குளக்கரை


[stextbox id=”info” caption=”நிறுவனங்கள் திட்டங்கள்]

நவீனமான இந்த உலகத்தில், ஒரு சமூகமாக எத்தனையோ முன்னேற்றங்களை நாம் கண்டிருந்தாலும் இனம் சார்ந்த வன்முறைகளும் பாரபட்சங்களும் காட்டப்பட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  பொருளாதாரத்தைப் பொருத்தவரையில், ஊதியம் வழங்குவதிலிருந்து வங்கிக் கடன்கள் பெறுவது வரை, குறிப்பிட்ட இனத்திற்குச் சலுகைகள் கிடைப்பதும், சில இனங்களுக்கு அவை மறுக்கப்படுவதும் நடைமுறையாக உள்ளது. உதாரணமாக உலகின் பெரிய பல வங்கிகள் கறுப்பினத்தினருக்கு கடன் வழங்குவதில் பாரபட்சமாகச் செயல்படுவது கண்டறியப்பட்டு அவற்றிற்கு கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.  இதற்கு அரசும் உடந்தை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. வரிகளை வசூலித்து அதன்மூலம் திட்டங்களை நிறைவேற்றி வந்த அரசுகள், ஒரு கட்டத்தில் கடன் பெற்று அதன் மூலம் திட்டங்களுக்குத் தேவையான நிதியாதாரங்களைத் திரட்ட முன்வந்ததிலிருந்து, கடன் அளிப்பவர்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டன. இப்படி ஒட்டுண்ணி போலச் செயல்படும் நிர்வாகம், ஐந்து முறைகளைப் பயன்படுத்துகிறது என்கிறது இந்தக் கட்டுரை.
https://thenewinquiry.com/carceral-capitalism/
அதாவது 1) குறிப்பிட்ட தருணங்களில்  நிதித்துறை நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது, 2) தானியங்கிமயமாதல் 3) மக்களை பிரிவுபடுத்தி சுரண்டுதல்  4) காவலில் வைத்தல் 5) அவசியமற்ற வன்முறை. இதில் குறிப்பிட்ட தருணங்களில் நிதித்துறை நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பது, வழக்கமாக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் முடிவுகள் எடுக்கப்படாமல், அவசரகால நிர்வாகிகளால், நிதித்துறை நிறுவனங்களுக்குச் சாதகமாக சில சமயங்களில் முடிவுகள் எடுக்கப்படுவதைக் குறிக்கிறது. கட்டுரையாசிரியர் இதற்கான உதாரணங்களை அளிக்கிறார்.  தானியங்கிமயமாதல் என்பது அரசு நிதிச்சுமையினால் தள்ளாடும்போது, தானியங்கி முறைகளைப் பயன்படுத்தி, பணியாட்களை நீக்கம் செய்வது.  அதேபோல் கடுமையான வரிவிதிப்புகள், அபராதங்கள் மூலமாக மக்களைச் சுரண்டுவதும் ஒரு வழிமுறை. குறிப்பாக கறுப்பினத்தவர் வசிக்கும் பகுதிகளில் கடுமையான சட்டதிட்டங்களுக்கு அவர்களை உட்படுத்தி, துன்புறுத்துவது இந்த முறையில் அடங்கும்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, வளர்ந்துவரும் சிறைகளும் அவற்றில் கைதிகளாக காவலில் இருப்பவர்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன(ர்).  இந்தக் கைதிகளைப் பயன்படுத்தி பல தொழில்கள் நடைபெறுகின்றன, அவற்றிலிருந்து லாபமும் ஈட்டப்படுகிறது. இந்தச் சிறைகளில் அடைப்பட்டுக்கிடப்பவர்கள், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருக்கின்றனர். இதுவும் அரசு பாரபட்சமாக ஒரு இனத்தவர்களுக்குக் கொடுமைகள் இழைத்து, அவர்கள் மூலம் லாபம் ஈட்டும் வழிமுறையாக உள்ளது.  இப்படிக் கறுப்பினத்தவர்களுக்கு அநீதி இழைப்பதுபோல் செயல்படும் அரசு, அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் தனிமைப்படுத்தவே விழைகிறது என்று குற்றம் சாட்டுகிறார். இது அமெரிக்காவின் மதிப்பீடுகளான சமத்துவம், பன்முறைக்கலாச்சாரம், சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று கருதுவது தவறு, அமெரிக்கா கட்டமைக்கப்பட்டதின் அடிப்படையே இதுதான் என்றும் கூறுகிறார் அவர்.  இப்படி பாரபட்சமான, குறிப்பிட்ட இனத்தவரைத் தனிப்பட்ட முறையில் நடத்தும் அரசையும் அதன் பொருளாதார முறைகளையும் பற்றிய கட்டுரை இது.

https://thenewinquiry.com/carceral-capitalism/

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஃபையர் அண்ட் ஃப்யூரி”]

அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பற்றி  ‘ஃபையர் அண்ட் ஃப்யூரி’  என்ற புத்தகத்தை எழுதிய மைக்கேல் வோல்ஃப் என்ற எழுத்தாளர், இந்தப் புத்தகத்தை எழுத என்னவெல்லம் செய்தார், இந்தப் புத்தகம் எப்படி எழுதப்பட்டது என்பதையெல்லாம் கோடிகாட்டிச் செல்கிறது இந்தக் கட்டுரை. இதில் வருவது போல எப்படி சில காலத்திற்கு முன்னால் ட்ரம்ப் தான் அதிபராக வருவதைப் பற்றி யோசித்திருக்கமாட்டாரோ, அதேபோல் வோல்ஃபும் தாம் ஒரு புத்தகம் எழுதப்போவதாக எண்ணியிருக்க மாட்டார் என்கிறார் கட்டுரையாசிரியர். வெள்ளை மாளிகைக்குச் சென்று அங்கு பேட்டியளித்தவர்களுக்காகக் காத்திருக்கையில், அங்குள்ளவர்களிடம் பேச்சுக்கொடுத்து, அந்தச் செய்திகளையும், ஊகங்களையும் வைத்தே இந்தப் புத்தகத்தை எழுதிவிட்டார் வோல்ஃப்.  பிழைகள் மலிந்துள்ள புத்தகம் என்று பத்திரிகைத்துறையில் உள்ள பலரும் இந்த நூலை விமர்சித்துள்ளனர். அமெரிக்காவின் ஊடகத்துறை எவ்வளவு தரம் தாழ்ந்துள்ளது என்று அங்கலாய்க்கிறது இந்தக் கட்டுரை.
அதே வேளையில், வோல்ஃப் போன்ற ஒருவர் எதற்காக அடிக்கடி வெள்ளை மாளிகைக்கு வந்து போகிறார் என்பதையும் ஒருவரும் விசாரிக்கவில்லையாம். இத்தனைக்கும் வோல்ஃப் நன்கு அறியப்பட்ட ஒரு பத்திரிகையாளர், தொலைக்காட்சியில் தோன்றுபவர். ஒரு முறை ட்ரம்பே அவரை இங்கே என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்திருக்கிறார். ஒரு புத்தகம் எழுதும் பணிக்காகவே இங்கு வந்திருக்கிறேன் என்று வோஃப் பதிலளிக்க, அதை ட்ரம்ப் அதிகம் பொருட்படுத்தாமல் நகர்ந்துவிட்டாராம். புத்தகம் வெளிவந்த பின் ட்ரம்ப் மைக்கேல் வோஃல்ப் ஒரு பொய்யர், மட்டான புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றெல்லாம் சாடியிருக்கிறார். திடுதிப்பென்று எதிர்பாராதவிதத்தில் மேலெழுந்தாலும், ட்ரம்பின் நிர்வாக அமைப்பில் பல ஓட்டைகள் இருக்கின்றன என்பதை இந்தப் புத்தகம் மட்டுமல்லாது அது எழுதப்பட்ட விதமே சுட்டிக்காட்டியிருக்கிறது. இப்படி வலுவான அடித்தளமில்லாத அமைப்பு எத்தனை நாள் தாக்குப்பிடிக்கமுடியும், பரபரப்பு அறிவிப்புகளின் மூலமே காலத்தை ஓட்டிவிடமுடியுமா ?
https://www.lrb.co.uk/v40/n03/inigo-thomas/diary

[/stextbox]