தகடூர் கோபி அஞ்சலி

தமிழ் இணையச் சிற்பி என்று தகடூர் கோபியை தாராளமாகச் சொல்லலாம்.
42 வயது இளைஞர். இணையத்தில் தமிழ் எளிதாகப் புழங்குவதற்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம்.
பல்வேறு வடிவங்களில் எழுத்துருக்கள் உலவிக் கொண்டிருந்த தமிழ் இணையம் ஒருங்குறி (unicode)-க்கு மாறுவதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாடு பட்டவர் அவர்.
ஒருங்குறிக்கு முன்னதாக பல்வேறு வடிவங்களில் பல்வேறு தளங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளையும், தகவல்களையும் ஒருங்குறியாக மாற்றுவதற்கான செயலிகளையும், நிரல்களையும் வடிவமைத்து இலவசமாகவே வழங்கினார் அவர்.
பிரபல தமிழ்ப் பத்திரிகைக் குழுமம் ஒன்று தகடூர் கோபி வடிவமைத்த ஒருங்குறி தட்டச்சு விசைப்பலகையை அவருடைய அனுமதியின்றி எடுத்து தன்னுடைய இணைய தளத்தில் உபயோகித்தது. இத்தனைக்கும் அந்தக் குழுமப் பத்திரிகைகளை இணையத்தில் படிக்க சந்தா செலுத்த வேண்டும். கோபியின் உழைப்பை அவரது அனுமதியின்றி உபயோகித்தது மட்டுமின்றி, அதில் அவருடைய பெயரைக் கூடப் பகிரவில்லை. அதையும் நீக்கி அவர்களுடைய கண்டுபிடிப்பு போல அயோக்கியத்தனம் காட்டியது அந்த பத்திரிகைக் குழுமம். ஒரு சில நண்பர்கள் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று கோபியிடம் கேட்ட போது, “உலகமெலாம் தமிழ் பரவ வேண்டும். அதனால் அவர்கள் உபயோகிப்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை” என்றார் இன்முகத்துடன். அதான் கோபி!
தமிழில் அதியமான், தகடூர் எழுத்துரு மாற்றிகள், தெலுங்கில் கோதாவரி, ஹிந்தியில் காமராஜ், கன்னடத்தில் காவிரி, மலையாளத்தில் சேரன்,  வங்காளத்தில் மகாகவி, ஒரியாவில் கலிங்கா, குஜராத்தியில் காந்தி என்று அவர் உருவாக்கிய எழுத்துரு மாற்றிகளின் பெயர்களில் கூட தேசியமும், தமிழும் தாவியாடும்.
வெளிநாடுகளில் பணியாற்றியபோதும் கூட ‘இந்தியாவுக்கு திரும்பி விட வேண்டும்” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தவர், வெறும் பேச்சோடு இல்லாமல் நிகழ்த்தியும் காட்டினார்.
நாமக்கல்லிலும், மதுரையிலும் சகாயம், ஐ.ஏ.எஸ். மாவட்ட ஆட்சியராக இருந்த போது அவரால் கொண்டு வரப்பட்ட தொடுவானம் என்ற இணைய வழி புகார் பதிவுத் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தன்னார்வலர்கள் குழுவில் மிக முக்கிய இடம் வகித்தவர் கோபி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதி தீவிர ரசிகரான கோபி, rajinifans.com இணைய தளத்தின் நிர்வாகியாகவும், தொழில்நுட்ப ஆலோசகராகவும் பல ஆண்டுகாலம் இருந்திருக்கிறார்.
கோபி ஒரு சிறந்த ஓவியரும் கூட.
இந்தச் சின்ன வயதிலேயே அவர் ஆற்றிய சாதனைகள் எக்கச்சக்கம். இன்னும் பல ஆண்டுகாலம் அவர் வாழ்ந்திருந்தால் தமிழ் இணையத்தில் மேலும் பல மகத்தான சாதனைகளைப் புரிந்திருப்பார். ஆனால் காலன் அவரைக் கொண்டு சென்று விட்டான். ஹைதராபாத்தில் கடந்த 28-ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார் தகடூர் கோபி.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

2 Replies to “தகடூர் கோபி அஞ்சலி”

  1. வந்தே மாதரம். அவர் செய்த சாதனைகளை மட்டுமல்லாது இன்னும் என்னென்ன விரும்பினாரோ, எதற்கெல்லாம் முயற்சியெடுத்தாரோ அவற்றைபற்றி தற்போது உள்ள இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தால் நல்லது. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

  2. Unicode என்பதை நாம் இன்று மிகவும் போகிற போக்கில் எடுத்துக் கொள்கிறோம். பல ஆண்டுகள் தமிழில் கணினியில் எழுத ஒரு சீரான முறையின்றி தவித்ததைக் கண்டவன் என்ற முறையில் இந்தத் துயரமான செய்தியை ஒரு தர்மசங்கடத்துடனே பார்க்கிறேன். இன்று தமிழிசை பற்றி தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் எவ்வகைப் பாடங்களை கற்பிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் தேடினேன். என்னுடைய அனுபவம் முற்றிலும் ஏமாற்றம் தந்த ஒன்றே.
    1. எந்த தமிழகப் பல்கலைக்கழகமும் அவர்கள் வழங்கும் பாடங்களைப் ப்ற்றிய விவரங்களை தமிழில் வெளியிடுவதில்லை.
    2. விவரம் என்றவுடன், ஆங்கிலத்தில் விவரத்தைக் கொட்டிவிட்டார்கள் என்று எண்ண வேண்டாம். வெறும் பட்டியல்தால். விவரம் என்பதெல்லாம் இல்லை.
    Unicode இருந்தும் பயன்படுத்தத் தெரியாத தமிழகப் பல்கலைக் கழகங்களை நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.