முகப்பு » அனுபவங்கள், இசை, கட்டுரை

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 8

அத்யாயம் 25

இந்த சமயத்தில் பல்வேறு சபாக்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வழங்கும் விருதுகளைப் பற்றியும் பரிசுகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ராகங்களில் நன்கு தயார் செய்து கொண்டு வருவார்கள். அந்த ராகங்களிலேயே அவர்களைக் கேள்விகள் நிகழ்ச்சியின் நடுவர்களாகிய வித்வான்கள் கேட்கும்படியான ஏற்பாடு அவர்களுக்குள் உண்டு போலும் என்பது நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனிக்கும் எவருக்கும் தோன்றும், ‘இந்த வருடம் உன் மாணவனுக்கு; அடுத்த வருடம் என் மாணவிக்கு’ என்று பரிசுகளையும் விருதுகளையும் பிரித்துக் கொள்வதாய்த் தோன்றும். மிகக் குறைந்த சமயங்களில் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு வித்வான் நடுவராக வந்தால் பழி வாங்குவது போல் பாடும் மாணவ மாணவிகளைக் கேள்விகள் தெற்கு வடக்காகக் கேட்டு திக்கு முக்காட வைப்பதும் நடக்கும்.

இந்நிகழ்ச்சிகளில் பெரும் தொகைகள் பரிசுப் பணமாக வழங்கப்பட்டு வந்தது. இவையெல்லாம் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் அளிப்பவை. இப் பரிசுத் தொகையில் வெல்பவரின் குருநாதருக்கு பெரும் பங்கு போகிறது என்று நம்புவதற்கு இடம் இருந்தது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் அனைவருமே கண்டும் காணமலும் நடந்து கொள்வதாகத் தான் தோன்றுகிறது. மிகவும் அரிதாகவே குருமார்கள் நடுவில் நடக்கும் சச்சரவுகள் விளிம்புக்கு வந்திருக்கின்றன.

இதெல்லாம் நடந்த சமயங்களில் சகோதரிகளில் ஒருவரும் இந்தப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டதைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் போட்டியில் ஒரு நடுவர் சகோதரியை வராளி ராகம் பாடக் கூறினார். சகோதரி பேந்தப் பேந்த விழித்தார். பல ராகங்களுக்கும் பல நம்பிக்கைகள் உண்டு. உதாரணமாக ஆஹிரி பாடினால் சோறு கிடைக்காது என்பார்கள். அது போல் வராளி குருநாதர் கற்றுக் கொடுத்தால் அத்துடன் குரு சிஷ்ய உறவு முடிவுக்கு வந்துவிடும் என்பார்கள். இதனால் தான் பெரிய இசைவாணர் சகோதரிகளுக்கு வராளி கற்றுக் கொடுக்கவில்லையோ என்னவோ!

சகோதரியை வராளி பாடச் சொன்னவர் பெரிய இசைவாணரின் உறவினரான இசைவாணரின் ஆரம்பகாலக் கூட்டாளி – பிரபல வித்வாசினி – இசைவாணர் இசைப் பள்ளியின் வருடத் தொடக்க விழாவிற்கு மற்றும் வந்து செல்பவர் என்று இதே தொடரில் எழுதியிருந்தேனே அவர்தாம். இந்தப் போட்டி நடந்த சமயத்தில் இசைவாணருக்கும் அவருக்கும் விரிசல் உண்டாக ஆரம்பித்திருந்த சமயம் போலிருக்கிறது. பெரிய இசைவாணரை விட்டு நீண்ட நாட்களுக்குப் பின் இவர் வகுப்புகள் எடுக்கிறாரா என்று தெரிந்து கொள்ள இவருக்கு கொஞ்ச நாட்கள் முன் ஃபோன் செய்தோம். அவரின் தந்தை ஆதித்யாவின் குருமார் விபரங்களை அறிந்து கொண்டபின் கூறினார்: “இப்போ தான் மிகவும் சிரமப் பட்டு வெளியில் வந்து நிம்மதியாக இருக்கோம். நீங்க சொல்ற ‘பாக்ரௌண்டை’ வெச்சுப் பாத்தா கிளாஸ் சாத்தியப் படாதுன்னு தான் தோண்றது.” இது நிற்க.

தற்செயலோ அல்லது நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை ஆதித்யா கேட்டுக் கொண்டிருந்தானோ தெரியாது. அப்போது அவனுக்கு வடபழனிக் கோயிலில் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தோம். அந்தக் கச்சேரியில் வராளியில் முதல் பாட்டாக ‘கனகன ருசிரா’ என்கிற பாட்டைப் பாடினான். தியாகராஜர் எழுதிய / இயற்றிய பஞ்சரத்னங்களுள் ஒன்று. தியாகராஜர் காலத்தில் வராளி குறித்த நம்பிக்கை கிடையாது போலும். அவர் வாலாஜாபாத் வெங்கட் ரமண பாகவதர் போன்ற சிஷ்யர்களுக்குக் கற்பித்து இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதே கச்சேரியில் வராளியின் மெயின் ஐட்டமாக ‘முருகா வா வா கந்தா வா வா’ என்கிற பாபநாசம் சிவன் கீர்த்தனையை எடுத்துக் கொண்டு விரிவாக ஆலாபனை பாடி நிரவல் ஸ்வரம் எல்லாம் பாடியிருந்தான். என் குருநாதர் பாராட்டு முகமாக “கொன்னு எறிஞ்சுட்டான்” என்பார். அவன் அன்று பாடிய வராளியை இது போன்ற ஒரு உயர்வு நவிற்சியில் தான் விவரிக்க வேண்டியிருக்கும்.

அன்று அவன் கச்சேரியைக் கேட்பவர்கள் மொத்தமாகவே பத்து பேர் இருக்கலாம். எங்களையும் மைக்காரர் கோயில் சிப்பந்திகள் இவர்களையும் சேர்த்துத் தான். ஆதித்யாவிற்கு அந்தக் கவலையெல்லாம் ஒன்றும் கிடையாது. உட்கார்ந்து ஆரம்பித்து விட்டானென்றால் பாடுவதில் மட்டும் தான் கவனம். நாலு பேர் இருந்தாலும் நானூறு பேர் இருந்தாலும் அவனுக்கு ஒன்று தான். அந்தக் கச்சேரி முடிந்து அடுத்த கச்சேரி வரும் போது மிருதங்கம் வாசித்த இளைஞன் கைவிரல்களில் பிளாஸ்திரி போட்டுக் கொண்டிருந்தான். தவில்காரர்கள் விரலில் தொப்பி அணிந்து கொள்வது போல் அணிந்திருக்கிறானோ என்னவோ என்று நினைத்து அவனிடம் “கையில் என்ன பிளாஸ்திரி?” என்றேன். என் கவலை எனக்கு. ஏதாவது பண்ணிக் கச்சேரியைச் சொதப்பி விடப் போகிறானே என்றிருந்தது. அவன் “போன கச்சேரி வாசிச்சேனேல்யோ? உங்க பையன் கையை உடைச்சுட்டான்” என்றான் சிரித்தவாறே.

அந்த சமயத்தில் ஆதித்யாவின் குரல் உடைய ஆரம்பித்து ஓரளவுக்கு ஒரு கட்டையில் நிலையாக நின்று கொண்டிருந்தது. உடையும் போது உண்டாகும் பிசிறுகள் சுத்தமாக மறைந்து விட்டிருந்தன. இந்த மாற்றம் மூன்று வருடங்களில் நடந்து நான்கு ஐந்து வருடங்களில் நன்றாக அமர்ந்து விட்டது. உடைய ஆரம்பித்த சமயங்களில் கச்சேரிகளை நாங்கள் நிறுத்தி வைத்திருந்தோம். ஸ்ருதி கொஞ்சம் குழம்புகிற நிலை. மேல் ஸ்தாயியில் கொஞ்சம் பிசிறு அடித்தது. மந்தர ஸ்தாயியில் நிற்க முடியவில்லை. ஆனாலும் கோயில்களிலும் மற்ற இடங்களிலும் எப்போதாவது செய்யும் கச்சேரிகளை நிறுத்தவில்லை. இதில் ஒன்றிரண்டு இடங்கள் பற்றியும் அதன் அமைப்பாளர்கள் பற்றியும் கூறலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக மலையாளிகள் தமிழர்களை விடப் பெரிய இசை ஆர்வலர்களாகவும் நல்ல இசையை ரசிப்பவர்களாகவும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அநாவசிய பந்தாக்கள் இருக்காது. என்ன தான் கம்யூனிஸ்டுகளாகவும் நாத்திகர்களாகவும் இருந்தாலும் சமஸ்க்ருதத்தையும்   பாரம்பரிய கலை இலக்கிய வடிவங்களையும் கோயில்களில் தூய்மையையும் சொத்துக்களையும் பழங்காலச் சின்னங்களையும் இன்றளவுக்கும் பாதுகாத்து வருகிறார்கள். பத்மநாபஸ்வாமி கோயிலில் கூடை கூடையாகச் செல்வங்களை அள்ளுகிறார்கள். வரும் ராஜா தான் கோயில் செல்வத்தைத் திருடவில்லை என்று நிரூபிப்பதற்காகக் கோயிலை விட்டுச் செல்லு முன்பு காலில் உள்ள தூசியை உதறி விட்டுச் செல்கிறார். கதகளியோ, மோகினி ஆட்டமோ சாக்கியர் கூத்தோ சோபானமோ இன்றளவுக்கும் அதன் மூல வடிவத்தைக் கூடிய மட்டில் சிதையாது பாதுகாத்து வருகிறார்கள். இதைப் பார்த்து நாம் பெருமூச்சுத் தான் விட வேண்டியிருக்கிறது.

சென்னையில் சில ஐயப்பன் கோயில்கள் உண்டு; குருவாயூரப்பன் கோயில்களும் உண்டு. எங்காவது போய் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டால் உடனடியாக அவர்கள் கமிட்டியில் வைத்து அநுமதி தந்து விடுவார்கள். கச்சேரி இந்த நாள் இந்த நேரம் என்று தெரிவித்து விடுவார்கள். நாம் அந்த குறிப்பிட்ட நாளில் நேரத்தில் சென்றோம் என்றால் ஜமக்காளம் விரித்து மைக்கெல்லாம் பொருத்தித் தயாராக வைத்திருப்பார்கள். நாம் போய் பாடிக் கொள்ள வேண்டியது தான். அநாவசிய பேச்சே கிடையாது. கச்சேரி முடிந்தவுடன் சில இடங்களில் நெய்ப் பாயசம் நெய் அப்பம் போன்ற பிரசாதங்களைத் தருவார்கள்.

கச்சேரியை முடித்து விட்டு நாம் நிறைவாக வீடு திரும்பலாம். என்ன? அடுத்த முறை வரும் போது சில சமயங்களில் மட்டும் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கும். பல சமயங்களில் அவர்களே தொலைபேசியில் அழைத்து நினைவூட்டுவதும் உண்டு.

அய்யப்பன் கோயில்களில் ஒரு சிறிய பிரச்னை உண்டு. நேரக் கணக்கைச் சரியாகக் கடைப் பிடிப்பார்கள். இரவு எட்டு மணி என்றால் எட்டு மணிக்கு முடித்தாக வேண்டும். வந்து நினைவூட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜெண்டை மேளங்களுடன் ஸ்வாமி ஊர்வலத்தை ஆரம்பித்து விடுவார்கள். அதற்காக ஜாபிதாவை தயார் செய்யும் போதே ஆதித்யாவிடம் இவ்வளவு பாட்டுத் தான் என்று சொல்லி விடுவோம். ஆதித்யாவைப் பொறுத்தவரை பாதியில் நிறுத்தச் சொல்ல முடியாது. கேட்க மாட்டான் என்பதால் இந்த முன் ஜாக்ரதை.

இதைத் தவிர சிறு சிறு சபாக்கள் உண்டு. தன்னார்வலர்களால் நடத்தப் படுவது. சிலர் செலவுகளுக்காக பாடுகிறவர்களிடமிருந்தே ஒரு தொகையை வசூலிப்பதுண்டு. இன்னும் சிலர் இதையே ஜீவனோபாயமாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் நடவடிக்கைகளை சற்று உன்னிப்பாக கவனித்தால் இதை விளங்கிக் கொள்ள முடியும். முதலில் அவர்கள் நடத்தும் சபாவில் ஆயுள் உறுப்பினராக வேண்டும். புதுமைப் பித்தன் பாஷையில் கேட்பதென்றால் ‘யாருடைய ஆயுள்? சபாவின் ஆயுளா நம் ஆயுளா?’ என்று கேட்க வேண்டியதிருக்கும்! அதற்கு ஒரு தொகையை ஆரம்பத்திலேயே வசூல் செய்து விடுவார்கள். பிறகு ஏதாவது ஒரு நாளில் கூப்பிட்டு கச்சேரிக்கு நாள் குறித்த விபரத்தைத் தெரிவிப்பார்கள். கச்சேரி ஏதாவது ஒரு கோயிலில் நடக்கும். ஒன்றிரண்டு சமயங்களில் சில சின்ன ஹால்களில் நடக்கும். இவற்றைத் தவிர சங்கீத ஆர்வலர் ஒருவர் பெயரில் நடக்கும் அறக் கட்டளையும் இயங்கி வந்தது. இத்தனை வயதிலிருந்து இத்தனை வயதிற்குள் உள்ள குழந்தைகள் பாடலாம் என்கிற கட்டுப் பாடு உண்டு. அவர்களின் வலைப்பூவில் கச்சேரி குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வெளியாகும். வருட விழாவில் அந்த வருடத்தில் பாடிய சிறந்த குழந்தைகளைப் பாட வைத்துப் பரிசு வழங்குவார்கள்.

ஆதித்யாவைப் பொறுத்த வரை சில ராகங்கள் அவனைப் பிடித்துக் கொண்டு விடாது. அதையே எல்லாக் கச்சேரிகளிலும் பாடி விடுவான். அதற்கு சீசன் உண்டு. சில ராகங்கள் நிரந்தர வாசஸ்தலமாகவும் அமர்வதுண்டு. ஆரம்ப நாட்களில் கரகரப்பிரியாவில் ஆதித்யாவிற்குப் பெரிய மோகம் இருந்தது. எல்லாக் கச்சேரிகளிலும் கரகரப்பிரியாவில் ஒரு பாட்டாவது பாடி விடுவான். அதையே பிரதான ஆட்டமாகப் போட்டுக் கொள்வதும் உண்டு. ஒன்றில் சக்கனி ராஜ என்றால் இன்னொன்றில் பக்கல் நில படி. அன்னமாச்சார்யாவின் ‘ஓக்கபரி கொக்கபரி’ யைக் கூட பிரதான ஐட்டமாக வைத்துக் கொண்டு பாடியிருக்கிறான். மோகனம் இன்றளவும் பிடித்துக் கொண்டிருக்கிறது. பைரவி கொஞ்ச நாள் பாடிக் கொண்டிருந்தான்.

31.08.2008 அன்று சென்னை திருவான்மியூர் சக்கரை அம்மன் கோயிலில் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தேன். சக்கரை அம்மன் என்கிற மாதரசி பெரிய சித்தர் என்று நம்பப் பட்டவர். ஜீவன் முத்தராக இருந்தவர். மருந்தீஸ்வரர் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு ‘ஹா ஹா’ என்று பெரிதாகச் சிரித்துக் கொண்டிருப்பாராம். அவர் பறவை போல் வானத்தில் பறந்து வந்து மாடியில் இறங்கியதை திரு.வி. கல்யாணசுந்தரனார் தாம் நேரில் கண்ட படியே விவரித்திருக்கிறார். அந்த அம்மையின் அணுக்கத் தொண்டராக விளங்கியவர் நஞ்சுண்டராவ் என்னும் அந்த நாளைய பிரபல மருத்துவர். அவரின் பரம்பரையினர் அறக்கட்டளை ஒன்றை அந்த ஆலயத்தின் செயல்பாட்டுக்காக நிர்வகித்து வருகிறார்கள். அந்த நிர்வாகி ஒரு பெண்மணியுடன் பேசினேன். அவர் சாந்தமும் அணுக்கமும் மௌனமும் கொண்டிருந்தார்.

ஆதித்யா கச்சேரி செய்து கொண்டிருந்தபோது அவனைப் பற்றி விளக்கினேன். அவர் அமைதியாக ‘நான் புரிந்து கொண்டேன்’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலிறுத்தார். இந்தக் கச்சேரியைக் குறிப்பிடக் காரணம் உண்டு. இந்தக் கச்சேரியில் தான் ஆதித்யாவின் உடைந்த குரல் கனிந்து கொஞ்சம் அமைய ஆரம்பித்திருந்த சமயம். இப்போது எனக்குக் கேட்கும் போது இருபத்தைந்து முப்பது வருடங்களாகப் பாடிக் கொண்டிருக்கும் வித்வான் பாடியது போலிருக்கிறது. இதில் பைரவியைப் பிரதானமான ஐட்டமாக எடுத்துக் கொண்டு ‘பால கோபால’ என்கிற கீர்த்தனையை ஆலாபனை நிரவல் கற்பனாஸ்வரம் என்று விஸ்தாரமாகவும் பாடினான். முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சாகித்யம்.

இந்த சமயத்தில் 15.03.2009 அன்று மைலாப்பூரில் ராக சுதா ஹாலில் ஒரு சிறிய சபாவின் ஏற்பாட்டில் ஆதித்யா பாடினான். வயதானவர் ஒருவர் இந்த சபாவை நடத்தி வந்தார். இவர் வருடா வருடம் இசை விழாவின் போது ஒரு புத்தகம் வெளியிடுவார். அதில் பாடல்கள் ராகங்கள் ஒழுங்கில் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். கச்சேரிகளில் உட்காருகிற இசை ஆர்வலர்களுக்கு வரப்ரஸாதம். உட்காருகிற இசை ஆர்வலர்களுக்கு வரப்ரஸாதம். உதவினகாக ‘நிதிசாலசுகமா’ என்று பாடகர் பாட ஆரம்பித்து என்ன ராகம் என்று புரியாமல் ரசிகர் தடுமாறுகிறார் என்றால் இந்தப் புத்தகத்தைப் புரட்டினால் இந்தப் பாடலுக்கு எதிராகக் கல்யாணி ராகம் குறிப்பிடப் பட்டிருக்கும். ஆரம்ப ஆர்வலர்களுக்கு சிறந்த வழிகாட்டி இந்தக் கையேடு.

அந்தக் கச்சேரியின் போது ஆதித்யாவிற்கு ஷண்முகப் பிரியா ஜூரம் பிடித்திருந்தது. ஆபோகி வர்ணம் முடிந்தவுடன் முத்து ஸ்வாமி தீக்ஷிதரின் ஸித்தி விநாயகம் பாடலை எடுத்துக் கொண்டு நிரவல் ஸ்வரம் என்று பாடினான். நிரவல் ‘அகில ஜகத்கின்னராதி ஸேவிதம் என்கிற இடத்தில் எடுத்து ஸ்வரம் பாடினான். வயலின் வாசித்தவர் ஒரு ஸீனியர் வித்வான். பெரிய பிராபல்யம் இல்லாதிருப்பவர். ஆதித்யாவுக்காக எப்போது கூப்பிட்டாலும் தடை சொல்லாது வருபவர்.

ஒரு முறை ஆதித்யா எங்காவது அவரிடம் இங்கிதக் குறைவாக நடந்து விடப் போகிறானே என்று கருதி “ஸார்! நீங்க தான் பையன் ஏதாவது மரியாதைக் குறைவா நடந்தாக் கொஞ்சம் பொறுத்துக்கணும்” என்றேன். அவர் என்னிடம் சர்வ சாதாரணமாக “ஸார்! எனக்கு வித்தை தான் கணக்கு. அது உங்க பையன்ட்ட இருக்கு. அதுனால எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாதுங்கறதை நீங்க புரிஞ்சுக்கணும்” என்றார் சாதாரணமாக.

அவர் கச்சேரி முடிந்தவுடன் வெளியில் வந்து “சார்! இந்த மாதிரி ‘அகில ஜகத்ல நிரவல் ஸ்வரம் பாடி இன்னிக்குத் தான் கேக்கறேன். இந்தக் கணக்கு பூர்வ ஜன்ம வாசனையில்லாம சாதாரணமா வந்துடாது சார்! உங்க பையன் உண்மையிலேயே யாரோ பெரிய வாக்கேயக்காரரோட அவதாரம் தான் சார்!” என்றார். நான் கையைக் கூப்பியபடி “எல்லாம் உங்க ஆசீர்வாதம்” என்றேன்.

அன்று மிருதங்கம் வாசித்த பையன் சிறு பையன். ஆதித்யா வயது அல்லது ஒன்றிரண்டு கூட இருக்கலாம். நல்ல அருமையான நாதம். தரமான பாடாந்திரம். ஏற்கெனவே குறிப்பிட்டேனே சிறு பிள்ளைகளை வைத்து ஒரு பிரபலம் கச்சேரிகள் ஏற்பாடு செய்கிறார் என்று. அந்தக் குழுவைச் சேர்ந்தவன். ஆதித்யாவின் வேகத்துக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை மிக அருமையாக வாசித்த போதும். தனியாக ஒரு தனி பக்கவாத்தியம் மாட்டிக் கொண்டால் ஆதித்யா கையை ஒடிப்பான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இந்தக் கச்சேரிக்குப் பிறகு ஏற்பாடு செய்யும் கச்சேரிகளில் பக்கவாத்தியம் இரண்டு இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

இந்தக் கச்சேரிக்குப் பிறகு மிருதங்கம் வாசித்த இந்தப் பையனைப் பலமுறை அழைத்தும் அவன் வாசிக்கப் பிரியப் படவில்லை. இது நான் ஏற்கெனவே கூறியிருந்தபடி வழக்கமென்பதால் நானும் பெரிதாக் அலட்டிக் கொள்ளவில்லை. இந்தக் கச்சேரிக்கான கண்ணி இதோ:

வாசகர்கள் கேட்டு ரசிக்கக் கோருகிறேன்.

சில நாட்களுக்கு முன் இந்தக் கச்சேரியில் வயலின் வாசித்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் இன்றைய கச்சேரிச் சந்தையின் நிலையைப் பற்றி மிகவும் வெறுப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அது ..

Series Navigationதொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 7தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 9

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.