ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை

This entry is part 30 of 45 in the series நூறு நூல்கள்

சுரேஷ் பிரதீப் எழுதிய ஒளிர்நிழல் நாவலைப் படித்து முடித்தேன். சமீபத்தில் அதிவேகமாக நான் படித்து முடித்த புத்தகம் இதுதான். பரவலாக வாசிக்கப்பட்டு வரும் சுரேஷ் பிரதீப்பின் எழுத்து நடை ஆரம்பத்தில் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது என்பது நிஜம். முதல் முப்பது பக்கங்கள் வரை கதையென எதுவும் தெளிவில்லாமல் இருக்கிறது. மரபான நாவல் போக்கில் கதை மாந்தர்களின் குணாதிசயங்கள் உருவாக்கம், சம்பவங்களின் சேர்க்கை என மனம் நேர்கோட்டில் ஒரு கதையைத் தேடிக்கொண்டிருந்தது என நினைக்கிறேன். மேலும், ஆரம்பப் பகுதிகளில் மிக அதிகமாக வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களும், பொருள் மயக்க வரிகளும் கதையை மறைத்து மேலேறி உட்கார்ந்திருந்தன. இப்படிப்பட்ட தத்துவங்கள் பால் நுரை போல இயல்பாகத் திரண்டு வந்தாலொழிய ஆரம்பத்திலேயே திணிப்பதை என் வாசிப்பு பழக்கம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததும் ஒரு காரணம். ஒரு தொடக்கம், சிக்கல் வளர்ச்சி, முடிவு எனும் சம்பிரதாயமான வடிவத்தை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆவதற்கு முன்னரே அவர்களது உணர்வுகள் பூடகமாகச் சொல்லப்படும் பாணி என்னை அந்நியப்படுத்தியது. ஆனாலும், அதில் ஏதோ ஒன்று ஈர்க்க, தொடர்ந்து நாவலைப் படித்தேன்.

படிக்கப்படிக்க நாவலின் போக்கு என் வாசிப்புக்குச் சிக்கியது. கதாபாத்திரங்களுக்கிடையேயான சிக்கலும் தொடர்பும் அதிகமாகத் தொடங்கும்போது கதை நம்மோடு உரையாடத் தொடங்குகிறது. ஆனால் அங்கும் ஒரு சிக்கல் முளைத்தது. அதுதான் சுரேஷ் தேர்த்தெடுத்திருந்த கதைக்குள் நாவல் விமர்சனம், ஒளிர்நிழல் எனும் நாவலை எழுதிய சுரேஷ் பிரதீபின் மரணம் என ஊடுபாவுகள் புது சங்கடத்தைக் கொடுத்தன. நாவலே அப்படித்தான் தொடங்கியது என்றாலும், ஆரம்பத்தில் ஒரு பாணியாகத் தொடங்கியது இடையில் ஒரு பெருத்த நெல்லி மூட்டைப்போல நிதானமடையாமல் வாசிப்புக்குத் தடையானது. இப்படி பிரதிக்குள் பிரதியை சுட்டிக்காட்டி எழுதப்படும் நாவல்கள் என்னைப் பொருத்தவரை ஒரு காரணத்துக்காகவே வைக்கப்படும். இப்படிப்பட்ட ஊடுபாவுப்பகுதிகள் சம்பந்தமில்லாதவை போலத் தோன்றினாலும், நாவலின் போக்கில் ஒரு பிரத்யேக இணைப்பை வாசிப்பில் உண்டாக்குகிறது. பிரதிக்குள் பிரதி ஒளிர்நிழல் எனும் நாவலுக்கான விமர்சனமாகவும், நாவலாசிரியரின் தற்கொலை சம்பந்தமாகவும், சுரேஷின் மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் மாறுவது ஒளிக்கும் நிழலுக்கும் இடையிலிருக்கும் உறவைப் போல நாவலை மாற்றுகிறது. ஆரம்ப எழுத்தாளரான சுரேஷ் பிரதீப்பின் முக்கியமான வெற்றி என இதைக் கூறலாம். நாவலின் குறைபாடாக ஆரம்பத்தில் தெரிந்தது ஒரு வெற்றிகரமான வாசிப்புக்கு இடங்கோலியதாக முடிவில் மாறியதை அவரது தனிப்பட்ட சாதனை என்றே சொல்லலாம்.
சுரேஷ் எனும் நாவலாசிரியர் எழுதும் ஒளிர்நிழல் (ஒளிர்ந்த நிழல் என குறிப்பிடும் கதாபாத்திரத்தின் எண்ணை சுரேஷின் அண்ணன் அழித்துவிடுகிறான்) நாவல் சக்தி, குணா, அம்சவள்ளி, மீனா, அருணா என மாறுபட்ட ஐந்து பாத்திரங்களின் உறவைப் பற்றியது. விவசாயக்குடும்பத்திலிருந்து மேலெழுந்து அரசு அலுவலக இயந்திரமாக மாறியிருக்கும் சக்தி தனது பள்ளர் சமூகத்தின் அழுத்தங்களை சுமப்பவன். அவனுக்குண்டான தாழ்வுமனப்பான்மையை மேலேறி வருவதற்கு தனது ஆண் எனும் பிம்பத்தையும், அரசு அதிகாரம் தரும் கிரீடத்தையும் பயன்படுத்துகிறான். உறவுகளின் ஒவ்வொரு முடிச்சிலும் அவனது வேடம் பல சிக்கல்களை இறுக்கமாகப் போட்டுக்கொள்கிறது. அவனுடைய அலுவலகத்தில் வேலை பார்த்த திருமணமான அருணாவுக்கும் அவனுக்கும் உண்டான அக்கா-தம்பி எனும் உறவு கூட தொடக்கத்திலிருந்தே அபாயகரமான எல்லைகளைத் தொட்டுத் திரும்புகிறது. எல்லைகளை மீறுவதற்கான பாவனைகளை அவள் மேற்கொள்ளும்போதெல்லாம் அவன் வேறொரு வேடம் மூலம் அதைத் தரைமட்டமாக்குகிறான். அவர்கள் இருவருக்குமான உறவு பல உருவங்கள் எடுக்கின்றன. கள்ள உறவைத் தொடரத் துணிபவன் அதை சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை. அவனது தாழ்வு உணர்ச்சியை அதன் மூலம் தாண்டிவிட்ட களிப்பைப் பெற்றாலும் சதா குற்ற உணர்விலும் உழல்கிறான்.
சக்திக்கு அப்பாவுடனான உறவும் விலகல்தன்மையோடே இருக்கிறது. நாவலில் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும் அவரது பரம்பரை வாழ்வும், அம்மாவுடன் அவருக்கு இருந்த உறவுமே இதற்குக் காரணம். ஆரம்பத்தில் பூனை போல வரும் தம்பியான குணா கொள்ளும் வேடம் வேறு வகையானது. பள்ளர் சமூகத்தில்ருந்து பாண்டவனூரில் அவர்கள் சந்தித்த சங்கடங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்கிறார்கள். தனது மனதிற்குள் வன்மத்தையும் வெறியையும் மிக ஆழத்தில் பொருந்தி வைத்திருக்கும் வெற்றி வேறு வகையில் வெடிக்கிறான். மேல் ஜாதிக்கார பெண்ணின் சீண்டல் வெற்றி மற்றும் அவனது கூட்டாளிகளை பெண்ணாளத் தூண்டுகிறது. அது இறப்பிலும் முடிகிறது. அவளை மணக்கவிருந்த குணாவின் சாந்த குணத்திற்கு இதனாலான பாதிப்பை ஆசிரியர் தொடரவில்லை.
சக்தி மூலம் அருணாவுக்குப் பிறக்கும் பெண் ஊரறிந்த ரகசியம். உலகப்போக்குபடி அருணாவுக்கே கெட்ட பெயர் உண்டாகிறது. ஏற்கனவே சக்தியுடனிருந்து பிரிந்தவள் தனது வேடத்தைக் கலைத்து சேர்ந்து வாழும் கணவனிடம் மானசீக சரணாகதி அடைகிறாள். சக்தியின் சீண்டல்களையும் உதாசீனங்களையும் மீறி அவனிடம் உறவுகொண்ட நாட்களை கசப்போடு நினைவு கொள்கிறாள். எதையோ மறைக்க அவன் போட்ட வேடத்தை அவளால் உடைக்க முடியவில்லை. மறுவார்ப்பு செய்து மீண்டும் எழுந்ததில் நாவலில் அருணா மட்டுமே மீட்சி அடைகிறாள்.
சக்தி தன்னை ஒரு அரசியல் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டு பள்ளர் சமூக மக்களுக்கு எழுச்சி ஊற்றி மாற்றங்களுக்கான தேவையை வலியுறுத்துகிறான். இயல்பான நாவலில் இது ஒரு விடுதலைக்கான வழியாக அமையும். ஆனால் இதுவெ ஒரு கரிப்புச்சுவையாக அமைந்துவிடுகிறது. அவன் கொள்ளும் மற்றொரு வேடம் என நினைக்கும்போது கூர்மையான எதிர்நாயக பிம்பமாக நம்முன் சக்தி தோன்றுகிறான். அவன் எப்படிப்பட்டவன் என கணிக்க முடியாத நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும் இடம் அது. ஆதிக்க ஜாதியினரிடம் மட்டும் ஆழமான சீண்டலுக்கு உள்ளானவன் எனும் நிலையிலிருந்து அவன் உருமாறி நிற்கிறான். பள்ளர் சமூகத்தினரால் கதையில் நேரடியான உதாசீனங்களை சந்திப்பவனாகக் காட்டப்படாவிட்டாலும் சக்தியின் பரம்பரைக் கதையும் அவனது தாத்தாவின் சூழலும் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சக்தி நம்பிக்கையோடு தொடரும் உறவுகள் என எதுவுமில்லாத நிலையில் அருணாவோடு அவனுக்குப் பிறந்த பெண் வழி ஒளிர்கீற்றுக்கான தொடக்கம் உள்ளது என எண்ணப்புகுந்தால் அவளது இறப்பில் அதுவும் இருளுக்குத் தள்ளப்படுகிறது. சக்திதான் அந்த விபத்துக்குக் காரணம் என ஊரார் நம்புவதாக கதையில் இருந்தாலும், அவளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவனாகவே வருகிறான். அவன் கைத்தொட்டுப் பிடிக்கப்போன ஒரே உறவும் இல்லாமல் போனது வாழ்வின் மீதான எள்ளலாக மாறிவிடுகிறது.
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அப்பாவின் இறப்புக்காக பாண்டவனூர் செல்வதிலிருந்து நாவல் தொடங்குகிறது. நம்பவே முடியாத நிதானத்தோடு அப்பாவின் இறப்பை அணுகுகிறான். தான் அக்கா நித்யாவின் கைப்பொம்மை எனும் கோபம் குடும்பத்தின் மீதும் திரும்புகிறது. அவனது குடும்பத்திலிருந்து போலியான சமூகமாகக் காட்டப்படும் சுற்றார் மீதும் பெரும் ஒவ்வாமை ஏற்படுகிறது. சுரேஷ் பிரதீப்பின் தனிமைக்கு நேரடியான காரணம் இது என்றாலும், அவனது கரிப்பையும் கசப்பையும் கொட்டி வார்த்த சக்தி எனும் கதாபாத்திரம் மறைமுகமாக இங்கிருந்து தொட்டு எடுத்துக்கொள்கிறது. சக்தியும் சுரேஷ் பிரதீப்பின் ஒரே பிம்பத்தின் ஒளிரும் நிழலுமாக நம்மை நம்பவைக்கும் உத்தி கதைக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. கதையில் பலவித வாழ்வை வாழும் சாத்தியம் இருப்பதாலே பெரும்பான்மையான கதாசிரியர்கள் தங்களுக்கு நேரெதிரான குணவார்ப்புகளைப் படைப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. புனைவிலக்கியத்தில் இப்படிப்பட்ட பொதுமைகளை போட்டுப்பார்க்கக்கூடாது என்றாலும், பிரதிக்குள் பிரதியாக நிற்கிற புனைவு இப்படிப்பட்ட உத்திகளை வெளிப்படையாக யோசிக்கவைக்கின்றது. அப்படிப்பார்க்கும்போது சுரேஷ் பிரதீப்புக்கும் சக்திக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இருக்காது. அப்படியென்றால் ஏன் இந்த இருவேட விளையாட்டு?
சோதனை முயற்சியாகவும் விளையாட்டாக வாழ்வின் தருணங்களைக் கலைத்துப்போடும் உத்தியாக மட்டுமே இருந்து வந்த தமிழிலக்கிய பின் நவீனத்துவ முயற்சிகள் மாறிவருகின்றது. பிரதிக்குள் பிரதி ஈடுபடும் சில வார்த்தை விளையாட்டுகள், படிம விரிவாக்கங்கள் இல்லாதது இந்த நாவலின் மிகப்பெரிய குறையாகக் காண்கிறேன். பித்தின் நிலையை எட்டிப்பார்க்கும் சக்தி (உரை நடத்திய பிறகு அதற்கு எதிர்மறையாகச் சிரிப்பது) இன்னும் விரிவாக தனது அந்திமத்தை நோக்கிச் செல்லும் பயணம் நாவலுக்குள் வரும் நாவலில் இல்லை. சக்தியின் தொடர்ச்சியாக நாவல் எழுதி முடித்ததும் சுரேஷின் தற்கொலை படலம் தொடர்ந்துவிட்டது. அசோகமித்திரனின் ‘’பதினெட்டாம் அட்சக்கோடு’’ நாவலில் சந்திரசேகரைத் துரத்தும் எண்ணங்களையும் அதிலிருந்து அவன் தப்பித்து செகுந்திரபாத் வீதிகளில் ஓடி ஒளியும் சாத்தியம் சக்திக்கும் உண்டு. காண்பதுக்கும் விழைவதுக்கும் உண்டாக எதிரெதிர் பாதைகளை தாங்க முடியாத உளவியலை சக்தி எட்டுகிறான். ஆனால் ஆசிரியர் அதைத் தொடராததால் பிரதிக்குள் பிரதியின் விளையாட்டு இல்லாமலாகிறது. ஒரு பிரதியில் இட்ட தீ மறு பிரதியில் பிரிதொன்றாக ஆவதில் இருக்கும் வாசிப்புச் சுவையின் இழப்பை வாசகன் உணர்கிறான். வடிவம் சார்ந்த கேள்விகளின் அடுத்த கட்டத்துக்குள் ஆசிரியர் எதிர்காலத்தில் நுழைய வேண்டும். அது பலவித சாத்தியங்களை அவருக்குக் காட்டிவிடும்.
வெறுப்பின் பலவித அலகுகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக இந்த நாவலை நான் காண்கிறேன். தனிப்பட்ட உறவுகள் மீதான கசப்பும், தன் சமூகம் மீதான சுய எள்ளலும் (இது அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உந்தும் விமர்சனமாக அமையவில்லை. பள்ளர் சமூகம் எட்டிப்பிடிக்க வேண்டிய காலத்தைப் பற்றி உரையாற்றிய சக்தி, காரில் ஏறியதும் தாங்கமாட்டாது சிரிக்கிறான்; அதனால் இது கரிப்பாகவே மிஞ்சுகிறது), ஒழுங்கில்லாத எளிய வரலாற்றின் மீதான கோபமும் ஆகிய மூன்றும் நாவலின் அடியோட்டமாக மிஞ்சுகின்றன. நிழலைப் பற்றியே அதிகம் இருப்பதால், குறைகாலத்தில் அந்த நிழலே ஒளிரக்கூடிய ஒரே கைவிளக்காக ஆகிவிடும் அவலத்தைப் பேசும் கரிய படைப்பு.

கிண்டிலில் ஒளிர்நிழல் வாங்க: அமெசான்
அச்சில்: 186 பக்கங்கள்
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
வெளியீடு: 1 மே 2017

Series Navigation<< ரணங்கள்: ஃ பிர்தவுஸ்  ராஜகுமாரன்சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.