லெ கிளேஸியொவின் ‘குற்ற விசாரணை’யில் நுண்பொருள் கோட்பாட்டியல்

லெ கிளேஸியொ (J.M.G. Le Clèzio) பிரெஞ்சு எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர். 2008-இல் அவரது ஒட்டுமொத்த படைப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர். 23 வயதில் அவர் எழுதிய முதல் நாவல் குற்ற விசாரணை. 1940-இல் பிறந்த லெ கிளேஸியொ, தற்போது பிரான்ஸிலே இருக்கிறார். பூர்வீகம் மொரீஷியஸ். பிரெஞ்சுக் குடியுரிமை, மொரீஷீயஸ் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை பெற்றவர். நுண்பொருள் கோட்பாட்டியலைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு புனைவைச் செய்துள்ளார் என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

குற்ற விசாரணை நாவல் பிரெஞ்சு மொழியில் ‘Le Procès-verbal’ என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் ‘The Interrogation’ என்ற தலைப்பிலும் வெளிவந்தது. இதனைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் நாகரத்தினம் கிருஷ்ணா.

குற்ற விசாரணை நாவல் ஒரு சுவாரஸ்யமான நாவல், வித்தியாசமான நாவல்.சுவாரஸ்யம் ஏனெனில், இதில் கதை என்று எதுவும் கிடையாது. 250 பக்க நாவல். இது தரக்கூடிய அனுபவம்தான் சுவாரஸ்யம். இதனுடைய மொழிநடைதான் வித்தியாசம். இந்த நாவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். அதனால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. 4ஆவது அத்தியாயத்திலே தொடங்கலாம். அங்கிருந்து 7 அல்லது 10 அல்லது நீங்கள் விரும்புகிற எந்த அத்தியாயத்திற்கும் செல்லலாம் – கடைசி அத்தியாயத்தைத் தவிர. கடைசி அத்தியாயத்தில்தான் முந்தைய அத்தியாயங்களில் ஏற்படுகிற சிறுசிறு அயர்ச்சிகளுக்கு ஓரளவு புரிதல் கிடைக்கிறது. மொத்தம் 17 அத்தியாயங்கள். அத்தியாயங்களை மாற்றி மாற்றிப் படித்தாலும், பெரிய வித்தியாசம்ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்த ஒரு அனுபவத்தைத் தரும். குறிப்பிட்ட ஒரு மனிதனைப் பற்றிய கதையாக இல்லை. குறிப்பிட்ட காலத்தைப் பற்றியதாகவோ, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியதாகவோ இந்தக் கதை இல்லை. இதில் கதையே இல்லை என்பதுதான் உண்மை. இது ஒரு உரையாடல். வாசகனோடு நிகழ்த்தக்கூடிய உரையாடல். 23 வயதில் இவ்வளவு நுட்பங்களோடு ஒரு நாவலைப் படைக்க இயலுகிறது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கிறது.அவரைப் பற்றிய குறிப்புரையில், “வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் கால்வைத்து  நடப்பதையொத்த அனுபவத்திற்குக் கைகாட்டுபவர் கிளேசியொ” என்பதும், பின்னட்டைக் குறிப்புரையில், “1963-இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது” என்ற சொல்லாடல்களும் அவரது ஆளுமையை, எழுத்தாற்றறலை வெளிப்படுத்தும்.

விசாரணை – கேள்வி கேட்டல். வாழ்வின் மீதான சில கேள்விகளை முன்வைக்கிறது.  நாவல் உளவியலா? தத்துவமா? இலக்கியமா? வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியதா? அல்லது பிரச்சிசனைகள் இருப்பதாக நம்பும் மனதைப்பற்றியதா? கடவுள் மறுப்பா? கடவுள் இருப்பா? இறைநிலை பற்றியதா? எப்படி வாழ்வது? என்னுடைய வாழ்முறை சரியா? அல்லது உங்களுடையது? அல்லது அவருடையது? அல்லது இவையெல்லாம் கொண்டதா? அதுதான் இந்நாவல். ஒருவருடைய பேச்சு, செயல், வாழ்வு மற்றவருடைய பார்வையில் குற்றம், இவர் பார்வையில் மற்றவருடைய வாழ்வும் செயலும், பேச்சும் குற்றம். அவ்வளவுதான் குற்ற விசாரணை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது.

எந்த இடத்தில் அவன் குற்றம் செய்தான் என்பதும், அவன் செய்தக் குற்றம் ஏற்கனவே சிலுவைக் கடவுள் செய்த செயல்போலத்தான் எனில், சிலுவைக் கடவுளின் செயலே குற்ற விசாரணை.

குற்ற விசாரணை மனநலம் சார்ந்த பிரச்சிசனைகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. கதைநாயகன் புத்திபேதலித்தவனா, அல்லது புத்திசாலியா என்ற மயக்கத்தைத் தருகிறது. ஒரு தனிமனிதனைப் பற்றிய கதை அல்ல. எல்லா மனிதர்களுக்கும் பொதுவான விஷயம். அதனால்தான், முதல் மனிதனான ‘ஆதாம்’ என்ற பெயரைக் கதைநாயகனுக்கு இட்டிருக்கிறார். இந்த நாவல் அறிவியலா? புனைவா? என்ற தடுமாற்றமும் ஏற்படுவது இயற்கை. உலகம் அறிவியலால் ஆனது. இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல்… முக்கியமாக, கணிதவியல். இந்த அறிவியலன்றி, மனிதனால் வாழ இயலுமா? இயலாது.  அறிவியலும், தத்துவமும், உளவியலும், புனைவும் கலந்தது இந்நாவல்.

பருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு நகர்தல் இந்நாவலில் விரிவாக விளக்கப்படுகிறது. நுண்பொருளை நோக்குதல் – நுண்பொருளை உணர்தல் – நுண்பொருள் உலகத்தில் நுழைதல் என்பதன்படி நாவல் நகர்கிறது. ஆதாம் போலோவின் நகர்வை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். நுண்பொருளைப் பற்றிய ஆய்வு நுண்பொருள் கோட்பாட்டியல்(Metaphysics). உலகம் பருப்பொருள்களால் ஆனது. பருப்பொருள்கள் நுண்பொருள்களால் ஆனது. கண்ணுக்குப் புலப்படுகிற, வடிவம் தெரிகிற பருப்பொருள்கள் சிதைவை அல்லது பகுப்பை விளக்குவது நுண்பொருள் கோட்பாடு. இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்கா நுண்பொருள்களால் ஆனது. கண்ணுக்குப் புலப்படாத, வடிவமற்ற மனதில் பருப்பொருள் நுண்பொருள்களாக மாற்றம் பெறுவதை மனம் நுண்பொருளாகத் தன்னை உணர்வதை மனம் நுண்பொருள் உலகத்தில் நுழைவதை நுண்பொருள்பித்து (Micromania) எனலாம்.

மேற்குறிப்பிட்ட நுண்பொருள் நிலையை மனம் விழிப்புணர்வோடு அடைவதை இந்தியத் தத்துவத்தில் சித்துநிலையில் அணிமா, லகிமா, கரிமா என்பர். அணிமா –சிறிய வடிவம் அடைதல், லகிமா – காற்றைப் போல இலகுவாதல், கரிமா – மலை, பாறை போன்று கனமாதல். இந்த நிலையைத்தான் ஆதாம் போலோ அடைகிறான்.இந்நிலைகளை மனம் விழிப்புணர்வோடு அடைந்தால் அவன் ஞானி. மனச்சமநிலை தடுமாறி அடைந்தால் நுண்பொருள்பித்து, மனச்சிதைவு நோய். ஆதாம் போலோ இரண்டு நிலைகளையும் மாறி மாறி அடைகிறான்.

“சிறு சிறு பிரச்சினைகளையெல்லாம் ஊதிப்பெருக்கி இவனது  சீவனைக் கொடிய பொருளாக, வேதனைகளின் மொத்த உருவமாகக் காண்பித்து, வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வென்பது அங்கே பருப்பொருள் குறித்த அச்சமின்றி வேறெதுவுமில்லையென்பதைப்போல அவதியுறும் தனது உடலின் ஒவ்வொரு உளப்பாட்டிற்கும்…” (பக். 23, 24) என்று ஆதாம் வழியாக லெ கிளேஸியொ கூறுகிறார்.மனம் பருப்பொருளைக் குறித்தே எண்ணி அச்சமுறுகிறது. ஆகையினால், ஆதாம் “பருப்பொருளை, பருப்பொருளால், பருப்பொருள் சார்ந்த நியாயங்களால் ஜெயிக்க விரும்புகிறான்”(ப. 165). பருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு நகர்வதின்மூலம் அதைச் செய்ய முடியும். இத்தகைய நகர்வை, பின்தொடர்தல், ஓசைகளை உணர்தல், உடன் நிகழ்வுறுதல் நிலைகளில் அடையலாம்.

ஆதாம் முதலில் ஒரு பூங்காவிற்குள் நுழைகிறான். அங்கு முதலைகளைப் பார்க்கிறான். முதலைகளின் செயல்கள், அசைவுகள், உறுப்புகள் ஒவ்வொன்றையும் விரிவாக எண்ணிப் பார்க்கிறான். தொடர்ந்து பெண் சிங்கம், குரங்குகளைப் பார்க்கிறான். ஒவ்வொன்றைப் பற்றியும் அதேமாதிரி எண்ணிப் பார்க்கிறான். பிறகு, கடற்கரையில் ஒரு கறுப்பு நாயைப் பார்க்கிறான். செய்வதற்கு ஒன்றுமில்லை. எந்த இலக்குமற்று, எந்த நோக்கமுமற்று அதனைப் பின்தொடர விரும்புகிறான். கறுப்பு நாயின் செயல்பாடுகள், நகர்வுகளைக் கவனித்தபடி பின்தொடர்கிறான். உலகத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், யாரையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கறுப்பு நாய்  செல்கிறது, மஞ்சள்  நிறப் பெட்டை நாயோடு உறவு கொள்கிறது. இன்னும் சில மாதங்களில் அந்த  மஞ்சள் நாய் தகப்பன் யாரெனத் தெரியாத அரை டஜன் குட்டிகளைப் போடும் என்றெண்ணிக் கொள்கிறான்.

ஆதாம் மலையில் யாருமற்ற, யாருடைய வீட்டிலேயோ தங்கியிருக்கிறான். அங்கு வெள்ளை எலியொன்றைப் பின்தொடர்கிறான். எலியை அடித்து விரட்டிக்கொன்று, பின்பக்கம் வீசுகிறான். தோட்டத்தில் அமரும்பொழுது, இரண்டு எறும்புகள்அவனமர்ந்ததால் நசுங்கிச் சாகின்றன. தோட்டத்தில் செரீஸ் மரங்கள் பனித்துளியின் வாலைப் பிடித்திழுக்கின்றன. பேரிக்காய் பழங்கள் மரங்களிலிருந்து தப்பித்து ஓடுகின்றன. புற்கள் மூச்சுவிட முடியாமல் தவிக்கின்றன. இலைகளின் மீது சாம்பல் படிவதால், இலைகள் தங்கள் மீது ரோமங்கள் முளைத்துவிட்டதாகப் புலம்புகின்றன. இவையத்தனையையும் ஆதாம் கேட்டும், பார்த்தும், கவனித்தபடியும் இருக்கிறான்.

ஆதாம் முதலையிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக, மனதளவில் பின்தொடர்ந்து, புற்களில் வந்து நிற்கிறான். இறுதியில் சாம்பல், பாறைகள், மணல் போன்று ‘பின்தொடர்தல்’ நிகழ்கிறது. பாறையில் பாறையாக, மணலில் மணலாக, வாயைத் திறந்தபடி, மழைக்காகக் காத்திருக்கும் நிலம்போல படுத்திருக்கிறான். ஆதாம் மனதளவில் நுண்பொருளாக மாறிவிடுகிறான். இந்த நாவல் முழுக்க நுண்பொருள் நோக்கிய பயணமாக அமைகிறது. நுண்பொருளை உணர்த்தும் வகையில் அமைகிறது.  விலங்கியலில் (Zoology) தொடங்கி தாவரவியலைக் (Botany) கடந்து நிலவியலுக்கு (Geograph) வருகிறான். கோடுகளால் உருவாக்கப்பட்ட நாடுகள் (உலக வரைபடம்), சதுர அடிகள், திசைகள் என்று அனைத்தையும் விமர்சிக்கிறான். மனிதர்கள் உருவாக்கிய கோடுகள், மனிதர்கள் உருவாக்கிய நாடுகள், மனிதர்கள் உருவாக்கிய திசைகள் என்று அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.

ஆதாம் தான் விரும்பும் மிஷெலின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறான். அதனை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…. என்று முப்பது வரை எழுத்தாலேயே லெ கிளேஸியொ அமைத்திருக்கிறார். ஆதாமினுடைய அசைவுகள் செ.மீ அளவிலும் கண்ணசைவுகள் மி.மீஅளவிலும் நாவலிலும் குறிக்கப்படுகின்றன. அவன் தன் கையை 10செ.மீக்கு நகர்த்தினான் என்றவாறு அமைகிறது.

ஆதாம் நுண்ணோசைகளையும் பின்தொடர்கிறான். மரங்கள், பழங்கள், புற்களின் சிரிப்பையும், புலம்பலையும் பின்தொடர்கிறான். ஒரு சிகரெட் துண்டு கீழே விழும்போது, அது ஆயிரம் மடங்கு ஓசையை அவனுக்குள் ஏற்படுத்துகிறது. வெடிகுண்டுகளின் ஓசைகளையும் கேட்கிறான். மீன்களின் கூச்சலையும் கவனிக்கிறான். எவ்வளவு நுணுகிச்செல்ல முடியுமோ, அவ்வளவு நுணுகிச் செல்கிறான்.

லெ கிளேஸியோ இந்த உலகை மிக நுண்ணிய அளவீடுகளாலும், ஓசைகளாலும் கவனிக்கச் சொல்கிறார். இந்த நாவல் நுண்பொருளியலை மட்டுமல்லாது உளவியல், இருத்தலியல் கூறுகளையும் கொண்டிருக்கிறது. தவிர, மேலை இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படுகிற யுத்தம், போர் வெறுப்பு, அணுகுண்டுகள், சாவு பற்றியும், மதத்திற்கு (கிறிஸ்தவம்) எதிரான கருத்துக்களையும் இந்நாவலில் காணமுடிகிறது. ஆதாம் எங்கிருந்து தப்பி வந்திருக்கிறான் என்பதை அவனே மறந்திருக்கிறான். ராணுவத்திலிருந்தா? அல்லது மனநலக் காப்பகத்திலிருந்தா? என்று அவன் குழம்புகிறான். லே கிளேஸியொ ராணுவமும் மனநலக் காப்பகமும் ஒன்றுதான் என்கிறார். யுத்த வர்ணனை, பீரங்கிகள், இறப்பு விவரணை நாவலில் அதிகம். நீரில் மூழ்கி இறந்தவனைப் பற்றிய விவரணை லெ கிளேஸியோவினுடைய அவதானிப்பைச் சொல்கிறது.

கிறிஸ்தவத்திற்கு எதிரான கருத்துக்களை லெ கிளேஸியொ வெளிப்படையாகவே சொல்கிறார். தேவாலயம், கன்னித்தாய் குறித்த கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இயேசுவின் மலைப்பிரசங்கத்தை நினைவுபடுத்துவதாக குன்றிலிருந்து பேசும் ஆதாமின் உரை அமைந்திருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் 12பேர் என்கிற குறிப்பு இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. அந்த உரைக்குப் பிறகு, ஆதாம் மனநலக் காப்பபகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

ஆதாம் தனக்கு மனிதர்கள் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்படுவதாகக் கூறுகிறான். அத்தனை பேரும் ஒரே அச்சில் வார்த்ததுபோல் ஒரே மாதிரியாக இருப்பது அவனுக்குச் சலிப்பைத் தருகிறது. இரண்டு வாய்கள், காது இருக்க வேண்டிய இடத்தில் கால் என்று உறுப்புகள் எதுவும் இடம் மாறாமல் ஒரே மாதிரி இருப்பதை வெறுக்கிறான். ஆதாமுக்குப் பேச்சின் மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. எல்லோரும் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தனக்குப் பதிலாகப் பேச, கிளிக்குப் பயிற்சி கொடுத்து, தோளில் அமர்த்திக் கொள்ள விரும்புகிறான். ஆதாம் வழியாக லெ கிளேஸியொ வெளிப்படுத்தும் ‘மன அமைப்பை’ப் புரிந்து கொள்ள முடிகிறது.

‘உடன் நிகழ்வுறுதல்’ என்கிற தன்மையும் நாவலில் விளக்கப்படுகிறது. சிகரெட் பிடிக்கும்பொழுது, உலகில் எந்தெந்த இடங்களில் யாரெல்லாம் அதே நேரத்தில் சிகரெட் பிடிக்கிறார்களோ, அந்தச் செயலோடு, அவர்களால் கட்டமைக்கப்படுகிற உலகத்தில் தன்னை உணர்வது உடன் நிகழ்வுறுதல். இந்நிலையை அடைவது ஞான நிலை. ஓசைகளைக் கவனித்தல் ஞான நிலை. நுண்பொருளாகுதலும் ஞான நிலை. இந்நாவல் வாழ்வைப் பற்றிய தத்துவ விசாரணையை மேற்கொள்கிறது.

குற்ற விசாரணை நாவல் பின்தொடர்தல், ஓசைகளை உணர்தல், உடன் நிகழ்வுறுதல் என்கிற நிலைகளிலான நுண்பொருளியல் மட்டுமல்லாது உளவியல்,இருத்தலியல் உட்பட, வாழ்வைவைப் பற்றிய புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது. மொழிநடையிலும், நாவல் கட்டமைப்பிலும் சிறிது வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது. ஆதாம் எழுதும்  கடிதங்களில், அடித்து எழுதியிருப்பதை, நாவலில் காட்சிவழி அடித்தே காட்டப்பட்டிருக்கிறது. பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதை, இரண்டு பக்கங்கள் நாவலில் வெற்றிடமாக விடப்பட்டு, காட்சிவழி காட்டப்பட்டிருக்கிறது.

இதன் சிக்கலான மொழிநடையை இலகுவாக, புரிதலுக்கான மொழிநடையில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளனின் பணி சிறப்புக்குரியது. கொஞ்சம் பிசகினாலும் மனப்பிறழ்வுக்குள் தவறி விழும் வாய்ப்புள்ள பாத்திரத்தின் மனவோட்டங்களுக்கான சொற்கள். மனவோட்டங்கள் அத்தனைக் கவனத்தோடு மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. கற்பனைக்கு அப்பாற்பட்ட சங்கதிகளை மொழிபெயர்ப்பதும், சப்தங்கள், மன உலகச் சஞ்சாரிப்புகள் தொடர்பான சொற்களை மொழிபெயர்ப்பதும், லெ கிளேஸியொவின் (ஆதாம்போலோ) மன உலகத்திற்குள் பிரவேசித்தாலொழிய கனவை மொழிபெயர்ப்பது சவாலான விஷயம். லெ கிளேஸியொவின் மன உலகம் சாதாரணமானதல்ல. ஞானத்திற்கும், பித்து நிலைக்கும் நடுவிலான மையம். உளவியல் தொடர்பான செய்திகள் அதிகப் பிரக்ஞையோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளரின் மொழிவழியே நாம் ஆதாம் போலோவின் (லெ கிளேஸியொ) கண்களை அடைய முடிகிறது. ஆதாம் போலோவாகவே வாழ்ந்தால்தான் இம்மொழி சாத்தியம். தத்துவப் பழக்கமும், அறிவியல் புரிதலும், தேடல் மனமும் கொண்டிருந்தால் மட்டுமே இந்நாவல் களம் புரிபடும். அதனைச் செம்மையாகச் செய்திருக்கும் மொழிபெயர்ப்பாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பாராட்டுக்குரியவர்.

***

முனைவர் நா. ஜிதேந்திரன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி – 627 011.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.