- பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
- ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
- அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
- ஒற்றன் – அசோகமித்திரன்
- நிறமாலை
- ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
- லஜ்ஜா: அவமானம்
- துருவன் மகன்
- கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
- பாகீரதியின் மதியம் – விமர்சனம்
- புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
- களியோடை
- தத்வமஸி: புத்தக அறிமுகம்
- பாமாவின் கருக்கு
- பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
- கண்ணனை அழைத்தல்
- பாரதியின் இறுதிக்காலம்
- குவெம்புவின் படைப்புலகம்
- தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
- “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
- புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
- இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
- ஆகாரசமிதை
- உயர்ந்த உள்ளம்
- எல்லைகள் அற்ற வெளி
- மிருத்யுஞ்சய்
- ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
- தப்பித்தல் நிமித்தம்
- ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
- ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
- சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
- பசு, பால், பெண்
- தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
- வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
- திருவரங்கன் உலா
- ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
- அஃகம் சுருக்கேல்
- அறுபடலின் துயரம் – பூக்குழி
- ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
- தீப்பொறியின் கனவு
- புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
- மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
- தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
- இரா. முருகனின் நளபாகம்
- பின்கட்டு
- யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
- நீர்ப்பறவைகளின் தியானம்
- ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
புத்தக வெளியீட்டாளரின் குறிப்பு: ‘எழுத்து’ அமைப்பும் கணையாழி இதழும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் சு.வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. டிசம்.16 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் விருதோடு ரூ.50,000 பரிசுத்தொகையும் வழங்கப் பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் யானைகளின் வழித்தடத்தில் விவசாயம், ஆன்மிக நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் எனத் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புகள்தான் நாவலின் மையம்.
யானைகள் விளைச்சலை அழிக்கின்றன எனும் விவசாயிகளின் வேதனையும், தாயோடு இளம்வயதில் வலம்வந்த பாதைகள் இன்று உருமாறிக் கிடப்பதைப் பற்றிய யானைகளின் உணர்வுகளுமாக விரிகிறது கதை. அச்சுக்கு வருவதற்கு முன்பாகவே விருது பெற்றிருக்கும் சு.வேணுகோபாலின் இரண்டாவது நாவல் இது. (வெளியீடு: எழுத்து பதிப்பகம், சென்னை 044 28270931)
நூலில் இருந்து: “எதிரியின் பலம் அறியாது மோதுவதில்தான் சாகசம் இருக்கிறது. துணிச்சலின் வழித்தடத்தில் புதிய முகங்கள் தென்படுகின்றன. பலமடங்கு பலம் மிக்கதின் முன் கணக்கு பார்த்து மோத நினைத்தால் ஒன்றுமே நிகழ்வதில்லை.
…பசியின் சந்நிதியில் எரியும் சுடர்களில் எதுவுமே திருட்டுச்சுடர் அல்ல. இன்றைக்காக கடன் பெறுவதுமில்லை. நாளைக்காக சேமிப்பதுமில்லை. யாருக்காகவும் ஒப்பந்தம் செய்து கொள்வதுமில்லை .
அந்த ஆலயங்களில் இருந்து புறப்படும் ஜீவன்கள் எவற்றிக்கும் பணவெறியும் இல்லை. அந்தக் கணங்களில் வாழ்ந்து திரியும் இவைகளிடம் கலங்கமும் இல்லை.எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தடைகளும் இல்லை.
விண்ணில் சிறகடித்தாலும் மண்ணில் தடதடத்தாலும் தடுப்புகள் இல்லை. விரிந்த வானையும் அகன்ற பூமியையும் தன்னுள்ளே வைத்திருக்கிற உயிர்களுக்கு சிறுமை ஏது? வஞ்சன் ஏது?சுயநலம் ஏது? சதி ஏது?… ஞானத்தின் விசித்திரங்கள். ”
கணையாழி இதழும், எழுத்து அமைப்பும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் என்பதாலும், ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட எழுத்தாளரின் படைப்பு என்பதாலும், சு.வேணுகோபாலின் ‘வலசை’ நாவல், ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் வேண்டி மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான நிரந்தர யுத்தமே இந்த நாவலின் அடிப்படை. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அறிவியல் தொழில்நுட்ப புரட்சி, காலனிய விரிவாக்கத்துடன் கைகோர்த்து, இந்த யுத்தத்தில் அதுவரை நிலவிவந்த ஒரு சமநிலையைக் குலைத்து, மனிதனுக்கு விலங்குகள் மேல் முன்னெப்போதுமில்லாத ஓர் ஆதிக்கத்தை உருவாக்கி, பூவுலகின் முதன்மை உயிரினம் மனிதனே என்ற நிலையை உருவாக்கியது. உலகளாவிய சந்தை எப்போதும் உள்ளதுதான். ஆனால் அறிவியல் தொழில்நுட்ப புரட்சியே சந்தையின் தேவைகளை நிறைவு செய்வதற்கான செலவைச் சல்லிசாய்க் குறைத்து, வணிகப் பொருட்களுக்கும் அவற்றின் வர்த்தகத்துக்கும் முதலுரிமை அளித்து, உயிர்களை விலையிழக்கச் செய்தது.
தனது தேவைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் இந்த உலகின் எல்லா வளங்களையும் ஏகபோகமாக அனுபவிக்கக்கூடிய நிலையை மனிதன் அடைந்தான். ஆனால், அதன் எதிர்மறை விளைவுகள் தெரியத் துவங்கும் காலகட்டத்தை நாம் அடைந்துவிட்டோம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அழிந்து வரும் காடுகள், காணாமற் போகும் ஓடைகள், மணல் மேடாகும் நதிகள், அந்த மணலும் காணாமல் போகும் சூழல், பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவாகியுள்ள சுகாதாரக் கேடுகள், கடலில் உள்ள மீன்வள அழிவு என பல்வேறு வடிவங்களில் மனிதனின் ஆதிக்க உணர்வுகள் அவனைத் திருப்பித் தாக்குகின்றன. இதன் ஒரு அம்சம், வாழ்விடங்களை இழந்த வனவிலங்குகள் தம் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து நிலைபெற்றுவிட்ட மனிதனின் குடியிருப்புகளுக்குள் வருவதும் விரட்டியடிக்கப்படுவதும், மின்வேலிகளில் சிக்கி பரிதாபமாக மரிப்பதும் இன்றைய அன்றாடச் செய்திகள்.
வேணுகோபாலின் சொந்த ஊர் போடி பக்கம் என்றாலும் தற்போது பல ஆண்டுகளாக கோவையில் வசித்துவரும் அவர் தன் வசிப்பிடத்துக்கு மிக அருகே நடைபெறும் இந்த மனித மிருக மோதல்களை, குறிப்பாக, மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் காரணமாக நடந்து வரும் மோதல்களை மையமாக்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.
ஒரு தனி விவசாயியின் தோட்டத்தில் யானை இறங்கிவிடுமோ என்ற பதட்டத்திலும் அச்சத்திலும், அவரது பார்வையில், தன்மை ஒருமையில் துவங்கி பல்வேறு பார்வைகளின் ஊடாக, காலத்தில் முன்னும் பின்னுமாக நகர்ந்து நிகழ்காலத்தில், தோட்டத்திலிருந்து யானைகளை விரட்டும்போது நிகழும் ஒரு நாடகீய தருணத்தோடு முடிகிறது நாவல். அந்த விவசாயியின் சொந்த வாழ்க்கை, அவரது சாதியினர் மற்றும் அவரது மூத்தோர் வாழ்க்கை,, மலைகளின் மக்களான முதுவர்கள் வாழ்க்கை, அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், காடுகள் மறைந்து விளைநிலங்கள் ஆவதும் பின் அவையும் மறைந்து கல்லூரிகள், கோல்ஃப் மைதானங்கள், பல்வேறு மதங்களின் புதிய குருமார்களின் பிரம்மாண்டமான மையங்கள் தோன்றுவதில் யானைகளின் பாரம்பரிய வழித்தடங்கள், வலசைப் பாதைகள் குலைந்து யானைகள் நீருக்கும் உணவுக்கும் அலைவது என பல விஷயங்களை ஒரு பருந்துப் பார்வையில் விவரிக்கிறது நாவல். அது நேர்க்கோட்டில் சொல்லப்படாமல், காலத்திலும் கோணத்திலும் மாறி மாறிச் சொல்லப்படுகிறது. மனிதர்கள் கோணத்திலிருந்து மட்டுமல்லாமல், யானைகளின் பார்வையிலிருந்தும், அவற்றின் கனவுகளையும்கூட, விவரிக்கிறது. நாவலின் மிக அழகான உச்சகட்ட இடம், தோட்டத்தில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகளை விரட்ட வரும் கும்கி யானை சலீம், உள்ளே சென்று விரட்டப் போய்விட்டு, பின் விரட்டாமல் திரும்பி வந்துவிடுவதும் அது ஏன் என்ற அதன் விவரிப்பிலும் அமைகிறது.
தன்மை ஒருமையில் துவங்கும் நாவல், சொல்லப்படும் கோணங்கள் மாறி மாறிப் போய்க் கொண்டேயிருந்துவிட்டு கடைசியில் மீண்டும் தன்மை ஒருமையில் முடிகிறது. இந்த வடிவத்தில் உள்ள சிக்கல், பல சமயங்களில் யார் எதைச் சொல்கிறார்கள் என்ற குழப்பம் நீடித்தபடியே இருக்கிறது. யானைகளின் மனக்குரலும் ஆசிரியர் கூற்றாக வருவது இக்குழப்பத்தை அதிகப்படுத்துகிறது. பின், நாவலில் விவரிக்கப்படும் பல சம்பவங்களின் நீளம், நாவலில் அவற்றின் முக்கியத்துவத்திற்கு பொருத்தமாக உள்ளதா என்றும் கேள்வி எழுகிறது. முதுவச் சிறுவர்கள் தேன் எடுக்கும் சம்பவமும், யானைகளின் நினைவில் உள்ள பசுமையான காடுகளின் விவரிப்பும் அளவுக்கு மீறி நீள்வதால் படிப்பதில் ஆயாசம் ஏற்பட்டுவிடுகிறது. மாறாக, சில முக்கியமான சம்பவங்கள் சட்டென்று சுருக்கமாக விவரிக்கப்பட்டு, முடிந்து விடுகின்றன.
ஆசிரியரின் கட்டற்ற பாய்ச்சல் மிகுந்த மொழியில், பரவசமூட்டும் இடங்களும் உள்ளன. வாக்கியங்களின் அமைப்பில் உ ள்ள கவனக்குறைவான பிழைகளால், பரிதவிக்க விடும் இடங்களும் உள்ளன. அம்மாதிரியான இடங்களில் எல்லாம் சீரான தொகுப்பின் தேவையை உணர முடிகிறது. அந்தக் கடைசி உச்சகட்டக் காட்சி மட்டுமே ஒரு செறிவான, அழகான சிறுகதையாகலாம். போக, இதனுள் மூன்று சிறந்த சிறுகதைகளும், யானைகள் மற்றும் அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவது பற்றிய ஒரு சிறந்த கட்டுரைக்குரிய விவரணைகளும் பொதிந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் கூடி, ஒரு நாவலுக்குரிய ஒருமை பெறவில்லை என்றே தோன்றுகிறது.
அதே போல் பக்கத்துக்குப் பக்கம் எழுத்துப் பிழைகள் சோற்றில் கல்லென பதம் பார்த்துக்கொண்டே உள்ளன. சில இடங்களில் இது வெறும் எழுத்துப் பிழைதானா அல்லது, நமக்குத்தான், சில சொற்களின் சரியான வடிவம்’ தெரியாதா என்ற சந்தேகமே ஏற்பட்டு விடுகிறது. இரண்டு உதாரணங்கள். களங்கம் என்ற சொல் நாவல் நெடுக கலங்கம் என்றே வருகிறது. அதே போல அதைவிட எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக, கருவைக் குறிக்கும் ‘சூல்’ என்ற அழகான சொல், நாவல் நெடுகிலும், சூழ் என்றே வந்து படுத்தி எடுத்து விடுகிறது. பக்கங்களில் ர, ற ,ல, ள குழப்பங்கள் ஏராளம்.
இன்னும் சற்றுப் பொறுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தால் அதியற்புதமாக வந்திருக்க வேண்டிய ஒரு படைப்பு, முடித்தாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியது போல், குறை வடிவில் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன், முழு நிறைவைத் தராமல் நின்றுவிடுகிறது. ஒரு மிக உயர்ந்த சாத்தியம் அடையப்படுவதில்லை என்பது சோகமான விஷயம், அது சு. வேணுகோபாலால் சாதிக்க முடியாதது அல்ல.
புத்தகம் கிடைக்கும் இடம்: கவிதா பப்ளிகேசன்ஸ், 8 மாசிலாணி தெரு. பாண்டிபஜார், டி.நகர். சென்னை 17.
044-24364243 & 044-24322177