முகப்பு » மகரந்தம்

மகரந்தம்

ஹாக்கிங்கின் நாற்காலியின் தொழிற்நுட்பம்

 

இயற்பியலாளர்களில் மிகவும் பிரபலமான ஸ்டீபன் ஹாக்கிங் இறந்துவிட்டார். அவரைப் பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் குவிந்த வண்ணம் இருக்கையில் அவரது இருபது ஆண்டுகால துணையாகவும் அவரது இயக்கத்துக்குக் காரணமாகவும் இருந்த தொழில்நுட்பங்களை இங்கு காணலாம். இருபது வயதில் தசைநரம்பு சிக்கல் நோயினால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மெல்ல நலிந்து வந்த அதே சமயத்தில் தொழில்நுட்ப சாத்தியங்களினால் அவரது ஆராய்ச்சிகளும், ஆசிரியர்பணிகளும் இடையறாது நடந்து வந்திருக்கின்றன. இந்த நோய் தாக்கிய பின்னான  இருபது வருடங்களில் அவரால் கை விரல்களைக் கொண்டு சிறு அசைவுகளைச் செய்ய முடிந்திருக்கிறது. சக்கர நாற்காலியோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் அதனுடன் பொருத்தப்பட்ட கணினியின் துணையோடு கட்டைவிரல் அசைவுகளைக் கொண்டு தனது ஆய்வுக்கட்டுரைகளையும், உரைகளையும் தயாரித்தார். அதற்கு இண்டெல் கம்பெனியின் கணினிகள் உபயோகமாக இருந்தன. பின்னர் 90களின் ஆரம்பத்தில் நோயின் கடுமை அதிகரித்தபோது அவரால் விரல் அசைவுகளையும் செய்யமுடியாதபடி ஆனது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்து தங்கள் ஆய்வுகளைத் தொடங்கினர். ஸ்டீபன் ஹாக்கிங் புற உலகோடு தொடர்பு கொள்ள மூன்று விதமானத் தடைகள் இருந்தன. அவரது சிந்தனைகளை வெளிப்படுத்தும் மொழி, வார்த்தைகளைக் கொண்டு பிறருக்குப் புரியும்படியான வரிகளை அமைக்கும் திறன், அவரது உரைகளையும் விவாதங்களையும் ஒலிக்கச்செய்யும் வழிமுறை. அவரது தாடையின் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் திரையின் முன் இருக்கும் வார்த்தைகளைத் தேர்வு செய்யும் தொழில்நுட்பத்தை வேர்ட் ப்ளஸ் எனும் நிறுவனம் உருவாக்கியது. அடுத்து அந்த வார்த்தைகள் திரையில் தோன்றும்போது அவருக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுக்கும் வழி – இதை EZ எனும் வகை தட்டச்சு முறையில் வார்த்தைகளை வரிகளாகக் கோர்த்தனர். பின்னர், ஸ்பீச்+ எனும் நிறுவனம் உருவாக்கிய எழுத்து – ஒலி முறைப்படி ஹாக்கிங்கின் குரலில் அவரது எழுத்துகள் ஒலிக்கத் தொடங்கின. இப்போது யோசிக்கும்போது தொன்னூறுகளின் தொழில்நுட்பத்தில் இதைச் சாத்தியமாக்க ஒவ்வோர் துறையினரின் வல்லுனர்கள் செய்த பாய்ச்சல்களை நாம் வியக்காமல் இருக்க முடியாது. 

இந்த வல்லுனர்களும், உதவியாளர்களும் இல்லாமல் இன்று ஹாக்கிங்கின் சிந்தனைகள் நமக்குக் கிடைத்திருக்காது. வானவியலின் கேள்விக்கடலிலிருந்து  சில விடைகள் குதித்து வருவதற்கு இப்படி பெரிய குழுவினரின் உழைப்பும், தொழில்நுட்ப ஆர்வலர்களின் அர்ப்பணிப்பும் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது.

https://www.scienceabc.com/innovation/stephen-hawking-cheek-communication-help-computer-speech-generating-device.html

மங்கோலியாவிலிருந்து மேற்கிசைக்குரல்

1921ஆம் ஆண்டு சீனாவிலிருந்து விடுதலை வாங்கியபின்னர் மங்கோலியா நாடு சட்டென தாய்குட்டியைப் பிரிந்த சேயானது.  அருகாமையிலிருந்த ரஷ்யா அரவணைத்துக்காத்து வந்தது. நிழல்குடையென ஒரு பெரியண்ணனின் மேற்பார்வை இருந்ததால், மங்கோலிய கலாச்சாரம் ருஷ்யாவை பிந்தொடர்வதை அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டது. சிறுவர்களும் பெண்களுக்கு ருஷ்யா, கிழக்கு ஜெர்மனி, போலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று “மேற்கத்திய” ரசனையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். பலரும் ஆபரா, பியானோ, சிம்பொனி குழுவில் வாத்தியக்கருவி என சிறுவயது முதலே சிறுவ சிறுமியர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டன. விளைவாக இன்று வேல்ஸின் கார்டிஃப் பகுதியின் பிபிசி ஆபரா போட்டியில் ஒரு மங்கோலியர் ஆபரா பாடகருக்கான பரிசை வென்றிருக்கிறார். அவர் அரியுன்பாட்டர் கான்பட்டர். இருபத்து ஒன்பது வயதான இவரை பிபிசியின் தலைமைக்குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த நிகழ்வினால் உந்தப்பட்ட ஒரு பத்திரிகையாசிரியர் மங்கோலியாவின் தலைநகரான உல்லான்பட்டருக்கு நேரில் சென்று அங்குள்ள கலைச் சூழலை ஆய்ந்துள்ளார். பழங்காலத்திலிருந்தே நெடும் பாடல் மரபைக்கொண்ட மங்கோலிய இனத்தில் , பல மேற்கினால் உந்தப்பட்ட சமூகத்தைப் போலவே, இன்று பழைய பாணி இசைக்கு அதிக செல்வாக்கு இல்லை. ஆனால், பல காலங்களாக நெடும் பாடல்கள் பாடிய முறையினால் இன்று புது தலைமுறையினருக்கு ஆபரா போன்ற ஏற்ற இறக்கம் கூடிய பாரிட்டோன் பாடுவது இயல்பாக அமைந்துள்ளது. இன்று ஒரு பெருந்திரளானோர் மேற்கத்திய இசைக்குழுக்களில் தலைகாட்டத்தொடங்கிவிட்டார்கள். 

 

https://www.theguardian.com/music/2018/jan/02/how-mongolia-went-wild-for-opera-ariunbaatar-ganbaatar

 

மரணம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்ன? என்ன கேள்வி இது என்று வியப்பதற்கு முன் கீழ்கண்ட குறிப்பைப் படிக்கவும்.

டான்சில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பதிமூன்று வயது ஜஹி, இரு நாட்கள் கழித்து மூளைச்சாவு என்று அறிவிக்கப்பட்டாள். அவள் பெற்றோர்கள் தங்கள் மகளை வெஜிடபிள் நிலை என்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இந்தக் கட்டுரை இன்னொரு மருத்துவ தவறை அலசுகிறது என்பது மட்டும் விஷயம் அல்ல. அல்லது ஜஹி ஓர் ஆப்பிரிக்க வம்சாவளி என்றில்லாமல் வெள்ளைச் சிறுமி என்றிருக்குமானால் மருத்துவ கவனிப்பு நிச்சயம் அதிகமிருக்கும் என்ற இன வேறுபாடு என்ற பிரச்சனையும் அலசவில்லை. மரணம் என்றால் என்ன என்ற ஆதார, ஆதியிலிருந்து வரும் கேள்வியை அலசுகிறது. நிச்சயம் இது தத்துவம் அல்லது மதம் சார்ந்த கேள்வியல்ல. மருத்துவர்கள் ஒரு நோயாளியின் மூளை செயலிழந்துவிட்டது;நோயாளி ஒரு காய்கறி மட்டுமே, மூச்சுக்கான உபகரணத்துடன் தொடர்வதில் அர்த்தம் இல்லை என்று அறிவித்தலுடன் மரணம் எனும் பெட்டி டிக் செய்யப்படுகிறது. ஆனால் அப்படி அறிவிக்கப்பட்ட ஒருவர் தன் கைகால் விரல்கள் அசைவின் மூலம் தனது பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்; அறையில் தன்னைச் சுற்றி பேசப்படும் அனைத்தையும் கேட்க, கிரகிக்க இயலும் என்று தெரியவரும் தெரியவரும்போது ஓர் ஜில்லிப்பு ஏற்படுகிறது. அப்படியானால்..இத்தனை நாட்கள் “மருத்துவ மரணம்” அறிவிக்கப்பட்டு மூச்சு உபகரணம் பிடுங்கப்பட்ட எத்தனை நோயாளிகள்?

இயற்கை திரும்பத் திரும்ப மனிதனை நோக்கி புன்னகை புரிந்துகொண்டே இருக்கிறது.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.