கம்பலை

சென்னை மாநகரில் பப்பாசி நடத்தும் 41 -வது புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். 1989-ல், பம்பாயில் இருந்து கோயம்புத்தூருக்கு நான் வந்த பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் இருபது முறைக்கும் குறையாமல் போயிருப்பேன். எப்போதும் ஓர் எழுத்தாளன் என்ற தகுதியில் அவர்கள் அழைத்து அல்ல. அதற்குள்ளும் ஒரு அரசியல் செயல்படுவது அறிவோம். ஆனால் ஒரு வாசகன் அல்லது வாடிக்கையாளன் எனும் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாதுதானே! பத்து ரூபாய் நுழைவுச் சீட்டுக்கு அடையாளம் அற்றவனாக ஒவ்வொரு நாளும் வரிசையில் நின்றிருக்கிறேன். இந்த முறை வாசலிலேயே எழுத்தாளர் காமுத்துரையைச் சந்தித்து, அவருடன் வந்த தோழர்களுடன் உரையாடி, நுழைவுச் சீட்டுக்கு வரிசையில் நிற்கப் போனபோது, முன்பின் அறிந்திராத தோழர் ஒருவர் கூட்டிப் போய் Writer என்று அச்சடிக்கப்பட்ட இலவச நுழைவு அட்டை தந்தார். நம்மையும் எழுத்தாளன் என்று அங்கீகரித்த செம்மாப்புடன் நடந்து நுழைவு வாசலில் அட்டையைக் காட்டி விட்டு, சட்டைப்பையில் அட்டையைத் திருப்பி வைத்துக் கொண்டேன்.
சமீப ஆண்டுகளாக கோவையில் இருந்து எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அல்லது நண்பர் எம். கோபாலகிருஷ்ணன் காரில் புறப்படுவோம் பொங்கல் விடுமுறை நாட்களை ஒட்டி. ஈரோட்டில் எழுத்தாளர் க. மோகனரங்கன் மற்றும் பாரதி புத்தக நிலையம் தோழர் இளங்கோ சேர்ந்து கொள்வார்கள். இரண்டு கோபால்களின் அலுவலக விடுதி உண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் சமீபத்தில். மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்குவோம். காரின் டிக்கி கொள்ளாத அளவு புத்தகக் கட்டுகளோடு திரும்புவோம். என்னையும் க. மோகனரங்கனையும் தவிர்த்து மற்ற  மூன்று பேரில் ஒருவர் சாரதியாக இருப்பார். நாம் பார்த்தனும் இல்லை அவர்கள் மூவரும் பார்த்தனுக்கு சாரதியும் இல்லை என்றாலும்.
1990-களில் என் புத்தகம் எதுவும் எந்த அரங்கிலும் விற்பனைக்கு இருந்ததில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் இன்றும் நினைவு கூர்கிறேன். இன்று நாற்பதுக்கும் அதிகமான என் நூல்களில், 30 புத்தகங்கள் வாங்கக் கிடைக்கின்றன. தமிழினி, விஜயா பதிப்பகம், காலச் சுவடு, நற்றிணை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ், உமா பதிப்பகம், விகடன் பிரசுரம், சூரியன் பதிப்பகம் எனும் அரங்குகளில். கர்வத்துடன் இதனை எழுதுகிறேனா என்று கேட்டால் ஆம் என்றே அறைவேன்.
2018-ம் ஆண்டில் புத்தகக் கண்காட்சிக்காக எனது சென்னைப் பயணம் இரு முறை அமைந்தது. ஜனவரி 12, 13, 14 நாட்களில் சந்தியா பதிப்பக வெளியீடான பிரான்சு நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘ரண களம்’ நாவல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு ஒரு முறை. ஜனவரி 19, 20 நாட்களில் ஆனந்த விகடன் கொண்டாட்டம் நிகழ்ச்சியை ஒட்டி மறுமுறை.
கண்காட்சியில் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது, புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பன உற்சாகமூட்டும் விடயங்கள். ‘வெட்டுப் பழி, குத்துப் பழி’ உள்ள எழுத்தாள சகாக்களைச் சந்தித்துக் கை குலுக்குவதும் உரையாடுவதும் மகிழ்ச்சி தருவன.
அப்படி உற்சாகமான மனநிலையில் இருந்ததோர் மாலையில், ஜாஜா என்று செல்லமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களால் அழைக்கப்படும் இராஜகோபாலன் அலைபேசியில் விளித்தார். உற்சாகமான நண்பர். நுட்பமான வாசகர், திறமையான சொற்பொழிவாளர். திறமையான சொற்பொழிவாளர் என நான் உரைக்கும்போது high pitch -ல் மேடைகளில் பொழியும் கேனன்களை- கேனன் எனில் பீரங்கி. கேணையன் என்று நீங்கள் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல- நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளலாகாது. இராஜகோபாலன் சில நூற்றாண்டுகளாகத் திருநெல்வேலியில் வதியும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நியோகிப் பிரிவு அந்தணர். அண்மையில் என் மகன் ஸ்ரீகாகுளத்தில் நியோகிப் பிரிவு அந்தணர் குடும்பத்தில் பெண் எடுத்ததால் எனக்கு உறவினரும் ஆவார். என்ன முறை என்று இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும். அதேபோல், அரிமளம் ஆயுர்வேத வைத்திய சாலையின் மூன்றாவது தலைமுறை மருத்துவர் டாக்டர் சுனீல் கிருஷ்ணன், திறமையான சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதுகிறவர், காந்தி பற்றிய கட்டுரைகளை மொழி பெயர்த்தவர், எனக்கு உறவினர் இன்று.
இராஜகோபாலனை அந்தணர் என்று சொன்னேன். அது, ‘அந்தணர் என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’ என்று வள்ளுவப் பேராசான் பயன்படுத்தும் பொருளில் ஆள்கிறேன். இராஜகோபாலன் கேட்டார், ‘சார், கண்ணீரும் கம்பலையும் என்று பல காலமாகப் பேசுகிறோம், எழுதுகிறோம். கண்ணீர் சரி, கம்பலைன்னா என்ன பொருள்? அது வட்டார வழக்கா? பழந்தமிழ்ச் சொல்லா?”
எனக்கும் உடனடியாக ஒரு பிடியும் கிட்டவில்லை. எல்லாச் சொல்லையும், பொருளையும் நினைவில் வைத்திருக்க நாமென்ன தமிழ்ப் பேராசிரியரா? சாதாரணமாக, சிறுவயது முதலே கேட்ட, பல தொடர்கதைகளில் வாசித்த சொற்றொடர் அது: ‘கண்ணீரும் கம்பலையுமாக வந்தாள்,” என்று. எனில் கம்பலை என்றால் என்ன பொருள்?
என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும், நான் சென்னைப் பல்கலைக் கழகத்து Tamil Lexicon துணைக் கொள்பவன் என்று. அந்தப் பேரகராதி கம்பலை எனும் சொல்லின் பொருளைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறது.
கம்பலை

  1. நடுக்கம் (Trembling)
  2. அச்சம் (Fear, Dread)
  3. துன்பம் (Distress, Suffering)
  4. சச்சரவு (Uproar, Tumult)
  5. ஆரவாரம் (Noise, Sound)
  6. யாழோசை
  7. மருத நிலம்

கம்பலை கட்டுதல் என்றால் கம்பலைப் படுதல், அதாவது சச்சரவு செய்தல் என்று பொருள் கொள்கிறார்கள். கம்பலை மாரி எனும் சொல்லுக்கு வேடர் வணங்கும் ஒரு பெண் தேவதை என்றும், கோபக்காரி என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரவாரம் மிகுந்த, நடுக்கம் தருகிற, துன்பம் ஏற்படுத்துகிற, சச்சரவு செய்கிற, ஆரவாரமான கம்பலை மாரிகள் இன்று அரசியல் சூழலில் வழிபடும் தெய்வங்கள்.
‘துன்பமும் சந்த ஒலியும் கம்பலை’ என்கிறது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு. இராஜகோபாலனிடம் சொன்னேன், “எப்பிடிப் பார்த்தாலும் ஆயிரம் வருசமா நம்மள்ட்ட இந்தச் சொல் புழங்குகிறது,” என்று. பிங்கல முனிவரின் தந்தை அல்லது குரு எனக் கருதப்படுகிற திவாகர முனிவரின் திவாகர நிகண்டு, தமிழின் முதல் நிகண்டு. அதுவும் கம்பலை எனும் சொல்லுக்கு மேற்சொன்ன பொருள்தான் தருகிறது.
‘இலக்கியச் சொல்லகராதி’ என்று நம்மிடம் ஒன்றுண்டு. சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை (1855- 1922) தொகுத்தது. 2009 -ம் ஆண்டில் சந்தியா நடராஜனால் மீள்பதிப்பு செய்யப்பட்டது. அந்த அகராதி கம்பலை- துன்பம், ஒலி, நடுக்கம், பயம் என்கிறது.
சரி! பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ’கம்பலை’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டதா? தமிழ் லெக்சிகன், மணிமேகலையில் இருந்து பாடல் வரியொன்றை மேற்கோள் தருகிறது. ‘வம்ப மாக்கள் கம்பலை மூதூர்’ என்று. இடம் ‘மலர் வனம் புக்க காதை! வம்ப மாக்கள் எனில் புதியோர், கம்பலை எனில் முழக்கம், மூதூர் எனில் மூதூரில் என்று உ.வெ.சா. பொருள் சொல்கிறார். ஆக, ஈண்டு, கம்பலை என்ற சொல், முழக்கம் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. எனவே, ‘கண்ணீரும் கம்பலையுமாக’ என்றால் கண்ணீர் சொரிய, அச்சத்துடனோ, நடுக்கத்துடனோ, துன்பத்துடனோ, ஆரவாரமாக முழங்கி அழுது கொண்டு வருதல் எனப் பொருள் கொள்ளலாம்.
இரட்டைக் காப்பியங்களான சிலம்புக்கும், மேகலைக்கும் முன்பாக கம்பலை எனும் சொல் ஆளப்பட்டுள்ளதா என்றொரு கேள்வி வந்தது. தேடிப் பார்த்ததில் திருக்குறள் கம்பலை எனும் சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. எதுவாயினும், ஒரு சொல் தேடலின்போது, கம்பனை எவ்விதம் கடந்து போவது? உங்களுக்கெல்லாம் கூகுளில் கம்பன் என்று அடித்தால் காலையில் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் மலர்ந்த மரமல்லி அல்லது பவள மல்லி போலத் தகவல்கள் உதிரக் கூடும். எனக்கு அந்தக் கல்வி இல்லை. தேடிப் பொறுக்க வேண்டும்.
கம்பராமாயணத்தின் கோவை கம்பன் கழகப் பதிப்பில், மிகைப் பாடல்கள் பிரிவில் ஒரு கம்பலை கண்டேன்.
‘தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,
வழங்கு கம்பலை’
என்பது பாடல்வரி. பேரி எனில் பேரிகை, பாண்டில் என்றொரு வாத்தியம், சங்கு ஆகிய இசைக்கருவிகள் வழங்கிய ஆரவாரம் என்று பொருள். கிட்கிந்தா காண்டத்தில், கார்மேகப் படலத்தில்,
‘கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலை’ என்றொரு பாடல் வரி. கல்வியில் சிறந்த ஆசிரியர், மாணவச் சிறாருக்குப் போதிக்கும்போது எழுந்த ஆரவாரம் என்று பொருள். யுத்த காண்டத்தில் ‘கடல் கொள் பேரொலிக் கம்பலை என்பதும் கண்டார்’ என்பதோர் பாடல் வரி. இங்கு முழக்கம் எனும் பொருளில் கம்பலை கையாளப்பட்டுள்ளது.
கம்பித்தல் எனும் சொல், நடுங்குதல் எனும் பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. பாலகாண்டத்தில், ‘கம்பித்து அலை ஏறி நீருறு கலம் ஒத்து’ என்ற பாடல் வரி உண்டு. கம்பித்த எனும் சொல் அசைதல், நடுக்கமுறல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கம்பிப்பதோர் வன் துயர் கண்டியேனால்’ என்கிறது யுத்த காண்டத்துப் பாடல் வரி.
அடுத்த நமது தேடல் சங்கப் பாடல்கள் என்று அறியப்பட்ட பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களினுள் ‘கம்பலை’ என்பது கையாளப்பட்டுள்ளதா என்பது. A Word Index For Cankam Literature எனும் நூல், Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. 1992 இல் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. இதனை ‘சங்க இலக்கியச் சொற்றொகை’ என்றும் சொல்லலாம். இதன் மறுபதிப்பு Institute of Asian Studies நிறுவனத்தாரால் 1993 இல் வெளியிடப்பட்டது. என்னிடமிருப்பது அந்த நூலின் இரண்டாம் பதிப்பு. 2007-ம் ஆண்டில் வெளியானது. இந்த நூலின் உடன் பிறப்பாக, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ‘சங்க இலக்கியச் சொல்லடைவு’ எனும் நூலை 2007 ஆம் ஆண்டு வெளியிட்டது. தொகுப்பாசிரியர், முனைவர் பெ.மாதையன் அவர்கள்.
இந்த நூல்களினுள் தேடினால், ஒரு சொல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களினுள் எவற்றுள் எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனும் தகவல் கிடைக்கும். சொல் கிடைக்குமே அன்றி, பொருள் கிட்டாது. நான் பெரும்பாலும் கையாள்வது Thomas Lehman and Thomas Malten  தொகுத்த சொற்றொகையைத் தான். என் தேடலின் போது, கம்பலை எனும் சொல் அக நானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புற நானூறு, பெரும் பாணாற்றுப் படை, மலைபடு கடாம், மதுரைக் காஞ்சி ஆகிய நூல்களில் பயன்படுத்தப் பட்டது என அறிந்தேன்.
கம்பலை எனும் சொல்லை பதிற்றுப் பத்து, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி ஆகிய நூல்கள் ஆரவாரம் எனும் பொருளிலும், பதிற்றுப் பத்து பேரொலி எனும் பொருளிலும் ஆள்கின்றன.
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படை,
‘கணம் சால் வேழம் கதழ்வுற் றாஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை’
என்கிறது. பெருங்கூட்டத்தின் தலைவனாகிய யானை பயந்து பிளிறுவதைப் போன்று கரும்பு அரைக்கும் ஆலைகளின் குறையாத பேரரவம் ஒலிக்கிறது என்பது பொருள்.
அக நானூற்றில், மருதம் பாடிய இளங்கடுங்கோ, ‘களிறு கவர் கம்பலை போல’ என்கிறார். ஆண் யானைகளைக் கவர்ந்த போது ஏற்பட்ட ஆரவாரம் போல என்று பொருள் தரும். மேலும் பெயர் தரப்படாத புலவர் ஒருவர் எழுதிய பாடல் ஒன்று.
‘கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறு விளிப் படுத்த கம்பலை வெரீஇ’
என்று நீளும். கயந்தலை எனில் இளைய யானைக் கன்று என்று பொருள். ‘அஞ்சாறு கண்ணுங் கயந்தலைகள்’ என்றால் ஐந்தாறு சிறு பிள்ளைகள் என்று பொருள். எனது ‘கோம்பை’ எனும் சிறுகதையில் ‘கயந்தலை’ என்ற சொல்லை நான் ஆண்டிருக்கிறேன். இன்றும் அஃதோர் நாஞ்சில் நாட்டுத் தமிழ்ச் சொல். பயம்பு என்றால் குழி. களிறு- ஆண்யானை. பிடி-பெண்யானை, கயந்தலை- யானைக் கன்று. இவை மூன்றும் காட்டு வழியில் நடக்கும்போது, பிடியும் கயந்தலையும் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து விடுகின்றன. அப்போது களிறு தனது இனத்தை அழைக்க, துன்பத்துடன் பிளிறுகிறது. அந்த விளி கம்பலை எனும் சொல்லால் குறிக்கப் பெறுகின்றது.
அக நானூற்றிலேயே பரணர் பாடல், ‘வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு’ என்கிறது. புதிதாய் வந்து இறங்கிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரம் என்பது பொருள். நக்கீரர் பாடல்,
‘எல் உமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே’
என்கிறது. எல்- ஒளி, ஆவணம்- கடைத்தெரு. கடைத்தெருவில் பகலில் எழும் ஆரவாரம் போன்று, (ஊரில் பழிச்சொல்) கல்லென ஒலித்து ஆரவாரம் செய்யும்படியாகச் செய்து (தலைவன்) பிரிந்து போனான், என்பது பொருள்.
புற நானூற்றில், கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சேரமான் குட்டுவன் கோதையைப் பாடும்போது, ‘எம் கோன் இருந்த கம்பலை மூதூர்’ என்கிறார். பொருள்- எம் அரசன் இருந்த ஆரவாரம் மிகுந்த பழைய ஊர் என்பது. வேள் பாரியைக் கபிலர் பாடும்போது, ‘பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட’ என்பார். தோற்று ஓடும் பகைவர்களின் காலின் கழல்கள் எழுப்பும் பேரொலி கண்ட’ என்பது பொருள்.
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகிறார் மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி எனும் பத்துப்பாட்டு நூலில். அவர் பாடல், ‘நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’ என்னும். உயர்ந்து வளர்ந்து உரசி ஓசை ஏற்படுத்தும் நெற்பயிரை அரியும் கதிர் அறுப்போர் ஏற்படுத்தும் ஆரவாரம் என்று பொருள்படும் பாடல் வரி. அவரே, ‘நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை’ என்பார். மீன் வேட்டத்துக்குச் சென்ற பரதவர், நிரை நிரையாகக் கட்டு மரங்களைக் கரை கொண்டு சேர்க்கும்போது ஏற்படும் ஆரவாரம் என்பது பொருள். மேலும், ‘நாளங்காடி நனந்தலைக் கம்பலை’ என்பார். நாள் அங்காடி என்றால் பகலில் இயங்கும் கடைத்தெரு. அல்லங்காடி எனில் இரவில் இயங்கும் கடைத்தெரு. பகலில் அகன்ற இடம் கொண்ட கடைத்தெருவின் பேரோசை என்பது பொருள். அவரே, ‘ அல் அங்காடி அழிதரு கம்பலை’ என்பார். அந்திக்கடை அழியும்போது ஏற்படும் பேரரவம் அது. மாங்குடி மருதனே மறுபடி சொல்கிறார்,
‘உரையும் பாட்டும் ஆட்டும் விரைகி
வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி’ என்று.
புகழ்மொழிகளும் புனைந்துரையும் பாட்டும் ஆட்டமும் விரவி, வெவ்வேறு பேரொலிகள் எல்லாம் வெறி கொண்டு கலந்து ஒலித்தன என்பது பொருள்.
இருக்கட்டும். சங்க காலத்தில் இருந்தே தமிழில் கம்பலை எனும் சொல் புழங்குகின்றது. அதற்கு முன்பு, தொல்காப்பியத்தில் உண்டா? தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 500 முதல் கி.மு. 7000 வரை வரையறுக்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும். நான் இரண்டும் இல்லை. கவி மும்முடிச் சோழனும் இல்லை. எனவே அந்த ஆய்வுக்குள் புகுந்தால் அபிமன்யு ஆகி விடுவேன். என்றாலும் தேடுவதற்கு என்ன தடை?
தொல்காப்பியச் சொல்லதிகாரம், உரியியல் பிரிவின் நூற்பா பேசுகிறது.
‘கம்பலை, சும்மை. கலியே, அழுங்கர்
என்றிவை நான்கும் அரவப் பொருள்’
என்று. அரவம் என்றால் பாம்பு என்றும் பொருள், ஓசை என்றும் பொருள். கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் ஆகிய நான்கு சொற்களும் ஆரவாரம், பேரோசை எனும் பொருள் குறிப்பன என்பது உரை.
எனதாச்சரியம், கண்ணீரும் கம்பலையும் எனும் சொற்றொடரின், கம்பலை எனும் சொல் பல்லாயிரமாண்டு காலம் கடந்து இன்றும் நம் வழக்கில் இன்னும் வாழ்கிறது. சிலர் அதைக் கொச்சை மொழி என்றும் வட்டார வழக்கு என்றும் புரிந்து கொண்டிருப்பார்கள். எழுபது வயதும், நாற்பத்தைந்து நூல்களும் எழுதிய நமக்கே, கம்பலை எனும் சொல்லுக்குப் பொருள் கேட்டால் அகராதி பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஆக, கண்ணீரும் கம்பலையும் என்று இன்றும் மக்கள் புழங்கும்போது, கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகச் சோர, அழுகையும் அரற்றலும், ஆவலாதியும், கூப்பாடுமாக இருத்தல் என்ற பொருள் தெளிவாகத் தொனிக்கிறது.
நன்றி, ஜாஜா என்ற ராஜகோபாலன்!
23 ஜனவரி 2018
***
பி.கு.: இக்கட்டுரையின் பிற்சேர்க்கையை இதழ் 187ல் காணலாம் – கம்பலை-பிற்சேர்க்கை

3 Replies to “கம்பலை”

  1. ஒரு விருந்தில் இலை போட்டவனுக்கு இவ்வளவு நன்றியா?
    நீங்கள் விருந்து சமைத்து பரிமாறி இருக்கிறீர்கள். நான்தான் என் வணக்கங்களைத் தெரிவிக்க வேண்டும். அடியேன் தண்டத்துக்கு ஆசிகள் வேண்டும்.
    அன்புடன்,
    ராஜகோபாலன், சென்னை

  2. ஒரு வார்த்தை. நாஞ்சில் சார் அப்படியே பொங்கி எழ … ஒரு அருமையான விருந்து. ஜா ஜா விற்கு தான் நன்றி. ரொம்ப நாளா நாஞ்சில் சார் … சொல்வனம் பக்கம் ஆளே காணோம் அதனால் ரெட்டிப்பு சந்தோசம் : )

  3. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,
    அருமையான தேடல், தமிழில் எத்தனை வளம் , தொட்டனைத்தூறும் மணற்கேணி போல ! தோண்டுவதற்கும் உங்களை மாதிரி ஒருவர் வர வேண்டும் ! இன்னும் ஒரு பக்கத்து வீட்டுச் சொல் – “கம்பன” ( Kampana) என்பது வடமொழியில் நடுக்கம், அசைவு என்ற பொருளில் வரும். கர்னாடக இசையில் சுரங்களை அசைக்கும் அழகியலில் “கம்பித கமகம்’ (Kampitha gamakam) என்பது மிக முக்கியமானது. இங்கே கர்னாடகத்தில் பண்பலை வானொலியில், உதாரணமாக கம்பனாங்கா 100.1 என்று அதிர்வு எண்ணை ( Frequency) அறிவிப்பார்கள். தமிழிலும் “சிரக்கம்பம்” என்பது ஆமோதித்து அல்லது பாராட்டி தலை அசைப்பது என்ற பொருளில் பயிலும் !
    சிரக்கம்பம், கரக்கம்பம், வணக்கத்துடன்,
    தருணாதித்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.