பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்

தர்மபுரி பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே செல்லும் பாதையில் சற்று தூரம் பயணித்து, இடது புறம் திரும்பி நெரிசலான சந்துகளுக்கிடையே நடந்தோம். வழியெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள். குறுகலான சந்தை கடந்து வீட்டை அடையாளம் கண்டு கொண்டு உள்ளே நுழைந்தோம். வரவேற்பறையில் அதே மாறா புன்னகையுடன் கூடிய கோபி, போட்டோவில் மாலையோடு இருந்தார். வெளியே தெருவெங்கும் கோலாகலம். பக்கத்து தெருவில் உள்ள  குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய கோயிலின் தைப்பூச விழாக் கொண்டாட்டங்கள். ‘நேத்துதான் கொடியேறிச்சு.. வர்ற ஒண்ணாம் தேதி தேர்.  வருஷா வருஷம் எங்கிருந்தாலும் ஊருக்கு வந்துடுவான். இனிமே எப்படி..  பேச வார்த்தையின்றி தவித்தார் தணிகாசலம், கோபியின் அப்பா.

சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார். கோபியின் மறைவு பற்றிய போஸ்டரை முக நூலில் கண்டதும் வலைப்பதிவர் முகமூடி ராஜேஷ் தொடர்பு கொண்டார். ஆசிரியர் தணிகாசலத்தின் முன்னாள் மாணவரான முகமூடி ராஜேஷ், தமிழ் வலைப்பதிவு வட்டாரங்கள் மூலமாக கோபியுடன் 15 ஆண்டுகால பழக்கமிருந்தும் அவரது மறைவுக்குப் பின்னரே இது தெரிய வந்திருக்கிறது. இணையத்தின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.

தர்மபுரி, ஓசூர், சென்னை போன்ற இடங்களில் படித்துவிட்டு,  தகவல் தொழில் நுட்ப பணி தொடர்பாக  நியூயார்க், ஹைதராபாத், சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் பணியாற்றினாலும் கோபியின் நட்பு வட்டாரம் சிறிய அளவிலானது. ஆனால், இணையம் வழியாக முகமறியாத பலரோடு தொடர்பு கொண்டிருந்தார். ‘தமிழை இன்னும் எளிய மக்களுக்கு எடுத்துச் செல்வதுதான் கோபி அண்ணாவின் நோக்கமாக இருந்தது. அது பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருந்தார்என்கிறார் தகடூர் கோபியின் நெருங்கிய நண்பரும், தொடு வானம் உள்ளிட்ட திட்டங்களில் கோபியோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பாளர்  செல்வ முரளி. அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதலின் போது சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்திருக்கிறார். அங்கிருந்து தப்பித்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுவார். உள்ளூரில் இருப்பதே உத்தமம் என்று முடிவுக்கு வந்தவராய் 2002ல்  திரும்பி வந்தார். 2011 வரை ஐதராபாத்தில் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

1999 தொடங்கி யாகூ மடலாடற் குழுக்களின் மூலமாக இணையத்தில் தமிழ் எழுதுபவர்களிடம் தொடர்பில் இருந்தார். அச்சுப் பத்திரிக்கைகள் இணையத்தில் தமிழில் வர ஆரம்பித்திருந்த நேரம். ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு வகையான எழுத்துருவை பயன்படுத்திக்கொண்டிருந்தன. சம்பந்தப்பட்ட தளங்களில் வெளியான கட்டுரைகளை படிக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட எழுத்துருவை முதலில் தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அப்போதெல்லாம் வீடுகளில் இணைய வசதி கிடையாது. பிரவுசிங் செண்டர் சென்றாகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு இணையத்தில் உலா வர, 30 அல்லது 40 ரூபாய். இணையத்தில் 4  தமிழ் பத்திரிக்கைகளை படிக்க, எழுத்துருவை தரவிறக்கும் செய்து படிப்பதற்கும் ஒரு மணி நேரமாகிவிடும்.

இணையத்தில்  ஏராளமான யாகூ மடலாடற் குழுக்கள் உண்டு. குறிப்பாக, தமிழ் விவாதக்குழுக்கள். அங்கே திஸ்கி எழுத்துருவை பயன்படுத்தி நாள் முழுவதும் விவாதங்கள் நடைபெறும். நீங்கள் விவாதத்தில் பங்கு பெறவேண்டுமென்றால் சரியான எழுத்துருவை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யவேண்டும். முரசு அஞ்சலில் தட்டச்சு செய்து, பிரதியெடுத்து அனுப்பவேண்டும். யாராவது பதிலளித்தால் அதையும் பிரதியெடுத்து முரசு அஞ்சல் மூலமாக மட்டுமே படிக்க முடியும். இணையத்தில் தமிழில் எழுதி, படிப்பது ஒரு சிலர்களால் மட்டுமே சாத்தியப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் உள்ள இணைய தமிழர்கள் மத்தியில் ஒரே தமிழ் எழுத்துருவை பயன்பாட்டில் கொண்டு வருவதற்கான சாத்தியங்களை பற்றி பலர் பேசி வந்தார்கள். அவர்களில் தகடூர் கோபியும் ஒருவர்.

பிராந்திய மொழிகளில் எழுதுவது குறித்து உலகாளவிய அளவில் தமிழர்கள் மத்தியில் விவாதங்களும், தொடர் பரிசோதனைகளும் நடந்த வண்ணம் இருந்தன. இந்தி உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளில் அத்தகைய விவாதங்கள் கூட ஆரம்பிக்கப்படவில்லை. தமிழின் முன்னணி பத்திரிக்கைகளெல்லாம் அவர்களுக்கேரிய தமிழ் எழுத்துருவுடன் இணையத்தில் கிடைத்தாலும் வெப்துனியா உள்ளிட்ட ஒரிரு தளங்களே இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளை கையாண்டார்கள். தமிழோடு ஒப்பிடும்போது மற்ற மாநிலங்களில் இத்தகைய எழுத்துரு சோதனைகளில் மிகவும் பின்தங்கியிருந்தார்கள். 2003ம் ஆண்டில் யூனிகோட் அறிமுகமானது தமிழ் இணைய உலகில் நிகழ்ந்த ஒரு பெரும் பாய்ச்சல் என்றே சொல்லலாம்.

2003ல் மாலனின் திசைகள் இணைய இதழ், யூனிகோட் தமிழ் குறித்து விரிவாக எழுதியிருந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் தமிழில் வலைப்பதிவு தொடங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். தகடூர் கோபி, பிருந்தாவனம் என்னும் பெயரில் ஒரு வலைப்பதிவு தொடங்கினார். வலைப்பதிடுவதற்குத் தமிழில் தட்டச்சிட சுரதா அவர்களின் புதுவைத் தமிழ் மாற்றியைப் பயன்படுத்திய போது அதனை மேம்படுத்திப் புதிதாய் வெளியிடலாம் என்னும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. சுரதா அவர்களைத் தொடர்பு கொண்ட கோபி, அவரது ஒப்புதலுடனும் ஆலோசனையுடனும் ஒரு புதிய தமிழ் மாற்றியை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து தமிழுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளில் இருந்த வெவ்வேறு எழுத்துருகளை யூனிகோட்டில் மாற்றிக்கொள்வதற்கான மாற்றிகளை உருவாக்க ஆரம்பித்தார். அந்தப் பட்டியல் பெரிது. அத்தகைய மாற்றிகளுக்கு அவர் வைத்து பெயரும் சுவராசியமானது.

உமர் (பன்மொழி)

தகடூர் (தமிழ்)

கோதாவரி (தெலுங்கு)

சேரன் (மலையாளம்)

காவேரி (கன்னடம்)

காமராஜ் (ஹிந்தி)

கலிங்கா (ஒரியா)

காந்தி (குஜராத்தி)

குரு(பஞ்சாபி)

மஹாகவி (பெங்காலி)

தகடூர் தமிழ் மாற்றி என்னும் மென்பொருள், தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதைக் கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது. தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவிகளை அறிமுகப்படுத்தினார்.. தேனீ எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக பன்மொழி மாற்றிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. TAM/TAB/TSCII/TUNE போன்ற குறியேற்றத்தில் அமைந்த தமிழ் வலைத்தளங்களை யூனிகோடுக்கு மாற்ற அதியமான் மாற்றியை அறிமுகப்படுத்தினார். இந்த மாற்றியைப் பயன்படுத்தி முழு வலைத்தளத்தையும் TAM/TAB/TSCII/TUNE போன்ற குறியேற்றத்திலிருந்து ஒருங்குறிக்கு இலவசமாக எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.இதைப் பயன்படுத்தி யூனிகோடுக்கு வந்த இணையப் பத்திரிக்கைகள் ஏராளம். இன்று மொபைலில் தமிழ் இணையத்தளங்களை எளிதாக படிப்பதற்கு இதுவே முதல் படி.

அந்த நேரத்தில்தான் Rajinifans.com இணையத்தளத்தை ஆரம்பித்து உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கியிருந்தேன். ஆண்டுக்கு 15000 வரை செலவு செய்தும், கடுமையான நிதி நெருக்கடிக்கிடையே இணையதளத்தை நிர்வகித்தபோது ஆபத்பாந்தவனாக இணைந்து கொண்டார் தகடூர் கோபி. அடிப்படையில் தீவிர ரஜினி ரசிகரான தன்னால் இயன்ற பங்களிப்பை செய்யப்போவதாக உறுதியளித்ததுடன், விண்டோஸில் செயல்பட்டு வந்த இணையத்தளத்தை கட்டற்ற மென்பொருட்கள், அவற்றின் மூலம் கிடைத்த இலவச சேவையை பயன்படுத்தி, செலவுகளை பெருமளவில் குறைத்தார்.

தனியொரு ஆளாக, ரஜினி சம்பந்தப்பட்ட கோப்புகளை இணையத்தில் ஏற்றி, அவற்றை முறைப்படுத்தியும் பார்வைக்கு வைத்தார். அலுவலகத்தின் கடுமையான பணிச்சூழலுக்கு நடுவேயும், வீடு திரும்பி நள்ளிரவில் இதை செய்து முடித்தார். மாற்றங்களை டெஸ்ட் செய்வது என்னுடைய பணியாக இருந்தது. மாற்றங்களை அமல்படுத்தும்போது டேட்டாபேஸ் எரரர், அலைன்மெண்ட் என ஏராளமான பிழைகள் இருக்கும். டெஸ்ட் முடிவுகளை அவருக்கு தாமதமாகவே அனுப்பி வைப்பேன். அவருடைய பணிச்சுமையை அதிகரித்துவிடக்கூடாதே என்கிற கவலையில் முடிந்து அளவு தாமதப்படுத்தினேன்.  உரிமையோடு கோபித்துக் கொள்வார். உடனே பிக்ஸ் பிக்ஸ் செய்து அனுப்பி வைப்பார். 2005 தொடங்கி கடந்த குடியரசு தினம் வரை Rajinifans.com இணையதளத்தின் வெப்மாஸ்டர் அவர்தான்.    

ஒரு தமிழ் ஆர்வலராக, இணையத்தமிழுக்கு கோபியின் பங்களிப்புகள் அபாரம். மாவட்டம் தோறும் இணையத்தமிழ் குறித்து ஏராளமான பயிற்சி அரங்குகளை நடத்தியவர். அதைப் பற்றியெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாத இயல்புடையவர். செம்மொழி மாநாட்டு நேரத்தில் தமிழின் பழமை குறித்தும், அதன் சிறப்பியல்புகள் குறித்தும் ரஜினி ரசிகர்கள் வட்டாரத்தில் பேசிக்கொண்டிருந்தார். அதைத் தொடர் கட்டுரையாகவே எழுதி, இணையத் தளத்தில் வெளியிடலாமே என்று சொன்னவுடன் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். தமிழ் வழி, தனி வழி என்று தலைப்பு வைத்தேன். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தவர், இணையத்தமிழ் குறித்து பல தொடர் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

தமிழை சமானியர்களிடம் கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கமாக இருந்தது. தமிழ் வளர்ச்சித்துறையில் தனியொரு இயக்கமாக செயல்பட்டவர். தமிழில்பேசத் தெரியும் ஆனால் படிக்கத்தெரியாது என்னும் அளவில் இருப்பவர்களும் உதவி செய்வது அவரது நோக்கமாக இருந்தது. தமிழ் இணைய நுட்பத்தில் இன்றைக்கு வெற்றிடமாய் இருக்கும் உரைபேசி (Text to Speech), பேச்சிலிருந்து உரை(Speech to Text) மற்றும் ஒளியியல் குறிமுறை உணர் செயலி (Optical Code Recognition) போன்ற சில மென்பொருள் தேவைகளுக்காக உழைப்பது அவரது எதிர்காலத் திட்டமாக இருந்தது.

தமிழ் சார்ந்த துறைகளில் இயங்காமல் வெளியிலிருந்து இயங்கி, தமிழுக்கு பங்களிப்புகளை அளித்தவர்கள் ஏராளம். அதிலும் முதல் அடி எடுத்து வைத்தவர்கள், வரலாற்றில் இடம்பெறுவதில்லை. எல்லீஸ் துரை, ஜி யூ போப்புக்கு முன்னரே திருக்குறளை மொழி பெயர்த்தவர். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு உரை எழுதியவர். கால்டுவெல்லுக்கு முன்பே, திராவிட மொழிகளைக் கற்றுத் திராவிட மொழிகள் வடமொழியிலிருந்து வேறானவை என்று அறிவித்தவர். தமிழ் ஆர்வலர்களுக்கு ஜி.யூ போப் தெரியும், கால்டுவெல் தெரியும். ஆனால், எல்லீஸ் துரை பற்றி எவருக்கும் தெரியாது. ஒரிரு வரிகளில் கடந்துவிடுவார்கள். தகடூர் கோபியையும் நாம் எளிதாக மறந்துவிடக்கூடாது.

One Reply to “பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.