வில்லியம் கெல்லி- கலைஞனும் காலமும்

கதையின் துவக்கத்தில், ஆப்பிரிக்கன் என்று அழைக்கப்படும் ஒரு ராட்சத மனிதன், அடிமைக் கப்பலில் வந்திறங்குகிறான். அவன் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அவன் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை இருபது பேர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் நகருக்குள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறான். அடிமையான அடுத்த கணமே அவன் தன்னைக் கைப்பற்றியவர்களை தான் பூட்டப்பட்டிருக்கும்  சங்கிலிகளைச் சுழற்றி வீழ்த்துகிறான், அவனை ஏலமிடட்வனைச் சிரச்சேதம் செய்கிறான் (அந்தத் தலை ஒரு பீரங்கிக் குண்டு போல் கால் மைல் காற்றில் பறந்தது, இன்னொரு கால் மைல் தரையில் குதித்தோடி, யாரோ ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு குதிரையின் காலில் மோதி அதை ஊனமாக்கி நின்றது, என்று இது விவரிக்கப்படுகிறது).