கிளாசிக் பட வரிசையில் “நாயக்”
1966ஆம் ஆண்டு சத்தியஜித் ராய் அவர்களால் வங்க மொழியில் இயக்கப்பட்டு வெளிவந்த கருப்பு வெள்ளை படம். அரிந்தம் முகர்ஜி என்ற மிகப் பிரபலமான வெகுஜன நடிகனின் உள்மனப் போராட்டங்களின் தொகுப்புதான் இந்தப் படம். வங்க மொழியைச் சேர்ந்த உத்தம் குமார் அந்த நடிகர் பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம்.
சத்தியஜித் ராய்க்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும் சில நேரங்களில் ஒரு ஆவணப் பதிவாக சம்பிரதாய மொழியில் அவரைப் பற்றிக் குறிப்பது அவசியமாகிறது. உலகத் திரைப்படத் துறையினரால் தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ராய் அவர்கள் இதுவரை புனைவகை, ஆவண வகை, குறும்படம் என்ற வரிசையில் மொத்தம் முப்பத்தியாறு படங்களை இயக்கியிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் இந்தியா அளித்த ஆகச் சிறந்த கலைஞன். எப்போதும் உன்னதங்கள் எளிமையில்தான் மிளிர்கின்றன என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை உடைய கலைஞன். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் எளிய மனிதர்களின் உன்னதங்களைக் காட்டும் படங்களாகவே அமையப்பட்டிருக்கும். கொல்கத்தா முத்தொகுப்பாக (Calcutta trilogy) ஆக இருக்கட்டும், அப்புவின் கதையின் முத்தொகுப்பாக இருக்கட்டும் அனைத்துமே நாம் அன்றாடும் சந்திக்கும் அடித்தட்டு மக்களின் குறுக்குவெட்டுத் தோற்றங்களே ஆகும்.
ஆனால் இந்த நாயக் படம் இந்த வரிசையிலிருந்து வேறுபட்டது. நடிகன் என்ற பிம்பம் நம்மிடம் பலவிதமான பரிமாணங்களைத் தோற்றுவிக்கும் தன்மையுடையது. ஜனரஞ்சகமான பார்வை ஒரு நடிகனைக் குறித்து ஓர் ஆடம்பரமான வாழ்வை எவ்வித பொருள்சார்ந்த போகங்களையும் அவனால் எளிதில் எட்டிவிட முடியும் என்பதாகும். புலன் சார்ந்த விஷயங்களில் அவன் மிகவும் பலவீனமானவன். இதுபோன்ற பிம்பத்தை உடைத்து எறிந்து ராய் கட்டமைக்கும் ஒரு நடிகனின் தோற்றத்தைப் பார்க்கும்போது அவரையும் மீறி அவரது நடிகன் என்று குவி மையப்படுத்தபட்ட பிம்பம் ’பிரபலம்’ என்ற அடைப்புக் குறியின் உள்ளே அடங்கும் அனைத்து பிம்பங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக மாறுவதை உணர முடியும். எழுத்து, இலக்கியம் சார்ந்து வங்க தேசத்தினருக்கு இருக்கும் மரியாதையை ஷர்மிளா தாகூர் பாத்திரம் மூலம் மிகப் பிரமாதமாக ( பிரமாதம் என்பதற்கு அவரது நுட்பமான பார்வையைச் சொல்கிறேன்) வெளிக்காட்டியிருப்பார்.
கதைக்களத்தை ஒரு இரயில் பயணமாக அமைத்திருப்பதன் மூலம் உலக வாழ்வு என்ற படிமத்தை ஆரம்பத்திலேயே முன்னிலைப் படுத்துகிறார். பொது ஜனம் இல்லையென்றால் தான் ஒரு சுழியம் என்பதை நன்கு உணர்ந்த திரைப்பட நடிகன் அரிந்தம் முகர்ஜி அரசாங்க விருது பெறும் நிகழ்ச்சிக்குக் கொல்கத்தாவிலிருந்து புதுதில்லிக்கு விமானம் மூலம் செல்ல இயலாமல் போகவே, இரயிலில் பயணம் மேற்கொள்கிறான். அவன் பயணம் மேற்கொள்ளும் அன்றைய தின செய்தித் தாள்களில் இரண்டு செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவன் அரசாங்க அகாதமியில் விருது பெறும் செய்திஒன்று. இன்னொன்று இரு தினங்களுக்கு முன்பு அவன் ஒரு கிளப்பில் குடித்துக் கலாட்டா செய்தது குறித்த செய்தி. அந்த கலாட்டாவின் காரணம் ஒரு கனவான் போர்வையில் செல்வந்தன் ஒருவன் அந்த விடுதிக்கு வந்த பெண்ணிடம் முறைதவறி நடக்கப் போக வெகுண்டெழும் அரிந்தம் முகர்ஜி அந்தக் கனவானை சரமாரியாக அடித்து விளாசிவிடுகிறான். இந்த இரண்டு செய்திகள் நாளிதழ்களில் தாங்கி வந்த அன்றைய தினத்தில்தான் அந்த நடிகனின் பயணம் தொடங்குகிறது.
தன்னோடு பயணம் செய்யும் சக பயணிகளுடன் ஒரு நடிகனுக்கு நேரும் சந்திப்புகள், உரையாடல்கள், தெளிவுகள் இவற்றைச் சின்னச் சின்ன ஆனால் நுட்பமான உரையாடல்கள், முக பாவங்கள், காட்சியமைப்புகள் மூலம் ராய் அற்புதமாகத் தீட்டியிருப்பார். இந்த உலகமே வெறும் வியாபார உலகம் என்பதை ஒவ்வொரு பாத்திரங்கள் மூலம் சொல்லாமல் சொல்லி அந்த நடிகனை விட மகா நடிகர்கள் உலகில் உள்ளனர் என்பதை அழகியல் உணர்வோடு கூறியிருப்பார். உலகத் தரமான படத்தின் மொழி பாமரனுக்குப் புரியக்கூடாது என்று ஒருசில இயக்குனர்கள் நினைப்பதைப் போல ராய் என்றுமே தனது படங்களை வடிவமைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும். நாயக் அரிந்தம் என்றால் அவனைச் சுற்றி இயங்கும் கோள்களாக நான்கைந்து பாத்திரங்கள். முக்கியமான பாத்திரம் ஷர்மிளா தாகூருடையது. அவர் இந்தப் படத்தில் ஒரு சீரிய இலக்கியப் பத்திரிகையை நடத்தும் அதிதி சென்குப்தா என்ற பெண்ணாக வருகிறார். ராய் படங்களில் ஷர்மிளா தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டதைப் போல ஏனைய படங்களில் வெளிப்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும். அப்படி ஓர் அழகு; அப்படி ஒரு பாவம்.
சட்டர்ஜி என்ற வயதில் மூத்த, வாழ்வின் உன்னதமான ஒழுங்கமைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகையாளர் ஒருவரும் அவனுடைய பெட்டியில் உடன் பயணிக்கிறார். நடிகர்கள் என்றாலே ஒழுக்கங்கெட்டவர்கள் என்ற தீர்மானம் உடையவர். இன்னொரு எளிய குடும்பமும் உடன் பயணிக்கிறது. நோயாளிச் சிறுமி, அவர்களது நடுத்தர வயது பெற்றோர். தாய்க்கும், மகளுக்கும் நடிகன் அரிந்தமைப் பார்த்ததும் ஒரு தேவனை நேரில் பார்த்தது போல ஆனந்தம் கண்களில் மின்னும். ஆனால் அந்தப் பெண்ணின் கணவனுக்கு அரிந்தம் விடுதியில் செய்த பூசலும், அவன் குடிப்பவன் என்பதும் அவன் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரு மிகப் பெரிய பிரபலத்தைச் சந்திக்கும்போது அவனுடைய பிராபல்யத்தில் எளிதில் அமிழ்ந்து போகக் கூடியது பெண்கள். ஆனால் ஒரு பிரபலத்தைச் சந்திக்கும் இன்னொரு ஆணினால் அந்தப் பிராபல்யத்தைத் தாங்கிக் கொள்ள ஈகோ அனுமதிக்காமல் அந்தப் பிரபலத்தின் மோசமான பகுதியைப் புண்ணை நோண்டும் பறவையைப் போல நோண்டுவதை அழகாகக் காட்டியிருப்பார். ஒரு பிரபலத்தின் முன்னால் தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்வதையும் உரையாடல் மூலம் ராய் காட்டியிருப்பார். இவையெல்லாம் மனிதர்களின் மனங்களை அளக்கும் நுட்பமான இடங்கள். கொஞ்சம் தவறினாலும் அவை நமது கவனத்தைக் கவறாமல் போய்விடும். அதேபோல இன்னொரு இடம். முற்றிலும் குடி போதையில் தனது பெர்த்தில் வந்து விழுந்து நடிகன் அரிந்தம் உறங்கும் நேரம் அரைகுறையாக ஒரு கால் தரையில் படர்ந்திருக்கும். அந்த நடுத்தர வயது குடும்பத்தலைவி அந்தக் கால்களை இழுத்து சீட்டில் போடுவாள். ஒரு மிகப்பெரிய நடிகனைத் தீண்டிய பரவசம் அவள் முகத்தில் மின்னி மறையும்.
ராயின் உரையாடல்கள் நுட்பமாக, புத்திசாலித்தனமாக ( கே.பாலச்சந்தரின் வசனங்களை ஓரளவிற்கு ராயின் வசனங்களுடன் ஒப்பிடலாம்.) படம் முழுவதும் விரவி இந்தப் படத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகத் திகழும். உரையாடல்கள் கதை சொல்லிக்கு எத்தனை முக்கியமான விஷயம் என்பதை எடுத்துச் சொல்ல இந்தப் படம் கண்டிப்பாக அனைத்துத் திரைப்படக் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். அத்தனை கூர்மையான வசனங்கள்.
கணவன்: (திரைப்படங்களைக் குறித்து) நமது நோக்கமே வத வதவென்று வெளியிடுவது ; குப்பையாக வெளியிடுவது.
அரிந்தம் ( குதர்க்கமாகச் சிரித்தபடி )ஆங் நீங்கள் சொல்வது சரிதான், அதனால்தான் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறது.
பெண் பத்திரிகையாளர் ஒரு பத்திரிகை நடத்துவதன் சிரமங்களைக் கூறிக் கொண்டு வரும்போது அரிந்தத்துடன் ஒரே கூபேயில் பயணிக்கும் அந்தக் குடும்பத் தலைவி அரிந்தத்தைப் பேட்டி கண்டு அதனை வெளியிட்டால் சினிமாக்காரனின் பேட்டி காரணமாகப் பத்திரிகை சர்குலேஷன் அதிகரிக்கும் என்று லோகாதாயத் தகவலை அளிக்கிறாள். அதிதி முதலில் மறுத்தாலும் ஏதோ ஒரு கணத்தில் அரிந்தம் அவளது உள்ளத்தின் தெளிவைப் புரிந்து கொண்டு தன்னைப் பற்றி இதுவரை அனைத்துப் பத்திரிகைகளும் அறியாத நுட்பமான தகவல்களை அளிக்க ஆரம்பிக்கிறான். ஓரளவு அது அவனது சுய பரிசோதனையாக அமைந்து விடுகிறது. அதிதிக்கு வங்க மொழி ஜனரஞ்சகப் படங்களின் மீது அத்தனை நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதை ஒரு சின்ன ஆட்டோகிராப் வாங்குவதன் மூலம் காட்டியிருப்பார். அரிந்தம் தனிமையில் இருக்கும்போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் அவன் கையெழுத்தைக் கேட்டு நின்றபடி, “இது எனக்கில்லை என் சகோதரிக்கு ,”என்று கூறும்போது உத்தம் குமாரின் மாறும் முக பாவங்கள் அற்புதமாக இருக்கும்.
புகழின் உச்சத்தில் இருக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியுடன் அதிதி தனது பேட்டியைத் துவங்குகிறாள். தன்னைப் பற்றி வெளிப்படுத்தத் துவங்கினால் இதுகாறும் மக்கள் மனதில் இருக்கும் பிம்பம் சிதைந்து விடும் என்று அரிந்தம் முதலில் மறுக்கிறான். அவனது பேட்டி மறுக்கப்பட்டதும் அவள் சக பயணியிடம் அவனைப் பற்றி குறை கூறும்போது ஷர்மிளாவின் உடல் மொழி அருமையாக வெளிப்பட்டிருக்கும். வாழ்வின் ஒழுக்க நிலை குறித்து அந்த முதிய பத்திரிகையாளருடன் அரிந்தம் மேற்கொள்ளும் உரையாடல்கள் ருசிக்கக் கூடியவையாக அமைந்திருக்கும்.
ஒரு சின்ன காட்சி. அரிந்தம் ஜன்னல் ஓரம் அமர்ந்து புகைபிடித்து வளையங்களை விட்டுக் கொண்டிருப்பான். நோயாளிப்பெண் மேல் பெர்த்தில் படுத்தபடி அவனை நோட்டமிட்டுக் கொண்டிருப்பாள். கீழே அவளது தாயார் ஒரு சிறிய முகம்பார்க்கும் கண்ணாடியில் தனது முகம் திருத்தமாக இருக்கிறதா என்பதை யாருக்கும் தெரியாமல் பார்ப்பாள். அற்புதமான காட்சி அது. ஓராயிரம் விஷயங்களைக் கூறும் காட்சி.
உறங்கும் அரிந்தத்தின் கனவில் தான் ஒரு பணக் குழியில் அமிழ்வது போலவும், அவனுடைய பால்ய வயது நடிப்பு சொல்லி கொடுத்த குரு அவனைக் காப்பாற்ற கையை நீட்டி முயற்சிப்பது போலவும் கனவு காண்கிறான். அந்தக் கனவு அவனது பல மூடிக் கிடந்த சிந்தனைகளைத் தட்டி எழுப்புகிறது. டால்ஸ்டாயின் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு உலகம் அளக்கக் கிளம்பியவனின் பேராசைக் கதை நினைவிற்கு வருகிறது. இந்த இடத்தில் அரிந்தம் அதிதியின் பேட்டிக்கு ஒப்புக் கொண்டு தன்னைப் பற்றிக் கூறுவதன் மூலம் அவனே தன்னைப் பற்றிய அக தரிசனத்தைப் பெறுகிறான். தனது பால்ய வயதில் நாடகங்களில் நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவை ஒரு சீடனாகத் தான் மீறிய கதையைக் கூறுகிறான். அவன் படத்தில் நடிக்க வந்த காலத்தில் தாதாவாக விளங்கிய நடிகன் ஒருவனை எதிர்ப்பின் மூலம் வெற்றி கொள்ள இயலாது என்பதால் அடிபணிந்து வெற்றி கொள்வதையும் போகிற போக்கில் சத்யஜித் ராய் சொல்லியிருப்பார். அதே தாதா காலமும், மக்களின் ரசனைமுறைகளும் மாறிய பின்னர்த் தனது வயதான காலத்தில் அரிந்தத்திடம் வந்து தனக்குத் திரையில் வந்து போகும்படியான பாத்திரங்களாக இருந்தாலும் அவனைத் தனது பிராபல்யத்தின் மூலம் வாங்கித் தருமாறு கெஞ்சும் இடம் , ராயின் கைவண்ணத்தால் தனிமனித அவலத்தைக் கூறாது பொதுத் தளத்தில் இயங்கும் இடமாக மாறியிருக்கும் . இருவரது நடிப்பும் அந்த இடத்தில் அட்டகாசம்.
அதே போலத் தொழிற்சங்கத் தலைவனுக்கும் அரிந்தனுக்கும் இருக்கும் கல்லூரி கால நட்பு, அந்த நட்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொழிற்சங்கத் தலைவன் முயல்வதும் அதனை ஒரு புகழ் பெற்ற ஹீரோவான உத்தம்குமார் மறுக்கும் இடமும் அதி உன்னதமான இடங்களாம். ராயின் புத்திசாலித்தனம் முழுவதும் வெளிப்படும் இடம்.உச்சத்தில் இருக்கும் இருவரின் நடுவில் பொதுவான விஷயம் இருப்பதற்கு வழியே இல்லை இல்லை என்பதை இருவரது இரண்டு நிலைகளையும் கொஞ்சம் கூடக் குறை கூறாமல் எடுக்க ராய் ஒருவரால்தான் முடியும்.
இத்தனைக்கும் நடுவில் வேறு ஒரு ட்ராக்கில் இன்னொரு கதை ஓடுவதையும் ராய் படம் பிடித்திருப்பார். ஒரு கிழ தொழில் அதிபர்; ஒரு நடுத்தர வயது விளம்பரப்படத் தயாரிப்பாளர், அவனது அழகிய இளம் மனைவி இவர்களுக்கு நடுவில் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதிலிருந்து பாலச்சந்தர் அகத்தூண்டுதலுக்கு உள்ளாகி வறுமையின் நிறம் சிவப்புப் படத்தில் சில காட்சிகளை அமைத்திருப்பார். விளம்பரப்படத் தயாரிப்பாளர் தனது மனைவியைப் பணயம் வைத்து அந்தத் தொழில் அதிபரிடம் பெரிய காண்ட்ராக்டை வாங்க முயல்வதைச் சதுரங்க விளையாட்டு என்ற படிமத்தின் மூலம் அழகாக ராய் கூறியிருப்பார்.
நோயாளிப் பெண் : உங்களுக்கும் உடம்பு சரியில்லையா?
அரிந்தம் “ ஊஹூம். இது தூக்க மாத்திரை
நோயாளிப் பெண்: நீங்கதான்ஒருவாட்டி தூங்கியாச்சே
அரிந்தம் :எனக்குத் தூக்கம் வராம போயிடுச்சுனா ? என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது.
சின்ன உரையாடல்தான். இதன் மூலம் ஒரு நடிகனின் நிலை, அதற்கு அவன் நாடும் மருந்துகள், அவற்றின் பின்விளைவுகள் என்று பல விஷயங்களை இயக்குனர் முன்வைக்கிறார்.
அதேபோல நடிப்புத் தொழிலுக்கு வந்திருக்கும் இளநிலை நடிகை ஒருத்திக்கும் அரிந்தத்திற்கும் நடுவில் நிகழும் உரையாடல் அது எடுக்கப்பட்டிருக்கும் விதம் ஒளியமைப்பு எல்லாம் படத்தை மிக உயர்ந்த படமாக மாற்றி விடுகிறது.
அதேபோல அதீத குடி போதையில் அரிந்தம் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களும் அருமையானவை. ஒரு மெலிதான நகைச்சுவை கூட அதில் இருக்கும்.
அரிந்தம் : சேர் காரில் பயணம் செய்யும் மிஸ்.சென்குப்தாவை நான் அழைத்ததாகக் கூட்டிட்டு வாங்க
பரிசோதகர்: யார் சார்?
அரிந்தம்” அழகா செவப்பா, கண்ணாடி போட்டுக்கிட்டு, எப்பப் பார்த்தாலும் ஒரு பேனாவை ஜாக்கட்டில் செருகிக் கொண்டு ஒருத்தி இருப்பாளே…
பரிசோதகர் ( பல்லைக் காட்டியபடி) தெரியும் சார்.
அரிந்தம்: எங்கே உனக்குத் தெரிந்ததைச் சொல்லு
பரிசோதகர்: சிவப்பா, அழகா, எப்பவும் ஜாக்கட்டில் ஒரு பேனாவை செருகிய…. (இதைக் கூறும்போது பரிசோதகரின் முகத்தில் சிரிப்புடன் சொல்லும் வழிவதை ராய் அட்டகாசமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்)
அரிந்தம் கூறும் தகவல்களை அதிதி பதிவு பண்ணிக் கொண்டே வருகிறாள்
நடிகனின் அளவுக்கதிகமான குடிபோதை நிலையில் அவன் அந்தப் பெண் பத்திரிகையாளர் அதிதியிடம் முழுவதும் தன்னைப் பற்றி வெளிப்படுத்தி விட்டு அவள் அவன் மீது கொள்ளும் அடிப்படை மனிதாபிமானத்தைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் அவளைச் சுடு சொற்களால் காயப்படுத்தி விட்டு அகல்வான்.
“கடவுளுக்கு நிகரான நாயகனை நீ பார்த்து விட்டாயா ?,’என்று நடிகன் கேட்கும்போது அந்தப் பத்திரிகையாளர், ”பார்த்து விட்டேன்,”என்பாள். இந்த இடத்தில் படம் முடிவடைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் மறுநாள் பொழுது விடிந்ததும் ஒரு தெளிவிற்கு வரும் அரிந்தம் முகர்ஜி அதே தெளிவைப் பெற்ற அதிதியைச் சந்திக்கிறான். அவனுடைய திரையுலக எதிர்காலத்திற்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்கும் அதிதி இதுவரை அவனைப் பேட்டி எடுத்த தாள்களின் குறிப்புகளைக் கிழித்துப் போட்டு விட்டு,”அவை என் மனதின் நினைவுகளாக இருந்தால் போதும்,” என்று கூறும் இடத்தில் சில உயர்ந்த குணங்களை வெளிப்படுத்துவதில் தானும் சளைத்தவள் இல்லை என்பதைக் காட்டுவாள். திரையுலக நாயகன் தில்லி இரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளத்தில் கரைவதுடன் படம் முடிவடைகிறது.
உத்தம் குமார் அவரது திரைப்பட வாழ்க்கையில் நாயக் முதன்மை பெற்ற படம் என்பதில் சந்தேகமில்லை. அலட்சியம், குதர்க்கம், வியப்பு, சலிப்பு போன்ற நுணுக்கமான பாவங்களில் படம் நெடுகிலும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கும் நடிப்பு உத்தம் குமாருடையது. உத்தம் குமார் இறந்ததும் சத்தியஜித் ராயின் இவ்வாறு எழுதுகிறார்.” நாயக் படத்தில் நடிப்பதற்கு முன்னால் இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று அவருடன் எந்த விவாதமும் நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் நானே நம்ப முடியாத அளவிற்கு நுட்பமான முக பாவங்கள் மூலம் நாயக் படத்தை உத்தம் குமார் மிகச் சிறந்த படமாக மாற்றியிருந்தார்.”
மனித உறவுகளை, அவர்கள் சிக்கல்களை, அவர்களது ஏமாற்றங்களை, இழப்புகளை, போலித்தனங்களை இத்தனை நுட்பமாக அணுகிய இன்னொரு திரைப்படம் இந்தியத் திரைத்துறையில் எடுக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
Why WhatsApp is not in sharing options