலிருந்தது. தள்ளுவண்டிக்காரனிடம் கீரையையும், பாலக்கையும் வாங்கி பையில் வைத்துக்கொண்டார். பிள்ளையார் கோவிலுக்கெதிரான சந்தில் சின்ன பழக்கடையில் கொஞ்சம் வாழைப்பழமும், ஆப்பிளும் வாங்கிக்கொண்டு, மெல்ல நடந்து வீடு திரும்பினார். கதவைத் திறந்த பெண்ணிடம் பையைக் கொடுத்துவிட்டு, வேஷ்டிபனியனுக்கு மாறி, பால்கனிக்குப்போய் ப்ளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தார் கோவிந்தராஜன். அக்ஷரா வீட்டுக்கு வந்த சிலமாதங்களில் பால்கனிச்செடிகள் புத்துயிருடன் கிளர்ந்திருப்பதை நினைத்து சந்தோஷமாயிருந்தது அவருக்கு.

கிராமப்பயணம் புறப்படுமுன் அன்றிரவு தன் வயதான அம்மாவுடன் உட்கார்ந்து பேசினார் கோவிந்தராஜன். ’நா சொல்றதக் கேளுடா.  பேத்தி பொறந்துருக்கா நல்லபடியா.. ஊருக்குப் போனவுடன் குருக்களை வரச்சொல்லி ஆளனுப்பு. பக்கத்து கிராமத்தில்தான் இருப்பார். நீ வந்துருக்கேன்னு தெரிஞ்சா  ஒடனே வந்துடுவார்.  மளிகைக்கடையில நல்லெண்ணெய், சூடம், சாம்பிராணி, தேங்காய், பழமெல்லாம்  வாங்கி குருக்கள்கிட்ட குடு. அம்பாளுக்கு நன்னா எண்ணெயச்சாத்தி அபிஷேகம் பண்ணச்சொல்லு. கிராமத்துல  இப்பல்லாம் கோவிலுக்கு யாரும் ஏதாவது செய்யறாளோ இல்லியோ?  புதுப்பொடவைய அம்பாளுக்கு சாத்தி அர்ச்சனை, நைவேத்யம் பண்ணச்சொல்லு. மனசார சேவிச்சுக்கோ. அதுக்கப்புறம் ஊர் சுத்தல்,  அரட்டையெல்லாம் வச்சிக்கலாம். என்ன புரியறதா?’ என்றாள் அம்மா. சரிம்மா என்று தலையாட்டினார் அவர்.

அன்றிரவு பதினோறு மணிக்கு பெங்களூரிலிருந்து திருச்சி நோக்கிய பயணத்தைத் தொடங்கினார் அவர். திருச்சிக்கு காலை ஐந்து மணிக்குப் போய்ச்சேரும் பஸ் அது. கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்தார் கோவிந்தராஜன். மணி ஒன்றுக்கு மேலாகியும் தூக்கம் வந்தபாடில்லை. சொந்த ஊர் நினைவுகள் அலையலையாய் மனதில் எழுந்தன. அவரை அந்தக் கிராமத்து வீட்டில் அவருடைய அம்மா பெற்றபோது, இந்தக் கிழவிதான் கூட இருந்து பிரசவம் பார்த்தாளாம். முதலில் வலிவராமல் நாள் தள்ளிக்கொண்டே போக, பெண்டாட்டியின் வயிற்றில் கத்தி விழுந்துவிடுமோ என்று அவருடைய அப்பா பயந்தபோது, இந்தக் கிழவியைத்தான் கூப்பிட்டனுப்பினாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டு அவள் கைமருந்து எல்லாம் அரைத்து எடுத்துக்கொண்டு ஓடிவந்தாளாம். மருந்துகொடுத்து தைரியம் சொன்னவள், அன்று இரவு முழுதும் அம்மாவுக்குத் துணையாகப் படுத்திருந்தாளாம்.  அடுத்த நாளே பிரசவவலி எடுத்து, சுகப்பிரசவம் ஆகிவிட்டதாம். அப்போது இந்தக் கிழவிக்கு இருபத்தைந்து, இருபத்தி ஆறு வயசுதான்.  அவளுக்கு ஒரு பையன். அம்மா அவளைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள். கிராமத்தில், குறிப்பாக பிள்ளைமார்கள் வசித்த வடக்குத் தெருவில்,  யாருக்குப் பிரசவம் என்றாலும் கிழவிக்குத்தான் முதலில் சொல்லி அனுப்பாவார்களாம். ’நீ ஒருநடை வந்து பாத்துட்டுப்போயிடு, போதும்என்பார்களாம். அவளும் சலைக்காமல் போய் பிரசவம் பார்த்ததோடு, குழந்தை பிறந்து தீட்டுப் போகும் வரை அந்த வீட்டுக்கு அடிக்கடிப்போய், பெத்தவளையும், குழந்தையையும் கவனித்துக்கொள்வாளாம். அப்பேர்ப்பட்ட கைராசிக்காரி, தங்கமான மனசு என்பாள் அம்மா. ஆனா பாவம், அவளுக்குத்தான் வாழ்க்கை சரியா அமையலே.. அவ புருஷன் அவ கையில ஒரு புள்ளையக் கொடுத்துட்டு, தனியாவிட்டுட்டு, முப்பதுவயசுலேயே போய்ச்சேர்ந்துட்டான். கிராமத்தில எத்தனயோ பேச்சுகளயும் ஏச்சுகளயும் தாண்டி, ஒண்டியாப் போராடினா.. வயல்ல கூலிவேல செஞ்சு அரைவயிறும் குறைவயிறுமா புள்ளய வளத்தா. எட்டாங்கிளாசுவரைப் படிச்ச புள்ளய, தைரியமா யாரோடயோ சிலோனுக்கு அனுப்பினா காசு சம்பாதிக்க.. வருஷக்கணக்குல தேயில எஸ்டேட்டுல வேல பாத்து, அவனும் சம்பாதிச்சான். நாடு திரும்பினான். திருச்சிக்குப்போயி, கடை வச்சு, கல்யாணம் கட்டி, வீட்டயும்கட்டி சந்தோஷமா இருக்கான். ஆனா கிழவியத் தன்னோடக் கூட்டிண்டு போகல.  அடிக்கடி வந்து பாக்குறதில்ல. அப்பப்ப கொஞ்சம் பணம் அனுப்பி வச்சிடறான்.  அவ்வளவுதான். ஆனா, வாயத்தொறந்து குறைன்னு அவ ஒன்னும் சொன்னதுல்ல. பொலம்பினதில்ல. யாரையும்விட்டு புள்ளைக்கு கடுதாசி எழுதச் சொல்லவும் மாட்டா. கேட்டா, அவனா வந்தா வரட்டும்னு சொல்லிடுவா. அப்படி என்னிக்காவது அவன் இவளைப் பாக்கவந்தா, அவ மொகத்த அன்னிக்குப் பாக்கணுமே. அப்பிடி ஒரு சந்தோஷம். பிள்ளையின் மொகத்தைக் கையில  ஏந்திநீ நல்லாயிருக்கியாப்பா, நல்லாயிருக்கியா..’ன்னு உருகி, உருகி உயிரையே விட்டுடுவா. அவன் அடுத்த நாள் போய்விட்டபின், ஒன்னுமே நடக்காதது மாதிரி வாசல் திண்டுல வந்து ஒக்காந்துடுவா. வாசல் முகப்புல, தலக்கு மேலே முல்லைப்பந்தல் அவ மேல வெயில்படக்கூடாதுன்னு கொடை விரிச்சிருக்கும். ஒரல்ல வெத்தலபாக்கப்போட்டு இடிச்சிண்டு போவோர் வருவோரைப் பாத்துண்டு  ஒக்காந்திருப்பா. தனக்குத்தானேயும் சிலசமயம் பேசிப்பா. அப்ப அவ மொகத்தப் பாக்கப் பாவமாயிருக்கும். எத்தன அடிபட்டு, மிதிபட்டு வாழ்க்கையை ஓட்டிண்டிருக்கான்னு தோணும்.. என்றெல்லாம் அம்மா கதைகதையாப் பின்னால சொன்னது அவருடைய நினைவில் ஆடியது.

மூணுவருஷத்துக்குமுன் கிராமத்துக்குப் போயிருந்தபோது, வீட்டு வாசலில் கிழவி அவரை அடையாளம்கண்டு பேசியது மனத்திரையில் விரிந்தது. உடம்பு தளர்ந்து,  முகம், கையெல்லாம் ஒரே சுருக்கம். எப்போதும், எதற்கோ அலையும் கண்கள். தெரிந்தவர்களைக் கண்டால் நிற்கவைத்து ரெண்டு வார்த்தையாவது பேசியாகணும் கிழவிக்கு. அன்று வாசல்வழியாகப் போன இவரைக் கிழவி கையைக் காண்பித்துக் கூப்பிட்டு, ஆரம்பித்தாள்:

யாரு! ஐயரு வீட்டுப்புள்ளயா? வடக்கே இருந்துச்சே. அந்தப் புள்ளயா நீ?

அவரோட தம்பி. ரெண்டாவது பையன்.

சின்னக்கண்களைச் சுருக்கி, முகத்தை கிட்டக்கக் கொண்டுவந்து பார்த்தாள் பாட்டி.

சாமியோட ரெண்டாவது புள்ளயாப்பா?

ஆமா..

எப்ப வந்த வடக்கேயிருந்து? நல்லாயிருக்கியா..எத்தனப் புள்ளைங்க ஒனக்கு ?

ஒரு பொண்ணு.

ஒரு பொண்ணா? புள்ளயில்லயா?

ஒரே ஒரு பொண்ணுதான்..

கல்யாணம் காச்சில்லாம் ஆயிருச்சாப்பா?

இல்ல பாட்டி.  இன்னமேதான்..

சின்னவயசுக் குட்டியா? பள்ளிக்கூடத்துல படிக்குதா?

படிச்சு முடிச்சிருச்சு. இருபத்தி்யஞ்சு வயசாகுது.

கூர்ந்து கேட்டாள் பாட்டி. இருபத்தியஞ்சுன்னா சொல்றே?

ஆமாம் பாட்டி. வேலக்குப் போய்க்கிட்டிருக்கா..

அடப்பாவி! வயசு இருபத்தியஞ்சுன்னு வெக்கமில்லாம சொல்றியே.. இம்புட்டு நாள்ல கலியாணம் கட்டி, கையில ஒண்ணு, இடுப்புல ஒன்னுன்னு  இருக்கவேணாம்? வேலக்குவேற போகுதுங்கிறியே.. வயசுப்பொண்ண கலியாணம் கட்டாம  வெளிய அனுப்பலாமா? புத்திகித்தி கெட்டுப்போச்சா் ஒங்களுக்கெல்லாம்?  எடுத்துச் சொல்றதுக்கு ஆருமில்லையா வீட்டுல? என்னடா ஈ..ன்னு இளிக்கிறே?

கவலப்படாதே பாட்டி. சட்டுனு கல்யாணம் பண்ணிருவோம்.

கடவுளே, நா என்னத்த சொல்லுவேன்? இப்புடியா கெட்டுப்போய்க் கெடக்கு காலம்? இத பாரு! வர்ற தைக்குள்ள பொண்ணுக்குக் கல்யாணம் கட்டிரணும்.. அடுத்த வருசமோ எப்பயோ நீ வரும்போ பொண்ணும், பேரப்புள்ளயுமா இங்க நிக்கனும்,. என்ன புரியுதா?

சரி பாட்டி! அப்படியே ஆகட்டும்..’ என்றார் கோவிந்தராஜன். விட்டால் போதும் என்றிருந்தது அவருக்கு.

அடுத்த நாள் பெங்களூருக்குத் திரும்புகையில் கிழவி சொன்ன வார்த்தைகள் அவரை என்னவோ செய்துகொண்டிருந்தன. அடுத்த ஆறுமாதத்தில், அவரே அதிசயிக்கும்படி ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. அக்ஷராவும் தான்பெண்பார்க்கப்படுவதற்குசம்மதித்தாள். முதலில் பெண்பார்க்க வந்த பாம்பே பையனுக்கு அவளைப் பிடித்துப்போனது, இருவரும் சந்தித்துப் பேசியது, குடும்பங்கள் சம்மதித்து கல்யாணம் நடந்தது என ஏதோ ஒரு கனவுபோல் மனதில் நகர்ந்தன காட்சிகள். கல்யாணமாகி இரண்டு வருஷத்துக்குள் அவருக்குப் பேத்தியும் வந்துவிட்டாள்.  அவரது முகத்தில் புன்னகை நெளிந்தது. எல்லாம் அவன் செயல், பெரியவா ஆசீர்வாதம் என்கிற நினைப்பு மேலிடுகையில், கிழவியின் முகம் மனத்திரையில் வந்துபோனது. அவரையறியாமல் அவரது கைகள் சேர்ந்து கூப்பின.

ஊர் நினைவில் ஆழ்ந்திருந்தவரை தூக்கம் ஒருவழியாய் ஆட்கொண்டது. அதிகாலையில் பஸ்காரன் எழுப்பிவிட்டவுடன் அவசர அவசரமாக இறங்கி, திருச்சி பஸ்ஸ்டாண்டில் கிராமம் போகும் பஸ்ஸைப் பிடித்தார். இரண்டரை மணிநேரத்தில் அவருடைய கிராமத்தில் கொண்டுவந்துவிட்டது அந்தத் தனியார் பஸ்.

ஊரில் இறங்கியவுடன் தெரிந்தவர் யாரும் தென்படவில்லை என்பதைக் கவனித்தவாறே, ப்ரீஃப்கேஸும் கையுமாய் பக்கத்திலிருந்த டீக்கடையில் நுழைந்தார்.  டீக்கு சொல்லிவிட்டு தெருவைப் பார்த்தார். தூரத்தில் கேட்ட சத்தம் அதிரவைத்தது. வயிற்றைப் பிரட்டவைக்கும்தப்புசத்தம். கிராமத்தில் யாரும் செத்துவிட்டது தெரிந்தால்,  கிழக்குத்தெருக்காரப் பையன்கள் இரண்டுபேர் கையில் தப்புகளுடன் அவர்கள் வீட்டுக்குமுன் வந்து சோகமாக அடிக்கத் தொடங்குவார்கள். சவத்தைப் பாடையில் ஏற்றியபின், தப்படிப்பவர்கள் சத்தமாக அடித்துக்கொண்டே ஊர்வலத்தின் முன்னே சுடுகாடுவரை செல்வார்கள். பதட்டம் குரலில் தாக்க, கடைப்பையனிடம் கேட்டார்:  என்னப்பா இது தப்பு சத்தம் கால வேலயிலே..?’ 

வடக்குத்தெரு ஓட்டுவீட்டுக் கெளவி நேத்து ராத்திரி போயிருச்சுங்க சார்என்றான் பையன்.

அடடா!’ எனப் பதறியது அவர் மனம். கையிலிருந்த பெட்டியில் கிழவிக்காக வாங்கிவந்திருந்த சுங்கிடிப்புடவை கனத்தது. தப்பு வேகமாக அதிர்ந்து, தவிர்க்கமுடியா துக்கத்தை ஊரெல்லாம் பூசியது. ஊர்வலம் இப்போது அவரை நெருங்கியது. போன ஒடனே அம்பாளுக்கு அர்ச்சன பண்ணச் சொல்லிடு. மத்ததெல்லாம் பின்னாடி என்று அம்மா சொன்னது நினைவில் தட்டியது. ’மத்தது இல்லை இதுஎன்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார் கோவிந்தராஜன்.  கிழவியின் பூத உடலுடன் அவளது ஒரே மகனும், பத்துப்பனிரெண்டு பேரும் நடந்துவந்துகொண்டிருந்தனர்.  வீட்டில் தங்கிவிட்ட உறவுப்பெண்களின் ஒப்பாரிக்குரல்  பின்னணியில் சீராக ஏறி இறங்கி மனசைப் பிசைந்தது.  கடைக்காரப்பையனிடம் தன் பெட்டியைக் கொடுத்தவர், ’இத உள்ள வை. அவங்களோட போயிட்டு வந்து வாங்கிக்கிறேன்என்றார். ‘சவத்தோட நீங்களுமா சார் போகப்போறீங்க? சுடுகாட்டுக்கு ஒன்னரைக் கிலோமீட்டர் நடக்கவேண்டிருக்கும். அதுவும் பாதி வரப்பு, கல்லும் முள்ளுமா கொல்லக்காட்டு வழியால்ல நடக்கணும்என்றான் எச்சரிக்கும் தொனியில் அவன்.  கூட போயாகணும்ப்பா..’ என்று தாழ்ந்த குரலில் சொன்னவாறே இழவுக்கூட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார் அவர். ’கிராமத்துல எத்தனயோ பொம்பளகளுக்கு வருஷக்கணக்கா சேவை செஞ்சவ நீ. உன்னய வழி அனுப்பிச்சுட்டு கோவிலுக்குள்ள இருக்கறவள கவனிக்கிறேன்என்று அவர் மனம் சொல்கையில்,  நீரைக் கசியவிட்டு ஆமோதித்தன அவரது கண்கள்.

**

6 Replies to “பின்னிரவின் நிலா”

  1. கோவிலை நாடி கிராமம் வந்த கோவிந்தராஜு “வடக்குத்தெரு ஓட்டுவீட்டுக் கெளவியின்” இறுதி ஊர்வலத்தில் இணைந்துகொள்வது நல்ல முடிவு. நல்ல கதை. வாழ்த்துகள்.

  2. கிராமத்தில் கோவிலுக்கு செல்ல எண்ணிச் சென்ற இடத்தில் கிழவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது மிகச் சிறந்த முடிவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.