டார்ச்லைட் வெளிச்சத்தில் சிறுகதை வாசித்தல்


சில நாட்களுக்கு முன் ஒரு வாட்ஸப் குழுமத்தில் சில சிறுகதைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது பேசப்பட்ட சிறுகதை குறித்து நண்பர் ஒருவர், “இந்தக் கதையின் மையம் எதுவென்று வைத்துக் கொள்வது?” என்று கேட்டார். “பெண்கள் வைத்துக் கொள்ள வேண்டுவது கிடைப்பதேயில்லை,” அல்லது, “வைத்துக் கொள்ள வேண்டிய அளவு கிடைப்பதில்லை,” அல்லது, “வைத்துக் கொள்வது விரும்பிய வகையில் வாய்ப்பதில்லை,” என்ற ஒன்றை, அல்லது இது எல்லாவற்றையும் சொல்ல வரும் கதை அது, என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்போது, சிறுகதைகள் குறித்து யோசிப்பதில் நிறைவு காண்பது விட்டுப்போய் பல காலம் ஆகிவிட்டதையும் உணர்ந்தேன். நாவல்கள், கவிதைகள் என்று தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தது, மொழிபெயர்ப்பில் இறங்கியது என்று எல்லாம் சேர்ந்து, நாவல்களை விட உருவத்தில் சிறிய, கவிதைகளைவிட காத்திரத்தில் எளிய, ஏழைச் சிறுகதைகளுக்கு இடமில்லாமல் நசுக்கி விட்டதை உணர்ந்தேன். நசுக்கப்படுதல் – வினோதமான வகையில் இதுவே சிறுகதை வகைமையின் உருவகமாகிறது. ஆம், நாவல் போல் எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கும் அபரித வசதியோ, கவிதை போல் எல்லாவற்றுக்கும் அப்பால் உயர்ந்தோங்கும் இயல்போ சிறுகதைக்கு இல்லை. உள்ளபடியே காலமும் வெளியும் அதை உள்ளும் புறமும் நசுக்குகின்றன. இங்கேயே இப்போதே: ஆகச் சிறந்த சிறுகதை ஒரு நிறுத்தற்குறியாய் அமையலாம்; எக்காலத்துக்கும் எங்கெங்கும் எதிரொலிக்கும் நாவல்கள் மற்றும் கவிதைகளின் இடையறாது உரையாற்று இலட்சியங்கள் அதற்கில்லை. சிறுகதையை அற்பாயுளின் வகைமை என்றே சொல்லலாம், அதனால்தான் அது மானுடத்துக்கு மட்டுமே உரித்தாகிறது. தெய்வங்கள் பொழுதுபோக்காய் இலக்கியம் படைப்பதில் இறங்கினால் அவை சிறுகதைகளை முயற்சிக்காவென்று நினைக்கிறேன்- காவியக் கவிகளின் காலம் சிறுகதை எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து நாவலாசிரியர்களின் கனவுகளை முற்றுகையிட்டிருக்கிறது.
நான் நேசிக்கும் சிறுகதைகளை என் வீட்டில் கண்டா முண்டா சாமான்கள் நிறைந்துள்ள நிலவறையுடன் ஒப்பிடலாம்- வாழ்வனுபவத்தின் எச்சங்கள். அவ்வளவாக ஈர்க்காத சில எழுத்தாளர்கள், வெகு சீக்கிரமே என்னை அந்த இருட்டு அறைக்குக் கொண்டு சென்று விடுகிறார்கள். அங்கு கண்களைச் கூசச் செய்யும் ஒளிவெள்ளம் பாய்ச்சி, “இங்கே பார், எவ்வளவு குப்பை, எவ்வளவு மோசமாக இருக்கிறது,” என்று பிரசங்கம் செய்கிறார்கள். நன்றி, இதுவரை சேர்த்த குப்பை போதும், ஆளை விடு சாமி, அப்படியே போகிற வழியில் இங்கிதமில்லாமல் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டுப் போ. வேறு சிலர் அந்த இடத்துக்கு உங்களைக் கொண்டு போக இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்கிறார்கள், இன்னும் சிலர் அங்கே அழைத்துப் போனாலும் இருட்டில்தான் விட்டுச் செல்கிறார்கள், நாம்தான் தட்டுத் தடுமாறி வெளியேற வழி கண்டாக வேண்டும். முகமூடியும் குறுவாளும் தரித்த கதைகளைப் போல் அவற்றின் மர்மம் பொழுது போக்க உதவியாக இருக்கின்றது, ஆனால் எவ்வளவு காலம்தான் தடுக்கி விழுவது, பொய் வெளிச்சத்தை தொடர்ந்து சென்று முட்டுச் சுவரில் மோதி நிற்பது? நான் விரும்பிச் சேமிக்கும் சிறுகதைகள் கதையின் வரிகளுக்கு இடையே டார்ச்லைட் போன்ற ஒளிக் கோர்வைகளை மறைத்து வைத்திருக்கின்றன. நீங்கள் கவனமாக இருந்தால், அல்லது சில சமயம் அதிர்ஷ்டவசமாய், ஒளிக் கோர்வையை கண்டெடுத்து அதன் கிரணக்கீற்றுகள் வெளிப்பட வழி செய்கிறீர்கள். அந்த வெளிச்சம் அதுவரை தாலாட்டப்படாத தொட்டிலில் விழலாம், அல்லது பதிப்பிக்கப்படாத கதையின் பிரதியொன்றைப் புலப்படுத்தலாம்- அக்கணம், உங்கள் வாழ்வின் கதையினுள் மறக்கப்பட்ட பிற கதைகள் பலவற்றை திடீரென்று நீங்கள் அகழ்ந்தெடுக்கிறீர்கள்.
‘கதைகளும் டார்ச்லைட்களும்’ – சிறுகதைகள் குறித்து என்னால் ஒருபோதும் எழுதி முடிக்கப்படாத கட்டுரையின் கச்சிதமான தலைப்பு இதுவாக இருக்கக்கூடும். இருப்பினும், முதலில் சொன்னது போல், நண்பர்கள் சில கதைகளைப் பற்றி விளையாட்டாய்ப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாடக அரங்கின் உணர்வெழுச்சித் தருணங்களாய் அணைந்து எரியும் விளக்குகள் வெளிச்சம் பாய்ச்சும் கதையொன்றினைப் பற்றி பேச்சு வந்தது. அந்தக் கதையில் ஒரு தம்பதியர், அவர்கள் வசிக்கும் வீடு. அந்த வீட்டின் ஒரு பகுதியில் எழுத்தாளன் ஒருவன் வாடகைக்கு வருகிறான். தம்பதியரில் மனைவியின் வயது பதினெட்டு இருக்கலாம். கணவன் வெகு நேரம் வெளியே சுற்றி, கண்ட இடத்தில் படுத்தெழுந்து இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புகிறான், தாமதமாய் கதவு திறக்கும் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டுகிறான், அடித்து உதைக்கிறான். அடப் பாவமே, இப்போது சம்சார வாழ்வு துக்க சாகரம் என்று பிலாக்கணம் வைக்கப்போகிறாரோ, என்று அஞ்சுகிறோம். ஆனால் ஆச்சரியம், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நிகழ்வுகள் தம் போக்கில் நடந்து முடிகின்றன. கடைசியில், அடி உதை வாங்கிய பதின்பிராயப் பெண், இந்த எழுத்தாளனின் அறைக்கு வந்து சேர்கிறாள்- அவனிடம், எதைக் கொண்டு சுகம் காணப் போகிறேன், என்று பொருட்பட ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள். நினைத்துப் பாருங்கள், இந்தக் கதை எழுதப்பட்ட ஆண்டு 1942, எழுதப்பட்ட மொழி தமிழ். அவள் ‘எதைக் கொண்டு’ என்று ஆதங்கப்படுவது ‘அதை’த்தான், ஆனால் அது மட்டுமல்ல, அது போக இன்னும் கொஞ்சம். கதை நெடுகிலும் விளக்கு எரிகிறது, அணைகிறது- என்ன நடக்கிறது என்பதின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது (உங்களுக்கு சிரிப்பு வராவிட்டாலும் பரவாயில்லை, இது நகைச்சுவையாய்ச் சொன்னதுதான்).
இந்தக் கதையை எப்படியெல்லாம் பெருமைப்படுத்தி வாசிக்கலாம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. (அவள் “அம்மா போதுமடீ!’ என்று கூறும் வாக்கியத்தை டார்ச்லைட்டாகக் கொண்டும் இச்சிறுகதையை நாம் வாசிக்கலாம்). அது அத்தனைக்கும் மட்டுமல்ல, அதற்கு மேலும் இடம் கொடுக்கக்கூடிய அளவு நல்ல கதையும்தான் இது. ஆனால் எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது இல்லையா, கற்பனைக்கு நம்மை முழுதும் ஒப்புக் கொடுக்காமல் நாமிருக்கும் மண் மீது உறுதியாய் கால் பதித்து நின்று பார்த்தால், அன்றாடம் செய்தித்தாள்களில் இடம்பெறும் நூற்றுக்கணக்கான கதைகளில் ஒன்றை இங்கும் நாம் காணலாம்- தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத, காமத்தின் வடிகால் மறுக்கப்பட்ட, தன் வாழ்வில் திருப்தியில்லாமல் இருக்கும் இளம் பெண்ணொருத்தி, தன் கணவனுக்கு நேர் எதிர் இயல்பு கொண்ட ஒருவன் அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் துணிச்சலான முடிவை நோக்கி அடியெடுத்து வைக்கிறாள். அவள் அவனது அறையினுள் நுழைந்து விட்டாள், ஆனால் அவள் இன்னும் சிறுமிதான், தனக்கு வேண்டியது என்ன என்பதைச் சொல்லாலோ செயலாலோ வெளிப்படுத்தத் தெரியாதவள், அதைப் புரிந்து கொள்ளும் தெளிவும்கூட இல்லாதவள்.
எல்லாம் அரையிருளில் நடக்கிறது. அவள் துணிச்சலை வரவழைத்துக் கொள்கிறாள், முன் செல்லும் வழியொன்று புலப்படுகிறது. வெளிச்சம் வருகிறது, அதனுடன் அவளது உள்ளத்தின் உணர்வுகளுக்கு ஆறுதல் கிடைக்கிறது, ஒரு சிறு அளவில் கலவிக்கு முன்னான விளையாட்டும் நடக்கிறது. ஆனால் எந்த விளக்கு இன்பத்தைத் தருகிறதோ, அதன் அப்பட்டமான ஒளி இரக்கமற்ற உண்மைகளையும் உணர்த்தக்கூடியது. சமூக பின்விளைவுகள் குறித்த எதிர்கால அச்சங்களைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா, இல்லை, தான் இப்போது மேற்கொள்ளவிருக்கும் செயலின் ஒழுக்கக்கேட்டை ஏற்றுக் கொள்ள முடியுமா? சிறையிலிருந்து வெளியேறத் திறக்கும் கதவு, வேறொரு, இதைவிடக் கொடூரமான மற்றொரு வதைக்கூடத்தின் நுழைவு வாயிலாய் இருக்கலாம் என்ற ஐயம் அவளுக்கு மன்னிப்பே இல்லாத அந்த ஒளியில் எழுந்திருக்கலாம். அங்கு அவள் முதலில் பயன்படுத்திக் கொள்ளப்படுவாள், அதன்பின் துஷ்பிரயோகம் செய்யப்படுவாள். உடனே அவள் பின்வாங்குகிறாள், தன் அரையிருளுக்குத் திரும்புகிறாள்- அங்கு நிஜத்தின் முழு ஒளியோ அதன் அசந்தர்ப்ப தாழ்வுகளோ இல்லாத எண்ணிறந்த சாத்தியங்கள் காத்திருக்கின்றன. பிற்கால பெண்ணியர்கள் கடும் போராட்டத்துக்குப் பின் வென்றெடுத்த இயல்புகளையும் மன வார்ப்புகளையும் இவள் மீது திணிக்கும் உந்துதலுக்கு பலியாகாமல் நாம் இங்கு மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும், இன்னும் இவள் சிறு பெண்தான் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அவள் தன் அறிவற்ற கணவனிடம் திரும்புகிறாள், எதிர்பார்த்திருக்கக்கூடிய வகையில் செத்தும் போகிறாள் என்பதை மறக்கக்கூடாது. என்றாவது ஒரு நாள் மரியாதையும் விடுதலையும் கூடிய ஒரு முழு வெளிச்சம் தனக்குக் கிட்டும் என்ற எதிர்பார்ப்பு அரை வெளிச்சத்துடன் வாதை விளையாட்டுக்குத் திரும்பும் அவளுக்கு இருந்திருக்கும் என்று நாம் நினைத்துக் கொள்ளலாம்.
எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது என்றாலும்கூட நம் வாசிப்புகள் விதிக்கப்பட்டவை எனபதை நம்புகிறேன்.  இந்தக் கதைக்குப்பின் நான் வாசித்த அடுத்த கதையின் நாயகிக்கு ‘அது’ நிறைய கிடைக்கிறது, ஆனால் அது அவள் தேர்வல்ல. இந்த வாசிப்பு அமைந்தது தன்னிகழ்வு, அல்லது விதியின் தீர்மானம்.  அவள் ஒரு விலைமகள், வாழ்வில் அலுப்பேற்பட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறாள் போலிருக்கிறது. தனக்கு வேசி என்று பட்டம் கட்டும் குரூர சமுதாயத்தை அவள் சாடுவது போலெல்லாம் எந்த ஒளிப்பிழம்பும் புறப்பட்டு இந்தக் கதையில் வாழ்வின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதில்லை. அவள் அப்படி எதுவும் செய்வதில்லை என்பதே நம்மை நெகிழச் செய்கிறது. தான் தூக்கிட்டுத் தொங்குவதற்கான கயிற்றை முடிச்சிட்டு உத்தரத்தில் பூட்டுவதற்கு அவள் மேற்கொள்ளும் அடுத்தடுத்த முயற்சிகள் பற்றிய உணர்ச்சியற்ற விவரணைகள் நம் உணர்வுகளை அசைத்து விடுகின்றன. கதைக்கரு என்னவென்பதை இங்கு நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அபத்தமாய் அவளை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றைத் தொங்க விட அத்தனை சிரமப்பட்டது ஏன் என்று கதையின் முடிவில் அவள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்.
கதைகளும் ஒளிக்கோர்வைகளும் என்று முதலிலேயே பேசினோம். இந்தக் கதையிலும் ஒளி பற்றிய முதல் குறிப்பே வெளிச்சம் பாய்ச்சுகிறது. அவளது கணவன் அல்லது அவளைக் கூட்டிக் கொடுப்பவன், வாடிக்கையாளர்கள் இல்லாதபோது விளக்கை அணைத்து விட்டு அவள் உள்ளே இருக்க வேண்டுமென்று சொல்கிறான். ஆனால், ‘எனக்கு தண்ணி தவிக்குது’, என்ற சொற்களின் இடைவெளியில் பொதிந்திருக்கும் ஒளிக்கீற்றே சுவாரசியமானது. தேவயானை தன்  வாடிக்கையாளர்களில் ஒருவனிடம் அதைச் சொல்கிறாள், அதன் பின் அவன் நடந்து கொள்வதில் கருணை வெளிப்படுகிறது. கதை பூடகமாய் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் புனையப்பட்ட ஒன்று, அதன் புதிருக்கு பல வகைகளில் விடை காணலாம். நான், நம் அனைவருக்கும் பொதுவான உயிர்ப்பற்றும் மரண இச்சையும் ஒன்றையொன்று எதிர்கொள்வதை இக்கதையில் பார்க்கிறேன். அவள் உயிரோடு இருக்கிறாள், சாக விரும்புகிறாள். அவளது வாடிக்கையாளன் இறந்து கொண்டிருக்கிறான், வாழ விரும்புகிறான். ‘பெறந்து, வளந்து, சாவர தொளில்தான் செய்யறேன்,’ என்று சொல்லும் அவன், ‘நேரக் கணக்கை’ கொடுமை என்று சொல்கிறான். அவனது காலம் கழிந்து கொண்டிருப்பதையே அவன் நொந்து கொள்கிறான். இந்த முரண் இச்சைகள் அல்லது சக்திகள் (பிராய்டிய பொச்சரிப்பு உங்களுக்கு இருக்குமானால் தானடோஸ்சும் ஈரோஸ்சும்) சந்திக்கும் இடத்தில் இருப்பதென்னவோ ‘தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடு’ என்ற முதுமொழிதான். காமம், சுகம், லிபிடோ, பால்விழைவு, மூர்க்க மானுடம் என்று பலவும் வாழ்வின் மீது அப்பட்டமான ஒளி வீசுகின்றன. அன்பு, நேசம், ஆதரவு என்று பூசி மெழுகப்பட்டாலன்றி அவற்றின் கடுமை கண் கொண்டு காணக்கூடியதல்ல. ஆனால் இவற்றுக்கு எல்லாம் அப்பால் மனிதனுக்கு மனிதன் காட்டக்கூடிய நேயம் ஒரு சிறு சுடராய் மின்னிக் கொண்டிருக்கிறது. அந்த ஒரு துளி கருணையின் ஈரத்துக்காகவே நம்பிக்கை வரண்ட நெஞ்சம் எங்கும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. அது கிட்டுமானால், அதற்காகவே வாழலாம், சாவிலிருந்தும்கூட எழுந்து வரலாம். அப்படியானால் நீல நிற டெர்லின் சட்டையும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்த மனிதர் புனலும் விண்ணும் உடுத்த காலதேவனின் குறியீடா? இந்த விபரீத விளையாட்டெல்லாம் நமக்குத் தேவையா, பிழைத்துப் போகட்டும், மனுஷன் செத்துக் கொண்டிருக்கிறான்.
கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’, ஜி. நாகராஜனின் ‘டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ என்ற இரு சிறுகதைகளும்தான் இங்கு பேசப்பட்டிருக்கின்றன. முடிந்தால் ஒரு டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் படித்துப் பாருங்கள்.

~oOo~

மேலும்:
1. ‘சிறிது வெளிச்சம்’, கு.ப.ரா, கலாமோகினி டிசெம்பர்,1942
2. ‘டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’, ஜி. நாகராஜன், கண்ணதாசன், நவம்பர், 1973
3. ‘புனைவு என்னும் புதிர்‘, விமாதித்த மாமல்லன், காலச்சுவடு, 2017 – இவ்விருகதைகளின் மூலங்களும் அவற்றை பற்றி தி ஹிந்து நாளிதழில் மாமல்லன் எழுதிய கச்சிதமான கட்டுரைகளும் இதில் படிக்கக் கிடைக்கின்றன.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.