அனுமனும் உணர்வு ஆளுமையும்

சட்டென அதிர்ந்து போனேன். “என்ன சொல்றீங்க கணேஷ்? சஸ்பென்ஷன் ஆர்டரா? எப்படி? ஏன்?” கொஞ்சம் மணிரத்னம் பட டயலாக் போல இருந்தாலும், அந்த நேரத்தில் அப்படி ட்விட்டர் போலவே பேசத் தோன்றியது.

கணேஷ் மவுனமாக இருந்தார். “ஒரு நிமிசத்துல அவசரப்பட்டுட்டேன். சட்டர்ஜீயோட பேச்சு ஒரு சீண்டுதல் மாதிரி இருந்தது அப்பப் புரியல. சட்டுன்னு வார்த்தைகளைக் கொட்டினது தப்புதான். என்ன சொல்ல? விதி

பிஸ்வாஸ் சட்டர்ஜீ, கணேஷின் பாஸ் என்பதை விட, அவரது மிக நல்ல நண்பர் என்றே சொல்லவேண்டும். பல  அலுவலக அரசியல் இடர்கள் இருப்பினும், கணேஷின் அயராத உழைப்பு அவரை முதன்மை மேனேஜராக உயர்த்தி வைத்திருந்தது.

அப்படிப்பட்ட கணேஷுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர்.. அதுவும் சட்டர்ஜீயின் கையிலிருந்து?

என்ன சொல்ல?” கணேஷ் முகத்தைத் துடைத்துக்கொண்டார். “ ரெண்டு வாரம் முன்னாடி, ’வடக்குப் பிராந்தியத்துல ஏன் ஆர்டர் கம்மியா வருதுன்னு? டெல்லி ஆபீஸ்ல போய் இருந்து  விசாரிச்சுட்டு ரிப்போர்ட் அனுப்புன்னாரு. நானும் போனேன்.

ரெண்டுநாள் கவனித்தேன். சர்வீஸ் எஞ்சினீயர்கள் ,ரெண்டு நாள், சில நேரம் ஒருவாரம் கழிச்சுத்தான் பணிக்குப் போகிறார்கள். சேல்ஸ் எஞ்சினீயர்கள் ஊக்கமில்லாமல் அலைகிறார்கள். பண விஷயத்துல ஊழல் இருக்கு.  இதுதான் நோய். சாட்டர்ஜீக்கு அறிக்கையைத் தாக்கல் செய்யணும்.அவ்வளவுதான்.”

கணேஷ் நிறுத்தினார்ஆனா, நான் அதோட நிற்க விரும்பல. ரீஜனல் மேனேஜரை ஒரு உலுக்கு உலுக்கினேன். சேல்ஸ் எஞ்சினீயர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊக்க போனஸ்ஸை அவர் தானே எடுத்துக்கொள்வதையும், சர்வீஸ் எஞ்சினீயர்களை, தனது தனிப்பட்ட சர்வீஸ் கம்பெனியில் வேலை செய்ய வைப்பதையும் ஒத்துக்கொண்டார். இதையெல்லாம் சாட்டர்ஜீயிடம் சொல்லப் போனேன்

கணேஷ் குனிந்து தன் உள்ளங்கைகளைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார்சட்டர்ஜீ பாராட்டுவார் என நினைத்தேன். அவர்உன் வேலை என்ன?” என்றார். சட்டென கோபம் வந்ததுசார், என்னால பொறுத்துகொள்ள முடியவில்லைஎன்றேன். சாட்டர்ஜீரீஜனல் மேனேஜரைக் கேட்க உனக்கு என்ன உரிமை?” என்கிறார்

திகைத்துப் போனேன்சார், நான் கம்பெனிக்கு நல்லதுதானே செஞ்சிருக்கேன்?”

அது அப்புறம், முதல்ல நான் சொன்ன வேலையைச் செஞ்சியா? இது வேலையைத் தவிர்த்த குற்றம்

கொதித்து எழுந்தேன்நீங்களும் இந்த ரீஜன்ல் மேனேஜரோட உடந்தையா இருக்கீங்களோ?”

கணேஷ் அமைதியாக இருந்தார். “இது கொஞ்சம் ஓவர்தான். நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. எப்பவும் ரொம்ப கூலா இருக்கிற நான் ஏன் அப்படிப் பேசினேன்?ன்னு நான் கேட்காத நிமிடங்கள் இல்லை,சுதாகர்அவர் கண்கள் கசிந்திருந்தன.

அடுத்த நாள் , வாசன் சாரின் வீட்டில் ஒரு விருந்துக்கு கணேஷையும் உடனழைத்துச் சென்றிருந்தேன். வாசன்  எனது முந்திய கம்பெனியில், ஜெனரல் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். மிக மதிப்பிற்குரியவர்.

விருந்து முடிந்ததும், அவருடன் நானும் கணேஷும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தோம். கணேஷின் கேஸ் பற்றிப் பேச்சு வந்தது.

கொஞ்சம் அவசரப்பட்டுட்டான்என்றேன்

சேட்டர்ஜீ அவசரப்பட்டுட்டார்என்றார் வாசன். “கணேஷ்ன் குற்றம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதது. ஆனால், சாட்டர்ஜீ, சீனியர். அவருக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், பிறருக்கு உணர்ச்சிகளைத் தூண்டாமலும் இருக்கத் தெரிய வேண்டும். சஸ்பென்ஷன் கொஞ்சம் அதிகம்தான்

சார்என்றேன்கணேஷ் எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனச் சொல்கிறீர்கள்? அவன் செய்தது சரிதானே? அதுனாலதானே பொங்கியிருக்கிறான்?”

வாசன் சிரித்தார்கணேஷ் செய்தது தவறில்லையே தவிர, சரியென்றாகாது.”

குழப்பறீங்க சார்

கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இவனுக்கு சாட்டர்ஜீ கொடுத்த வேலை என்ன? டெல்லி ஆஃபீஸ்ல என்ன நடக்குது?ன்னு பாத்து சொல்லணும். அவ்வளவுதான். அவர் கேட்டது தகவல். அதன்மேல் எப்படி நடவடிக்கை எடுக்கணும்ங்கறது அவரோட கடமை. கணேஷுக்குத் தெரியாத சில விஷயங்கள் சாட்டர்ஜீக்குத் தெரிந்திருக்கும். திடீர்னு ஒரு ரீஜனல் மேனேஜரைத் தண்டிப்பதை விட கம்பெனியின் பொது நலனைக் கருதி அவர் வேறு முடிவுகளை எடுக்க திட்டமிட்டிரூக்கலாம்.

கணேஷ் இதையெல்லாம் அறியாமல், தனக்குத் தெரிந்த அளவில் நேராக மோதி, ஒரு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டிருக்கிறான். அதன் விளைவுகள் என்னவாக இருக்குமென்பதை சாட்டர்ஜீ மட்டுமே அறிவார். அதான் சொன்னேன், கணேஷின் நல்லெண்ணம், பாதகமாக முடிய சாத்தியமிருக்கிறது. எண்ணம் தவறல்ல, இயக்கம் தவறு

இருந்தாலும்.. அவன் கம்பெனியின் நலனுக்காகத்தானே செஞ்சான்?”

நாம நல்லதா நினைக்கலாம். விளைவு நல்லதா இருக்கணும்னு அவசியமில்லை. ஒரு கதை உண்டு. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு யோகி, திடீர்னு புயல் வரவும், கரையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பாகத் தன் சக்தியால் புயலை நிறுத்தினான். ஆனால் அந்தப் புயலில் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு கப்பல் , திடீர்னு புயல் நின்றதும் தடுமாறிக் கவிழ்ந்து அதிலிருந்த அத்தனைபேரும் செத்துப்போனார்கள். எண்ணம் நல்லது, செயல் ஒரு கோணத்தில் நல்லது; ஆனால் பொது அளவில் பாதகமானது.”

இது அவனுக்கு எப்படித் தெரியும்? பாவம் ,ஏதோ நல்லது செய்யப் போய்..”

அதுதான், கொடுக்கப்பட்ட்தை மட்டும் முதல்ல செய்திருக்கணும் என்கிறேன். அதன்பின், அதிகப்படித் தகவலை சாட்டர்ஜீக்குக் கொடுத்திருந்தால், நிலமை வேறு

மவுனமாக இருந்தேன் . நல்லதுக்குக் காலமில்லை. இதில் கோபப் படக்கூடாது என்பது அதிகமான எதிர்பார்ப்பு.

வாசன் புரிந்துகொண்டவராய் தோளைத் தொட்டார்நீ உணர்வின் வழி யோசிக்கிறாய். கடமை வேறு , உணர்ச்சிகள் வேறு. நல்லதாகவே இருப்பினும்தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கணேஷுக்கு இன்னும் அனுபவம் போதவில்லை. ஒரு உணர்வுத் தூண்டுதலுக்கும், அதற்கான நமது எதிர்வினைக்கும் நடுவே ஒரு…”  அவர் நிறுத்தினார்.

இடைவெளி இருக்கிறதுஎன்றேன் நான். இது அவரது ஸ்பெஷல் வரிகள். அடிக்கடி சொல்லுவார்.

குட்சிரித்தார்ஸ்டீபன் கோவே, 7 habits of Effective People புத்தகத்தில் கோடிட்டுக் காட்டிய புகழ்பெற்ற வரிகள். இந்த இடைவெளியில் நாம் சிந்தித்து, நமது எதிர்வினையைத் தேர்வுசெய்யும் முதிர்வு வேண்டும். அது அத்தனை எளிதல்ல. உணர்ச்சிகளின் தூண்டுதல்களையும், உணர்ச்சிகளைக் கொட்டும் மனத்தையும் விலக்கி,  நடுவே நின்று நிதானமாக யோசிப்பது சிறந்த மனிதக் குணம். மேனேஜர் குணமும் கூட

அவர் ஆங்கிலத்தில் அந்த வரிகளைச் சொன்னார் Between stimulus and response, there is a space.In that space is our power to choose our response.”

கணேஷ் இந்த உணர்வுத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் சாட்டர்ஜீ எனக்குக் கவலை தருகிறார். அவர் , கணேஷ் பொங்கியதற்கு நிதானமாக யோசித்துத் தன் எதிர்வினையைத் தேர்வுசெய்திருக்கவேண்டும். சஸ்பென்ஷன் ஒரு  சிந்தனை சார்ந்த எதிர்வினையல்ல. “

வாசன் தொடர்ந்தார். “ நான் ஒரு அனுமான் பக்தன் என உனக்குத் தெரியும்.. அனுமனிடமிருந்து நாம் கற்கவேண்டியது பல உண்டு. அதில் ஒன்று இந்த அறிவுபூர்வமான உணர்வு ஆளுமை,  இந்த நிதானம் மிகப் புத்திசாலியான அனுமனிடம் இருந்தது.

அனுமன், இலங்கையில் சீதையைத் தேடுகிறான். ஒரு மாளிகையில் இராவணன் உறங்குவதைக் காண்கிறான். அனுமனுக்குக் கோபம் கொந்தளித்துக்கொண்டு வருகிறது. ”இவனையும், இங்குள்ள அரக்கர்களையும் கொன்றுவிடுகிறேன். அதன்பின் நானிருந்தால் என்ன , இல்லாவிட்டாலென்ன?” என்று நினைக்கிறான்.

நடித்துவாழ் தகைமையதோ அடிமைதான்? நன்னுதலைப்

பிடித்து, வாழ்அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ ?

ஒடித்துவான்தோள்அனைத்தும் தலைபத்தும்உதைத்துருட்டி

முடித்து, இவ்வூர்முடித்தால், மேல்முடிவதெலாம்முடிந்தொழிக.

அனுமனால் இதனை எளிதில் செய்திருக்க முடியும். கொதித்து ஆவேசமானவன்,  ஒரு கணம் நின்று நிதானிக்கிறான். ”இராமன் எனக்குக் கொடுத்திருக்கிற வேலை என்ன? ’சீதை எங்க இருக்கா?ன்னு பாத்துட்டு வாஅவ்வளவுதான். இராவணனோட போர் செய்யவேண்டியது இராமன் வேலைஎன்பது தோன்றுகிறது. ’ஒரு செயலைச் செய்யத் தொடங்கி மற்றதைச் செய்வது, உணர்வு உடையவருக்கு இழுக்குஎன்று நினைத்து, தன் கடமையான , தேடுதலைத் தொடர்கிறான்.

என்றுஊக்கி, எயிறு கடித்து, இரு கரமும்பிசைந்து, எழுந்து

நின்று, ஊக்கி,உணர்ந்து உரைப்பான் நேமியோன்பணி அன்றால்

ஒன்று ஊக்கிஒன்று இழைத்தல் உணர்வுஉடைமைக்கு உரித்து அன்றால்

பின்தூக்கின்இதுசாலப்பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்

நல்லா கவனி , அனுமன் சொல்கிற சொல்ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றுஆல்  லட்சம் கோடி பொன்னிற்குச் சமம் இது. எடுத்த வேலையை, கவனம் சிதறாமல், செய்வதுதான் சரி. பிற வேலையைச் செய்ய முயல்வது, அந்த வேலை நல்ல எண்ணத்தினால் செய்தாலும், உணர்வு உடைமைக்கு இழுக்கு

இந்த உணர்வு உடைமை என்பதைத்தான் கோவேதூண்டுதலுக்கும், எதிர்வினைக்கும் நடுவே நின்று நம் எதிர்வினையைத் தேர்வுசெய்யும் மனப்பாங்குஎன்கிறார். இந்த உணர்வு ,  உணர்ச்சிகளிலிருந்து வேறுபட்டது. மன முதிர்வின் அங்கம் இது. கணேஷ், சாட்டர்ஜீயைச் சந்தித்துப் பேசு.”

கணேஷ் மெல்லத் தலையாட்டினார். ஏதோ ஒரு முடிச்சு அவருள் அவிழ்ந்தது போல் ஒரு தெளிவு அவர் முகத்தில் தெரிந்தது.

5 Replies to “அனுமனும் உணர்வு ஆளுமையும்”

 1. மிக நல்ல கட்டுரை. பாடலை பிரித்து அதன் கருத்தை விளக்கிய விதம் அருமை. அந்த இடமே stimulus , response என்பதை விளக்கும் வகையில் உள்ளது.
  சிறு யோசனை,…..
  தேய்வழக்காக குமுதம் ஒருபக்க கதைகளில் வரும் வரிகள் வேண்டாமே. கடைசி இரு வரிகள் மிகை தேய் வழக்குகள். தலைப்பும் சற்று கூர்மையாக இருப்பது நலம்.
  நன்றி. தங்கள் தொடர்பு எண் தர இயலுமென்றால் அழைக்க விருப்பம்.
  அன்புடன்,
  ஜா.ராஜகோபாலன், சென்னை
  9940235558

 2. மிக்க நன்றி கீதா சாம்பசிவம், மீனா முத்து, ராஜகோபாலன் அவர்களே.
  கடைசி வரிகள் தேய்வழக்காக வருவதாகச் சொன்னதற்கு நன்றி. தூண்டுதல்களுக்கும், எதிர்வினைகளுக்குமிடையே நிற்பது மிக அதிகமான சுய பொறுப்புணர்வு. எளிதில் அதன் ஆளுமை வசப்படுவதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.