கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’ – ஒரு குறிப்பு

தருக்க மனம் சென்று சேரமுடியாத இடத்தைச் சென்று தீண்ட முடிவதாலேயே சில சாதாரண கதைகள் அசாதாரண கதைகளாகின்றன. தருக்கம் எனும்போது நாம் அறிந்த திட்டவட்டமான புற எதார்த்தம் எனும் அளவுகோலைப் பயன்படுத்தலாம். இதனாலேயே  நாம் புனைவுக்கான காரணங்களையும், முடிவுகளையும், புனைவின் இயல்புக்கு வெளியே வைத்து ஆராய முடியாது. சாதாரணமாக நாம் இகவாழ்வில் எடுக்கும் முடிவுகளை புனைவில் வரும் கதாபாத்திரங்கள் எடுக்காமல் போகலாம். அதை நாம் பிறரது நடவடிக்கைகளை அளக்கும் அளவுகோல்களைக் கொண்டு கணக்கிட முடியாது.
மேற்சொன்ன வரையறையைக் கொடுத்ததும் நம்மில் பலருக்கும் புனைவின் தேவைதான் என்ன எனும் குழப்பம் ஏற்பட்டுவிடும். நாம் தினந்தோறும் உண்டு களித்து உயிர்த்து வாழும் உலகை மதிப்பிட எடுத்துக்கொள்ளும் கருவிகளின் வல்லமையில் புனைவு நிற்பதில்லை. அதேபோல புனைவின் மறைபொருள்களில் வாழ்வின் புதிர்கள் அவிழ்வதில்லை. பின்னர் புனைவின் அழகியலுக்கு என்ன மதிப்பு? கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், அவர்களின் அலைக்கழிப்புகளுக்கும் அர்த்தம் என்ன?
நமது அன்றாட அனுபவத்தை மீறிய ஒரு கணம் கண்டடைய முடிவதே புனைவை விசேசமாக்குகிறது. அதில் நாம் அறிந்ததைத் தாண்டிய ஒரு அறிதல் இருக்கிறது. நம் தின வாழ்வில் சல்லிசாகத் தெரிகிற முடிவுகள் அங்கு புது அர்த்தத்தை அளிக்கும். அப்படி ஒரு முடிவை ஒருவர் எடுக்க நேர்ந்தால் அவரை விட மூடன் யாருமில்லை என நாம் சொல்லக்கூடும். ஆனால் மொழியும், புனைவு தருக்கமும் நம்முன் திறக்கும் உண்மையைவிட அக்கணத்தில் எதுவும் அழகு கிடையாது. அதை நாம் அறியும்போது வேறொரு அனுபவமாக மாற்றி நம்முடையது என சொந்தம் கொண்டாடத் தொடங்குகிறோம். பிற அனுபவங்களோடு அதைத் தொடர்புப்படுத்திப் பார்க்கிறோம். மு.தளையசிங்கம் “மூல அனுபவங்களை அளிக்காதது கலை,” என்கிறார்.
கு.ப.ரா.வின் “சிறிது வெளிச்சம்” கதை எளிமையாக நம் புற அனுபவ எல்லைகளைக் கடக்கிறது. பாதிக் கதை இயல்பாக இயங்குகிறது என்றால் மீதி யதார்த்தத்தை மீறிய தருக்கத்தோடு கட்டமைக்கப்படுகின்றது. கதையில் வரும் சாவித்திரிக்கு பதினெட்டு வயதுக்குள் அத்தனை அனுபவம். ஆண்களைப் பற்றியல்ல, மனிதர்களைப் பற்றி. அதில் ஆணும் பெண்ணும் அடக்கம். அதாவது மனிதனுக்கு நிரந்தர திருப்தி எதிலும் இருக்காது எனும் தீர்க்க தரிசனம். அதில் பெண்ணும் சேர்த்திதான். அவள் எதிர்பார்க்கும் திருப்தியும் நிரந்தரம் இல்லை எனும் நிலைபாட்டுக்கு வந்தவள் ‘போதுமடி,’ என்கிறாள். அது அவள் தனக்கு இட்டுக்கொள்ளும் கோடுதான்.
கதைசொல்லியின் அரவணைப்பில் ஒரு ஆதரவு கிடைக்கும் என எண்ணிய மறுநொடியே அவளுக்கு இந்த நிச்சயமின்மை உறைத்துவிட்டது. குறும்படம் லட்சுமி போல, “சும்மா ஜாலியா ஒருநாள் விடுதலையில் தளர்த்திக் கொள்வோம்,” என்றில்லாமல் சாவித்திரி இகவாழ்வில் ஆன்மிக விடுதலையான நித்திய சுகத்தை அடையமுடியாது எனும் தீர்க்கமான எண்ணத்தை அடைகிறாள். இதில் இன்னொன்றும் உள்ளது – நம் விடுதலை எப்போதும் நாம் பிறர் மீது சுமத்தும் உணர்வுகளை நம்பி உள்ளது. அதீத பாசம் வைப்பதும் காதல் வயப்படுவதும் கட்டுப்படுத்தும் இயல்புகள். ஆண்டாள் உத்தேசித்த நித்திய சுக காதல் நிலை விடுதலைக்கு பின்னான பிணைப்பு.  இகவாழ்வில் அதற்கு இடமில்லை. அம்மாடி போதுமடி என்பது  தன்னால் எழுத்தாளனுக்கு உருவாகியிருக்கும் உணர்வுக்கான உடைப்பும்கூட. அதை உடைக்காமல் அவனிடம் பச்சாதாபம் தேடினால் அவளுக்கு முழு விடுதலை இல்லை. பச்சை ஒளிரும் அவள் உடல் இளமைக்கு மட்டுமல்ல, அவளது ஆன்மிக உந்துதலுக்கான அடையாளமும்கூட. அந்தச் சுதந்திர விழைவு உடல் விழைவைத் தாண்டிய ஒன்று. அப்படிப்பட்டவளுக்கு வெளிச்சமே வேண்டாம். அணையா விளக்காகும் விவேகம் கொண்டவள்.
கு.ப.ரா இங்கு செய்வது என்ன? யதார்த்தமான பெண்ணாக வலம் வரும் சாவித்திரியின் அசாதாரண அகத்தெளிவின் மீது சிறு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார், முழு வெளிச்சத்தை உலகம் தாங்காது என்பது போல். அந்தச் சிறு வெளிச்சத்தைக் கொண்டு கதைசொல்லி தெளிவு பெறுகிறாரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. அவள் இறந்தபின், அவளிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விதமாக தங்களுக்குள் நடந்ததைச் சொல்லத் தொடங்குகிறார். ஆனால் அவள் மனதுக்குள் இன்னும் என்னென்ன குழப்பங்கள் இருந்தனவோ, அவை அவளது மார்பை எப்படி அடைத்துக் கொண்டனவோ, அவள்தான் என்னிடம் எதையும் முழுவதுமாகச் சொல்லவில்லையே, எனவும் குறைபட்டுக் கொள்கிறார்.
ஆனால் கதைசொல்லிக்கு இல்லாத தெளிவு ஆசிரியரான கு.ப.ரா படைத்த சாவித்திரிக்கு இருக்கிறது.
***