மூலம் : வைதேகி
ஆங்கிலம் : சுகன்யா கனரள்ளி (Sukanya Kanarally)
தமிழில் : தி.இரா.மீனா
வைதேகி ( ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி) நவீன கன்னட இலக்கிய பெண் படைப் பாளி. ஏழு சிறுகதைத் தொகுப்புகள்,மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல்,ஐந்து வாழ்க்கை வரலாற்று நூல்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பதினைந்து சிறுவர் நாடகங்கள்,ஐந்து மொழி பெயர்ப்பு நூல்கள் என்று பல பங்களிப்புகள் உடையவர். அனுபமா விருது,மாஸ்தி விருது,எம்.கே .இந்திரா விருது,நிரஞ்சனா விருது,தன சிந்தாமணி விருது, கதாவிருது என்று பல விருதுகள் பெற்றவர். “கிரௌஞ்ச பட்சிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகதெமி விருது பெற்றவர். இச்சிறுகதை ’சகுந்தலாவுடன் ஒரு மதியப் பொழுதும் மற்ற சிறுகதைகளும்’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது.
*** **** *****
சகுந்தலா பேசிக் கொண்டே போனாள். “சொல்லும்படி நீங்கள் என்னிடம் கேட் கிறீர்கள்.ஆனால் நான் ஏன் சொல்லவேண்டும்?எல்லாவற்றையுமா?எங்கிருந்து? எப்படி?” என்று ஹேமகூட்டாவின் ஈர மண் தரையில் உட்கார்ந்திருந்தபடி கேட்டாள்.
ஹா..அந்த தினத்தில் கன்வரிஷி வீட்டிலில்லை. அப்போதுதான் துஷ்யந்தன் வந்தான்.வசந்தத்தின் ஒளி போல!அவன் யார்?எனக்குத் தெரியாது.இருப்பினும் காலம்காலமாய் அவன் எனக்கு தெரிந்தவன் என்பதுபோல உணர்ந்தேன். அதுதான் முதல் மாயையா?இருக்கலாம்.அதை நான் ஒதுக்கிவிட்டேன். அவனுக்காகவே பிறந்தது போல உணர்ந்தேன்.
“ஏய்!கனவு காணாதே, உனக்கு முன்பு எப்போதும் ஒரு பலி பீடமிருக்கிறது.” யாருடைய வார்த்தைகள் அவை?எங்கிருந்து அவை வந்தன?குறிக்கோளின்றி மனம் அலைந்தது.பார்க்கமுடியவில்லை.கேட்கமட்டும் முடிந்தது.அந்தக் குரல் பலவீனமாக ஒலித்து,பிறகு மறைந்துவிட்டது.வரையப்படவேண்டிய ஓவியமாக இருந்தேன். கூக்குரல் உள்ளிருந்து எழும்பத்தொடங்கி விட்டது. அவன் யார்?அவன் உள்ளே வர எப்படி நான் அனுமதித்தேன்?கூக்குரல்கள் ஒன்றோடு ஒன்று கலந்தும், இணைந்தும், கனமாகி பலபுது உருவங்களில் பரவியது.எவ் விதத் தடையுமற்றவனாக நின்றவன் நிமிர்ந்து பார்த்தான். கண்களை மூடிக் கொண்டான்.பிறகு திறந்தான்.என்னைக் கவர்ந்து விடும் சிரிப்புடன் அருகில் வந்தான். நான் என்னை இழந்தேன்.ஒரு கைதேர்ந்த கலைஞனின் கையில் இருக்கும் ஓவியமாக!நானே பேரானந்தமானேன்.இல்லை.பகற் கனவில்லை. ஆனால் யதார்த்தம்!
வண்டு என்னைச் சுற்றிய அந்தக் கணத்தை நோக்கி என் மனம் இன்னும் போகிறது.ஏன் அது அந்தக் கணத்தைத் தேர்ந்தெடுத்தது?ஒரு வேளை என்னைச் சுற்றி ஒரு மாயையான வலையைப் பின்னுவதற்காகவா?மனிதர்கள் அவரவர்களுக்கான புரிதலில் விளக்கம் தந்தனர்.ஆனால் உண்மையில் யார் யாரை வசப்படுத்தியது?நான் வண்டிற்குள்ளா?வண்டு என்னைச் சுற்றியா? எப்படியோ நான் அகப்பட்டுக் கொண்டேன்.என் விருப்பத்தினால்தான். அதுதான் உண்மை.
நான் அவனை விரும்பினேன். ஆனால் ஏன்? காதலுக்காக இல்லை. அவன் அறிவாளி என்பதற்காக இல்லை,புருவம்சத்தின் அரசன் என்பதாலில்லை, அவனுக்காக இல்லை, ஆனால் எனக்காக. ஆசிரமத்தில் மலரும் பூ போல, பருவத்தின் போது பாடும் பறவைகள் போல,வசந்தத்தின்போது கிளர்ச்சி யடையும் இயல்பான அப்பாவித்தனமான மான்—ஏன் விளக்க வேண்டும்? துஷ்யந்தனைப் பார்த்த கணம் சகுந்தலா எவ்வளவு தீவிரமாக அவனைக் காதலித்தாள்.நான் தினமும் தண்ணீர் விடும் இருவந்தி செடியைக் கேட்டேன். இந்த பந்தம் பிறவிகள் கடந்ததா? அப்படி நினைப்பது பேரானந்தம் தந்தது.
ஆசிரமத்தின் எல்லையை விட்டு வெளியே போயிருக்காத கன்வரிஷியின் வளர்ப்பு மகள், அவருடைய கண்பார்வையில் எப்போதும் வளர்ந்தவள், அவர் எப்போது எங்கே என்னை அனுப்பினாலும் போவேன் என்று நினைத்த அப்பா விப் பெண் அவனை ஆசிரமத்தில் பார்த்த அந்தத் தருணத்தில் தன்னை இழந்தாளே என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? நான் உங்களிடம் மறைப்பேனா?
என் தந்தை கன்வரிஷியைப் பார்க்க பல அரசர்களும்,அமைச்சர்களும் வருவார்கள். என் கண்கள் எல்லாரையும் பார்க்கத் தொடங்கியிருந்த பருவம்.இந்த சகுந்தலா அப்பாவிப்பெண். ஆனால் அவள் யாரைப் பார்த்தாள்? பார்வையாளர்களை மட்டும்தான். அவள் பார்வை யார் மேலும் நின்றதில்லை. காலெடுத்து வைத்ததில்லை.என் கைகளைப் பற்ற அரசர்கள் விரும்பினாலும் கன்வரிஷி அவர்களின் மீது கவனம் கொண்டதில்லை.யதேச்சையாக அவர் ஒரு முறை சொன்னார், “என் சகுந்தலாவின் கணவன் சாதாரண மனிதனாக இருக்க மாட் டான்,” என்று. அவரைப் பிரிவது என்ற கற்பனையே வலியானது.
“இது எப்போதும் உங்களைப் பிரியாது,” நான் சொன்னேன்.
சிரித்த முகமாக இருக்கும் தந்தை கன்வரிஷியின் முகம் மாறியது “அப்படி ஒருபோதும் சொல்லாதே குழந்தாய்,” என்றார், ஒருவரின் உள்குரல் போல .
ஆசிரமம் என்பது முழுமையாக புனிதமானது என்ற மாயையில் நீங்கள் இருக்கிறீர்களா? ஓ, அதிலிருந்து வெளியே வாருங்கள்! துறவிகள் உலக ஆசைகளை விட்டு பரிசுத்தமான சடங்குகளை உட்கிரகித்துக் கொண்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?அது அவ்வளவு சுலபமானதா? அவர்களிடமிருந்து என் தந்தை கன்வரிஷி ,அச்சத்தையும், மரியாதையையும் பெறலாம். ஆனால் அவர் இல்லாத போது அந்த இளையரிஷிகள் முன்னெடுத்து செயல்படுவார்கள்.அவர்கள் என்னிடம் கண்டதெல்லாம் அலட்சியம். விஸ்வாமித்திரர்-மேன கையின் மகள் என்பதால் அந்த கர்வம் என்னிடமிருக்கிறது போலும். நான் அவர்களால் கைவிடப்பட்டிருந்தாலென்ன? தெரியாத நிலைதான்.இருப்பினும்! அதனால் பின்னோக்கிய நிலையில் நான் என்னைப் பார்ப்பதாக உணர்ந்தேன்.
வனஜ்யோதனா காட்டுச் செடிகள்; ஹரினா –அந்த மான், என் தோழிகள் அனசூயா, பிரியம்வதா ; இவர்களோடு நாட்கள் கடந்தன. கௌதமியின் தாய் போன்ற கவனிப்பு; தந்தையான கன்வரிஷியின் அன்பு. எல்லாம் துஷ்யந்தன் வரும்வரை
அவன் வந்தான்.
ஊடுருவ முடியாத தன்மைக்கு ஆளானேன். இருவந்திகை,என் தோழிகள் தாய் போலான கௌவுதமி, தந்தை ஸ்தான கன்வரிஷி எல்லோரும் மின்னொளியாக மறைந்து விட்டனர்.அது மட்டுமில்லை. நானும்கூட காற்றில் மறைந்து போனேன் தோழி !உன்னால் அதை நம்ப முடிகிறதா?காதலுணர்வை எடுத்துச் சொல்லும் தைரியம் எனக்கில்லை. அது பொதுவான உணர்வில்லை, எல்லா விளக்கமும் அதை பலம் குறைந்ததாக்கி விடும்.ஒருவரின் உயிரோட்டமான உணர்வு வெளிப்பாட்டின் உச்சமென்பதால் அந்த உணர்வை விளக்கவேண்டிய தேவையுமில்லை.
அவன் என் முன்னாலிருந்தான்—துஷ்யந்தன்!
நான் அங்கிருந்தேனா? ஏன் அப்படியான ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும்?
நான் அங்கிருந்தேன் என்றுதான் நினைத்தேன். அதற்கு எந்த ஆதாரமுமில்லை. இயற்கையின் எல்லா மென்மை உணர்வுகளும் என்னோடிணைந்திருந்தன.நான் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டேன்.
அவன் நிலை என்ன?
ஆரம்பம் முதலாகவே வினோதமான சிந்தனையின் அடையாளநிழல் அவன் முகத்தில் தெரிந்தது.அதை நான் கவனிக்கவில்லை.என்னைச் சுற்றி நடக்கும் எதையும் கவனிக்கும் நிலையில் நானில்லை.பூமி,வானம்,மரங்கள் என்று எதுவுமே எனக்குத் தெரியாத நாட்கள் அவை. மாலையாகிக் கொண்டிருந்தது. மாதவி மண்டபத்தைச் சுற்றி சுகமான நிழலிருந்தது.அவன் இந்த உலகை எங்கள் இருவருக்கும் மட்டுமானதாகச் சுருக்கி விட்டான். வார்த்தைகள் பளிங்காக இருந்தன. அவனைப் பார்ப்பது உற்றுப் பார்ப்பதானது. உற்றுப் பார்ப்பது திருப்தியில்லாததாக இருந்தது. அவன் பேசுவதைக் கேட்பது இன்னும் பலவற்றைக் கேட்காதது போலிருந்தது. அப்புறம்…
என்ன ஆனது? என்ன நடந்திருந்தாலும்?
திடீரென்று அவன் அமைதியாக உட்கார்ந்தான். எங்கும் உறைந்தது!சிறு பள்ளத்தாக்கு போல அவன் கண்களுக்குள் பார்த்தேன்.“இமயமலை சில சிறிய பள்ளத்தாக்குகளைக் கொண்டது.இமயமலை பள்ளத்தாக்குகளின் மீது கவனம் செலுத்துவதில்லை….’ குரல்கள் எந்த நேரத்திலும்,எல்லா இடங்களிலிருந்தும் வரும் சில குரல்கள். இது பட்டு நூலிழைபோல,தாய்க்குரிய பாதுகாப்போடும், கவனத்தோடும் இருந்தது. ஆனால் நான் அதில் கவனம் காட்டவில்லை. மிகச் சிறந்த உண்மைகள் கேட்பதற்கு நல்லவை, பின்பற்றுவதற்கு அல்ல.யாராலும் எவற்றாலும் ஊடுருவ முடியாதவளாக இருக்கவிரும்பினேன்.இருப்பினும் அந் தக்குரல் என்னை முற்றுகையிட்டது.
சூரியனால் உருகியவன்போலக் காணப்பட்டான். பள்ளத்தாக்கு திகட்டிவிட்டதா? மணிகள் ஒலித்தன.பேச்சின்றி துஷ்யந்தன் என் தோள்மீது சாய நான் மெய் மறந்தேன்.மெல்லிய காற்று எங்களை வருடியது.”தூங்குகிறீர்களா?”அவன் மூடிய கண்களைப் பார்த்துக்கேட்டேன். இமைகள் அசையவில்லை.தமக்குள் ஏதோ இருப்பதற்கான சாட்சிபோல அவை தெரிந்தன.
அவன் ஏதோ பெயரை முணுமுணுத்தான்.நான் அவனை உற்று கவனித் தேன். நட்சத்திரங்களுக்குள் இருக்கும் அந்த பெண் யார்?கனவுகளில் கூட அவனை ஆக்கிரமிப்பவள்?யாராக இருந்தாலும் அவள் இங்கேயில்லை. ஆனால் அவளில்லையா?நான் திரும்பவும் அந்தக் கண்களுக்குள் பார்த்தேன். அவை தமக்குள்ளாகவே இலக்கின்றி அலைந்தன. தாங்களாக அவை தீர்மானிக்காத வரை திறக்க முடியாது.
அவன் தானாகவே விழித்துக் கொண்டான். “என்ன கனவு!”வியந்தவனாகச் சொன்னான். அது என்ன கனவாக இருக்கமுடியும்?-நான் கேட்கவில்லை. அதற்கு பதிலாக “நாட்டு விவகாரத்தைப் பற்றிய யோசனையா?” என்றேன். அவன் சிரித்தான். அப்போதுதான் யாரையோ மென்மையாக முத்தமிட்டது போன்றதொரு உணர்விலான சிரிப்பு. உணர்ச்சி வெளிப்பாட்டின் சிரிப்பு.திடீரென அவன் வழிப்போக்கன் போலத் தெரிந்தான்.
அந்த வேதனையைப் பொறுக்கமுடியாமல் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.அவன் அதை உதறினான்,தெரியாமலும் செய்திருக்கலாம்.அது உண்மையாக இருக்குமா?சந்தேகம் என் மனதைத் துளைக்க வேதனை அடைந் தேன்.நெஞ்சில் அமைதியின்மை குடிகொண்டது.அதை நான் அப்போது கவனிக்கத் தவறிவிட்டேன். கவனிக்கத் தவறியது இப்போது தெரிகிறது.
சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். எனக்கு எழுந்திருக்க விருப்ப மில்லை.
அனசூயா என்னைவிட புத்திசாலி. அரசனை எதிர்கொள்ள அவள் தயாராக இருந்தாள். அவனுடைய பதிலென்ன? “சகுந்தலா, என்னுடைய அரச பரம்பரையின் பெருமையாக இருக்கும் கடல், தன்னுடைய அணிகலனான அதை அணிந்திருக்கும் என்னுடைய பூமி இவர்கள் இருவரையும் விட யாரும் எனக்கு நெருக்கமாக இருக்க முடியாது.” (அரசனின் வாயிலிருந்து வரும் இந்த அறிக்கை என்னை அறிவு நிலைக்கு வரச் செய்திருக்க வேண்டும்)
அவன் என்னை பகற்கனவிலிருந்து விடுவித்தான்.”உன் பிரிய சிநேகிதி அன் றொரு நாள் என்னை விசாரித்தாள்.எனக்கு வேறு காதலிகள் இருந்தால் நீ என்ன செய்வாய்?”
வார்த்தைகள் என்னைத் திணற அடித்தன. அவன் அணைப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு “நீங்கள் இங்கிருக்கும்போது அவர்கள் இருக்க மாட்டார் கள்.அவர்களின் ஞாபகத்தைச் சுமப்பது பொருத்தமில்லாதது ’.
அவன் சிரித்தான். அது அதிகமாகத் தெரிந்தது. அதன் பொருள் என்ன? வார்த்தைகளுக்குப் பொருள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் நிலா வெளிச்சம் உலகை ஆட்கொண்டது.அவன் காதலில் விழுந்த தேனீயானான். அல்லது அவனுடைய தவறாக வழிநடத்தலா?
அருமையான கணங்கள் மெல்ல மெல்ல நழுவின.
எத்தனை?
நான் கணக்கிட மறுக்கிறேன். உலகம் கணக்கிடட்டும்.
அவைகளைக் கணக்கிடுவது பொருத்தமில்லை.
துஷ்யந்தன்தான் என் வாழ்க்கை.
நிலவொளி எங்களை மயக்கியது. “இது பாவமில்லை,”அவன் உறுதியாகச் சொன்னான்.நான் அதை ஏற்றுக்கொண்டேன்.நான் கொடுத்தேன். அவன் பெற்றுக் கொண்டான். ஆனால் அந்த இனிய கணத்தில் எரிச்சலின் சிறு சாயல் கூட இல்லையா? ‘அந்தக் கணத்தில் அவன் வேறு யாரையாவது நினைத்தானோ?’ ஒரு சாகுந்தப் பறவை இனிமையாகக் குரல் கொடுத்தது. நான் வளர்த்த அந்தப் பறவையை வெறுத்தேன்.நெருக்கமாக வெட்டும்வரை எல்லா வேர்களும் என்னைப் பிடித்து இறுக்கின.நான் பேரானந்தத்தின் பிடியிலிருந்தேன்.
என்னால் மட்டும் காலத்தைத் துரத்த முடிந்தால்!அவன் அடுத்தநாள் புறப்பட வேண்டும். வேறு வழியில்லை.வேள்வித் தீயை பாதுகாக்கும் எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன. அந்த இரவு முடிவில்லாமல் நீண்டிருக்க வேண்டு மென்று விரும்பினேன். உலகம் அந்த இரவிலேயே முடிந்து விடவேண்டுமென்று ஏங்கினேன். நிலவுக்குப் பின்னரான இரவுகள் எவ்வளவு இருளானவை என்று உங்களுக்குத் தெரியுமா?
அவன் புறப்படத் தயாராக நின்றான்.
நான் அவனைத் தழுவிக் கொண்டேன். அவனை விட மறுத்தேன்.ஒரு பருவப் பெண்ணைப் போல காதலின் உச்சநிலையிலிருந்தேன் .அவனைத் தவிரவும், தாண்டியும் வேறு உலகமில்லை.
நான் அவனைத் தழுவிக் கொண்டிருந்தேன் என்று சொன்னேனா?அவன் என்னைத் தழுவவுமில்லை , தள்ளவுமில்லை.நான் அவனை விடுவிப்பதற்காக காத்திருந்தான்.எனக்கு நிலைமை நன்றாகத் தெரிந்தாலும் மனம் அதை ஏற்காமல் என் வேதனையில் மட்டுமே நின்றது..”என்னால் முடியாது. சாறின்றி வனஜ்யோத்சனா செடிபோல வாடிவிடுவேன்.”
என் கோபத்தின் வேகத்தில் அவன் கண்டத்தில் விஷமடக்கிய புராண நீல கண்டனாகத் தெரிந்தான்.என் வேதனை உச்சத்தையடைந்தது.”இல்லை.சிலரின் வாழ்க்கையில் பிரிதலென்பது இல்லை.”—அந்தக் குரல் எங்கேயிருந்து வந்தது? எனக்குத் தெரியவில்லை.கங்கையைத் தலையில் வைத்திருந்த நீலகண்டன் சிரித்தானா?அவன் இதழில் ஓடிய புன்னகை அவன் அன்பு ஏற்கெனவே பகிரப்பட்டு விட்டதைக் காட்டியது.
கண்டிப்பாக ஆசிரமத்தில் யாரும் வளரக் கூடாது.சாகுந்தப் பறவைகளே! கேளுங்கள்.மனிதர்களே!இது ராஜரிஷியின் மகள், விஸ்வாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்த மகள் காடுகளில் வளர்ந்ததும், வேதனையான காதலில் வாழ்வதுமான கதை.
“அரண்மனைக்குப் போனபிறகு நீங்கள் என்னை மறந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றேன் நான்.அவன் அதை மறுக்கவில்லை.பதிலாக விரைவில் அழைத்துப் போவதாகச் சத்தியம் செய்தான்.
அவன் போய்விட்டான். அவன் கொடுத்த மோதிரம் என்னிடமிருந்தது.எத்தனை முறை பூமி சூரியனைச் சுற்றியது என்று யாருக்குத் தெரியும்?மறதி என்ற போர்வைக்குள் அவன் தன்னை மறைத்துக் கொண்டான்.பல முறைகள் அவனை அழைக்க முயன்றது வீணானது. எந்தச் செய்திகளுமில்லை. அந்தப் பெண்ணிற்கு உறக்கமேயில்லை. உலகம் வெறுமையாகத் தெரிந்தது.”என்னால் பொறுக்க முடியவில்லை.நான் பைத்தியமாகி விடுவேன்.நான் செத்துவிடுவேன்,”அழுது தீர்த்தேன்.
”ஏன் இப்படிக் கலங்குகிறாய்? தைரியமாக இரு,”அவன் சொன்னான். ஆமாம். உண்மைதான். இந்த மாதிரியான தருணங்களில் ஒருவர் தைரியமாக இருக்க வேண்டும்.துயரத்தைப் பொறுத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் ஏற்பவராகவுமிருக்க வேண்டும்
நான் மிகவும் தனிமையானவளாகி விட்டேன்.
அந்த மாதிரியான தனிமை வேண்டப்படாததுதான். கன்வமுனிவர் இன்னும் திரும்பி வரவில்லை. “நீ காதலால் நலிந்து விட்டாய்.விரைவில் நீ மன்னனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் அல்லவா?உன்னிடம் பேசும் போது நாங்கள் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்,”அனசூயாவும் ,பிரியம்வதாவும் வேடிக்கை செய்தனர்.முடிவின்றி அதே அச்சுடன் சுழலும் மனிதர்கள் போலத் தெரிந்தனர். தோழிகளே, நீங்களும் காதல் வலைக்குள் விழுவீர்கள். அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்களுடைய வேடிக்கை,களிப்பு எல்லாம் மறையும் மெல்லிய காற்றாக அந்த நேரத்தில். அந்த நாளுக்காக காத்திருங்கள்.”
கன்னிப் பருவத்தில் இருக்கும் நான் ஒரு கிழவியைப் போல பேசுகிறேனல்லவா?பிரியம்வதாவும்,அனசூயாவும் இன்னமும் குழந்தைகளைப் போல விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறார்களே!எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர் கள்!
அதிர்ஷ்டம்? அது அவர்களைவிட எனக்குத்தானே அதிகமிருந்தது?
குழந்தை துஷ்யந்தனின் மெல்லிய பாதங்கள் என்னை உதைக்கத் தொடங்கி விட்டன.
ஆசிரமத்தைப் பற்றிப் பலவகையான பேச்சுகள் வெளிவரத்தொடங்கியிருந்தன. புனித ஆடையணிந்த ரிஷிகளின் பேச்சு புனிதமின்றி.
“துஷ்யந்தன் வேட்டைக்குத் தயாராகி விட்டானென்றால்.”
“மன்னனுக்கு ஒருத்தி மட்டும்தானிருக்கிறாளா?அவளைப் போல பதினாறாயிரம் பேர்!”
நான் கல்லாகத்தானிருந்தேன்.நான் அவர்கள் பேச்சில் கவனம் காட்ட வேண்டுமா? என் காதில் விழவேண்டும் என்று பேசப்பட்ட பேச்சுக்கள் என்னைக் காயப்படுத்தின.கடந்த காலத்தின் கதைகள் பேசப்பட்டன.(அவற்றை நான் நம்பாமலிருக்கட்டுமா? அவனது மறதி கேலியாக நின்று தவிர்க்க முடியாத நெருக்கம் கழுத்தைச் சுற்றும் கயிறாகியது.)
ஒரு காலத்தில் ஹம்சபதிகே என்றொரு பழங்குடிப் பெண்ணை அவன் காதலித்தான் என்பது வெளிப்படை. அவனுடைய இளமை நாட்களில் இது போல சில ஹம்சபதிகேக்கள்! யார் அவனுடைய கனவில் வந்த தெய்வீகப் பெண்? அவன் உச்சரித்தது யார் பெயரை?ஆச்சரயமூட்டும் வகையில் என்னாலும் அவர்கள் எல்லோர் மீதும் அன்பு காட்டமுடியும்,அவன் அவர்களைக் காதலித் திருந்தால். நானும் அவர்களைப் பார்க்க மிக ஆவலாக இருந்தேன்!
எப்படியானாலும்…
“எப்படியானாலும்” மிக வினோதமான வேர்ச்சொல். இந்தச் சொல்லைச் சுற்றித் தான் நம்முடைய உணர்வுகள், பலவீனங்கள் என்று எல்லாமும் பிணைந்திருக்கின்றன.அப்படித்தானில்லையா?ஆராய்ச்சிக்குள் போய் விட வேண்டாம். துஷ்யந்தனை அவனுக்காக காதலிக்கவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. அவனை விரும்புவர்கள் என்பது ஒரு பிரிவு. காதலைப் பகிர்ந்து கொள்வது என்பது முழுக்க முழுக்க வேறுபட்டது. முன்னது மனித இயல்பு.பின்னது பெருமளவில் மனரீதியான தயார்நிலை.
நீ சில பெண்களின் கணவன், சகுந்தலா எதையும் மறக்க மாட்டாள் என்பதை மறந்து விட்டாயா?இல்லையென்று சொல்.இல்லையென்று சொல்.
ஆனால் அவன் ஒரு போதும் இல்லையென்று சொன்னதில்லை.என்னை அவன் மறந்துவிடுவானா என்று பாசாங்குபோல ஆனால் ஓர் உண்மையான கவலையில் நான் கேட்டபோதும்’ஆமாம்’ என்று ஒரு நகைச்சுவை போல சிரிப்போடு சொன்னான்.”அதுபற்றி ஏன் பேசவேண்டும்?சில விஷயங்களை வெளிப்படுத்தாமலிருப்பதுதான் நல்லது!”ஒரு முத்தம் தந்து என் சந்தேகத்தைப் போக்க முயற்சித்தான்.
சிறந்த புரு வம்சத்தில் பிறந்த உண்மையான அரசன்!ஆனால் என்னை முத்தமிடும் போது ஏன் நடுக்கமும்,வியர்ப்பும்?அந்தக் கம்பீரமான கண்களில் கண்ணீர் தெரிந்ததோ?அவன் ஓர் அரசனைப் போலத் தெரியவில்லை. மனிதனாக, மிக அதிகமான மனிதனாக. அவன் எவ்வளவு அன்புடையவனாக இருந்தான்! எளிதில் இலக்காகும் நிலையிலான அன்பு எனக்காகத்தான் என்று நான் மயங்கிப் போனேன். என் அடிமன இருளிலிருந்த அந்த பயம் ஏன் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது? அவன் என்னை மறந்து விட்டான் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறதே. ஆனால் மனதில் நம்பிக்கை வரும்போது, காதலிருக்கும் இடத்தில் இருட்டிற்கு எப்போதும் வழியில்லை என்று என்னை நான் சமாதானப்படுத்திக் கொண்டேன்.
கௌதமி அங்கிருந்தாள்.என் ஆழ்மனபயத்தை அறிந்தவளாக என் உடலை நீவினாள்.
வேதனை பிடுங்கித் தின்றது.எல்லையற்ற உலக ஆசைகளுடனிருந்த யாரோ ஒருவனிடமிருந்து அடைந்த வேதனைகளை விலக்குவதற்கு எவ்வளவு ஏங்கினேன்! நம்புவதற்கு! உயிரூட்டுவதற்கு! மீண்டும் பிறப்பதற்கு!
எப்போதும் விழித்திருக்கும் அந்த ஆத்மாவிற்காகத் தீவிரமாக காத்திருந்தேன்.
கன்வரே , தந்தையே,எங்கிருக்கிறீர்கள்?
ஆகாயத்தை வெறித்து,நட்சத்திரங்களை அழைத்து கதவின் அருகே நின்றேன். அவை எதுவும் கீழே வராமல் பறந்து போயின .துர்வாசரின் காலடிச் சத்தம் கேட்டது.
அவருடைய காலடிச் சப்தத்தை கேட்கத் தவறியதாக கவிஞன் தொன்மத்தை உருவாக்கினானே?உலகம் அவனைக் நம்பியது. குழப்பும் பொய்களை நம்பும் உலகத்திற்கு அமைதியான உண்மை தேவையில்லை.காதலின் நம்பகத் தன்மையை ஏற்கத்தயாரில்லை, ஆனால் வசப்படுத்தும் போலித் தன்மையை நம்பமுடியும். கவிஞன்? இந்த உலகைக் கவிதை என்ற கற்பனையில் கவிதைப் பொய்களைத் தருகிற அவனை, இந்த உலகில் வேறு யாரோடும் ஒப்பிட முடியாது.கவிஞனை நம்புமளவிற்கு இந்த உலகம் சகுந்தலாவை நம்புமா?துஷ்யந்தனின் நடத்தையை வேண்டுமானால் ஆராயலாம். ஆனால் சகுந்தலாவின் மனதை?மனம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது பாதுகாப்பானது.
ஏன் துர்வாசர் என்னைச் சபிக்கவேண்டும்?அளவற்ற சக்தியுடைய ஆத்மா அவருடையது. அநீதியை எதிர்க்கும் அந்தப் பண்பை தந்தை கன்வர் பாராட்டி னார். எனக்கு அவரை குழந்தைப் பருவத்திலிருந்தே தெரியும். அவர் ஆசிரமத் திற்கு வரும்போதெல்லாம் என் கன்றுக்குட்டியோடு அவர் மடியில் உட்கார்வேன்.”நான் உன்னோடு சேர்த்து இதற்கும் இடம் தரவேண்டுமா?“ என்று கொஞ்சியபடிக் கேட்பார். என்னுடைய குழந்தைத்தனமான உணர்வுகளை கவனமாகக் கேட்பார். “வேதனையில்லாத ஒரு வாழ்க்கை என்பது மிகஅபூர்வம் குழந்தாய். அப்படியான ஒரு வாழ்க்கை உனக்குக் கிடைக்கட்டும்,” என்று தந்தை கன்வரிஷியின் முன்னால் அவர் என்னை ஆசீர்வதித்தார். இதைக் கேட்ட தந்தை அவரருகே என்னை இழுத்து அணைத்துக் கொண்டு முதுகை அன்பாக நீவினார். அவருடைய இளம்சூடான மூச்சு கன்னத்தில் பட்டது இன்னமும் எனக்கு நினைவிலிருக்கிருக்கிறது.என்மனதை நன்றாக அறிந்த தந்தைக்கு நான் இப்படித்தான் வாழப்போகிறேன் என்று தெரிந்திருக்குமா?இந்த மாதிரி யான ஒரு வேதனையில் நான் என்னை மூழ்கடித்துக் கொள்வேன் என்று?
( இல்லை. துஷ்யந்தன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி ஒரு குற்றச்சாட்டு வேண்டாதது)
துர்வாசர் உள்ளே வந்தார். ஆசிரமத்தில் யாருமில்லை.
“வணக்கம் தாத்தா!” என்று நான் ஓடோடிப் போய்ச் சொல்லவில்லை. அவர் நடப்பதை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சம்பிரதாய ரீதியில் எழுந்து, அவரை வரவேற்றுப் பேசவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. எவ்வளவு நேரம் இப்படி எதுவும் செய்யாமலிருந்தேன் என்பது தெரியவில்லை! அவரைப் பார்த்தபிறகு, ஒரு பெரிய பெருமூச்சு வந்தது. அது என்ன வகையான நிம்மதி!
“நான் பார்ப்பது என்ன? நம்முடைய சாகுந்தப் பட்சி கவலையிலிருக்கிறதா?’ கேட்டுக் கொண்டே சிரிப்புடன் உள்ளே வந்தார்.அந்த சிரிப்பு வலிந்து வந்ததாக இருந்தது.நான் சிரிக்கவில்லை. அவர் தன் கண்களை மூடிச் சிறிது நேரம் தியானத்திலிருந்து விட்டு, மிகக் கோபமானார். அவர் உதடுகள் அசையப் போவதை என்னால் உணரமுடிந்த்து.”வேண்டாம் தாத்தா!அவன் நீண்ட காலம் வாழவேண்டும்.வேண்டாம்!” என் வார்த்தைகளைக் கேட்டபிறகு துர்வாசர் அமைதியானார்.அவருடைய வலிமையான கோபமடங்கச் சிறிது நேரமானது. என் தலையை நீவினார்.பரிதாபம் அங்கு உறைந்திருப்பதைப் பார்த்தார்.
“சே! மறந்து போவதில் அவன் கெட்டிக்காரன்,”அவர் தனக்குள் சொல்லிக் கொள்வது போல இருந்தாலும் எனக்குக் காதில் கேட்டது.”அரச அடையாளம் பொறித்த மோதிரம் உன்னிடமில்லையா?தேவைப்பட்டால் அதை அவனுக்குக் காண்பி,” என்று சொன்னார்.
அவர் மடியில் விழுந்து, தலையை அவர் தோளில் புதைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போலக் கதறி அழவேண்டும் போலிருந்தது.இளம்பிராய நாட்களே ,எங்கே மறைந்தீர்கள்?
ஆசிரமத்திலிருந்தவர்கள் தொலைவிலிருந்து இதையெல்லாம் பார்த்தார்கள். அவர் உள்ளே வந்த்து,என்னிடம் ஏதோ சொன்னது,கோபமடைந்தது,பிறகு புறப்பட்டது –ஆகிய எல்லாமும் அவரவர் விரும்பிய வகையில் பேசி விவாதிக் கப்பட்டது. அவர்களின் கறபனைக் குதிரை எல்லையின்றிப் பறந்தது. கவிஞனும் ஆண்களின் தீயவொழுக்கத்தை மறைக்கும் வகையில் சாபங்களைக் கண்டு பிடித்தான்.அவன், தனக்குப் பாதுகாப்பாக இருக்கிற தேவைப்பட்ட மறதிக் கதையை கண்டுபிடித்தான். கவிதை என்பது எப்போதும் உயர்ந்த கற்பனையிலான அமைப்பாகவேயிருக்கிறது.
****
’மற்ற மனைவிகளிடம் தோழியாக இரு,” தந்தை கன்வரிஷி சொன்னார். உணர்ச்சிகள் தாங்காமல் நான் அழுதேன்.வேதனை இழுப்பாக வெளியானது. நெருங்கியவர்களைப் பிரிகின்ற போது ஏற்படும் இயற்கையான அழுகை என்று அதற்கு விளக்கம் தந்தனர். என் நிலைமை எவ்வளவு இக்கட்டானது? நினைவிழப்பு ஏற்பட்டவன் முன்னால் நான் நின்றுகொண்டு ”என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க வேண்டும். எல்லாவற்றையும் அறிந்திருந்தும் தந்தை ஏன் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்? வாழ்நாளின் பெரும்பகுதியை ஆழமான கல்வியில் கழித்த அவரைப் போன்ற அறிஞர்களுக்கு அந்த மாதிரியாக ஆசீர்வாதம் செய்வதென்பது சாதாரணமானதாக இருக்கலாம்.வாழ்க்கையின் உச்சம் வரை அனுபவித்தாக வேண்டும் என்ற விருப்பமுடைய என்னைப் போன்றவர்களுக்கு இருக்கும் வேடிக்கையான ஆசை? ஏன் என் தந்தை மனம் தளர்ந்து காணப்படவேண்டும்?நான் அவரைப் பார்த்தேன். யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் நான் கன்றைத் தழுவிக் கொண்டு முத்தமிட்டேன். அதற்காவது மௌனமான வேதனையின் இலக்கணம் தெரிந்திருக்கும்.
துஷ்யந்தன் பற்றிய எதிர்பார்ப்பு என் நெஞ்சிற்கு சிறிது அமைதி தந்தது.
நான் என் கணவரின் வீட்டிற்குப் புறப்பட்டேன்.
போகிற வழி முழுவதும் கௌதமி, ஷர்கிரவாவும் மற்றவர்களும் பேசிக் கொண்டே வந்தார்கள்.ஒரு வார்த்தை கூட நான்பேசவில்லை.பாதை முடிவில்லாமலிருந்தது.எவ்வளவு அதிகம் பேசுகிறோமோ அவ்வளவு அதிகம் அது நீடித்தது. இந்தப் பாதை முடிந்துவிடும்.அவன் என்னை வரவேற்கக் காத்திருப் பான். நிச்சயமாகவா?ஆமாம்,நிச்சயமாக—நான் என்னை உறுதிப் படுத்திக் கொண்டேன்.”இதோ தலைநகரம் வந்துவிட்டது,” ஷர்கிரவா வெண்கலத் தொண் டையில் சொன்னான்.
என் கண்களின் முன்னால் ஒளி பரவியது போல இருந்தது. கண்களை அகலமாகத் திறந்தபடி சுற்றுமுற்றும் பார்த்தேன். “அவன் இங்கே எங்கேயாவது அருகில் இருப்பானோ? “கிறுக்குப்பெண்ணே, மருட்சியில் மூழ்கிப் போகாதே! இங்கெல்லாம் அலைபவனல்ல. அவன் அரசர்களுக்கெல்லாம் அரசன். உனக்குத் தெரியாதா?”அந்தராத்மா ஏங்கும் கண்களுக்குச் சொன்னது.’காதலில் மூழ்கி இருக்கும் ஒருத்தியால்தான் தன் காதலனைப் பார்க்கமுடியும். ‘ இது மருட்சியாக இருக்குமானால் இருந்துவிட்டுப்போகட்டும்.’ நான் சிரித்தபடி எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.எனக்குள் ஒரு களிப்பு உண்டானது.
எப்படி அரண்மனைக் கதவருகே, உள்ளே போனேன்,எங்கே நின்றேன் –எதுவும் நினைவிலில்லை.
எனக்கு நினைவிலிருந்ததெல்லாம் இதுதான்.அரியாசனத்தில் அமர்ந்தவன், அவையைப் பார்த்து தன் கையை எதிராக அசைத்து” இந்தப் பெண்ணை நான் பார்த்தது கூட இல்லை,” என்று எங்களைப் பார்த்துச் சொன்னான்.—எனக்கு என்ன ஆனது?
தீ தகிப்பதாக உணர்ந்தேன்!
தீ—நான் பிறப்பதற்குக் காரணமானது.
ஒருவரின் அடிவயிற்றின் ஆழத்திலிருந்து தீவிர முரணில் பிறந்ததுதான் தீ.
எனக்குள் ஒரே ஒரு தீ தான் எரிந்துகொண்டிருந்தது.தீயில் அவனைப் பொசுக்கிச் சாம்பலாக்கி விட வேண்டும்!சொர்க்கம்,நரகம் , பூமி என்று எல்லா இடங்களிலும் கேட்குமாறு நான் அலற விரும்பினேன்.வேதனையான பிரிவுணர்வை நெருப்பிற்குள் தள்ளி எரித்து விடவேண்டும். மீண்டும் அது மனித னுக்குள் எழவே கூடாது.
’அனார்யா”
நான் என்ன சொல்லட்டும் பிரியமகனே?என் வாயிலிருந்து ஒரு சிறிய சத்தம் கூட வரவில்லை.
இல்லை. ஒரு சின்ன வார்த்தை கூட வரவில்லை.வார்த்தைகள் உள்ளேயே கரிந்து போய்விட்டன.நான் வாயடைத்துப் போய்நின்றேன்.
ஏன் இப்படி நடக்க வேண்டும்?கொதிக்கும் கோபத்திலும் நான் வியப்படைந்து கேட்டுக் கொண்டேன்.
பிரியசகி, என்ற மென்மைக் குரல் இந்த எல்லாக் குழப்பங்களின் இடையிலும் காதலை மௌனமாக பரப்பிக் கொண்டிருந்தது. எந்தக் கட்டுப்பாடும், கால நேரமுமில்லாமல் இயற்கை மட்டும்தான் நேசத்திற்குரியது என்பது போல.
நான்.
பேரழகியான மேனகையின் மகளில்லை, அரசரிஷியின் மகளாகப் பிறக்க வில்லை,கன்வரிஷியின் வளர்ப்பு மகளுமில்லை.நான் இயற்கைதான். நடந்தவற்றுக்காக நான் இடிந்து போய்த்தான் நிற்கமுடியும். அந்தக் கொடூரமான நினைவிழப்பு?அது இந்த உலகையே இருளில் மூழ்கச் செய்யுமென்றால், என்னால் என்ன சொல்ல முடியும்?எதையாவது நான் செய்தால் அதிகம் அறிவற்ற தன்மையாகத்தான் அது தெரியும்.
அதுதான் துஷ்யந்தன்.
ஷங்கர்வன் என்னைத்தான் குற்றவாளியாக்கினான்.
கௌதமி வருத்தமடைந்தாள்.”உன்னால் அந்த மோதிரத்தைக் காட்டமுடிய வில்லையா? ”என்று கேட்டாள்.ஒரு மோதிரத்தைக் காட்டி காதலைப் பாதுகாக்க நினைப்பது எனக்கு வெறுமையாக,பொருளற்றதாகப்பட்டது.மறுப்பு அகந்தைக்கு வழிதரும்.போலியான அந்தத் தன்மை அதிர்வைத் தந்தது. பாசாங்கான நினைவிழப்புக்கு எப்படி ஒரு மோதிரம் மாற்றுமருந்தாக முடியும்?
(எனக்கு தந்தை விஸ்வாமித்திரரின் நினைவும் வந்தது.என் தாயின் வாழ்வு என் மூலம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறதா?என் குழந்தையைக் காட்டின் நடுவில் கைவிட்டுவிட்டு வருவது போல?ஒருபோதுமில்லை! மேனகாவின் ரத்தம் மட்டும் எனக்குள் ஓடவில்லை)
நான்,அவன் கண்களுக்குள் உற்று நோக்கினேன்.
சகி,நான் என்னை அங்கே கண்டேனா?என்னைப் போலச் சிலரை மயக்கி யிருக்கும் கலையை வெளிப்படுத்துவதாக அவை தெரிந்தன.அப்போதிருந்த துஷ்யந்தனுக்கும்,இப்போதிருப்பவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்!அப்போது அவன் அரசன் என்பதைவிட அதிகம் மனிதனாக இருந்தான்.இப்போது, அரசாளும் வெறும் மன்னனே தவிர மனிதப் பண்புகள் இல்லாதவன்.ஒரு வேளை அப்படிதான் இருந்திருக்க வேண்டுமோ?தலைநகரை விட்டு வெளியேறிக் காட்டை நோக்கிச் சென்றது உள்ளுக்குள் இறந்து போன மனிதத்தை உயிர்ப்பிக்கவா?
நான் அவனை வெறித்துப் பார்த்தேன்.அவன் மீசை நரைத்து விட்டதா? எதையோ மறைப்பதற்காக கேளிக்கை, உல்லாசம்,சுறுசுறுப்பு ஆகியவைகளின் கலவையாக இருப்பது போலக் காட்டிக் கொள்ள அவன் முயற்சிப்பதாகத் தெரிந்தது.”எல்லாவறையும் நீ கற்பனை செய்து கொண்டிருக்கலாம், என்று நீ சொன்னாயா? நீ ஒருபோதும் அவனை நெருக்கமாகப் பார்த்ததில்லை. இல்லை என்று சொல். அன்பான விழிகள் நுண்ணுணர்வு கொண் டவை. அவை மிக மெல்லிய ஒலியையும் ஆராய்ந்து கண்டுவிடும்.ஆனால் சில நேரங்களில் மிக வெளிப்படையானவற்றையும் புறக்கணித்துவிடும்!
*****
என் கணவனின் இடத்தைவிட்டுப் புறப்பட்டேன். கன்வரிஷியின் ஆசிரமத் திற்குப் போகாமல் மாரீசனின் ஆசிரமத்தை நோக்கி நடந்தேன். தனிமையான ,சுயேச்சையான இருப்பில் ஒருவர் காடு,மலை,நகரம் என்று எங்கு வாழ்ந்தாலென்ன?ஒருவரின் வாழ்க்கை அப்படி வெட்ட வெளிச்சமாக வெறுமையான பிறகு? உலக வேதனைகளை எல்லாம் புறந்தள்ளும் பேரானந்த அனுபவம் எனக்குள் வளர்ந்து கொண்டிருந்தது.மனப் புண்ணை அது ஆற்றிக் கொண் டிருந்தது. நான் வாழக் கற்றுக்கொண்டேன்.என் குழந்தையைக் காட்டின் நடுவில் கைவிட்டுவிட்டு நான் வரமாட்டேன்.பூமி பிளந்து என்னை விழுங்கி விடவேண்டுமென்று நிச்சயமாக பூமித்தாயிடம் கெஞ்சியிருக்க மாட்டேன். வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டிருக்க மாட்டேன்.
“நீயில்லாமல் எனக்கு வாழ்க்கையில்லை.நான் தனியளாகி, எனக்குப் பித்துப் பிடித்துவிடும்,”என்று அவனிடம் முன்பு சொன்னேன். அது அவனுக்கு எவ்வளவு வேடிக்கையாகத் தெரிந்திருக்கும் என்று இப்போது உணர்கிறேன்.கட்டுப்பாட்டிற்குள் அடங்காதது வாழ்க்கையின் வேகம். நிர்மூலம் என்பது தனக்குள் புதுப்பித்தலையும் கொண்டிருக்கிறது என்பதை எப்படி நான் உணராமல் போனேன்? யோசித்துப் பார்த்தால் எல்லோரும் தனியானவர்கள்தான். துஷ்யந்தனும். ஆத்மா யாருடனும் ஒட்டாதிருக்கட்டும்.இந்தப் புனிதமான காதல் அனுபவத்துக்காக நான் அவனுக்கு நன்றியோடு இருக்கவேண்டும்.இறந்தகாலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. எல்லா வேதனைகளும்,மகிழ்ச்சியும் ஒரு முடிவிற்கு வரக்கூடியவை. அவற்றைத் தோண்டிப் பார்ப்பதால் நம்முடைய சக்தியை அழிக்கும் பெரும்பளுவாக அல்லவா அது இருக்கிறது?
கசப்பை விழுங்கிவிடு.வேதனையைக் களைந்துவிடு. மனதை உற்சாகமாக வைத்துக் கொள்.வேகத்தில் அல்ல. படிப்படியாக ,ஆழமாக.
நானே எனக்கு குரு;நானே சிஷ்யை.
பிற்கு சர்வத்மனா பிறந்தான். காயம் ஆறியதா?எந்த வலியும் ஒரு பேச்சில் மறைவதில்லை.குறையலாம். நினைவிலிருந்து தவறலாம்.ஆனால் காலப் போக்கில் மட்டுமே.
அது நினைவிழந்த நிலைக்குள் ஆழ்ந்து விட்டதாக நான் நினைத்தேன்.
ஆனால் அது மேலாகவே நின்றிருந்தது.அது நிலவொளியோடு கலந்தேயிருந்தது.
துஷ்யந்தன் என் கண் முன்னால் !
அவன் நிஜமாகவே அங்கிருந்தானா? அங்கிருந்தவன் அவனா? உண்மையாகவே அவனா?ஆசிரமத்தின் மரங்கள்,செடிகள், கன்றுகள், பறவைகள், மான்,சுவர்கள் என்று எல்லாரிடமும் கேட்டேன்.ஏன்? சர்வத்மாவிடமும் கேட்டேன். ஆனால் சத்தமாக இல்லை.
ஐயோ! குழந்தை பரதன் ஏற்கெனவே துஷ்யந்தனின் தோள் மீது இருக்கிறான்.என் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம்பெருகியது. பூமித்தாயின் கோபத்தையும், தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு அவள் அதை அடக்கியதும்,அது வெறும் உணர்வு வெளிப்பாடல்ல என்று ரிஷி மாரீசன் அறிந்திருந்ததும் எனக்குத் தெரியும்.இயற்கையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உலகம் பற்றி யாருக்குக் கவலை ?
அவன் எனக்காக வந்தானா?
“தேவேந்திரனுக்கு உதவுவதற்காக வந்தானா.”
நெஞ்சே!ஏன் மென்மையான கேள்விகளைக் கேட்கிறாய்? மகிழ்ச்சி என்பது எந்த நேரத்திலும் தளரவும்,வாடவும் கூடியது.
இறுதியில் என் நினைவு வந்ததா?”
நினைவு—அந்த சொல்லின் சக்தி அப்படிப்பட்டது.அந்த ஆழ்ந்த சிந்தனை அவனைச் சூழ்ந்திருந்தது.
“நான் ஏன் உன்னிடமிருந்து உண்மையை மறைக்க வேண்டும்?”மனித உறவுகள் பற்றி நான் புரிந்து கொள்ளுமளவுக்கு அவன் பொறுமையாகப் பேசினான்.அவன் மிகவும் அறிவுடையவன்.அவனுடைய காதல்,காமம் ஆகியவையும் அந்த நீண்ட பேச்சில் இடம் பெற்றிருந்தன. அதன் விலை என்ன? அனுபவத்தைப் பெற்று விட்டு அதை அப்படியே அங்கே விட்டு விடுவதா?
அவனுடைய விளக்கத்தைப் புரிந்து கொள்ளுமளவுக்கு நான் பக்குவப்பட்டி ருந்தேன். மீண்டும் அவனை என்னால் காதலிக்க முடியாது என்று கூட நினைத்தேன்.ஆனால் இன்னும் ஆழமானதாக் காதல் எண்ணம் எனக்குள்ளி ருந்து வேதனைப்படுத்தியது.விஸ்வாமித்திரரின் மகள் – காதலால் வேதனைப்படும் ஆத்மாவாக எதையும் கட்டற்ற நிலையில் சொல்லிவிட முடியாது.காதலைவிடச் சுதந்திரமானது எதுவுமில்லை.
“என்னுடன் வா,” அன்பாகச் சொன்னான்
நான் போக வேண்டுமா? போவேனா?
ரிஷி மாரீசன் அமைதியாக இருந்தார். முடிவு என்னுடையதுதான்.
அவன் என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவனாக இருப்பது, என்னை அவனுக்குத் தவிர்க்க முடியாதவளாக ஆக்குமா? என்று நினைத்து வியந்து, உண்மையின் எல்லையில் நின்றேன். ஒருவரையொருவர் தவிர்க்க முடியாத நிலை என்பது இருக்கும் வரை. (அது எப்போதும் யதார்த்தமாக இருக்க முடி யாது.யாரும் யாருக்கும் தவிர்க்க முடியாதவர்களில்லை-ஆனால் விதிவிலக்காக சாஸ்வத உண்மைகள் இருக்கமுடியும்), எனினும் அது துணைக்குக் கூட பாவமாக இருக்கும் என்று எண்ணினேன்..
“சத்திரிய குல ரத்தம் என்னுடலில் ஓடுகிறது,” என்று அடிக்கடி சொல்வேன். என்ன ஒரு தற்பெருமை!அந்த கீரிடம் என்னைக் கவரவில்லை.
நான் போக மறுத்துவிட்டேன்.
அரசாட்சிக்கு யார் வருவார்களோ என்று அரசன் கவலைப்பட்டதாக அறிந்தேன்.என் ஆசீர்வாதத்தைப் பெற்றபடி பரதன் தன் தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு தேரில் ஏறினான்.
இப்போது பரதனின் வாழ்க்கை சரியாகிவிட்டதால் என் கவலை குறையலாம் என்று நினைத்தேன்.கவலை குறைவதற்கு பதிலாக அதிகமானது. இப்படியிருப்பது, அப்படியிருப்பது என்பது நமக்கு எந்த வழியையும் காட்டாது. அது ஒரு மாறுதலான நிலை. அந்த இரண்டிற்கிடையில் நாம் வெறும் மிதக்கும் சிறு துகள்கள்தான்.என்ன சொல்கிறீர்கள்?
பரதனைத் தழுவியபடி துஷ்யந்தன் போய்விட்டான்.அவன் எல்லையற்ற மகிழ்ச்சியுடையவனல்லவா?இந்த உலகம், இந்தக் கவிஞர், இந்த அறிவு—எல்லாம் அவனுடைய குழப்பங்களோடு இயங்கும், பிரித்து நியாயப்படுத்தும். அவர்களுக்கு உண்மையைப் பற்றிய கவலையில்லை.
உண்மையைப்பற்றிய கவலை எதனுடன் தேவையில்லை?
“நான் உன்னுடைய காதல் லீலைகளைப் பற்றி எப்போதும் பொறாமை கொண் டிருந்ததில்லை,” நான் அலறினேன்.
தேரின் சக்கரம் நகரை நோக்கித் திரும்பிவிட்டது.அவன் கண்டிப்பாக அதைக் கேட்டிருக்க மாட்டான்.
சூரியாஸ்தமனம் புதியதாக இருக்கும்வரை , வாழ்க்கை நமக்கு களைப்பைத் தராது.
*****
நான் இங்கு வந்தபோது மதியமாகிவிட்டது.இப்போது ஹேமகூட்டாவின் மீது மாலை வெளிச்சம் விழுந்தது.
ஹேமகூட்டாவின் மண் மேடையில் உட்கார்ந்தபடி தன் கதையை முடித்த சகுந்தலா கண்களை மூடிக்கொண்டு மண்சுவற்றில் சாய்ந்து கொண்டாள். வெள்ளியான நரை தலையுச்சியின் இரு பிரிவிலும் தெரிந்தது.
நான் விடை பெற மனமின்றி அவளையே உற்றுப் பார்த்தேன்.
அவள் யார்?காதலில் தொலைந்தவளா? பிரிந்து காதல் வேதனையில் வருந்துபவளா? தெய்வீகக் காதலுக்கானவளா?அல்லது இவை எல்லாவற்றின் கலவையுமா?
அவள் இவை ஒவ்வொன்றும், எல்லாவற்றின் கலவையாகவும் இருக்கலாம். எப்போதும் புத்துணர்வு கொண்ட இயற்கையைப் போல?
*****
சூரியன் மலைகளுக்கிடையே மறைந்தான்..
நான் மென்மையாக எழுந்தேன்.படிகளில்இறங்கினேன்.முற்றத்தைக் கடந்தேன் திரும்பிப் பார்த்தேன்.
இருட்டின் திரை. எதுவும் தெரியவில்லை.
பெருமூச்சு போல காற்று ஒலித்தது.
*****
நன்றி : Katha Bharati Series The Library of Indian Classics, Sahithya Akademy,An Afternoon With Shakunthala and Other Stories 2016