











வில்லியம் பட்லர் யேட்ஸின் ‘கோபுரம்’
யேட்ஸைப் போல் காமமும் ரௌத்திரமும் நிரம்பிய ஒரு மூப்பு எய்துவது நாமெல்லோரும் விழையும் விடயம்தானே? நாடாக்கள் தளர்ந்து, அனைத்தும் அவிழ்க்கப்பட்டு, மெச்சும் நமது செறிவான, பழுத்த காமப் பார்வைக்கு முன் விருந்தாக படைக்கப்படும் ஓர் அந்திமக் காலத்தை யார்தான் விழைய மாட்டார்கள்? ‘கோபுரம்’ ஒரு கடைக்கால கவிதைத் தொகுப்பல்ல. இங்குள்ள தலைசிறந்த படைப்புகளைக் காட்டிலும் அவற்றை நான் இன்னமும் அதிகமாகவே வியக்கிறேன். ஆனால் இப்புத்தகமே என்னை மிக மோசமாகவும் மிகச் சிறந்த வழியிலும் பாதித்தது. கவிதை வடிவம் நெடுநாட்களாகவே எனக்கு மலையுச்சியின் மீதிருக்கும் முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டையைப் போல் இருந்திருக்கிறது. மேலும் என் கோட்டைக்கு நான்கு கோபுரங்கள்: யேட்ஸ், வாலெரி, ரீல்க மற்றும் வாலஸ் ஸ்டீவன்ஸ். அவர்கள் காலமே ஐரோப்பிய கலாசாரத்தின் தலைசிறந்த உணர்ச்சிப் பாடல்தன்மை வாய்ந்த கவிதைகளைப் படைத்தது. ஒருகால் இவை இறுதி மூச்சிற்கு முன் வெளிப்படும் வெடிப்பாகவும் இருக்கலாம். கவிதை ஓர் அழைப்பென்பதையும், விழிப்புநிலையை பரிபூர்ணமாகக் கோரும் ஒரு விளிப்பென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். யேட்ஸ் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க விரும்பினார். ஆனால், நடைமுறையில் நிகழ்ந்ததைப் போல், தரிசிப்பதற்கு ஏதுமில்லை என்றால், அவர் அதைப் புனைவார். தான் மட்டுமல்லாது, அனைவருமே தரிசிப்பதற்காக. ஸ்லைகோவில் அவர் பிசாண்டியத்தைக் கட்டியெழுப்புகிறார் (Byzantium). ஒரு சூட்கேஸைத் திறப்பதைப்போல் ஒவ்வொரு வார்த்தையையும் திறந்து, துழாவி, பின் அதிலிருப்பதை கவனமாக மீண்டும் மூட்டை கட்டி, சந்தடி சாக்கில் காலுறைகளுடன் சில உதிரிகளையும் இருத்தி, யேட்ஸ் தன் மொழிக்கு ஒரு பிரத்தியேகமான புதுச்செறிவை அளிக்கிறார். அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பை ஒரே மடக்கில், முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரையிலும் படித்து முடித்தேன். பின் சிறு அளவுகளில் கொரித்தேன், அதற்குப் பின் ஆழ்ந்த சிந்தனையில் ருசித்துச் சுவைத்தேன். ‘கோபுரம்’ மரமாகி என்னுள் வேரூன்றியது. வெட்கக்கேடான வகையில்தான் யேட்ஸ் மூப்பெய்தினார். மூப்பெய்துவதற்கு இதைக் காட்டிலும் சிறந்த வழிகள் கிடையாது.
வாலஸ் ஸ்டீவன்ஸின் ‘ஹார்மோனியம்’:
மேதமையும், பிரத்தியேகமும் – ஒரு பத்தியில், ஒரு செய்யுளில், ஏன் ஒரு படிமத்தில்கூட- செவிட்டில் விழும் ஓர் அறையைப் போல் நச்சென்று, கிட்டத்தட்ட ஒன்றாகவே, கண்கூடாகப் புலப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். கறியை முழுதும் உண்ணத் தேவையில்லை, அது ஒரு நாளில் மாடாக இருந்ததென்பதை உணருவதற்காக. அதனால்தான் ஃபோர்ட் மாடக்ஸ் ஃபோர்டின் “தொண்ணூற்றொன்பதாவது பக்கம்” என்ற தேர்வு எனக்கு எப்போதுமே உவப்பாக இருந்திருக்கிறது (விண்டாம் லூவிசும் இம்முறையை சொந்தம் கொண்டாடினார் என்று கூறப்படுகிறது). புத்தகத்தைத் திறந்து அதன் தொண்ணூற்றொன்பதாவது பக்கத்திற்குச் செல்லுங்கள். அதைப் படித்தவுடன் முழுப் புத்தகத்தின் தரம் உங்களுக்கு புலப்படும். (‘ஹார்மோனியம்” புத்தகத்தை இம்முறைக்கு உட்படுத்தினீர்களானால் ‘Anecdote of the Prince of Peacocks’ -சில் கவிஞனின் தனித்தன்மை பொதிந்திருந்தாலும் மேதமை வெளிப்படாத (என் பார்வையில்) வரிகளில் தொடங்குவீர்கள். ஆனால் எதிர்ப்பக்கத்தில் ‘A High-Toned Old Christian Woman’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் கவிதையை எதிர்கொள்வீர்கள். தனித்தன்மை சிறிதளவு இழக்கப்பட்டிருந்தாலும் (ஏனெனில் “Such tink and tank and tunk-a-tunk-tunk.” போன்ற வரிகள் ஈடித் சிட்வெல்லாலும் எழுதப்பட்டிருக்கலாம்) உங்கள் சந்தேகங்கள் அனைத்துமே இப்போது தீர்க்கப்பட்டிருக்கும். ஸ்டீவென்ஸைப் பொருத்தமட்டில் முறைப்படி முதல் பக்ககத்திலிருந்தே தொடங்கி இருந்தாலும் அதிக நேரம் மேதமையைப் பற்றிய சந்தேகத்தில் ஆழ்த்தப்படமாட்டீர்கள். சிறிது நேரத்திற்குள்ளேயே மொழிக்கு ஏதோ அற்புதமான ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள். ஐந்தாவது பக்கத்திற்குள் “golden quirks and Paphian caricatures” -சைப் பற்றி படித்துக் கொண்டிருப்பீர்கள். பதினாறாவது பக்கத்தில் அவரது முதல் பெரும்படைப்பான “The Snow Man” -ஐ நேருக்கு நேர் சந்திப்பீர்கள். m, n எழுத்துக்களின் நளினத்தை வெளிப்படுத்தி அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தும் “One must have a mind of winter” என்ற வரியுடன் அமைதியாகத் தொடங்கி
“For the listener, who listens in the snow,
And, nothing himself, beholds
Nothing that is not there and the nothing that is.”
என்று அதற்கே உரிய வழியில் முடிகிறது. கேட்டு, மூச்சுவிட மறந்து, அதைக் கண்டு வியந்து நிற்கிறோம். பின்னர் அதே முதல் படைப்பில் “Sunday Morning” என்ற கவிதையை எதிர்கொள்வோம். கவிதையைப் பற்றிய கவிதைகளின் உச்சம் இதுவே என்று துணிந்து கூறலாமா?
ஹென்ரி ஜேம்ஸின் ‘பொற்கிண்ணம்’
கடைக்காலமும் அதன் சாத்தியங்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. ஜேம்ஸ் கடைக்காலத்தில் பிறந்து தன் வாழ்வு முழுவதும் ஒரு காட்டில் படரும் கொடியைப் போல் அதையும் தாண்டிய கட்டங்களுக்கு படர்ந்தபடியே இருந்தார். மூப்படையும் காலத்தில் அவர் காலத்தையே கடந்துவிட்டமையால் பிறந்த நாட்களை கணக்கில் வைத்துக் கொள்ளும் தேவை அவருக்கு இருந்திருக்கவில்லை. ‘பொற்கிண்ணத்தில்’ அவர் தன் அவாக்களை தோய்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார் என்று விமரிசகர்கள் கூறினார்கள். அதாவது ஜேம்ஸ் தன்னையே பகடி செய்தாராம். விமரிசகக் கூட்டத்திற்கு அறிவு கம்மி. அதில் ஜேம்ஸ் முற்றிலும் ஜேம்ஸாகவே இருக்கிறார். அவரது அரை டஜன் நாவல்களையோ ( ‘The Portrait of the Lady’-யில் தொடங்கி ‘The Spoils of Poynton’ வழியே ‘The Wings of the Dove’ மற்றும் ‘The Ambassadors’ வரையில்) அவரது அரை டஜன் கதைகளையோ, ஏன், அவரது பயண இலக்கியத்தையும்கூட என்னால் இப்பட்டியலில் சேர்த்திருக்க முடியும். மாபெரும் ‘கிண்ணத்தை’ மட்டுமே இங்கே பேசுவது ஒரு வகையில் வக்கிரமானதும்கூட. ஆனால் நான் அவ்வாறு செய்ததற்கான காரணம், ஹென்ரி ஜேம்ஸைப் பொருத்தமட்டில் என்னை மிகவும் பாதித்த விடயங்கள் ஒரு குறிப்பிட்ட படைப்பில் மட்டுமே அடங்கவில்லை. அவரது நடையே – அந்த அதிசயிக்கும் வகையில் வளைந்து கொடுக்கும், சாதுர்யமான நகைச்சுவைமிக்க, புலனுணர்வைத் தூண்டும், கூருணர்வுமிக்க, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ரம்மியமான சுழல்நடை என்னை மிகவும் பாதித்தது. மேலும் ‘கிண்ண’த்தில்தான் அந்த நடை அதன் இறுதியான ஒளிர்ந்து பிரகாசிக்கும் நிலைக்கு உயர்ந்தது. மனதின் பிராந்தியத்தில் வாலெரியைப் போல ஜேம்ஸும் தராதரப்படுத்தும் கலையிலும், மேலும் மேலும் நுண்ணிய வேறுபாடுகளை கண்டடையும் கலையிலும் (இது தத்துவத்தின் பிரத்தியேக மாகாணம் என்று சிலர் கூறுகிறார்கள்), மிகவும் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு நுணுக்கவாதி. குடும்பத்தின் மரபுச்சின்னங்கள் பொதிக்கப்பட்ட கேடயம் என்று எனக்கு ஒன்றிருந்தால் அதில் நான் பதிக்க விரும்பும் சொற்றொடரை -கோஷத்தை – குறிக்கோள் வாசகத்தை- ஹென்ரி ஜேம்ஸே உருவாக்கியுள்ளார்: “எதுவுமே கவனத்திலிருந்து தப்பிவிடாத ஒருவனாக இருப்பதற்கு முயற்சி செய்.”
மரணத்தின் தருணத்தில் “ஆக, இறுதியில், இதுதானா அந்த சிறப்பிக்கும் விஷயம்,” என்று அவர் கூறியதாக பேசப்படுகிறது. ஆனால் உண்மையில், சந்தேகத்திற்கு இடமின்றி, அவர் கூறியது “ஆக, இறுதியில், இதுதானா அந்த இறப்பிக்கும் விஷயம்.”. நம்மாட்கள் எப்போதுமே மிகைப்படுத்துவார்கள்.
ஹென்ரி ஜேம்ஸின் குறிப்பேடுகள்
ஹென்ரி ஜேம்ஸின் பட்டறையே என் எழுத்தாளர் கல்வியின் மூன்றாவது முக்கியமான வகுப்பறை. ஃப்லாபெரின் கடிதங்களே முதல் பாடம், கெர்ட்ரூட் ஸ்டைனின் விரிவுரைகளும் கதைகளும் இரண்டாவதின் பாடத்திட்டம். ஜேம்ஸின் குறிப்பேடுகளே இக்கல்வியின் மூன்றாவது பாடமாக அமைந்தது. என்ன ஒரு பட்டறை! ரசவாதிகள் பொறாமைப்படும் அளவிற்கும் அங்கு உருமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. கிசுகிசு மற்றும் அளவளாவல்களைப் பற்றிய சில்லரைத் தகவல்களில் ஜேம்ஸிற்கு இருந்த பேரார்வம் எப்படி அவரை ஆட்கொண்ட அறத்தீயாக மாறியது என்றும், அவரது தார்மீக அக்கறைகள் எவ்வாறு அவரது எழுத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டன என்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. அவ்வெழுத்து அவ்வளவு நுணுக்கமாக, அவ்வளவு நுண்மையாக, அவ்வளவு ஆழ்ந்த சிந்தனை வாய்ந்ததாக இருந்ததனால் அதற்கு ஊற்றுக்கண்ணாயிருந்த விடயங்களையே அடியறுக்கும் குற்றச்சாட்டாகவும் மாறியது – ஏதோ வாட்டலின் மணமே பன்றியை இறைச்சியானதற்காக குற்றம் சாட்டுவதைப் போல்… ப்ரூஸ்டைப் போல் அவரது எழுத்தும் சூறையாடுவதாக இருந்தது. இந்தப் புத்தகத்தைப் பார்ப்பதென்பது ஆசானின் மண்டைக்குள்,அந்த கம்பீரமான குவிமாடத்திற்குள், இயக்கவிசை பற்சக்கரங்களைக் காண்பதற்காகப் பார்ப்பது போன்றது. என்ன, இந்தச் சக்கரங்கள் ‘சடக்’ அரவங்களை எழுப்புவதில்லை.
வில்லியம் ஃபாக்னரின் ‘சீற்றமும் ஓலமும்’
அமெரிக்க இலக்கியம் இரு துருவங்கள் கொண்டது என்று பெரும்பாலும் கூறப்படுகிறது: மனசாட்சி என்ற பேயால் ஆட்கொள்ளப்பட்டு மத ஆசாரங்களால் ஒடுக்கப்பட்ட ‘தீய’ நடத்தையை விவரிக்கும் நாவல் ஒரு துருவம். நதானியல் ஹாதார்ன் போன்ற பிரதிநிதிகளில் தொடங்கி ஹென்ரி ஜேம்ஸில் இது நிறைவு பெறுகிறது. இரண்டாவது துருவமோ காடுகளும் உரோமங்களுமான எல்லைப்புற ‘பரோக்’ அதீதங்களால் ஆனது. ஹெர்மன் மெல்விலால் (அவரது திமிங்கிலமும் இப்பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்) முனையப்பட்டு, வரலாற்றுப் பசியால் உந்தப்பட்ட படைப்புகளில் வாகை சூடி, ஃபாக்னரில் காணக் கிடைக்கும், இன்னமும் தலையெடுப்பதற்கு அதிக காலம் எடுக்கக்கூடிய தலைவிதிகளில் உச்சம் கொள்கிறது. நியாயமாகப் பார்த்தால் இங்கே ஒரு பிடி புத்தகத் தலைப்புகளுக்கு முன்னே அவரது பெயர் இருந்திருக்க வேண்டும்: ‘Light in August’, ‘As I Lay Dying’, ‘Hamlet’, இன்னும் பிற. “சீற்றமும் ஓலமும்” ஐரோப்பிய வகை நவீனங்களில் சற்று அதிகமாகவே ஈடுபடுவதால் சீர்மையான ஃபாக்னர் என்று அதை கருத முடியாது. எனினும், இந்த பாலத்தைப் போன்ற இணைப்புத் தன்மையே என்னை முதலில் அதன்பால் ஈர்த்தது. ஜாய்சின் உலகில் எழுதியதால் அவர் சரியாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மற்றொரு உலகிலும் எழுதினார்: பழம் (மற்றும் புதுப்) பாணியான ஒரு காவிய உலகில். அவரது படைப்புகளில் ஒரு வகையான வீச்சு இருக்கிறது: எக்கச்சக்கமான மனிதத்திரளுடன், சினிமாவைப் போல் முன்கூட்டியே நிர்மாணிக்கப்பட்டு, தேவாலயம் தேவாலயமாக குதிரை மீது செல்லும் பாதிரிமார்கள் மற்றும் கூடாரக்-கழி சீர்திருத்தவாதிகளைப் போல் (Circuit Riders , tent-pole reformers) அணியியல்பான அலங்காரப் பேச்சுடன் விரியும் படைப்புகள். ஃபாக்னரின் இலக்கிய வாழ்க்கை ஒரு இருண்மையான சிந்தனைக்கு அடிக்கோடிடுகிறது. ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட விஷயங்களுக்காக உங்களுக்கு நீங்களே முக்கியத்துவம் அளித்துக் கொள்வதென்பது இயலாது. ஃபாக்னர் தன்னை ஒரு பெரிய சிந்தனையாளராக கருதத் தொடங்கியபோது, ஒரு கலைஞனாக அவரது படைப்பின் தரம் பெரும்வீழ்ச்சி கண்டது.
காத்தெரீன் ஆன் போர்ட்டரின் ‘வெளிறிய குதிரை, வெளிறிய குதிரைப்பாகன்’
ஜேம்ஸ் “அழகான ஆசீர்வதிக்கப்பட்ட குறுநாவல்” என்று அழைத்தது அடிக்கடி மும்மையில் வருகிறது, ஒருகால் குத்துமதிப்பாக குறுநாவல், நாவலின் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கையே எடுத்துக் கொள்வது இதற்கான காரணமாக இருக்கலாம். புத்தக நீளத்தில் வருவதற்கு மூன்று குறுநாவல்கள் தேவைப்படுகின்றன. உதாரணத்திற்கு ஃப்லோபெரின் ‘மூன்று கதைகள்”, ஸ்டைனின் “மூன்று வாழ்க்கைகள்” மற்றும் போர்ட்டரின் “வெளிறிய குதிரை”. செகோவ், ஜேம்ஸ், ஜாய்ஸ், கான்ராட், ஃபாக்னர், ஏன் கொலெட்டுக்கும், இதர படைப்பாளிகளுக்கும்கூட நமக்குப் பிடித்தமான மும்மைகளை நாமே தயாரித்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு ஒலிக்கப்படும் இசையைக் காட்டிலும் நுணுக்கமான இசையை நாம் வேறெங்குமே கேட்க முடியாது. முதல் கதையிலிருந்து இறுதி கதை வரையிலும் அவரது கலை – பரந்த பிரெய்ரி புல்வெளியில் ஒளிரும் சாலையைப் போல் வெளிப்படையாகவும், ஆனால் அதே சமயத்தில் மென்மையான அலையாடல் நிரம்பிய ஒரு நடை- எப்போதுமே அவர் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அனைத்திற்கும் மேலாக அவரது கூர்மையான பார்வையே என் பார்வையை ஈர்த்தது. அவரது உணர்ச்சியின் அமைதியான எட்டும்கூட. ‘Noon Wine’ உலுக்கியதென்றால், ‘வெளிறிய குதிரை’ உங்களை வாரிச் சென்றது. மேலும் அதன் உணர்ச்சிகரமான இசை, காய்ச்சல் வரச் செய்து என்னை படுக்கையில் தள்ளியது. அதன் பாட்டிற்கு இணையான மறு பாட்டு நம் புனைவிலக்கியத்தில் எங்கிருக்கிறது? கான்ராட் ஐக்கென்னின் ‘Silent Snow, Secret Snow’ -விலா? இருக்கலாம், அல்லது ஜே.எஃப். பவர்சின் ‘Lions, Harts, Leaping Does” -சிலா? காத்திரமான பெண்மணி அவர். என் ஆரம்ப கால படைப்புகள் அவருக்குப் பிடித்திருந்தது என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். என் முதல் நாவலான ‘Omensetter’s Luck’ -கின் கையெழுத்துப் பிரதி என்னிடமிருந்து திருடப்பட்டது. அதே திருடன் காத்தெரீன் ஆனைப் பற்றிய எனது கட்டுரையையும் திருடி, அதில் கிஞ்சித்து மாற்றங்கள் மட்டுமே செய்து South West Quarterly review -வில் தன் பெயரில் (எட்வார்ட் க்ரீன்ஃபீல்ட் ஷ்வார்ட்ஸ்) பதிப்பித்துக் கொண்டான். நாதானியல் வெஸ்டைப் பற்றிய மற்றொருவரின் கட்டுரையையும் அவன் களவாண்டிருக்கிறான். இதில் கொடுமை என்னவென்றால், இன்னமும், வெஸ்டைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் இந்த இலக்கியக் களவாணிப் பயலின் பெயரும் ஞாபகத்திற்கு வருகிறது.
கெர்ட்ரூட் ஸ்டைனின் ‘மூன்று வாழ்வுகள்’
அறையே வாங்கினாலும் அதை வாங்கியதற்கான சூழ்நிலை பல சமயங்களில் நற்பயன் விளைவிப்பதாக இருக்கும். டால்ஸ்டாயையோ ப்ரூஸ்டையோ படித்துவிட்டு “சரிதான்’ என்று கூறிக் கொள்கிறேன். விளம்பரப்படுத்தியிருப்பது போலவே இருக்கும் மகோன்னதம், அல்ஹாம்பிரா அல்லது அமால்ஃபி கடற்கரையின் அழகைப் போல். செர்வான்டெஸ்சும் அவ்வாறே இருந்ததில் ஒரு ஆச்சரியமும் இல்லை. அதே கையோடு டாண்டேயும் பொகாட்ச்சோவையும் கொஞ்சம் உட்கொள்ளுங்களேன். (ஒரு முறை இளம் நங்கையொருத்தியுடன் சல்லாபம் செய்யும் நோக்கத்துடன் அவளுக்கு ‘டிகாமெரோனை’ பரிசாக அளித்தேன். ஆனால் அது இந்த தொகுப்பிற்கான வரையறைகளுக்குள் அடங்கவில்லை). பிரதிகள் இருக்கின்றன, காலங்களும் இருக்கினறன, சில சமயங்களில் இரண்டுமே சரியாக அமைந்து ஈஸ்டர் மாற்றங்களை அறிவிக்கும் மணிகளைப் போல் ஒருங்கே ஒலிக்கின்றன (வெல்ஸ் தேவாலயத்தின் ஆலயமணிகளின் அதிர்வுகளுடன் நானும் உடனதிர்ந்து அதிர்ச்சியுற்றதை நினைவு கூர்கிறேன்.) கல்லூரி முதல் வருடம் வரையிலும் நான் ஸ்டைனைப் படித்திருக்கவில்லை என்றாலும் தயாராக இருந்தேன். எந்த உரைநடையுமே என்னை இவ்வளவு பலமாகத் தாக்கியதில்லை. ‘மாம்பார்னாஸின் அம்மா வாத்து‘ என்றழைக்கப்பட்ட பெண்ணின் படைப்பா இது? புத்தகத்தின் மையக்கதையான ‘மெலங்க்தா’ – வைப் படித்துவிட்டு அவர் எழுதியதனைத்தையும் எப்படி தீவிரமாக கவனிக்காமல் இருக்கமுடியும்? அதைப் படிக்கையில் எனக்கேற்பட்ட கிளர்ச்சி கிட்டத்தட்ட காய்ச்சலையே வரவழைத்து விட்டது. அதிகாலை ஒரு மணிக்கு அதைப் படித்து முடித்தவுடன் (அதைப் படிப்பதற்கே நினைத்திராத நான், வசீகரத்தால் ஏமாற்றப்பட்டு அதனுள்ளிழுக்கப்பட்டேன்) மீண்டும் முதலிலிருந்து படிக்கத் தொடங்கினேன். விரைப்பு எனக்கு கடுமையான வயிற்றுவலியை ஏற்படுத்தியதால் அதை மறப்பதற்காக பாடி முனகிக் கொண்டிருந்தேன். கண்கள் சோர்ந்து தலையும் வலிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை தரிசன வெளிப்பாட்டு அனுபவம் இப்படித்தான் இருக்குமோ? வெர்ஜீனியா வுல்ஃபின் ஆர்லாண்டோவில் வரும் ‘மாபெரும் உறைவை’ப் பற்றிய விவரணை அளிக்கும் அதே கிளர்ச்சியையும், ஜான் ஹாக்ஸின் ‘எலுமிச்சை சுள்ளி’-யில் மார்கிரெட் சுருட்டப்பட்ட ஒரு ஈரச் செய்தித்தாள் கொண்டு அடிக்கப்படும்போது ஏற்படும் அதே கொடூரமான இறுக்கமும் எனக்கு இவரது உரைநடையைப் படிக்கும்போது ஏற்படுகிறது; ஆனால் அதற்கும் மேல் கண்டுபிடிப்பு, ஆச்சரியம், கோபம் (விழுமியங்களைப் பற்றி விமரிசகர்கள், சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னிடம் கூறிய பொய்களை நினைத்து) போன்ற உணர்வுகளையும் அது என்னுள் எழுப்பியது. ஆக, இறுதியில் பிணியுற்று வாந்தி எடுப்பதற்காக கழிவுத்தொட்டி மீது குனிந்திருந்தேன் என்றாலும் (அதிர்ஷ்டவசமாக நான் பயப்பட்டது போல் எதுவும் நிகழவில்லை) என் இலக்கியப்பணி மணந்து கொள்ளப்போகும் பெண்ணை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையும் அறிந்து கொண்டேன். அதன் விளைவாக என் மணிப்பர்ஸ் எப்போதுமே மூன்று பெரும் முகங்களை சுமந்திருக்கிறது: வெர்ஜீனியா உல்ஃப், கொலெட் மற்றும் கெர்ட்ரூட் ஸ்டைனின் முகங்கள். ஒரு சினிமா படைவீரன் திரைப்பட பதுங்கு குழியில் கேட்பது போல் நீங்களும் கேட்பீர்களானால் அவற்றை வெளியே எடுத்து உங்களுக்கும் காண்பிப்பேன்.
வில்லியம் காடிஸ்சின் ‘அடையாளம் காணல்கள்’
எழுத்துப் பணியிலும் சில சமயங்களில் அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது. ஏன், நானுமே பல முறை அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன். இதைக் காட்டிலும் JR-ரே மகத்தான புத்தகம் என்று நினைக்கிறேன். ஆனால் அது ஒரு பொருட்டே அல்ல. ‘அடையாளம் காணல்கள்’ ஒரு இடிமுழக்கமாக ஒலித்தது. ஐம்பதுகள் ஒரு மந்தமான தசாப்தம், ஆனால் இங்கு கேட்கக் கிடைப்பதே மெய்யான ஒலி. [இதை எழுதுகையில் நான் அமெரிக்க இலக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் வில்லியம் காடிஸ், மால்கம் லௌரி இருவரின் முக்கிய படைப்புகள் தோன்றிய எந்த தசாப்தமும் மந்தமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, ‘Under the Volcano’-வும் இவ்வைம்பதில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அதை இதன் கூரையாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதற்குள் செல்வதற்கு எனக்கு மூன்று முறை பிடித்தது; அதை வாசிப்பதில் எனக்கிருந்த தயக்கம் இப்போது காரணமற்றதாகத் தோன்றினாலும், எம்மாதிரியான புத்தகம் இது என்பதைப் பற்றிய சந்தேகம் எனக்கு அப்போதே இருந்திருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இதைவிட மனவேதனையை அளித்த புத்தகத்தை நான் படித்ததில்லை. மேலும், நவீன இலக்கியத்தில் இது அரிதான ஒன்றும்கூட: கால் காசு பெயராத ஒரு சல்லிப்பயலைப் பிரதான பாத்திரமாகக் கொண்ட மெய்ம்மையான ஒரு துன்பியல் படைப்பு. ஆனால் கான்ஸலே புனைவின் முற்றிலும் நிறைவாக சித்தரிக்கப்பட்ட பாத்திரம். போதும், அதிர்ச்சியூட்டும் எனது விடுபடலை ஈடுகட்டுவதற்கான இப்பரிகாரங்கள்). சரி, நான் சொல்லிக் கொண்டிருந்தது போல், அது ஒரு மந்தமான தசாப்தம்தான். ‘அடையாளம் காணல்கள்” அதில் மெய்யான சத்தத்தை எழுப்பியது. தொடர்ந்து வந்த அறுபதுகளே நாவல் கலையின் மகத்தான பத்து வருடங்கள். ஆனால் இதோ Sir Style-ற்கு துணை போவதற்கு ஏதாக ஸ்ரீமான் சிடுசிடு வருகிறார். இதோ, நடப்பு விவகாரங்களை கண்டு என்னைக் காட்டிலும் கோபமடையும் மனிதர் இருக்கிறார் பாருங்கள். அனைத்தையுமே ஊடுருவிப் பார்ப்பதே அவரது பணி – உடல்கள், மனங்கள், கனவுகள், இலட்சியங்கள் சகலத்தையும் ஊடுருவிக் கணிப்பது – இவரோடு ஒப்பிடுகையில் சூப்பர்மேன்கூட மிஸ்டர் மகூவின் தரத்திற்கு சிறுத்து விடுகிறார். நான் போற்றும் மற்றொரு இலட்சிய புருஷரான (என்ன செய்வது, எல்லோரையும் இங்கு இருத்துவதென்பது இயலாத காரியம்) வியன்னாவின் கலாச்சார விமரிசகரான கார்ல் க்ராஸ்சை உடனடியாக எனக்கு நினைவுபடுத்தக்கூடிய நபரும் இவரே. ஏனெனில் இவரும் மனிதகுலத்தின் மலத்தை அள்ளிக் குவித்தார். அது மட்டுமல்லாது அதை எங்கு எறிந்து, மின்விசிறியை எந்தப் பக்கம் திருப்பிவைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. காலத்தின் விளையாட்டுச் சுழற்சியில் JR புத்தகத்திற்கு தேசிய புத்தக விருது வழங்கிய நடுவர் குழுவில் இடம் பெறும் நல்லூழ் எனக்குக் கிட்டியது. அதுவரையில் ஒரு பிரத்தியேக சிறுபான்மைக் குழுவிற்கு மட்டுமே ஆதர்சமாக இருந்த ஒரு எழுத்தாளருக்கு இந்த விருது சிறிது பெயர்-அடையாளத்தை அளித்தது. காலப்போக்கில் நான் வில்லியம் காடிஸ்சைச் சந்தித்து அவரது நண்பராகவும் ஆனேன். ஆக, என் மூன்றாவது நியதியும் பூர்த்தியானது: இந்தத் துறையில் நாம் மதிக்கும் நபர்களின் மதிப்பை பெற்றிருப்பதே மெய்யான வெகுமதி. அந்த வெகுமதியே போதுமானதும்கூட.
ஜான் ஹாக்ஸின் ‘எலுமிச்சை சுள்ளி’
பல வழிகளில் இந்த நாவல் என் அகங்காரத்தைப் பணியச் செய்தது. Accent இதழிற்காக மூலவரைப்படிகளை படித்துக் கொண்டிருந்தபோது ‘லண்டன் அடுக்ககத்தில் ஒரு குதிரை’ என்ற படைப்பு உரைநடையால் சோர்வுற்றிருந்த என் கண்முன் வந்தது. தூக்க கலக்கத்திலிருந்தேன். மேலும் பாசாங்கா. அய்யோ இவையெல்லாம் முடிவுறும் விடிவுகாலம் எப்போது? என் நிராகரிப்பை பணிவோடு நான் எப்படி எழுதவேண்டும்? ஏதொவொன்று, என்னவென்று இப்போது சரியாக நினைவில் இல்லை, ஆனால் பத்து பக்கங்களிற்கு பிறகு ஏதோவொன்று என்னை உசுப்பியது. நான் ஏதோ தூக்கத்தில் நாற்காலியிலிருந்து குப்புற விழுந்து எழுந்து கொண்டது போல். ஒருகால் ஒரு படிமத்தின் திகைப்பூட்டலோ அல்லது ஒரு வரியின் கரகரப்பாகவோ இருக்கலாம். மீண்டும் முதலிலிருந்து தொடங்கினேன். வியக்க வைக்கும் உரைநடையாலான பத்திகளின் தரத்தை அடையாளம் காணாத காரணத்தால் எதிர்வினையாற்றாமலே என் கண்கள் அவற்றின் மீது நழுவிச் சென்றிருக்கின்றன என்ற உண்மையை விரைவிலேயே தெரிந்து கொண்டேன். அதுவே என் முதல் அவமானத் தலைகுனிவு. அதன்பின், எவருமே அறிந்திராத “நற்செய்தியை” கொண்டுவருவது போல் பிரதியை என் சக பதிப்பாசிரியர்களிடம் எடுத்துச் சென்றேன். ஆனால் ஜான் ஹாக்ஸின் படைப்புகளை நன்றாக அறிந்திருந்தது மட்டுமல்லாது அவர்கள் அதை வானளவு புகழ வேறு செய்தார்கள். ‘The Cannibal’ அல்லது ‘The Goose on the Grave’ கூடவா படித்ததில்லை? எங்கு வசித்துக் கொண்டிருந்தாய்? வடிகட்டின முட்டாள்! (ஆனால் நான் நிராகரிப்பை எழுதியிருந்தால் என் அவமானம் பல மடங்கு மோசமாக இருந்திருக்கும்).
அந்தத் தலைகுனிவை அழித்து, அவரை உடனடியாக இனம் கண்டுகொள்ளவில்லை என்று பொதுவில் ஒப்புக்கொள்வதற்கு எனக்கு பல வருடங்கள் பிடித்தது. உண்மையிலேயே நான் வடிகட்டின முட்டாள்தான். ‘எலுமிச்சை சுள்ளி’ ஒரு மூர்க்கமான, அழகிய புத்தகம். மேலும் வாக்கியத்தை செதுக்கிப் பொறிப்பதில் இப்போது எழுதுபவர் எவருமே அவரை எட்டிப்பிடிக்கக்கூட முடியாது.
ரைனர் மரியா ரீல்கவின் ‘மேல்ட லாரிட்ஸ் ப்ரீகவின் குறிப்பேடுகள்’
என்னை மின்னல் போல் தாக்கியதால் நான் பிளவுற்று நிரந்தரமான தழும்புகளோடு, சோர்வுற்று அலைக்கழிக்கப்பட்டிருந்தாலும், வினோதமான அழகுடன் என் தோற்றத்தை விட்டுச் சென்ற புத்தகங்கள் இருந்திருக்கினறன. அவற்றின் நிலக்காட்சியையும், பருவங்களையும் பொறுத்து, எதிர்த்து, அனுபவித்துக் கொண்டு நீண்ட காலம் நான் தங்குவதற்கு ஏதான நாடுகளை, அவற்றின் பிரஜைகள், மாடுகள் மற்றும் வானிலையோடு, முழுதாய்ப் படைக்கும் புத்தகங்களும் இருந்திருக்கினறன; ஆனால் அவற்றைவிட ஆழமாகவும் நிலைக்கும் பேரார்வத்துடனும் ஒன்றிரண்டு புத்தகங்களையே நான் நேசிக்க நேர்ந்திருக்கிறது. நான் அறிந்திருந்த என் மிக அன்னியோன்யமான ‘என்னுடன்’ அவை பேசுவதால் மட்டுமல்ல. மானுடத்தின் உச்சம் என்று நான் கருதுவதை தம்முள் உள்ளடக்கி உருக்கொடுப்பதாலேயே பிளேக்கின் புலியைப் போல் சந்தத்துடன் பிணைந்த நளினத்துடன் அசைந்து வீர்யமிக்க விழைவை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் ஆனதால்கூட. பச்சாதாபங்களற்ற ஒரு மூர்க்கமான விழிப்புணர்வு, ஆனால் நுரைப்பஞ்சைப் போல் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை; சுதந்திரமான, உருக்குலையாத, வெட்கப்படாத உணர்ச்சிகள்; அனைத்து விளைவுகளையும் பரிசீலித்து அவற்றில் எதைக் கண்டும் கண்சிமிட்டாத சிந்தனை; அந்த பிரபலமான ஊசிமுனைமீது ஆடிக்கொண்டிருக்கும் அந்த தேவதைகளின் தலைகள் மீதே ஆடும் ஆற்றல் கொண்ட ஒரு கற்பனை வளமும்கூட. இக்கடினமான, உயர்ந்த குறிக்கோள்களைப் பூர்த்தி செய்யும் வகையிலிருந்த பத்திகளால் ‘குறிப்பேடுகள்’ நிரம்பியிருந்தது. நான் விரும்பிய அனைத்துப் புத்தகங்களிலும் (என்னால் இங்கு தொகுக்க முடிந்ததைக் காட்டிலும் இன்னும் பல, பல புத்தகங்கள் இருக்கின்றன) – மின்சாரம் பாய்ச்சும் Piers Plowman-னின் மோனைகளில் (“Cold care and cumbrance has come to us all”) தொடங்கி டெரெக் வால்காட் எழுதிய ‘Omeros’-சின் ஆழிசூழ் பாடல்கள் வரை- நான் உக்கிரமாக ஆதங்கப்பட்டது இந்தப் புத்தகத்தைப் பற்றிதான். இந்த அந்தரங்கமான உரைநடைக் கவிதையை, கவனித்ததை வாசித்து, வாசித்ததை கவனித்து, கவனிப்பு- வாசித்தல் இரண்டையுமே ஆழ்ந்து தியானிக்கும் இந்தப் புத்தகத்தை நான் எழுதியிருக்கக் கூடாதா!
ரைனர் மரியா ரீல்கவின் ‘டூயினோ இறங்கற்பாக்கள்’
ரீல்க போதைக்கு நான் அடிமை. பல நாட்களுக்கு அதை அனுபவிக்காமல் என்னால் இருக்க முடியாது. இந்த பந்தத்தை தர்க்கரீதியாக விளக்க முடியாது. அப்படிச் செய்ய வேண்டிய நிர்பந்தமும் இப்போது எனக்கில்லை. நான் ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக படிக்கும் வாசகனல்ல. ஆசிரியர் பொதுவில் பேசியதன் பேரில் அவரைப் பின்தொடர்ந்து அவருடைய அந்தரங்கத்திற்குள் நுழைய அரிதாகவே முற்பட்டிருக்கிறேன்; ஆனால் ரீல்க விஷயத்தில் அப்படிச் செய்தேன்: அவருடையதோ அல்லது அவரைப் பற்றியோ, எனக்குக் கிட்டிய ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்து, அவற்றைப் படிக்கவும் செய்தேன். இந்த நிணமூட்டையில் குவிக்கப்பட்டது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது கடினம், அன்னிய மொழியின் பிரதிகூலங்கள் (உண்மையில் நான் ஒரு ‘ஒற்றை மொழிக்காரன்’ தான்) இவற்றையெல்லாம் மீறி அவர் மட்டுமே நான் மும்முரமாக மொழிபெயர்க்க முற்பட்ட எழுத்தாளரும்கூட. இன்னம் சொல்வதானால், ரீல்க சிறு வயதில் விளையாடிய பொம்மை கார் ஏலத்துக்கு வந்தால், அதையும்கூட நான் வாங்கிவிடுவேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் கதறினால் தரவுப் பணிநிலைகளிலிருக்கும் எந்த தேவதூதருக்கு அது கேட்கும்?, என்று ‘இரங்கற்பாக்கள்’ உரக்கக் கேட்கின்றன. ஆனால் முன்னொரு காலத்தில் நான் கதறியது, இப்போதுதான், இக்கவிதைகளால், கேட்கப்படுகிறது என்று எனக்குத் தோன்றியது. என்னுடைய மிக உள்ளார்ந்த சிந்தைனைகளை எனக்கு அளித்தது மட்டுமல்லாது அவற்றை வெளிப்படுத்த நான் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத சொல்லாடல்களையும் அவை எனக்கு வழங்கின. மேலும், இவற்றைச் சிந்தித்து எழுதிய கவி, அவருடைய குறைகளனைத்தையும் பொருட்படுத்தாது, அவர் படைப்பிற்கு தகுதியுடையவராக இருப்பதற்கு முற்பட்டார். அம்முயற்சியே அவரை, என் பார்வையில், கற்பனை நவிற்சியாளர்களிலேயே மிக நவிற்சிமிக்கவராக ஆக்கியது. இந்தக் கவிஞருக்கான எனது பேரார்வம் மிக அந்தரங்கமான ஒன்று என்றே நினைத்திருந்தேன். ஆயினும், அவரது படைப்புகளை முப்பது வருடங்களாக பயிற்றுவித்து, அவற்றைப் பற்றி ஒரு புத்தகத்தைக்கூட எழுதியிருக்கிறேன். பொதுவில் இவ்வாறு இயங்கினேன் என்றாலும் என் வாழ்வில் அவரது இருப்பை மேஜை டிராயரில் நான் இருத்தியிருக்கும் ஒன்றாகவே நடத்தியிருக்கிறேன். விசித்திரம்தான். இக்கவிதைகளுக்கு ஒரு அபாரமான படைப்பு வரலாறும் இருக்கிறது. அவற்றில் பல, நம் வானிலை-ஏடுகளில் பதிவாகியிருக்கும் மிக முன்மாதிரியான படைப்பூக்க புயலொன்றின் விளைவுகளாகும்.
ரைனர் மரியா ரீல்கவின் ‘ஆர்ஃபியசிற்கான ஸானெட்டுகள்’
உலகம் அதுவரையில் அறிந்திராத நிகரில்லா படைப்பூக்க வெடிப்பின் விளைவால், எலிஜிக்களை (இரங்கற்பாக்களை) நிறைவு செய்யும் பகுதிகள் அவருக்கு அளிக்கப்பட்ட அதே சமயத்தில் உருவான இக்கவிதைகள், என் மகள்களின் வார்த்தைகளில் சொல்வதானால், “உண்மையிலேயே செமையா இருக்கும்”. கலைப்படைப்புகளே நான் வழிபடும் தெய்வங்கள் என்பது இப்போது ( என்னைக் கூச்சப்படுத்தும் வகையில்) தெள்ளத் தெளிவாகியிருக்கும். இவற்றுள் சில உச்சத்திலும் கூட விக்கிரகங்கள் மட்டுமே. தங்கத்தால் செய்யப்பட்டு, செறிவாகவும் அதிசயிக்கும் வகையிலும் இருந்தாலும் அவை வெறும் விக்கிரகங்களே. வேறு சிலவோ இரண்டாம் தர புனிதர்களையும், பூதங்களையும் (தீசலாகவே தொனித்தாலும் இவற்றின் நோக்கங்கள் பெரும்பாலும் விளையாட்டுத்தனமானவை) ஒத்தவை. மற்றும் சில உண்மையான சிலுவையின் கட்டைத் துண்டங்களைப் போலவோ, ஆகமப் பிரதிகளைப் போலவோ மிகவும் புனிதமானவை. கையளவு படைப்புகளே தலைசுற்றிக் கிறுகிறுக்க வைக்கும் தரிசன வெளிப்பாடுகள். ஆர்ஃபியஸ்சோ ஒரு பாடும் கடவுள். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அதன் தலையானது மெட்டை தொடர்ந்தபடியே இருக்கும். அதன் உயிர் துறக்கும் பல வழிகளோடு மூழ்குவதும் சேர்த்தி.
அவற்றுள் ஒன்று தன் நெஞ்சோடு என்னை அணைத்துக்கொண்டாலும்கூட (‘முதல் எலிஜி இப்படித்தானே மொழிகிறது?) அவற்றின் முழுமையான இருப்பின் பிடியில் நான் மங்கி மறைவேன். முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மானுட விழிப்புணர்விற்கு, எலும்பும் தோலுமாய், எடைகூடுதலான, பக்குவப்படாத, எரிந்து-சோர்வுற்ற நம் அகங்களையும் உடல்களையும் காட்டிலும், சுருதிகூட்டிச் சிறப்பாக உருக்கொடுப்பதாலேயே பெரும்பாலும் கலைப்படைப்புகள் நம்மைக் காட்டிலும் மெய்யாக இருக்கின்றன. ரீல்கவின் கோட்பாடுகளில் ஒன்றான இதை அவர் “The Torso of An Archaic Apollo’ என்ற கவிதையில் நேரடியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். ரீல்கவின் கவிதைகள் மீமானுடத்தன்மை கொண்ட ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது என்று எனக்கு பல சமயங்களில் தோன்றியதுண்டு.
- 1

There rose a tree. O pure uprising!
O Orpheus sings! O tall tree in the ear!
And hushed all things. Yet even in the silence
a new beginning, beckoning, new bent appeared.
Creatures of silence thronged from the clear
released trees, out of their lairs and nests
and the quiet was not the consequence
of any cunning, any fear,
But was because of listening. Growl, shriek, roar,
shrank to the size of their hearts. And where there’d been
ramshackles to shelter such sounds before –
just dens designed from their darkest desire
with doorways whose doorposts trembled –
you built a temple in the precincts of their hearing.
ரைனர் மரியா ரீல்கவின் கடிதங்கள்
சில கடிதங்களில் அவற்றின் ஆசிரியர்களே வெளிப்படையாகவும் நேரடியாகவும் தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள் என்று நாம் கூறுவதுண்டு – டி.எச்.லாரன்ஸும் லார்ட் பைரனும் அவர்களின் சுவையான கடிதப் போக்குவரத்தில் செய்வதைப் போல்; சில சமயங்களில் தற்செயலாக, பாஸ்காலின் பந்தயத்தைப் போல் கபடமான அவரது அடிவருடித்தனமான முகஸ்துதி கடிதங்களில் ப்ரூஸ்ட் வெளிப்படுவதுபோல்; அல்லது திருட்டுத்தனமாக, கால் நுனியூன்றி ஹென்ரி ஜேம்ஸ் அடிக்கடி செய்வது போல். ரீல்கவின் கடிதங்களில் மறைக்க அல்லது வெளிக்காட்ட முற்படாது, பிம்பத்தை படைக்க முயற்சிக்கும் ஒருவரையே நாம் காண்கிறோம் என்று நான் நினக்கிறேன். கவிஞராக தன் படைப்பில் முன்மாதிரியாக முன்நிறுத்தும் உணர்ச்சிகள், பாங்கு, தேர்ச்சி போன்றவை ரீல்க என்ற மனிதருக்கும் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். இறுதியில் பாசாங்காக தொடங்கப்பட்ட ஒன்று உண்மையாக மாறுவதை நம்மால் பார்க்க முடிகிறது; மனிதரும் கவிஞரும் ஒருங்கிணைகிறார்கள். ஒரு விசித்திரமான சோதனை முயற்சியாக நாவலொன்றை எழுதியிருந்தாலும் ரீல்கவை நாம் பிரதானமாக ஒரு கவிஞர் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்; ஆனால் அவரது உரைநடை என்பது ஒன்றிரண்டு பிரபலமான படைப்புகள் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கில் அவர் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவரது மிகச் சிறந்த நட்புகள், மிகச் சிறந்த சிந்தனைகள், மிகச் சிறந்த காதல்கள் இவை அனைத்துமே இக்கடிதங்கள் மூலமே அவருக்குக் கிட்டின. நேரில் வணக்கம் என்று கூறுகையிலேயே அனேகமாக கையசைத்து விடைபெற்றுக் கொண்டிருக்கும் ரீல்க இக்கடிதங்களில் முழுமையாக ‘இருக்கிறார்’. அவர் கவிதைகளைப் போலவே கடிதங்களையும் தன் கவனமான அலங்காரக் கையெழுத்தில் எழுதி பெறுநர்களுக்கு அனுப்பி வைத்தார். ரீல்கவை படிக்கையில், அதிலிருக்கும் மையைக்கூட அவரேதான் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
பிற்சேர்க்கை
இதைக் காட்டிலும் நீளமான பட்டியலைத்தான் முதலில் தயார் செய்திருந்தேன். ஆனால் முன்னர் குறிப்பிட்டிருந்த கண்காட்சிக்காக அதை வெட்டிச் சுருக்கினேன். தேர்வுகள் செய்து அவற்றிற்கான எனது குறிப்புகளை ஒழுங்கீனமாக தொகுத்துக் கொண்ட பின்னும், அதில் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டிய ஒரேயொரு புத்தகம் மட்டும் விடுபட்டிருப்பதை நான் உணர்ந்தேன்: ஃப்ராய்டின் ‘கனவுகளின் பொருள்விளக்கம்’, அவரது படைப்புகளிலேயே என்னை மதம்மாற்றி இருபது வருடங்களுக்கு மேலாக தன்னிடம் தக்கவைத்துக் கொண்ட படைப்பு. இந்த தலை சிறந்த படைப்பை ஏன்… என்ன சொல்ல. உண்மையிலேயே மறந்து விட்டேன் அவ்வளவுதான். “Nothing that is not here and the Nothing that is” என்றவற்றின் கொள்ளிடமாக அதுவும் இங்கு இருந்துவிட்டுப் போகட்டுமே.
* * *
(மொழி பெயர்ப்பாளர் குறிப்பு:)
இவ்வாறாக காஸின் ‘ஐம்பது தூண்கள்’ நிறைவடைகிறது. அடுத்தடுத்து கிறங்கச் செய்வதாகவும் (இவ்வளவு அழகான உரைநடையை வாசிப்பது என்பது என்னவொரு அருட்பிரசாதம்!), களைக்கக் செய்வதாகவும் இருந்த இந்த மொழியாக்கம் (என் போதாமைகள், காஸின் மறைகுறிப்பளிக்கும் எழுத்து முறை, மற்றும் வெவ்வேறு விஷயங்களை தொட்டுத் தொடர்ந்து சிந்திக்கும் புலனனுபவங்களுக்கு இடமளிக்கும் வகையில் ஆங்கில மொழிக்கே உரிய மாபெரும் நெகிழ்வியல்பு), எனக்கு மிகவும் கடினமான அனுபவமாக அமைந்தது. எனினும், நன்றோ அன்றோ, செய்தது செய்தாயிற்று- உங்களைப் போன்றவர்களின் வாசகப் பார்வையின் ஆசி வேண்டி இப்போது இது காத்திருக்கிறது- உங்கள் விழிகள் குலையுருவம் கொண்ட இந்த என் அளிப்பை ஒரு வாயிற்படியாய்க் கொண்டு முதல்நூலினுள் புக வேண்டும்- அங்கு காஸ் ஒரு பூசாரியாய் இருக்கிறார், மேற்கூறிய படைப்புகள் விக்கிரகங்களாகவும் பரிவார தேவதைகளாகவும் பூதங்களாகவும் இருப்பதோடு, இந்த மகத்தான இலக்கியக் கட்டமைப்பின் தெய்வங்களும் இருக்கின்றன. அறிமுகப்பணி முடிந்தது, விடை பெறுமுன் உங்களிடம் இதைச் சொல்ல அனுமதியுங்கள், எம் எஃப் ஆப்ராம்ஸ், கொலரிட்ஜின் ‘பயோகிராஃபியா’ குறித்து பாடங்கள் எடுத்தபோது, அவர் காஸுக்கு அளித்த ஆணையைச் சிறிது மாற்றியளிக்கிறேன்: இந்த ‘பிரதிகளின் ஆலயத்தை’ படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள், இந்த ஆலய நிர்மாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சுட்டப்பட்டுள்ள, கையாளப்பட்டுள்ள அத்தனை புத்தகங்களையும் படியுங்கள். இதனால் நீங்கள் அடையக்கூடிய வரங்கள் எண்ணற்றவை, நிரந்தரமானவை, என்று உறுதியளிக்கிறேன்.
Sources:
A Temple of Texts, Essays by William Gass, Dalkey Archive, 2007
Further Reading
- William Butler Yeat’s The Tower
39. Wallace Steven’s Harmonium
40. Henry James’s The Golden Bowl
41. Henry James’s Notebooks
42. William Faulkner’s The Sound and the Fury
43. Katherine Anne Porter’s Pale Horse, Pale Rider
44. Gertrude Stein’s Three Lives
45. William Gaddis’s The Recognitions
46. John Hawkes’s The Lime Twig
47. Rainer Maria Rilke’s The Notebooks of Malte Laurids Brigge
48. Rainer Maria Rilke’s Duino Elegies
49. Rainer Maria Rilke’s Sonnets to Orpheus
50. Rainer Maria Rilke’s Letters
* Freud’s The Interpretation of Dreams is the placeholder book in the Post Script