வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்

ஹெர்மன் ப்ரோஹ்கின்தூக்கத்தில் நடப்பவர்கள்

ஃபிலான் ஓபிரயனைக் காட்டிலும் (அவரைவிட பலமடங்கு மகோன்னதமான) ஹெர்மன் ப்ரோஹ்கே என் பட்டியலின் மிக கண்டுகொள்ளப்படாத எழுத்தாளராக இருக்கக்கூடும். எலியஸ் கானெட்டியின்ஆட்டோடாஃபேயை நினைத்துக் கொள்கிறேன், ராபர்ட் மியூசிலின்பண்புகளில்லா மனிதனையும்கூட. ஆனால் கானெட்டி இப்போது ஒரு நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர். ராபர்ட் மியூசிலும் நன்கு அறியப்பட்டவர், குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியக்கூடிய பேயைப் போல, அவ்வப்போது காணக் கிடைப்பதால் மட்டுமே அறியப்பட்டிருந்தாலும்கூட. ப்ரோஹ்கின்வெர்ஜிலின் மரணமும்இவர்களின் படைப்புகளுக்கு நிகரான அலட்சியப்படுத்தப்பட்டிருக்கும் படைப்புதான். அவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. மேலும் பண்பட்ட கைத்தட்டலின் முகஸ்துதியும் அவருக்குக் கிட்டியது என்பதும் உண்மையே. அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதால் அவருக்கு பரிசுகளும் நிதியும் கிடைத்தன. அனுமானிக்கக்கூடிய விதத்தில் சாமானியத்திற்கு கிட்டும் கூச்சலான கவனத்தில் அவரது சிறப்பு மழுங்கடிக்கப்படுவதால், அவரது தரத்திற்கு ஏற்ற சரியான அளவிற்கு பிரத்தியேகப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். ‘தூக்கத்தில் நடப்பவர்கள்உளவியல் கதைக்கூற்றாகத் தொடங்கி, “நிஜஉலகின் விவரிப்பு பரப்பாலான ஒரு மையத்தை ஊடுறுவிச் சென்று ஒரு தத்துவார்த்த உணர்ச்சிப் பாடலின் தொனியில் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு கட்டமும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் விதமே முக்கியமானது. மரபான நாவலை ஒரு ஜன்னல் கண்ணாடியாக நாம் அர்த்தப்படுத்திக் கொண்டோமானால்தூக்கத்தில் நடப்பவர்கள்அதில் எறியப்பட்ட ஒரு கல்லுக்குச் சமம். ‘வெர்ஜில்லின் மரணமேஎஞ்சியிருக்கும் சிதறுண்ட கண்ணாடி. இனி ஊடுறுவிப் பார்ப்பதற்கு ஏதுமில்லாததால் நம்மால் வெளியே பார்க்கவும் முடிவதில்லை. மானைப் போல் இவரும் ஒருதத்துவார்த்தமான நாவலாசிரியர்”. ஆனால் அல்டோஸ் ஹக்ஸ்லி, ஜார்ஜ் ஆர்வெல் அல்லது அனடோல் ஃப்ரான்சைப் போல் அவர் கருத்துரீதியான நாவலாசிரியர் அல்ல.

இதலோ ஸ்வேவோவின்ஜீனோவின் ஒப்புதல் வாக்குமூலங்கள்’ (அல்லது வில்லியம் வீவரின் அருமையான மொழிபெயர்ப்பில் அண்மையில் வெளிவந்த ஜீனோவின் மனசாட்சி’)

ஜெர்மானியஇட்டாலிய நகைமுரண்களுக்கிடையேதான் எத்தனை வேறுபாடு. உலகை கறாராக எடுத்துக் கொள்ள மறுப்பதனாலேயே அதை ஸ்வேவோ கறாராக வரையறுக்கிறார்; அனைத்தையும் மிக லேசாகவே அவர் கையாளுகிறார். இறுதியில் மிக அபத்தமாக தொனிக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டு மிக முக்கியமான ஒன்றைப் படைப்பதற்காக மான் உலகை கனத்த கவனிப்புடன் அணுகுகிறார். அவருடைய மிக மென்மையான தொடுதல்கூட கன்றலை விட்டுச் செல்லும் திறன் படைத்தது. ஒரு அடாவடியனின் தாக்குதல் விட்டுச் செல்லும் கன்றல் அல்ல, டாக்டரின் தடுப்பூசியால் உண்டாகும் கன்றலைப் போல. என்னுடன் பணியாற்றும் நவோமி லெபோவிட்ஸ் ஸ்வேவோவைப் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார். தாமதமாக புகழடைந்த தருணத்தில் ஸ்வேவோ தன்னை அறுபத்தி நான்கு வயதுக் குழந்தை (“bambino di 64 ani”) என்று அழைத்துக் கொண்டதை நவோமி விவரிக்கிறார். ஆனால் ஜாய்சை சந்திக்கையில் அவர் எட்டோர் ஷ்மிட்ஸ் என்ற வணிகராகத்தான் இருந்தார். வறுமையில் நலிந்திருந்த ஐரிஷ்காரருக்கு கடனளித்தவரும் இந்த எட்டோர் ஷ்மிட்ஸ்தான். ஆனால் ஜாய்ஸ்ஜீனோவை ஃபோர்ட் மாடக்ஸ் ஃபோர்ட், டி.எஸ்.எலியட் போன்ற செல்வாக்குள்ளவர்களிடம் பரிந்துரைக்கையில் அவர் நாமறிந்த ஸ்வேவோவாக மாறிவிட்டார். ‘செனிலிடாஎன்ற முந்தைய படைப்பையும் (அதுவும் மிக அழகான படைப்பே) எழுதியிருந்தார். பெரும் கலைகளை நாடிச் செல்பவர் என்ற கற்பனை நவிற்சியோ, தான் ஒரு இலக்கிய ஆளுமை என்ற பெருமிதமோ ஸ்வேவோவிற்கு இருந்ததாக தெரியவில்லை. அவர் கண்ணாடிப் பொருள் வியாபாரத்தில் இருந்தார். எழுதினார், போதுமான அளவிற்கும் எழுதினார். ஆனால் தனக்காக மட்டுமே அவர் எழுதவில்லை. எனது பட்டியலில் ஸ்வேவோ இடம் பெறுகிறார், ஏனெனில் அவர் இத்தாலிய இலக்கியத்தின் வாசலை எனக்குத் திறந்து கொடுத்தமைக்காக. அனேகமாக அப்போது அவ்விலக்கிய உலகைப் பற்றிய பிரக்ஞைகூட இல்லாதிருந்தேன். தாண்டேயே எனது இறுதி நிறுத்தமாக இருந்தார். ஆனால் டனுன்சியோ தன் பதாகையை படரவிட்டட்ரியெஸ்டேவழியே அவ்வுலகில் நுழைந்த பிறகு சிறிது சிறிதாக முன்னேறி பல பிராந்தியங்களில் தங்கவும் செய்தேன்: உதாரணமாக பவீசேயில், மொண்டாலேயில், ப்ராட்டோலினியில், வித்தோரீனியில். பின்னர் எமீலியோ காத்தாவின் ரோமில், ப்ரீமோ லெவியின் டூரினில், இத்தாலோ கால்வீனோவின் கனவுப் பிரதேசங்களில்.

குஸ்தாவ் ஃப்லோபேரின் கடிதங்கள்

இங்குதான் நான் பயின்றேன். மேலும் பயின்றேன். மேலும் மேலும் பயின்றேன். என் கடிதங்களை. அவற்றை எழுதப் பயிலவில்லை. அதை எழுதித்தான் பயில முடியும். பெருமளவு வாசித்ததற்குப் பின். எதை எழுதவேண்டும், எழுத்தைப் பற்றி எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையே கற்றுக் கொண்டேன். இலக்கிய இலட்சியங்கள் பற்றியும் அவை ஏன் முக்கியமானவை என்பதையும் கற்றுக் கொண்டேன். என்னால் ஒரு மூன்றாம் தர கொள்கை வெறியனாக மட்டுமே ஆக முடிந்திருந்தாலும் ஒவ்வொரு முன்னேற்றமும் எனக்கு உதவியாக இருந்தது. மேலும் ஃப்லோபேரின் ஆத்திரத்தை படித்து என்னுடைய கோபத்தை பற்றி ஓரளவிற்கேனும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. காதலைக் காட்டிலும் வெறுப்பையே நான் அதிகம் நம்புகிறேன் என்பதையும் இங்கு கூறியாக வேண்டும். அது அவ்வாறு இல்லை என்ற பிரச்சாரத்திற்கு நேர்மாறாக அது அனேகமாக ஆக்கப்பூர்வமாகவே இருந்திருக்கிறது; கபடதாரிகளால் மிகக் குறைவாகவே அது கைகொள்ளப்படுகிறது. மேலும் மற்றதைக் காட்டிலும் அது மிகத் தெளிவாகவே புரிந்துகொள்ளப்படுகிறது; கஷ்டப்பட்டே பெறப்படுவதால் அது அனேகமாக நம் உழைப்பிற்குத் தக்க ஊதியமாகவும் இருக்கிறது; சில சமயங்களில் அவ்வெறுப்பிற்கு பாத்திரமானவர்களுக்கு விழையப்படும் ஊழ் அவர்களுக்கு பொருத்தமானதாகவும் அமைந்து விடுகிறது. நல்லதை விரும்பினோமானால் தீயதை நாம் வெறுக்கத்தான் வேண்டும். ஆத்திரப்படவே முடியாத அளவிற்கு தொய்ந்து போன, தொடை நடுங்கித்தனமான ஒரு காதலை என்னால் கற்பனை செய்ய இயலாது. ஆனால் வெறுப்புதான் ஃப்லோபேரைக் கொன்றது என்று நினைக்கிறேன். செலீனிற்கும் பெரும் நற்பயனை அது விளைவிக்கவில்லை. இளம் எழுத்தாளரொருவருக்கு நான் அறிவுரை வழங்க வேண்டுமானால் (வழங்குவதற்கு என்னிடம் ஏதுமில்லை) அவரை இக்கடிதங்களை ஒரு பரவசமான வாசிப்பிற்கு உட்படுத்தும்படி கேட்டுக் கொள்வேன். மூர்க்கமாகவும் கொச்சையாகவும் நடந்து கொண்ட அவரிடமிருந்து  பெண்களை அணுகுவதைப் பற்றி நாம் அறிந்து கொள்ளக்கூடாது. ஆனால் எழுத்தாளராக ஒரு பக்கத்தை எவ்வாறு அணுகவேண்டும் என்பதை அவர் நமக்கு அருமையாகவே கற்றுத் தருவார். ஒவ்வொரு வார்த்தையுமேமிகப்பொருத்தமான வார்த்தைஎன்று கூறினால் அது ஒருகால் மிகையாகவே இருக்கலாம். ஆனால் இரண்டிலொரு வார்த்தையாவதுமிகப் பொருத்தமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குஸ்தாவ் ஃப்லோபேரின் பூவாவும் பெகூஷேயும்

ஆசான் எழுதிய மற்றதனைத்தையும் படித்து அதிசயித்திருந்தாலும் அவரது இக்கடைக்காலப் பிரதியை நான் இன்னமும் படித்திருக்கவில்லை. கதைகளை ஒரே மடக்கில் பருகியிருக்கிறேன், “பொவரியாலும்” “படிப்பினையாலும்மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன், அவரது கிழக்கத்திய மிகைப்புகளைக்கூட ரசித்திருக்கிறேன். ஆனால் இந்த மகத்தானமட்டந்தட்டலைபடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கவில்லை. பதற்றப்படக்கூடிய நெஞ்சங்களுக்கான புத்தகம் இதுவல்ல. ஐரோப்பிய அறிதல் பாவனைகளைப் பாழ்படுத்தி, குண்டுவெடிப்பைப் போல முழுமையாகச் சிதறடிக்கும் ஒரு புத்தகம். புவும் பெயும் கிட்டத்தட்ட பேசாப் படங்களில் வரும் நகைச்சுவை பாத்திரங்களை ஒத்தவர்கள். லார்ல் ஹார்டியைப் போல் ஞானவெளியில் கோமாளித்தனங்களைச் செய்து அதை சின்னாபின்னம் செய்கிறார்கள். எந்த விஷயத்தையும் அவர்கள் உண்மையிலேயே உவந்து பாராட்டுவது அவ்விஷயத்தின் வெட்கக்கேட்டை அறிவிப்பதற்கு நிகராகிறது. இதைப் பற்றி நானும்கூட ஏற்கனவே சிந்தித்திருந்தேன், அனைத்தையுமே, ஆனால் ஒருபோதும் அவை இவ்வளவு நேர்த்தியாக விவரிக்கப்படவில்லை. ஒருவகையில் என் முன்முடிவுகளை  ஊர்ஜிதப்படுத்தியதாலேயே இப்படைப்பு என்னை மாற்றியது என்று கூறலாம். இம்மனப்பாங்குகளுடன் என்னைப் பிணைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாது அவற்றிற்கு எப்போதுமே விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதையும் இப்படைப்பு எனக்கு நிச்சயப்படுத்தியது.

ஸ்டெந்தாலின் சிகப்பும் கருப்பும்

பாஸ்டன், 1943. நீர்மூழ்கித் தள கல்லூரி நுழைவுத் தேர்விற்காக நான் அங்கு போகவிருந்தேன். லிவர்ரைட் ப்ளாக் அண்ட் கோல்ட் பதிப்பிற்கு சொந்தக்காரனாக ஆகியிருந்தேன். (என்ன அருமையான பதிப்புகள், அனைத்துமே எனக்கு பிரியமானவை). ஜூல ரோமாவின்உடலின் ஆனந்தப் பரவசம்என்ற வினோதமான புத்தகம், மிகையாகசெய்யப்பட்டிருந்ததுஎன்று இப்போது தெரிகிறது, ஆனால் அதில் காமமிருந்தது, அதுவும் ஃப்ரெஞ்சில். ரெமி டு கோர்மோவின்காதலின் இயல்பான தத்துவம்’, இன்னம் அதிகமான காமம், இன்னம் அதிகமான ஃப்ரெஞ்சில். ஸ்டெந்தாலே எழுதியகாதலைப் பற்றி’, அதுவும் அப்படியே. பியர் லூயியின் தொகுக்கப்பட்ட படைப்புகள், இன்னொரு அப்படியேவையும் சேர்த்துக் கொள்ளலாம். அலெக்சாண்டர் டூமாவுடையமடாம் ஜியோவானியின் அன்றாட நடப்புக் குறிப்பு’, காமமல்லாது ஃப்ரெஞ்சு மட்டுமே இருந்ததால் ஏமாற்றமளித்தது. கடைசியாகசிகப்பும் கருப்பும்’, செக்கர் சதுரங்களைப் போல்சரி இப்போது விஷயத்துக்கு வருகிறேன்இரயில் அட்டவணையில் நியூ லண்டனை என் கண்கள் கண்டுபிடித்து விட்டன, அதன் பதிப்பு வரிசைக்காகவே நான் வாங்கியிருந்த நாவலை புரட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு நீரில் கயிற்றில் ஏறும் முயற்சி எனக்கு உவப்பாக இருக்காது என்பதை நினைத்துக் கொண்டே, நாவலின் முதல் அத்தியாயம், ஒரு சின்ன ஊரைப் பற்றிய விவரணை, மிகச் சாதாரணமாக உப்புசப்பில்லாமல் இருப்பதை நினைத்துக் கொண்டே, டின்னில் அடைக்கப்பட்ட தக்காளியைப் போல் நானும் நீர்மூழ்கிக் கல்லூரியில் அழுத்தக் கலமொன்றில் இருத்தப்படுவேனா என்பதையும் நினைத்துக் கொண்டேபின் திடீரென்று ஸ்டெந்தாலால் தந்திரமாக உள்ளிழுக்கப்பட்டு, வார்த்தைகள் மீது கவனம் செலுத்தாமல் (பிற்காலத்தில் எனக்காகவே வகுத்துக் கொண்ட சரியான வாசிப்பிற்கான எனது விதிமுறைகள் அனைத்தையும் மீறி) நானே ஏதோ ஒரு தப்பியோடும் ரயில் வண்டியைப் போல் உருண்டபடி, மேலும் மேலும் அடிக்கடி மூச்சை வெளியேற்ற மறந்து, என்னுள் பிடிவாதமாக உயர்ந்தெழும் இறுக்கத்தை உணர்ந்தபடிநீருக்கு அடியில் இருந்ததால் அல்ல, இந்த கதைகூறல் ஆசானின் மந்திர உலகிற்குள் இருந்ததால் ஏற்பட்ட விளைவுகள் இவை. ‘சார்ட்டர்ஹவுஸ் ஆஃப் பார்மாவும் இதே விளைவுகளை என்னுள் எழுப்பும், ஆனால் புத்தகத்திற்கும் எனக்கும் இடையே ஒரு நீர்மூழ்கிக் கல்லூரி வருவதற்கு நான் இம்முறை அனுமதிக்கவில்லை. அதன் நீளமான நீளத்தை, அது ஏதோ டிவி டிரேயின் மீதிருப்பது போல் அதன் ஓரங்களில் கொறித்துக் கோண்டே, கிட்டத்தட்ட ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இது போன்ற மலைமுழுங்கிப் பசியை ஒத்திருக்கும் வாசிப்புகள் வாய்ப்பது அரிது. இப்பொதெல்லாம் அம்மாதிரியான வாசிப்பனுபவங்கள் எனக்கு நிகழ்வதே இல்லை. ஏனெனில், எழுதுவதற்காகவோ, பயிற்றுவிப்பதற்காகவோ, உரையாற்றுவதற்காகவோதான் இப்போது படிக்கிறேன். ஏனெனில் இப்போது, வாக்கியத்தின் வசீகரத்தில் தன் ஆன்மாவையே இழக்கப்போகும் பித்து பிடித்த வாசகனல்லவே நா?
??்.

கோலெட்டின் ‘பொழுது புலர்ந்தது’

படுக்கையறைக்கான புத்தகங்கள்; அனேக முலைகளைக் காட்டிலும் சுவையான புத்தகங்கள்; சிராய்க்காது என்று எண்ணும் அளவிற்கு முழுவதுமே மென்மையாக அல்லாது, அவற்றின் மீது எவரோ துணுக்குகளை இரைத்துவிட்டது போல் தோற்றமளிக்கும் பட்டாலான படுக்கை விரிப்புகள் போலிருக்கும் (தொடுவதற்கு) புத்தகங்கள். சரியான அழுத்தத்துடன் உச்சரிக்கப்பட்டால் Adoration-னே சரியான வார்த்தையாக இருக்கும் என்று நினைக்கிறேன். கோலெட், தன்னைக் கைப்பற்றியவர்கள் லஞ்சமாக அளித்த வளையல்களை உதறித் தள்ளி, மற்ற பெண்களை பொதுவில் முத்தமிட்டு அல்லது அம்மணமாக அவர்கள் பொதுவில் வர (ஆனால் இவ்வளவு அசைவற்றிருக்கும் இத்திடுநிலைக் கூத்தானது உயிற்றதாகவும் இருக்கக்கூடும்) துணியும் ஒரு நாயகியும்கூட. வாயை மூடுகையில் பற்களினூடே சாரோடுகின்ற படைப்புகள். ஞானமானவை அல்லது புத்திசாலித்தனமானவை. கடவுளைப் போல் அல்லாது ஒரு பதின்ம வயது வாலிபர் காதலைப் பார்ப்பதைப் போல அல்லது ஒரு விலைமாது காதலற்ற நிலையையும் மூப்பையும் பார்ப்பதைப் போல உன்னிப்பாக கவனிக்கும் படைப்புகள். பாதிஉடை அணிந்துகொண்டிருப்பது போல் பாதிசுயசரிதையாகஒருபோதும் பள்ளிச்சிறுமியைப் போல் மூச்சிரையாது அல்லது இணைப்பொழுங்கு குலைந்த இந்த உரைநடையைப் போல் அல்லாது நீண்ட, மெதுவான, விசாலமான, அழகான காலின் நுண்ணிய கோட்டை ஒத்த நடை. Cheri-யில் வயிற்றுப் பிழைப்பிற்கு உடலின் வசீகரங்களையும், அல்லது குறைந்த பட்சம் அதன் உறுதிமொழிகளையும் மட்டுமே நம்பி வாழ்பவர்கள் மூப்பெய்தும் கோணத்திலிருந்து அவர் மூப்பை அலசுகிறார். ‘பொழுது புலர்ந்ததுஒரு கிலாஸிக் மாதவிடாயொழிவுப் புத்தகம். தொய்திறமுள்ள உரப்புடன், பொறுத்துக் கொள்ளும் விலகலுடன் தொனித்தாலும் செறிவான உறுதியுடன் மிளிரும் நுண்ணிய படைப்பு. La Naissance du jour என்ற தலைப்பை Break of Day என்று மொழிபெயர்த்திருப்பது ஓர் இழப்பே, ஏனெனில் ஒரு வகையான முடிவின் ஆரம்பத்தையே அத்தலைப்பு குறிக்கிறது. அமெரிக்க மாணவர்களுக்கு கோலெட் அவ்வளவு உவப்பாக இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடனே தெரிந்து கொண்டேன். தேகப் பயிற்சி அதிகம் செய்தாலும் அவர்கள் புலன்களை பயிற்றுவித்துக் கொள்ளவில்லையோ? அல்லது புணர்ச்சியைப் பற்றி சிறிது அறிந்து கொண்டதால் புலனுவர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லையோ?

ஜான் டானின் கவிதைகளும் பிரசங்கங்களும்

என் நெஞ்சை தகருங்கள்’. அவர் தகர்ந்தார். நான் டானின் காலத்தில், அதாவது New Criticism என்றழைக்கப்பட்ட புதிய விமர்சன சகாப்தத்தில்தான் வளர்ந்தேன். அப்போது டி.எஸ். எலியட்டும் வில்லியம் எம்ப்சனும் மீவியற்பியல் கவிஞர்களை நடுமேடையில் கொண்டு நிறுத்தினார்கள். அங்கு அவர்கள் வர்ட்ஸ்வர்த், ஷெல்லி போன்றவர்களை பின்தள்ளிவிட்டு தற்பெருமையுடன் வினோதமான உவமைகளணிந்து வளைய வந்தார்கள். குறிப்பாக மார்வெல்லும், டானும்தான் வரையறைகளை நிறுவினார்கள். க்ராஷாவும் தன் பங்கிற்கு கட்டைவிரலைக் கொண்டு தராசை அழுத்தினார். முரண்தொடைகள் (Oxymorons) எவ்வளவு வியக்கத்தக்கவை என்பதையும் பொருள் வழுபடும் வகையில் சொற்களை எப்படிப் பிரயோகிப்பது (Catachresis) என்பதையும் கற்றுக் கொண்டேன். அவை ஏதோ போர்வையிலிருக்கும் மூட்டைப் பூச்சிகளைப் போல் நாங்கள் உபயார்த்தங்களை வேட்டையாடினோம். மாட்டிக்கொண்டாயா! அவர்கள் மிகைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூடபுதிய விமர்சகர்களின்கவிதை வாசிப்பு பற்றிய கூற்றுகள் நேர்த்தியாகவே இருந்ததைக் கூறவேண்டும். இன்றும்கூட அவர்களின் உத்திகளே நியமமாகக் கருதப்படுகின்றன. நடனமாடுகையில்என்பைச் சுற்றி மிளிரும் கேசத்தின் வளையம்என்று நாங்கள் ஒருவருக்கொருவர் காதுகளில் கிசுகிசுத்துக் கொள்வோம். வாத்திய இசைக்குழுவினருடன் முணுமுணுப்பதைக் காட்டிலும் இது சற்று தேவலை என்றாலும் அபத்தத்தில் அதற்கு நிகரானது. கவிதையை குடித்துக் களித்த பிறகு உரைநடையைக் கண்டெடுத்தேன். அதுவும் எப்படிப்பட்ட ஒரு உரைநடை! போரில் சுழற்றப்படும் கதையின் ஆற்றலுக்கு அவர் அணியியலை உயர்த்தினார். இப்போது நான் மேற்கோள்களைக் காட்டியே ஆகவேண்டும். நாம் தேவதூதர்களாகும்போது எப்படி இருப்போம்? “The knowledge which I have by Nature, shall have no Clouds; here it hath: that which I have by Grace, shall have no reluctation, no resistance; here it hath: That which I have by Revelation, shall have no suspition, no jealousie; here it hath: sometimes it is hard to distinguish between a respiration from God, and a suggestion from the Devil. There our curiosity shall have this noble satisfaction, we shall know how the Angels know, by knowing as they know.” இங்கு நாம் நிறுத்தற்குறிகளை வியந்தாகவே வேண்டும். இங்கே சந்தேகத்திற்கு இடமின்றி நம்முன் இருப்பது இன்னுமொரு Sir Style, இன்னுமொரு ஆழ்ந்து சந்தேகிக்கும் ஆத்திகர். அல்லது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சந்தேகப் பேர்வழி. கவிதையின் கூற்றைப் பொருத்தது இது. கவிஞனின் உண்மையான விசுவாசம் சந்தத்திற்கும் மீண்டும் மீண்டும் வரும் அந்த ‘hath’-திற்கும் மட்டுமே.

ஃப்ரெட்ரிக் ஹோல்டெர்லின்னின் பாசுரங்கள்

அவரது விமர்சகர்கள் அவரை பைத்தியம் என்று அழைக்கையில்தான் எனக்கு ஹோல்டெர்லினை மிகவும் பிடிக்கும். ஒரு கலைஞன் தன் வரம்புகளைத் தகர்த்து வெளியே வருகையில்தான் முனைப்பமைதி இல்லாதவன், மட்டற்றவன், செவிக்காதவன், மூட்டுவலியால் அவதிப்படுவதைப் போல் சிடுசிடுப்பானவன், மனச்சோர்வுடையோன், குடிகாரன், பித்தன், கிரந்தி நோயால் பாதிக்கப்பட்டவன், என்ற அடைமொழிகள் அவனுக்கு வழங்கப்படும். பிளேக் அளவிற்கு பித்துபிடித்த பல அருமையான கவிஞர்களை இலக்கியம் கண்டிருக்கிறது. ஆனால் ஒரு சில கவிஞர்களின் கவிதைகளே கவிதை என்ற வகைமையையே காலம்கடந்ததாக்கும் ஆற்றல் கொண்டவை. பீத்தோவன் இசையைக் கடந்து வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பது போல்தான் இது. மலார்மே இன்னொரு முக்கியமான உதாரணம். பால் செலானையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு முன் செய்யப்பட்டிருப்பது அனைத்துமே இனிமேல் பயன்படாது போல், பழைய ஆழங்கள் அனைத்தும் வற்றி வெறும் மேலோட்டமாக காட்சியளிப்பதைப் போல், மொழியின் ஒவ்வொரு பிரயோகத்தின் கூர்மையும் மொண்ணையாகிவிட்டது போல்…; கவிஞன் தன் குழலை வாசிக்கத் தொடங்கி, அதை முன்னேயும் பின்னேயும் தலைகீழாகவும் வாசிக்கும் ஆற்றல் பெற்று, இறுதியில் குழல் மூலமாக சிந்திக்க மட்டும் செய்து அதை வேறெங்கோ ஒலிக்கச் செய்யும் திறத்தையும் கண்டெடுக்கிறான். ஹோல்டெர்லினின் பாசுரங்களையும் அவரது கடைக்கால கவிதைகளையும், ரீல்காவின் எலிஜிகளையும் யேட்ஸின் கடைக்கால லேக்களைப் போல நாம் இனிமேலும் கவிதை என்று அழைக்க முடியாது. அவை அவளது பிடியிலிருந்தும் அனைத்து வகைமைகளின் பிடியிலிருந்தும் நழுவி விட்டவை. அவரது மனைவியின் மரணத்தைப் பற்றிப் பேசுகையில் அவர் இதைக் கூறினார்: போப்களாகவும் சுல்தான்களாகவும் ஆகப்போகும் என் குழந்தைகளை ஈன்றெடுத்தாள். அதன் பின் “Narret ischt se worde, narret, narret, narret!” (அவளுக்கு பைத்தியம் பிடித்தது, ஆமாம், பைத்தியம், பைத்தியம், பைத்தியம்!) தன் முடிவை நெருங்குகையில் ஹோல்டெர்லின், வழி தவறிய பஸ் ஒன்று அதன் நிறுத்தங்கள் அனைத்திலும் நில்லாமல் கடந்து செல்பதைப் போல், கவிதையைக் கடந்து செல்லும் ஒரு கவிதையை எழுதினார். ரிச்சர்ட் சீபர்த்தின் ஆங்கிலத்தில் அக்கவிதை இப்படி தொடங்குகிறது

In lovely blue the steeple blossoms
With its metal roof. Around which
Drift swallow cries, around which
Lies most loving blue…

மேலும் படிக்கையில், நம்பிக்கையில்லாத நான், முதன் முறையாக உள்ளார்ந்து, அதிசயம் கலந்த பக்தியுடன் கூறினேன்தெய்வமே…”

ஸ்டிஃபான் மலார்மேயின்பகடை வீச்சு’ (அன் கூ டி டீ)

ஹோல்டெர்லின் ஒரு புரட்சியினூடே வாழ முயற்சித்தார். கவிதையிலும் அப்படி ஒரு புரட்சி நிகழ வேண்டும் என்று அவர் விரும்பினார். வாழ்வின் மீது அமைதியை உடையாய் அணிந்து வாழ்ந்தவர் மலார்மேபள்ளியில் பயிற்றுவித்துக் கொண்டு, மாலையில் சில நண்பர்களை வீட்டிற்கு அழைத்து, கவிதையை நோக்கமாகக் கொண்ட ஒரு உரைநடையில் அமைதியாகப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தவர் அவர். அமைதியான, சாம்பல் நிறத்த, கீழ்ஸ்தாயி, அலட்டிக்கொள்ளா, மொழிப் பற்றை பூஜித்த அவரது மொழியைத் தவிர, ஏதுமற்ற அந்த வாழ்வில் இன்னமும் அதன் சுழற்சியில் தொடக்கத்தை மீண்டும் சென்றடையாத ஒரு புரட்சிக்கு அவர் குஞ்சு பொரித்தார். ஒரு காகிதத் துண்டம், ஒரு பக்கமாகி பின்னர் பூரண வெளியாகிறது. அவ்வெளியின் மீது அது ஏதோ ஊழிப் பாழ்நிலம் போல் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கும் ஓர் இறைமை. வார்த்தைகள் வார்த்தைகளாக இருக்கக் கூடாது. கவிதையில் எப்போது வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இருந்திருக்கின்றன? மேலும் ஒரு புத்தகம், அதுவும் ஒரு புத்தகமாக மட்டும் இருக்க முடியாது, ஒன்றைத் திறந்து பாருங்களேன். ஒருக்கால் அந்தத் திறப்பு ஒரு பெரும் பனிப்புலத்தை அம்பலப்படுத்தலாம். ஆங்கே ஒரு வார்த்தை, இப்போது மரணித்துவிட்ட ஒற்றைப் பறவையாக, பனியில் கிடந்தபடியே எதைப்பற்றியுமே பாடாமல்…. சூன்யத்தைப் பாடுகிறது. மொழியையும் அதன் பக்கத்தையும் இவ்வாறு அணுகும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற தகவல் என்னை எப்போதுமே பரவசப்படுத்தியிருக்கிறது, வெளியிலிருக்கும் எதைக் காட்டிலும் அகலமான ஒரு உள்மையில் வாழ்ந்தபடி மிக அமைதியாகநடைமுறை வழக்கம்மீது குண்டுத்தாக்குதல் நடத்துகிறார்கள் (“என் புத்தகங்கள் குண்டுகள்என்று நீட்ஷே கூறினார்). இத்தாக்குதல் இவ்வளவு அமைதியாக நடப்பதால், இதையறியா வாடிக்கையாளர்கள் குண்டடியில் எஞ்சும்பாழ்களை தங்களின் அடுக்ககங்களை அலங்கரிப்பதற்காக வாங்கிச் செல்கிறார்கள். இவ்வுவமையின் மிகைகளுக்கு ஈடு கட்டும் பரிகாரமாக செவ்வாய்க் கிழமைகளில் பள்ளியாசிரியரின் வீட்டிற்கு டீ அருந்துவதற்காக யார் வந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளலாம்: அனேகமாக பாரிசின் அனைத்து இலக்கியப் பிரமுகர்களுமே அங்கு வந்தார்கள். இதைத் தவிர பாரிசிற்கு வருகை தந்திருக்கும் அல்லது அதன் வழியே செல்லும் பிற பிரமுகர்களும் விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டார்கள். அந்த செவ்வாய்க்கிழமையர்களிடையே (Mardistes) பேச்சு மும்முரமாகவும் பலதரப்பட்டதாகவும் இருந்தது. சுவற்றிலிருந்து மானே பார்த்துக் கொண்டிருந்தார். கூட்டத்தை சமாளிக்க உணவருந்தும் அறையில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. மலார்மேயின் பூனை லிலித் நிலையடுக்கின் மீது அமர்ந்திருந்தது.  Un Coup-வில் உடனுழைப்பதற்காக ஓடிலோன் ரெடோன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வப்போது சரசமாடுவதற்காக எவராவது தொலைபேசியில் அழைப்பார். சில மாலைகளில் (வேளை கெட்ட வேளையான இரவு பத்து மணி வாக்கில்) பால்கள் இருவரும், வெர்லேனும் வாலெரியும் இளம் ஆடவர்கள் மத்தியில் தங்களை அமர்
த்திக் கொள்வார்கள்பயம் கலந்த பவ்யத்துடனும் அறைகலன்களைக் காட்டிலும் மௌனமாகவும்.

எஸ்ரா பவுண்டின் பிம்பங்கள் (Personae)

இந்தக் கவிதைகளின் திறம் இப்போது மங்கிவிட்டது. அந்நாட்களில் பவுண்டே முதன்மையான ஆசிரியர். அவருக்கடுத்து இரண்டாவது இடத்தில் டி.எஸ். எலியட் இருந்தார். ‘புதிதாகச் செய்யுங்கள்என்று பவுண்ட் எங்களிடம் கூறினார். அவான்கார் படைப்புகளை பதிப்பிப்பதற்காக பதிப்பாசிரியர்களை தாஜா செய்தார். சரியெனப் பட்டதிற்காகவும். நல்லதிற்காகவும், கலையின் லட்சியங்களுக்காகவும் அவர் போராடினார். ஒருகால் எஸ் (Ez) எனக்கு சலித்துவிட்டிருக்காலாம். கண்டிப்பாக எலியட் எனக்கு இப்போது சலித்துவிட்டார். நம் கடவுள்களில் சிலர் மங்கிவிடுகிறார்கள். ஒருகால் நம் பார்வை மங்கியிருக்கலாம் அல்லது அவ்விக்கிரகங்களே தங்கள் மாசுபட்ட இறைமையால் சோற்வுற்றிருக்கலாம். இன்னமும் இக்கவிதைகள் அழகாகவே இருக்கின்றன. ஆனால் அதில் எவ்வளவு நகலிக்கும் நையாண்டி (pastiche) இருக்கிறது என்பதையும் அதன் ஆழம் வரையிலும்  ஊடுருவியிருக்கும் பாவனையையும் அறிந்திருப்பது இப்போது உறுத்தலாக இருக்கிறது. வேட்டையிடங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக சண்டையிடுவது போல் நான் ஒருகாலத்தில் சண்டையிட்டிருக்கக் கூடிய காண்டோஸின் ஒழுங்கின்மையை விளக்கவுரைகளால் காப்பாற்ற முடியாமல் போகலாம். எது எப்படியோ நான் இக்கவிதைகளை எதிர்கொண்டபோது, அவை புத்தம் புதிதாக இருந்தன, அதன் ஆசிரியர் முரட்டுத்தனமாக இருந்தார், நானும் இன்னமும் இளமையாக, இன்னமும் படிப்பறிவில்லாதவனாக இருந்தேன்.   

——————

Sources:
A Temple of Texts, Essays by William Gass, Dalkey Archive, 2007

Further Reading

 1. Herman Broch’s The Sleepwalkers
 2. Italo Svevo’s Confessions of Zeno
 3. Italo Svevo’s Zeno’s Conscience (in William Weaver’s marvelous recent translation)
 4. Gustave Flaubert’s Letters
 5. Gustave Flaubert’s Bouvard and Pecuchet
 6. Stendhal’s The Red and the Black
 7. Colette’s Break of Day
 8. John Donne’s Poems and Sermons
 9. Friedrich Hölderlin’s Hymns
 10. Stéphane Mallarmé’s Un Coup de Dés
 11. Ezra Pound’s Personae

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.