கு.ப.ரா எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ சிறுகதையை முன்வைத்து
கு.ப.ரா. எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ கதை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று நியாயமாகவே போற்றப்படுகிறது. இந்தக் கதையில் நாம் காணும் மௌன இடைவெளிகள், கச்சிதமான வடிவம், இயல்பான உரையாடல், துவக்கம் முதல் முடிவு வரை உள்ள சுவாரசியம் முதலியவை இன்று எழுதப்படும் எந்த ஒரு நவீன சிறுகதைக்கும் இணையானவை. இன்னும் ஒரு படி மேலே போய், டிசம்பர் 1942ல், ‘கலாமோகினி’ இதழில் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறுகதையின் நாயகி சாவித்திரி வேதனையில் வெளிப்படுத்தும் விடுதலை வேட்கை பெண்ணிய குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இன்றும்கூட மெய்ப்பிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
எழுத்தாளனே கதைசொல்லியாய் உள்ள இந்தக் கதையின் துவக்கத்திலேயே ஒரு பெண் இறந்து விட்டாள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவள் துன்பம் தீர்ந்தது என்ற ஆசுவாசமும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கமும் கதைசொல்லியின் முதல் இரு வாக்கியங்களில் வெளிப்படுகின்றன. தான் காப்பாற்றப்பட வேண்டியதில்லை என்பது அவளே தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவு என்பதையும் பல முறை முயற்சி செய்தும் கதைசொல்லியால் அவளைக் காண முடியவில்லை என்பதையும் அடுத்து அறிகிறோம். அடுத்து, அவள் மாரடைப்பால் இறந்தாள் என்ற தகவல், இயல்பாகவே, “அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை அடைத்து விட்டனவோ?” என்று கேள்வி எழுப்பி, “அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது,” என்று எடுத்து வைத்து, “’போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது’ என்றாள் கடைசியாக,”என்று தலைப்பைத் தொட்டு கதையின் மையத்துக்கு வந்து விடுகிறது. அதன் பின் கதைசொல்லியாகிய எழுத்தாளன், “திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது. அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்!” என்று விரித்துச் செல்லத் துவங்குகிறான். அவனைப் பொறுத்தவரை சாவித்திரியின் இதயம் திறந்து கொண்ட கணத்தில் விழுந்த ‘சிறிது வெளிச்சம்’ அவளுக்கு சிறிது ஆசுவாசத்தையும் அவனுக்கு சிறிது வேதனையும் அளித்திருக்கிறது,
இறந்து போன பெண், சாவித்திரியின் கணவன் கோபாலய்யர், ஏதோ ஒரு வங்கியில் வேலை செய்கிறான். அவர்கள் வீட்டு ரேழி உள்ளில் கதைசொல்லி வாடகைக்கு இருக்கிறான். கோபாலய்யர் ராப்பகல் எப்போதும் வீட்டில் இருப்பதில்லை. வேலைக்குப் போய் விட்டு இரவு தாமதமாக வருபவன், தினமும் சாப்பிட்டுவிட்டு வெளியே போகிறான், இரவு இரண்டு மணிக்கு மேல்தான் திரும்புகிறான். இவனுக்கு மனைவியிடம் விருப்பமில்லை என்பதையும் பிற பெண்கள் சகவாசம் உண்டு என்பதையும் பின்னர் அறிகிறோம்.
ஒரு வாரம் எல்லாம் இப்படி வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கிறது- எந்தப் பெண்ணின் மரணம் குறித்து பின்னர் கதைசொல்லி அவ்வளவு வேதனைப்படுகிறாரோ அந்தப் பெண்ணைப் பற்றி பெரிய ஒரு பிரக்ஞைகூட அந்த நாள் வரும்வரை கதைசொல்லிக்கு இருப்பதில்லை- “அவள்-சாவித்திரி-என் கண்களில் படுவதே இல்லை. நானும் சாதாரணமாகப் பெண்கள் முகத்தை தைரியமாகக் கண்ணெடுத்துப் பார்க்கும் தன்மை இல்லாதவன். எனவே எனக்கு அவள் குரல் மட்டும் தான் சிறிது காலம் பரிச்சயமாகி இருந்தது,” என்கிறார் அவர்.
ஆனால் அந்த பயங்கர இரவில், கோபாலய்யர் இரவு வெகு நேரம் கழித்து வந்து கதவை நெடு நேரம் (“நாலைந்து தடவை”) தட்டும்போது அவனது மனைவி எழுந்து வந்து திறக்கவில்லை என்று கதைசொல்லி கதவைத் திறக்கிறான். கோபாலய்யர் தன் வீட்டுக்கு உள்ளே போய் கதவைப் பூட்டிக்கொண்டு மனைவியை அடித்து உதைக்கிறார். அடுத்த நாளும் இந்த அடி, உதை, வசவு வைபவம் நடக்கிறது. எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கும், புதிதாய் வாடகைக்கு வந்த ஒருவன் அண்டையில் இருக்கிறான் என்பதால் சாவித்திரியின் கணவன் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்திருக்கலாம். தனது இயல்பு அன்றிரவு வெளிப்பட்டபின் அதை மறைக்க அவனுக்கு காரணமில்லை.
கதைசொல்லியால் இந்த இரண்டு நாள் கூத்தையே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அறைக்குள் மனைவியை வதைத்துக் கொண்டிருக்கும் கணவனை வெளியே வரச் செய்கிறார்- போலீசுக்குப் போய் விடுவேன், என்று மிரட்டி. அவன் வெளியே வந்து இவரிடம் வாக்குவாதம் செய்கிறான். ஆனால் கதைசொல்லி பலசாலியாக இருக்கிறார், துணிச்சலானவர் என்பது அவனுக்குத் தெரிந்து விடுகிறது. அடிப்படையில் கோழையான அவன் கோபித்துக் கொண்டு, “எனக்கு வெளியே போக வேண்டும். ஜோலி இருக்கிறது,” என்று ஓடிப் போய் விடுகிறான். அவன் இருக்கும் இடத்தில் இருந்திருந்தால் நானும் இதைத்தான் செய்திருப்பேன்- உள்ளே போய் அமைதியாக இருந்தால் தோற்றுப் போய் விட்டதாக அர்த்தம், இத்தனை நேரம் நான் அடித்துக் கொண்டிருந்த என் மனைவியின் முகத்தை எப்படி பார்ப்பது, அதற்காக வெளியே இருப்பவனோடும் சண்டை போடவோ போலீசை எதிர்கொள்ளவோ துணிச்சல் இல்லை. இது தெரியாத கதைசொல்லி (இத்தனைக்கும் அவர் ஒரு எழுத்தாளர்), “என்ன மனிதன் அவன், அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை,” என்கிறார்.
கணவன் வெளியே போய் விட்டதும் சாவித்திரி தன் வீட்டுக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள். கதைசொல்லி தன் கதவை மூடிக் கொண்டு படுத்துக் கொள்கிறார். ஆனால் இப்போது பார்த்து அவர் கண்முன் சாவித்திரியின் உருவம் வந்து நிற்கிறது – “நல்ல யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. பதினெட்டு வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்லுகிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. மிகவும் அபூர்வம் இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.”
“அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி…!” அவர் நினைப்பதற்கே காத்திருந்த மாதிரி உடனே சாவித்திரி கதவைத் திறந்து கொண்டு அவர் அறை வாசலில் வந்து நிற்கிறாள். உடனே படுக்கையிலிருந்து எழுந்த கதைசொல்லி விளக்கு போடுகிறார், அவள் வேண்டாம், விளக்கை அணைத்து விடுங்கள், என்கிறாள். ஒரு மேடை நாடகம் போல் இதெல்லாம் நடக்கிறது- விளக்கு போடுவது, அணைப்பது எல்லாமும்கூட.
இந்த இடத்தில் கொஞ்சம் செயற்கை தட்டுகிறது. கதைசொல்லி வீட்டுக்கு குடி வந்து ஒரு வாரத்துக்கு இரண்டு நாட்கள்தான் கூட ஆகியிருக்கிறது, என்ன இருந்தாலும் அவன் ஒரு அந்நியன். எனினும், விளக்கு அணைத்துவிட்டு படுக்கையில் உட்கார்ந்து கொள்ளும் கதைசொல்லியின் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்கிறாள் சாவித்திரி. அப்போதும் தவறாக எதையும் எடுத்துக் கொள்ளாத கதைசொல்லி, “’புருஷன் ஒரு விதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சரியம்,” என்று எழுதுகிறார். தன் கணவன் போலவே அவளும் சண்டைக்காரியாக இருக்க வேண்டும் என்றோ அவளைப் போலவே அவனும் பவ்யமானவனாக இருந்திருக்க வேண்டும் என்றோ அவர் எதிர்பார்த்திருக்க முடியாது, இங்கு என்ன ஆச்சரியத்தைக் கண்டார் என்று தெரியவில்லை.
சாவித்திரிக்கும் தன் செயலின் அத்துமீறல் தெரிகிறது- இப்படி இருட்டில் தனியாகப் பேசும் துணிச்சல் தனக்கு இருப்பதால் தன்னைச் சந்தேகிக்க வேண்டாம் என்கிறாள் அவள். “நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று… வந்தேன்,” என்று சாவித்திரிக்கு கதைசொல்லியிடம் நம்பிக்கை பிறந்து விட்டதைச் சொல்கிறார் கு.ப.ரா. சாவித்திரிக்கு பரிந்து வந்தவன், அது வரை குற்றம் சொல்ல முடியாத வகையில் நடந்து கொண்டவன் என்பதைப் பார்க்கும்போது சாவித்திரியின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போது கதைசொல்லி, ஏன் நீங்கள் அவனுடன் இது போல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும், பிரிந்து விடலாமே, என்று கேட்கிறார். தனக்கு போக்கிடம் இல்லாததைச் சொல்லும் சாவித்திரி, ஆணுக்குப் பெண் சில மாதங்களில் அலுத்து விடுகிறாள், என்கிறாள். அவள் கணவனிடம் எந்த சுகமும் காணாதவள் என்பதை மட்டுமல்ல, எந்த ஒரு ஆணிடமும் காண முடியாது என்பதிலும் உறுதியாய் இருக்கிறாள்- “எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு திருப்தி கொடுக்காது…,” என்கிறாள் அவள். நான் உன்னைத் திருப்தி செய்கிறேன் என்று சொல்லும் கதைசொல்லியிடம், என் அழகில் மயங்கி உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ள, என்னைத் திருப்தி செய்வதாய்ச் சொல்லுகிறீர்கள், என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறாள்.
சாவித்திரியின் நம்பிக்கை வறட்சி உண்மையானது என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது- அது உண்மை என்றால் கணவன் மனைவியாய், ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு வாழ்வதாய் நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தம்பதியரையும், நாம் ஏளனம் செய்துச் சிரிப்பதாகும். ஆனால் புறத்தில் வெளிப்படுவது எல்லாமே அக உண்மைகளாகி விடுகிறதா? நிரந்தரமானது என்றும் உண்மையானது என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் எப்படிப்பட்ட அன்பும் உறவும் நிலைகுலைவதை நம் புராணங்களும் காவியங்களும் எத்தனைச் சொல்லியிருக்கின்றன, என்றாலும் நாம் நம் அன்றாட சராசரி வாழ்வின் கனவுகள் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவுகள் கலையும்போதுதான், எந்த ஒரு உறவிலும் எவரொருவரையும் போஷகராக ஏற்றுக் கொள்ளும்போது நாம் அவர்களுக்கு அளிக்கும் முற்றுரிமைகள், ஊழ் போல் நம்மை வருத்தும் உண்மை விளங்கும். சாவித்திரியின் நிலை அப்படிப்பட்டது. இங்கு அவள் வெறும் பெண்ணாய் நிற்கிறாள் – ஆண் அளிக்கும் அன்பு, ஆதரவு, பாதுகாப்பு என்று அனைத்தும் அதன் விலைப்பட்டியுடன்தான் வருகின்றன.
கு.ப.ரா.வின் இந்தக் கதையில் வரும் சாவித்திரியை மறக்க முடியாத பெண்ணாகவும் அவளது நிலை அவிழ்க்க முடியாத புதிராகவும் நம் மனதில் இடம் பிடிக்க காரணம், அவளது இந்த சமரசமற்ற நிராகரிப்பு. எப்படிப்பட்ட துன்பம் அவளை இந்த இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கும்? அந்த இடம் யாருக்கும் விலக்களிக்கப்பட்ட இடமல்ல. வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் எல்லாருக்கும் பொதுவாய் திறந்தே இருக்கின்றன. யாருக்கு எந்தக் கதவு திறக்கிறது, எங்கு வெளிச்சம் விழுகிறது, எது இருளில் காத்திருக்கிறது என்பது அவரவர் அதிர்ஷ்டம், ஊழ், அல்லது, தன்னிகழ்வு கையளித்த சாத்தியம்.
இந்த உண்மையை உள்ளுணர்வால், அல்லது சாவித்திரி ரத்தமும் சதையுமாய் தன் முன் நிற்கும் நிலையைக் கண்டதால், கதைசொல்லி உணர்ந்திருக்க வேண்டும். விளக்கு போட்டுவிட்டு, மெய்யாகவோ பொய்யாகவோ, “நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது,” என்கிறார் அவர். இப்போதுதான் சாவித்திரிக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. “நிஜம்மா,” என்று எழுந்து படுக்கையில் அவர் பக்கத்தில் வந்து உட்கார்கிறாள். அவர் பொய் சொல்லவில்லை என்பதை உறுதி செய்ததும், “அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்” என்று ஆசுவாசம் அடைகிறாள். எனக்கு ஏதோ ஒரு திருப்தி ஏற்படுகிறது, என்று சொல்பவள் துவண்டு விழுவது போல் இருக்கிறாள், அவளை நெருங்கி தன் மேல் சாய்த்துக் கொள்கிறார் கதைசொல்லி.
எத்தனை பேசினாலும் கதை முழு முதல் உண்மையாகி விடுமா என்ன? இங்கு கு.ப.ரா. என்ற எழுத்தாளரை நாம் பார்க்க முடிகிறது. மிகவும் எச்சரிக்கையாக, எவ்வளவு வெளிப்படுத்த வேண்டுமோ, அவ்வளவு வெளிப்படுத்துகிறார். சொல்வது ஒன்று உணர்த்துவது ஒன்று என்று அவரது கதைமொழி இரட்டை வேலை செய்கிறது. உத்திதான், ஆனால் அதன் விளைவாய் அவர் பாய்ச்சும் ஒரு சிறிய வெளிச்சமே ஒரு மிகப்பெரிய பரப்பை நம் முன் விரிக்கப் போதுமானதாய் இருக்கிறது.
சாவித்திரி ஒன்றும் பேசாமல், எதுவும் செய்யாமல், கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள் என்று எழுதுகிறார் கு.ப.ரா (நாம்தான் மனக்கண்ணில் அவள் அவர் மீது துவண்டு, சாய்ந்து கிடப்பதைக் கற்பனை செய்து கொள்ள வேண்டும்). இதையடுத்து, “இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை,” ஏதோ ஒரு மிகப்பெரிய விபரீதத்தைச் சொல்லப் போவது போல் எடுத்துக் கொடுக்கிறார்.
ஆனால் இங்கு ஒரு பெரிய, துளைக்க முடியாத மௌனத் திரை விழுகிறது. “மெள்ள அவளைப் படுக்கையில் படுக்கவைத்தேன்… என் படுக்கையில். அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின இதழ்கள் ஓய்ந்து போனது போலப் பிரித்தபடியே கிடந்தன.” விபரீதம் ஒன்றும் நடக்கவில்லை என்றுதான் நாம் நினைக்கிறோம், விரிந்தபடி கிடக்கும் உதடுகள் கொஞ்சம் தொல்லை செய்தாலும். ஆனால் ஏன், “திடீரென்று, ‘அம்மா! போதுமடி!’ என்று கண்களை மூடிய வண்ணமே” முனகுகிறாள் சாவித்திரி? “என்னம்மா?” என்று குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக் கொள்கிறார் கதைசொல்லி.
இப்போதுதான் விபரீதம் நடக்கிறது. இதை எத்தனை மௌனமாய் வெளிப்படுத்துகிறார் என்பதில் நாம் கு.ப.ராவின் மேதைமையைக் காண்கிறோம். “மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஒய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள்,” என்று சொன்னவள், “உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக, என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்,” என்றவள், “நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது,’ என்று சொன்னவனிடம் நம்பிக்கை பிறந்து, ‘நிஜம்மா’ என்று கேட்டு, படுக்கைக்கு வந்து பக்கத்தில் உட்கார்ந்தவள், அவன் அளிக்கும் ஆறுதலை ஏற்று தோளில் சாய்ந்தவள், சரிந்து இதழ் விரிந்து படுக்கையில் கிடந்தவள், தன்னை ஒருவன் புரிந்து கொண்டான் என்றோ, அல்லது நம்மால் இனம் காண முடியாத வேறொரு உணர்விலோ, “‘அம்மா! போதுமடி!’, என்றவள், “என்னம்மா?” என்று கணவனல்லாத வேற்று ஆடவன் தன் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டதும் விழித்துக் கொண்டு, “போதும்!” என்கிறாள். அவள் எதைப் போதும் என்று சொல்கிறாள் என்பதை அறியாத அவன், அறியாதவன் என்று சொல்ல முடியாது, அறிய அவகாசம் எடுத்துக் கொள்ள முடியாத அவசரத்தில் இருப்பவன், எரிந்து கொண்டிருக்கும் விளக்கைச் சுட்டி, “சாவித்திரி, விளக்கு…” என்கிறான். அவனது விழைவை நன்றாகவே புரிந்து கொள்ளும் சாவித்திரியின் விளக்கு அப்போதே அணைகிறது.
“‘ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்றுநேரம் இருந்த வெளிச்சம் போதும்!’” என்று உடனே எழுந்து நிற்கிறாள். “நீ சொல்வது புரியவில்லை,” என்று சொல்பவனிடம், “இனிமேல் திறந்து சொல்ல முடியாது,” என்று தன்னைப் பூட்டிக் கொள்கிறாள், நாளையே வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள். அவனுக்கு இப்போதும் தன் தவறு புரியவில்லை, அல்லது, அதை அறிந்தும் அறியாமல் இழந்து விட்டான்- “’ஏன், ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?’” என்று கேட்கிறான். சாவித்திரியின் எச்சரிக்கை மணி அலறுகிறது- “’ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது, ஆபத்து,” என்று சொல்பவள் தானே விளக்கை அணைத்துவிட்டு தன் அறையின் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள்.
கதைசொல்லியின் உள்ளத்தில் இருள் சூழ்கிறது. “எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா, துக்கமா, தன் அழகா, என் ஆறுதலா, அல்லது அந்தச் சிறிது வெளிச்சத்தில்…?” என்று கேள்விகளே அவன் முன் நிற்கின்றன. முடிவில் கு.ப.ரா. அவனை இருளில்தான் விட்டுச் செல்கிறார்- “ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது,” என்று கதையின் துவக்கத்தில் சொல்லும் அவர் அடுத்து, “நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே,” என்று அவளையே குற்றம் சொல்கிறார். சாவித்திரிக்காக யாரும் எதுவும் செய்திருக்க முடியாது, அவளும் இடம் கொடுத்திருக்க முடியாது. ஆனால் கதைசொல்லியும் தன் தவற்றை உணராதவறல்ல- “நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு,” என்றும் எழுதுகிறார்.
அந்தச் சிறிய வெளிச்சம் சாவித்திரியின் சுயராச்சியப் பிரகடனத்துக்காகவே ஒளிர்ந்த ஒன்று. மறைந்துவிட்ட அதன் பிரகாசமும், மௌனத்தில் வீறிடும் அர்த்தங்களின் உண்மையும், நமக்கு அரிதல்ல, நம்மால் அறியவோ அடையவோ முடியாதது அல்ல. இது போக, இலக்கிய பார்வையில், ஒரு மிகப்பெரிய உண்மையைக் குறுகிய வடிவில் உணர்த்துவதாய்க் கொண்டாடப்படும் ‘Tell all the truth but tell it slant —‘ என்ற எமிலி டிக்கின்சனின் கவிதையின் பேருரையாகவும் விளங்குகிறது இச்சிறுகதை.