எம். எல். – அத்தியாயம் 14

அத்தியாயம் 14

கூத்தியார் குண்டு லெட்சுமண பிள்ளையும் கற்பகமும் சீதா பவனத்துக்குத் திரும்பும்போது இரண்டு மணியாகி விட்டது. கற்பகத்துக்கு அட்மிசன் கிடைத்து ஃபீஸ் எல்லாம் கட்டிவிட்டார் லெட்சுமண பிள்ளை. ஹாஸ்டல் ஃபீஸையும் கட்டியாயிற்று. கற்பகம் ஹாஸ்டலிலேயே தங்கிப் படித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். காலேஜ் இரண்டு நாள் கழித்துத்தான் தொடங்குகிறது.
வழக்கம் போல் செண்பகக் குற்றாலம் முதலிலேயே சாப்பிட்டு வீட்டுக் கடைக்குப் போய்விட்டான். சுப்பிரமணிய பிள்ளை, சம்பந்தி வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவர் வந்து பிறகு சேர்ந்து சாப்பிடலாம் என்று அவருக்காகக் காத்திருந்தார். கூத்தியார் குண்டுப் பிள்ளையும், கற்பகமும் வந்ததும் அவர்களிடம் குசலம் விசாரித்தார். சோமு வீட்டில்தான் இருந்தான். அவன் அவர்களுடைய பேச்சில் கலந்து கொள்ளவில்லை.
சீதாவும், ராஜியும் பட்டாசலிலேயே மூன்று பேருக்கும் சாப்பிட இலை போட்டார்கள். மீனா அடுப்பங்கரையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து வந்து வைத்தாள். கற்பகம் அக்காவையும் சாப்பிட உட்காரச் சொன்னாள். மீனா அத்தையுடனும் அக்காவுடனும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். சோமு சாப்பிட்டானா என்று லெட்சுமணப் பிள்ளை விசாரித்தார். அவன் பேரைக் கேட்டதுமே சுப்பிரமணிய பிள்ளைக்கு எரிச்சலாக இருந்தது. “எல்லாம் சாப்பிட்டுருப்பான்… சாப்பிட்டுருப்பான்,” என்று சொன்னார். சுப்பிரமணிய பிள்ளை சொன்னது ஏதோ இயல்புக்கு மாறாக இருந்தது போல் கூத்தியார் குண்டுப்பிள்ளைக்குத் தோன்றியது. மச்சினனுடைய முகத்தைப் பார்த்தார். அவர், இலையில் மூத்த மருமகள் பரிமாறுகிறதையே பார்த்துக்கொண்டிருந்தார். மாடியிலிருந்து தட தட வென்று இறங்கி ஓடி வந்த சரோஜா அப்பாவுக்கருகே உட்கார்ந்து கொண்டு உள்ளங்கையை நீட்டினாள். சீதா, “ஏட்டி… ஒனக்கு அம்மா அப்புறம் ஊட்டி விடுதேன்… எந்திரி… அப்பா சாப்புட்டுக் கடைக்குபோகட்டும்…” என்றாள்.
“சரி… சரி… அவ சாப்புடட்டும்…” என்றார் சுப்பிரமணிய பிள்ளை.
“பொட்டச்சிக்கி ரொம்ப எடங்குடுக்காதீயோ…” என்று சொல்லிக்கொண்டே சரோஜாவின் இரண்டு கையிடுக்கிலும் கைகொடுத்து அவளை தூக்கினாள் சீதா.
“இருக்கட்டும் அத்தை… அவ ஆசைப்படுதள்ளா?” என்று ராஜி சொன்னாள்.
“கிறுக்கு மூதி ஏதாவது பண்ணிரும்…” என்று சொல்லிக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு போனாள் சீதா. சரோஜாவைக் ‘கிறுக்கு மூதி’ என்று சொன்னது கூத்தியார் குண்டுப் பிள்ளைக்குச் சங்கடமாக இருந்தது. இதையெல்லாம் கவனிக்காதவர் மாதிரி சுப்பிரமணிய பிள்ளை, அவரையும், கற்பகத்தையும் பார்த்து, “சாப்பிடுங்கத்தான்… கற்பகம் சாப்புடு… இது என்னைக்கியும் நடக்கதுதான்…” என்றார்.
அம்மா தன்னிடம் கோபப்பட்டது கூடத்தெரியாமல், சரோஜா சீதாவின் இடுப்பை இருகக்கட்டிக் கொண்டாள். பட்டாசலில் மௌனம் நிலவியது. கூத்தியார் குண்டுப் பிள்ளையும், கற்பகமும் பேசாமல் சாப்பிட்டனர். ரசம் விட்டுச் சாப்பிடும் போது சுப்பிரமணிய பிள்ளை, “அத்தான் கற்பகத்தை எதுக்கு ஹாஸ்டல்ல விடப்போறீக?… இங்க நம்ம வீடு இருக்கும் போது எதுக்கு ஹாஸ்டல்ல போடணும்?…” என்று கேட்டார்.
“நானா சேத்தேன்?… ஒங்க மருமகதான் நான் ஹாஸ்டல்லயே இருந்து படிக்கேன்னு சொன்னா…” என்றார் கூத்தியார் குண்டுப் பிள்ளை.
“மாமா! ஹாஸ்டல்ல இருந்தாத்தான் படிக்க வசதி…” என்றாள்  கற்பகம்.
சுப்பிரமணிய பிள்ளை மெளனமாக ரசம் சாதத்தை உறிஞ்சிச் சாப்பிட்டார். மூவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர். சுப்பிரமணிய பிள்ளை கழுவிய கையைத் துடைத்துக் கொண்டே கடைக்குப் போன் செய்து செண்பகக் குற்றாலத்திடம், “நான் கொஞ்சம் லேட்டா வருவேண்டா… அத்தான் கிட்டே பேசிட்டு வாரேன் … நீ கடையப் பாத்துக்கோ… சத்திரப்பட்டி சேலைக்காரர் வந்தாரா?…” என்று கேட்டார்.
“வந்தாரப்பா… அம்பது சேலை குடுத்தாரு. அடுத்த வாரம் வந்து நிலுவையை வாங்கிக்கிடுதேன்னு சொல்லிட்டு போனாரு…”
“சரி!… கிட்டு மாமா சாப்புட்டுட்டு வந்துட்டானா?…”
“வந்துட்டான் அப்பா…”
“அவன செல்லூர் போயி துண்டை எடுத்துட்டு வரச்சொல்லு.”
“சரிப்பா…”
ரிஸீவரை வைத்து விட்டு மகளிடம் பேசிக்கொண்டிருந்த கூத்தியார் குண்டுப் பிள்ளையிடம் வந்தார். “அத்தான் மச்சுக்குப் போவோமா?… மச்சு கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கும்…” என்றார் சுப்பிரமணிய பிள்ளை. லெட்சுமண பிள்ளை சிரித்துக்கொண்டே அவருடன் மாடிக்குப் படியேறினார். சீதா இரண்டு மருமகள்களையும் சாப்பிட அழைத்தாள். சரோஜா எல்லோருக்கும் முன்னால் சாப்பிட உட்கார்ந்தாள். கற்பகம் சீதாவிடம், “அத்தை நீங்களும் உக்காருங்க… நான் எல்லாருக்கும் பரிமாறுதேன்…” என்றாள். சரோஜாவின் பக்கத்தில் ஒருபுறம் சீதாவும், இன்னொருபுறம் மீனாவும் உட்கார்ந்தார்கள். மீனாவுக்குப் பக்கத்தில் ராஜி உட்கார்ந்தாள். கற்பகம் பாவாடையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு பரிமாற ஆரம்பித்தாள்.
சோமு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் திரும்பவும் எடுத்துப் படித்தான். மாடியில் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டே அத்தானும், மைத்துனரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பத்து நிமிஷம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சுப்பிரமணிய பிள்ளை கடைக்குப் புறப்பட்டார். கீழே இறங்கிவந்தவர் நேரே சோமு இருந்த அறைக்குச் சென்றார். சோமு அப்பாவைப் பார்த்ததும் புஸ்தகத்தை மூடினான். அவனுக்கு எதிரே நின்று கொண்டு, “ஏண்டா எப்பமும் புஸ்தகமும் கையுமாவே இருந்தா நமக்குச் சரிப்பட்டு வருமாடா?… கடப்பக்கமும் வரமாட்டேங்க… நீ என்ன செய்யப்போற?…” என்று  கேட்டார்.
“எனக்குக் கடையெல்லாம் ஒத்துவராதுப்பா… அரசியல்தான் எனக்கு இன்ட்ரஸ்ட்டுப்பா…” என்றான் சோமு.
சுப்பிரமணிய பிள்ளை ஆச்சரியப்பட்டார். “என்னடா சொல்லுதே?…”
“கச்சியிலே சேரலாம்னு இருக்கேன் அப்பா…”
“கச்சியிலே சேந்து என்ன பண்ணப்போற?”
“ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதப்பா…”
“அரசியல்லாம் ஒனக்குச் சரிப்பட்டு வராது… நம்ம கையில யாவாரம் இருக்கு… அதக் கவனிக்கத விட்டுட்டு அரசியல் அது இதுங்கறியே?…”
“அதுக்குத்தான் அண்ணன் இருக்கானே…”
சுப்பிரமணிய பிள்ளைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அரசியல்ல எல்லாம் சம்பாத்தியம் பண்ணத் தெரியாதுடா ஒனக்கு.”
“நான் சம்பாதிக்கிறதுக்காக அரசியலுக்குப் போகலை…”
“பின்ன?… சம்பாதிக்காமே என்ன பண்ணப் போறே? ஒனக்குன்னு ஒருத்தி இருக்கா… அவளுக்காகவாவது சம்பாதிக்காண்டாமாடா?…”
“அப்பா, எனக்குச் சம்பாத்தியமெல்லாம் பண்ணத்தெரியாதுப்பா… என்னை என் வழியில விட்டுடுங்கப்பா…”
அதற்குமேல் அவனை வற்புறுத்தினால் கோபித்துக்கொள்வான் என்று தோன்றியது அவருக்கு. எப்படியும் கூத்தியார் குண்டு அத்தான் இரண்டு நாள் இங்கே தான் இருப்பார். அவரிடம் சொல்லி மகனுக்குப் புத்தி சொல்லச்சொல்லலாம் என்று நினைத்தார். “எப்பிடியும் போ…” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போனார்.

ம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸின் முன்னறையில் நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த ஆட்கள் அவற்றை அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். அது ஒரு பழைய வீடுதான். கட்சிக்காக வாடகைக்கு எடுத்துப் போட்டிருந்தது. வரிசையாக அறைகள் அடுக்கடுக்காக இருந்தன. முன்னறையில், ஒரு மூலையில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. சுவர்கள் எல்லாம் காரை பெயர்ந்து விழுந்து செங்கல்கள் தெரிந்தன. சில அறைகளில் ஒட்டப்பட்டிருந்த பழைய கட்சிப் போஸ்டர்கள் கிழிக்கப்படாமலே இருந்தன. ஓரளவு சதுரமாக இருந்த ஒரு அறையில்தான் வடக்கு ஓரத்தில் ஒரு பழைய மேஜையையும் நாற்காலியையும் போட்டு நாராயணன் உட்கார்ந்திருந்தான். வேறு இரண்டு மேஜைகளும் நாற்காலிகளும் கூடக்கிடந்தன. ஒன்றில் பரமேஸ்வரன் வந்தால் உட்காருவார்.
நாராயணனுக்கு அருகில் ஒரு பழைய ஸ்டீல் பீரோ இருந்தது. அதன் மீது ‘செவ்வானம்’ என்று எழுதப் பட்டிருந்தது. அதற்குச் சாவி கிடையாது. திண்டுக்கல் ரோட்டிலிருந்த பிரஸ்ஸில் தான் ‘செவ்வானம்’ அச்சாயிற்று. மாதாமாதம் எப்படியும் பத்து பதினைந்து தேதிக்குள் ‘செவ்வானம்’ வெளிவந்து விடும். இரண்டு கவிதைகளுக்கான புரூப் பிரஸ்ஸிலிருந்து வந்திருந்தது. அது மேஜை மீது கிடந்தது. மேஜையின் ஒரு ஓரத்தில் கத்தைப் பேப்பர்களை அடுக்கி வைத்திருந்தான் நாராயணன். வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டை அப்போதுதான் சாப்பிட்டு முடித்து விட்டு பாத்திரத்தைக் கழுவி எதிர் மேஜை மீது காய வைத்திருந்தான். ஆபீஸ் செக்ரட்டரி கனகசபை காலை மேஜையின் மீது போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் சுவரிலிருந்த அலமாரியில் பைண்டு வால்யூம்கள் இருந்தன. அவற்றில் ஒரே நூலாம்படையும், தூசியும்.
நாராயணனுக்கு மத்தியானம் சாப்பிட்டதும் ஒரு டீ குடிக்க வேண்டும். டவுன் ஹால் ரோட்டில் போய் டீ குடித்து விட்டு வருவான். கையில் துட்டு இல்லாவிட்டாலும் நாகராஜ் கடையில் கடன் சொல்லி டீ குடிக்கலாம். டீ குடிப்பதற்காகப் புறப்பட்டபோது சுந்தரி குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு அவசர அவசரமாக உள்ளே வந்தாள். அவளைப் பார்த்ததும் நாராயணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்ன சுந்தரி?… அவசரமாக வாரே…”
“பிள்ளைக்கி ஒடம்பு காயுது. மொனங்கிக்கிட்டே இருக்கா… ஒண்ணுமே சாப்பிட மாட்டேங்கா…”
“ஏதாவது மருந்து குடுக்க வேண்டியதுதான?”
“வீட்டுலெ எந்த மருந்தும் இல்ல. செல்லம்மக்கா கிட்ட அஞ்சு ரூவா வாங்கிக்கிட்டு நாயுடு டாக்டர் வீட்டுக்குப் போனேன். மருந்து எளுதிக் குடுத்திருக்காரு.” என்று மடித்து வைத்திருந்த மருந்துச்சீட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்தான்.
“இதுக்கு எம்புட்டு ஆகும்?…”
“தெரியலியே… எப்பிடியும் ஒரு பத்து ரூவா வேணும்…” என்றாள்.
“எங்கிட்ட வள்ளிசா ரூவாயே இல்லியே?…”
“செல்லம்மக்கா குடுத்த அஞ்சு ரூவாயும் டாக்டர் கிட்ட குடுத்திட்டேன்…”
“சரி… உட்காரு…” என்று அவளை உட்காரச் சொல்லிவிட்டு, கனகசபையைப் பார்த்தான். அவரிடம் பணம் இருக்குமா என்று யோசித்தான். பிறகு, எஸ். எம். மெடிக்கல்ஸில் கடன் சொல்லிக் கேட்கலாம் என்று தோன்றியது. “சரி உக்காந்திரு… மெடிக்கல் ஸ்டோர்ஸ்ல போயி கேட்டுப்பாக்கேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியே போனான்.
நல்ல வேலையாக எஸ். எம். மெடிக்கல்ஸில் செல்லையாவே இருந்தான். முதலாளி சாப்பிட வீட்டுக்குப் போயிருந்தார். செல்லையாவிடம் சொல்லி மருந்துகளை வாங்கினான். மருந்துகளை சுந்தரியிடம் கொடுத்தான். “நீ வீட்டுக்குப் போயிருவியா?… நான் கூட வரணுமா?.” என்று கேட்டான். “இல்ல… நான் போயிருவேன்…” என்றாள் சுந்தரி. அவளையும், குழந்தையையும் வாசல் வரை வந்து அனுப்பி வைத்தான்.
“சாயந்தரம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துருங்க…” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்கு நடந்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். திருப்பத்தில் அவள் மறைந்த பிறகுதான் உள்ளே வந்தான். தன் ஸீட்டில் வந்து உட்கார்ந்தான். கனகசபை இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். ஒரு பத்து ருபாய் காசு கூட இல்லாமல் இருக்கிறோமே என்று நினைத்தான். எத்தனை நாளைக்கு இந்தச் சம்பளத்தில் காலத்தை ஓட்டுவது என்று தோன்றிற்று.

(தொடரும்)

 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.