எம். எல். – அத்தியாயம் 15

சாரு மஜும்தார் கல்கத்தாவுக்கு வந்து அங்கிருந்து சிலிகுரிக்குப் போய்ச் சேருவதற்குள் நான்கு நாட்களாகிவிட்டன. சிலிகுரியில் அவரைத் தேடி தினமும் போலீஸார் வந்ததாக அவருடைய மனைவி லீலா சொன்னாள். அவருடைய அப்பாவுடைய உடல் நிலை வேறு ரொம்ப மோசமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் உதவக் கூடியவர்கள் தான். ஆனால், அவர்களிடம் உதவி கேட்க சாறு மஜும்தாருடைய மனம் இடங்கொடுக்கவில்லை. கட்சியிலிருந்து வெளியே வந்துவிட்ட பிறகு அவர்களிடம் போய் கையேந்துவது சரியில்லை என்று நினைத்தார். லீலாவுடைய மாமி கோபால்பூரில் இருந்தார். அவரிடம் கேட்டால் உதவி செய்வார் என்று சொன்னாள் லீலா.
“அங்கெல்லாம் நீ போய் அவமானப்பட வேண்டாம்…” என்றார்.
“அப்போ என்னதான் பண்றது?”  என்று கேட்டாள் லீலா.
“சிலிகுரி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலேயே சேர்த்திடுவோம்…” என்றார்.
“கவர்மெண்ட் கிட்டே உதவி கேக்கறது மட்டும் அவமானமில்லையா?”
“அப்பா, இந்த நாட்டின் குடிமகன்தானே?… அவர் சிகிச்சைக்காக சர்க்கார் ஆஸ்பத்திரியிலே சேருகிறது தப்பு ஒண்ணுமில்லே…”
லீலாவுக்கு மாமனாருக்கு நல்லவிதமாகச் சிகிச்சை செய்ய வேண்டுமென்று ஆசை. கவர்மெண்ட் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கடைசியில் அவருக்கு சர்க்கார் ஆஸ்பத்திரி சிகிச்சைதான் வாய்த்தது. அப்பாவைக் குதிரை வண்டியில் ஏற்றும்போது அவருடைய பால்ய காலம் ஞாபகத்திற்கு வந்தது. அப்பா அவரைச் சைக்கிளில் பின்னால் வைத்து பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிக்கொண்டு போவார். என்ன வேலை இருந்தாலும் சாயந்திரம் பள்ளிக்கூடம் விடுகிற நேரத்துக்கு வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்து விடுவார். அப்பா அவரைக் கடிந்து கொண்டதே இல்லை.
அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்த பிறகு வீட்டிற்கு தாரியாகஞ்ச் போலீஸ் நிலையத்திலிருந்து தேடி வந்தார்கள். லீலாவை அப்பாவைக் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு போலீஸ்காரர்களுடன் செல்லும் போது இரவு எட்டரை மணிக்கு மேலிருக்கும். ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே இன்ஸ்பெக்டர், “இத்தனை நாளும் எங்கே போயிருந்தாய்?” என்றுதான் கேட்டார்.
“நண்பர்களுடன் இருந்தேன்.”
“நண்பர்களா? யார் அவர்கள்? எந்த ஊரில் இருக்கிறார்கள்?”
“எனக்குப் பல ஊர்களில் பல நண்பர்கள் உண்டு.”
“கனு ஸன்யால் உன்னுடன் வந்தாரா?”
“இல்லை”
“நீ கல்கத்தாவில் இந்து பிரசிடென்சி காலேஜுக்குப் போனது ஏன்?”
“அங்கே எனது நண்பர்கள் இருக்கிறார்கள்…”
 
“நீ சீன விசுவாசியா?”
“இல்லை.”
“நீ தினசரி பீகிங் ரேடியோ கேட்பதாக எங்களுக்குத் தகவல் இருக்கிறது.”
“ரேடியோ கேட்பதில் என்ன தவறு?”
“சீனாவுடன் சேர்ந்து புரட்சி செய்யப் போகிறாயா?…”
“எனக்குத் தெரியாது. நீங்கள்தான் சொல்லுகிறீர்கள்.”
“அப்படியானால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஏன் விலகினாய்?”
“அது என் சுய விருப்பம் சார்ந்தது.”
“நக்ஸல்பாரி கலவரத்தை நீதானே தூண்டி விட்டாய்?”
“எனக்கும் விவசாயிகளின் எழுச்சிக்கும் சம்பந்தம் இல்லை.”
“அதை நீ ஆதரிக்கிறாயா?”
“ஆம், ஆதரிக்கிறேன்.”
“அப்படியானால் நீ புரட்சிக்காரன் தானே?”
“நான் அடைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவாளன். நான் இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டுவர ஆசைப்படுகிறேன்…”
இந்த விசாரணை நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்தது. மூன்று போலீஸ் அதிகாரிகள் மாறி மாறி அவரை விசாரித்தார்கள். அவருக்கு நாவெல்லாம் வறண்டது. குடிக்கத் தண்ணீர் கேட்டார். அந்த விசாரணையை ஒரு ரைட்டர் எழுதிக் கொண்டு வந்து அவரிடம் அந்தக் காகிதங்களில் கையெழுத்துப் போடச்சொன்னார். அவர் தொழில்சங்கங்களில் பணி புரிந்தவர். அதனால் சட்ட விதிமுறைகள் அவருக்குத்தெரியும். அதில் கையெழுத்துப் போட மறுத்தார்.
அந்தப் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லிவிட்டார். தினசரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, அவர் ஊரில்தான் இருக்கிறார் என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்றார் இன்ஸ்பெக்டர். அதுவும் முடியாது என்று சொல்லிவிட்டார். நீதிமன்றத்தில் தவிர வேறு எங்கும் ஆஜராக முடியாது என்றார். ‘என்னைத் தொடர்ந்து துன்புறுத்தினால், நான் உங்கள் மீது சட்டபூர்வமாக வழக்குத் தொடர வேண்டியதிருக்கும்,’ என்று சொன்னபிறகுதான், அந்த அதிகாரிகள் பின் வாங்கினார்கள்.
போலீஸாரைப் பொறுத்தவரை, அவர்களுக்கு சட்டம் ஒழுங்குதான் முக்கியம். சாரு மஜும்தாரால் ஏதும் விவகாரம் வருமோ என்று உள்துறை கருதியது. அவருடைய நடவடிக்கைகளை மேற்கு வாங்க அரசு கவனமாகத்தான் கண்காணிக்கிறது. ஆனால், அவர் மீது ராஜத்துரோக வழக்குப்போட அரசு யோசித்தது. அவர் மீது பெரிதாக ஏதாவது வழக்குத்தொடரும் வரை அவரை ஒரு கட்டுக்குள் வைக்க அரசு நினைத்தது. அதனால்தான் தாரியாகஞ்ச் ஸ்டேஷனில் அவரை மிரட்டிப்பணிய வைக்க முயற்சி நடந்தது.
சாரு மஜும்தார், வீட்டுக்கு வரும்போது பொழுது விடிந்து விட்டது. வீட்டுக்கு வந்ததும் வேகவேகமாக சிலருக்குக் கடிதங்கள் எழுதினார். அவர்களில் ஒருவர் குன்னிக்கல் நாராயணன். இன்னொருவர் அப்பு. அந்தக் கடிதங்களை சிலிகுரி தபாலாபீசில் போடக்கூடாது என்று முடிவு செய்தார். அவரே தேநீர் தயாரித்துக் குடித்தார். ஒரு பாத்திரத்தில் லீலாவுக்கும், அப்பாவுக்கும் தேநீரை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனார். இரவு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று வந்ததை லீலாவிடம் கூறினார். அப்பா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்.
அந்த ஆஸ்பத்திரி ஒரு பிரிட்டீஷ் காலத்துக் கட்டிடம். பெரும்பான்மையும் எல்லா நோயாளிகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
“லீலா! நான் அலிபுரி வரை போக வேண்டிய வேலை இருக்கிறது…”
“எதற்கு?”
“அங்கே போஸ்ட் ஆபீஸில் ஒரு வேலை இருக்கிறது. நீ நர்ஸிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய் சாப்பாடு தயார் செய்… நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்.”
இவ்வளவு காலையில் அலிபுரியில் என்ன வேலை என்று கேட்க நினைத்தாள் லீலா. ஆனால், கேட்கவில்லை. அவரையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். தேநீரைக் குடித்து விட்டு டம்ளரை ஜன்னல் திண்டின் மீது வைத்தாள்.
* * *
அன்று சாரு மஜும்தாரை மதுரைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அப்பு நேரே தன் கிராமத்துக்குத் திரும்ப முடிவு செய்தார். அந்த ஊரில் அவருக்கு முக்கியமான வேலை எதுவுமில்லை. இருக்கிற நிலபுலன்களை அம்மா தான் நிர்வகித்து வந்தாள்.  அம்மாவிடமிருந்து மாதத்திற்கு இரண்டு லெட்டராவது வந்துவிடும். நிலத்தில் என்ன வேலை நடக்கிறது, மாடு எப்போது கன்று போடும், புல் அறுக்கப் போன தனம் பாம்பு கடித்து இறந்தது பற்றி, காளியம்மன் கோவிலில் வரப்போகிற திருவிழா பற்றி என்று, அத்தனை ஊர் விவகாரங்களையும் ஒன்று விடாமல் அண்ணனிடம் சொல்லி கடிதம் எழுதிவிடுவாள். அதனால், ஊரில் அவர் இல்லாவிட்டாலும் ஊரில் என்ன நடக்கிறதென்பது அப்புவுக்கு தெரியும். இருந்தும் அவர் கிராமத்துக்குப் போகக் காரணம் அவரையே சுற்றி சுற்றி வரும் மஃப்டி போலீஸ்காரரின் பிடியிலிருந்து தப்பத்தான்.
கோயமுத்தூரிலிருந்து சாரு மஜும்தாரையும், கிட்டனையும் மதுரைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரும் தர்மபுரிக்குப் பஸ் ஏறி விட்டார். தர்மபுரியில் திப்பண்ணன் வீட்டு முகவரிக்குத்தான் அவருக்கு அம்மா லெட்டர் எழுதுவாள். ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்ததால் திப்பண்ணன் வீட்டுக்கு அவர் இரண்டு மாதங்களாக வரவில்லை. தர்மபுரிக்கு வந்ததும் அம்மாவிடமிருந்து வந்திருந்த நான்கு கடிதங்களையும் படித்தார். வழக்கமான கடிதங்கள்தான். அந்தக் கடிதங்கள் ஊரிலிருக்கிற அம்மாவையும், அண்ணனையும் நினைவுபடுத்தின.
திப்பண்ணன் டூட்டி முடிந்து பஸ் டிப்போவிலிருந்து வந்ததும், அவன் மனைவி நஞ்சம்மா இரண்டு, பேருக்கும் சாப்பாடு போட்டாள். சாப்பிட்ட பிறகு இரண்டு பெரும் சிறிது நேரம் சங்க விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அப்பு அவனிடம், மார்க்ஸியத்தில் நம்பிக்கையுள்ள தொழிலாளர்களைப் பற்றி கேட்டார். அவர் சொன்னபடியே திப்பண்ணன் நாலு பேரை சாயந்திரம் வீட்டுக்கு அழைத்து வந்தான். அவர்களுக்கு அப்பு வகுப்பெடுத்தார். நான்கு நாட்கள் தினசரி சாயந்திரம் தோறும் மார்க்ஸிய வகுப்புகள் நடந்தன.
தர்மபுரி போலீஸாருக்கு திப்பண்ணனைப் பற்றியும் அப்புவைப் பற்றியும் தெரியும். அப்பு திப்பண்ணன் வீட்டிலிருக்கிறார் என்ற தகவலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பஸ் தொழிலாளர்கள் தினசரி மாலை திப்பண்ணன் வீட்டுக்கு வந்து போவதும் அவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
போலீஸார் உஷாராகியிருப்பார்கள் என்று அப்புவும் நினைத்தார். இருந்தாலும் சாரு மஜும்தாரிடம் சொல்லியிருந்தபடி கட்சியைக் கட்டமைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. திப்பண்ணன் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மாட்டுப் பண்ணை இருந்தது. அந்தப் பண்ணை வாசலில் எப்போதும் ஒருவர் சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்திக் கண்காணித்துக் கொண்டிருந்தார். மார்க்ஸிய வகுப்பு முடிந்து அந்த நாலு பேருமே போன பிறகு அவரும் கிளம்பிவிடுவார். ஒரு நாள் இரவு ஏழு மணிக்கு மேல் திப்பண்ணன் வீட்டிலிருந்து அப்பு தனது சொந்த ஊருக்குப் போகப் புறப்பட்டார்.
நேரே பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பஸ்ஸைப் பிடிக்காமல், பல தெருக்களைச் சுற்றி ஊருக்கு வெளியே இருந்த பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறினார். சாரு மஜும்தாரும் சரி, அப்புவும் சரி அவர்களுக்கு விருப்பமான அந்த மார்க்ஸிய, லெனினிய, மாவோயிஸ தத்துவங்களை இந்தியாவில் அமல்படுத்தி சோஷலிஸ அரசை அமைக்கிற கனவை விடாப்பிடியாக நம்பினார்கள். அதற்காகப் படுகிற சிரமங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
அரசாங்கத்துக்கும், போலீஸுக்கும் பயந்து மறைமுகமாக அவர்கள் செய்கிற காரியங்களை அவர்கள் பெரிய விஷயமாக நினைத்தார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவர்களுடைய புரட்சிகர சோஷலிஸத்துக்கு ஆதரவு தருகிறவர்கள் சில நூறு பேர் கூட இருக்கமாட்டார்கள். ஆனாலும், அவர்களுடைய எண்ணமெல்லாம் ஒரு நாள் ஈடேறும் என்று குருட்டுத்தனமாக நம்பினார்கள். அந்தக்குருட்டுத்தனம் தான் அவர்களை இயக்கியது.
 
உலகமே நம்பிக்கையில்தானே இயங்குகிறது? எல்லோரும் தங்களுக்கு விருப்பமானவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழுகிறார்கள். கண்மூடித்தனமாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டும், அதை நம்ப வேண்டும். அது அவர்களை வாழத்தூண்டுகிறது. சீதாபவனத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பிடித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். சீதா, சரோஜாவுக்கு என்றாவது சித்தம் தெளியும் என்று நினைத்தாள். அந்த வீட்டின் மூத்த மருமகளான ராஜி — அத்தை, மாமா, கணவன் மூவருக்கும் உதவியாக இருப்பதே போதுமென்று நினைத்தாள். அவள் கணவன் செண்பகக் குத்தாலம், அப்பா நடத்திவரும் ஜவுளிக் கடையே உலகம் என்று நினைத்தான்.
சுப்பிரமணிய பிள்ளை அந்தக் குடும்பத்தையும், கடையையும் ஒழுங்காக நிர்வகித்தால் போதும் என்று வாழ்ந்து வந்தார். அதற்குத்தான் தினசரி வீட்டில் செய்கிற பூஜை உதவும் என்று நினைத்தார். அவருடைய பக்தியே குடும்பத்தையும், அந்தச் சீதாபவனத்தையும், கடையையும் முன்னிட்டே இருந்தது. சரோஜாவுக்கு ஒரு ஆசை இருந்தது. அது சமயம் கிடைக்கும் போதெல்லாம் தெருவுக்குப் போய் நின்று வேடிக்கை பார்ப்பதில் இருந்தது. சோமுவுக்குப் புஸ்தகங்களே உலகமாக இருந்தது. வாசிப்பதில் தீராத மோகம் அவனுக்கு. மீனாட்சி கூட அப்புறம்தான். மீனாட்சியும் அவளுடைய அத்தை, மாமா, புருஷன், இவர்களே எல்லாம் என்றிருந்தாள்.
மேலமாசி வீதியில் கோபால் பிள்ளை கடந்த கால அரசியல் நினைவுகளிலும், நிகழ்கால அரசியல் உலகிலும் வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் ராமசாமியும், இளைய மகன் பிச்சையாவும் எப்படியாவது வாழ்க்கை ஓடினால் போதும் என்று இருந்தார்கள். செவ்வானத்தில் வேலை பார்த்த நாராயணன், இதை விட நல்ல வேலை என்றாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே காலத்தை ஒட்டிக்கொண்டிருந்தான்.
சாரு மஜும்தாரும், அப்புவும் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது போல் இந்தியாவிலும் புரட்சி வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். சாரு மஜும்தார் புரட்சிக்கு மக்களை தயார் செய்வதுடன், நிலப்பிரபுக்களை ஒழிக்கவேண்டும் என்று நினைத்தார். முதல் எதிரி நிலப்பிரபுக்கள் தான் என்று கருதினார். அப்புவும் கண்மூடித்தனமாக சாரு மஜும்தாரை அப்படியே பின்பற்றினார். இதற்குத்தான் அவர்கள் ஆட்களைத் திரட்டுகிற வேலையில் ஈடுபட்டார்கள்.
ஆனால் ஜனங்கள், காலங்காலமாக வாழ்க்கை நடத்திவருவது வருவது போலவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடும்பம், வேலை அல்லது தொழில், உறவுகள், நண்பர்கள் என்று தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையில் எந்தத் தவறும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. ஜனங்களுடைய மனோபாவம் சாரு மஜும்தாருக்கும், கனு ஸன்யால், அப்புவுக்கும் கூடத்தெரியும். ஆனாலும், சீனப்புரட்சி, மாஸே துங், மார்க்ஸ், லெனின் இவர்களுடைய கொள்கைகள், வழிமுறைகளில் இருந்த அவர்களுடைய கண்மூடித்தனமான பற்றுதலும், நம்பிக்கையும் அவர்களை வழி நடத்தியது. தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், உலகிலுள்ள எல்லா மக்களையும் போல அவர்களும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு, அதுவே சதம் என்றுதான் வாழ்ந்தார்கள்.
(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.