முகப்பு » இலக்கியம், உலக இலக்கியம், எழுத்தாளர் அறிமுகம், கட்டுரை

ஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பகுதி 1)

ஆம், இப்படியும் ஆரம்பித்திருக்கலாம், இதோ இங்கே, முன் யோசனையின்றி, நிதானமான, ஆனால் கனமான நடையில் சொல்வதாய், சுவர் முதல் சுவர் வரை கண்களைத்தாக்கும் பயங்கர பிங்க் வண்ணத் தரைவிரிப்பு கொண்ட, இருபத்து மூன்று அடி நீளமும் பதின்மூன்று அடி அகலமும் கொண்ட, அலுவலகமாகவும் நூலகமாகவும் உள்ள இந்த அறையில் ஆரம்பித்திருக்கலாம்.  எல்லாவற்றுக்கும் முன், முதலில் உங்கள் கண்கள் அறையின் இரு பக்கங்களிலும் தரை முதல் கூரை வரை உயர்ந்து நிற்கும் ஆஷ் வண்ண பார்ட்டிகிள்போர்ட் மரப்பட்டைகள் போர்த்தப்பட்ட ஐகியா புக் கேஸ்களில் வழுக்கிச் செல்லும்கிடைத்த இடத்தை முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் புத்தகங்கள் குவிந்திருக்கும் அலமாரிகள்,  நிமிர்ந்தவாக்கிலும் படுத்தவாக்கிலும் கன்னாபின்னாவென்று வரிசைப்படுத்தப்பட்ட புத்தகங்கள், அலமாரிகளின் அட்ஜஸ்ட்டபிள் ஷெல்ப்கள் அளிக்கும் இடத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆக்கிரமித்திருக்கும் புத்தகங்கள். நெருங்கிப் பார்க்கும்போது காரியப் பித்து என்று சொல்லும் வகையில்  இதில் ஒரு வகை ஒழுங்கையும் உங்களால் பார்க்க முடியலாம்,. மாடிப்படி முடியும் இடத்திலிருந்து அறைக்குச்செல்லும் கதவுக்கு அருகில் வலப்புற ஓரத்தில் உள்ள புத்தக அலமாரியைப் பார்க்கிறீர்கள், அதை அறிவியல் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு முனையில் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு புத்தகம், பெனோட் மாண்டல்ப்ராவின் கிளாசிக் நூலானதி ஃப்ராக்டல் ஜியோமெட்ரி ஆஃப் நேச்சர்’, மறு முனையில் சர் ஐசக் நியூட்டன் பற்றிய பீட்டர் அக்ராய்டின் குறுகிய சரிதை, அவற்றிற்கிடையே வரிசைக்கிரமாய் மூன்று பாகங்கள் கொண்டஃபெய்ன்மேன் லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’, அடிசன் வெஸ்லி பதிப்பு. அதனடியில், புத்தக அலமாரியின் கீழடுக்கில், மிகப்பெரியபிரின்ஸ்டன் கம்பானியன் டு மாதமேடிக்ஸ்மற்றும் சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையில் மார்ட்டின் கார்ட்னர் எழுதிய கணித விளையாட்டுகளின் பரவலாக ரசிக்கப்பட்ட பத்திகளின் தொகுப்பு. இதைவிட உயரமான அடுக்குகளைக் கண்ணுறுகையில் (டஃக்ளஸ் ஹாஃப்ஸ்டேட்டரின்மெடாமாஜிகல் தீமாஸ்’, ‘கோடல் எஸ்ஷர் பாக்இத்யாதி), கிறுக்குத்தனமான இந்த கீக்கிடத்தில் வசிக்கும் வாசகர் எப்படிப்பட்டவர் என்று மனம் ஊகிக்கத் துவங்குகிறது, பொருந்தாமைகள் புலப்படத் துவங்கும்வரைடேனியல் டென்னட் புத்தகத்தின் கீழ்ஆக்ஸ்ஃபோர்ட் புக் ஆஃப் ஹ்யூமரஸ் ப்ரோஸ்’, டேவிட் க்ரீன் மற்றும் ரிச்சர்ட் லாட்டிமோர் தொகுத்தகம்ப்ளீட் கிரீக் ட்ராஜடிஸ்புத்தகங்களின் யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பதிப்புகள்  அடுக்கடுக்காய் மாடர்ன் லைப்ரரி எடிஷன்ஸ், எவ்ரிமன்ஸ் லைப்ரரி எடிஷன்ஸ், ‘இன் ஸர்ச் ஆஃப் லாஸ்ட் டைமின் ஆலன் லேன் பாக்ஸ் பதிப்புகளின் பக்கவாட்டு அட்டைகளில் ரோடினிய விரைப்புடன் பார்க்க முயற்சி செய்யும் திரு மார்சல் ப்ரூஸ்ட்டுகள் அறுவர், திரு பி. ஜி. வோட்ஹவுஸின் ஓவர்லுக் பிரஸ் கலெக்டர்ஸ் பதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முழு அடுக்குகள், கொய்டிசொலோ, கோர்த்தஸார், ஃபுவெண்டஸ், போல், கிராஸ், ஃப்ளாபேர், பெரெக், பதய், பஞ்சி என்று ஐரோப்பிய புனைவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுக்குகள்துறைகள், பதிப்புகள், காலகட்டங்கள், புனைவுவகைமைகள், நிலவமைப்பு, மொழி, ஏன், விருப்பம், நினைவு அல்லது தனித்தன்மை கொண்ட வேறு சில விதிகளும் இந்த புத்தகங்கள் அடுக்கப்பட்ட வரிசைக்கு காரணமாய் இருந்திருக்கும் போலிருக்கிறது.

அந்த அறையிலிருந்து, சீனப்பட்டு போன்ற துணியாலான வெள்ளை மற்றும் பழுப்பு நிறத் திரைகள் போர்த்தப்பட்ட இரட்டை சன்னல்கள் ஊடே உங்களால் சில மரங்களையும், மிகச் சிறிய புல்வெளியையும், சாலையின் ஒரு பகுதியையும் காண முடிகிறது. அந்தச் சன்னல்களுக்கு இடையில் உள்ள சிறிய சுவர்ப்பரப்பில் சன்னமான, மூன்றாய்ப் பிரிக்கப்பட்ட அலமாரிகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இவை ஒரு பின் யோசனையாய், தாமதமாய் அமைக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது. மத்தியிலிருப்பது பக்கத்தில் உள்ள இரண்டைவிட சுவற்றினுள் பதிந்துள்ளது, “சமகாலநுண்ணுணர்வைக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் அது துருத்தி நின்று தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறது. பக்கவாட்டு அலமாரிகள் இரண்டிலும் க்ரைடீரியன் படங்களின் டிவிடி பதிப்புகள் முழுமையாய் அடுக்கப்பட்டிருக்கின்றன, மத்தியஅலமாரியில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கில்லாத அவியலாய் தமிழ் இலக்கிய புத்தகங்கள் குழுமியிருக்கின்றன.

அறையின் இடப்பக்க மூலையில், சாலையைப் பார்க்கும் சன்னல்களில் ஒன்றின் அருகில், ஒரு காத்திரமான மேஜை இருக்கிறதுகிளாசிக் வின்டேஜ் கேய்லோன் ஹோம் ஆபிஸ் டெஸ்க்கின் சமகால வடிவம், எளிமையானது, கவனத்தை ஈர்ப்பது. அதில் புத்தகங்களும் காகிதங்களும் சிதறிக் கிடக்கின்றன. ஒரு லாப்டாப், பென்ஹோல்டர், எண்வடிவ தளம் கொண்ட விளக்கு, எல்லாம் சேர்ந்து இந்தக் குப்பைக்கு ஒரு அதிகாரப்பூர்வ தோரணை அளிக்கின்றனஆனால் டில்ட் செய்யப்படக்கூடிய ஹை பேக், சௌகரியமான ஸ்விவல் ஆக்சன், காஸ் லிஃப்ட் வசதிகளுடன் இந்த மேஜைக்கு துணையாய் உள்ள பஞ்சிநாற்காலி அந்தத் தோரணையை மீட்க முடியாத வகையில் அடியறுத்து விடுகிறது.  இத்தனை கலவரங்களுக்கும் இடையில் கவனமாய் பார்வையை ஓட்டும் கண்கள் இரண்டாய்ப் பிளந்து கொள்ளும் அரைகுறை முயற்சியில் தலைகீழாய் புரண்டு கிடக்கும் புத்தகம் ஒன்றின் மீது விழலாம்அது 126ஆம் பக்கத்தில் திறந்திருக்கிறது, அங்கு ஒரு மேற்கோள்:

முடிவின் அளவுக்கே முறைமைகளும் உண்மையின் அங்கங்கள். உண்மைக்கான தேடலும் உண்மையானதாய் இருக்க வேண்டும்: அதன் வெவ்வேறு உறுப்புகள் கூடி முடிவாய் இணையும் விரிவே மெய்த்தேட்டம்”.

மேற்கோளுக்கு உரியவர் யாரென்று சொல்லாமல், அதை எழுதியது யார் என்பதை நீங்கள் ஊகித்திருப்பது அரிது. திரு. கே. மார்க்ஸ் என்ற ஒருவர்தான் அது. இரண்டு நாவல்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியை அந்த மேற்கோள் முடிவுக்குக் கொண்டு வரும் போல் தெரிகிறது (பழைய புத்தகக் கடையில் வாங்கிய ஹார்வில் பிரஸ் பதிப்பு இது என்பது ஒரு உபதகவல்). ‘திங்க்ஸ்மற்றும் அடுத்த பக்கத்தில் துவங்கவிருக்கும்தி மேன் அஸ்லீப்’ (‘Things’ and ‘The Man Asleep’) ஆகிய இரண்டுக்கும் இடையில் புரிந்து கொள்ளப்படக் காத்திருக்கும் குறி போல் அந்த மேற்கோள் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது. அவையிரண்டும், மஸ்யூர் ஜார்ஜ் பெரெக் என்ற ஒரு ஃபிரஞ்சு ஆசாமியால் எழுதப்பட்டவை.

*  *  *

திங்க்ஸ்’ ( பொருட்கள், லே சோசஸ், 1965), ‘அறுபதுகளின் கதைஎன்ற உபதலைப்பு கொண்டது, பருண்மபொருட்கள்சேகரிப்பதற்கும் அவை அளிக்கும் அந்தஸ்துக்கும் அப்பால் வாழ்க்கையில் வேறு எந்த இலட்சியங்களும் இல்லாத ஜெரோம், சில்வி என்ற இரு அற்ப பூர்ஷ்வாக்களுக்குக் கிட்டும் யோகத்தைத் தொடர்கிறது (இந்தப் புத்தகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது யோகம் என்பது முரண்நகை தொனிக்கும் சொல்). இருவரும் (பெரெக் போலவே) சமூகவியலாளர்களாய் பயிற்சி பெற்றவர்கள், வாடிக்கையாளர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் தேர்வுகள் குறித்து அறிய சந்தை ஆய்வு நோக்கங்களுக்காக ஆய்வு மேற்கொள்கின்றனர். அதிக அளவு சம்பளம் பெற்றுத் தருவதில்லை என்றாலும் நெகிழ்வுத்தன்மை கொண்ட அவர்களது பணி, மித அளவு மகிழ்ச்சியாக இருக்குமளவு பணமும், கடை வாசல்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை கண்ணுற்று கற்பனையில் சொந்தம் கொண்டாடி, பாரிசும் அதன் சுற்றுப்புறங்களும் அளிக்கக்கூடிய (‘லெஎக்ஸ்பிரஸ்என்ற இதழில்பட்டியலிடப்பட்ட அளவு) தற்போது அடைய முடியாத உயரத்தில் உள்ள உயர்வர்க்க வாழ்க்கை முறைக்கான வாயில்களாக  இருக்கும் நாகரீக பொருட்களுக்குஉரிமை கொண்டாடும் விருப்பத்தை  நிறைவு செய்து கொள்ள தேவைப்படும் அளவிற்கும்சற்றே அதிக அளவு நேரமும் அளிக்கிறது. அவர்கள் பணி தற்காலிகமானது என்பதால் வேலை இழக்கும் சாத்தியம், அதைத் தொடர்ந்து ஏழ்மை நிலை எய்துவதன் துன்பங்கள் என்ற அச்சுறுத்தல் எப்போதும் அவர்களுக்கு இருக்கிறது.  கீழ் மத்திய வர்க்க ஸ்டீரியோடைப்புகள் போல் அவர்கள் தொலைவிலிருந்து நாஸ்டால்ஜியா உணர்வுடன் வரலாற்றைகற்பனை செய்து கொள்கிறார்கள். மகத்தான செயல்களால் பெருமை சேர்த்துக் கொள்ளும் சாத்தியங்களை ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தம் போன்ற வேறொரு காலகட்டம் தங்களுக்கு அளித்திருக்கும் என்பது போன்ற எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உரியகாலம் கடந்தபின்  கண்டன ஊர்வலங்களில் பங்கேற்பது போன்ற பாவனைகளுக்கு அப்பால் தங்கள்  கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்ஜீரிய யுத்தத்தை அவர்கள் கண்டு கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறார்கள. இதே போல், பணக்கார மாமா ஒருவர் பெரும் தொகையை அவர்கள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு செத்துப்போவது, அல்லது, லாட்டரியில் பரிசுத் தொகை வெல்வது போன்ற அசாதாரண பகல்கனவுகளுக்கு அப்பால்,  அவர்களது அந்த நாள் வரையிலான உயர்ந்த ரசனைப் பார்வை அதற்கேற்றஉயர்ந்த வாழ்க்கை முறைஒன்றை அடைவதற்கான  வேட்கைகள்மற்றும் இயல்பான உத்திகள்எதையும் நோக்கி அவர்களைக் கொண்டு செல்வதில்லை. ஆனால் அவர்களுடைய கனவுகளின் தொடுவானம் இரக்கமின்றி தடைசெய்யப்பட்ட  ஒன்றாய் இருக்கிறது;  தங்கள் மாபெரும், அசாத்திய கனவுகள் பொன்னுலகுக்கு மட்டுமே உரியவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

சுதந்திரமாய் இருக்க வேண்டும், விருப்பப்பட்டபோது வேலை செய்தால் போதும் என்ற ஆசைக்கும் ஏழ்மை குறித்த மிகையச்சத்துக்கும் இடைப்பட்ட வெளியில் தடுமாறும் விளிம்பு நிலை வாழ்வு அவர்களை நசிக்கிறது, அவர்கள் முக்கியமான உறுப்பினர்களாய் இருக்கும் குழுவையும் உடைக்கிறது.  அத்தனை அதிகம் உறுதியளித்து எதையும் மெய்ப்பிக்காத உலகின் முரண்பாடுகளால் எழும் அழுத்தம் மிக அதிகமாகி அவர்கள் பொறுமை இழக்கின்றனர். விரக்தி நிலையின் உச்சத்தில் அவர்கள் தம் தற்போதைய வாழ்வு மற்றும் எங்கும் நிலவும் அதன் மகிழ்ச்சிக்கான முன்நிபந்தனையானபொருள் சேர்ப்புஆகியவற்றுடன் உள்ள உறவை குறியீட்டளவில் முறித்துக் கொள்ள துனீசியாவுக்குத் தப்பியோடி இந்தப் பெருஞ்சிக்கலுக்கு விடை காண முயற்சி செய்கின்றனர் (ஸ்ஃபாக்ஸில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி கல்லூரியில் சில்விவுக்கு வேலை கிடைக்கிறது, ஒரே சம்பளத்தில் இருவரும் வாழ முடிவு செய்கின்றனர்). ஆனால் ஸ்ஃபாக்ஸ் புரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது, அதன் அலுப்பூட்டும் தனிமையில் தங்கள் வாழ்வு துளித் துளியாய் வீண் போவதை இருவரும் உணர்கின்றனர்.  காலம் கழிகிறது,அல்லது அவர்களைப் பொறுத்தவரை அசையாது நிற்கிறது; எப்போதும் காலாவதியான பழைய செய்தித் தாள்களைத் தவிர வேறெந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாததாய்  வெளி உலகம் இருக்கிறது. அவர்களுக்கு இன்ப துன்பங்கள் இல்லை, அலுப்பும்கூட இல்லைசில சமயம் தங்கள் இருப்பையே சந்தேகிக்கின்றனர். அவர்கள் வாழ்வு விட்டுக்கொடுக்க முடியாத பழக்கம் ஆகிறது, சலனமற்ற சலிப்பாகிறது: ஒன்றுமில்லாத வாழ்க்கையாகிறது.

ஸ்ஃபாக்ஸ்சில் தங்கியிருக்கும்போது அவர்கள் ஹமாமெட்டில் வசிக்கும் ஒரு முதிய ஆங்கிலேய தம்பதியரின் வீட்டுக்குச் செல்கின்றனர், அந்த வீடு அவர்களின் உருப்படாத பகல் கனவுகளின் சாத்தியமற்ற மிகைகளுக்கு ஒப்ப இருக்கிறது, சந்தேகமேயில்லை, அது மண்ணில் ஒரு சுவர்க்கம்தான். ஆனால் அப்படிப்பட்ட வீடும் (அது எப்போதும் அவர்களின் கனவுகளுக்கு அப்பால் இருக்கும்), அவர்களது மயக்க நிலையைப் போக்காது, அதன் அத்தனை மகோன்னதங்களும் தொலைதூர நினைவொன்றின் நிழல்தான் என்பதை உணர்கிறார்கள். விரைவாக வேகம் குறைந்து வரும் அவர்களது வாழ்வின் இதயத்தில் ஏதோ ஒரு அமைதியான, மிக மென்மையான துயர்முடிவு போன்றதொன்று நுழைகிறது. சந்தேகத்துக்கிடமான ஆறு ஆண்டுகள் அவர்களை எங்கும் கொண்டு சென்றிருக்கவில்லை, எதுவும் கற்றுத் தந்திருக்கவில்லை. பாரிஸ் திரும்ப தீர்மானிக்கிறார்கள்.

பின்கதை, அவர்கள் பாரிஸ் திரும்பியதும் என்ன நடக்குமென்பதை நினைத்துப் பார்க்கிறது. இந்த மூதுரையின் உண்மையையே அவர்கள் உணர்வதாய்ச் சொல்கிறது: ஒரே ஆற்றில் இரு முறை கால் பதிக்க முடியாது; தீய உள்நோக்கம் கொண்ட ஒரு குரூரச் செயலாக இந்த நாவல் அவர்கள் போர்டூவில் வசீகரமற்ற எக்சிக்யூட்டிவ் பதவி ஏற்பதாக எழுதி முடிக்கிறது.  ஏமாற்றத்தில் வந்து நிற்கும் அவர்கள் வாழ்வு நினைத்தது போலவே ஒரு பெருவெடிப்போடு அல்ல, புஸ்சென்றுமுடிவுக்கு வருகிறது: சலிப்பூட்டும் பணி நிமித்தமாக போர்டூசெல்லும் ரயில் ஒன்றின் டைனிங் கம்பார்ட்மெண்ட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு விஸ்கிகள் ஆர்டர் செய்து விட்டு, கூட்டுக் களவாணிகளாய் கடைசி முறை ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்கிறார்கள். கஞ்சி போட்டு மொடமொடப்பாய் இருந்த மேஜை விரிப்புகள், ‘Compagnie des Wagons-Lits’ இலச்சினை பொறித்த கனமான உணவுக் கருவிகள்எல்லாம், வயிறு வலிக்க பரிமாறப்படப்போகும் விருந்து ஒன்றின் முன்னறிவிப்பு போலிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் உணவோசுவையற்று இருக்கப் போகிறது

                                                                           * * *

பெரெக்கின் முதன்மை மொழிபெயர்ப்பாளரான டேவிட் பெல்லோஸ்ஸின் சொற்களில், ‘திங்க்ஸ்நாவல், ‘வசீகரம் குறித்து சொல்லப்படக்கூடியது எல்லாவற்றையும் சொல்லித் தீர்க்கிறது, அதிலும் குறிப்பாக, நவீன உலகில்டி காலின் பிரான்சில் உருவாகிக் கொண்டிருந்த நுகர்வு கலாசார உலகில்மகிழ்ச்சி, விடுதலை போன்ற சொற்களின் பொருள் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்கிறது’. ‘எ மேன் அஸ்லீப்’, இதன் எதிர்த்திசையில், அசிரத்தையை அதே அளவு தீவிரமாக அறிய முற்படுகிறது.  இந்த நாவலின் பிரதான பாத்திரம் பொருள் சேர்க்கும் ஆசையின்றி இருக்கிறான், ஆனால் பருண்ம உலகின் தளைகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புகிறான். நம் இந்து மற்றும் பௌத்த சமய கோட்பாடுகள் வலியுறுத்தும் துறவின் நம்பிக்கையற்ற பிரெஞ்சு வடிவம், அதன் விளைவுகள் பூரண சுதந்திரம் அளிக்கும் வெறுமையல்ல, மாறாய், யாதொன்றுமற்ற இல்லாமை.

இருபத்து ஐந்து வயதான சமூகவியல் மாணவன் ஒருவன் ஒரு நாள் காலை ரூ சாண்ட் ஹானோரீயில்உள்ள தன் தனியறையில் கண் விழிக்கும்போது தொடர்ந்து சில புலனனுபவங்களைப் பெறுகிறான்: காப்பி கசக்கிறது, தான் வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் சரடை (ரேமாண்ட் ஆரோனின்எய்டீன் லெக்சர்ஸ் ஆன் இன்டஸ்ட்ரியல் சொசைட்டி’) இழந்து விடுகிறான், லாண்டிங்கில் உள்ள தண்ணீர்க் குழாய் சொட்டிக் கொண்டிருக்கிறது, பிங்க் நிற பிளாஸ்டிக் கிண்ணம் ஒன்றில் அவனது காலுறைகள் ஊறிக் கொண்டிருக்கின்றன, கூரையின் துத்தநாக ஃப்ளாஷிங்ஸ்களில் பட்டு வெயில் பளீரிடுகிறதுஇவை அனைத்தும் சேர்ந்து அவனுள் ஒரு அறப் பிரளயத்தை உருவாக்கி, அவனது பார்வை முழுதையும் திரித்து, திகைப்பூட்டும் வகையில் அவனுள்மாற்றம் ஏற்படுத்தி விடுகிறது. அவனது ஆசை, பெருமை, குறிக்கோள், மற்றும் வெற்றி பெறும் உந்துதல் ஆகியவை அனைத்தும் திட்டமற்ற ஒரு கண நேரக் காட்சியில் களைப்பு, அசிரத்தை, அலுப்பு ஆகிய உணர்வுகளால் வெற்றி கொள்ளப்படுகின்றன. எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது என்று அவன் முடிவு செய்கிறான், பின்னர், பரீட்சை நாளன்று, படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டாம் என்று முடிவெடுக்கிறான். இப்படிச் செய்வதை, அவன் முடிவெடுத்தான் என்று சொல்வதும்கூட மிகையாக இருக்கும்ஏனெனில் இது அவனாகச் செய்தது என்று பொருள் தருகிறது, ஆனால் இது முன்யோசனையற்ற செயல்,அதைவிட, இது செயலே அல்ல, செயலின்மை, அவன் செய்யாதிருக்கும் செயல், அவன் தவிர்க்கும் செயல்கள். அவன் பொழுது போக்குபவனாகும், உறக்கத்தில் நடப்பவனாகவும், வாழ்வதற்கோ, செயல் புரிவதற்கோ, உருவாக்குவதற்கோ படைக்கப்படாத ஒரு கிளிஞ்சலாகவும் மாறுகிறான். துவக்கத்தில் அவனது நண்பர்கள் அவனோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள், ஆனால் நாட்பட அவர்களும் அவன் வீட்டுக் கதவைத் தட்டி களைத்து விடுகிறார்கள்.அவன் பாரிசின் ஏறி இறங்கும் தெருக்களில் குழப்பமான நிழல், அசிரத்தையின் திட மையமாக பிறர் பார்வையைத் தவிர்க்கும் விருப்பு வெறுப்பற்ற பார்வையாக அலைகிறான். உண்மையில் அவன் வீட்டை விட்டு வெளியேறும் முன்பே முன்குறிப்பில்  நாம் எதிர்கொண்ட காஃப்கா நாவல் மேற்கோளின் உருவகம் ஆகிறான். (“நீ வீட்டை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. உன் மேஜையில் அமர்ந்து கவனிஉலகம் தன் திரைகளைக் கிழித்துக் கொள்ள உன்னிடம் தன்னை அளிக்கும்; அதற்கு வேறு வழியில்லை, ஆனந்தம் மேலிட்டு அது உன் முன் தன்னை எழுதிக் கொள்ளும்”).

தன்சாகசத்தின்அர்த்தமற்ற அலைச்சல் கட்டத்தில் அவன் கோடைக்கால மாதங்களை ஊசெர் அருகில் உள்ள தன் பெற்றோரின் இல்லத்தில் கழிக்கிறான், அங்கு அவன் இயற்கையுடன் இன்னும் நீண்ட காலம் நெருங்கியிருக்க நேர்கிறது. ஆனால் நிலச் சூழமைவோ, வயல்களின் அமைதியோ அவனுக்கு உத்வேகம் அளிப்பதில்லை. தன்னைச் சுற்றியுள்ள கிராமியச் சூழல் அவனைக் கோபப்படுத்துவதுமில்லை, ஆறுதல் அளிப்பதுமில்லை, மாறாய், இயற்கை இயக்கங்களின் உதிரி புதிரிகள் அவனுக்கு கணப்போது சுவாரசியம் தருகின்றன: ஒரு பூச்சி, மரம், அல்லது உதிரும் இலைஒரு மரம் அதன் அசிரத்தையால் அவன் பார்வையை நிலைகுத்தி நிற்கச் செய்கிறது, அவன் மரத்தில் உள்ளது எல்லாம் அதன்மரத்தன்மைமட்டுமே என்பதை உணர்கிறான்அதன் சந்தேகமற்ற, குற்றம் சொல்வதற்கில்லாத பட்டைகள், இலைகள், வேர். தன் வலிமை, வாழ்வு, தன் மகத்துவம் தவிர வேறு அறமோ செய்தியோ அதனிடம் இல்லை. மரத்தில் காணப்படும் விருப்பு வெறுப்பற்ற அசிரத்தை, இத்தனை நாட்கள் அவன் இலக்கின்றி பாரிசிலும் கிராமப்பகுதிகளிலும் திரிந்த காலத்தில் தேடிக் கொண்டிருந்த ஆதர்சமாகிறது.

கவனமாக அமைத்துக் கொள்ளப்பட்ட இந்த அசிரத்தையை முறைப்படி ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அவன் பாரிஸ் திரும்புகிறான், வேறு பல விஷயங்களைக் கற்றதை நிராகரித்து, தெளிவாயிருத்தல், அசையாதிருத்தல், இல்லாதிருத்தல் ஆகியவற்றின் கலையை கவனமாகப் பயில்கிறான். நிழல் போலிருக்கவும், மனிதர்களை கற்கள் போல் கண்ணுறுவதற்கும் பழகிக் கொள்கிறான். ஆனால் இது, அவன் கல்லாமையை ஆனந்தமாய்த் தழுவிக் கொள்கிறான் என்றோ காட்டுக்கூச்சல் போட்டபடி ஓடுகிறான் என்றோ அர்த்தமாகாது. தான் வாசிக்கும் எதற்கும் முன்னுரிமை அளிக்கக்கூடாது என்பதைக் கற்றுக் கொள்கிறான், அவ்வளவுதான். அவனது உடுப்புகள் நாகரீகத்தையோ அலட்சியத்தையோ சுட்டுவதில்லை. அவனது உணவு, உடுப்பு, வாசிப்பு எதுவும் அவனது இடத்தில் நின்று பேசாது, இனி எப்போதும் அவன் களைக்கச் செய்யும், தன் பிரதிமையாய் இருக்கும் அசாத்தியமான, நிரந்தரமற்ற சுமையை அவற்றுக்கு அளிக்க மாட்டான். முடிவற்று அவன் தன்னுடன் ஆடிக்கொள்ளும் சீட்டாட்டம், அறையின் விட்டத்தில் உள்ள பிளவுகள் குறித்த சிந்தனை, உயிர்வாழ்வதற்காக தினப்படி ஒரு போது அல்லது இரு போது அவன் உட்கொள்ளும்சத்துணவு’, பாரிசின் சாலைகள், பாலங்கள், சந்துக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் புத்தகக்கடைகள் என்று திரிதல்காலப்போக்கில் இந்த நோக்கமற்ற செயல்கள் அவனை இலக்குக்கு அருகில் கொண்டு செல்கின்றன: அவன் மரமாகிறான் போலிருக்கிறது (அல்லது ஒரு சிலை, அல்லது ஜார்டின் டூ லுக்ஸம்போர்க்கில் அவன் பார்த்த கிழவன்).அவனது எதிர்வினைகள் மிகக் குறைந்த அளவுக்கு குறுகியபின் இப்போது அவன் அந்த நகரெங்கும், அது அவனுக்கு அளிப்பதற்கு வைத்திருப்பது எதுவானாலும் அவற்றின் கவர்ச்சியால் ஒரு சிறிதும் வசீகரிக்கப்படாமல், திரிகிறான்.

ஆனால், “ஒரு பசுவைப் போல, ஒரு சிப்பியைப் போல, ஒரு எலியைப் போல,” சுதந்திரமாய் இருக்க விலையொன்று கொடுத்தாக வேண்டும். இரவில்ராட்சதர்கள்வெளிக் கிளம்புகிறார்கள், அன்னியமாக்கப்பட்ட தனிமையின் முழு வேதனையையும் அவன் உணர்கிறான். ராட்சதர்கள் அவனது சக ஜந்துக்கள், நனவின் கீழுள்ள குறிகளை, அமைதிகளை, ரகசிய வெளியேற்றங்களைக் கொண்டு, அவனது கண்களைச் சந்திக்கும்போது தயங்கித் திகைத்து தம் பார்வையைத் தவிர்க்கும் கண்களைக் கொண்டு, அடையாளம் காணப்படக்கூடிய சகோதரர்கள். அவர்கள் அவன் கையைப் பிடித்து இழுப்பவர்கள், அவனது கவனத்தைச் சிறைப்படுத்துபவர்கள், தங்கள் சின்ன புத்தியின் உண்மைகளை அவன் தொண்டைக்குள் திணிப்பவர்கள், தம் தர்ம காரியங்கள் மற்றும் மெய்வழிகளைப் பேசி அவனை வதைப்பவர்கள்அவர்களின் சகவாசம் அவனுக்கு குமட்டலாய் இருக்கிறது, அசிரத்தையாய் இருப்பது என்னும் அவனது மாபெரும் செயல்திட்டம் வீண் என்பதை உணர்கிறான், தீர்மானமான செய்கையொன்று புரிவது குறித்த அவனது பிரமைகள் முக்கியமற்றவை என்பதை உணர்கிறான். சில நொடிகள், சில துளிகள் மட்டுமே அவனால் கைப்பற்ற முடிந்திருக்கிறது, ஆனால் , புறக்கணிப்பது அல்லது மறப்பது என்ற பாவனைகள் அனைத்துக்கும் அப்பால், காலம், ஸான் ரோச்சின் ஆலய மணிகளால், அல்லது லாண்டிங்கில் உள்ள குழாயின் சீரான சொட்டுகளால், விசுவாசமாய் கணக்கு வைக்கப்படும் காலம்,நில்லாமல் நகர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. இந்தக் கடைசி சில பக்கங்கள் அவனது செயல்திட்டத்தின் அடிப்படை அத்தனையையும் குரூரமாய் உடைக்கின்றன, அதன் விதிக்கப்பட்ட விரயத்தை அம்பலப்படுத்துகின்றன. அவன் ஒரு போலி சிசிஃபஸ், மலை மீது நகர்த்திச் செல்ல ஒரு பாறையில்லாத காரணத்தால் நகைப்புக்குரியவன். இனி புரிந்து கொள்ள முடியாதவனல்ல, தொய்ந்தவனல்ல, தெளிவானவனல்லஅவன் தன் குழப்பப் பாதைகளில் பீதியடைந்து ஓடும் ஒரு எலி. அச்சம் மேலிட, அவன் பிளாஸ்க்ளிஷியில் காத்திருக்கிறான், மழை நிற்கட்டுமென்று.

எ மேன் அஸ்லீப்என்ற மீபொருண்ம சாகசத்தின் விரிவான உருச்சித்திரத்தை மேற்கண்ட பத்திகள் அளிக்கின்றன. ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு இடையே, மனதைக் குழப்பும் காட்சிகள் மற்றும் புலனனுபவங்களைப் புரிந்து கொள்ள அவன் முயற்சிக்கும் தாமச நிலைகளை விவரிக்கும் அத்தியாயங்களும் இருக்கின்றன (அவன் தலையினுள் ஒரு குளம், பின்னர் தலையணையாகும் பெரிய சோப்புக் குமிழ், கரிய கடலில் ஒரு கப்பலின் தளத்தில் அவன் நிற்பது போன்ற இரட்டைக் காட்சி). விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்கு அவன் செல்வதன் பிரக்ஞை மாற்றம், அரைக்கனவு நிலையில் உள்ள அவனது பிரக்ஞையின் மேற்பரப்புக்கு நனவிலி நினைவுகள் குமிழிட்டு எழுவது குறித்த விவரணைகள் ப்ரூஸ்ட்டிய சாயல் கொண்டவை. வாழ்வின் பருண்ம நிலைகளிலிருந்து அந்தர்முகமாய் தப்பிப்பது அவனுக்கு ஆனந்தத்தையும் வேதனையையும் மாற்றி மாற்றி அளிக்கிறது, ஒரு போதை மருந்து போல் மனமயக்க நிலைகளையும் காட்சித் தோற்றங்களையும் உருவாக்குகிறது (சிறுத்தைத் தலை, வாதை செய்பவர்கள், பயங்கரமான ஒரு ராட்சதக் கண், இதர பிற), என்பனவற்றை இந்த விலகிச் செல்லும் அத்தியாயம் அறிவியலை நகலிக்கும் படிமங்களுடன் துல்லியமாய் விவரிக்கின்றன. பெரெக் இந்தக் கனவுப் பகுதிகளை எழுத ஏராளமான எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார், இதை அவர்ஃபேஜோசைட்டிங்க்’ (Phagocyting) என்று அழைக்கிறார். உடலுக்கு ஊறு விளைவிக்கும் அந்நிய கூறுகளை அழிக்கும் வெள்ளை ரத்த அணுக்களை நினைவுபடுத்தும் வகையில், முதல்நூலின் சூழமைவிலிருந்து பிரதித் துண்டங்களைக் கத்தரிக்கும் அதே சமயம், அவர் தன் முன்னோடிகளை ஏற்றுக் கொள்ளவும், அவர்களை வேறொரு இடம் செல்வதற்கான பாய்தளங்களாய் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த உத்தி பயன்படுகிறது. சிதைவுறும் தன்உடலை மீளுருவாக்கம் செய்ய அவன் முயற்சிப்பது, முதுமை குறித்து அவன் அஞ்சுவது போன்ற காட்சிகளில் காப்காவின் கிரகர் சம்சாவையும் ஜோசப் கேவையும் விமரிசகர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதே போல், கடலில் பயணிக்கும் கப்பலின் தோற்ற மயக்கங்கள் ஃப்ளாபேரின்செண்டிமெண்ட்டல் எஜுகேஷன்மற்றும் ரோப் க்ரில்லேவின்வோயூர்ஆகியநாவல்களின் துவக்கங்களை நினைவுபடுத்துகின்றன. எனக்கு இந்தக் காட்சிகள் மாரிஸ் ரோஷேவின்காம்பாக்ட்டின் துவக்கப் பக்கங்களை நினைவுபடுத்தியதுஇதுதிங்க்ஸ்பதிப்பிக்கப்பட்டதற்குஅடுத்த ஆண்டில், 1966ல் பதிப்பிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமான செய்தியாக இருந்தது.

                                                                                             *  *  *

நான் வளர்ந்து கொண்டிருந்த பருவத்தில் என் அம்மா, என்னையும் என் சகோதரியையும், ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் திருநெல்வேலியில் இருந்த எங்கள் தாத்தா வீட்டுக்கு அழைத்துச் செல்வார். சில சமயம், முதல் சில நாட்களுக்குப்பின், புகழ்பெற்ற லட்சுமி விலாஸ் திருநெல்வேலி அல்வா எதிர்பாராதவிதமாக என் தாத்தா வீட்டில் காட்சியளிக்கும்.அதை என் பாட்டி மிகவும் வருந்தத்தக்க அளவு சிறிய பகுதிகளாய் எங்களுக்கும், அந்த வீடு குறித்த என் நினைவுகளில் எப்போதும் இணை பிரியாது தோன்றும் என் சித்திகள்மற்றும் பெரியம்மா பிள்ளைகள் என்று எல்லாருக்கும் விண்டு தருவார்.  அதே அல்வா நாங்கள் ஊருக்குக் கிளம்புவதற்கு சில நாட்கள் முன் வாங்கித் தரப்படும், நியாயமான காரணங்களுக்காகவே தேவாம்ருதம் எனப் போற்றப்படும் அந்தப் பொட்டலங்கள் இல்லாமல் சென்னை திரும்புவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது. பல ஆண்டுகள், தீபாவளியின்போது என் அம்மா செய்த அல்வா, நியாயமே இல்லாமல் அதன் புகழ்பெற்ற திருநெல்வேலி சகாவுடன் ஒப்பிடப்பட்டு மிக மோசமான வகையில் தோற்றுப் போகும். எங்களைப் பொறுத்தவரை திருநெல்வேலி அல்வா மட்டுமே தங்கம், அம்மாவின் அல்வா எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதற்கு ஈடாகாது. பல ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் திருநெல்வேலி சென்றபோது நெல்லையப்பர் கோவிலுக்குப் பக்கத்தில் மாலை ஐந்து முதல் எட்டு மணி வரை மட்டுமே திறந்திருந்த இருட்டுக் கடை அல்வா பற்றி யாரோ சொன்னார்கள், அங்கு நான்கு மணி முதல் வரிசையில் நின்று சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட மாயமந்திரத்தால் வந்தது போல் தோன்றும் இனிப்பைச் சாப்பிடுவார்களாம். எங்கள் உறவினர்களில் ஒருவரும்கூட, முன்னமே சொல்லியிருந்தால் தன்னிடமிருந்த தொடர்புகளைக் கொண்டு சில பொட்டலங்கள் குறுக்கு வழியில் வாங்கி வைத்திருப்பேன் என்று சொன்னார். கடைசியில் நாங்கள் வழக்கமான அதே கடையில்தான் அல்வா வாங்கினோம்: லட்சுமி விலாஸ். ரயில் வரக் காத்திருக்கும் நேரத்தில் ஆவலாதி கொள்ளாமல் அதை வழித்து விழுங்கிக் கொண்டிருக்கும்போது பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன, அவை சற்றே ஏமாற்றமளிப்பவையாகவும் இருந்தன. அந்தப் பொன்னான நாட்களின் தரம் குறைந்து விட்டது என்று தோன்றியது, அடுத்த முறை வரும்போது இருட்டுக்கடை அல்வா வாங்கிச் சாப்பிட்டுப் பார்ப்பது என்று தீர்மானித்தோம். ரயிலில் நான்மிதாலஜிஸ்’(Mythologies) படித்துக் கொண்டிருந்தேன், பார்த் (Barthes) திருநெல்வேலியில் பிறந்திருந்தால் அவரது செமியாலஜிக் கிளாசிக்கில் திருநெல்வேலி அல்வாவின் தொன்மங்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

நான் இங்குமிதாலஜிஸ்பற்றி குறிப்பிடக் காரணம், ‘திங்க்ஸ்மற்றும்எ மேன் அஸ்லீப்நாவல்களில் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் அது இருக்கிறது என்பதுதான். தான் நாவல்கள் எழுதியது குறித்து விரிவாகப் பேசிய எழுத்தாளர்களில் பெரெக்கும் ஒருவர்: “’மேடம் எக்ஸ்பிரஸ்ஒரு குவியலாய் என் அருகில் வைத்துக் கொண்டுதிங்க்ஸ்எழுதினேன், ‘மேடம் எக்ஸ்பிரஸ்மிக அதிகம் படித்தபோது என் வாயைக் கழுவிக் கொள்ள பார்த் சிறிது வாசிப்பேன்”. பார்த்திய லென்ஸ் கொண்டு இந்த முதல் இரு நாவல்களையும் வாசிப்பது பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. 1954 ஆண்டு முதல் இரு ஆண்டுகள் எழுதப்பட்ட முதல் ஐம்பத்து ஐந்து கட்டுரைகள், “அன்றாட ஃபிரெஞ்சு வாழ்க்கையின் தொன்மங்கள்என்று அவர் அழைத்ததன் மீதான சிந்தனைகளின் தொகுப்பு. மல்யுத்தப் போட்டிகள் முதல் சிட்ரோயென் கார் வரை, புகைப்படங்கள் முதல் விளம்பரங்கள் வரை, இந்தக் கட்டுரைகள் பெருந்திரள் மொழியின் மீதான கற்பனையால் செறிவூட்டப்பட்ட விமரிசனங்கள், “அந்த மொழியின் குறிப்பொருண்மை அழிப்பின் முதல் நிலைஎன்று பார்த் அழைத்ததைச் செய்து பார்க்கும் முயற்சி. தொன்மம் என்பது பார்த்தைப் பொறுத்தவரை, காரண காரியமற்றதை அவசியமானதாக உருமாற்றுவதற்கான இயந்திரம், கலாசாரத்தை இயற்கையாய் அளிப்பதற்கான செயல்பாட்டு யந்திரம்.

முடிவில்லாமல் தொடர்ந்து சேகரித்துக் கொண்டே இருப்பதன் வழியே மகிழ்ச்சியை ஜெரோமும் சில்வியும் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால் நுகர்வு கலாசாரங்கள் தம்மியல்பில் உள்ளபடியே வாடிக்கையாளர்களைத் தக்க அளவுஅதிருப்தியில்வைத்திருப்பதை நோக்கமாய்க் கொண்டவை. உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான பிரக்ஞையில் பிளவு என்று பார்த் இதை அடையாளப்படுத்துகிறார். ஆனால், சுவாரசியமான வகையில், ஜெரோமும் சில்வியும் இந்தச் சமன்பாட்டின் இரு பக்கங்களையும் தழுவிக் கொள்கிறார்கள்: அவர்கள் உளவியல்சமூகவியலாளர்களாக தங்கள் சந்தை ஆய்வுகளைக் கொண்டு விளம்பரத் தொன்மங்களைஉற்பத்திசெய்ய உதவுகிறார்கள், அதே சமயம், பணி நேரம் போக பிற பொழுதுகளில், “பிராண்டுகளில், விளம்பரப் பாடல்களில், தம் முன் வைக்கப்படும் காட்சிகளை நம்பி, கறிக்கடை மாட்டுக்கறியின் கொழுப்பை உண்டு, அதன் ஹேசல்நட் மணத்தையும் அதன் தாவர முடையையும் மிகச் சுவையாக உணர்ந்தஏனைய பிறரைப் போலவே அவர்களும் அதே தொன்மங்களை நுகர்கிறார்கள். ஏமாற மாட்டோம், என்பது போல் அவர்கள் பாவனை செய்தாலும், நம்மைப் போலவே அவர்களும் நுகர்வுக் கலாசார, சந்தைப் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும் வெளிப்படையான கரங்களாகிய எங்கும் நிறைந்த தொன்மங்களால் உந்திச் செல்லப்படுகிறார்கள். ஒரு விற்பனைப் பொருளின் புறவயத் தன்மைகளை அதன் தொன்மங்களில் இருந்து பிரித்துக் காண இயலும் என்ற மாபெரும் பிரமையில்தான் நாம் அனைவருமேசிறைப்பட்டிருக்கிறோம்”. (மற்ற அத்தனை அல்வாக்களை விடவும் திருநெல்வேலி அல்வா உயர்ந்தது, அல்வாக்களின் பிரமிட்டின் உச்சமான இருட்டுக்கடை அல்வா, அதன் முன் வரிசையில் நிற்கும் ஒவ்வொரு முக்கியமான நிமிடத்தின் பெறுமானமும் கொண்டது). தம்மைக் காட்டிக்கொள்ளாமல் அறையின் வெப்ப நிலையைச் சீரமைக்கும் கருவிகள், கண்ணுக்குத் தெரியாத மின்கம்பிகள் போன்றவற்றுக்கான தீவிர வேட்கைகளில் ஜெரோமும் சில்வியும் உற்பத்தியின் வியர்வையும் ரத்தமும் கலந்த பருண்ம நுண்விபரங்கள் அகற்றப்பட்ட ஒரு நுகர்வுலகைக் கற்பனை செய்கிறார்கள். தொன்மம் செலுத்தப்பட்ட நுகர்பொருள் மந்திரத்தால் வந்ததென்று நினைத்துக்கொள்ளப்படுகிறது.இது அதன் வசீகரத்துக்கு வலுச்சேர்க்கவும் செய்கிறது. ‘திங்க்ஸ்சிறந்த முறையில் பார்த் சொல்வதை உள்வாங்கிக் கொண்ட நூல், இது ஒரு நாவலாக, தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில், ‘குறியீடாதல்என்பது என்னவென்பதை ஆய்கிறது, அதுவே இந்த நாவலை நுகர்வுச் சமூகத்தின் எளிய கோட்பாட்டுக் கண்டனமாய் இருப்பதிலிருந்து காப்பாற்றி, உயர்த்துகிறது.

ஜெரோமும் சில்வியும், தங்களை இலக்காய்க் கொண்ட கோடானுகோடி சங்கதிகளின் வசீகரத்துக்கு பிற நுகர்வோர்களைப் போல் தாங்களும் பலியாகிறார்கள் என்றால்  எ மேன் அஸ்லீப்பின் நாயகன் இந்த இடையறாத அழைப்பால் அசூயைப்படுகிறான். ஒரு வகையில் குறியீட்டுத்தன்மைக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக தன் அசிரத்தைக் கூட்டில் ஒடுங்கிக் கொள்ள முயற்சி செய்கிறான். தொன்மம் எனும் மீம்அழிக்க முடியாதது என்றாலும் அதற்கு எதிர்வினையாற்றும் புலன்களை மழுங்கச் செய்யும் தடுப்பு உத்தி இது, “கவனிக்காமல் காணவும், காது கொடுக்காமல் கேட்கவும்இது அவனை அனுமதிக்கிறது. எந்த ஒரு பயன்பாடும் பயன்பாடு என்று அடையாளம் காணப்படும் கணமே அந்தப் பயன்பாட்டின் குறியீடாக மாற்றப்படும் சூதுச் சுழலிலிருந்து தப்பும் முயற்சியில் அவன் ஒரு நேர்ப்பொருள்தன்மைக்குள் புகலிடம் பெற முயற்சிக்கிறான்.எனவேதான் மரமென்றால் மரம் மட்டுமாகவே இருக்க வேண்டுமென்ற உச்ச தரிசனமும், துல்லியமாய்க் கணக்கிடப்பட்ட புரோட்டீன்கள் மற்றும் குளூக்கோசைட்களின் கலவையாகியசத்துணவுஉட்கொள்தலும். ஆனால் குறியீட்டுத்தன்மை மற்றும் காரிய காரணத்தைத் தப்ப முடியாது என்பதை உணர்கிறான்: விருப்பு வெறுப்பற்ற ஒரு நிலையை– “மலைச் சரிவுகள் அவனதுசிரிப்புக்கு பதில் நகை புரியாத”, மரம்மகத்தானதாகஇல்லாத நிலையைஓரளவாவது அவன் அடைகிறான் என்றபோதும், தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலான இரவுத் தடுமாற்றங்களில் அவன் இன்னும் கூரையில் உள்ள பிளவுகளில், கண்களை மூடும்போது இமைகளுக்குள் திக்கு திசையற்று ஓடும் உருவமற்ற கிறுக்கல்களுக்கு, ‘பொருள்காண முயற்சிக்கிறான்.

தங்கள் ஆளுமையின் வழவழத்தன்மையை ஜெரோமும் சில்வியும் பொருட்களின் மாயப் பருண்மையைக் கொண்டு (பொருட்களை அவர்கள் உண்மையில் திடத்தன்மை கொண்டவை என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர்), கெட்டித்துக் கொள்கின்றனர் என்றால்எமேன் அஸ்லீப்ஆளுமையின் வழவழத்தன்மையை தன் உலகாய் உள்ள சராசரித்தனங்கள் தன்னைத் தீண்டாத வண்ணம் தற்காத்துக் கொள்வதன் மூலம் உலர்த்தி விடுகிறான். ஆண்ட்ரூ லீக் நகைச்சுவையாய்ச் சொன்னது போல்,  ஜெரோமும் சில்வியும் அளவுக்கு அதிகம்மேடம் எக்ஸ்பிரஸ்சும் தேவைப்பட்ட அளவுக்குக் குறைவாய்மிதாலஜிஸ்சும் படித்திருக்கிறார்கள், ‘தி மேன் அஸ்லீப்’, இவர்கள் செய்ததை மாற்றிச் செய்திருக்கிறான். இரு நாவல்களின் நாயகர்களுக்கும் காலம் மற்றும் வெளியைக் கையாள்வது சிக்கலாக இருப்பது போல் தெரிகிறது. ஜெரோமும் சில்வியும் தங்கள் ஆசைகளுக்கு அடங்காத குறுகிய வெளியில் துவங்கி, ஆசைகளால் நிறைக்க முடியாத அலுப்பூட்டும் வெளியில் வந்து நிற்கிறார்கள். ஜெரோம், சில்விக்கு மாறான உத்தியைதி மேன் அஸ்லீப்கையாள்கிறான்காலவெளியை நிராகரிக்கிறான், ஆனால் முடிவில் அவனும் அதே முட்டுச் சந்துக்கு வந்துதான் நிற்கிறான். காலம் கரைகிறது, வெளி அவர்களைப் பொருட்படுத்தாமல் சூழ்கிறது, காலம் மற்றும் வெளி கட்டாயப்படுத்தும் எல்லைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் முதலிலிருந்து துவங்கி, படைப்பூக்கத்துடன் அவற்றுக்கு எதிர்வினையாற்றியாக வேண்டும்.

(தொடரும்)

—————————————————————————–

Sources / Phagocitations/ Further Reading:

Things A Story of the Sixties with A Man Asleep, Georges Perec, Harvill, 1999
Review of Contemporary Fiction, Dalkey Archive, Spring 2009
Mythologies, Roland Barthes, Hill and Wang, 2013
Life A User’s Manual, Georges Perec, David R Godine 1987

                                                               

Series Navigationஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பாகம் II)

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.